• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 23, 2024
Messages
67
கதைப்போமா 13


ஏனோ முதல் நாள் போலச் சரஸ்வதி அவளை வறுத்தெடுக்கவில்லை. மகனே வந்து சொல்லிவிட்டு சென்றதாலோ என்னவோ??. அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவர்களைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டனர். அதன் பிறகு அவன் அமைதியாகச் சொல்லிவிட்டு மனைவியையும் விட்டுவிட்டு சென்று விட்டான். ரிதன்யாவும் அங்கே இருக்க. பார்வையாளேயே பார்த்துக் கொள்ள சொல்லியும் கூறினான்.

மகளும் இருப்பதால் அமைதியாக இருந்தாரோ, அல்லது அன்று வேலைகள் அதிகமாக இருந்ததோ?? அவரும் அமைதியாக வேலை செய்து கொண்டிருக்க. ரிதன்யாவுடன் நின்று கொண்டு இவளும் ஒத்தாசை செய்துகொண்டிருந்தாள். அன்றும் நிறைய பேர் இருப்பதால், அவர்களுக்குக் கஷ்டம் இருக்கக் கூடாது என்று அன்றைய உணவையும் அவன் வெளியிலேயே சொல்லிவிட்டான். ஆனாலும் அத்தனை பேருக்கும் அதைப் பிரிப்பது, எடுப்பது, பரிமாறுவது என்று வேலை பளு அதிகமாகவே இருந்தது. புதுமணப்பெண்ணும்

அவர்களுக்கு ஒத்தாசை செய்ய, மற்றவர்களுக்கும் அதில் திருப்திதான். முதல் நாள் அவளை வறுத்தெடுத்தவர்கள் கூட. இப்பொழுது பரவாயில்லையே என்ற ரீதியில் பார்வைகளை பரிமாறிக் கொண்டனர்.

அம்பிகா அவளிடம் அவ்வளவாகப் பேசவில்லை. எதுவென்றாலும் ரிதன்யாவிடம் கூறி அவளையும் வேலை வாங்க பெரிதாக அன்று எந்தக் கலவரமும் நடக்கவில்லை. செந்தாமரையும் தன் பங்கிற்கு இரவில் தனிமையில் அம்பிகாவுக்கு அறிவுரை கூறினார்.

அன்றும் ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டு ஊருக்குக் கிளம்ப. வீடும் பரபரப்பாகவே இருந்தது.

அன்று மதிய உணவிற்கே கவிச்சந்திரன் தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து இருக்க. அன்று சில முக்கியமான உறவினர்கள் வீட்டிற்கு கிளம்புவதால் இரவு விருந்திற்கு வருவதாக அபிமன்யு கூறிவிட்டான். அதைத் தாய் தந்தையிடம் கூறிவிட்டு மாலை மனைவி மகனை அழைத்துக்கொண்டு கவிச்சந்திரன் வீட்டிற்கும் சென்றான்.

மூவருமே வாயார வரவேற்றனர். அவர்கள் வீட்டைப் பார்த்து விட்டு வந்தபிறகு குழலிக்கூட வாயெல்லாம் பல்லாகத் தான் வரவேற்றாள் எனலாம்.

அதுவரை தன் சொந்த வீடாக இருந்தது இப்பொழுது அந்நிய வீடாக மாறி இருந்தது. ஒவ்வொரு பெண்ணின் நிலையம் இதுதான் என்றாலும். அவளுக்கு அவள் சொந்த வீடே அந்நியமாக மாறி வருடங்கள் ஆகிவிட்டது. பெண்களைப் பொறுத்தவரை எந்த வீடுமே அவர்களுக்குச் சொந்த வீடு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஒன்று தாய் வீடு. மற்றொன்று கணவன் வீடு அல்லது மாமியார் வீடு என்போம். நமது, எனது, என்ற பேச்சுக்கே அவர்களுக்கு இடம் இல்லாமல் தான் போய்விட்டது. கண்டிப்பாக அதை மாற்றி அமைக்கத் தான் வேண்டும். அவளால் மாற்றி அமைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு பெற்றோர்களும் நினைத்தால் அதை மாற்றி அமைக்க முடியும்.

விருந்தோம்பல் மட்டும் இல்லை விருந்தும் நன்றாகவே இருந்தது. தாயின் கைவண்ணம் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. அவனும் சாப்பிட்டுவிட்டு மனமார வாய்விட்டுப் பாராட்டினான் “அத்தை ஒவ்வொரு டிஷ்ஷும் செம சூப்பர். எங்க அம்மாவோட கைப்பக்குவம் வேற, ஆனா உங்களுடையது வேற லெவல். உங்க பொண்ணோடையதும் உங்க கைப்பக்குவத்துல இருக்குமா?“ என்று கேட்டுக் கொண்டே, தன் மனைவியை ஓரப்பார்வை பார்த்தான்.

அந்த வார்த்தையில் அவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆராத்யா. அவன் தாயையும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறான் என்று தோன்றியது.

“என்ன மாமா இன்னும் தங்கச்சி உங்களுக்குச் செஞ்சு கொடுக்கலையா??. எங்க அம்மாவோட கைப்பக்குவம் ஒரு டேஸ்ட்டுனா என் தங்கச்சியோட கைப்பக்குவம் வேற லெவலா இருக்கும். அதுக்கு நீங்க அடிமை சாசனமே எழுதிக் கொடுக்கலாம். நானெல்லாம் எப்பயோ எழுதிக் கொடுத்துட்டேன்” என்று கவிச்சந்திரன் தங்கையை விட்டுக் கொடுக்காமல் பேச. குழலியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“பரவால்ல கவி உனக்குச் செய்யறதுக்கு மூணு பேர் இருக்காங்க. எனக்கு ஒருத்தர் தான் இருந்தாங்க. இப்ப ரெண்டு பேர் வந்துட்டாங்க. உன் தங்கச்சி நல்லா செய்வான்றது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவள் கை டேஸ்ட் பார்க்கக் காத்துகிட்டு இருக்கேன்” என்று வாய் தவறி கூறிவிட்டு. கண்ணை மூடி நாக்கை கடித்துக் கொண்டான்.

அனைவரும் திகைத்து விழிக்க. “அவள் கையால டேஸ்ட் பாக்குறதுக்கு காத்துகிட்டு இருக்கேன்” என்று அதை திருத்திக் கூறினான்.

ஆராத்யாவின் முகத்தில் வெட்கம் படர்ந்தது. தாயும் தமையனும் மனதிருப்தியோட அதைப் பார்க்க. ஒருத்தி மட்டும் மனதில் குமைந்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.

தன்னைவிட அழகாக இருக்கும் ஆராத்யாவின் மீது குழலிக்கு எப்போதுமே பொறாமை தான். திருமணத்திற்கு முன்னால் அது பெரிதாகத் தெரியவில்லை திருமணம் ஆகி வந்தபிறகு. அது பூதாகரமாகத் தெரிந்தது. எல்லா பெண்களைப் போலத் தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தன்னுடைய கணவன் என்று அவளும் நினைத்தாள். ஆனால் தாயும் தங்கையும் கூட அவனை நம்பி தானே இருக்கிறார்கள் என்பதை மறந்து போனாள். அவள் குடும்பம் என்பது அவள் கணவன் குழந்தையோடு முடிந்துவிட்டது. இவர்கள் இருவரும் எக்ஸ்ட்ரா பிட்னஸ் என்று அவள் நினைத்து விட்டாள். அதனால் அவள் மனதில் மட்டுமல்லாமல் வார்த்தைகளிலும் வெறுப்பை உமிழ தொடங்கி இருந்தாள்.

தன் கணவனைவிட அவள் கணவன் அழகாக இருப்பதும். தங்களை விட அவர்கள் வசதியில் உயர்ந்திருப்பதும். ஏற்கனவே அவள் வயிற்றில் அமிலத்தை ஊற்றிக் கொண்டிருக்க. இப்பொழுது என்னவென்றால் அவள் கணவனை விடவும் ஆராத்யாவின் கணவன் மற்றவரின் முன்பு மனைவியை மனமார பாராட்டுவது இல்லாமல், ரொமான்டிக்காகவே பேசித் தொலைகிறான். வெட்கம் இல்லாமல் இவர்கள் இருவரும் அதை நினைத்து ரசித்துச் சிரிக்கிறார்கள். ஏற்கனவே இருந்த பொறாமை உணர்வு இப்பொழுது மலை அளவு பெருகி விஸ்வரூபம் எடுத்து நின்றது.

ஆராதியாவின் பார்வையோ மகனின் புறமும் தமையனின் மகளின் புறமும் சென்றது. தன்னிடம் வராத தமையனின் மகள். தன் மகனிடம் பேசுவதும் பழகுவதும் சிரிப்பதும் அவளுக்கு மனதளவில் சந்தோஷத்தைக் கொடுத்து இருந்தது. தன் வீட்டில் அவளுக்குக் கவுரவமான வரவேற்பு. இது எல்லாம் சாத்தியமானது இவனால் தான் என்று இப்பொழுது கணவனின் புறமும் பார்வை சென்றது.

அவன் மற்றவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தாலும், பார்வை என்னமோ மனைவியின் புறம் அவ்வப்போது தொட்டு விட்டு மீல.

அவளுடைய இப்போதைய பார்வையை உணர்ந்து புருவங்களை ஏற்றி இறக்கி என்ன என்று கேட்டான். அவள் முகம் மலர்ந்த புன்னகையுடன் ஒன்றும் இல்லை என்று தலையாட்டினாள். அவளும் மகனைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

குழந்தைகள் தானே அவர்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. சின்னக் குழந்தைகள் தன் போல இருக்கும் இன்னொரு குழந்தை என்ற ரீதியில் தான் பழகத் தொடங்கி இருக்கிறது. ஆனால் உறவுமுறை என்று வரும்போது இருவருக்கும் முறை வருமே என்று அவன் மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டிருக்க. மற்றவர்களுக்கு அந்தச் சிந்தனை எல்லாம் இல்லை.

இரவு உணவை முடித்துக் கொண்டு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு தாமதம் தான் ஆனது. ஆனால் தாமதம் ஆவதை தாயிடம் அலைபேசி மூலமாகக் கூறிவிட்டான். இல்லையென்றால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பார் அவர்.

காரில் வரும்போது அவள் கையையும் வாயையும் அசைத்து எதையோ கூற வர. அது அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.

தான் புரியவில்லை என்று சொன்னால். அவள் மனது வருத்தப்படுமோ என்று சிந்தித்தவன். அவளை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முக பாவனை பார்த்து உணர்ந்து கொண்டவள். அவள் தலையில் தட்டிக் கொண்டு டைப் செய்து அவன் முன்னால் காட்டினாள்.

“என் வீட்டுக்கு நான் வர்றது அந்நியமா இருந்தாலும். உங்க கூட வர்றது கௌரவமா இருக்கு. ஒவ்வொரு பெண்ணும் சிறந்த கணவன் கிடைக்கணும்னு நினைப்பாங்க. எனக்குக் கிடைச்சிருக்கு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று அவள் டைப் செய்திருக்க. அதை படித்துவிட்டு அவளைப் பார்க்கும்போது அவள் மகனை அணைத்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுடைய சந்தோஷம் அவள் முகத்தில் மட்டுமல்லாமல் மகனை அணைத்திருப்பதிலும் தெரிந்தது.

“ஒவ்வொரு கணவனும் தனக்கு வரப்போற மனைவி குணவதியா இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனா எனக்கு ரெண்டு எதிர்பார்ப்புகள் இருந்தது. இரண்டிலுமே நீ சிறந்து இருக்க. அதை நான் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்” என்று மலர்ந்தமுகமாக அவனும் கூறினான்.

இருவருமே தாலி பிரித்துக் கோர்ப்பதை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். வெளியில் செல்லும் பயணமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். அதனால் மூன்று நாள் விடுப்பு எடுத்து விட்டு. நான்காவது நாளிலிருந்து அவன் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டான். அவள் ஐந்து நாள் விடுப்பு எடுத்து இருந்தாள். அதனால் அவள் வீட்டில் தான் இருந்தாள். அதனாலேயே மகனுக்கும் ஐந்து நாட்கள் விடுப்பு கொடுத்துவிட்டு அவனையும் மனைவியோடு இருக்க செய்திருந்தான் அபிமன்யு.

அவன் கல்லூரியில் இருந்தாலும், அவள் நினைவுகளோடு இருக்க. அவள் மகனுடன் வீட்டில் இருந்தாலும், கணவனுடைய நினைவுகளோடு இருந்தாள். ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்த அவளுடைய வாழ்க்கையும், இப்பொழுது இருக்கும் அவளுடைய வாழ்க்கையும் மாறி இருக்கிறதே. அதை மாற்றி அமைத்திருக்கிறான். அது நல்லபடியாக மாறியதில் அவளுக்கு மிகுந்த சந்தோஷம்.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
67
துணை வேண்டாம் என்று நினைத்தவன். துணையாகக் கிடைத்தவளை விரும்ப ஆரம்பித்து விட்டான். முதலிலும் இதைத் தான் செய்தான். இப்பொழுதும் அதைத் தான் செய்கிறான். அதற்கு அவளுடைய குணமும் ஒரு காரணம் எனலாம். இரண்டு முறை திருமணம் என்பது சாத்தியம் என்றால், இரண்டு முறை காதல் என்பதும் சாத்தியம் தானே?? அவனும் ஆராதியாவை காதலிக்க ஆரம்பித்திருந்தான். தாலி கட்டுவதற்கு முன்பாகவே, அவளைப் பார்த்து விட்டு வந்த அன்றிலிருந்தே என்று சொல்லலாம். அவளிடம் பேசி விட்டபிறகு அவன் மனதில் அவள் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டாள்.



“என்ன புது மாப்பிள்ளை முகத்துல ஒரு தேஜஸ் தெரியுது??” என்று சக பேராசிரியர்கள் அவனை வம்பு இழுக்க தவறவில்லை.



அவர்களுக்கு அவன் புன்னகையையே பதிலாகக் கொடுத்தான்.



மிகவும் நெருங்கிய தோழர்கள் சற்று வரம்பு மீறிக் கிண்டல் அடிக்க. அவன் அதற்கும் சிரித்து தான் வைத்தான். எதுவுமே இல்லாதபோது பாவம் அவனும் என்ன தான் செய்வான்??.



“ஆனாலும் நீ கிரேட் தான் டா. ஊமை பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கியே??” என்று கூறிய நொடி கூறியவனை உருத்து விழித்தான்.



“அப்படி சொல்லாத அந்தப் பொண்ணு தான் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்காள். ரொம்ப நல்ல பொண்ணு” என்று மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.



“என் பொண்டாட்டி ஊமையா இருந்தால் நானும் சந்தோஷப்பட்டு இருப்பேன் டா. தினமும் பேசிப் பேசியே கழுத்தை அறுக்கிறாள். உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கனால. நீ ஜாக்கிரதையா செகண்ட் மேரேஜ் பார்த்துப் பதிவுஸா பண்ணிட்ட. உன்ன போல எல்லாருக்கும் கொடுப்பினை கிடைக்குமா??” என்று அவனை வாழ்த்துவது போல வம்பு இழுத்தனர்.



இதற்கு அவன் பதில் சொன்னால் அது தேவையில்லாத விதண்டாவாதத்தில் சென்று நின்று விடும். அதனால் அமைதி காத்தான். மனதிற்குள் கோபமாகத் தான் இருந்தது. அடக்கிக் கொண்டான். இரண்டாவது திருமணம் எனும் போது அது பெண்ணாக இருந்தால் வேறு விதமான விமர்சனங்கள் வருவது போல. ஆணாக இருந்தால் வேறு விதமான விமர்சனங்கள் வரும். அதை அவனும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். மகனுக்காகத் திருமணம் என்று முடிவு செய்து இப்பொழுது மனைவியும் ஆகிவிட்ட பெண்ணின் மீது காதலும் வந்து விட்டிருந்தது. அதையெல்லாம் மற்றவர்களுக்கு விரிவுரை கூற முடியாது. கூறினாலும் இவர்களுக்கு அது புரியாது. எப்படியும் ஒரு வருடத்திற்கோ, அல்லது அடுத்த திருமணம் நடக்கும் வரையாவது இந்தப் பேச்சுக்குள் இருக்கும்” என்று அவனுக்கும் தெரியும். இது காலத்தின் கட்டாயம். ஒவ்வொருவரையும் சென்று நம்மால் மாற்ற முடியாது. அதற்காக ஒவ்வொருவரிடமும் சென்று சண்டையிடவும் முடியாது. வாதிடுவதும் வீண் என்றுதான் தோன்றியது அதற்கும் கிண்டல் தான் செய்வார்கள். பேசுபவர்கள் வாயை அடைக்க முடியுமா என்ன??. பேசிவிட்டு போகட்டும் என்று அமைதியாகத் தான் அவனும் கடந்து கொண்டிருந்தான்.



அவர்கள் எல்லாம் யாரோ, அதனால் அமைதியாக அவனால் கடக்கவும் முடிந்தது. வீட்டில் தன்னுடைய தாய் பேசும்போது அப்படி அவனால் அமைதியாகக் கடக்க முடியவில்லை ஏனென்றால் அவளும் தன் வீட்டு அங்கத்தினர் எனும்போது அவளுக்கான மரியாதையை கொடுக்க வேண்டியது தன்னுடைய கடமை. அது தன் தாயாக இருந்தாலும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான்.



பேராசிரியர்கள் கிண்டல் அடித்துக் கொண்டிருக்க. அவன் புன்னகை முகமாக மற்றவர்களைப் பார்த்தும் பார்க்காமலும் அந்த நிமிடங்களைக் கடந்து கொண்டிருக்க. அதைப் பார்த்து அவர்களைத் தாண்டிச் சென்ற பெண்ணொருத்தியின் உள்ளமும் எரிமலை குழம்பாகப் பொங்கிக் கொண்டு இருந்தது.



“எவ்வளவு சொன்னேன்?? தன் காதலை புரிந்து கொள்ளாமல். இன்னொரு பெண்ணை அதுவும் ஊமை பெண்ணைத் திருமணம் செய்து விட்டு வந்து நிற்கிறான். இவனுக்கு எவ்வளவு திமிரு இருக்க வேண்டும்??. கர்வம் பிடித்த ஆண்மகன் தான் அதனால்தான் அவளுக்கும் அவனை மிகவும் பிடித்தது. எல்லோரும் தன்னை திரும்பிப் பார்க்கும்போது. அவன் அவளைக் கண்டு கொள்ளாமல் இருந்தது மட்டுமல்லாமல், அவளாகச் சென்று காதலை சொல்லியும்.



“போய் வீட்ல சொல்லு. கல்யாணம் பண்ணி வைப்பாங்க. எனக்குக் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்கப்போகுது. அப்படி இல்லனாலும் என்கிட்ட படிக்கிற ஸ்டூடண்ட்ஸை திருமணம் பண்ணிக்கிற ஐடியா எனக்கு இல்ல” என்று சொல்லிவிட்டு கடந்தவன் தான் அவன்.



அப்பொழுது பதில் சொல்லத் தெரியாமல் கடந்தவள் அதன் பிறகு பதில் சொன்னாள்.



“எனக்குத் தெரியும் சார் ஆனா உங்க வைஃப் தான் இப்ப உயிரோட இல்லையே” என்று அவன் பின்னோடு சென்று அவன் முன்னால் வந்து நின்று கூறினாள்.



“அதுக்காக யார் வேணா அப்ளிகேஷன் போடலாம்னு அர்த்தம் கிடையாது. நீ ஸ்டுடென்ட் நான் டீச்சர். அந்த லெவலோடு நிற்கிறது தான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது. எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை. கல்யாணம் வாழ்க்கைல ஒரு முறை தான் நடக்கும். எனக்கு நடந்திருச்சு போதும் அதுவே எனக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்திருச்சு” என்று சொல்லிவிட்டு அகன்றவனை அவளும் விடாத துரத்திக் கொண்டுதான் இருந்தாள்.



அப்படியெல்லாம் பேசியவன் இன்று திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறான் என்றால். அவள் கோபம் குறையுமா என்ன??. அவளுடைய தோழி சொல்லும் போதே அவளுக்குக் கோபம் அதிகரித்திருந்தது. இப்பொழுது அதைக் கேட்கலாம் என்று வரும்போது அவன் மற்ற ஆசிரியர்களோடு சிரித்துக் கொண்டிருப்பது இன்னும் அவள் மனதில் தூபம் போட்டு இருந்தது.
 
Member
Joined
May 9, 2025
Messages
55
100% true - for some ladies, they cannot say that’s their house- before marriage née adult ha veetuku Lora a, after marriage- ennorathnn veetu ponnu,( though the mamiyar is also the same) but will say that. Of all for HUSBANDS, - almost everyone knows his words and actions. On the whole, this is the same for all the stages.
 
Member
Joined
Dec 23, 2024
Messages
67
100% true - for some ladies, they cannot say that’s their house- before marriage née adult ha veetuku Lora a, after marriage- ennorathnn veetu ponnu,( though the mamiyar is also the same) but will say that. Of all for HUSBANDS, - almost everyone knows his words and actions. On the whole, this is the same for all the stages.
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top