• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
15


“என்ன தைரியமிருந்தா நான் இருக்கிற இடத்துல... ப்ச்... மனசே ஆறமாட்டேன்னுது சார். இவனுங்க மாதிரி ஆளுங்க வீட்டுல அக்கா தங்கையையாவது விட்டு வச்சிருப்பானுங்களா? இல்ல...” அறிவழகன் தன் ஆத்திரம் தீருமட்டும் அவர்களை அடித்தான்.

“சார் அமைதியா இருங்க. இதுக்கும் மேல அடிச்சி எதாவது ஆகிட்டா, கோர்ட் கேஸ்னு அலையணும்” என்றார் ஜெகதீஷ்.

“அதுக்காக அப்படியே விட முடியலை சார். இவனுங்களுக்கு அண்டர்கிரௌண்ட் ட்ரீட்மெண்ட்தான் சரி. பொண்டாட்டிகிட்டக் கூட போகக்கூடாது. என்ன தண்டனை தரலாம் சொல்லுங்க?” என்றான் அவரிடமே.

“அரபு நாடுகள் ஸ்டைல்ல தண்டனை கொடுக்கலாம் சார்” என்று ஜெகதீஷ் சொன்னதும்,

“என்ன பாஸ் கட் பண்ணச் சொல்றீங்களா?” என்றான் அறிவழகன்.

அதைக்கேட்ட நொடி அந்த இருவரும் அலறி, “சார் தெரியாம செய்துட்டோம். இனி எந்தப் பொண்ணையும் தப்பா பார்க்கவோ, நினைக்கவோ மாட்டோம். எங்களை விட்டுருங்க சார்” என்று கெஞ்சலில் இறங்கினர்.

“சிசிடிவி இல்லாத இடமா பார்த்து, ப்ளான் பண்ணி மிஸ்பிஹேவ் பண்ணின நீங்க செய்தது தெரியாமல் செய்ததா? உரிமையுள்ள பொண்டாட்டிக்கே புருஷன் தொடுறது பிடிக்கலைன்னா, அதைச் செய்யக்கூடாதுன்னு சட்டமே சொல்லுது. நீங்க என்னடான்னா பிடிக்கலைன்னு சொன்ன பொண்ணுகிட்ட, அதுவும் நான் இருக்கிற இடத்தில்...” என்று இருவருக்கும் அடிகளைத் தாராளப்படுத்த, அனுரதியின் இதழ்களில் புன்னகை.

‘என் கதை நாயகன். கதாநாயகன்!’ மனம் சந்தோஷத்தில் துள்ளியது. “மிஸ்டர்.அனுரதி என் வாழ்க்கையில் உங்க வரவு லேட்டானதால எல்லாமே மாறிப்போச்சி. ஆண்களில் அனைவரும் தவறானவர்கள் அல்ல. ஐ அக்ரி. பட்...?” அவளின் எண்ணங்கள் அத்துடன் முற்றுப்பெற்றுவிட்டது.

“ஜெகதீஷ் சார் அண்டர்கிரௌண்ட்ல உள்ள கரண்ட் ரூம்கு கொண்டு போய் நீங்க சொன்னதைச் செய்திருங்க. ட்ரீட்மெண்ட்கு கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல்ல சேர்த்திருங்க. அங்கதான் மக்கள் அதிகம் வருவாங்க. ஒவ்வொரு டாக்டர்கிட்டயும், நர்ஸ்கிட்டேயும் என்ன பிரச்சனைன்னு சொல்ல முடியாமத் தவிக்கணும். எப்படி நடந்ததுன்னு கேட்டா, பாத்ரூம் போகும்போது எதிர்பாராதவிதமா ஒரு சைக்கோ இதைச் செய்துட்டான்னு இவனுங்களே சொல்லுற மாதிரி செய்திருங்க.”

“ஐயோ! ஒரு பொண்ணு நிற்கிறேன். இப்படிப் பச்சையா பேசுறான்” என்று வாயில் கைவைத்த அனுரதிக்கு ஒருபுறம் சிரிப்பும் வந்தது. “சரியான தண்டனைதான். இதனால் இவனுக்குச் சட்டச் சிக்கல் எதுவும் வந்திரக்கூடாது கடவுளே!” என வேண்டிக்கொண்டாள்.

ஆனால், மேனேஜர் எப்படி எம்டியை அதட்டி வேலை வாங்குகிறான் என்பதைக் கவனிக்க மறந்திருந்தாள். விழிகளும், செவிகளும் கணவன் வசமானதோ!

“இவனுங்க மனைவி, தம்பி, தங்கை யாராவது படிச்சிருந்தா இங்கேயே வேலை போட்டுக்கொடுங்க. அதுக்கும் முன்ன குடும்பத்தைப் பற்றி விசாரிங்க. முன்னேர் போல் பின்னேர் இருந்துரக்கூடாது சார்” என்றவன், “செக்யூரிட்டி தூக்கிட்டுப் போங்க” என்று அவர்களை அனுப்பி, வரவேற்பறைக்கு அழைத்தவன், “மிஸ் என் ஒய்ஃப்கு ஜுஸ் கொடுத்தீங்களா? கொடுத்தாலும் திரும்பவும் கொடுங்க. இன்னும் டென் மினிட்ஸ்ல வர்றேன்” என்றவன் ஜெகதீஷிடம் திரும்பி, “முடிந்தளவு பார்த்துக்கோங்க சார். ஒய்ஃப் ரிசப்ஷன்ல வெய்ட் பண்றாங்க. ஹாஸ்பிடல் போயிட்டு அப்படியே கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான்.

“சரிங்க சார்” என்று சிரித்தவர் அங்கிருந்து அனுரதி சென்றதைப் பார்த்து மர்மப்புன்னகை புரிந்தார். அவள் வந்ததை அவருமே கவனித்து, அவள் தோழியை பேசக்கூடாதென்று எச்சரித்ததையும் கண்டுகொண்டார். அறிவழகனைப் பொறுமைசாலி என்று பெண்ணிடம் சொல்லி வைத்திருப்பதாக, ஒருமுறை அபிராமி சொல்லியிருக்கக் கேட்டவருக்கு, இப்போதைய நிகழ்வை நினைக்கையில் சிரிப்புதான் வந்தது. அனுரதி கீழே சென்று நிதானிக்க நேரம் கொடுக்க, அறிவழகனைப் பேச்சில் பிடித்து நிறுத்தியிருந்தார்.

வேகமாகக் கீழிறங்கி வந்தவன் கண்டதெல்லாம் பழச்சாறு குடித்துக் கொண்டிருந்த மனைவியைதான். “சாரி மிஸஸ்.அறிவழகன். கொஞ்சம் லேட்டாகிருச்சி” என்று கெஞ்சல் குரலில் மன்னிப்பு கேட்க, தன் இன்னொரு கையில் வைத்திருந்த பழச்சாறை அவனிடம் நீட்டினாள். ‘எனக்கா?’ என்பதான பார்வையில், அவள் கண்மூடி ஆமோதித்ததும், பிடித்ததா? பிடிக்காததா? எதையும் யோசிக்காது ஓரே மூச்சில் குடித்து கீழே வைத்து, “போகலாமா?” என்றான்.

“ம்... போகலாம்” என்றதும், “மாலினியைப் பார்க்கலையா?” என கேட்டான்.

“இன்னொரு நாள் வந்து பார்த்துக்கலாம். நீங்க வாங்க” என்று காரை நோக்கி நடக்க, தன்னுடன் நடந்த கணவனிடம், “உள்ள என்ன நடந்தது? ஏன் அவ்வளவு டென்சனா போனீங்க?” என்று நின்றாள்.

“டென்சனா? நானா? யூ நோ மிஸஸ்.அறிவழகன் நான் பொறுமையில் பூமாதேவி மாதிரி.” வாய் வார்த்தைதானே என்று அளந்துவிட்டான்.

“அஹான்!” என்று ராகமிழுத்த மனைவியிடம்,

“ஹேய்! நம்பலையா? நான் ரொம்ப சாஃப்ட் நேச்சர் பெர்சன். கோவம் ஆத்திரம்னா எப்படியிருக்கும்னே தெரியாது. யூ நோ...”

“சரி போதும் நம்பிட்டேன்” என்று இடையிட்டவள், “இரண்டு பேரை நார் நாரா பிரிச்சி மேய்ஞ்சிட்டு பொறுமைசாலியாம். கோவம், ஆத்திரமே வராதாம். ஆனா, ஏழுதிசைக்கும் ரௌத்திரம் அனல் தெறிக்குது. போங்க சார்” என்று முனகினாள்.

“சத்தமா பேசுனா எனக்கும் புரியும்ல?”

‘புரியக்கூடாதுன்னுதான முனகுறதே. இதுல சத்தமா பேசணுமாம்’ என மனதினுள் திட்டி, “போகலாமா? கால் வலிக்குது” என்றாள்.

“கால் வலிக்குதா? ஏன்? நின்னுட்டே இருந்தியா? உட்காரச் சொல்லிட்டுதான போனேன். இரு அந்த ரிசப்ஷன் பொண்ணை...” என்று திரும்பியவனின் கைபிடித்து, “ஒரு கால் வலிக்கு ரிசப்ஷன் பொண்ணுவரை போயிட்டீங்க. உங்க பொறுமையின் அளவு அவ்வளவுதானா?” என்றாள் கேலியாக.

“ப்ச்... விளையாடாதடா. எனக்கு மனசு பதறுது. உன்வரையில் நான் எப்பவும் பொறுமைசாலிதான். உனக்கு ஒரு பிரச்சனைன்னா... ப்ச்.. அதெல்லாம் எதுக்கு? வா கார்ல உட்கார்ந்து எங்க வலிக்குது சொல்லு. நான் அழுத்தி விடுறேன்” என்று காரின் பின்பக்கம் அமரவைத்து, அருகில் அமர்ந்து கதவைச் சாத்தியவன், மனைவியின் காலை சீட்டில் எடுத்து வைத்து அழுத்திவிட கைவைத்த நொடி, “ஏய்! என்ன பண்றீங்க? கையை எடுங்க முதல்ல. டச் பண்ணுற வேலையெல்லாம் வேண்டாம்” என்று அவன் கையைத் தட்டிவிட்டு, காலை கீழிறக்கி அவனை முறைத்தாள். என்னவோ என நினைத்தவளுக்கு கணவனின் அச்செயலில் மனதின் படபடப்பு அடங்கியபாடில்லை.

“பொண்டாட்டிக்குக் கால் வலிச்சா, அதைக் கண்டுக்காத புருஷன்தான்மா தப்பு.”

“எனக்கும் அது தெரியுது. ஆனாலும், நீங்க ஒரு ஆண். எனக்கு உங்க தொடுகை பிடிக்கலை” என்றாள் வெறுப்பாக.

மனைவியின் குரல் பேதத்தில் அவளின் நிலை புரிந்தவன், “மிஸஸ்.அன்பழகன் அமைதி அமைதி. நான் தொடக்கூடாது அவ்வளவுதான? சரி தொடலை. நீங்க டென்சனாகாதீங்க. கால் நீட்டி ஃப்ரீயா உட்காருங்க” என்று வெளியே வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை எடுக்க, அவன் சென்றதும் கிடைத்த விடுதலை உணர்வில் கண்மூடி அமர்ந்திருந்தாள்.

சில நிமிடங்கள் கடந்து கண் திறந்தவள், முன் இருக்கும் கண்ணாடியில் கணவன் முகம் காண, மிகவும் சோர்ந்து போய், ஏதோவொரு வலியை, ஏதோவொன்று என்ன, தன்னாலான வலியை மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறான் என்பது பார்த்ததுமே புரிந்தது. அவனின் கோலம் கண்டு ஏனென்று தெரியாதொரு அவஸ்தை அவளுள். கணவனைப் பற்றித் தெரிந்ததாலோ என்னவோ, மனம் தான் செய்தது சரியா? தவறா? என தவிக்க, பார்வை மட்டும் அவனிடமே!

தற்செயலாகக் கண்ணாடியைப் பார்த்தவன் கண்களில், தன்னையே விழியகற்றாது பார்த்திருந்த மனைவி பட்டாள். அந்நொடி சோகம் அனைத்தும் கலைந்து முகம் பிரகாசமாக, மந்தகாசப் புன்னகையொன்று அவனிதழில் குடியேற, ‘ஹை.. என் பொண்டாட்டி என்னைக் கவனிக்க ஆரம்பிச்சிட்டாளா’ என உள்ளம் உற்சாகக் கூச்சலிட்டது.

கணவனிலே பார்வை பதித்து ஆழ்ந்த யோசனையில் இருந்தவள், அவன் தன்னைப் பார்ப்பதைக் கவனியாதிருக்க, “என்ன மிஸஸ்.அறிவழகன்” என்றதில் அவள் கவனம் கலைய, அதன் பின்தான் கவனித்தாள், தான் அவனையே வெறித்திருப்பதை.

“அடடா! பார்க்காமலே பார்த்தேன்னு சீன் ஓட்டுவான். இப்ப...”

அதையேதான் அவனும் சொன்னான். “காலையிலயே நான் சொன்னேன்தான, நீங்கதான் என்னைப் பார்த்தீங்கன்னு. இப்ப அது உண்மையாகிருச்சா?” என்றான்

“ப்ச்... நான் பார்க்கலை” என்றாள்.

“பச்சைப் பொய்” என்றான் பட்டென்று.

“அப்ப சார் காலையில் சொன்னதுக்குப் பெயர் என்னவாம்? ஏதோ யோசனையில் எங்கோ பார்த்திருப்பேன். அந்த இடத்துல நீங்க தெரியுறீங்கன்றதே மைண்ட்ல விழலை. சும்மா கற்பனை செய்யக்கூடாது” என்று கடிந்தாள்.

“ஓஹ் நம்பிட்டேன் நானும். ஆனாலும், மிஸஸ்.அறிவழகன் அந்தப்பார்வை உள்ளக்குள்ள என்னென்னவோ பண்ணுது. இதுதான் காதலா?” என்றான் கற்பனையில் மிதந்தபடி.

‘காதல்’ என்றதில் கோவம் எழ, “காதலும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. காதல்னு ஆரம்பிச்சி கடைசியில் எங்க வந்து நிற்பீங்கன்னு தெரியாதா என்ன? கொஞ்சம் ஃப்ரீயா பேசிட்டா காதலா? நீங்களும் வேண்டாம். உங்க காதலும் வேண்டாம். முதல்ல ரோட்டைப் பார்த்து காரை ஓட்டுங்க” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
மனைவியின் கோவம் புரிய, தன் அவசர புத்தியை நொந்தவன் தன்னையே திட்டிக்கொண்டு, “சாரிங்க” என்றான்.

அவ்விடத்தில் மன்னிப்பு அவசியம் இல்லையென்று அவனுக்கும் புரியும். இருந்தும் அவளுக்காக அவள் மனதை அழுத்தும் ரணங்களுக்காகக் கேட்டான்.

பதிலேதும் இல்லா யோசனை மட்டுமே அவளுள். சில நொடிகளில் யதார்த்தத்திற்கு வந்துவிட்டாள்தான். இருந்தும் காதல் என்ற வார்த்தை மனதை அறுத்துக் கொண்டிருந்தது.

கண்மூடியிருந்தவள் செவிகளில், ‘காதலிச்சா பொண்ணுங்களை ஈஸியா மடக்கிரலாமாம். அந்தக் காதல் ஆட்டோமேடிக்கா பொண்ணை கட்டிலுக்குக் கொண்டு வந்திரும்னு, என் ஃப்ரெண்ட் சொன்னான். கல்யாணம் முடியும் இடைவெளியில் நீயும் என்னைக் காதலிச்சிருப்பல்ல. அந்தக் காதல்தான் உன்னைக் கட்டில்வரை இழுத்துட்டு வந்திருக்கு. அப்ப நானும் உன்னைக் காதலிக்குறேனா?’ என்று ரவிசங்கர் அவளைப் படுத்தியதை என்னவென்று, யாரிடம் சொல்ல முடியும்?

‘காதல்’ என்ற வார்த்தையை வெறுக்க இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும். கணவன் சாதாரணமாகச் சொன்ன வார்த்தைதான், எனினும், தான் அவனைக் காயப்படுத்தியும் தன்னிடம் மன்னிப்புக் கேட்பவனை என்னவென்று சொல்வது. ‘என்னை இப்படி வாழவிடாமல் பண்ணிட்டியேடா’ என்றவளுக்கு ரவிசங்கரைக் கொல்லுமளவு வெறி.

கணவனிடம் மன்னிப்பு கேட்க மனம் உந்தினாலும், ‘வேண்டாம் இந்த இடைவெளி இப்படியே இருக்கட்டும்’ என்று விட்டுவிட்டாள்.

வீடு வந்ததும் அவள் அறைக்குள் அடைய, ‘காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஏன் இவ்வளவு கோவம்? அதற்கு வேறெதுவும் காரணம் இருக்குமோ?’ என இப்பொழுது தோன்றியது அறிவழகனுக்கு.

மனைவியின் மனநிலையை ஓரளவு கணித்தவன், அதைக் கலைந்து, காதல் உணர்வைக் கொடுப்பானா?

நாள்கள் அதன் போக்கில் நகர, அரவிந்த் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான். சாரதா அவ்வப்பொழுது மகளைப் பார்க்க வந்து சென்றார். ஆறாவது மாதம் நடக்கையில், வளைகாப்பு ஏழாவது மாதமா? ஒன்பதாவது மாதமா? என்ற வாதம் வீட்டினுள் ஓட, ஒன்பதாம் மாதம்தான் என்று அபிராமி முடித்துவிட்டார்.

“அபிமா” என்று வந்த ஆனந்தன் தயங்கி நிற்க, “என்னண்ணே பொண்ணைக் கூட்டிட்டு வராம இங்க நிற்குறீங்க? நானும் வரவா?” என கேட்டார்.

“அது இல்லமா. நாம இருந்தவரை சரி. அனு மாசமா இருக்கிற பொண்ணு. இந்த நேரத்துல மதி இங்க வர்றது சரி வருமா? நான் வேணும்னா...”

“நான் வேணும்னா... இங்க கூட்டிட்டு வாண்ணே” என்று அழுத்தமாக இடையிட்டவர், “அனு அவளை நல்லா பார்த்துக்குவாளே தவிர, வெறுத்து ஒதுக்கமாட்டா.”

“நான் அதுக்குச் சொல்லலை அபிமா. மதி தன்னையும் அறியாமல் எதாவது செய்து, அதில் அனு பாதிக்கப்படக் கூடாதில்லையா? அதுக்குதான் அபிமா யோசிக்குறேன்” என்றார்.

“அண்ணி முக்கால்வாசி குணமாகிட்டாங்க மாமா. அவங்களைப் பற்றிய பயம் வேண்டாம். அனுகிட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொல்லலாம். தேவைப்பட்டா அத்தையையும் வரவச்சிக்கலாம்” என்று வந்தான் அறிவழகன்.

“மதி இங்க வந்ததும் எப்படி இருக்காள்னு பார்த்துட்டு முடிவு பண்ணிக்கலாம்ணே. அறிவா நீ வழக்கம்போல அங்க பார்த்துட்டுக் கிளம்பு” என விரட்டிக் கொண்டிருக்க, “எனக்கும் எதாவது வேலை கொடுங்க அத்தை. நீங்கள்லாம் கிளம்பினதும் போரடிக்குது” என்று மாமியாரின் அருகில் வந்தமர்ந்தாள் அனுரதி.

“கூடிய சீக்கிரமே நல்ல பொறுப்பான ஆளா பார்த்து, கம்பெனி பொறுப்பை ஒப்படைச்சிட்டு உன்னோடவே இருக்கிறேன். சரியா?”

“ம்...” என்று தலையசைக்கையில் வயிற்றினுள் ஒரு அதிர்வு. “அத்தை” என்று அவர் கைபிடிக்க, “அனுமா! என்னடா?” என்றதில் ஆண்கள் இருவரும் பதற்றத்துடன் அருகில் வர, “வயிற்றில் ஏதோ பண்ணுது அத்தை” என்று முடிக்கையில் திரும்பவும் வயிறு அதிர, “ஆ” என்றாள்.

மருமகளின் வயிற்றில் கைவைத்துப் பார்த்த அபிராமி முகத்தில் புன்னகை. “அனுமா குழந்தை அசையுது” என்றார் சந்தோசமாக.

“அசையுதுன்னா?”

“ஆக்டிவா இருக்கிறதா அர்த்தம். இல்ல நான் நல்லாயிருக்கேன். கைகால் எல்லாம் வளர்ந்திருச்சின்னு உன் பிள்ளை சொல்லுறதா வச்சிக்கலாம். இதெல்லாம் குட் ஃபீல் அனுமா. அந்த உணர்வை ஆத்மார்த்தமா உணர்ந்து பாரு, தாய் என்கிற வார்த்தைக்கான அர்த்தம் புரியும். அடுத்து நகம் முடியெல்லாம் வளரும். அப்ப வயிறு ஊறலெடுக்கும்” என்று கர்ப்பம் சம்பந்தப்பட்டதை சொன்னார்.

“ஓ... இதுல இவ்வளவு இருக்கா? அப்பக் குட்டி நீங்க துள்ளி விளையாடுங்க” என்றாள் வயிற்றைத் தொட்டுத்தடவி.

“இப்ப ஆரம்பம்தான். போகப்போக அதிகம் துள்ளுவாங்க” என்றார்.

அறிவழகனுக்குக் குழந்தையை உணர அவ்வளவு ஆசை. பக்கத்தில் போனால் அவளுக்குப் பிடிக்காதே என்று நின்றுவிட்டான்.

“அப்ப நான் கிளம்புறேன் அபிமா. இருட்டுறதுக்குள்ள சீக்கிரம் வரப்பார்க்கிறேன். வர்றேன் அனுமா” என்று கிளம்பத் தயாராக, “சாப்பிட்டுப் போண்ணே” என்ற தங்கையிடம், “சாந்தி கொடுத்துட்டாள்மா” என்று சென்றுவிட்டார்.

அபிராமியும் மதி இன்டஸ்ட்ரீஸ் செல்ல, அவளின் பார்வையோ மெல்ல கணவனிடம் செல்ல, மனைவியின் வயிற்றை ஏக்கமாகப் பார்த்திருந்தவன், அவள் பார்வை பட்டதும் பட்டென்று விலகிப்போக, அவனை நிறுத்த வாயெடுத்தவள் முடியாது போக, அப்படியே சோர்ந்து அமர்ந்துவிட்டாள்.

அவனுக்கோ அருகில் சென்று தன் ஆசையைச் சொன்னால், அண்ணன் குழந்தைதானே என்று விடுவாளோ என்ற பயம். அவளுக்கோ, தன் அண்ணன் குழந்தையைத் தொட்டுப் பார்க்க ஆசையென கேட்டுவிடக்கூடாது என்ற பயம். ஆக இருவரும் மனப்போராட்டத்தில் விலகியே நின்றனர்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top