• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Jun 16, 2025
Messages
5
காதல் - 3




காதலிக்கு உதவி செய்ய வேண்டும் என்று இவன் பலரிடம் கடன் கேட்டு நின்றான். ஆனால் எங்கையும் கிடைத்தபாடில்லை. அவன் வாங்கிய கடனே கிட்டத்தட்ட ஐந்து லட்சத்தைத் தொடும் நிலையில் இருந்தது. சொந்த வீடும் இல்லை.. உருப்படியான அளவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வேலையும் இல்லை. இதில் இவனை நம்பி யார் பணம் தருவார்கள்.?

இரண்டு நாட்கள் நாயாக இவன் அலைந்து திரிந்தாலும் கடன் கிடைக்கவில்லை. பேசாமல் தேனுவை அழைத்துச் சென்று அவர்களிடம் பேசினால் என்ன.? என்றும் தோன்றியது. அன்று பேசியது தான் அதன் பிறகு அவனிடம் அவள் பேசினாலும் பணத்தைப் பற்றி ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. நீ செய்தே ஆக வேண்டும் என்றும் அவள் நிற்கவில்லை. இவனின் குற்றவுணர்வு தான் அதிகரித்தது.

இதைப்பற்றி அவளிடம் பேசலாம் என்று இவன் நினைத்தாலும் சங்கடப்பட்டுக் கொண்டு எதுவும் கேட்காமல் இருந்தான். அவளின் சேமிப்புப் பணத்தைக் குடுத்து தன் தமக்கைக்கு உதவி செய்தவள் இப்போது உடன்பிறந்தவளுக்கு எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறாள். இதற்குக் காரணமும் இவனாயிற்றே.

அவனின் அன்னை மகளுக்கு வந்த வரனை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இவனிடம் கூட கூறாமல் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கிறார்.

மாப்பிள்ளை வீட்டாரைப் பற்றி பலரிடம் விசாரித்துத் தெரிந்துக் கொள்ள இவருக்கு பரம திருப்தி. ஆனால் அவர்கள் கேட்ட வரதட்சணையைக் குடுக்க மட்டும் அவர்களின் பொருளாதார நிலை இடித்தது.

இருக்கட்டும் என் மகளுக்குத் தான் செய்ய போகிறேன் என்ற நினைப்பில் அவர்கள் கேட்ட முப்பது பவுன் நகையும் மாப்பிள்ளைக்கு பைக் ஒன்றும் வாங்கி வருவதாக ஒத்துக் கொண்டார் அதுவும் மகனிடம் ஒரு வார்த்தையும் கேளாமல்.

அதன்பின்பு இருவீட்டாரும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திட, இரவில் மகனிடம் "தம்பி நாளைக்கு லீவு போட்டுருப்பா.. அக்காவைப் பொண்ணு பார்க்க வர்றாங்க.. எப்படியும் இந்த சம்பந்தம் முடிஞ்சுரும்" என்று தகவல் மட்டுமே கூறினார்.

இவன் அதிர்ந்து "என்னம்மா.? இது எப்ப நடந்துச்சு.? நான் தான் இன்னும் ஒரு மாசம் போகட்டும்.. அப்பறம் பேசிக்கலாம்னு சொன்னேன்ல.? அடிக்கடி லீவு போட்டா எப்படிம்மா.?" என்று தன் கோவத்தை வெளிப்படையாகவே காட்டினான்.

"நல்ல காரியத்தை ஏன் தள்ளி போடணும்.? இவளுக்கு இப்பதான் ஒரு வழி பிறக்க போகுது.. இதுல ஏன் தள்ளிப் போட்டு அவளோட வாழ்க்கையைக் கெடுக்கணும்.? எப்ப என்ன நடக்கணுமோ அது நடக்கணும்.. உன் அக்காக்கு ஒரு நல்லது நடந்தா உனக்கு சந்தோசமில்லையா.?" என்று அவர் முடிவு தான் சரி என்பதைப் போலவே பேசினார்.

அவர்கள் வருவது எல்லாம் இவனுக்கு பிரச்சனையில்லை. அவர்கள் வருகிறார்கள் என்று கூறி அது வாங்க வேண்டும் இது வாங்க வேண்டும் என்று கடன் கட்ட வேண்டிய பணத்தில் கை வைப்பார். பின்பு அந்த கடனைக் கட்ட இவன் தான் மறுபடியும் வேறொருவரிடம் கடன் கேட்டு நிற்க வேண்டிய சூழ்நிலையும் வரும்.

இதைக் கூட சமாளித்து விடலாம். திடீரென்று கல்யாண செலவிற்கு யாரிடம் பணம் கேட்பது.? அவர்கள் கேட்ட பவுனை யார் போடுவது.? தேனுவிடம் வாங்கிய பணத்தை எப்படியாவது தந்து விட வேண்டும் என்று நினைப்பில் இவனிருக்க, அவனின் அன்னை இப்படியொரு குண்டைத் தூக்கி தலையில் போட்டால் அவனும் என்ன தான் செய்வான்.?

தேனு கேட்பது இவனின் பணத்தை இல்லையே.. அவள் உழைத்துச் சம்பாரித்த பணத்தைத் தான். அவளிடம் பணத்தை வாங்கி தமக்கையின் வீட்டாரிடம் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டான். ஆனால் தேனுவோ பிறந்த வீட்டில் திட்டுக்களை வாங்கிக் கொண்டாள்.

ஒரு முடிவுடன் "அம்மா என்னால நாளைக்கு லீவு போட முடியாதும்மா.. இப்பதான் காது குத்துக்கு ரெண்டு நாள் லீவு போட்டேன்.. மறுபடியும் லீவு போட்டா சம்பளத்தைப் பிடிச்சுக்குவாங்க.. நீங்களே பாருங்க" என்றிட, அவர் சாமியாட தொடங்கி விட்டார்.

"ஒரு நாள் சம்பளம் போனா என்ன.? உன் அக்காக்கு ஒரு நல்லது நடக்கறப்ப தம்பியா முன்னாடி நிற்கணும்னு உனக்கு தோணாதா.? இப்படி யாரோ மாதிரி நீங்களே பார்த்துக்கங்கனு சொல்லி அத்து விடற.? இதுதான் உன் லட்சணமா.?" என்று தாம்தூமென்று குதித்தார்.

இதில் கோவம் கொண்ட அழகனும் "என்னம்மா பேசற நீ.? நான் என்ன கோடி கோடியாவா சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்.? வாங்கறதே பதினைஞ்சாயிரம்.. இதுல அஞ்சு லட்சத்துக்கு மேல கடன் வாங்கி வெச்சுருக்கேன்.. அதைய அடைக்க வேண்டாமா.? இப்ப அக்காக்கு செய்யற சொன்ன பவுன் எல்லாம் வானத்துல இருந்து குதிக்குமா.? இதுல மூனு பேரு சாப்பிட வேணாமா.? வாடகை குடுக்க வேணாமா.?

நீயும் புரிஞ்சுக்காம பண்ணிட்டு இருக்காத.. நாளைக்கு சும்மா தானே பார்க்க வர்றாங்க.. வந்து பார்த்துட்டு போகட்டும்.. மத்ததை அப்பறம் பேசிக்கலாம்.. என்னையும் கொஞ்சம் யோசிச்சு பண்ணு.. எனக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு" என்று சினந்துக் கத்தினான்.

அன்னை புரிந்துக் கொள்வார் என்று இவன் அமைதியாக இருந்தது எல்லாம் தேவையில்லாதது தான். அவர் எப்போது தன்னைப் புரிந்துக் கொள்வது.? நான் எப்போது வாங்கிய கடன்களை அடைப்பது.?

இவர் வேலைக்குச் செல்லவில்லை சரி. தமயந்தியையும் செல்ல விடவில்லை. காலம் கெட்டு கிடக்கிறது.. வெளியில் சென்றால் ஏதாவது ஆகி விட்டால்..? என்று கூறி கூறியே அவளை வீட்டினுள் அடைத்து வைத்து விட்டார்.

அவளின் மனமாற்றத்திற்காக அழகனும் பேசி பார்த்தான். ஆனால் அவர் அவரின் உறுதியில் பிடிவாதமாக நின்றதன் விளைவு அனைத்திற்கும் இவனை எதிர்பார்த்து நிற்க வேண்டிய சூழ்நிலை.

தமயந்தியும் வேலைக்குச் சென்றிருந்தால் அவளுகென்று சிறு சேமிப்பையாவது அவள் சேமித்து வைத்திருப்பாள். தம்பி படும் கஷ்டங்களைக் கண்ணார கண்டும் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலை.

ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற பழமொழியை இவர் அறிந்தது இல்லை போலும். பெரிய மாப்பிள்ளை என்ன நினைப்பார்.? சிறிய மகளுக்கு அது செய்ய வேண்டும் இது செய்ய வேண்டும் என்று எண்ணுபவர் மகனும் குடும்பம் குட்டி என்று வாழ வேண்டும் என்று சிறிதும் யோசித்துப் பார்க்கவில்லை போலும்.

இவனின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்திருந்தால் இவர் இப்படி செய்வாரா என்ன.? அனைத்துப் பொறுப்புகளையும் மகன் தான் பார்க்க வேண்டும்.. அதன்பின்பு தான் அவனுக்கென்று ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்னும் எண்ணும் தாய்மார்களும் இருக்கிறார்கள். அதில் அழகனின் அன்னையும் ஒருவர்.

"நீ இப்படி மாறுவேனு நான் நினைக்கல அழகன்.. பெத்த தாய்க்கும் கூட பிறந்தவளுக்கும் செய்யறதுக்கு கணக்கு பார்க்கறீயா.? நாங்க உனக்கு பாரமா இருக்கோமா.? அப்படி இருந்தா சொல்லுடா.. நான் விசத்தைக் குடிச்சுட்டு உன் அக்காக்கும் குடுத்து சாவடிச்சரேன்.. இப்ப வரைக்கும் என் பையன் பார்த்துப்பானு நம்புனேன்.. அந்த நம்பிக்கை வீண் தான் போல.?" என்று ஏதேதோ பேசி அவனைக் காயப்படுத்தினார்.





வாக்குவாதம் அதிகமாகிறது என்று தமயந்தி தான் "அம்மா சும்மா இருக்க மாட்டியா.? அவன் எப்ப அப்படி நினைச்சான்.? அப்படி நினைச்சுருந்தா இந்தளவுக்கு கடன் வாங்கி நம்மளைய பார்த்துட்டு இருப்பானா.? அவனால நாளைக்கு லீவு போட முடியாதுனு தானே சொன்னான்.. அதுக்கு ஏன் நீ கண்டதையும் பேசிட்டு இருக்க.? அவன் நிலைமையும் புரிஞ்சுக்கம்மா" என்று தம்பிக்கு ஆதரவாக குரல் குடுத்தாள்.

இதற்கும் தேவகி "ஆமாடி நான் தான் புரியாம பேசிட்டு இருக்கேன்.. உனக்காக உன் வாழ்க்கைக்காக தான்டி நான் இவ்ளோ போராடிட்டு இருக்கேன்.. அது உன் கண்ணுக்கு தெரியவே இல்லையா.? கூட பிறந்தவளுக்காக ஒரு நாள் லீவு போட்டா இவன் என்ன குறைஞ்சு போய்ருவானா.? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்.?

ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம அக்காக்கு வரன் வருது.. கூட இருந்து பார்க்கணும்னு இவன் நினைச்சுருந்தா இப்படி எல்லாம் பேசுவானா.? இப்ப நம்ம இவனுக்கு பாரமா மாறிட்டோம்.. அதான் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கான்.." என்று தேம்பினார்.

பைத்தியம் பிடிப்பது போலிருந்தது. 'இப்ப வரைக்கும் அப்படி ஒரு எண்ணம் வரலம்மா.. இப்படியே பேசிட்டும் பண்ணிட்டும் இருந்தா கண்டிப்பா வந்துரும்' என்று கூற வாய்வரை வந்த வார்த்தையைக் கஷ்டப்பட்டு முழுங்கியவன் மௌனமாக நகர்ந்தான்.

அப்படியே அமர்ந்த தேவகி தான் விடாமல் தேம்பினார். அன்னையைப் பார்ப்பதா.? தம்பியைப் பார்ப்பதா.? என்று புரியாமல் முழித்த தமயந்தி இருவரும் சிறிது நேரம் தனிமையில் இருக்கட்டும்.. பின்பு அவர்களிடம் பேசி கொள்ளலாம் என்ற முடிவில் அவளும் அப்படியே அமர்ந்து விட்டாள்.

சிறிது நேரம் கழித்து தம்பியைத் தான் முதலில் தேடி சென்றாள். அன்னை தான் புரிந்துக் கொள்ளாமல் பேசுகிறார் என்று இவளுக்கும் நன்றாகவே புரிந்தது. அதனால் இப்போது தம்பியின் மனது தான் காயப்பட்டு கிடக்கும்.. அவனிடம் பேசுவது தான் சரியென்றும் நினைத்தாள்.

அமைதியாக தெருவை வேடிக்கை பார்த்திருந்த அழகனைத் தோள்தொட்டு இவள் திருப்பிட, அதிர்ந்து போனாள். அவனின் கண்கள் கலங்கி விழிநீரும் கன்னத்தைத் தொட்டிருந்தது.

"அழகா என்ன இது.? அம்மா புரிஞ்சுக்காம பேசுது.. அதுக்காக அழுகுவீயா நீ.? என் தம்பி இப்படி இருக்க மாட்டானே.? என்னடா இது.? என்ன ஆச்சு.?" என்று பதறி போனாள்.

என்னால முடியலக்கா.. நானும் எத்தனை தான் பொறுத்து போறது.. உனக்கு ஒரு நல்லது நடந்தா எனக்கு சந்தோசமில்லையா.? நான் என் இயலாமையைத் தான் சொல்றேன்.. அதைய கூட அம்மாவால புரிஞ்சுக்க முடியாதா.? எப்பவாவது உங்களைய பாரமா நினைச்சுருக்கேனா.? இப்படியெல்லாம் அம்மா பேசறதைக் கேட்கறப்ப மனசு ரொம்ப வலிக்குதுக்கா.. வேணும்னே லீவு போட மாட்டேனு சொல்லல.. என்னால முடியாம தான் சொல்றேன்.. காது குத்துக்கு வாங்கிய பணத்துல பாதி பணத்தை உடனே திருப்பி தரணும்.. அதுக்காக அலைஞ்சுட்டு இருக்கேன்.. என்னைய நம்பி பணத்தைக் குடுத்துட்டு இப்ப அவங்க தான் பிரச்சனைல மாட்டிட்டு நிற்கறாங்க.. என்னால அவங்களுக்கும் பிரச்சனை.. இதுல அம்மாவும் இப்படி பேசுது.. பேசாம நான் போய்ட்டா யாருக்கும் பிரச்சனை இருக்காதுல.? என்று கேட்டு கலங்கவும் செய்தான்.

யார் சொன்னது ஆண்மகன் அழுக மாட்டான் என்று. அவனுக்கும் வலி வேதனை அனைத்தும் இருக்க தான் செய்கிறது. ஆண்பிள்ளை அழுக கூடாது என்று கூறி கூறியே அவர்களின் வேதனையை மனதில் மறைத்து வைத்து பாரத்தை இன்னும் ஏற்றி விடுகிறது இந்த சமுதாயம்.

இப்படி அவர்கள் கண்ணீர் சிந்தி விட்டால் கூட மனதின் வேதனைகள் குறைந்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கவாவது செய்வார்கள்.. தன் வேதனை தாங்க முடியாமல் அழகன் கண்ணீர் சிந்தி விட்டான். நிச்சயம் அடுத்து என்ன செய்து இப்பிரச்சினையைத் தீர்ப்பது என்று முடிவும் எடுப்பான் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அந்த முடிவு தேனுவின் தமக்கைக்கு சாதகமாக அமையுமா.? இல்ல இவனின் தமக்கைக்கு
சாதகமாகுமா.? என்பதை மட்டும் காலம் தான் முடிவு செய்திடும்.



காதல் தொடரும்..
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top