- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
6
மறுநாள் காலை முக்கிய நபர்களை மட்டும் கூட்ட அரங்கில் (மீட்டிங்) பேச அழைத்திருக்க, அவர்களுடன் புதிதாகச் சேர்ந்திருந்த ஐவரும் இருந்தனர்.
ஜெகதீஷ் ஆரம்பிக்கும் விதமாக அனைவரையும் வரவேற்று, புதிதாக அரசு அறிவித்திருக்கும் திட்டம் ஒன்றிற்கு தங்கள் நிறுவனம் சார்பாக ஒப்பந்தம் அனுப்பவும், அது சார்பா அறிவழகன் வந்து தெளிவாக விளக்குவதாகவும் கூறி, “இன்னும் டூ மினிட்ஸ்ல சார் வந்திருவார். அதுவரை எதாவது கம்ப்ளைண்ட் இருந்தா சொல்லுங்க” என்றதும் நரேனும், லாவண்யாவும் எழ, “நீ சொல்லுமா?” என்றார் ஜெகதீஷ்.
“சார் கேன்டீன்ல ஏன் இட்லி, சாம்பார் வைக்கக்கூடாது? அப்படியே உருண்டைக் குழம்பு, பஜ்ஜிக்கு காரசாரமா மிளகாய் சட்னி, இப்படி சொல்லிட்டே போகலாம்” என்று முதல் புகாரை வைத்தாள்.
“நல்லது. நீ சொல்லு நரேன்?” என்றார் நரேனிடம்.
“சேம் ப்ராப்ளம் சார். என்ன, மிளகாய் சட்னிக்குப் பதிலா, தேங்காய் வித் வேர்க்கடலை சட்னி இருந்தால் அசத்தும் சார்” என்றானவன்.
“சட்னி கேட்ட ரெண்டு பேரோட கிட்னியை எடுக்கப்போறாங்க” என்று மாலினி பின்னிருந்து குரல் கொடுக்க, அவர்கள் இருவரும் அவளை முறைக்க சட்டென்று சிரிப்பலை அங்கே.
அந்நேரம் அவ்வரங்கின் கதவு திறக்கப்பட, உள்ளே நுழைந்தவனைப் பார்த்து, பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கண்ணிமைக்காது பார்த்திருந்தனர்.
“ஹாய் யங்க்ஸ்டர்ஸ்” என்று அவன் சிரித்த அழகில் நாயகன் பட்டத்தைச் செலவில்லாமல் தட்டிச் சென்றான் அறிவழகன்.
“அனுமா! அது நம்ம அறிவழகன் சாரா? அவருதான்னா, அச்சோ! எம்புட்டு அழகா இருக்காவ. இத்தன நாள் இந்த அழகையெல்லாம் முடிக்குள்ள மறைச்சுப்புட்டாவளே. ஆனா, ஒண்ணு அனுமா, இது அவர்தான்னா, அழகும், அறிவும் சரியாதான் சொல்லியிருக்கேன்” என்றாள்.
அதுவரை அவனை ஆர்வமாய் இல்லாவிட்டாலும், ஆச்சர்யமாய்ப் பார்த்திருந்தவள், “அழகு எப்பவும் ஆபத்து மானி செல்லம்” என்று அறிவழகனை மிதப்பான பார்வை பார்க்க, பளிச்சென்ற புன்னகையை அவளை நோக்கி வீசியவன், அடுத்த நொடி அதை மறைத்திருந்தான். பார்க்க வேண்டியவள்தான் பார்த்தாகிற்றே!
அவனை நோக்கி முகம் சுளித்தாலும், இதை வளரவிட அவளுக்கு மனமில்லை. என்ன செய்வது என்ற யோசனையின் நடுவே அவன் ஒப்பந்தம் பற்றி பேச ஆரம்பிக்க கவனத்தை அதில் செலுத்தலானாள்.
“கவர்ன்மெண்ட்கு தேவையான நியூ ப்யூச்சர்ஸ் டிவைஸ்தான் கேட்டுருக்காங்க. அதுக்கான டெண்டர் அனுப்பணும். அதற்கான டிஸ்கஸ் பண்ணதான் இங்க கூடியிருக்கோம்” என்றவன் அதை எதற்காக அரசு கேட்கிறது என்பதையும் விளக்கி, “உங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஐடியா இருக்கும். நீங்க சொல்லுங்க. யாரோடது சரியா இருக்கோ அதையே புரொசீட் பண்ணலாம்” என்றதும் அனைவரும் சம்மதமாகக் குரல் எழுப்பினர்.
“அறிவழகன் சார் ஒன் டௌட்?” என்று எழுந்த லாவண்யாவை யோசனையுடன் பார்த்தவன், ‘கேளுங்க’ என்பதாய் தலையசைக்க, “அ...து... உங்களுக்கானவள் கிடைச்சாச்சா சார்?” என்றாள் வேகவேகமாக.
“ஏன் திடீர்னு?” என்றவனுக்கு, அன்றைய அவளின் கேள்விக்கு அவனின் பதில் ஞாபகம் வந்தாலும், அமைதியாகவே நின்றிருந்தான்.
“வந்த அன்னைக்கு உங்க ஆளுக்குப் பிடிக்கலைன்னா, தாடியை எடுத்துருவேன்னு சொன்னீங்க சார்” என்றாள்.
பார்வை சில நொடிகளேனும் அனுரதியிடம் சென்று வர, “இருக்கலாம்” என்றான் புன்னகை மாறாது.
அனுரதி மட்டும் அவனைப் பார்க்காது தலைகுனிந்தபடி அமர்ந்திருக்க, “அனுமா! அவர் உன்னைச் சொல்றாரோ?” என கேட்டாள் மாலினி.
“ஏன் மானி லூசு மாதிரிப் பேசிட்டிருக்க. அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” கடுப்புடனே கேட்டாள்.
“அன்னைக்குக் கட்டிக்கப் போறவளுக்குப் பிடிக்கலைன்னா, ஐ மீன் பிடிக்கலைன்னு அவள் முகம் சுளிச்சாலே எடுத்துருவேன்னு சொன்னார். நேத்து நீதான் அவரைப் பயங்கரமா பங்கம் பண்ணின. அதான் அப்படியிருக்குமோ நினைக்கிறேன்” என்றாள்.
“இங்க நான் மட்டும் பெண்ணில்லை மானி. இந்த மூஞ்சியைப் பார்த்தா உன்னை, லாவண்யாவை மாதிரி சிலரைத் தவிர, எல்லா பெண்களும் கழுவி ஊத்தத்தான் செய்வாங்க. அதில் யார்கிட்ட இவன் சிக்கினானோ... கிழிச்சித் தொங்க விட்டுட்டா போல. இதுல நீ என்னைக் கோர்த்து விடுற. போ போய் அந்த டிவைஸ்கான ஐடியா யோசி. அப்பதான் புரமோஷன் கிடைக்கும்” என்றாள்.
“எனக்கென்னவோ...” என ஆரம்பித்ததும் கையெடுத்துக் கும்பிட்டவள், “என்னை எந்த ஆணோடவும் சேர்த்துப் பேசாத மானி. அது எனக்குப் பிடிக்கவே பிடிக்காத டாபிக்” என்றதும் பட்டென வாயை மூடிக்கொண்டாள் மாலினி.
மாலை வீட்டிற்குச் செல்ல தோழிகள் இருவரும் நிறுவனத்தில் இருந்து வெளியே வர, அந்நேரம் வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து வந்த இருசக்கர வாகனம் ஒன்று, நிதானம் தவறி, அனுரதியை மோதுவதுபோல் சென்று கீழே சரிந்தது.
“ஏய்! அனுரதி பார்த்து” என ஓடி வந்து அவள் தோளைப் பிடித்து தன்னுடன் நிற்குமாறு பிடித்துக்கொண்ட அறிவழகன், அப்பொழுதுதான் தான் எழுந்து, வண்டியையும் நேராக நிறுத்தியவனைப் பார்த்து, “ஏய்! என்ன வண்டி ஓட்டுற? கேர்ள்ஸ் வர்றதைப் பார்க்காம வர்ற. அப்படி என்ன அஜாக்கிரதை? அறிவில்லை உனக்கு. அடிபட்டிருந்தா என்னாகியிருக்கும். இரண்டு உயிருக்கு ஆபத்து விளைவிச்சிருக்க. உன்னை...” என வார்த்தையால் அவனைப் போட்டுத்தாக்க,
“சார் சார். சாரி சார். முன் வீல்ல ஏர் லோவா இருந்திருக்கு சார். ஓட்ட ஆரம்பிச்சி அலைபாயவும்தான் கண்டுபிடிச்சேன். சுதாரிக்கிறதுக்குள்ள மோதிருச்சி. சாரி சிஸ்டர்” என்றான் பதற்றத்துடன்.
“சரி போ” என்று அனுப்பி வைக்க, அந்நேரத்தில் மாலினி கண்விரித்து வாய்மூடி நின்றிருக்க, அதைப் பார்த்த பின்பே அனுரதிக்குத் தான் நின்றிருக்கும் நிலை உணர, சட்டென அவனை உதறி கோவத்தில் முறைத்தவள், “அவனை சொன்னீங்களே. நீங்க என்ன சார் பண்ணுறீங்க?” என்று பல்லைக்கடித்தாள்.
“நான் உங்களைக் காப்பாற்றினேன்மா. கீழே விழுந்திருந்தா என்னாகுறது?”
“என்னவோ ஆகிட்டுப் போகட்டும் சார். நான் விழுகுறதுல உங்களுக்கென்ன பிரச்சனை? ஏன் அந்த பைக்காரனும் கீழ விழுந்தான் தான? அவனைத் தூக்கி விட்டுருக்கலாமே? ஏன் செய்யலை? பொண்ணுங்கன்னா உடனே தாங்க வந்திருவீங்களே” என்றாள் படபடவென பொரிந்தபடி.
“அனு... அனுமா. என்னதிது? விடுடா. ஹெல்ப் பண்ணினதை ஏன் தப்பாக்குற?” என்று மாலினி அவளை அமைதிப்படுத்த முனைய,
“தப்பாக்குறேனா? ஏய்! இவன் என்னைப் பார்க்கிற பார்வையே சரியில்லைன்னு நான் சொல்றேன்தான. எப்படா சான்ஸ் கிடைக்கும்னு காத்திருந்த மாதிரி தெரியுது” என்று சத்தமாகவே பேச, வேடிக்கை பார்க்க நின்றவர்களை சைகையில் அனுப்பியவன், “சரிமா. தப்பு என்னோடதாவே இருக்கட்டும். நீங்க எமோஷனல் ஆகாதீங்க. இந்த நேரத்தில் அது நல்லதுக்கில்லை” என்றான் கனிவாக.
“என் நல்லதைப் பற்றி நீ யோசிக்கிறியா? நான் எமோஷனலாகக் காரணமே நீதான்டா” என்று கத்த, “ஏய் அனுமா! கொஞ்சம் அமைதியா இரேன். அவரைப் போயி மரியாதை இல்லாமல் வேற பேசுற” என்று அமைதிப்படுத்த முயற்சித்தாள் மாலினி.
“மரியாதையா? இவனுக்கு மரியாதை கொடுத்துட்டாலும். பார்வையும் சரியில்லை. ஆளும் சரியில்லை. அதுவும் இன்னைக்கு, அப்பவே எதையாவது கொண்டு அடிச்சிருக்கணும் மானி” என்று மேலும் மேலும் பேச, அவனோ பொறுமையாக, “அடிக்கணும்னு நினைச்சா அடிச்சிரணும் அனுரதி. கண்ட்ரோல் பண்ணினா ஸ்ட்ரெஸ் அதிகமாகும். நீங்க அடிங்க நான் வாங்கிக்குறேன்” என்று அமைதியாக நின்றான்.
அடிக்கக் கிளம்பிய தோழியை இழுத்துப் பிடித்து நகர்த்திச் சென்ற மாலினி பின்னால் திரும்பி, “சாரி சார். இப்பக் கொஞ்ச நாளாதான் சட்டுன்னு எமோஷனல் ஆகிருறா. ரொம்ப நல்லவள் சார். யார் மனதையும் நோகடிக்கணும்னு நினைக்கக் கூட மாட்டா. அவள் லைஃப்ல நடந்த சில...” என்கையில், “மானி இவன்கிட்ட இதையெல்லாம் ஏன் சொல்ற?” என்றாள்
“சும்மாயிரு அனு” என அதட்டி, “சில கசப்பான சம்பவங்கள் இப்படிப் பேச வைக்குது. தப்பா எடுத்துக்காதீங்க சார்” என்றாள் கெஞ்சலாக. இதை வைத்துத் தோழியின் வேலைக்கு எதாவது பிரச்சனை வருமோ என்ற கவலை அவளுக்கு.
“நீங்க எதையும் சொல்லணும்னு அவசியமில்லை மாலினி. அவங்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க” என்று தன் காரை எடுக்கச் சென்றான்.
தங்களுக்கான அலுவலக வாகனத்தில் ஏறி வீடு வர, “அனுமா தம்பிக்குக் காலேஜ் நாளையோட முடியுதாம். முடிஞ்சதும் வந்துருவேன்னு சொல்லிட்டான்” என்றார்.
“சரிம்மா. எனக்குக் கொஞ்சம் ஒருமாதிரி இருக்கு. நான் படுத்துக்குறேன்” என்று தனதறைக்குள் செல்ல, அதில் பதறியவர், “அனுமா உடம்புக்கு என்னடா? வர்றியா டாக்டரைப் பார்த்துட்டு வரலாம்” என்றழைத்தார்.
“ப்ச்... வேண்டாம்மா. வரும்போது பைக் ஒண்ணு மோதுற மாதிரி வந்தது. அதுல வந்த பதற்றம்தான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிரும்” என்று சொன்னவள் இரவு முழுமைக்குமே அடித்துப் போட்டாற்போல் தூங்கினாள்.
மகளுக்கு ஏதோ பிரச்சனை என உள்ளம் உணர, மாலினிக்கு அழைத்து என்ன நடந்ததென்று சாரதா கேட்க, அவளோ நடந்ததைச் விளக்கி, சில நாட்களாக தோழியிடம் தெரியும் மாற்றங்களைச் சொல்லி வருத்தப்பட்டாள்.
என்ன செய்வதென்று புரியாது விழிபிதுங்கி நின்றவர் சில நொடிகளில் இதுதான் சரியென்று முடிவெடுத்தார்.