• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 26, 2024
Messages
30
அத்தியாயம் 9

அலங்கரிக்கப்பட்ட ஒரு குடிலுக்குள் படுக்க வைக்கப்பட்டிருந்தாள் கண்மணி. முகத்தில் பட்ட ஜில்லென்ற தண்ணீரின் உதவியால் கண்களை திறந்தவளின் முன்பு, அமர்ந்திருந்த கங்கம்மா அவளை பார்த்து சிரித்தாள்.

சிறிது நேரம் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் விளித்தவள் அடுத்த நொடியே அனைத்தும் நியாபகத்திற்கு வர, துள்ளி எழுந்து சுற்றி முற்றி தேவ்வை தேடத் தொடங்கினாள்.

“என்ன பாப்பா கூட வந்த அந்த பையனை தேடுறியா?”

“ அ… அவர் எங்க? எதுக்காக என்னை இங்க அடைச்சு வச்சிருக்கீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும்.”

“சொல்றேன் பாப்பா சொல்லாம எங்க போக போறேன். ரொம்ப களைப்பா தெரியிறியே, முதல்ல நீ ஏதாவது சாப்பிடு.”

கங்கம்மா தன் பின்னால் இருந்த வேலையாளிடம் கண் காட்ட, ஒரு பெண் தட்டில் உணவைக் கொண்டு வந்து அவள் முன்பு வைத்தாள்.

“ சாப்பிடு பாப்பா, அப்ப தான் முகம் தெளிவாகி அழகா இருக்கும்.”

“எனக்கு எதுவும் வேண்டாம் அவர் எங்க? என்னை அவர்கிட்ட கூட்டிட்டுப் போங்க.”

“இருக்கான் இதுவரைக்கும் நல்லா தான் இருக்கான், ஆனா இனி…நீ நடந்துக்கப் போற முறையை பொறுத்து தான் இருக்கு.”

கண்மணி கலவரமாக கங்கம்மாவை பார்க்க,

“இங்க பாரு நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எனக்கு ஒரே பையன் அவன்னா எனக்கு உசுரு.

ஆனா சில வருஷத்துக்கு முன்னாடி அவனுக்கு நடந்த விபத்துல, கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாம போயிடுச்சு. நானும் பார்க்காத மருத்துவச்சி இல்ல, போகாத ஹாஸ்பிடல் இல்ல, கடைசிவரை என் பையனுக்கு சரியாகவேயில்ல. அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சா சரியாகிடுவான்னு பூசாரி சொன்னாரு.

என் பையன பத்தி தெரிஞ்சதால உள்ளுருக்குள்ள யாருமே பொண்ணு கொடுக்க தயாரா இல்லை, அதனால வெளியூர்ல இருந்து ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தேன். ஆனா அவ என் பையனை பத்தின உண்மை தெரிஞ்சதும் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சா, அவ அப்பன் ஆத்தா உசுர பணயமா வச்சு கல்யாணத்தை நடத்தி முடிக்க பார்த்தேன். ஆனா அவ அதுக்கு நான் செத்தே போவேன்னு சொல்லி பிரச்சினை பண்ண தொடங்கிட்டா, அவளை அடிச்சு ரூமுக்குள்ள அடைச்சு வச்சிருந்தேன், எப்படியோ இங்கிருந்து தப்பிச்சிட்டா.

ஆனா என்கிட்ட இருந்து தப்பிக்கிறேன்னு தற்கொலைக்கு முயற்சி பண்ணி, உங்ககிட்ட வந்து மாட்டிக்கிட்டா.”

என்று கூறி பலமாக சிரிக்கச் தொடங்கினாள் கங்கம்மா, கண்மணியின் கண்கள் கலவரமானது,

“ அடிபட்டு காயத்தோட இருக்கறவளை இந்த ஊர்காரங்க முன்னாடி மணப்பெண்ணா உட்கார வைக்க முடியாது, இல்லையா பாப்பா? அதனால அவ இடத்துல நீ இருந்து இந்த கல்யாணத்தை முடிச்சு வைக்கற சரியா.”

கண்மணி ஏதோ கோபமாக சொல்ல வர கை நீட்டி தடுத்தவளோ,

“ முடியாது மாட்டேன்னு சொல்லி முரண்டு பிடிக்க நினைக்காத, ஏன்னா உன் கூட வந்த பையன் என் கஸ்டடியில தான் இருக்காங்கறது உன் நியாபகத்துல இருக்கட்டும்.

இன்னைக்கு ராத்திரி உனக்கும் என் பையனுக்கும் ஊரார் முன்னாடி கல்யாணம். அங்க வந்து ஏதாவது டிராமா போட நினைக்காத, ஏன்னா பொண்ணுக்கு புத்தி சுவாதீனம் இல்லைன்னு கிராமத்து ஆளுங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்.

மொழி தெரியாததால இங்க இருக்கறவங்க கூட உன்னால பேசவும் முடியாது. அதனால தப்பிச்சு போக முயற்சி பண்ணாம, நல்ல பொண்ணா அலங்காரம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு ரெடியாகு.”

கங்கம்மா அங்கிருந்து சென்று விட, சில பெண்கள் கண்மணியை சூழ்ந்து கொண்டு, அவளை அலங்கரிக்கத் தொடங்கினர்.

கண்மணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மொழி தெரியாத இடத்தில் பெற்றோரைப் பிரிந்த குழந்தையாக, துடித்து போனவளது கண்கள், தேவ்வை தேடி அலை பாய்ந்தது.

அதே நேரம் ஒரு குடிசைக்குள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த தேவ், சூரியன் மேற்கில் மறையும் நேரத்தில் தான் சுயநினைவுக்கு வந்தான்.

தலை பாரமாக இருக்க கண்களை திறக்க முடியாமல் முனங்கிக் கொண்டு இருந்தவனின் காதுகளில், ஏதோ ஒரு பெண்ணின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு நினைவு திரும்பிக் கொண்டிருந்தது. கண்மணி மயங்கி சரியும் காட்சி அவன் மனகண்களில் வந்து போக, சட்டென்று கண் விழித்தான்.

ஆனால் அவன் கை கால்கள் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்ததால் அவனால் எழுந்து அமர முடியவில்லை.

நிதர்சனத்தை உணர்ந்தவன் சுற்றி முற்றி கண்மணியை தேட, அவனுக்கு எதிரே இருந்த பலகையில் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்க, ரத்த காயத்தோடு அமர்ந்திருந்தாள் காட்டில் அவன் காப்பாற்றிய அந்த புதியவள்.

அவள் தான் தேவ்வை அழைத்துக் கொண்டு இருந்திருக்கிறாள் போல, அவன் கண் விழித்து விட்டதை கண்டவள் அவனுடன் தெளிவாகப் பேசத் தொடங்கினாள்.

முதலில் அவள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருப்பதைக் கண்டவன், அவளது தெளிவான பேச்சைக் கேட்டு அவளது மொழியிலேயே,

“அப்ப நீ பைத்தியம் இல்லையா?”

“ஐயோ இல்லங்க நான் பைத்தியம் இல்ல, அந்த கங்கம்மாவோட பையன் தான் பைத்தியம். அவன் ஒரு சைக்கோ, ஏற்கனவே பல பொண்ணுங்க வாழ்க்கையை சூறையாடி, அந்த சாபத்தால தான் அவனுக்கு விபத்து நடந்து, புத்தி சரியில்லாம போயிருக்கு.

சாதாரணமாவே மிருகத்தனமா இருந்தவன் இப்போ அசுரனாவே மாறி நிற்கிறான். அவனுக்கு கல்யாணம் பண்றதுக்காக தான் என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க.

முதல்ல அந்த கங்கம்மாவோட பையனை பத்தி எனக்கு எதுவுமே தெரியல, இங்க வந்து ஊர்க்காரங்க மூலமா தான் எனக்கு விஷயம் தெரிய வந்துச்சு. உடனே நான் இங்கிருந்து தப்பிக்க பார்த்தேன், என் அப்பா அம்மாவை அடைச்சு வச்சு கொடுமை படுத்தினாங்க.

அவன் கூட வாழறதுக்கு சாவதே மேல்ன்னுதான், கத்தி எடுத்துகிட்டு காட்டுக்குள்ள ஓட பார்த்தேன். அப்பதான் நீங்க வந்து என்னை பிடிச்சுட்டீங்க.

ஆனா என்ன காரணமோ தெரியல என்னை இங்க உங்களோட அடைச்சு வச்சுட்டாங்க.

எனக்கு என்ன தோணுதுன்னா எனக்கு பதிலா உங்க கூட இருந்த பொண்ணை, அந்த ராட்சஷனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு பலியாக்கப் போறாங்க.”

“ஐயோ பட்டர் ஸ்காட்ச்…”

அவளது குழந்தை முகம் கண்களில் வந்து போக, அவனையும் மீறி கத்தி இருந்தான்.

“மத்தள சத்தம் கேட்குது கல்யாண சடங்கை ஆரம்பிச்சுட்டாங்க போல.”

“கண்டிப்பா இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன் பட்டர் ஸ்காட்ச். உன்னை இந்த ஆபத்துல இருந்து மீட்டு, உன் இருப்பிடத்துல நல்லபடியா சேர்ப்பேன்.”

அதே நேரம் மணப் பெண்ணுக்கான சடங்குகள் ஆரம்பமானது. அங்கு நடக்கும் எதையுமே உணராமல் தேவ் வந்து விட மாட்டானா என்று, கண்களில் நீரோடு அவனை தேடிக் கொண்டிருந்தாள் கண்மணி.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top