• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
108
கனவு - 3

சுதர்சனம் அவளை கண்டனப் பார்வையுடன் முறைப்பதை கண்டவள் மனதிற்குள்,

'ஆஹா!.. மிலிட்டரி வீட்ல இருக்கிறது தெரியாம வாய விட்டுட்டியே டி பக்கி!.. இனி அட்வைஸ் அடைமழை ஆரம்பிச்சு வெளுத்து வாங்க போகுதே!.. காதை இரும்பாக்கிக்க டா நதி!..' என்று தனக்குள் அவள் புலம்பிக் கொண்டிருக்க..

அவள் மனதிற்குள் சொன்னது போலவே 'இப்படி தான் உன்னை விட வயதில் பெரியவனிடம் பேசுவதா?!..' தனது அறிவுரையை ஆரம்பித்து,

'உன்னுடைய வேலைகளை நீ தான் செய்ய வேண்டும்!..' என்ற ஆணையோடு அடைமழை இன்னுமும் போய்க் கொண்டிருக்க,

தனது காதுகளை மட்டும் திறந்து வைத்து, 'இப்படி தொக்கா மாட்டிட்டியே நதி!!..' என மனதிற்குள் புலம்பிக் கொண்டு, பப்பி ஃபேஸ் வைத்து பாவம்போல் நின்றாள் நம் நாயகி..

இவை அனைத்தையும் தனது அறைக்குள் இருந்த அரவிந்த் சிறு சிரிப்புடன் கேட்டுக் கொண்டே, தனது வேலைகளை செய்து கொண்டு இருந்தான்..

வெகு நேரமாய் அவரிடம் சிக்கி தப்பிக்க இயலாமல் பொறியில் மாட்டிய எலியாய் இருக்கும் மகளை காப்பாற்ற சமையலறையில் இருந்து வந்த சரஸ்வதி,

"இன்னுமா டி நீ கிளம்பல!!?.. இந்தா டிபன் பாக்ஸ்!.. சாப்பிட எல்லாம் ரெடியா இருக்கு! சீக்கிரம் தயாராகி வா!.." என அதிகாரமாக கூறி அவளது கையில் மதிய உணவை திணித்து விட்டு திரும்பியவர்,

சுதர்சனம் முறைப்பதைப் பார்த்து, அங்கு நடப்பது எதுவுமே தெரியாதது போல, "என்னாச்சுங்க!!?.." என்று அப்பாவியாகக் கேட்டார் அவரது தர்மபத்தினி..

சுதர்சனம் எதுவும் பதில் உரைக்காமல் வேகமாக அங்கிருந்து அகல, தந்தை சென்றதை எட்டிப் பார்த்து உறுதி செய்த மகள் ஓடி வந்து தனது தாயை கட்டிக்கொண்டு,

"லவ் யூ ம்மீ!.." என தாயின் கன்னத்தில் முத்தமிட்டவள்," சரியான நேரத்துல வந்து காப்பாத்துனீங்க!" என அவரது கன்னத்தை பிடித்து ஆட்டியவளிடம் இருந்து தன்னை பிரித்தவர், "வலிக்குது டா!.." என்றிட,

"அச்சோ பேபி!!.." என அங்கே முத்தமிட்டு விட்டு, "பயங்கர பசி ல இருக்கேன்!..இந்த அட்வைஸ் மழை ல நனைஞ்சு பசி கபகப னு வந்துடுச்சு!.. சீக்கிரம் எடுத்து வைங்க தெய்வமே!.." எனக் கூறிவிட்டு

அவள் ஓடிவிட, செல்லும் மகளை வாஞ்சையுடன் பார்த்த சரஸ்வதி தனது கன்னத்தை தேய்த்துக் கொண்டே சிரித்துவிட்டு உள்ளே சென்றார்..

அனைவரும் தயாராகி உணவு மேசையில் அமர்ந்து உணவை உண்ணும் போது சுதர்சனம் மகளிடம் "காலேஜுக்கு எப்படி போற நதியா!?.." என்று கேட்கவும்,

ஆசையாய் பூரியை கிள்ளி கிழங்கோடு அள்ளி வாயில் வைக்க போனவள், அவரது கேள்வியில் விழிக்க, அவளது மனதிற்குள்,

'காலேஜுக்கு பறந்தா போவாங்க!?.. பஸ்ல தான் போவாங்க!.. நல்லா கேட்குறாய்ங்கயா டீடெய்லு!!..' என கவுண்ட்டர் கொடுத்து கொண்டு இருந்தாள்..

வெகு நேரமாய் தனது கேள்விக்கு பதில் வராமல் இருக்கவும் அவளை சுதர்சனம் திரும்பி பார்க்க, வாயில் வைத்த பூரியை வேகமாக மென்று விழுங்கியவள், "பஸ் ல தான் ப்பா!.." என்று பவ்யமாக பதிலளித்தாள்..

"எனக்கு ஒரு க்ளைன்ட் பார்க்க வேண்டி இருக்கு!.." என்று அவர் சொல்ல ஆரம்பித்ததும், 'இப்ப இவரோட ஸ்கெட்யூல் எல்லாம் என்கிட்ட எதுக்கு தேவை இல்லாம சொல்லிட்டு இருக்காரு!!?..' என

மனதிற்குள் மண்டையை சொறிந்து கொண்டு அவள் யோசித்து அமைதி காக்க, "உன்னோட காலேஜ் வழியா தான் போகணும்!. அதனால நானே உன்னை ட்ராப் பண்ணிடுறேன்!.." என்று முடிக்கவும்,

எப்போதுமே அவள் கிளம்பிய பின் நேரங்கழித்து கிளம்பும் தந்தை, இன்று தன்னை இறக்கி விடுவதாக சொன்னதும், அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தவள்,

காலேஜ் பஸ்ஸில் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு, அராத்து பண்ணிக்கொண்டு ஜாலியாக செல்வது மிஸ் ஆகி விடுமே என்ற சோகத்தில் இருக்க,

மீண்டும் அவளது முகத்தை பார்த்து,"என்னாச்சு!!?.." என அவர் கேட்டதும், இயல்பாக முகத்தை மாற்றிக் கொண்டவள்,

"சரி ப்பா!.." என்று நல்ல பிள்ளையாக தலையசைத்த அந்த பேக்கு, அங்கு ஒரு ஏழரையை கூட்டி வைத்திருப்பதை மறந்தே போனாள்..

அரவிந்த் அவன் வேலை பார்க்கும் கம்பெனிக்கு கிளம்பி விட, தந்தையும் மகளும் ஒன்றாக காரில் கிளம்பியதும் தான் சரஸ்வதிக்கு அப்பாடா என்றிருந்தது.. இவர்களை அனுப்புவதற்குள் சுனாமி வந்து ஓய்ந்தது போல் இருந்தது..

தந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்த நதியாவிற்கு, பள்ளி குழந்தைகள், பரபரப்பாக வேலைக்கு செல்லும் இயந்திரபுரவிகள், கூட்டமாக கதை பேசும் காக்கைகள் என வேடிக்கை பார்க்க பல விஷயங்கள் வெளியே இருந்தது..

இதுநாள் வரை கல்லூரி பேருந்து ஏறுவதோடு சரி, அதன்பின் நண்பர்களுடன் அரட்டை அடித்து அட்டகாசம் செய்வதற்குள் கல்லூரி வந்து விடும்..

கல்லூரி வாசலில் அவளை இறக்கி விட்ட தந்தைக்கு 'டா..டா..பை!பை!.. குட்டு பை!..' சொல்லி அனுப்பியவள், அவரது கார் சென்றதும் துள்ளலுடன் கல்லூரிக்குள் நுழைய..

ஆரஞ்ச் வண்ண ரோஜாப்பூ உடன் அவளருகே வந்தவன், "உலகத்துலேயே நீங்க தான் ரொம்ப அழகா இருக்கீங்க!.." எனக் கூறி அவளிடம் நீட்ட, அவள் உறைந்து நின்றாள்..

*************

சில நாட்களுக்கு முன்பு

நதியா தன் வானரப் படைகளுடன் கல்லூரி வாயிலை தாண்டி சிறிது தூரத்தில் அமர்ந்து கொண்டு உள்ளே வரும் புதிய மாணவர்களை ராக்கிங் செய்து கொண்டிருந்தாள்.. இவர்கள் எல்லாம் சீனியராம்!.. அந்த கெத்து..

அப்போது தான் ஒரு பொண்ணை ராக்கிங் செய்து முடித்து விட்டு சிரிப்புடன் திரும்பியவள் பார்வையில் பட்டவன் தான், ஒரு எச்சரிக்கை உணர்வுடன் பதட்டத்தோடு நுழைந்த ராகுல்..

அவளது கண்கள் கூர்மையுடன் அதை கவனிக்க, "ஓய்!!!..இங்க வா!.." என்று சத்தமிட்டு அவனை அருகே வருமாறு சைகை செய்து அழைத்தாள்..

பம்மிக் கொண்டு வந்தவன் இவர்கள் பார்வையில் பட்டதில் திருதிருவென விழித்து, அவர்களின் அருகே வந்து அமைதியாக நின்றான்..

"உன் பேர் என்ன மேன்?!..ஃபர்ஸ்ட் இயரா நீ?!.. எந்த டிபார்ட்மெண்ட்?!.. ஏன் ஒரு தினுசா முழிச்சுட்டே போய்ட்டு இருக்க?.." என அதிகாரமாக நதியா கேட்டதும்,

"என் பேர் ராகுல்!..கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட்!..ஃபர்ஸ்ட் இயர் தான் சீனியர்!.." என்று அவன் கர்ம சிரத்தையுடன் பதில் அளித்ததில் குஷியாகிப் போனது இந்த வானரங்களுக்கு..

'நமக்கு வாய்த்த அடிமை!..' என்ற ரீதியில் ஒருவரை ஒருவர் பார்த்து சங்கேத மொழி கண்களால் பேசிக்கொள்ள, திரும்பி அவனை மிதப்புடன் பார்த்த நதியா,

" அது ஓகே!.. ஆனா அதென்ன எதையோ திருடிட்டு போற மாதிரி அப்படி ஒரு பார்வை பாத்துட்டு போற?!.." என அவள் ஆராய்ச்சி பார்வையுடன் கேட்கும் போதே, அவன் அவசரமாக தன் கையை மறைப்பதை கண்டு விட்டாள்..

"அது வந்து....." என அவன் இழுக்கும் போதே, "ஹேய்!!.. என்ன மேன் மறைக்கிற!!?.. எங்க காட்டு!!.." என்று அவள் உத்தரவு போல் கூறவும், அவன் இன்னும் மறைக்க..

" இப்போ நீ காட்டல னா அதோ வர்றா பாரு அந்த பொண்ணுக்கு போய் ப்ரொபோஸ் பண்ணி கிஸ் பண்ணனும்.. என்ன செய்றியா?!.." என்று மிரட்டவும், அவளது பட்டாளம் எல்லாம் 'ஹோ' வென்று உற்சாக கூச்சலிட்டனர்..

"அது மட்டும் முடியாது சீனியர்!.." என்று அவன் உறுதியாக சொல்லவும், "அப்போ கண்டிப்பா நீ போய் அத செய்து தான் ஆகணும்!.. இல்லனா ஒழுங்கு மரியாதையா கைல இருக்கிறத நீயே காட்டிடு!.."என்று இவளும் முடிவோடு கூறினாள்..

அவனை மிரட்டுகிறாளாம்.. நதியா அவனையே பார்த்திருக்க, "நான் பண்ண மாட்டேன் சீனியர்.. ஏன்னா நான் ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்றேன்!.." என்றான் ராகுல் அவசரமாக..

" வாரே!!..வா!!!.. பார்ரா!!.. இப்பதான் காலேஜ் உள்ளேயே நுழையற!.. அதுக்குள்ள ஆளோட தான் வருவீங்களோ!.. யார்ரா உன் ஆளு!..காலேஜா?!.. ஸ்கூலா?!.." என்று அவள் கேட்கவும்,

"இந்த காலேஜ் தான் சீனியர்!.. ஆனா ஸ்கூல்ல இருந்தே ரெண்டு பேரும் லவ் பண்றோம்!.." என்று அவன் சிறு வெட்கத்துடன் சொல்லவும் இவர்கள் வாயை பொத்திக்கொண்டு சிரித்தனர்..

"அது சரி!.. இப்ப எல்லாம் ஸ்கூல்ல இருந்தே ஆள் ரெடி பண்ணி வச்சிருக்கீங்களா?!.. அது இருக்கட்டும்!..இப்ப நீ என்னத்த மறைச்ச?!.. அத காட்டு முதல்ல!.." என சிரிப்புடன் நதியா கேட்கவும், அவன் மெதுவாக தன் கையை நீட்டி காட்ட, அதில் அழகிய ரோஜாப்பூ!..

ரோஜா பைத்தியமான நதியாவிற்கு அதை கண்டு பேச்சே வரவில்லை.. அவள் அருகில் இருந்த விஷ்ணு, "உன் ஆளு இந்த காலேஜ் னு சொன்னியே!.. ஆனா யாரு, அவ எப்படி இருப்பா?!.. ஒன்னுமே சொல்லலையே டா?!.." என்று ராகுலிடம் ஆர்வமாகக் கேட்டான்..

விஷ்ணுவின் கேள்வியில் தன் காதலியின் நினைவில் லயித்தவன் ஒரு மந்தகாசத்துடன், " இங்கிலீஷ் லிட் சீனியர்!.. அவ ரொம்ப அழகா இருப்பா!!.." என கனவில் மிதந்து கொண்டு கூறினான்..

"அலையாதே டா பக்கி!.. அது அவனோட லவ்வர்!.." என்று விஷ்ணுவை தோளில் அடித்த யமுனா, நதியாவை காட்டி, "இவளை விட ரொம்ப அழகா இருப்பாளோ?!.." என்று வேண்டுமென்றே கேட்டாள்..

'எந்த காதலன் தான் தன் காதலியை மற்றவரிடம் விட்டு தருவான்.. இவன் மட்டும் விதிவிலக்கா என்ன?!..' அதனால்," இவங்களை விட ரொம்ப அழகு!!!..." என்று ராகுல் எதார்த்தமான பதில் அளித்ததும்,

நதியாவின் நண்பர் கூட்டம் 'ஹோ' என்று சப்தமிட்டு சிரித்த போது தான் அந்த ரோஜாப்பூவிலிருந்து தன் பார்வையை மாற்றிய நதியா நிகழ்கால உலகத்திற்கு வந்தாள்..

அவளிடம், "ஹே!..ஹே!.. இவனோட ஆளு உன்ன விட ரொம்ப்ப்ப அழகாம்!.. நீ அசிங்கமா இருக்கியாம்!.. இந்த சார் சொல்றாரு!.." என்று

அவளது மனதில் இருந்த பொறுமலை எல்லாம் இவன் பேசியதைக் கொண்டு, நதியாவை மட்டம் தட்டுவது போல் யமுனா கூறவும், அனைவரும் ஹை-ஃபை கொடுத்துக் கொண்டு சிரித்ததில்,

கோபமாகி நதியா, ராகுலை முறைத்துக் கொண்டே,"சீனியரையே அசிங்கமா இருக்கேன் னு சொன்னியே டா நீ?!.. அவ்ளோஓஓ தெனாவெட்டா உனக்கு?!.."

"உன் ஆளு பேர் என்ன?!.. எங்க இருக்கா?.. சொல்லு!..இப்பவே அவ கிட்ட என்ன சொல்லனுமோ அதை சொல்லி இன்னிக்கே ப்ரேக் அப் பண்ண வைக்கிறேன்!.." என்று மிரட்டவும்,

பயந்த ராகுல், தான் அப்படியெல்லாம் சொல்லவில்லை என்றும் இன்று தனது காதலியின் பிறந்தநாள் அதனால்தான் இந்த ரோஸை கொண்டு செல்வதாக கூறி வெகு நேரம் மன்னிப்பு கேட்டவன், அவளை சமாதானம் செய்ய முயற்சித்து இறுதியில் அவள் என்ன சொன்னாலும் செய்வதாகக் கூறவும்

அன்றிலிருந்து நதியாவை காணும் போது எல்லாம் 'இவள்தான் உலகிலேயே அழகு!' என்று கூறி அவளுக்கு பிடித்த ஆரஞ்ச் ரோஜா பூவை தர சொல்லி, மொக்கையாக இந்த பஞ்சாயத்தை முடித்தனர் அந்த வானரக் கூட்டம்..

அன்று இழுத்து விட்ட இந்த இம்சையை அதன்பின் அவள் மறந்தே போனாள்.. இன்று அவள் காரில் இருந்து இறங்கியதை கண்டதுமே பூவை வாங்கிய ராகுல் அவள் அருகே வந்து பூவை தர..

ரோஜாவை கண்டவள் அதன் அழகில் மயங்கி ஃப்ரீஸ் ஆகி இருந்த அந்த தருணத்தில், "நதியா!!.." என்ற கடுமையான குரலைக் கேட்டு ஆடிப் போனாள் அவள்..

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top