- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
12
தன் கேள்விக்கு எந்த பதிலும் இல்லாது போக தன்னையே பார்த்திருந்த மாமியாரிடம், “என்ன பதிலையே காணோம்” என்று குரல் உயர்த்தினாள்.
“நீ என்னை பேசவிட்டால்தானே பதில் பேச. உங்கம்மா உனக்குக் கோவம்னா என்னன்னே தெரியாது சொன்னாங்க. என்கிட்ட மட்டும் ஏன் சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்குற?” என்றார் புன்னகையுடன்.
“சண்டைக்கோழியா? நானா?” என அதற்கும் அவள் எகிற,
“பார்த்தியா சொன்னா கோவப்படுற” என்றார் அமைதியாக.
“அட ஆமாம்ல. ஏன் இப்படி? அதுவும் சில முறை பார்த்த உங்ககிட்ட கோவப்படுறேன்” என தனக்கும் சேர்த்தே கேட்டுக்கொண்டாள்.
“அது ப்ரெக்னென்சி ஸ்ட்ரெஸ் அனுமா. அப்புறம் ஒருசில முறை பார்த்ததா மூணாவது மனுசங்களைச் சொல்லலாம். நான் உன் மாமியார். அதான் உரிமையா பேசுற.”
“ஹான்! தெரியும் தெரியும். ஞாபகம் இருக்கு” என்றவள் குரலில் நக்கலே இருந்தது.
“ஞாபகம் இருக்குறவரை சந்தோஷம்” என்றார் அவரும் கேலியாக.
மாமியார், மருமகள் இருவரையும் ‘ஆ’வென வேடிக்கை பார்த்திருந்தனர் ஆனந்தனும், அறிவழகனும். பேச்சு ஆரம்பித்த வேகம் என்ன, கடைசியில் கேலி கிண்டலில் முடித்ததென்ன.
“அவ்வ்வ்வா! மாமா! எனக்கென்னவோ நம்ம வீட்டுல மாமியார், மருமகள் காம்போதான் டாப் லெவல்ல இருக்கும்னு நினைக்குறேன். எங்க ஜோடிப்பொருத்தம் கொஞ்சம் லோ கண்டிஷன்தான். பாருங்களேன்” என்று கன்னத்தில் கைவைத்து அவர்களை ஆசையாய் பார்த்திருந்தான்.
“பார்த்துட்டுதான் மருமகனே இருக்கேன். என் பொண்ணு கூட உங்கம்மாகிட்ட இந்தளவு வாயாட மாட்டாள். ஒரு விலகல் இருக்கும். உன் மனைவி ஆரம்பமே அட்டகாசமா போறா” என்று சிரித்தார் ஆனந்தன்.
“இதுவும் நல்லாதான் மாமா இருக்கு. நம்ம வீடு எப்பவும் சண்டை சச்சரவா இருக்கப்போகுதோன்னு பயந்தேன். இப்பதான் ரிலாக்ஸாயிருக்கு” என்றான்.
“சரி சொல்லுங்க. என்ன சொல்ல வந்தீங்க?” போனால் போகிறதென்பதாய் மாமியாரிடம் மிதப்பாய் கேட்டாள் அனுரதி.
“தனியா படுக்க வேண்டாம் என்கூட வந்து படுன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள உன் கற்பனைக் குதிரை அப்படிப் பறக்குது. மாசமா இருக்கிற புள்ளையை அப்படி கஷ்டப்படுத்துவேனா நான். மாமியாரை வில்லியா பார்க்காம ஃப்ரண்டா பாரு. கடின வார்த்தைகளும் அன்பா, அக்கறையா தெரியும்” என்றார்.
தன் தவறு புரிய, ‘ஏன் கோவம் என்ற பெயரில் உறவுகளிடம் சிக்கலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும், மென்மையைக் கையாளலாமே’ என்று மனதில் உறுதியெடுக்க, அதை உடனே காட்ட விரும்பாது, “சரி சரி போதும். மானி கூட என்னை இப்படி டார்ச்சர் பண்ணமாட்டா. போய்ப் படுக்கலாம் வாங்க. விட்டா பேசிட்டே இருப்பீங்க போல” என்று எழ,
வாயில் கைவைத்த அபிராமி, “அம்மாடியோவ்! நானா பேசுறேன்? பேசுனதெல்லாம் நீ” என செல்லமாய்த் திட்டியவாறு தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
“அச்சச்சோ! வடைபோச்சே” என்று செல்லும் மாமியார் மருமகளைப் பார்த்து ஆனந்தன் உச்சுக்கொட்டினார்.
“இப்படி ஒருத்தன் இங்க இருக்கேன்றதை கணக்குல வச்சக்கலையே மாமா. நான் யாரோவா” என்று வருத்தப்பட,
“கோவம் வருதா மருமகனே” என்று அவனின் மனநிலை புரிய கேட்டார் ஆனந்தன்.
“இல்ல மாமா. கோவப்பட்டா நஷ்டம் எனக்குதான். அவளைப் பொறுத்தவரை நான் எப்பவும் அகிம்சாவாதிதான். பொறுமைக்கே டஃப் கொடுக்குறவன்” என்று புன்னகைக்க,
“அப்புறமென்ன நிம்மதியா போய் படுத்துத் தூங்கு” என்றார்.
“வேற வழி” என்று எழுந்தவன், “அண்ணியைப் பார்க்கப் போனீங்களா மாமா?” என கேட்டான்.
“கல்யாண அலைச்சல்ல நாலுநாளா போகலை. நாளைக்குப் போயிட்டு வரணும். அநேகமா சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புவாங்க நினைக்குறேன்.”
“நல்லது மாமா. மறக்காம ப்ரசருக்கு மாத்திரை போட்டுட்டு படுங்க” என்று அனுப்பி வைத்துத் தன்னறைக்கு வந்தவன், “ஹ்ம் கல்யாணமானாலும் பிரம்மச்சாரின்னு தெரிந்ததுதான். இருந்தாலும், இந்த ரூம்லயாவது நீ இருந்திருந்தா, நல்லா இருந்திருக்கும்னு நினைக்குதே இந்த மனது. ஐ மிஸ் யூ” என காற்றிடம் பறக்கும் முத்தத்தை இட,
கன்னத்தில் ஏதோ ஒட்டியது போல் தோன்ற வேகமாகக் கைவைத்துத் துடைத்துவிட்டாள் அனுரதி.
மாமியாரும் மருமகளும் ஒரே கட்டிலில் எந்தவித வாக்குவாதமும் செய்யாது உறங்கிவிட, தன் வீடு போல் மிக நிம்மதியான உறக்கம் பாவைக்கு.
அவளின் சிந்தனையில் கூட கணவன் இல்லாது போக, அவனின் அனைத்தும் அவளாகிப் போனாள்.
மறுநாள் மறுவீட்டுக்கு அழைக்க வந்த தாய், தம்பியை தானே வரவேற்று உபசரிக்க சாரதாவிற்கு அவ்வளவு ஆச்சர்யம். அதைவிட மகிழ்ச்சி என்பதே சரி. இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் மறுநாள் வரச்சொல்ல, “ஏன் அத்தை? இன்னைக்கே வந்தால் சாப்பாடு தரமாட்டீங்களா?” என கேட்டான்.
“இப்பவே வந்தால் கூட சந்தோஷமா அழைச்சிட்டுப் போவேன். ஆனா, திங்கள்கிழமைதான் திருப்பி அனுப்புவேன்” என்றார்.
“அப்புறமென்ன மிஸஸ்.அறிவழகன் கிளம்பலாமா? அம்மா நீங்களும் வாங்க. மாமா அண்ணியைப் பார்க்கப் போறதா சொன்னதால, இன்னொரு டைம் அவங்களைக் கூட்டிட்டுப் போகலாம்” என்றான்.
“இல்ல அறிவா. நீங்க போயிட்டு வாங்க. நான் ஆஃபீஸ் போகணும்” என்கையில், தாயின் சூழ்நிலை உணர்ந்ததால் வேறு வழியில்லாமல் சம்மதித்துக் கிளம்பி மறுவீடு செல்ல, அங்கு அனைத்தும் தடபுடல்தான்.
மறுவீட்டில் மருமகன் மட்டுமே பிரதானமாகிப் போக, உள்ளுக்குள் கடுப்பாகினாலும், ‘என்னவோ செய்யுங்க’ என்று வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள் அனுரதி.
பகலெல்லாம் பெரிதாகத் தெரியாமல் போக, இரவானதும்தான் அவள் மனம் துணுக்குற்றது. ஏனெனில் இருப்பது இரண்டு அறைகள். மாமியார் வீட்டில் பெரிதாகத் தெரியாதது இங்கே பூதாகரமாகத் தெரிந்தது. தாயிடம் சொல்லலாம் என்றால், இவள் நிலை புரிந்தாலும், ‘தாங்கள் தனித்தனியாக இருப்பதைப் பார்த்தால் அவர் வருத்தம் கூடுமல்லவா? தம்பியும் வேலைக்குச் சென்றுவிட்டால், தனியாக இருக்கும் தருணங்களில் தன்னைப் பற்றி யோசித்து உடம்பிற்கு எதுவும் ஆகிவிட்டால்?’ தன்னுடனேயே இருப்பதற்குக் கேட்டதற்கும், ‘மகனுக்குத் திருமணம் முடியும் வரை இங்குதான்’ என்றுவிட்டார் சாரதா. அவளறியாமல் அறிவழகன் கேட்டதற்கும் இதே பதில்தான் கொடுத்தார். தம்பி இருப்பதால் அவளாலும் அதற்குமேல் பேச முடியவில்லை.
மாமியாரிடம் கணவனுடன் ஒரே அறையில் இருக்கமாட்டேன் என்று அடித்துப் பேசியவளால், தாயிடம் பேச நா எழவில்லை. முகத்தில் அத்தனை குழப்பத்துடன் இருந்த மனைவியின் கலக்கத்தை மனம் உணர்த்தியதோ!
“என்ன மிஸஸ்.அறிவழகன் சோர்வா இருக்கீங்க? உடல் சோர்வா? இல்ல மனச் சோர்வா?”
“எதுவாயிருந்தா உங்களுக்கென்ன? கடுப்பைக் கிளப்பாம கொஞ்ச நேரம் அமைதியாயிருங்க” என்று முகத்தைக் காட்ட,
அதையெல்லாம் பொருட்படுத்தாது, “உடல் சோர்வுன்னா டாக்டர்கிட்டப் போகலாம். மனச் சோர்வுன்னு சொன்னா, முடிந்தளவு நான் தீர்த்து வைக்குறேன்” என்றான்.
“உங்களை... ப்ச்... போங்க. போய் வேற வேலையிருந்தா பாருங்க. உடல் சோர்வு, மனச் சோர்வுன்னுட்டு” என்று முனகினாள்.
இரவு உணவு உண்ணுகையில், “அத்தை அர்ஜென்டா வெளிய ஒரு வேலையிருக்கு. நைட் வர லேட்டாகிரும் போல. நீங்க அனுரதி கூட படுத்துக்கோங்க. அவள் தனியா இருக்க வேண்டாம். அரவிந்த் நீயும் பார்த்துக்கோ” என்றான் மச்சினனையும் விடாது.
“கண்டிப்பா போயே ஆகணுமா மருமகனே?” என்று சாரதா கேட்க, நொடி நேரத்தில் மனைவியைப் பார்த்து விலகிய விழிகள் சிறு புன்னகையுடன், “கம்பெனியில் எதோ பிரச்சனை போல அத்தை. நான் போனால்தான் சரியாயிருக்கும். பிரச்சனை பெருசானா போலீஸ் அது இதுன்னு அலையணும்” என்றான்.
“அப்படியென்ன பிரச்சனை? அப்படியென்றாலும் கம்பெனி ஓனர் போல் பில்டப் கொடுக்கிறான்” என்று சிறு குரலில் கிண்டலாக கணவனைப் பார்க்க, பளிச்சென்று அவளைக் கண்டு சிரித்தவன், அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாள், அவளுக்குத் தன்னுடையதுதான் அந்தக் கம்பெனி என தெரியும் என்றே நினைத்தான். அதனாலயே அவளுக்குப் பதில் சொல்லும் விதம், “மேனேஜரும் மேனேஜ் பண்ணலாம்” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினான்.
“ம்க்கும்...” என்றவள் தம்பியின் ஆர்வப்பார்வை கண்டு பற்களை ஈயென காட்டி, “மேனேஜருக்கு அதைவிடப் பெரிய வேலை என்ன இருக்கு மேனேஜர் சார். லட்சக்கணக்குல வாங்குற சம்பளத்துக்கு வேலையும் செய்யணும்ல” என்றாள்.
“மிஸஸ்.அறிவழகன் அறிவாதான் பேசுறீங்க. உங்க மனச்சோர்வுக்கு என்னால் முடிஞ்சது” என்கையில் அவள் புரியாது பார்க்க, “ஐ மீன் உங்க மனசைச் சோர்வா வைக்காம, அதுல என்னை மட்டும் நினைங்க சொல்றேன்” என்று சிரித்தான்.
அவ்வார்த்தைதனில் கோவம் எழ, “என்ன?” என்று அதட்டலிட்டாள்.
வேகமாக மாமியார் மச்சினனைப் பார்த்தவன் அங்கே அவர்கள் இல்லையென்றதும், “அடிக்கடி எமோஷனல் ஆகாதீங்க மிஸஸ்.அறிவழகன். குழந்தை என்னை மாதிரி சாந்தமா இல்லாம, உங்களை மாதிரி டென்சன் பார்ட்டியா வந்திரப்போகுது. இரண்டு பேரையும் வச்சிட்டு நான் எப்படி சமாளிக்கிறது?” என்றான் அப்பாவியாய்.
“உன்னை எவன் சமாளிக்கச் சொன்னது? எங்களை நாங்க பார்த்துப்போம். நீ போயா” என்று உணவில் கவனத்தைத் திருப்பிவிட்டாள். பதிலுக்குப் பதில் பேசுவதால் சில நேரம் நன்மையும் விளையுமோ!
“போயா! சிறப்பு” என்று சொன்னவன் மனதில் முட்டி நின்ற இறுக்கங்களில் சில விடுபட சற்றே ஆசுவாசம் அவனுள். அதில் புன்னகை இன்னும் விரிய அவள் மீதான ரசனையும் அதிகரித்ததோ!