- Joined
- Aug 31, 2024
- Messages
- 956
- Thread Author
- #1
30
நள்ளிரவு இரண்டு மணியளவில் தூக்கமில்லாது உழல்வதைக் கண்டவன், மனைவியை எழுப்பி அமரவைத்து என்னவென்று கேட்டான். எதுவும் கூறாது அவள் அமைதியாக இருக்க, அவளை ஆராய்ந்ததில் எதை உணர்ந்தானோ, சட்டென்று அறையை விட்டு வெளியேறி, சில நிமிடங்களில் குழந்தையுடன் வந்தவனை நன்றியுடன் பார்த்தாள் அனுரதி.
“இந்தப் பார்வையை முதல்ல மாத்து. கட்டினவனுக்கு நன்றி சொல்றாளாம். லவ் சொன்னா பரவாயில்லை” என முனகியபடி திட்ட, “சரி. சாரி” என்று தலையசைத்துப் புன்னகைத்தாள்.
குழந்தைக்குப் பால் கொடுத்து முடிந்ததும், அண்ணனிடம் கொடுத்து வந்ததவனை விழியகற்றாது பார்த்திருக்க, “பார்த்தது போதும். தூங்கு ரதிமா” என்றான்.
“எப்படித் தெரியும்?” என் தேவை என்னவென்று என்பதைக் கேட்காமல் விட்டிருந்தாள்.
“ஹான்! பார்த்ததால தெரியும்” என்று சாதாரணமாகச் சொல்ல, சில நொடி கழித்தே அவன் சொன்னதை உணர்ந்தவள், சட்டென குனிந்து துண்டை எடுத்து முன்பக்கம் முழுதாக மூட, “டூ லேட் மிஸஸ்.அறிவழகன்” என்று கள்ளச்சிரிப்பு சிரித்தான்.
“உன்னை... போ...” என செல்லமாகத் திட்டி திரும்பிப் படுக்க, கணவனின் மோகனச்சிரிப்பு அவள் காதருகினில்.
இதோ இன்று காலை ஏழுமணியளவில் ஆனந்தன்-சாரதா திருமணம், வீட்டினர் முன் அபிராமி வீட்டினில் எளிமையாக முடிந்திருந்தது. காலை உணவு முடித்து அனைவரும் வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்க, சாரதா மட்டும் அறைக்குள் ஒதுங்கிக்கொண்டார்.
“அறிவழகன் சார் நீங்க தலைமுடியை ஷார்ட் பண்ணி, தாடி எடுக்கக் காரணம் அனுதானே?” என்று ஆரம்பித்தாள் மாலினி.
“மானி” என்ற அனுரதியின் அதட்டலைத் தொடர்ந்து, “நீங்க ரொம்ப ஷார்ப் மாலினி” என்று சிரிப்புடன் சொன்னான் அறிவழகன்.
“பொய் சொல்லாதீங்க. அதெப்படி நான் காரணமாக முடியும்?”
“அதுவா ரதி. நோ நோ அனுமா. லவ்வு லவ்வு” என்ற குரல் மருத்துவர்.வர்ஷாவிடமிருந்து வந்தது.
“டாக்டர்” என்று முறைத்தவளிடம், “நீ பிடிக்கலைன்னு சொன்ன பிறகு எப்படி ரதிமா? அதான் சொன்ன அடுத்த நிமிடம் சலூன் கடைக்குப் போயிட்டேன்” என்று அறிவழகன் சொல்ல,
“நான் எப்ப சொன்னேன்? எதாவது கனவு கண்டீங்களா?” என்றாள் அவள்.
“அனுமா அன்னைக்கு லிஃப்ட்ல வச்சி சார் அழகா இருக்காருன்னு சொன்னதுக்கு, என்ன ரசனைன்னு என்னைத் திட்ட ஆரம்பிச்சி அவரை வாட்டி எடுத்தியே ஞாபகமிருக்கா? அடுத்த நாளே மிஸ்டர்.பெர்பெக்டா வந்து நின்னார். ஆனாலும், அனுமா. அன்னைக்கு சாரை வச்சி செஞ்ச” என்று சத்தமாக சிரிக்க, அவள் கணவன் கண்ணனோ மனைவியின் கைபிடித்து அழுத்தம் கொடுத்து, “கிண்டல் போதும்” என்று அடக்கினான்.
“அட ஆமா. அந்த தோற்றத்துல வாந்திதான் வந்தது. ஆனா, நீங்கள்லாம் அதைப்போய் எப்படிதான் ரசிச்சீங்களோ! உவ்வே” என்றாள் இப்பொழுது பார்த்ததுபோல்.
“பங்கம்டா தம்பிப்பையா” என்ற மதியழகன் வாயசைத்துக் கிண்டலடிக்க,
“அதையேன் கேட்குற அனுமா. நானும் வைக்க ஆரம்பிச்சதில் இருந்து திட்டிப் பார்த்தேன். அதட்டிப் பார்த்தேன். கெஞ்சிப் பார்த்தேன். இவன் எதுக்கும் இடம் கொடுக்கலை. சாப்பிடவாவது தாடியை ட்ரிம் பண்ணுடான்னா சாமியார் ரேஞ்சில் தத்துவம் பேசுனான். ஒருநாள் அவனா எடுத்துட்டு வந்தான். அவ்வளவு ஆச்சர்யம் எனக்கு” என்றார் அபிராமி.
‘எனக்கானவள் பிடிக்கலைன்னு சொன்னா, ஏன் முகம் சுளித்தாலே எடுத்துருவேன்’ என்று மீட்டிங்கில் சொன்னது நினைவு வர, தன் வார்த்தைக்கு இருந்த மதிப்பு புரிந்தபோதும், “வரப்போற பொண்ணை விட அம்மா முக்கியமில்லையா மேனேஜர் சார்? அதென்ன மனைவி வந்தால்தான் திருந்திருவேன்றது? அம்மாவை மிஞ்சிய பெண் உண்டா என்ன? தெரியவே தெரியாத யாரோ ஒரு பெண்ணுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை, பெத்து வளர்த்த தாய்க்குக் கொடுக்கணும்னு ஏன் தோணலை? இது தப்பில்லையா?” என்றாள் நேருக்கு நேராகவே.
அனுரதியின் கேள்வியில் அமைதி மட்டுமே அவ்விடத்தில். ஏன் சாரதாவுமே மகளின் பேச்சில் அறை வாசலில் வந்து நின்றுவிட்டார்.
பல வினாடிகள் கழித்தே அதை உணர்ந்தவள், சுற்றிலும் பார்த்து மாமியாரிடம் என்னவென்று கேட்க, அவளருகில் வந்து தோளோடு அணைத்துத் தன் நன்றியைத் தெரிவித்தார் அபிராமி.
“சாரிம்மா. ரதியோட கேள்வி ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மகன்களுக்குமான கண்திறப்பு. என்னை மன்னிச்சிருங்கம்மா” என்ற அறிவழகனின் வார்த்தையில், “பரவாயில்லை அறிவா. எல்லா அம்மாக்களுக்கும் உள்ள ஆதங்கத்தை அனு உடைச்சி சொல்லிட்டா. உண்மையிலேயே ரொம்ப சந்தோசமா இருக்கு அனுமா” என்றவர் குரல் உணர்ச்சிவசப்பட்டிருந்தது.
மாமியாரின் மனதை மாற்ற எண்ணியதோ மனம்! “அப்ப ஆஃபீஸ்ல என் கேபின்ல அந்த லெட்டரை வச்சது நீங்களா?” என்றாள் அறிவழகனிடம்.
“அது நான் இல்லை. அதை வச்சவன் நம்ம கம்பெனியில் இப்ப இல்லை.” என்றான்.
“ஏன்? எனக்கு லெட்டர் வச்சதுக்காகவா. அதுக்காக வேலையை விட்டு தூக்குவாங்களா?” என்று முறைத்தாள்.
“உனக்கு மட்டும் வைக்கலை ரதிமா. அங்க உள்ள லேடீஸ் ஸ்டாஃப் அத்தனை பேருக்கும், இன்க்ளூடிங் கல்யாணம் முடிஞ்சவங்களுக்கும், அவங்கவங்க பெயர் வர்ற மாதிரியான பாடல்களை டைப் பண்ணி வச்சிருக்கான். அதான் முதல்ல வீட்டுல உள்ளவங்களுக்கு வைன்னு சொல்லி அனுப்பிவிட்டுட்டேன்” என்று சாதாரணமாகச் சொல்ல, கேட்டிருந்தவர்களுக்கு அவன் செய்ததில் தவறில்லை என்று புரிந்தது.
இரவு ஏழு மணிபோல் மதியழகன் தம்பியை அழைத்துத் தன்னருகே அமரவைத்து, தொலைக்காட்சியில் ஓடும் படத்தின் இறுதிக் காட்சியைக் காண்பித்தான்.
பார்த்த நிமிடம் அறிவழகனுக்கு அது என்ன படமென்று தெரியவும் அசடு வழிய சிரித்தவனிடம், “காதலுக்கு மரியாதை. நீயும் உன் மனைவியும் காதலித்து கரம்பிடித்த கதை” என்றான் மதியழகன்.
அறிவழகனோ அசட்டு சிரிப்பு மாறாது, எழுந்து ஓடப்போனவனை கழுத்தோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான். “ஆ...அம்மா” என்ற அலறலில் என்னவென்று அனுரதி தவிர அனைவரும் பதறியடித்து வர, “மதி ஏன் அவனை அடிக்கிற? விடு” என்றார் அபிராமி.
அவனோ தாயிடம் தம்பியவன் காதல் கதையைச் சொல்ல, “நீ நம்பிட்டியாக்கும்” என்ற தாயிடம், “ம்...” என பாவமாய் தலையாட்டியவன் கைப்பிடியில் இருந்த அறிவழகன் தப்பித்து மாடிப்படியேற, அவனை விடாது தொடர்ந்த மதியழகனைக் கண்டு பெரியவர்கள் சிரித்து நகர, குழந்தை சத்தம் கேட்டு ஷண்மதி அறைக்குள் சென்றாள்.
“இங்க பாருண்ணா பேச்சு பேச்சாதான் இருக்கணும். கை நீட்டுறதெல்லாம் தப்பு தெரியுமா?”
“நீட்டுனா என்ன பண்ணுவ?” என்று சைகையில் கேட்டான்.
“அழுதுருவேன்” என்று வடிவேலு பாணியில் அழுது காட்டினான்.
உடன்பிறப்புகள் இருவரையும் ஆவென்று பார்த்திருந்தாள் அனுரதி. சட்டென்று சிரிப்பு வந்த போதிலும் அதை அடக்கி வளர்ந்த இரு ஆண்களின் விளையாட்டை ரசித்திருந்தாள்.
தாயின் திருமணத்தினால் தந்தையின் நினைவு எழ, தனிமை தேடி மேலே வந்திருந்தாள். அவர்களின் எதிரில் சற்று வெளிச்சம் கம்மியான பகுதியில் நின்றிருந்தவளை, சகோதரர்கள் விளையாட்டு சுவாரசியத்தில் கவனிக்கவில்லை.
“அனுரதியை முதலில் எப்ப, எங்க பார்த்த சொல்லு?” மதியழகன் கேட்டான்.
“உன் விஷயமா டாக்டர்.வர்ஷாவை பார்க்க போனப்ப” என்றவன் அன்று நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.
மதியழகன், ஷண்மதிக்கான வாடகைத்தாய் கிடைத்திருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தம் போடவும் வந்த தகவலில், மருத்துவமனைக்கு. தானே நேரில் வந்திருந்தான் அறிவழகன். எல்லாம் பேசி முடித்து, ஒப்பந்தப் படிவத்தில் கையொப்பமிட்டு முடிக்கையில், மருத்துவரின் கைப்பேசி எண்ணிற்கு அழைப்பு வந்தது. பேச ஆரம்பித்தவர் பதற்றத்துடன், “ரேப் அட்டெம்டா, சார் வேற யாராவது... சாரி சார். சரிங்க சார். நானே பார்க்கிறேன்” என்று அறிவழகன் இருப்பதை மறந்து வேகமாக வெளியே சென்றார்.
ஒப்பந்தப் பத்திரம் யாரிடம் இருக்க வேண்டுமென்று தெரியாமல், அதைக் கேட்பதற்காக பத்திரத்தை எடுத்துக்கொண்டு மருத்துவரின் பின்னால் செல்ல, மருத்துவமனையில் அடிப்பகுதியில்(சப்வே) உள்ள வாகனம் நிறுத்தும் இடத்திற்கு உட்புறமாக வந்த வர்ஷா, அப்பொழுது வந்திருந்த வாகனத்தின் அருகில் சென்றார்.
கதவு திறந்ததும் அங்கு சாரதா, அரவிந்த் அமர்ந்திருக்க, பெண்ணைப் பார்த்தவருக்கு கண்கலங்கிப் போனது. அவரின் அனுபவத்தில் இதுபோல் வருவது முதல் தடவை என்பதால் பதற்றமும் கூட.
அனுரதியை அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்ல ஆள்கள் யாருமில்லை. இரகசிய சிகிச்சை என்பதால் செவிலி, வார்டிலுள்ள பையன்கள் என யாரையும் அழைக்கவில்லை. அரவிந்தை தூக்கி வரச்சொல்ல, அவனோ, அக்காவை அப்படிப் பார்த்ததில் இருந்து, கைகால் நடுங்க துக்கம் தாள இயலாது நின்றிருந்தான். ஓட்டுனரோ சற்று வயதானவராக இருக்க, காவலதிகாரியும் இன்னும் வந்திருக்கவில்லை.
என்ன செய்வதென்று புரியா நிலையில் நின்றிருந்தவரிடம் “டாக்டர் இதை...” என்றவாறு அறிவழகன் வர, நிமிர்ந்து பார்த்த வர்ஷாவிற்கு முகம் தெளிவாகியது. அவன் நம்பிக்கையானவன் என்பதால், அவனை தனியே அழைத்துச் சென்று தற்போதைய நிலையைச் சொல்லி உதவி கேட்டார்.
ஒரு வார்த்தை பேசாது கையிலுள்ள பேப்பரை அவரிடம் கொடுத்து வேகமாக வந்தவன், வாகனத்தின் உள்ளிருந்தவளை மெல்ல நகர்த்தித் தூக்க, தூக்கியவனுக்கு மனதே ஆறவில்லை.
‘நம் இனம் ஏன் இப்படி இருக்கிறது? பூவை கசக்கி நுகர்வதால் என்ன கிடைத்திரப்போகிறது?’ சில நிமிட சுகத்திற்காக அவர்கள் நடத்தும் வெறிச்செயலை அறவே வெறுத்தான் அறிவழகன். உடம்பெல்லாம் ஆங்காங்கே காயம் இருக்க, காயத்தில் கைபட்டால் அவளுக்கு வலிக்குமே என்று பக்குவமாகப் பிடித்துத் தூக்கினான். ‘அவள் அனுபவித்த வலியை விடவா’ என தோன்றினாலும், அதில் சிறிது கூட தான் கொடுத்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கை உணர்வு அவனிடத்தில்.
“பார்த்துத் தூக்குங்க தம்பி. என் பொண்ணு வலிதாங்க மாட்டா. அவங்கப்பா ஆசை ஆசையா பொத்திப்பொத்தி வளர்த்த பொண்ணு. என் பொண்ணை அவன்...” நிறுத்திய சாரதாவின் கண்ணீர் பேச்சு, அறிவழகனுக்கும் கண்ணீரை வரவழைத்தது.
வேகமாக அறைக்குள் கொண்டு சென்று படுக்க வைக்கையில், அவனின் கை அவனறியாது அவள் தலை வருட, “கெட் வெல் சூன்” என்றன உதடுகள்.