• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
22


வீட்டினுள் நுழைகையில் மதியழகனும், ஷண்மதியும் அங்கு இருக்க, அவர்கள் எதிரில் வந்தவன், “இப்ப எதுக்குண்ணா இங்க வந்த?” என்றதில் தன் கைப்பிடிக்குள் இருந்த மனைவியைக் கை காட்டியவன், ‘தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றான் மதியழகன்.

அறிவழகன் திரும்பி மனைவியைப் பார்க்க, கடந்த இரு நாள்களாய் மறந்து போயிருந்த ஒன்றை, அவர்களின் வரவு நினைவுப் படுத்தியிருக்க, மனம் கசங்க முகம் சுருங்கி கண்கலங்க நின்றவளை, அதற்கு மேல் தவிக்கவிடாது தோளோடு அணைத்தவன், “முதல்ல அண்ணியைக் கூப்பிட்டுக் கிளம்புண்ணா” என்றான் மனதைக் கட்டுப்படுத்தி.

வீட்டுக்கு வந்தவர்களை விரட்டுவது, அதுவும் உடன்பிறந்தவனை விரட்ட மனம் வலித்ததுதான். வேறெதுவும் செய்ய முடியாதே.

கணவனின் கையை வலுக்கட்டாயமாக விலக்கி வந்த ஷண்மதி, “நாங்க ஏன் போகணும்? எங்க குழந்தையைக் கொடுக்கச் சொல்லு போறோம். நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டா எப்படி?” என அடமாக நிற்க,

“என்னடா அண்ணா இதெல்லாம்” என்றான் இயலாமையில்.

தம்பியின் அக்குரல் அவனையும் பாதிக்க, “ரொம்பக் கத்துறாடா. கண்ட்ரோல் பண்ண முடியாமல்தான் கூட்டிட்டு வந்தேன்” என்றான் மௌன பாஷையில்.

“நீ உள்ள போ ரதிமா. நான் இப்ப வர்றேன்” என்றனுப்ப, தடுக்க வந்த ஷண்மதியை மதியழகன் பிடித்துக் கொண்டான். மதியழகன் சொல்ல வருவது புரியாவிட்டாலும், அவன் சைகையில் பேசுவதை கவனித்தாளில்லை அனுரதி. அவர்களின் இன்றைய வருகைக்கு, ஷண்மதிதான் காரணம் என்பதை உணராதவளா என்ன? கணவன் சொன்ன அடுத்த நிமிடம் உள்ளே சென்றுவிட்டாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அறிவழகன் மனைவியைத் தேடி வர, கட்டிலில் சாய்ந்தமர்ந்து கண்மூடி துக்கத்தை தொண்டைக்குழியில் அடக்கி, மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்தவளைக் கண்டவன் மனம் கனத்தது.

அவள் அருகில் சென்றமர்ந்து கைபிடிக்க, பட்டென கையை உதறியவள், “நீங்க உங்க வீட்டுக்குப் போங்க” என்றாள் கண்ணைத் திறவாது.

“உனக்கும் அதுதான் ரதிமா வீடு.”

“உங்க அண்ணனுக்கும் அதுதான் வீடு. அதையும் சேர்த்துச் சொல்லுங்க. ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் நிம்மதியா விட்டுட்டுப் போங்க” என்றவள் கண்களில் ஒரு துளி நீர்.

“உன் நிம்மதி நான் இல்லையா ரதிமா? நான் இல்லைன்னா நீ நிம்மதியா இருப்பியா?” எனவும் பட்டென கண் திறந்தவள், கணவனின் கலங்கிய கண்கள் கண்டு சொல்லொணா உணர்வில் தவிக்க, “சொல்லு ரதிமா? நான் இல்லை...” சடாரென பாய்ந்து அவன் வாயைப் பொத்தியவள், ‘அப்படிப் பேசாதே’ என்பதாய் தலையசைத்தாள்.

“எனக்கு ஒரு மாதிரி... எப்படிச் சொல்லன்னு தெரியலை. உங்க அண்ணனைப் பார்த்தா, இது அவர் குழந்தைன்னு நினைச்சாலே உடம்பெல்லாம் எரியுது. நார்மலா இருக்க முடியலை. மூச்சு முட்டி, என்னவோ தப்புப் பண்ணுற உணர்வு. நான் என்ன செய்யட்டும்னு நீங்க சொல்லுங்க?” என்று முகம் மூடி அழுதாள்.

“ர...ரதிமா அழாத ப்ளீஸ். நீ அழுதா மனசு தவிக்குது. உன் உணர்வு புரியுது. ஆனாலும், எதுவும் செய்ய முடியாத நிலையில் நான் இருக்கேன். நேற்று உங்க பிள்ளைன்னு என்னைப் பார்த்துச் சொன்னியே, அதை மட்டும் நினைவுல வை. என் அண்ணன், அண்ணி எல்லாரையும் மறந்திரு. இனி அவங்க இங்க வரமாட்டாங்க. முடிந்தளவு உன் முன்னாடி வராமல் நான் பார்த்துக்குறேன். சரியா?”

“ம்... ஆனா, அத்தை ஏன் அப்படிச் சொன்னாங்க? அதனாலதான் நான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்” என்றவள் குரலில் அவ்வளவு வருத்தம்.

“அம்மாவா? அம்மா என்னடா சொன்னாங்க?” குழந்தையை வைத்து எதுவும் சொல்லிவிட்டாரோ என்ற பயம் அவனுக்கு.

“அத்தை சொன்னது தப்புதான். பெத்த பிள்ளையை உயிரோ...” தன் பேச்சு போகும் திசை உணர்ந்தவள், சட்டென்று நாக்கைக் கடித்து நிறத்தி திருதிருவென விழித்தாள்.

“என்ன சொல்ல வந்த ரதிமா?” என்றவன் பார்வை குத்தீட்டியாய் வர, “இல்லங்க. ஒண்ணுமில்லை” என வேகவேகமாக மறுக்கவும், அவளின் வேகத்திலேயே ஏதோ இருப்பதாய் பட, “இல்லையே எதோ இருக்கு. அம்மா என்ன சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“அச்சோ! நிஜமா ஒண்ணுமில்லைங்க. அழுத பிள்ளையைச் சமாதானப்படுத்தாம, கேள்விமேல கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க” என்று போலியாய்க் கண்ணைக் கசக்கினாள்.

மனைவி பேச்சை மாற்றுவது புரிந்ததும், மூச்சை இழுத்துவிட்டு தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி, சிறு புன்னகையுடன், “சமாதானப்படுத்துறதுன்னா எப்படி ரதிமா? நார்மல் ஹஸ்பண்ட்னா ஒய்ஃபை கட்டிப்பிடிச்சி, நெற்றியில் முத்தமிட்டு, முதுகுல தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்துவாங்க. நாமதான் முரணான தம்பதியாச்சே. சோ, நீ சொல்லு. நான் அதைச் செய்றேன்” என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

“உங்களுக்கு அதில் வருத்தம் இருக்குல்ல. எனக்குத் தெரியும். அதனால்தான் கல்யாணம் பண்ணி உங்க வாழ்க்கையைக் கெடுக்க மனதில்லாமல் வேண்டாம் சொன்னேன். நீங்கதான் பிடிவாதமா...” என்று மூக்கை உறிஞ்சினாள்.

“என் ரதிப்பொண்ணுக்காக, இந்தப் பிடிவாதம் கூட பிடிக்கலைன்னா எப்படி?” என்று மனைவியின் கையை தன் கைகளுக்குள் பொத்தி, முகமருகில் கொண்டு வர, எங்கே முத்தமிட்டு விடுவானோ என்று கையை அவள் இழுக்க, அதில் புன்னகைத்தவன், “உனக்குப் பிடிக்காத எதுவும் நடக்காது ரதிமா. யாரைக் கல்யாணம் செய்தாலும், மனசுக்குப் பிடித்தால் மட்டும்தான், கட்டிப்பிடிக்கக் கூட முடியும். மனசுக்குப் பிடிக்காத பெண் எவ்வளவு அழகியா, அறிவாளியா இருந்தாலும், உணர்ச்சி நரம்புகள் வேலை செய்யாது. செய்தால்தான கட்டிப்பிடிக்க முடியும். இதே மனசுக்குப் பிடித்த பெண்ணை கல்யாணம் செய்தோம்னு வையேன், அவங்க அழகு, குணம், பணம்னு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. அவங்ககிட்ட உள்ள மைனஸையும் ப்ளஸ்ஸாக்கதான் பார்ப்பாங்க.”

“என்னை ஒரு ஆணா உணர வைக்குற ஒருத்தி இந்த உலகத்தில் இருக்காள்னா, அது நீ மட்டும்தான் ரதிமா. உன் கூட இருந்தா... இல்லையில்ல, உன்னைத் தூரத்திலிருந்து பார்த்து, நீ சந்தோஷமா இருக்கன்னு தெரிஞ்சாலே போதும், என் நாள்கள் அழகாயிரும். அப்படி இருக்கிறப்ப நான் எப்படிடா வருத்தப்படுவேன்? இதோ உன் பக்கத்துல உட்கார, உன் கைபிடிக்க அனுமதி கொடுத்திருக்கியே. இதுபோதும் எப்போதும்” என்றான் முகம் மலர.

அவனை... அவனை மட்டுமே கண்சிமிட்டாது பார்த்திருந்தாள் அவனின் ரதிப்பெண். ‘அப்புறம் ஏன் அவன், அந்த ரவிசங்கர் மட்டும் இப்படி?’ என்ற கேள்வி அவள் மனதில் எழாமல் இல்லை. அதை நினைத்ததுமே மனமும் உடலும் ஒருவித சோர்வைக் கொடுத்தது.

“அப்புறம் ஏன் இத்தனை பாலியல் குற்றங்கள்னு யோசிக்குறியா ரதிமா? ம்... என்ன செய்ய மனிதர்கள் பலவிதம். வளர்ப்பு, சேர்க்கை, பாதிப்புன்னு ஏதோ ஒருவகையில் தடம் மாறிப்போய், கண்டதையும் படித்து, கண்டதையும் கேட்டு, கண்டதையும் பார்த்து, கண்டதையும் குடித்துன்னு, நம்மைச் சுற்றி நிறைய கெட்டது இருக்கு. கெட்டதிலும் நல்லதைத் தேடுறவனும் இருக்கான். அதிலேயே மூழ்கிப்போறவனும் இருக்கான். நல்லது ரொம்ப சுருங்கிருச்சி ரதிமா. யார் நல்லவன், யார் கெட்டவன்னு பிரிச்சிப் பார்க்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். சட்டங்கள் நினைத்தால் தண்டனையைக் கடுமையாக்கி, அடுத்து நடக்காமல் தடுக்கலாம். ஆனா, பாரு. நம்ம இந்தியச் சட்டம், முறை தவறின உறவுகளைக் கூட அங்கீகரிக்குது. அப்பக் குற்றங்களும் அதிகரிக்கத்தான செய்யும். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ரதிமா.”

“ஒவ்வொரு மனிதனுக்கும் சுய ஒழுக்கம் ரொம்ப முக்கியம். அதை உணர்ந்தாலே குற்றங்கள் குறையும். மனிதனும் மனிதனா இருப்பான். எங்களைப் பார்த்துப் பார்த்து வளர்த்தாங்க அம்மா. பொண்ணுங்க கூட வளரலைன்னாலும், அவங்களை மதிக்கக் கத்துக் கொடுத்திருக்காங்க. சுய ஒழுக்கம் ஒரு மனிதனை பண்புள்ளவனா, பக்குவம் உள்ளவனா வைத்திருக்கும்” என்று பொறுமையாக தன்னைப் பற்றிச் சொன்னான்.

உண்மையில் கணவனை கட்டிக்கொள்ளத் தோன்றியது அனுரதிக்கு. ‘என் கணவன்’ என்று கத்திச்சொல்ல அவா எழ, வலது கை கணவனின் கைக்குள் சிறையிருக்க, மற்றொரு கை அவன் கன்னம் கிள்ளி முத்தமிடப் போராட, அதைக் கட்டுப்படுத்தி கன்னத்தில் வைத்து, அசையாது அசராது அவனையே பார்த்திருந்தாள்.

அறிவழகன் வெட்கம் என்றால் என்னவென்று உணர்ந்தான், மனைவியின் பார்வைதனில்.

“ஓய்! மிஸஸ்.அறிவழகன். என்ன பார்வை இது? பார்வையை மாற்றுங்க. எனக்கு வெட்கமா இருக்கு” என்று உதடு கடித்தான்.

“ஏனோ தெரியலை மிஸ்டர்.அனுரதி. உங்களை எனக்குப் பிடிக்குது. ஏன் என் வாழ்க்கையில் முதல்லயே வரலைன்னு, அபத்தமா கேட்க விரும்பலை. இப்பவாவது வந்தீங்களேன்னு இருக்கு. என்னால உங்க கூட சகஜமா வாழ முடியுமா தெரியாது. அதேநேரம் உங்களை விடவும் முடியாதுன்றது நிஜம். உங்ககிட்ட எப்படி வெளிப்படையா சொல்லுறது தெரியலை. ம்... தாம்பத்தியம்...” சில நொடி தயக்கத்திற்குப் பின் கைவிரல்களைப் பார்த்தவாறு, “என் மூலமா அப்படி ஒண்ணு சான்ஸ் கம்மிதான். உங்க சந்தோசத்தைக் கெடுக்குறேனோ என்ற குற்றவுணர்ச்சி மட்டும் வருது.”

“ரதி...” என இடையில் பேச வந்தவனை கைநீட்டித் தடுத்து, “அதெல்லாம் தேவையில்லை. தாம்பத்தியம் மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு சொல்லுவீங்க. ப்ச்... அதுவும் முக்கியம்தான்” என்றாள் சோர்வாக.

அவளின் தரைக்கும், தண்ணீருக்குமான நிலையை எண்ணி புன்னகைத்தவன், “எப்போது இருந்து முக்கியமாச்சி?” என்றான்.

“தெரியலை” என்ற பதிலில் சிரித்தவன், “தாம்பத்தியமோ, குழந்தையோ எதுவா இருந்தாலும், உன் மூலமாதான் கிடைக்கும் ரதிமா. நமக்குக் காலம் இருக்கு. இயற்கையாலோ, மஞ்சள் கயிறின் மாயத்தாலோ, உன் மனசு மாறுறப்ப சேர்ந்து வாழலாம். இல்லையா, நீ எங்கே என் அன்பேன்னு உன் பின்னாடி நான் சுத்துறேன். பி கூல் மிஸஸ்.அறிவழகன்” என்றான்.

‘எல்லாமே இவனுக்கு சாதாரணம்தானா? ஏன் என்னை இப்படி ஈர்க்கிறான்? ஈர்க்கிறானா? ஈர்ப்புன்னா, சலனம்தானே? இவனைக் கண்டு நான் சலனப்படுறேனா?’ மனம் அவளுக்குள் கேள்விகளைத் தொடுத்தது.

“மதியம் ஆருச்சே ரதிமா. இன்னும் சாப்பிடக் கூப்பிடலை. மருமகன் வந்திருக்கேன் விருந்து சமைக்காம, என்ன பண்ணுறாங்க என் மாமியார்? வா பார்க்கலாம்” என்று அழைத்துச் சென்று, அவளுக்கும் அவனே பரிமாற, அவள் வயிறார உண்டதும் தானும் உண்டு, “போய் ரெஸ்ட் எடு ரதிமா. நான் ஆஃபீஸ் போயிட்டு இரண்டு மணிநேரத்தில் வந்திருறேன்” என்றான்.

“நீங்க என்ன நினைச்ச நேரம்லாம் கம்பெனிக்குப் போறீங்க மேனேஜர் சார்? பார்த்து ஓனர் சீட்டைக் கிழிச்சி வீட்டுலயே இருன்னு சொல்லிடப் போறாரு” என்று கிண்டலடித்தாள்.

‘மேனேஜர்’ என்று கிண்டலுக்குச் சொல்கிறாள் என நினைத்து, “ரொம்ப நல்லதா போச்சின்னு, டெலிவரி வரை பொண்டாட்டி முந்தானை பிடிச்சி சுத்த ஆரம்பிச்சிருவேன்” என்று கண்சிமிட்டினான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
“அஹான்! அப்புறம் சாரே” என நக்கலாகக் கேட்டாள்.

“அப்புறமென்ன, பொண்டாட்டியோட சேர்த்து பிள்ளையையும் சுத்த ஆரம்பிச்சிருவேன்.”

“ஆனா, குழந்தையை உங்க அண்ணி கொண்டு போயிருவாங்களே” என்று அவள் சோகமாக, அதை நினைக்கையில் அவனுக்கும் மனம் பாரமாகியது. அதைவிட மனைவியின் சோகம் தாக்க, “சரி விடு ரதிமா டெலிவரி வரை நான் சுத்துறேன். டெலிவரிக்குப் பிறகு நீ என்னைச் சுத்து. சரியா?” என்று தோள்குலுக்க,

“ஹேய்! உங்களை...” என்று அவனை அடிக்கக் கை ஓங்கவும், சட்டென்று பின்னால் நகர்ந்தவன், “பிடிக்க முடியாதே கண்ணா” என்று இரு கை பெருவிரலையும் வலம் இடமாய் ஆட்டிப் பின்னால் நகர்ந்தான்.

“பிடிச்சிட்டா?”

“நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்.”

“ப்ராமிஸ்.”

“நீ இதைச் செய்னு சொன்னாலே, ஏன் கண்ஜாடை, நோ, நோ மனசுல நினைச்சாலே செய்வேன். ப்ராமிஸ் தேவையில்லை ரதிமா.”

“கேட்டதுக்கு மட்டும் பதில்” என்று அழுத்தமாக நிற்க,

“என் உயிரினும் மேலான என் மனைவி...” சட்டென்று அவன் வாய்மூடி, “வேண்டாம். ஒருவேளை செய்ய முடியாத சூழ்நிலை வந்தா, நீங்கதான் ரொம்ப கஷ்டப்படுவீங்க. நான் உங்களை முழுசா நம்புறேன்” என்றாள்.

பதிலுக்கு அவன் எதோ சொல்ல, அவனின் உதடசைவில் அவள் உள்ளங்கை கூச, சட்டென கையை எடுத்தவளுக்கும் ஒருவித குறுகுறுப்பு.

“நம்பிக்கை காலத்துக்கும் காப்பாற்றப்படும் ரதிமா” என்றவன் அவளிடம் விடைபெற்று, தாயின் முன் சென்று, “அம்மா என்ன சொல்லி வச்சீங்க உங்க மருமகள்கிட்ட?” என கேட்டு நின்றான்.

“என்னடா கேட்கிற? எதாவது புரியுற மாதிரி பேசுறியா?” என்றார்.

“என்ன சொல்லி கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சீங்க? என்கிட்ட என்னவோ சொல்ல வந்து மழுப்புறா. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்” என்று பிடிவாதமாக நின்றான்.

“யதார்த்தம் சொன்னேன்டா. குழந்தையை துணையில்லாமல் வளர்க்க முடியாது. குழந்தையை வச்சி அவளுக்கும் கெட்ட பெயர்னு சொல்ற விதமா சொன்னேன். புரிஞ்சி ஓகே சொல்லிட்டா.”

“இல்லம்மா. நீங்க முழுசா சொல்லலை. எதையோ மறைக்குறீங்க? அவள்கிட்ட சம்மதம் வாங்கவான்னு நான் கேட்டப்ப, நீ போனா சம்மதிக்கமாட்டா. நானே பேசிக்குறேன்னு சொன்னதால நானும் விட்டுட்டேன். என்ன சொன்னீங்கம்மா?”

“ஒண்ணும் இல்லைடா.”

“இல்லை ஏதோ சொல்லியிருக்கீங்க? அவள் அண்ணனைப் பார்த்தாலே மிரள்றா. இந்தக் கல்யாணம் செய்திருக்கக்கூடாது சொல்றா. ஏன் அப்படிச் சொன்னாள்னு உங்களுக்குத் தெரியும். நீங்க சொன்னால்தான்மா அவளை சரிபண்ண முடியும். நீங்க சொல்லலைன்னா மாமாகிட்ட போய் நிற்பேன்” என்றான் உறுதியாக.

“அ...அது...”

“ம்... அந்த அதைத்தான் சொல்லுங்க சொல்றேன்” என்றான் அழுத்தமாக.

மனதைத் திடப்படுத்தியவர், “உன் அண்ணன் உயிரோட இல்லைன்னு சொன்னேன்” என்றதும், “அம்மா” என்ற அலறல் அறிவழகனிடம் எனில், அதே அலறல் மனதில் மதியழகனிடம். தாயிடம் ஏதோ கேட்க வந்த மதியழகன் மனதில் சொல்லொணா வேதனையுடன், ஏனென்ற கேள்வியும்.

“ஏன்மா அப்படிச் சொன்னீங்க?”

“அப்படிச் சொல்லலைன்னா, அனு உன்னைக் கல்யாணம் செய்திருக்கமாட்டாள்டா” என்றார் மனம் பொறுக்காது.

“அதுக்காகவா? ஏன்மா?” என்றான் தவிப்புடன்.

“நீயே சொல்லு? அந்தப்பொண்ணு அவ்வளவு கஷ்டத்தையும் மீறி உயிர் பிழைத்து வந்ததே பெருசு. அடுத்த சில நாள்ல நம்மளால திரும்பவும் ஒரு பிழை அவளுக்கு. பெரியவன் குழந்தை உன் வயித்துல இருக்கு. சின்னவனைக் கல்யாணம் பண்ணிக்குறியான்னு கேட்டா, எந்தப் பொண்ணுதான் சம்மதம் சொல்லுவா சொல்லு? எனக்கு உன் அண்ணன் வாரிசும் வேணும். அதே சமயம் அதைச் சுமக்குற பொண்ணும் வேணும். வாடகைத் தாயா இல்லை. மருமகளா! அதான் துணிந்து சொல்லிட்டேன்” என்றார்.

“அண்ணன் நிலையை சொல்லி புரியவச்சி சம்மதம் வாங்கிருக்கலாமேம்மா?”

“டேய்! நான் சொல்ல வர்றது உனக்குப் புரியலையா?” என்றார்.

“புரியுதும்மா. அதுக்காக கோமாவுல உயிரோட இருந்தவனை... அது தப்புதானம்மா” என்றவனுக்கு உள்ளத் தவிப்பு அதிகரித்தது.

“என் மூத்த பிள்ளைடா அவன். என்னை அம்மான்னு அழைச்ச முதல் குழந்தை. என் உயிர்டா. இருந்தும் அப்படிச் சொன்னேன்னா, அது அனுவுக்காக மட்டும்தான். ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சனை. பெண்ணின் நுண்ணுணர்வுகள் நிறைய யோசிக்கும். சுயம், சுயமரியாதை, மான அவமானம்னு எவ்வளவோ இருக்கு. அவள்கிட்ட போயி என்னன்னு சொல்லி சம்மதிக்க வைக்க முடியும்? அந்த குழந்தைக்குச் சொந்தக்காரன் இல்லைன்னு சொன்னா, குழந்தைக்காகன்னு சொல்லி அவளை சம்மதிக்க வைக்கலாம்ன்ற எண்ணம். இல்லைன்னா ஏற்கனவே நொந்து போயிருக்கிறவள், குழந்தையை தனியா சுமந்தா, இந்தச் சமூகம் அவளை விட்டு வைக்குமா? கேள்வி கேட்டே அவளைத் தப்பான முடிவெடுக்க வச்சிராது. இரண்டு உயிரைக் காப்பாற்ற அப்படிச் சொல்லிட்டேன். அது எனக்குத் தப்பாத் தெரியலை.”

“எல்லாத்தையும் விடு. நான் சொன்னது பொய்யின்னு தெரிஞ்சி இரண்டு நாளாகுது. ஏன் இப்படிப் பண்ணுனீங்க? என் வாழ்க்கையைக் கெடுத்துட்டிங்களேன்னு, என்னை இதுவரை அவள் கேட்கலை. ஏன் தெரியுமா?” என்றதில் மனைவியைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்க, “அதானே! முதல்ல உங்க மேலதான் கோவம் வரணும். மனசு ஆறும் வரை திட்டியிருக்கணுமே. ஏன் செய்யலை?” என்றான்.

“ஏன்னா, என் மருமகளுக்குத் தெரியும். அவளுக்காக, அவள் வாழ்க்கைக்காகதான் நான் அந்தப் பொய்யைச் சொன்னேன்னு. ஏன் அப்படி... அதாவது பெத்த பையனைச் சாகடிச்சி, என்னை வாழ வைக்கணும்னு என்ன அவசியம்னு வேணும்னா கோவப்படலாம்” என்றார் மருமகளின் மனதைப் படித்தாற்போல்.

“ஆமாம்மா. அந்த மாதிரி எதோ சொல்லிட்டிருக்கும் போதோ, ம்...” என்றவன் கண்மூடி மனைவி சொன்னதை நினைவுபடுத்தி, “அத்தை சொன்னது தப்புதான. பெத்த பிள்ளை உயிர்னு சொல்ல வந்தவ பட்டுன்னு நிறத்திட்டா” என்று கண்ணைத் திறந்தவன், “மிஸஸ்.அறிவழகனுக்கு எவ்வளவு நல்ல மனசு. அடம் பிடிச்சி அவளைக் கட்டி வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்மா” என்றான்.

மதியழகனுக்குத் தாயின் மனம் புரிந்தாலும், ‘என் குழந்தை எப்படி அப்பெண்ணிடத்தில்? மனைவியின் நம்ம குழந்தை என அடிக்கடி வரும் வார்த்தை. ஏன்? அவளின் உளறல் இல்லையா அது? தம்பி சொல்வதாகச் சொன்ன உண்மை என்ன? அம்மா மாமாவிடம் கேட்கச் சொன்னானே? இதை எப்படிக் கேட்க முடியும்?’ நிறைய கேள்விகள் மனதில் படையெடுக்க சோர்வாக தன்னறைக்குச் சென்றான்.
 
Member
Joined
May 9, 2025
Messages
99
Description about brought up is amazing,all parents should teach the boys even in their younger age.mr.madhi puthu kettu edhuvum pannadha
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
Description about brought up is amazing,all parents should teach the boys even in their younger age.mr.madhi puthu kettu edhuvum pannadha
Thank you
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top