- Joined
- Aug 31, 2024
- Messages
- 956
- Thread Author
- #1
31
“நான் என்னைப் பெத்தவன் மாதிரி கிடையாது ரதிமா. எந்தக் காலத்திலும் உன்னைச் சந்தேகப்படமாட்டேன். அந்தாள் இரத்தம் எனக்குள்ள இருந்தாலும், நான் அபிராமி வளர்ப்பு” என்றான் திரும்பவும்.
சட்டென கணவனை உதறியவள், அவன் கண்பார்த்து, “எப்படித் தெரியும்?” என்றவள் குரலில் சிறு கோவமும் இருந்தது. அவளுக்குத் தெரியுமே, தன் மாமியார் தன்னைத் தவிர யாரிடமும் இந்த இரகசியத்தைப் பகிரவில்லையென்று.
“நீயும் அம்மாவும் பேசினதை நான் கேட்டேன்” என்கையில் அதற்கு வாய்ப்பில்லையே என்பதாய் அவள் புரியாது விழிக்க, “நான் வீட்டுக்கு வந்தப்ப நீங்க ரெண்டுபேரும் மரத்தடியில் உட்கார்ந்து பேசிட்டிருந்தீங்க. ஃப்ரஷ்ஷாகிட்டு வந்து உங்களோட சேர்ந்திருக்கலாம்னு நினைச்சி உள்ள போயிட்டேன். அடுத்து கொஞ்ச நேரத்துல ரூம்குள்ள பேச்சுக்குரல் கேட்கவும், நீயும், அம்மாவும் சேர்ந்தாலே அந்த இடம் கலகலப்பா இருக்குமேன்ற சந்தோஷம். அத்தனையும் அம்மா பேசப்பேச காணாமல் போயிருச்சி. அந்தாளை தேடிக் கண்டுபிடிச்சி கொல்லுற அளவு கோவம்...”
“என்னங்க” என்றாள் அதிர்வாய்.
“ப்ச்... அந்த நேரத்துக் கோவம் ரதிமா. எங்கம்மா வாழ்க்கையையே வாழவிடாமல் செய்தவன் மேல் வந்த கோவம். மாமாகிட்ட அவனைப்பற்றி விசாரிச்சேன். கேள்வியா கேட்டு அபிக்குப் பிடிக்காதுன்னு சொல்லமாட்டேன்னார். நான் பிடிவாதமா கேட்டதால யார் என்னன்னு சொன்னார். என்ன ஒண்ணு செய்த பாவத்துக்கு எந்த தண்டனையும் அனுபவிக்காம மேல போயிட்டாராம்” என்றான் கோவம் குறையாது.
“அதனால, அவரைப்போல் நீங்க இருப்பீங்கன்னு நினைச்சி, உங்களை ஒதுக்கிருவேன்னு பயந்தீங்களா?” என்று முறைப்பாகக் கேட்க,
“அதைக் கேட்டதிலிருந்து மனசு உறுத்தல் தாங்கலை ரதிமா. உனக்காக இல்லைனாலும் என் மனதிருப்திக்காக உன்கிட்டச் சொல்லி...”
“சொல்லி? சொல்லுங்க என்மேல சந்தேகப்படுறீங்களா?” என்றாள் அவன் அப்படியல்ல என தெரிந்திருந்தும்.
“அச்சோ! ஏய்! என்ன ரதிமா? நான் உன்னைப்போயி... ப்ச்... எதோ பேச வந்து வேறெதோ பேசி...” வார்த்தை முடிக்கவியலாது அவன் தவிக்க,
“உங்களுக்கு என்மேல நம்பிக்கை இருக்கும் போது, நான் மட்டும் எப்படி?” என்றாள் கோவம் குறையாது.
“சாரி இனி பேசலை” என்று இறங்கி வந்தான்.
“சாரில்லாம் வேண்டாம். முடிஞ்சதை விடுங்க. அத்தையே அப்படி ஒருத்தர் அவங்க வாழ்க்கையில் வந்ததை மறந்துட்டாங்க. முடிந்தது முடிந்ததுதான்” என்றாள்.
“அப்ப நாம தொடங்கலாமா?” என்றவன் குரலும், பார்வையும் மாற, “என்ன தொடங்க?” என கேட்க வந்தவள் பார்வை கணவனிலே நிலைக்க, இடைவளைத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டவன் விரல் கொண்டு அவள் முகம் வருட, வெட்கம் வேண்டாத விருந்தாளியாய் அவளை ஒட்டிக்கொள்ள, நாணத்தில் முகம் சிவக்க நின்றிருந்தாள்.
சன்னமான மழை வெளிச்சத்தில் பார்க்காத மனைவியின் வெட்கத்தை, மனம் உணர்ந்ததோ! சட்டென்று அணைப்பைக் கூட்ட, விலகப்போனவளை விடாதிருக்க, “விடுங்க” என்றாள் சத்தமே இல்லாது.
“ஏன்?” என்றான் காதோரம் செல்லக்கடி கடித்து.
“ஹ்ம்...” என கழுத்தைச் சுருக்கிச் சிணுங்கி, “உள்ள என்னென்னவோ பண்ணுது. ஒருமாதிரியா இருக்கு. இப்பல்லாம் உங்களால இந்த வித்தியாசமான அவஸ்தையை உணர்றேன். வேண்டாம்னு வெறுக்கவும் முடியலை. வேணும்னு அடம் பண்ணவும் முடியலை.”
“அதுக்குப் பெயர்தான்...” என காதோரம் எதோ சொல்ல, “ச்சீ... போடா” என்று அவனைத் தள்ளிவிட்டு கொலுசொலி சப்தமிட ஓட, சத்தமான சிரிப்பு அவனிடமென்றால், அதீத வெட்கம் அவளுக்கு.
மெல்லிய கொலுசொலியுடன் மழைச்சாரலும் சேர வான் நோக்கி முகம் நிமிர்த்தியவனுக்குள் அத்தனை ஆனந்தம். “ரதிப்பொண்ணே! என்னை ரொம்ப ரொம்பக் கெட்டவனாக்குற. எப்படிலாம் பேசுறேன் நான்” என தன் தலையில் தானே தட்டிக்கொள்ள, மனைவியிடம் அவன் பேசிய வார்த்தைக்கு, மூன்றாவது பாலான காமத்துப்பாலே கண்மூடிக்கொள்ளும். இரு கைகொண்டு நனைந்த தலையைக் கோத, அர்த்தமில்லா ஆட்டம் போடத் தோன்றியது அறிவழகனுக்கு.
அறைக்குள் வந்தவளுக்கும் படபடப்பு அடங்காதிருக்க, ஈர ஆடை மாற்றத் தோன்றாது அப்படியே அமர்ந்துவிட்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் அறைக்குள் வந்து கதவு சாத்தி, மனைவியின் அருகில் வந்து நெருங்கி அமர, அவள் விலகி செல்ல என்று இருவரும் நகர்ந்தே கட்டிலின் விளிம்பில் இருந்தனர். “நீங்க ரொம்பதான் ஓவரா போறீங்க மேனேஜர் சார். ஒரே நாள்ல நான் எப்படித் தாங்குவேன்? இதெல்லாம் நல்லாயில்லை சொல்லிட்டேன்.”
“அப்பத் தூக்கு ரதிமா.”
“தூக்கவா?” என்றாள் புரியாது.
“ம்... நீதான குழந்தை பிறந்ததும் தூக்குறேன்னு சொன்ன. இப்ப குழந்தை பிறந்து ஒரு மாசமாகிருச்சி. இப்ப தூக்கு” என்றான்.
அப்பொழுதுதான் நினைவு வர, “ஓ... ஆமால்ல. இன்னும் மறக்கலையா அதை?” என்றாள்.
“என் பொண்டாட்டி கொடுத்த வாக்கை எப்படி மறப்பேன்?” என்றவன் குரலில் கொட்டிக்கிடந்தது கிண்டல்.
“ஹான்! நீங்களே பேசி, நீங்களே முடிவு பண்ணி என்மேல் திணிச்சிட்டு, வாக்கு தந்தேன்னு சொல்றீங்களா? அதுக்கு வேற ஆளைப்பாருங்க” என்றாள் உதடு சுளித்து.
“உன்னைத் தவிர வேற யாரையும் பார்ப்பது, உனக்குச் செய்யும் துரோகம்டா செல்லம். அதிலும் நான்? நான்லாம் பொண்டாட்டிதாசனாக்கும்” என்று தீவிரமாய் மொழிய, மனைவியின் முறைப்பினில், “நிஜம் செல்லம். என் ஒரேயொரு மனைவி நீதான். உன் ஒரேயொரு கணவன் நான்தான். வேற யாரையும் எந்த ஜென்மத்திலும் பார்க்கிறதாய் இல்லை” என்றான். கிண்டலாக மொழிந்தாலும் அதில் அழுத்தம் அதிகமிருந்ததோ!
‘உன் ஒரேயொரு கணவன் நான்தான்’ என்றதில் மின்னலாய் அவன் கண்பார்க்க, அடுத்தடுத்த அவன் பேச்சிதனில் தன்னை மறந்து கணவனையே காண, “என்னடா?” என்றான் மென்மையாக.
“என் ஒரே கணவன் நீங்க மட்டும்தான அழகா?” என்றாள் அவன் முகம் வருடி. அவ்வார்த்தையில் அப்படியொரு ஆசுவாசம். இந்த ஒரு வார்த்தை போதும் ஜென்மத்துக்கும் என்றிருந்தது அவளுக்கு. ‘நான் மிஸஸ்.அறிவழகன்! மிஸஸ்.அறிவழகன் மட்டும்தான்!’ ஏற்கனவே பிடித்த வார்த்தை. இந்நிமிடம் அவளின் உயிரானது.
பெண்ணவளின் முகம் காட்டும் உணர்வுகளில், அதீத உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிய, மெல்ல அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “நீ, நான் இதுதான் நிஜம். ட்ரஸ் ஈரமா இருக்கு பாரு. போய் மாத்திட்டு வா. சளி பிடிச்சா உனக்கும் கஷ்டம். பால் கொடுக்குறதால பாப்பாவுக்கும் கஷ்டம்.” குழந்தை என்றதில் மனமில்லை எனினும் எழுந்து சென்றுவிட்டாள்.
அருகில் இருந்த துண்டை எடுத்துத் தலையைத் துடைத்து ஆடை மாற்றி அமர்ந்தவன் எண்ணமெல்லாம் மனைவியே!
அடுத்த இரண்டாவது நாளில் மனைவியின் முன் நின்றவன் எங்கோ செல்ல அழைக்க, எங்கேயென கேள்வி எழுப்பியவளிடம், “நீ முதன்முதலாக என்னிடம் கேட்டதைத் தர” என்றான்.
என்ன கேட்டோம் என்பதையே மறந்தவள், புரியாது திரும்பவும் கேட்க, “எதுவும் கேட்கக்கூடாது. போனால் தெரியப்போகுது” என்றவன் குடும்பத்தினர் அனைவரையும் காரில் அடைத்துக் கிளம்பிவிட்டான்.
‘என்னதிது? நான் கேட்டதைத் தர்றேன்னுட்டு, குடும்பத்தோட வெக்கேஷன் ரெடி பண்ணியிருக்காங்க? என்னவாயிருக்கும்?’ என்ற கேள்வி அனுரதிக்குள்.
“இந்த நைட் நேரம் எங்களை எங்கடா கூட்டிட்டுப் போற” என்றவர்களை அசட்டை செய்து, விடியற்காலையில் திருச்சி வந்து அங்கு இருந்த தங்கும் விடுதியில் அறை எடுத்து, வீட்டிலுள்ள அனைவரையும் குளித்து தயாராகச் சொன்னான்.
அனைவரும் தயாராகி வர, கையோடு விடுதியை காலி செய்து, காலை உணவு முடித்து வந்த இடத்தைக் கண்டவர்களுக்கு அத்தனை பரவசம்.
திருவானைக்கால் ஜம்புலிங்கேசுவரர் ஆலயத்தின் முன் நின்றிருந்தார்கள். அபிராமி மகனை ஆராய்ச்சியாய்ப் பார்த்து, “அறிவா! ஜம்புலிங்கேசுவரரை பார்க்கப் போறோம்னு சொல்லியிருக்கலாமேடா? என்ன திடீர்னு ஆன்மீகம்?” என கேட்டார்.
அறிவழகன் பதில் சொல்லாது அமைதியாக இருக்க, சாரதாவுமே மகளிடம் கேட்க, “எனக்கே தெரியாதும்மா. ஒருவேளை இந்த அரவிந்த்கு தெரிஞ்சிருக்கலாம். அதான் வேலையைக் காரணம் காட்டி வரலைபோல” என்றாள்.
திருச்சியில் திவ்யதரிசனம் முடிந்து வெளியில் வர, “என்னடா மருமகனே திடீர்னு?” என்றார் ஆனந்தன்.
“இருங்க மாமா சொல்றேன்” என்று அடுத்து அழைத்துச் சென்ற இடம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில். அந்த அருட்பெருஞ்ஜோதியைத் தரிசனம் செய்து, அங்கிருந்த விடுதி ஒன்றில் சற்று நேரம் ஓய்வெடுத்து, பின் சிதம்பரம் நடராஜரைக் காண வந்தார்கள். சற்று நிதானமாகவே சாமியை தரிசித்து, அடுத்து வந்தது காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில். அதற்கே இரவாகிவிட்டது.
பச்சைக்குழந்தை இருப்பதால் ஆங்காங்கே நிறுத்திதான் வந்தார்கள். இரவு எட்டு மணிபோல் ஏகாம்பரேசுவரரைத் தரிசித்து, அடுத்து சென்னை நோக்கிக் கார் செல்ல, அடுத்து வீடுதான் என்றிருக்கையில், வாகனம் சென்னை தாண்டி ஆந்திரா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
“டேய் அறிவா! என்னாச்சிடா உனக்கு? சிவனின் தீவிர பக்தனாகிட்டியா? திருப்பதியில் பெருமாள்தான்டா இருக்கார். அங்க ஏன்?” என்றார் புரியாது.
“இடையில் காளஹஸ்தீசுவரர் இருக்காரும்மா” என்றான் பதிலாக.
“குழந்தை இருக்கா அறிவா. உன் பொண்டாட்டியும் பச்சை உடம்புக்காரி. இப்பவே பார்க்கணும்னு என்ன இருக்கு? எதாவது வேண்டுதல் வச்சிருக்கியா?”
“யாருக்கும் எதுவும் ஆகாதும்மா. எல்லாம் சிவன் பார்த்துப்பார்” என்றவனையே ஆராய்ச்சியாய்ப் பார்த்திருந்த அனுரதியின் கேள்விப் பார்வையில், என்னவென்று அவன் புருவம் உயர்த்த, ‘என்னவோ இருக்கு’ என்ற பதிலை பார்வையிலேயே கூற, சிறு தோள் குலுக்கலுடன் அதைப் புறந்தள்ளினான்.