• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 16, 2025
Messages
4
காதல் - 4



அன்னையின் பேச்சை மீறியும் வேலைக்குக் கிளம்பி விட்டான் அழகன். இவரின் அழுகையைப் பொருட்படுத்தினால் இன்னும் தன்னை அடிமையாக்கவே முயல்வார் என்றுணர்ந்து தமக்கையிடம் மட்டும் மன்னிப்பை வேண்டி விட்டு சென்றான்.

"பாருடி அவன் என்னைய ஒரு பொருட்டாவே மதிக்காம போறான்.. மாப்பிள்ளை வீட்டுல கேட்டா நான் என்ன சொல்றது.? தகப்பன் இல்லாத வீடு.. இவன் தான் முன்னாடி நின்னு எல்லாமும் பண்ணனும்னு தெரியாதா.? இதைய கூட ஒரு ஆள் சொல்லித் தரணுமா.?" என்று மகளிடம் மூக்கை உறிஞ்சினார்.

தமயந்தியும் "அம்மா அவன் நிலைமையும் புரிஞ்சுக்கம்மா.. அதான் அக்கா வர்றேனு சொல்லிருக்கா.. இதுல நீ அவன்கிட்ட கூட சொல்லாம இந்த மாப்பிள்ளையை பத்தி விசாரிச்சுருக்க.. அப்ப மட்டும் இவனை நீ நினைக்கலயா.?" என்று சரியான கேள்வியை எழுப்பினாள்.

தேவகியால் பேச முடியவில்லை. அவனிருந்தால் செலவுகள் அனைத்தையும் அவன் ஏற்றுக் கொள்வான். இப்போது அவரிடம் இருக்கும் பணத்தில் தான் தேவையானதை வாங்க வேண்டும்.. அவனிருந்தால் ஆடம்பரமாக இந்நிகழ்வை நடத்த முயன்றிருப்பார். ஆனால் இப்போது அது முடியாதே.. அந்த ஏமாற்றமே அவரைக் கோவம் கொள்ளவும் வைத்தது.

அவரின் பெரிய மகள் வருவாள். அவளுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். இல்லையென்றால் சம்பந்தியின் வீட்டில் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்.? என்ற எண்ணம் தான்.

வீடு இருக்கும் நிலைக்கு இவர் இப்படி ஆடம்பரமாகவே ஆடிக் கொண்டிருந்தால் எப்படி.? ஒரு தாயாக மகனின் வேதனைகளைப் புரிந்துக் கொள்ளவே இல்லை. ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து நினைத்தே மகனின் வாழ்வைக் கேள்விக்குறியாக்க முயல்கிறார். மகள்களைப் பற்றி நினைப்பவர் எப்போது மகனைப் பற்றி நினைப்பாரோ.?

"அம்மாடி இன்னைக்கு சாயந்திரம் பொண்ணு பார்க்க வர்றாங்கம்மா.. நீ ரெடியா இரு.. எப்படியாவது இந்த கல்யாணத்தை நான் நடத்தி வெப்பேன்.. நீ எதையும் யோசிக்காம சந்தோஷமா இரு" என்று பெரிய மகளிடம் தேனுவின் தந்தை கூறினார்.

ராமநாதன் - சிவகாமி தம்பதியர்களின் மகள்கள் தான் கனிமொழியும் தேன்மொழியும். எப்போதும் மகள்களிடம் கோவத்தைக் காட்டவே மாட்டார். நல்ல தந்தை.. அதே போல் நல்ல கணவனும் கூட. தன் முடிவு தவறென்று மனைவி உரைத்தால் அதை முழுமனதாக ஏற்றுக் கொள்வார்.

'நீ சொல்வதை நான் கேட்பதா.?' என்று வீம்பு பிடிக்க மாட்டார். மனைவியை மதிப்பவர். அதனால் தான் இரண்டும் பெண் குழந்தைகளாக இருந்தபோதும் அவர்களைத் தங்கதட்டில் வைத்து தாங்காமல் தாங்குபவர். மகள்களுக்குப் பிடித்ததை செய்யவும் விடுவார்.

அப்படிப்பட்ட தந்தை இப்போது முகத்தைக் காட்டுவதை தேன்மொழியால் தாங்க முடியவில்லை.

"அப்பா சாரிப்பா.." என்று அவரைப் பேச வைக்க இவள் முயல, அவரோ அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல் பெரிய மகளிடம் "நீ கவலைப்படாம இரும்மா.. உனக்கு செய்ய வேண்டியது என் கடமை" என்று விட்டு சென்றார்.

அவருக்கு அவள் பணத்தைத் தூக்கி குடுத்தது எல்லாம் பிரச்சனையில்லை. அவன் நல்லவனாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு அவனை நம்பி இவ்வளவு பெரிய தொகையைக் குடுத்திருக்கும் மகளின் முட்டாள்தனத்தை நினைத்துத் தான் கோவம்.

"அழுகாத தேனு.. அப்பா பேசுவாரு.. ஆனாலும் நீ பண்ணுனது தப்பு தானே.?" என்று கனியும் கூறிட, "எனக்கு என்ன பண்றதுனு தெரியலக்கா.. அவங்க அக்கா பொண்ணுக்குக் காது குத்த பணம் கிடைக்கலனு அவவங்க விடாம அலைஞ்சாங்க.. மனசு கேட்காம தூக்கி குடுத்துட்டஏன்.. எப்படியும் அவங்க திருப்பிக் குடுத்துருவாங்கக்கா.. அவங்க ஏமாத்த மாட்டாங்க" என்றவளை இவள் இன்னும் கோவமாக தான் முறைத்தாள்.

பின்பு "முட்டாள்தனமா இருக்காத தேனு.. அவங்க திருப்பி குடுக்கறது சரி.. அத்தியாவசிய தேவைக்கே அவங்ககிட்ட பணம்னு ஒன்னு இல்லை.. இதுல நீ அவங்கள கல்யாணம் பண்ணுன உன்னைய எப்படி பார்த்துப்பாங்க.? இன்னும் அவங்க அக்கா, அம்மானு செஞ்சுட்டு இருந்தா கடைசில சேமிப்புனு ஒன்னு அவங்ககிட்ட இருக்குமா.?

நீயாவது புத்தியோட நடந்துப்பேனு நினைச்சேன்.. அவங்கள விட நீதான் முட்டாளா நடந்துருக்க.. அவங்க அம்மாக்கு சம்பந்திகிட்ட மரியாதை கிடைக்கணும்னு இவ்ளோ பெரிய பாரத்தை இவங்க தலைல ஏத்தி விட்டுருக்காங்க.. தகுதிக்கு ஏத்த மாதிரி செஞ்சா போதாதா.?

தகுதிக்கு மீறி செய்யணும்னு ஆசைப்படறது தப்பில்லையா.? இதுல இன்னொரு அக்கா இருக்காங்கனு வேற சொல்ற.. அவங்க கல்யாண செலவுக்கு இவங்க என்ன பண்ணுவாங்களாம்.?

பணம் போனது கூட பிரச்சனையில்ல.. உன்னைய கல்யாணம் பண்ணிக் குடுக்க அப்பா சம்மதிப்பாருனு நினைக்கறீயா.?" என்று நியாயமான கூற்றையே வினவினாள்.

இவர்களின் தந்தை பணத்தைக் கேட்டபோது முதலில் பொய் சொல்லி சமாளித்தவள் பின்பு வேறு வழியின்றி உண்மையைக் கூறிட, அன்று தான் தந்தையின் கோவமான முகத்தையே இவர்கள் கண்டார்கள்.

பின்பு அழகனைப் பற்றி கனிமொழி வினவிட, அவனின் குடும்ப வரலாற்றை அப்படியே ஒப்பிவித்து இருந்தாள் தேனு.

அவனின் அறியாமையை நினைத்து கனிமொழிக்கு கோவம். அவனின் அன்னை தான் புரிந்துக் கொள்ளாமல் இப்படி இருக்கிறார் சரி மாடாக உழைக்கும் இவனுக்கு வாயில்லையா.? என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும்.. என்று தைரியமாக உரைத்திட முடியாதா.?

கையில் பணம் இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யட்டும்.. இப்படி கடனை வாங்கி செய்ய வேண்டுமென்ற அவசியம் தான் என்ன.? தகுதிக்கு மீறி கடன்களை வாங்கியவனை நம்பி தங்கையை எவ்வாறு திருமணம் செய்து வைக்க முடியும்.?

பின்பு இவளும் அவன் வாங்கிய கடன்களைக் கட்டவே ஓட வேண்டி இருக்கும்.. இவர்களுக்கென்று சிறு சேமிப்பு கூட இருக்காது. இவர்களுக்கென்று வாழ தான் முடியுமா.? அதற்குள் குழந்தை என்று ஒன்று வந்து விட்டால் மருத்துவமனை செல்ல தான் பணம் இருக்குமா.?

ஒருநாள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாலே கடனை அடைக்க என்ன செய்வது என்று யோசித்துப் பதறும் நிலைமை தான் வரும். இப்போதே அழகன் அந்நிலையில் தான் இருக்கிறான். இவனை நம்பி தந்தை தான் தன் பொண்ணைக் குடுப்பாரா என்ன.?

அவருக்கு வசதி வாய்ப்பு முக்கியமில்லை தான்.. அதற்காக ஒன்றுமே இல்லாதவனுக்கு பொண்ணைக் குடுக்கும் அளவிற்கு இவர் ஒன்றும் முட்டாள் இல்லையே.. இவரும் சராசரி தந்தையைப் போல் தான்.. புகுந்த வீட்டில் அனைத்து வசதிகளுடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர். அழகன் இருப்பதே வாடகை வீட்டில்.. இதில் வசதிகளுக்கு எங்கு செல்வது.?

இப்படி பலவற்றை நினைத்து தான் கனிமொழி தங்கையைச் சாடுவதே.. ஆனால் அவளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டவில்லை. தங்கையின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தான் அவள் கோவத்தைக் காட்டுவது. இவளின் கோவம் என்ன தவறா.? நியாயமான கோவம் தான்.





அமைதியாக நின்றிருந்த தங்கையிடம் "தேனு நான் சொல்றது உனக்கு புரியுதா.? இல்லையா.? இப்படி இருந்தா எப்படிடி வாழ முடியும்.? நீ என்னைய என்ன நினைச்சாலும் பரவால்ல.. நான் உனக்கு நல்லது நினைச்சு தான் சொல்றேன்.." என்றாள் தமக்கையவள்.

"உன்னைய நான் ஒன்னும் நினைக்கல கனி.. என் தப்புத்தான்.. ஆனா இனி என்ன பண்றதுனு தெரியல கனி.. திடீர்னு அவங்ககிட்ட உங்க அம்மா பண்றது எதுவும் சரியில்லைனு சொல்ல முடியுமா.? இப்ப வரைக்கும் அவங்க அம்மாவை அவங்க விட்டுக் குடுத்ததே இல்ல.. இது கூட அவங்க எனக்கு சொல்லல.. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தான் சொன்னாங்க"

"ஆனா பேச வேண்டியதைப் பேசி தான் ஆகணும்.."

"அதுவும் சரிதான்.. இப்ப உன் கல்யாணத்துக்கு பணம் ரெடி பண்ணனும்.. அவங்களும் நிறையா பேரு கிட்ட பணம் கேட்டுட்டு தான் இருக்காங்க.. எப்படியும் குடுத்துருவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு.."

"பணம் வேணும்னு யாரும் இப்ப பேசல தேனு.. உன் வாழ்க்கையை நினைச்சுத் தான் பேசிட்டு இருக்கோம்" என்றவளின் வார்த்தையும் உண்மையானதே.

"என் பிரச்சனையை விடு.. உனக்கு மாப்பிள்ளை பிடிச்சுருக்கா.?" என்று அவளுக்கு பார்த்திருந்த பையனைப் பற்றி கேட்க, "அம்மா, அப்பாக்கு பிடிச்சுருக்கு தேனு.. எனக்கு கெட்டது செய்ய மாட்டாங்கனு நம்பிக்கையும் இருக்கு.. அவங்களும் பார்க்க நல்லவங்க மாதிரி தான் இருக்காங்க..

ஆனா என்ன நம்மளைய விட வசதி அதிகம்.. அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.. நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரியே பார்க்கலாம்னு சொன்னா அப்பா கேட்க மாட்டிங்கறாங்க" என்று அவளின் மனப்பயத்தைக் கூறினாள்.

ஆனால் தேனுவோ "அப்பா எதையும் யோசிக்காம பண்ண மாட்டாங்க கனி.. இந்த பயம் உனக்கு தேவையில்லாதது.. என்ன நகை தான் கேட்கறாங்க.. பார்த்துக்கலாம்.. உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சாலே போதும்.. காசு பணம் எல்லாம் முக்கியமில்லை..

எவ்வளவு பவுன் கேட்டாலும் குடுக்க அப்பா தயாராக தான் இருக்காங்கனா அவங்கள பத்தி எல்லாரும் நல்லவிதமாக சொன்னதால தான்.. உன்னைய நல்ல பார்த்துக்கிட்டாலே போதும்.. வேறென்ன எங்களுக்கு வேணும்.?" என்றவளின் வார்த்தையிலே தமக்கையின் மீதான பாசமும் வெளிப்பட்டது.

இருவரும் அடித்துக் கொள்ள மாட்டார்கள் என்றில்லை. அதையும் மீறி அவர்கள் ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசம் தான் அதிகம். இவள் தான் அக்கா.. இவள் தான் தங்கை என்றில்லாமல் இருவரும் நண்பர்களாகவே பழகி இப்போது வரை அப்படியே இருக்கவும் செய்கிறார்கள். இதில் பெற்றவர்களுக்கு பெருமையே.

இருபிள்ளைகளுக்கும் நல்வாழ்வு அமைய வேண்டும் என்று அவர்கள் வேண்டாத தெய்வமில்லை. அந்த தெய்வம் இவர்களின் கோரிக்கையை ஏற்றதா.? என்பது தான் சந்தேகமே. பார்ப்போம் இவர்களின் வாழ்வு எங்ஙனம் செல்லுமென்று.!

தாமரை மட்டும் மகளுடன் வந்திருக்க, மாப்பிள்ளை வீட்டாரும் வந்து விட்டிருந்தனர். அழகன் இல்லாமலே இந்நிகழ்வும் நடந்தேறியது. கொஞ்சம் வசதி படைத்தவர்கள் என்பது அவர்களின் அதிகார பேச்சிலே நன்றாக தெரிந்தது.

தமயந்தியைப் பார்த்து விட்டு அவர்களுக்குள்ளே ஏதோ பேசியவர்கள் பின்பு "பொண்ணு ஓக்கே தான்.. முப்பது பவுன் நகையும் பையனுக்கு வண்டியும் வாங்கி குடுக்கறதுனா மத்ததை பேசலாம்" என்று முடிவாக கூறிட,

இது முதலிலே தெரியும் என்பதால் தேவகியும் "போட்டரலாம்ங்க.. அதுல ஒன்னும் பிரச்சனை இல்லை.. நீங்க சொன்னதை செய்ய எங்களுக்கு சம்மதம் தான்.." என்று அழகனிடம் ஒரு வார்த்தையும் கேளாமல் சம்மதமளித்து விட்டார்.

தமக்கைகள் இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தாமரையோ "அம்மா இங்க கொஞ்சம் வாயேன்.. உன்கிட்ட பேசணும்" என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று "என்னம்மா நீ பாட்டுக்கு சம்மதம்னு சொல்ற.? கைல ஒரு பவுனாவது வெச்சுருக்கீயா நீ.? இதுல எந்த தைரியத்துல முப்பது பவுனுக்கு சம்மதம்னு சொல்ற.?" என்று அதட்டினாள்.

பொறவு இந்த முடியாதுனா சொல்ல முடியும்.? எப்படியாவது இவளுக்குக் கல்யாணத்தை முடிச்சு அனுப்பி விட்டா போதும்.. என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.. நீ அமைதியா இரு.. என்று மகளைத் தான் அடக்கினார்.

அப்போதும் அடங்காமல் தாமரையும் "அம்மா இப்பவே சொல்லிட்டேன் என்கிட்ட எல்லாம் பணம் கேட்க கூடாது.. என் மாமியாருக்கு தெரிஞ்சா என் வாழ்க்கை அவ்ளோதான்.. அப்பறம் நானும் இங்க வந்து உட்கார்ந்துக்க வேண்டியது தான்.." என்று முன்னேற்பாடாக கூறி விட்டாள்.

இவளின் வார்த்தையைப் பெரியதாக ஏற்காமல் அவர்கள் கூறிய அனைத்திற்கும் சரி சரியென்று சம்மதமளித்து இந்த சம்பந்
தத்தை உறுதியும் செய்து அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பியும் வைத்தார்.



காதல் தொடரும்..
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top