- Joined
- Aug 31, 2024
- Messages
- 956
- Thread Author
- #1
18
நடந்ததைக் கேள்விப்பட்ட ஆனந்தன், அபிராமிக்கு என்ன சொல்வது? யாருக்காகப் பேசுவதென்று தெரியவில்லை. குழந்தையைச் சுமப்பவள் ஒருத்தி! குழந்தையாய் ஒருத்தி! பெரிய மருமகளைப் பார்த்து, சக மனிதரை அடிப்பது தவறு என்று முடிந்தளவு சொல்லி புரியவைத்து சின்ன மருமகளைத் தேடி வந்தார்.
கட்டிலில் யோசனையாய் அமர்ந்திருந்தவள் அருகில் அபிராமி அமர, அவர் அருகாமை உணர்ந்து அவர் தோள் சாய்ந்து கொண்ட மருமகளை அணைத்தாற்போல் பிடித்துக்கொண்டு, “எதுவும் கேட்கமாட்டியா?” என்றார்.
“என்ன கேட்கணும்?”
“சரிதான். நீ தெளிவாதான் இருக்க.”
“ம்... உங்க பையரும் தெளிவாதான் இருக்காப்ல” என்றவளுக்குக் கணவன் தன்னை சமாதானப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லைதான். இருந்தும் மனம் எதையோ எதிர்பார்க்கிறதோ!
“ஃபீலிங்கா?”
“ம்கூம்...” என தலையசைத்தவள், “ம்...” என தலையாட்டி, “லைட்டா. மத்த பொண்ணுங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா எகிறிக் குதிச்சி சண்டை போடுறாங்க. இப்ப கட்டின பொண்டாட்டிக்கு ஒரு பிரச்சனைன்னதும், வீட்டைவிட்டு துரத்தப் பார்க்குறாங்க. உங்க பையரை ஹீரோ நினைச்சேன். ஆனா, ரொம்ப கெட்ட பையன்” என்று மூக்கைச் சுருக்கினாள்.
“அப்ப, எனக்குப் புரியாத பல விஷயங்கள் உனக்குப் புரியுது?”
“ஆங்... புரியுது புரியுது. ஹீரோ சப்ஜெக்ட் கதைகள் எத்தனை படிச்சிருக்கோம், பார்த்திருக்கோம். அதுல எல்லாம் ஹீரோஸ் அள்ளுவாங்க. ஆனா, நிஜம்?” என்றவளுக்கு அந்த நான்கு நாள் வாழ்க்கை நினைவு வர அமைதியாகிவிட்டாள்.
மருமகளின் மனதைப் புரிந்தாரோ! “மனைவியின் கண்பார்த்து, உடல்மொழி கண்டு, அவள் மனம் புரிஞ்சிக்குற ஆண்கள், நிஜத்திலும் இருக்காங்கதான அனுமா? அதான் உன் ஹீரோ” என்று அழுத்திச் சொன்னார்.
“என் ஹீரோவாம். ம்க்கும் இல்லை” என்று முறுக்க,
“அதான் அவன் என்ன நினைக்குறான்னு பார்வையிலேயே தெரிஞ்சிக்குறியா?” என்றார் கேலியாக.
“போதும் உங்க பையர் புராணம். முதல்ல ஷண்மதி அக்காவை கவுன்சிலிங் கூட்டிட்டுப் போங்க” என்றாள்.
“இன்னைக்கு மாதிரி தினமும் இங்க பிரச்சனை நடந்திருக்கு. அதை என்கிட்ட சொல்லாம மறைச்சிட்ட. ஏன் அனுமா? சொல்லியிருந்தா அதுக்கான தீர்வு எடுத்திருப்பேன்ல?”
“உங்களைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லலை. என்னால அவங்களை சமாளிச்சிக்க முடியும்னு நினைச்சேன். ஆனாலும், ஓவராதான் போறாங்க” என்றதோடு, “அத்தை அவங்க தாலி போட்டுருக்காங்களே. அது தப்பில்லையா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
சற்றே தடுமாறினாலும், “இதை அவள் வந்த அன்னைக்கே கேட்ப நினைச்சேன். ரொம்ப ஸ்லோவா இருக்கியே” என்று கிண்டல் செய்ய, “ம்க்கும்... நானே யூகிச்சுப்பேன். அப்புறம் ஏன் கேட்கணும்?”
“அதுதான் நானும் கேட்கிறேன். இப்ப ஏன் கேட்குற?”
“அது சும்...”
“அம்மா!” என்ற அறிவழகனின் குரலில் சும்மா நின்றுபோக, “சாப்பிட்டு வந்து படுங்க போங்க” என்று தாயை முறைத்து மனைவியிடம் திரும்பியவன், “வாக்கிங் போகணும். சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா” என்று அதட்டல் போட்டான்.
“அத்தை உங்க பையருக்கு நடிக்க வரலை. அப்பட்டமா தெரியுது இது திட்டு இல்லை அக்கறைன்னு” என்றாள் மெல்லிய குரலில்.
“இதைத்தான் நாங்க புரிதல்னு சொல்வோம். அப்ப உன் ஹீரோ என் பையர்தான?” என்று அவளைப்போலவே மெல்லிய குரலில் கிண்டலாக சொன்னார்.
“நான் எதுவும் பேசலை” என்றவாறு சட்டென்று எழுந்ததில் வயிற்றில் சுருக்கென்று வலிக்க, “ஆ...அம்மா” என்றாள் சத்தமாக.
அனுமா! என்னாச்சி?” என்ற அபிராமி அவளைப் பிடித்தார்.
“வேகமா எழுந்திரிக்காதன்னு எத்தனை தடவை சொல்லுறது?” என்று திட்டி, “ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிடல் போகலாமா?” என்றான் கனிவாக.
கணவன் திட்டியதில் கோவம் வர, எதுவும் பேசாது வெளியே சென்று சாப்பிட அமர, “ஏய்! வலிக்குதான்னு கேட்கிறேன்ல?” என்றவன் சத்தம்தான் அதிகமிருந்ததே தவிர அதில் அத்தனை தவிப்பு. அவனை இன்னும் தவிக்கவிடவென்று அமைதியைக் கடைபிடிக்க, “ப்ச்... இப்ப என்ன மிஸஸ்.அறிவழகன்?” என்றான் பொறுமையாக.
கணவனின் மிஸஸ்.அறிவழகனில் வந்த சிரிப்பை மறைத்து, “சாப்பிடுங்க. வாக்கிங் போகலாம்” என்றாள் சாதாரணமாக.
அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்கையில் உதட்டில் ஒளிந்திருந்த சிரிப்பை விழி வழி பார்க்க, “மிஸஸ்.அறிவழகனுக்கு சேர்க்கை சரியில்லை” என்று தாயைக் காண, “அஹான்! சேர்க்கை சரியில்லைன்னா, நீ சேர்த்துக்கோ. என்னைச் சொன்ன அவ்வளவுதான்” என்று மகனை எச்சரித்தார் அபிராமி.
“சேர்த்துக்க, கட்டிக்க, ஒட்டிக்க எல்லாம் நான் தயார்தான்” என்றதும் அனுரதிக்கு புரையேற, அவள் கையிலிருந்த தண்ணீரை வாங்கி வைத்துத் தலையில் லேசாகத் தட்டி, முதுகில் மெல்ல தட்டிக்கொடுத்து, “உணர்ச்சிவசப்படக்கூடாது சொன்னா கேட்குறதில்லையே மிஸஸ்.அறிவழகன். பாருங்க கட்டிக்கலை, ஒட்டிக்கலை, அப்படியிருந்தும்... போங்க” என்றான் அலம்பலை விடாது.
“போதும். நீங்க தெளிவுதான். ஆனா, நான் இன்னும் தெளிவாகலை. இப்ப தள்ளிப்போங்க” என்றதும்தான், தான் அவளை நெருங்கி நிற்பதும், அவள் உடல் அதிர்வும் புரிய சட்டென்று விலகியவன், “சரி கொஞ்ச நாளைக்குத் தள்ளி நிற்கிறேன்” எனவும் அவள் முறைக்க இவன் சிரிக்க என்றிருந்தார்கள்.
பகலெல்லாம் அறிவழகன் பார்வை எல்லையில், இரவில் நடைப்பயிற்சி என்று நாட்கள் செல்ல, சிற்சில மாற்றங்கள் அவளுள். புரிதல்கள் அதிகமானதோ!
வளைகாப்பு அன்று வந்து நின்றவனைப் பார்த்ததும் ஸ்தம்பித்து எழுந்துவிட்டாள் அனுரதி.
“அத்தை வளைகாப்பு முடிஞ்சா அனு அவங்க வீட்டுக்குப் போயிருவாதான?” என்ற ஷண்மதியின் கேள்விக்கு, “ஆமா மதிமா. குழந்தை பிறந்ததும்தான் திரும்பி வருவாங்க” என்றார் அபிராமி.
“இல்...” என முடிக்கும் முன், “அம்மா அத்தை உங்களைக் கூப்பிடுறாங்க” என்று தாயை ஷண்மதியிடமிருந்து விலக்கி அனுப்பினான்.
“அறிவு, அனு...” என ஆரம்பிக்க, “அனுவை இப்பக் கூட்டிட்டு வந்து மேடையில் உட்கார வச்சிருவாங்க அண்ணி. நீங்க சாப்பிட்டீங்களா? இல்லைன்னா போய் சாப்பிடுங்க. நான் இதோ வந்திடுறேன்” என்று நகர,
“அ...அறிவு...” ஷண்மதியின் அழைப்பு காற்றோடு போக, “ஷண்முமா இங்க ஏன் தனியா நிற்கிற? வா” என்று மகளை ஆனந்தன் அழைத்துச் சென்றார்.
மனைவியை அலங்கரிக்கும் அறைக்கு வந்தவன் அங்கிருந்தவர்களை போகச் சொல்லி, “அப்புறம் மிஸஸ்.அறிவழகன் அரேஞ்ச்மெண்ட் பிடிச்சிருக்கா? ஊரையே கூட்டி என் ஒய்ஃப்கு வளைகாப்பு வைக்கணும்னுதான் ஆசை. ப்ச்... நம்ம கல்யாணம் நம்ம குழந்தைக்கு ஐந்தாவது மாசம் இருந்தப்ப நடந்ததால, வளைகாப்புன்னு வெளியில் கூப்பிட்டா நிறைய கேள்வி வரும். அதான் நம்ம வீடுவரைக்கும் பண்றேன். உங்களுக்கு எதாவது சொல்லணுமா?” என்றான்.
“டாட்டா பை பைதான் சொல்லணும். வேறென்ன?” என்றாள் சாதாரணமாக.
“என்கிட்ட கேள்வி கேட்க, கோவப்பட, திட்ட எதுவுமே இல்லையா?” என்றான் மனம் கேளாது.
“நான் யார் உங்களைக் கேள்வி கேட்டு கோவத்துல திட்ட?”
“நீ யார்னு சொல்ல ஒரு நிமிடம் போதும். உனக்காகதான் அமைதியாயிருக்கேன்” என்றான் அறிவழகன்.
“ஒரு நிமிடத்துல அப்படி என்ன சார் நிரூபிப்பீங்க? எங்க நிரூபிங்க பார்க்கலாம்” என்று சற்றே திமிராக நிற்க, அத்திமிரை குலைத்தே தீருவேன் என்று அவளை நெருங்க, அமைதியாகவே அவனைப் பார்த்திருந்தவள், என்னவென்று புருவம் உயர்த்த, “இவ்வளவு பக்கத்துல வந்தும் திமிரா இருக்கீங்க மிஸஸ்.அறிவழகன். அப்படியே கொஞ்சம் அழகாகவும்” என்று அவளின் வயிற்றில் அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக அணைத்துக் கொண்டான்.
அவனின் செயலை எதிர்பாராதவள் உடல் நடுக்கம்கொள்ள, இதயத்துடிப்போ அதிகரிக்க, மனைவியின் காதோரம் சென்று ஏதோ சொல்ல, அவளோ புரியாது அவனைப் பார்க்க, “சீக்கிரமே புரியும்” என்றான் மறைமுகச் செய்தியாய்.
“அப்புறம் மிஸஸ்.அறிவழகன், துஷ்டனைக் கண்டால் தூரம் போகாது, மிதித்து நசுக்கி விடு பாப்பா” என்றான் பாரதியின் வார்த்தையை மாற்றியெழுதி.
“எதுக்கு இந்தப் புதுமொழி?”
“எப்பவாவது யூஸாகும்” என்றான் புன்னகைத்து. இன்னுமே கணவன் அணைப்பில், தான் இருப்பதை உணரவில்லை அவள். ஆரம்பத்தில் இருந்த உடல் நடுக்கம் இல்லவேயில்லை என்ற நிலை.
“எங்க உங்க வில்லன் அவதாரம்?”
“வில்லனா? ஹேய்! ஹலோ! நான் ஹீரோவாக்கும். அதுவும் இந்த ரதிப்பொண்ணு உனக்கே உனக்கான, உனக்கு மட்டுமே சொந்தமான ஹீரோ.”
“அப்படியா? ஹீரோவா என்ன செய்துட்டீங்களாம் எனக்கு?” என்று எகத்தாளமாய் கேட்க,
“எதுவும் செய்யலைதான். இனி முயற்சிக்கிறேன்” என்றான்.
“ஓ... அதுசரி புரியாத மொழியில் காதுகிட்ட என்னவோ உளறுனீங்களே அதென்ன?” என்று பேச்சை மாற்ற, “புரிய வரும்போது எல்லாம் தெளிவாகும். அப்புறம் மிஸஸ்.அறிவழகன் அழகாய் இருக்கிறாய். நேரமாக ஆக பயமாவும் இருக்கிறது” என்றான் கண்சிமிட்டி.
“புரியாமல் பேசுறதே உங்களுக்கு வேலையா போச்சி? இப்ப என்ன பயம்?”
“உணர்ச்சிவசப்பட்டு உங்க நெற்றியில் முத்தம் கொடுத்துட்டா” என்று கண்களால் சிரிக்க, அப்பொழுதுதான் தங்கள் நலை உணர்ந்தவள் அவனைத் தள்ளிவிட, “உஷாராகிட்டீங்க மிஸஸ்.அறிவழகன்” என சிரித்தபடியே விலகியவன், “ஒரு நிமிடம்தான் கேட்டேன். பத்து நிமிடம் தந்திருக்கீங்க தேங்க்ஸ் எ லாட் மிஸஸ்...”
“அறிவழகன்தான் கிளம்புங்க. இன்னும் இங்க நின்னு என்னை தர்மசங்கடப்படுத்தாதீங்க” என்று கடுகடுத்தவள் குரலில் தடுமாற்றம் நிறைய இருந்தது.
இதற்கு மேல் நின்றால், கண்டதையும் யோசித்துத் தன்னைத்தானே குழப்பிக் கொள்வாள் என்று கதவை நோக்கி நடந்தவன், திரும்பி வந்து வயிற்றின் மேல் கைவைக்க வர, விலகப்போனவளை, “நம்ம குழந்தையை உணரவிடு ரதிமா. அப்புறம் காலத்துக்கும் மனசுல அது உறுத்தும். ஒன் மினிட் ப்ளீஸ்” என்றான்.
“ம்க்கும். ஒரு நிமிஷம்னு சொல்லிதான் கொஞ்சம் முன்ன பத்து நிமிஷம் எடுத்துக்கிட்டான்” என முனக,
“அது உனக்கான நேரம். குழந்தைக்கு ஒரு நிமிடம் போதும்” என்று மனைவியின் வயிற்றில் கைவைத்து சில நொடிகள் கண்மூடி நிற்க, குழந்தையோ உள்ளே துள்ளிக்குதித்துத் தன் இருப்பை அவனுக்கு உணர்த்தியது. அவ்வுணர்வில் புன்னகையொன்று அவனுள் பரிணமிக்க, அதை ஆச்சர்யமாய் பார்த்திருந்த அந்நிமிடம், உடல் கணவனையும் உணர ஆரம்பித்ததோ!