• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
69
கதைப்போமா 16

“சார் இப்படி போனையும் வாங்கி வச்சுட்டா எப்படி சார்??. கொஞ்சம் பேமிலி கிட்ட பேச விடுங்க. என் பக்கத்து நியாயத்தையும் சொல்ல விடுங்க” என்று அபிமன்யு கத்தி கொண்டு இருக்க. யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அவன் கேட்டுக்கொண்டே இருந்தான்.

“இங்க பாருங்க உங்கள கம்பிக்குப் பின்னாடி உட்கார வைக்காம, சேர்ல உட்கார வச்சிருக்கோம்னு சந்தோஷப்படுங்க. இப்ப எல்லாம் இந்த மாதிரி கேஸ் நிறைய வருது. ஸ்டூடன்ட் ப்ரொபசர் கேஸ். டீச்சர் ஸ்டூடண்ட் கேஸ். இல்லனா காலேஜ் படிக்கிற பசங்கள மிஸ் யூஸ் பண்றது. உங்க காலேஜ் மேனேஜ்மென்ட் கேட்டுக்கொண்டதுனால தான் உங்கள இங்கே உட்கார வச்சிருக்கோம். இல்லனா, அங்க உட்கார வச்சிருப்போம்” என்று கம்பிகளுக்குப் பின்னால் காட்டினார்.

“சார் என் மேல தப்பு இல்லன்னு ப்ரூஃப் பண்றதுக்கு எனக்குச் சான்ஸ் வேணும் இல்லையா??. நான் எந்தத் தப்பும் பண்ணல. இப்படியே என்ன உக்கார வச்சுட்டு இருந்தா?? என்னால எப்படி என்னை ப்ரூப் பண்ண முடியும்?” என்று கேட்டான் அபிமன்யு.

“இங்க பாருங்க உங்கள நீங்க ப்ரூப் பண்றதெல்லாம் கோர்ட்ல தான் பண்ணனும். இங்க இல்ல. புரியுதா?” என்றார் தலைமை காவலாளி.

அப்பொழுது காவல் நிலையத்திற்கு வெளியே சிறு சலசலப்பு கேட்க. அபிமன்யுவின் குடும்பம், ஆராதியாவின் குடும்பமும் ஒன்று போல வந்திருந்தனர். குழலி வரவில்லை. ஆனால் மனதிற்குள் ஏதோ ஒரு சந்தோஷம் அவளுக்கு.

“இங்க பாருங்க யாராவது ஒருத்தர் தான் உள்ள போகணும். இது ஒன்னும் கல்யாண மேடையில்ல, மொத்தமா கும்பலா உள்ள போறதுக்கு” என்று வெளியில் நின்ற காவலாளி கத்தி கொண்டு இருக்க. செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தார்கள்.

“சார், நான் அவனோட அம்மா. நான் போய்ப் பார்க்கிறேன்” என்று அம்பிகாவின் குரல் அபிமன்யுவிற்கும் கேட்டது.

அந்தக் காவலாளியின் பார்வையோ ஆராத்யாவின் மீது வந்து நின்றது. அவள் கழுத்தில் இன்னும் புது மஞ்சள் தாலிக் கயிறு கூடக் காய்ந்திருக்கவில்லை என்பது பார்த்தாலே தெரிந்தது.

திருமணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகலன்னு சொன்னாங்களே, இந்தப் பெண் தான் போல என்று நினைத்தவருக்கு அதே வயதில் ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறாள். இந்த நிலை எந்தப் பெண்ணிற்கும் வரக் கூடாது என்று நினைத்தார்.

“நீ யாரு மா?? அவரோட பொண்டாட்டியா??” என்று கேட்டார்.

அவள் ஆமாம் என்று தலையாட்டினாள்.

“சரி நீ உள்ள போய்ப் பாத்துட்டு வா” என்றார்.

“ஏன் சார் நான் கேட்டுகிட்டு இருக்கேன். அவளையுள்ள அனுப்புறிங்க?” என்று அம்பிகா அங்கேயும் தன் உரிமைக் கொடியை நாட்டவிளைய.

“அம்மாவை விடப் பொண்டாட்டிக்கு தான் உரிமை இருக்கு. பாவம் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள புருஷன் இந்த மாதிரி கேஸ்ல. நல்லவேளை அந்தப் பொண்ணு சாகல. செத்துருந்தா கொலை கேஸ்ல உள்ள போயிருப்பாரு. பதினெட்டு வயசுக்கு கீழே இருக்கிற பொண்ணா இருந்தா ஃபோக்ஸோ சட்டத்துல உள்ள போயிருப்பாரு. அப்ப ஒண்ணுமே பண்ண முடியாது. இருபது வருஷம் கம்பி எண்ண வேண்டியது தான். என்ன ப்ரூப் பண்ணாலும் வேலைக்காகாது. அமைதியா இருக்கறதா இருந்தா ஒருத்தரையாவது உள்ள விடுறேன். இல்லன்னா யாரையும் விடமாட்டேன்” என்ற ரீதியில் அவர் பேசிக் கொண்டிருக்க.

“சார் அவளுக்கு வாய் பேச வராது. உள்ள போய் என்ன பண்ணுவா?” என்று அம்பிகா அப்பொழுதும் விடாது பேசிக்கொண்டிருந்தார்.

“வாய் பேச முடியாதா?’ என்று நினைத்தபடி ஆராதியாவை மேலிருந்து கீழாகப் பார்த்தவருக்கு பாவமாகப் போய்விட்டது.

“வாய் பேச முடியாத பொண்ணு தான் கேள்வி கேட்காதுன்னு இந்தப் புள்ளைய கல்யாணம் பண்ணிட்டு வீட்ல வச்சுக்கிட்டு, ப்ரொபசர் காலேஜ்ல பொண்ணு கூட ஜல்சால இருக்காரு போல’ என்று கூறினார். ஆராத்யாவிற்கு ஐயோ என்று இருந்தது. தன்னிலை இன்னும் அவரைக் குற்றவாளியாக்குகிறதா??.

“என்னுடைய பையன் ஒன்னும் அப்படிப்பட்டவன் கிடையாது. உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க” என்றார் செந்தாமரை.

அதற்குள் அவருடைய வக்கிலும் அங்கு முன் ஜாமீன் வாங்கி கொண்டு வந்துவிட. எல்லோருமே ஒன்றாகக் காவல் நிலையத்திற்குள் சென்றனர்.

அவர்களைப் பார்த்ததும் அபிமன்யு எழுந்து நின்றான். அவன் பார்வை தேங்கி நின்றது ஆராதியாவிடம். இவள் தன்னைத் தவறாக நினைத்து விடுவாளா?? திருமணமாகி ஆறு நாட்கள் மட்டுமே முடிந்த நிலையில். இப்படியொரு நிலையில் எந்தப் பெண்ணாக இருந்தாலும் தவறாகத் தானே நினைக்கத் தோன்றும்??. ஆனால் இவள் நினைத்து விட்டால் தன் வாழ்க்கையே சூனியம் ஆகிவிடுமே. அவன் பார்வையாலேயே தான் தவறு செய்யவில்லை என்று அவளிடம் இறைஞ்சிக் கொண்டிருக்க. அவள் இமைக்காமல் அவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் பார்வையில் என்ன இருந்தது என்று குழப்பமான அபிமன்யுவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“சார் என் பையன் ஒன்னும் அப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டான்” என்று அம்பிகா அவர் வீட்டில் பேசுவது போலச் சத்தமாகவே பேசினார்

“இங்க பாருங்கம்மா கேஸ் வந்திருக்கு. அந்தப் பொண்ணு உயிருக்கு ஆபத்து இல்லன்னு ஹாஸ்பிடல்ல சொல்லிட்டாங்க தான். ஆனா அவங்க அப்பா அம்மா கேஸ் கொடுத்து இருக்காங்க. நாங்க இன்னும் உங்க பையன ரிமான்டுல வைக்கல. அவங்க வந்தா பேசிச் சுமுகமா முடிச்சுக்கறதா இருந்தா எங்களுக்குப் பிரச்சனை இல்லை. இல்லனா கோர்ட்டு கேஸ் அது இதுன்னு போகும்” என்றார்.

அதற்குள் வக்கில் தன் கையில் இருந்த முன்ஜாமினை அவர்களிடம் நீட்ட.

அவரை அமர வைத்தவர்கள்.

“முன்னேற்பாடாக வந்து இருக்கீங்களா?, ஆனா முன் ஜாமினுக்கெல்லாம் அவசரம் இல்ல. அந்தப் பொண்ணோட அப்பா அம்மா வந்துட்டு இருக்காங்க. அவங்க கிட்ட பேசிப் பாருங்க. சரி ஆச்சுன்னா இங்கேயே காம்ப்ரமைஸ் பண்ணி முடிச்சு விட்டுடுறோம். இல்லனா. போலீஸ் கேஸ், ஜெயில், பத்திரிக்கை நியூஸ் பேப்பர், டிவி சேனல்னு நாரடிச்சிடுவானுங்க” என்றார்.

முதலில் அபிமன்யு சாதாரணமாக ப்ரொபசர் என்ற ரீதியில் அவர்கள் அரெஸ்ட் செய்திருக்க. அவனின் பின்புலமும் சற்று வசதி வாய்ப்பு படைத்தது தான் என்று தெரிந்ததும். சமரசம் செய்ய நினைத்தனர். அது மட்டுமில்லாமல் புதிதாகத் திருமணமானவர் தவறு இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் பெரிது படுத்த வேண்டாம். பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருந்திருந்தால், நிலமையே வேறாகத் தான் இருந்திருக்கும். ஆனால் அபிமன்யுவை அரஸ்ட் செய்து. அங்கே கொண்டு வரும்போது மருத்துவமனையில் இருந்தவளின் உயிருக்கு ஆபத்து இல்லை என்ற ரீதியில் அவர்களுக்குத் தகவல் வந்துவிட. அவர்களும் கேசை பைல் செய்யாமல் சமரசம் செய்து அனுப்புவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

அவன் பார்வை மனைவிக்குப் பிறகு, மகனைத் தேடியது. நல்ல வேளை அவனைக் காணவில்லை. எந்தத் தந்தை தான் மகனின் முன்னால் காவல் நிலையத்தில் இருப்பதை விரும்புவார்??. தன் ஒரே மகன் தன்னை இந்த நிலையில் பார்த்தால் தாங்கமாட்டான் என்று தோன்றியது. ஏற்கனவே தாயை இழந்த பிள்ளை. அவனுக்கு இப்படியொரு நிலைமை தேவைதானா??’ என்று அபிமன்யுவின் மனம் அரற்ற ஆரம்பித்தது. ஆனால் அப்படி எங்கே விட்டு விட்டு வந்திருக்கிறார்கள்?? என்ற பரிதவிப்பும் கூடவே இருந்தது.

அவனை வீட்டிலேயே வேலை செய்பவர்களைப் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டுவிட்டு தான் வந்திருந்தார்கள்.

அவனுடைய வக்கீல் அபிமன்யுவிடும் வந்து என்ன நடந்தது என்று கேட்க. அவன், அவனுக்கும் சந்திரிகா என்ற அந்தப் பெண்ணிற்கும் இதுவரை என்ன நடந்தது என்று ரத்தின சுருக்கமாகச் சொல்லி முடித்தவன். திருமணம் நடந்த பிறகு அன்று வழியில் மரித்துப் பேசியதும் அதற்குப் பின்னால் அவளைப் பார்க்கவே இல்லை என்றும் கூறினான்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
69
"சார் டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கிறது தான். நானும் நிறைய கேஸ் இந்த மாதிரி பார்த்து இருக்கேன். ஒன்னு டிபன்ஸ் இல்லனா காம்ப்ரமைஸ் பண்ணலாம். ஆனா நீங்க என்கிட்டயாவது உண்மைய சொன்னா தான் நல்லா இருக்கும்” என்று அந்த வக்கீல் கேட்க.

அவனுக்குக் கோவம் தான் வந்தது. “சார் ஆம்பளைங்கனா அப்படி இப்படித்தான் இருப்பாங்கன்னு நீங்களே சொல்லாதீங்க. நான் அப்படிப்பட்டவன் இல்லை. என் மனைவிக்கு உண்மையா இருந்தேன். இப்பையும் நான் கட்டிணவளுக்கு உண்மையா தான் இருக்கிறேன். என்னோட ஸ்டூடன்ட் எனக்கு ஸ்டூடன்ட் மட்டும் தான். அந்த நிலையில பார்த்ததினால தான் மேனேஜ்மென்ட்ல கம்ப்ளைன்ட் பண்ணதோட நிறுத்திக்கிட்டேன். இல்லன்னா அவளுக்கு முன்னாடி நான் அவள் மேல போலீஸ் கேஸ் கொடுத்து இருக்கலாம். பாவம்னு பார்த்து விட்டதுதான் இப்ப தப்பா போச்சு. ஏதோ வயசு கோளாறு உளறுறாள்னு நினைச்சா?? இப்படி அவமானப்படுத்திட்டாள்??. அதுவும் தப்பே செய்யாமல் தப்பு செஞ்சவனா சித்தரிச்சிட்டாள். அவள் இந்த அளவுக்குக் கீழ்த்தரமா போவான்னு தெரிஞ்சிருந்தா நான் முந்திக்கிட்டு இருந்திருப்பேன். இங்க பாவம் பாக்குறவங்க தலையில தான் மிளகா அரைக்கிறாங்க, ச்சே” என்று சலித்துக் கொண்டான்.

அவன் சந்திரிகாவிற்காகப் பாவம் பார்க்க. அவளோ அசிங்கப்படுத்துவதற்காகவே போலீஸில் மாட்டி விட்டுவிட்டு இருக்கிறாள். நினைக்க நினைக்க மனம் வெதும்பியது.

“முதல்ல அந்தப் பொண்ணு எப்படி சூசைட் பண்ணா?? எந்த நிலைமையில் இருக்கா?? ஹாஸ்பிடல்ல எங்க இருக்காள்? சீரியஸா இருக்காளா இல்ல சாதாரணமா இருக்காளா? என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிங்க எனக்கென்னமோ இதுல நம்பிக்கை இல்ல” என்றான் அபிமன்யு.

அந்த நான்கு வருட அனுபவம். இதுவும் அவளுடைய நடிப்பாகத் தான் இருக்கும் என்று இப்பொழுது அவனுக்குத் தோன்றியது. இதுவரை குழப்பத்தில் இருந்தவன் சற்று தெளிவு பெற்று இருந்தான். அதனால் சிந்திக்கும் திறனும் மீண்டு இருந்தது.

அதற்குள் சந்திரிகாவின் தாயும் தந்தையும் அங்கு வந்தனர்.

மீண்டும் காவல் நிலையம் சலசலப்பானது. சரஸ்வதி தன் பாட்டிற்கு பிதற்றிக் கொண்டிருக்க. சந்திரிகாவின் தாய் தந்தையும் அவர்களிடம் வாதம் புரிய. காவலாளிகள் சமரசம் செய்து இருவரையும் பிரித்து அமர வைத்தனர்.

இன்னுமே அபிமன்யு சற்று ஓரமாகக் காவல் நிலையத்திற்கு உள்ளாகத் தான் அமர்த்தி வைக்கப்பட்டு இருந்தான். அவன் இருக்கும் இடத்திலிருந்து அவர்களைப் பார்க்க முடிந்தது. அவர்களாலும் அவனைப் பார்க்க முடிந்தது. ஆனால் சென்று பேசுவதற்கு எல்லோருக்குமே தடை இருந்தது.

இதுவரை அவன் படித்திருந்த சைன் லாங்குவேஜில். “நான் தப்பு பண்ணல” அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்து. அவளுக்குச் சமிஞ்சை செய்து காட்டினான்.

“நான் உங்கள நம்புறேன்” என்று அவனையும் தன்னையும் சுட்டிக்காட்டி பிறகு கைகள் இரண்டையும் கோர்த்து தன் நெஞ்சில் இடப்பக்கமாக வைத்துக் கண்களை மூடித் திறந்தாள் ஆராதியா.

இதுவரை அவளுடைய பார்வையின் அர்த்தம் புரியாமல் இருந்தவனுக்கு இப்பொழுது அவளுடைய சமிஞ்சைக் மொழி புரிய. அதன் பிறகு தான் அவளுடைய பார்வையின் அர்த்தமும் புரிந்தது. அவன் மனதில் அப்படியொரு நிம்மதி பரவியது. பெற்றவர்கள் இத்தனை வருடம் வளர்த்தவர்கள். தன்னோடு பழகியவர்கள் தன்னை நம்புவது பெரிய விஷயம் இல்லை ஏனென்றால் அவர்கள் எல்லோருக்குமே அவனுடைய குணம் ஓரளவிற்கு தெரியும். ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்து. ஆறு நாட்களுக்கு முன்னால் மட்டுமே திருமணமான நிலையில் அவள் தன்னை நம்புவது அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது அவனுக்கு. எதையோ வென்றுவிட்ட நிம்மதி அவன் மனதிற்குள் பரவியது. இனி தன்னால் எதையும் எதிர்த்துப் போராட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

எவ்வளவு பேசியும், கொடுத்த கேசை வாபஸ் வாங்குவதாக இல்லை சந்திரிகாவின் பெற்றோர்கள்.

இந்த வழக்கு பதிந்தே ஆக வேண்டும். தன் பெண்ணிற்கு நடந்தது போல, இனி எந்தப் பெண்ணிற்கும் இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது” என்று சப்பை கட்டுக் கட்டி பேசினார்.

பாவம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை அவர்கள் பெண்ணிடம் தான் தவறு இருக்கிறது என்று. அதைத் தெரிந்து கொள்ளும் நாள் வருமா??, அல்லது வராமலே போய்விடுமா??.

காலம் முழுக்க அபிமன்யு ஜெயலிலேயே கடக்க வேண்டி இருக்குமா?. அப்படி அவன் தண்டனையை அனுபவித்து விட்டு வெளியில் வந்தாலும் இந்தச் சமூகம் அவனைப் பார்க்கும் பார்வை என்னவாக இருக்கும்?? அதுவரையிலும் இந்தச் சமூகம் அவர்கள் குடும்பத்தைப் பார்க்கும் பார்வை என்னவாக இருக்கும்??? எல்லாவற்றையும் எண்ணிக் கொண்டு ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்தான் அபிமன்யு.

மகனை விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை பெற்றவர்களுக்கு. அதே நிலைதான் ஆராதியாவிற்கும். ஆனால் காவல் நிலையத்திற்கு வெளியே பெண்களை வைத்துக் கொண்டு எப்படி இருப்பது??

கவிச்சந்திரனும் செந்தாமரையும் அங்கே இருப்பதாகக் கூறி விட. பெண்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க நினைத்தனர். இரவில், பெண்கள் காவல் நிலையத்திற்கு வெளியே இருப்பது மற்ற யாருக்கும் உச்சிதமாகப் படவில்லை.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top