• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
107
கனவு - 1

அந்த திருமண மண்டபத்தில் பல வர்ணங்கள் கொண்ட செயற்கை பூச்சரங்கள் ஒரு குகையைப் போல வரிசை கட்டி வளைந்து நின்று வரவேற்க..

அதன் முடிவில் இருபுறமும் வாழை மரங்களும் தென்னம்பாளைகளும் தலை வணங்கி வருவோரை வணங்குவது போல வளைந்து நிற்க..

பன்னீர் தெளித்து வரவேற்க சில இளசுகளும் நின்று கொண்டு வந்தவர்களை வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தனர்..

திரும்பிய திசையெல்லாம் சொந்த பந்தங்கள் அமர்ந்திருக்க மிகவும் பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தார் சரஸ்வதி..

"வாங்க சித்தப்பா!..நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்!..சித்தியை எங்க காணோம்?!..வரலையா?!.."என்று உரிமையுடன் செல்லக்கோபத்துடன் பேசிக்கொண்டும்,

"என்ன வத்சலா இது?!.. அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு இப்படித்தான் ஆடி அசைஞ்சு வர்றதா?!.." என்று செல்லமாக மிரட்டிக்கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தார் அவர்..

சொந்தங்களுடன் அளவான பேச்சோடும், நலன் விசாரிப்போடும் அனைத்தையும் கவனமாக பார்த்துக் கொண்டு இருந்த சுதர்சனத்திடம்,

"என்ன மாப்ள!.. ஒருவழியா மகளுக்கு கல்யாணம் முடிக்க போறீங்க!.. அடுத்ததா என்ன மகனுக்கு தானே?!.." என்று அவரது உறவினர் ஒருவர் கேட்க..

"அதுக்குள்ள என்ன அவசரம் மாமா!.. இப்பதானே பொண்ணுக்கு கூடி வந்துருக்கு!.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்!.. பொறுமையா இவனுக்கு பெண் பார்க்க ஆரம்பிக்கலாம்!.." என அவர் பதிலளிக்கையில் அவரை நோக்கி வந்தான் மகன் அரவிந்த்..

"என்ன மாப்ள நீ?!.. கையில வெண்ணைய வச்சுட்டு நெய்க்கு அலையற!!.. அவனுக்கு தான் முறை பொண்ணுங்க ஒரு பாடு இருக்கே!.. அதிலேயே நம்ம அரவிந்துக்கு யாரையாவது முடிச்சிட வேண்டியது தானே!.." என அவர் கூறி முடிக்கவும்,

அரவிந்த் அருகே வரவும் சரியாக இருந்தது அவரது பேச்சை கேட்ட அவனது மனம் எதையோ எண்ணி முகம் கனிய.. அங்கு வந்த மகனை கண்ட சுதர்சனம்,

"அரவிந்த்!.. பந்திக்கு எல்லாம் தயாரா இருக்கானு பாத்துட்டு வா!.." என அப்போது தான் அங்கிருந்து வந்த மகனை பணிக்க, "சரிங்க ப்பா!.." என்று மறுவார்த்தை பேசாமல் அவனும் மீண்டும் அங்கு சென்றுவிட..

"பார்ப்போம் மாமா!.." என்று அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அவசரமாக பேசியவர், அந்த இடத்தை விட்டு வேறு ஒரு சொந்தக்காரரை வரவேற்பது போல் அகன்றார்..

திருமணத்திற்கான இரட்டை அர்த்த கேலியும் கிண்டல் பேச்சுகளும் அங்கிருக்கும் இளசுகளின் பேச்சில் நிறைந்திருக்கும் மணமகள் அறையில்..

அதைக் கேட்டு செஞ்சாந்தை பூசியது போல வெட்கத்தில் முகம் சிவந்து முழு அலங்கார பூஷிதையாக தேவதையென அமர்ந்திருந்தாள் அவள்..

அந்த அறையின் கதவை திறந்து உள்ளே வந்த சரஸ்வதி,"அடியேய்!!.. சிங்காரிகளா!.. என் பொண்ணு உங்கள விட அழகா இருக்குறான்னு பொறாமையில எதுவும் அலங்கோலமா மேக்கப் பண்ணிடாதீங்க டி வானரங்களா!.."

"சீக்கிரம் அலங்காரத்தை முடிச்சு அவளை அனுப்புங்க..ஐயர் அங்க 'மணவறைக்கு பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ!' னு கூப்பாடு போட்டுட்டு இருக்காரு.." என்று அவர் மகளை சுற்றி நின்ற பெண்களை பகடி பேசவும்,

அவரை முறைத்த சிந்து," அல்ல்லோ அத்தை!.. இதைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?!.." எனக் கேட்டு அவரது மகளின் முகத்தை திருப்பிக் காட்டியவள், "நாங்க ஒன்னும் உங்க பொண்ணை அலங்கோலம் பண்ணல.."

" இன்னிக்கு நைட் உங்க தோப்பிள்ளை தான் நாங்க பண்ணுன இந்த அலங்காரத்தை எல்லாம் அலங்கோலம் பண்ணப் போறாரு!.." என நமட்டுச் சிரிப்புடன் கூறி தோழிகளுடன் சேர்ந்து ஹை-ஃபை கொடுத்து..

அனைவரும் ஒருசேர நகைக்கவும், சரஸ்வதிக்கு சுருக்கென்றானது..
இந்த திருமணமே மகளின் விருப்பத்தைக் கொண்டு தான் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது..

மணமகனாக அங்கே அமர்ந்து இருப்பவன் மீதும் அவனது குடும்பத்தினர் மீதும் அவருக்கு அப்படி ஒன்றும் நல்ல அபிப்ராயம் இல்லை எனினும்,

மகள் மகிழ்வோடு இருப்பாள் என்ற நம்பிக்கை கொண்டு அதை துடைத்தெறிந்து விட்டு அனைத்து பணிகளையும் முன்நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்..

இப்போது இந்த பெண்ணின் வார்த்தைகள் அவருள் உறங்கிய சஞ்சலத்தை தட்டியெழுப்பி விட முகம் சுணங்கினார்..

அவளது பேச்சிற்கு மகள் வெட்கத்தோடு, "ச்சீ!.. சும்மா இருங்க டி!.." என்று மலர்ந்து சிரிக்கவும், தன் மனதை மறைத்துக் கொண்டு சிந்துவை கலாய்த்தார்..

"வாயாடி!!!.. பொண்ணோட அம்மா டி நானு..எங்கிட்ட பேசுற பேச்சா இது?!.. இரு..இரு..சீக்கிரமே உனக்கும் ஒரு சண்டியரை பார்த்து கட்டி வைக்க சொல்லி உங்கம்மா கிட்ட கொளுத்தி போட வேண்டியது தான்!.." சிரிப்புடன் சொன்னார் சரஸ்வதி..

அவரை முறைத்த சிந்து, "என்ன அத்த நீங்க?!.. இன்னும் பச்ச புள்ளையாவே இருக்கீங்க?!.. அதெல்லாம் அந்த சண்டியரை எப்படி கட்டி வைக்கனும் னு எங்களுக்கு தெரியும்!.." என அவள் ஒற்றைக் கண்ணடித்து கொண்டு மிதப்போடு சொல்லவும்,

அவளை கொமட்டுலேயே குத்திய சரஸ்வதி, "கொழுப்பெடுத்த கழுத!.. பாவம் டி உன்னை கட்டிக்க போறவன்!.." என சிரிப்புடன் கூறியவர்,

அவளை விலகச் சொல்லிவிட்டு தன் மகளை காண... அவளது அழகைக் கண்டு அதிசயித்து, "என் அழகு ராசாத்தி!!!.." நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்..

"சரி..சரி..சீக்கிரம் அழைச்சிட்டு வாங்க டா கண்ணுகளா!.. நான் அங்க போய் மத்த வேலையை பார்க்கிறேன்!.." என்று விட்டு பரபரப்பாக அவர் கிளம்பிட..

மஞ்சள் நிற கூரைப்பட்டு உடுத்தி அன்னமென அவள் நடந்து வர, பார்ப்பவர் கண்கள் எல்லாம் அவளது அழகில் மயங்கி இருக்க..

என்ன தான் மகளிடம் கடுமையுடன் நடந்து கொள்ளும் தந்தையாக இருந்தாலும் மகளது இந்த கோலத்தில் மனம் கனிந்து விடுமே..

சுதர்சனம் மகளின் இந்த திருமண தருணத்தில் மனம் கனிந்து உதட்டில் உறைந்த புன்னகையுடன் அவளை கண்டு கொண்டிருக்க, அவரைக் கண்ட அவளது கண்களும் ஆச்சர்யமாக விரிந்தன..

பந்தியை சரிபார்த்துவிட்டு மணவறையை நோக்கி வந்த அரவிந்தும், தங்கையின் மணக்கோலத்தைக் கண்டு நெகிழ்ந்தவன், தங்கையின் அருகே வந்தவளைக் கண்டு முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்..

மணவாட்டியை கண்டு மயங்க வேண்டியவனோ இம்மியளவும் திரும்பியும் பாராது, கடமையே கண்ணாக ஐயர் சொல்வதை கவனமாக் கேட்டு செய்து கொண்டிருந்தான் அவன்..

அவனருகே, எந்தவித உணர்வையும் காட்டாது யாரோ வீட்டு விசேஷத்தில் நிற்பது போல அவனது தாய் அமராவதியும், தந்தை ஜெயராமனும் நிற்பதை கண்டு சரஸ்வதிக்கு தான் வயிற்றில் புளியைக் கரைத்தது..

அவர்களுக்கு சற்று அருகில் அவனது அண்ணன் ரவீந்தரும் அவனது மனைவி சரயு வும் மட்டுமே தங்கள் வீட்டு திருமணம் என்ற நினைப்பில் சற்று புன்னகையுடன் நின்று இருந்தனர்..

மாப்பிள்ளையின் பெற்றோரைக் கண்டு பீதியான அவளது அன்னைக்கு, அவனது சகோதரனும் அவன் மனைவியும் கண்டு தன் மகளது நிலை எண்ணி சற்று நிம்மதியானார்..

முகூர்த்த நேரம் நெருங்கவும், "கெட்டி மேளம்!!..கெட்டி மேளம்!!.." என்று ஐயர் குரல் கொடுக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க நதியாவின் சங்கு கழுத்தில் மங்கலநாணை பூட்டி தன் மனைவி ஆக்கினான் ருத்ரதேவ்!..

பிறகு கன்யாதானம் செய்து பெற்றோர்களுக்கான சடங்கு முடிந்ததும், மேடையை விட்டு இறங்கி தங்களது இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டனர் ருத்ர தேவின் பெற்றோர்..

மணமக்களுக்கான விளையாட்டுகள் துவங்கவும், முகம் சுளித்த ருத்ரதேவ்விடம் கண்கள் சுருக்கி பொறுத்துக் கொள்ளும்படி சமிக்ஞை செய்த சகோதரனால் விருப்பமே இல்லாமல் அமர்ந்தான் அவன்..

மஞ்சள் நீர் நிரம்பிய குடத்தில் ஒரு மோதிரத்தை போட்டு மணமக்களை எடுக்கச் சொல்லிவிட்டு மணமகளின் தோழிகளும் மணமகனின் பக்கம் இருப்பவர்களும் ஓவென்று கூச்சலிட..

மணமக்கள் இருவரும் தங்களது கையை உள்ளே விட்டு தேட, அவளது கையில் அகப்பட இருந்த மோதிரத்தை பிடுங்காத குறையாக எடுத்து தான் ஜெயித்ததாக காட்டினான் தேவ்..

அவனுக்காக புன்சிரிப்புடன் விட்டுக்கொடுத்த நதியாவும் அவனது வெற்றியை எண்ணி மகிழ்வுடன் பார்த்து இருக்க, "என்ன டி இப்படி அவர்கிட்ட தோத்திட்டு ஈஈஈ னு சிரிச்சுட்டு இருக்க!!.." என்ற சிந்து,

"போ.. இதெல்லாம் போங்காட்டம்!.. நீ ஒழுங்கா விளையாடவே இல்ல.. விட்டுக்கொடுத்திட்ட.. அதான் மாப்பிள்ளை ஜெயிச்சுட்டார்!.." கூறிமுடிக்கவும், தேவ்வின் முகம் வெற்றிச் சிரிப்பை தொலைத்து கோபத்தை தத்தெடுத்தது போலானது..

💠💠💠💠💠💠💠💠💠💠💠

அடர்ந்த அந்த வனத்தினுள் கதிரவனின் வெப்பக் கிரணங்களை 'என் இடத்தில் உனக்கு அனுமதி கிடையாது! ' என்று தங்கள் கரங்களால் நெடிய மரங்கள் தடுத்தாட்கொள்ள..

அதனடியில் செழிப்பாய் வளர்ந்த சில அழகிய வண்ண மலர்களை கொண்ட செடிகளும், வித்தியாசமான கொடிகளும் பச்சை மனம் மாறாமல் செழித்திருக்க..

அதன் நடுவே ஒரு ஆள் மட்டும் செல்லும் அளவிலான ஒற்றையடி பாதை!.. நீண்டு செல்லும் அப்பாதை சலசலத்து ஓடும் ஓடையின் கரையோரம் முடிகிறது..

கண்ணாடி போல அடியில் இருப்பதை காட்சிப்படுத்தி ஓடிய நீரோடை, ஏதோ அவசர வேலையாக செல்வதைப் போல வேகமாக முட்டி மோதி ஓடிக் கொண்டிருந்தது..

அதனிடையே டைனோசர் முட்டைகளை வரிசையாய் அடுக்கியது போன்ற பாதை அமைப்பு அதன் மறுபுறம் செல்ல..

சலசலத்து ஓடிய அந்த ஓடையின் மறுபுறம் பற்றியெறிந்த நெருப்பின் தீஜ்வாலை கொட்டி வைத்தாற்ப்போல சிவந்த மலர்கள் எங்கும் சிதறி கிடக்க..

அதன் நடுவே கனத்த வெண்ணிற தேகத்தோடும் கிளைகளில் அதே செந்நிற பூக்களும் மீதமிருக்க.. 'நான் தான் இதை செய்தது!' என்று தெனாவட்டாய் உரைப்பது போல நின்ற குல்மோஹர் மரத்தினடியே..

திண்ணமாக வெளியே தெரிந்த அந்த மரத்தின் வேர்களுக்கு இடையில் செங்குருதியின் சிறு ஓடை பாய,.. முகம் முழுவதும் இரத்தத்தால் தோய்ந்து, மூச்சிற்கான போராட்டத்தோடு தனது கடைசி நிமிடத்தை வலுக்கட்டாயமாக நிறுத்தி வைத்தவன்,

மூச்சிரைக்க சிரமத்துடன் அவளது கன்னம் வருடி, அவளை தன் விழிகளில் நிரப்பி, "இன்..னொரு.. சென்மம்.. எடுத்தாவது..உன்னை சேர்வேன்!!....ப்..." என முழுதாய் கூறி முடிக்கும் முன்பே உயிரை நீத்திருக்க..

இதயத்தை உயிரோடு பிடுங்கி எடுத்தது போன்ற பெரும்வலி நெஞ்சை அடைத்துக் கொள்ள.. கண்களில் நிற்காத கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்க..

உயிரானவனின் இழப்பை தாங்க இயலாமல் இல்லை எனும் விதமாக இடவலமாய் கண்ணீரோடு தலையசைத்தவள், அந்த வனமே அதிரும்படியாக,"ரு..த்..ராஆஆஆ!!!!..." என்று அலறி தன் உயிர் நீங்க சரிந்தாள்.

இன்பக் கனவுகள் ஆயிரம் கொண்டு பல்லாண்டு வாழ எண்ணி அது பலிக்காமல் போக, உயிர் நீத்த அந்த அன்றில்களை கண்டு,

அதுவரை அனலியின் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த ஆகாசமும் கருமையைப் பூசிக் கொண்டு தன் கண்ணீரை மழையென பொழிய தயாரானது.

வணக்கம் நண்பர்களே!

'படித்தவுடன் கிழித்து விடவும்' மாதிரி இல்லாம, அப்படியே ஒவ்வொரு எபியும் எப்படி இருந்தது என்று தங்களுடைய ஒரு சிறிய கமெண்ட் கொடுத்தாலும் போதும்!.. என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு அதுவே பூஸ்ட்!..


 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top