- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
21
சில நிமிடங்கள் அவளை மனதார சிரிக்கவிட்டு அதை ரசித்திருந்தவன், “ஹல்லோ! மிஸஸ்.அறிவழகன்! வார்த்தை வரலைன்னு சொன்னது அவ்வளவு பெரிய காமெடி கிடையாது” என்றான்.
“ஆமா. கிடையவே கிடையாது” என்று சிரிப்பு மாறாது அவளும் சொல்ல,
இதே மனநிலையில் அவள் இருக்க எண்ணியவன், ஒரு தலையணையும் போர்வையும் எடுத்துக் கீழே விரித்து, “நீ படு ரதிமா” என்று படுத்துக் கொண்டான்.
சிரித்த முகம் மாறாது கணவனைக் கண்டவள், “எஸ்கேப்பாகிட்டீங்க. அப்ப தோல்வியை ஒத்துக்கோங்க” என்று வாயாடினாள்.
“நான் ஒத்துக்கணும்னா, நீ என்னைத் தூக்கிப் போட்டு மிதிக்க ஒத்துக்கணும். எப்படி வசதி?” என்றான்.
“யப்பா சாமி! ஆளை விடுங்க” என பெரிதாய் கும்பிடு போட்டு படுக்க, “ரதிமா! ரைட் இல்ல லெஃப்ட் சைட் சாய்ந்து படு. மல்லாக்க படுக்கக்கூடாது சொல்லுவாங்க” என்று கர்ப்பமானவர்கள் செய்ய வேண்டியதைச் சொல்ல, “ம்... சரி” என்று அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தவள் அடுத்த ஐந்து நிமிடங்களில் உறங்கிவிட்டாள்.
காலையில் கூட, கிண்டலுக்குத் தூக்கு என்பதாய் அவன் கை நீட்டிய செய்கையில், ‘பிச்சி பிச்சி’ என விரல் நீட்டி மிரட்ட, அவனோ உதட்டைச் சுருக்கி முகத்தை அப்பாவியாய் உம்மென வைத்திருந்ததை, இப்பொழுது நினைத்தாலும் புன்னகை அரும்பியது.
“ஹேய் ரதிமா! சிரிச்சதான நீ?” என்ற குரல் பின்னிருந்து கேட்க, வேகமாகத் திரும்பியவளிடம், “ஹேய்! பார்த்து. ரதி குட்டியோட சேர்த்து, பேபி குட்டியும் பயந்துரப் போறாங்க” என்றான்.
“அவ்வளவு அக்கறை இருந்தா, திடீர்னு வந்து பயமுறுத்தக் கூடாது” என்றவள், அவன் கையில் எதுவும் இல்லாமல் இருப்பதைக் கண்டு, “எதோ எடுக்கணும் போனீங்க?” என கேட்டாள்.
“போறப்ப எதிரில் உள்ள கண்ணாடியில் உன் முகம் தெரிஞ்சது. அதுல என்னைப் பார்த்து நீ சைட்டடிச்சியா, அதான் வந்தேன். உன் சிரிப்பையும் பார்த்தேன். அதோட, இந்தா ஏடிஎம் கார்ட். இதுதான் நம்பர்” என்று நான்கு நம்பரை காதருகில் சொல்லி கையில் கொடுத்து, “இதைக் கொடுக்கத்தான் வந்தேன். அப்புறம் ரதிமா துஷ்டனைக் கண்டால் தூர விலகணும்னு அவசியமில்லை. தூக்கிப் போட்டு இல்லைன்னாலும், சும்மா கூட மிதிக்கலாம் தப்பில்லை” என்றவன் குரல் அழுத்தத்துடன் வந்ததோ!
அதை அவள் முழுதாக உணரும் முன், “சோ, என்னைத் தூக்க ரெடியா இரு” என்று கண்ணடித்து விலகிச் செல்பவனை ஆவென பார்த்திருந்தாள் அனுரதி.
“என்ன அனுமா? உன் ஹீரோ அசத்துறாரா?” என்ற தோழியின் குரலில், “எ...என்ன மானி கேட்ட” என்றாள் திணறலாக. கணவனின் எண்ணத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லையோ!
“ஹா...ஹா உன் ஹீரோ உன்னை அசத்துறாரான்னு கேட்டேன். அதுதான் உண்மை போலவே” என்றாள் சிரிப்புடன்.
“ஏன் அப்படிக் கேட்கிற?” என்றாள் புரியாது.
“பின்ன வாயில ஈ போறது கூட தெரியாம அவரை சைட்டடிக்குறியே. அதான்...”
“ஏய்! அப்படில்லாம் இல்ல. திடீர்னு கண்ணடிக்கவும் கொஞ்சம்...” என்று திணறினாள்.
“ஓ... ஸ்லிப்பாகிட்டீங்களாக்கும்.” கேலி செய்தாள் மாலினி.
“ஏய்! போ லூசு. கம்முன்னு வா” என்று வந்த வெட்கத்தை மறைத்துத் திரும்ப,
“அழகன் கண்ணடிக்கிற ஸ்டைலைப் பார்த்து, அனு புள்ள மயங்கிச்சி” என்று தோழியின் தோளில் தொங்கியபடி காதருகில் பாடினாள்.
“தொலைச்சிருவேன் கம்முன்னு இரு” என்று அவளை நிமிர்த்தி வேறு கடை நோக்கி நடக்க ஆரம்பிக்க,
“கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன், அனுவுக்கு வெட்கம் வருமுன்னு கண்டுபிடிச்சேன்.” அந்த இடத்தில் வரும் காதல் என்ற வார்த்தையை தோழிக்காக மாற்றிப் பாடியிருந்தாள்.
“மானி! பப்ளிக் ப்ளேஸ்ல என்ன பண்ணுற?” என்று வெட்கத்தை மறைத்துக் கடிய,
“சரி சரி போகலாம்” என்று அருகில் இருந்த, பெட் ஷாப் நுழைய, அழகழகான பறவைகள் தொடங்கி, முயல், நாய்க்குட்டி முதற்கொண்டு அங்கு இருந்தது. வீட்டில் இல்லாத நிறத்தில் பறவைகளைக் கண்டு கடையில் இருப்பவரிடம் அவற்றைக் காண்பித்து, விலை கேட்டு, வீட்டிற்கே அனுப்பச்சொல்லி பணம் கட்டி, முகவரி கொடுத்து தோழியுடன் வெளியே வர, எதிரில் வந்து நின்றவனைக் கண்ட அனுரதி அசையாது நின்றுவிட்டாள்.
ஒன்றிரெண்டு வினாடிகளில் சுதாரித்தவள், கணவன் எங்கேயென்று தேட, கண்ணில் சிக்கவில்லை அவன். ‘எங்க போனீங்க மிஸ்டர்.அனுரதி?’ உள்மன தேடலில் அவள் இருக்க,
அவளின் அந்நிலை தனக்கானது என்றெண்ணி சந்தோஷத்தில் எதிரில் நின்றிருந்த ரவிசங்கர், “என்ன என்னைப் பார்த்ததும் நின்னுட்ட? என்னை எதிர்பார்க்கலைல?” என்றவன் அவளின் வயிற்றைப் பார்த்து, “அட! நாளு நாள்ல நமக்குக் குழந்தை வந்திருச்சாடி?” என்றதில் முழுதும் சுயத்திற்கு வந்தவள், “ஏய்! டி சொன்ன?” என விரல் நீட்டி எச்சரித்தாள்.
“டேய்! பேசாமல் போயிரு. அறிவழகன் சார் வந்தா செத்த நீ” என்று மாலினி அவனை மிரட்டினாள்.
“ஓ... நீ இவளோட தோழியாச்சே. நீ இன்னும் சாகலையா? கைகால் கூட உடையலை போல? ஆக்சிடண்ட்னா எல்லாம் நடந்திருக்கணுமே” என்றதில் பெண்கள் இருவரும் அதிர்ந்தனர்.
“டேய்! அதெப்படி உனக்கு? என்ன சொல்ல வர்ற?” என்றாள் மாலினி.
“நீ இவளோட ஒட்டிட்டே இருந்தா, நாங்க எப்படி சந்தோஷமா இருக்கிறது? அதான் உன் புருஷன் அப்பா போயிட்டாருன்னு, பொய் சொல்லச்சொல்லி போன் செய்தேன். அது பொய்யின்னு தெரிஞ்சதும் திரும்பி வந்துட்டா என்ன செய்யுறது? அதனால என் ஃப்ரண்டை விட்டு ஆக்சிடெண்ட் பண்ணச் சொன்னேன். பண்ணிட்டதா சொன்னானே? அப்புறம் எப்படி முழுசா வந்த?” என்ற யோசனைக்கு ரவிசங்கர் போக, அவனை அடிக்கப் பாய்ந்த மாலினியை அனுரதி தடுத்துப் பிடித்தாள்.
“என்னை விடு அனுமா. எல்லாத்தையும் ப்ளான் பண்ணி செய்திருக்கான். இவனால எவ்வளவு கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டோம் தெரியுமா” என்றாள் வேதனைக் குரலில்.
“மானி அவன் சைக்கோ. நீ வா போகலாம்” என்று இழுத்தாள் அனுரதி.
“இவனை அப்படியே விட்டுட்டுப் போறதா?” என்று கோவப்பட்டாள்.
“நீ அமைதியா இருமா. நான் அனுகிட்டப் பேசணும்” என்று இடையிட்டான் ரவிசங்கர்.
“அவள்கிட்ட உனக்கென்னடா பேச்சு? அதுக்கெல்லாம் ஒரு தகுதி இருக்கணும். அனுமா அறிவழகன் சாருக்கு போன் பண்ணு” என்றாள்.
“அந்த அறிவு அழுக்கனைத்தான் நானும் தேடுறேன்” என முனகியவளுக்கு, அவன் கண்படும் தொலைவில்தான் தாங்கள் இருக்கிறோம் என்பதை உணர முடிந்தது. இருப்பினும் ஏன் வரவில்லை என்ற கேள்வி மனதினுள் எழுந்த நொடி, அவனின் துஷ்டனைக் கண்டால் வசனம் எதற்கென புரிந்தது.
‘என்னை எந்த நிலையிலும் தைரியமா இருக்கவும், எதிரியை எதிர்க்கவும் ட்ரெயினிங் கொடுக்கிறாராமா?’ என கிண்டலாக நினைத்தவள், சிறு புன்னகையுடன் தோழியை அமைதிப்படுத்தி, “சொல்லுங்க சார். என்ன வேணும்?” என்றாள் இவர்களைத் தாண்டி யாருக்கும் வெளியே செல்லாத குரலில்.
“நான் என்ன தப்பு செய்தேன்னு அரெஸ்ட் பண்ணினாங்கடி? என்னென்னவோ கேட்குறானுங்க அந்த போலீஸ். நல்லவேளை எம்எல்ஏ பையன் என் ஃப்ரண்டோட ஃப்ரண்ட். அவனால போன மாசமே வெளில வந்துட்டேன். உன்னைப் பார்க்க வந்தா வீட்ல ஆளே இல்லை. இத்தனை நாள் தேடல்ல இதோ கிடைச்சிட்டடி” என்றான் அவள் கேள்விக்கு பதிலளிக்காது.
“முதல்ல தெரியாதவங்களை ‘டி’ சொல்ற உன்னை...” என்று தன்னை அடக்கி, “என்னை எதுக்கு நீ தேடணும்? என்ன சம்பந்தம் நமக்கு?” என்றாள் நேரடியாகவே.
“என்ன அனு இப்படிச் சொல்லிட்ட? நாம கணவன் மனைவி. இதோ என் குழந்தை உன் வயிற்றில்” எனும்போது கோவம் வர, பல்லைக்கடித்து அதை அடக்கியவள், “சார் நீங்க யாரோன்னு நினைச்சி பேசுறீங்க? இன்னொரு முறை உங்க குழந்தைன்னு சொன்னா, போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிருவேன். இப்பதான் அங்க இருந்து வந்ததா சொல்றீங்க. திரும்பவும் அங்கேயே போக வேண்டியிருக்கும். அப்ப எந்த மினிஸ்டர் வந்தாலும், ஒண்ணத்தையும் புடுங்க முடியாது” என்றாள் கண்டிப்புடன்.
“என்ன பேசுற அனு? நாம...”
“என்ன நாம? தொலைச்சிருவேன் உன்னை. நல்லா கேட்டுக்கோ, எனக்குக் கல்யாணம் ஆகிருச்சிதான். என் ஹஸ்பண்ட் நேம் அறிவழகன். கேட்டுக்கிட்டியா? அறிவழகன். இது எங்கள் இருவருக்குமான குழந்தை. பைத்தியக்காரன் மாதிரி உளறாம இங்கிருந்து போ” என்று அவனை விட்டு நகர, திரும்ப அவளை மறித்தான்.
“நீ பொய் சொல்லுறடி? அதெப்படி நடக்கும்? நீ ஃபேமிலி கேர்ள். அதெப்படி இன்னொருத்தனை கல்யாணம் பண்ணியிருப்ப? அதுவும் கொஞ்ச நாள்ல? என்னை அவாய்ட் பண்ணணும்னு பேசாதடி. இனி நான் உன்கிட்ட சாஃப்டா நடந்துக்குறேன். ஃப்ரண்ட் கொடுத்த வீடியோவுல பார்த்து கத்துக்கிட்டேன்” என்றான் திரும்பவும்.
தராதரம் இல்லாத ஒருவன், திரும்பத்திரும்ப தன்னை அவனுடன் இணை பேசுவது அருவருக்க, அதை வேடிக்கை பார்க்கும் கணவன்மேல் அளவில்லா கோவம் வந்தது. “வீட்டுக்கு வாங்க மேனேஜர் சார் உங்களைப் பார்த்துக்குறேன்” என்று கணவனைத் திட்டுகையில், அறிவழகனுக்கு இருமல் வர, “ரதிப்பொண்ணு என்னைத் திட்டித் தீர்க்குறா” என்று சிரித்தவன் நடப்பவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
அறிவழகனுக்கு ரவிசங்கரின் பேச்சினால் அவனை அடித்துத் துவைக்கும் கோவம் வருகிறதுதான். என்ன செய்வது? இச்சூழ்நிலை தான் இல்லாத நேரத்திலும் வரலாம். அதைச் சமாளிக்கும் தைரியம் மனைவிக்கு வரவேண்டும் என்றுதான் அமைதி காக்கிறான்.
“டி போட்டுப் பேசாதன்னு சொல்லிட்டிருக்கேன். இன்னொரு டைம் சொல்லு பார்க்கிறேன்” என்று பல்லைக் கடித்தவள், “உன் பொண்டாட்டிகிட்ட பேச வேண்டியதை என்கிட்ட ஏன் பேசிட்டிருக்க தெரியலை? அப்புறம் ஒரு பொதுவான கருத்து சொல்றேன். குடும்பப்பொண்ணு இரண்டாவது கல்யாணம் பண்ணுறது தப்பில்லை. செருப்பு கடித்துப் புண்ணாகி, சீல் வச்சி அந்தக் காலையே எடுக்குறதுக்குப் பதிலா, கடிக்குதுன்னு தெரிந்ததும் காலுக்கு உதவாத செருப்பைக் கழட்டி எறிஞ்சிட்டு, புதுசு வாங்குறதுல தப்பேயில்லை. காலுக்கு உதவாத செருப்பு மாதிரிதான் சில ஆண்கள். பொண்ணுங்க தப்பா போறதுதான் தப்பே தவிர, இரண்டாவது கல்யாணம் தப்புக் கிடையாது. சோ உன் எண்ணத்தை மாத்திக்கோ. மானிமா வா போகலாம்” என்று நடக்க ஆரம்பித்தாள் அனுரதி.