• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
71
கானல் - 69

"அது நல்லாவே இல்ல ரதீப்பா!.. எனக்கு நூடுஸ் தான் வேணும்!!..அம்மா கிட்ட சொல்லி செய்து தர சொல்லுங்க!!.. பீஸ் ரதீப்பா!!.." என்று கண்கள் சுருக்கி கேட்ட பிள்ளையின் கெஞ்சலில் யாராயினும் இளகிடுவர்.. ஆனால் ராஜீவ் அப்படியே நிற்க,

"அடிங்க..படவா!!!...எவ்ளோ தடவை சொல்றது என் மகனை பேர் சொல்லி கூப்பிடாதே னு!.." என்று அவனை அதட்டினார் லீலாவதி..

"விடுங்கம்மா..அவன் அப்படித்தானே கூப்பிட்டு பழகி இருக்கான்.. அதனால இப்ப என்ன ஆகிடுச்சு!!?.." என்று தன் தாயிடம் அவனுக்காக வக்காலத்து வாங்கியவன்,

"இங்க பாரு ஜீவா..உனக்கு உடம்பு சரியான அப்புறம் அம்மாக்கு தெரியாம நானே சூப்பரா செய்து தர்றேன்..சரியா!!.."

"ஆனா நீ இதை சாப்பிட்டு, மருந்து குடிச்சா தான் ஃபீவர் சரி ஆகும்.. அப்றம் தான் நூடுல்ஸ் எல்லாம் சாப்பிட முடியும்!.." என்று சின்னவனிடம் ரகசியம் பேசினான் பிரதீப் ராஜீவ்!..

சில நொடிகள் யோசித்த ஜீவவிஹான், " நிஜமாவா!!??..இப்போ இத சாப்பிட்டா கண்டிப்பா நாளைக்கு செய்து தருவீங்களா ரதீப்பா!!?.." என்று ராஜுவ் சொன்னதை உறுதிப்படுத்தி கொள்ள உற்சாகமாக கேட்க, ராஜீவ்வும் உறுதி அளித்தான்..

பையன்கள் இருவரும் தங்களுக்குள் டீல் போட்டுக் கொண்டிருக்கும் போது, "இன்னுமாடா அத சாப்பிட்டு முடிக்காம இருக்க!!!!?..." என்று கேட்டுக் கொண்டே வந்தாள் நித்யா!!..

"அச்சச்சோ அம்மா!!!.." அவனிடம் பயத்துடன் முணுமுணுத்த சின்ன வாண்டு, " இதோ சாப்பிட்டேன்ம்மா!.." என்று ராஜீவிடம் இருந்த உணவை வேகமாக சாப்பிட்டு முடித்தான்..

"நீங்கதான் அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுக்குறீங்க பிரதீப்!..இதை சாப்பிட இவ்ளோ நேரமா டா உனக்கு!?.." என வந்தவள் அவனை குறை கூறிக் கொண்டே மகனிடம் கேட்க,

"நான் என்னமா பண்ணுனேன்!.. அதான் அவனே சமர்த்தா சாப்பிட்டானே!.."என்று கூறி காலி கிண்ணத்தை அவளிடம் காட்டி விட்டு, சின்னவனிடம் ஒற்றை கண்ணடித்தான் ராஜீவ்..

"அதுசரி.. பாட்டியை இவ்வளவு நேரம் ஓட விட்டுட்டு.. இப்ப ஏதோ ரெண்டு பேரும் திருட்டுத்தனம் பண்ண பிளான் பண்ணுன அப்புறமா சாப்பிட்டு முடிச்சு இருக்கான்!.. அதானே!!?.." என்று சரியாக கணித்து கூறினாள் நித்யா..

அவள் சரியாக கணித்து சொன்னதில் இருவரும் திருதிருவென முழிக்க, "அப்போ அதான் நடந்திருக்கு போல!.. அப்படித்தானே!?.." என்றவள், "இந்தா டா மருந்து குடி!.." என்று மகனது வாயில் மருந்தை ஊற்றினாள்..

"இப்படி இவனுக்கு செல்லம் கொடுத்துட்டே இருங்க.. பெருசானதும் நல்லா ஏமாத்த போறான்!.." என்றாள் அவள் விளையாட்டாக..

உடனே, "ஏமாற்றம் என்ன எனக்கு புதுசா?!.. அதான் வலிக்க வலிக்க அனுபவிச்சு இருக்கேனே!.." என்று வலியுடன் கூறிய ராஜீவ்வை கண்டு, தன்னையே நொந்து கொண்டாள் நித்யா..

************

கேரளாவில் ஏலக்காய் எஸ்டேட் வைத்திருக்கும் பிரபல பணக்காரர்களில் ஒருவரான வாசுதேவன் மற்றும் லீலாவதி அவர்களின் மகன்தான் ப்ரதீப் ராஜேஷ்..

அவனது பதின்ம வயதின் முடிவில் தந்தையின் மறைவுக்கு பிறகு தொழிலை கையில் எடுத்து, குறுகிய காலத்திலேயே தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டவன்..

மகனது உழைப்பில் லீலாவதிக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு.. அவனது திருமண வயது வந்ததும் அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை வேண்டுமென்று வரன் தேடிய லீலாவதிக்கு,

ஒரு விசேஷத்தில் சொந்தக்கார பெண்மணி ஒருவர் மூலமாக அறிமுகமானது தான் கொடைக்கானலில் இருந்த சங்கீதாவின் குடும்பம்..

"நல்ல அமைதியான பொண்ணுக்கா!..நம்ம ராஜீவ்க்கு ஏத்த மாதிரி இருப்பா..ஆனா என்ன வசதி தான் உங்க அளவுக்கு இல்ல.. அவ அப்பா டீ எஸ்டேட்டில அக்கவுண்ட்ஸ் சூப்பர்வைசர் வேலை பார்க்கறாரு.."

"ஒரே பொண்ணு!..ஓரளவு வசதியானவங்க தான்..ஃபோட்டோ கூட எங்கிட்ட ஒன்னு இருந்துச்சே!.." என்று தேடி தன்னிடம் இருந்த சங்கீதாவின் புகைப்படத்தை காட்டினார்..

அவளது புகைப்படத்தை கண்ட லீலாவதிக்கு மகனுக்கு ஏற்றவள் என மனம் திருப்தியாக ,வீட்டிற்கு வந்ததும் ராஜீவ்விடம் அதை காட்ட, அவனுக்கு குறை சொல்லும்படி எதுவும் தோன்றாததால் அவனும் சம்மதிக்க,

அனைத்து விசயங்களும் பேசி முடித்து, திருமணமும் ஊர் மெச்சும்படி மிக சிறப்பாக நடந்தேறியது..இடையில் ஓர்முறை கூட அவளிடம் ராஜீவ் பேச முடியாமல் போனது தான் விதி..

திருமணத்திற்கு பின்பு, 'தான் இன்னும் மனதளவில் திருமணத்திற்கு தயாராகவில்லை' என்று ராஜீவ்வின் நெருக்கத்தை தவிர்த்தாள் சங்கீதா..

வீட்டிலும் ரொம்ப ஒன்றும் கலகலப்பாக இல்லாத அவளை கண்ட லீலாவதி, அவளது சுபாவமே இவ்வாறு தானோ என்று எண்ணி போகப் போக சரியாகிவிடும் என தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டார்..

ஆனால் திருமணத்திற்கு முன் அவளது வீட்டில் நடந்த எதுவும் இவர்களுக்கு தெரியாதே!..

தனது பட்டப்படிப்பை முடித்த சங்கீதா தந்தை பணி புரியும் எஸ்டேட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் போது, அங்கு தினக்கூலியாக பணிபுரிந்த ஜோசப் உடன் மோதலில் ஆரம்பித்த சந்திப்பு, காதலாக மாறியது..

யாருமறியாமல் இரண்டு வருடங்களாக அவர்கள் வளர்த்த காதல், அவளது தந்தையின் கவனத்திற்கு வந்தது, அவளுக்கு தெரியாமல் போனது..

அவளது புகைப்படத்தை தனது உறவினரிடம் கொடுத்து வரன் பார்க்க சொல்லி இருக்க, சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தார் அவளது தந்தை..

அவர் எதிர்பார்த்ததை விடவும் வசதியான வரனாக வந்த ராஜீவ்வை நினைத்து பரவசம் ஆனவர், சங்கீதாவிடம் அவளுக்கு மணம் புரிய இருப்பதாக சொல்ல,

"யாரை கேட்டு கல்யாணத்துக்கு பேசுனீங்க?!..எனக்கு இதுல விருப்பம் இல்ல.." என்ற அவளது மறுப்பை எதிர்பார்த்து இருந்தவர்,

"யாரை கேட்கனும்!?..பெத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது எங்களோட கடமை தானே!..ஆமா..உனக்கு ஏன் விருப்பம் இல்ல!?.." என்று அவளை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டே கேட்டார்..

"எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ண பிடிக்கல!.." என்று அவள் திட்டவட்டமாக கூற, அவளை கூர்மையாக பார்த்தவர்,

"அப்படினா எப்ப கல்யாணம் பண்ணலாம் னு இருக்க!?.. அந்த ஜோசப் பைய தங்கைகள் கல்யாணம் முடிஞ்ச அப்பறமா?!.." என்று நிதானமாக வந்து விழுந்த அவரது கேள்வியில் அவள் திகைத்தாள்..

"உங்க காதல் கதை பற்றி எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா?!..நீ என்ன பண்ணாலும் அந்த வேற்றுமதக்கார பையன் என் வீட்டுக்கு மருமகனாக முடியாது!.." என்றவர்,

"ஒழுங்கா நான் சொல்ற மாப்பிள்ளைய கட்டிக்கல னா அவன் மேல பணம் திருடிட்டான்னு கேஸ் போட்டு காலத்துக்கும் வெளியே வராத மாதிரி செஞ்சிடுவேன்!.."

"அப்புறம் அவனை மட்டுமே நம்பி இருக்கற அவன் குடும்பமே நாண்டுகிட்டு சாவாங்க!..இதெல்லாம் நடக்கக் கூடாது னா..எல்லாம் நீ சொல்ற பதில்ல தான் இருக்கு!.." என்று மிரட்டினார்..

அவர் சொன்னதை செய்து விடுவாரோ என்று பயந்த சங்கீதா ராஜீவை மணக்க சம்மதித்தாள்.. இருப்பினும் ஜோசப்பை மறக்க முடியாமல் தவித்தவள்,

திருமணம் நிச்சயித்தது முதல் சங்கீதாவை தன் மனைவியாகவே எண்ணி கற்பனையில் இருந்த
ராஜீவ்விடம், அவள் உண்மையை உரைக்க எண்ணி இருந்த வேளையில்,

அவனாக என்றாவது அழைத்தால் கூட அவளிடம் பேச விடாதபடி பார்த்துக் கொண்டனர் அவளது பெற்றோர்..

மேலும் அவர்களிடம் எதாவது உண்மையை கூறி இந்த திருமணம் தடைபட்டால் கூட அதன் பிறகு ஜோசப் சிறைக்கு செல்வது உறுதி என்று பயமுறுத்தி வைத்திருக்க, சங்கீதா கையறு நிலையில் இருந்தாள்..

இதை அறியாமல் தாயும் மகனும், அவளுக்கு இடமாற்றம் மற்றும் பெற்றோரை பிரிந்த கவலை என்றும், மேலும் அவள் அதிகம் பேசிப் பழகாத சுபாவம் கொண்டவள் போல..

என்றெண்ணியும் அவள் தங்களுடன் இயல்பாக பழகுவதற்கு சிறிது நாட்கள் ஆகும் என தாங்களாகவே நினைத்துக் கொண்டிருந்தனர்..

திருமணம் முடிந்து ஓரிரு மாதங்கள் சென்றிருக்க, திடீரென ஒருநாள் அவளாகவே ராஜீவ்விடம் பேச வந்தவள், தயங்கி நிற்க அவள் ஏதோ பேச விழைவதை உணர்ந்தவன், "என்ன கீதா எதாவது சொல்லனுமா?!.." என்று கேட்டான்..

அவளது மனதில் ஏதோ ஒன்று உந்த, நிலையில்லாமல் தவித்தவள், என்னவென்று சொல்ல முடியாமல் தயங்கிக் கொண்டே, "இல்ல..எனக்கு ஊருக்கு போகனும் போல இருக்கு!.." என்று ஒரு வழியாக கூறி முடித்தாள்..

"எந்த ஊருக்கு மா போகனும்!..நம்ம நாட்டுக்குள்ளேயே போகலாமா இல்ல வெளிநாடு எதுவும் போகனுமா?!.." என்றான் ஆர்வமாக..

"அதெல்லாம் இல்ல!.." வேகமாக பதறி பதிலளித்தவள், "நான் கொடைக்கானலுக்கு போகணும்!.." என்று மட்டும் மொட்டையாக கூறினார்..

காற்று போன பலூனாக ஏமாற்றம் அடைந்த அவன் மனம், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "எனக்கு இந்த வாரம் வேலை கொஞ்சம் அதிகமா இருக்கேடா!.. பத்து நாள் கழிச்சு போகலாமா!?.." என்றான்..

அவளோ, "இல்ல.. எனக்கு உடனே போயாகனும்!..ப்ளீஸ்!.." என்று கெஞ்சவும், உருகி விட்டான் அவன், "அதுக்கெதுக்கு ப்ளீஸ் எல்லாம்!?.. கூட்டிட்டு போடா னா போக போறேன்!.." என்றிட,

"நான் மட்டும் போறேன்!..நீங்க உங்களோட வேலை எல்லாம் முடிச்சிட்டு வாங்க!..என்னால உங்க வேலை கெட வேண்டாம்!.." என்று அவனை தவிர்த்தாள்..

அவனும் அப்போதைய முக்கியமாக முடிக்க வேண்டிய வேலைகளை எண்ணி அதற்கு ஆமோதிக்க, அவளை மட்டும் தங்களது காரில் அனுப்பி வைத்தான்..

லீலாவதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவளுடன் செல்ல முடியாத நிலையில் இருக்க, அவள் மட்டும் கொடைக்கானலுக்கு சென்றிருந்தாள்..

அவள் கொடைக்கானல் சென்ற இரு தினங்களில் ராஜீவ் அவளை அழைத்த போதெல்லாம், ஏதோ நெருடலாக தெரிந்த அவள் பேச்சில் யோசனையானவன், தன் வேலையை விரைவில் முடித்துக் கொண்டு அங்கே செல்ல திட்டமிட்டு இருந்தான்..

அதற்குள் மறுநாள் அங்கிருந்து வந்த அழைப்பில் மொத்தமும் உடைந்து போன ராஜீவ் தன் தாயுடன் கொடைக்கானலுக்கு விரைந்து சென்றான்..

கொடைக்கானல் சென்ற சங்கீதாவை வரவேற்ற அவள் பெற்றோர் மருமகன் இல்லாததை கேட்கவும் அவனுக்கு வேலை முடிந்து வருவான் என்று கூறி அவர்களை சமாதானம் செய்தவள்,

அவர்களை ஏமாற்றி தன் காதலனை காண சென்றவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது..

சங்கீதாவின் திருமணம் பற்றி அறிந்த ஜோசப், அவளை பிரிந்து இருக்க இயலாமல் மிகவும் மனம் உடைந்து போய் தற்கொலை செய்து கொண்டான்..

அதை கேட்டு, உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்தவள், தன்னால் தான் அவன் உயிர் நீத்தான் என்று மறுகி, கண்ணீர் வடிக்க கூட இயலாமல் தவித்தவள், பூச்சிக்கொல்லி மருந்தை உண்டு தன்னையே மாய்த்துக் கொண்டாள்..

அவள் இறந்த செய்தி கேட்டு அங்கு வந்த ராஜீவ் மற்றும் அவனது தாயை கண்டவர்கள், 'இவர்கள்தான் ஏதோ அவளை கொடுமைப்படுத்தி உள்ளனர்..அதனால் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள்!..'

என்று அவர்களை பழி கூற, இடிந்து போனவர்களை, அவளது இறுதி காரியம் கூட செய்ய விடாமல் விரட்ட, அங்கிருந்து மனம் நொந்து கிளம்பியவர்கள்,

மலையிறங்கிக் கொண்டிருந்த போது தான் சாலையில் கிடந்த நிறைமாத கர்ப்பிணியான நித்யாவை கண்டனர்..

யாரென தெரியாமல் அவளது நிலை கண்டு பதறியவர்கள், தங்களது மன வேதனையை தூர வைத்து விட்டு, வண்டியில் அவளை ஏற்றிக் கொண்டு விரைய, வழியில் விபத்து நடந்து இருப்பதை கண்ட ராஜீவ், இறங்கி அங்கே செல்ல விழைந்தான்..

"தம்பி!..இந்த பொண்ணுக்கு பனிக்குடம் உடைஞ்ச ரொம்ப நேரம் ஆச்சு போல.. சீக்கிரம் ஹாஸ்பிடல் போகனும் பா!.. நாம வேணும்னா போலீஸ்க்கு போன் பண்ணி இங்க ஆக்சிடென்ட் ஆகி இருக்கிறதை சொல்லிடலாம்.."

"உடனே ஹாஸ்பிடல் போகனும் இல்லனா ரெண்டு உசுரையும் காப்பாத்த முடியாது." என்று லீலாவதி அவசரப்படுத்த, வேறு வழியின்றி அவர் சொன்னதை செய்து விட்டு அங்கிருந்து அவளை அழைத்துக்கொண்டு மலை இறங்கி வந்தனர்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top