• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 5

காலை வேளையின் பரபரப்பில்.. "அலமு!.. கொஞ்சம் மொளகா பொடி இருந்தா தாயேன்!.. திரிக்கனும் னு நினைச்சுண்டே இருந்தேன்.. மறந்துட்டேன்.."

"இந்த மாமாவுக்கு, என்ன தான் சட்னி, சாம்பார் னு வச்சாலும் அந்த இட்லிக்கு, பொடி இல்லனா ஒருவழி பண்ணிடுவார்!.." என்று கேட்டுக் கொண்டே வந்தார் பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி..

"இதோ கொண்டு வர்றேன் மாமி!.. சமையல் ஆயிடுத்தா?.." கேட்டுக் கொண்டு உள்ளே சென்ற அலமேலு, பொடியுடன் திரும்பிட,

"ஆயிண்டே இருக்கு!.. உன் மாமாவை ஆபிஸ் கிளப்பி விட்டா தான் நேக்கு சித்த நிம்மதி!.." என்று அலுத்த மாமி,

"இவளுக்கு இன்னிக்கு ஸ்கூல் இல்லையா?!.." என்று, படித்துக் கொண்டு இருந்த வித்யாவை பார்த்து கேட்டார்..

"ஸ்கூல் எல்லாம் அங்கேயே தான் மாமி இருக்கு.. எனக்கு தான் படிக்க லீவ் விட்டு இருக்கா!." என்று வித்யா குறும்புடன் பதில் அளிக்கவும்,

"இந்த குட்டிக்கு வாய போறேன்!.. சரிடி மா.. நல்லா படி என்ன!.. நான் வர்றேன் டி அலமு.. சீக்கிரம் போகலை னா மாமா என் காதையே பஞ்சர் ஆக்கிடுவார்!.." என்று கூறிவிட்டு மாமி கிளம்ப எத்தனிக்கவும்..

"அப்படி எதுவும் பஞ்சர் ஆயிடுத்து னா கவலைபடாதேள் மாமி!.. தெரு மொனைல ஒரு சைக்கிள் கடை இருக்கே ன்னோ அங்க போய் பஞ்சர் ஒட்டிக்கலாம்!.." என்று கூறிவிட்டு வித்யா நகைத்தாள்..

"வர வர இந்த சின்ன குட்டிக்கு வாய் அதிகம் ஆயிண்டே போறது!.. எனக்கு நாழியாயிடுத்து.. இல்லனா அவ்ளோ தான் நீ!.." என்று கூறி அவளது கன்னத்தை கிள்ளி, சிரித்து விட்டு சென்றார் மாமி..

"என்ன அம்மு இது பெரியவா கிட்ட இப்படி தான் பேசுவியா!?.." என தாய் கடிந்து கொள்ளவும், "சும்மா விளையாட்டுக்கு தானே அம்மா பேசுனேன்!.." என்று விளக்கம் அளித்தாள் மகள்..

"இதைத்தான் நானும் சொல்றேன்.. நீ இன்னும் விளையாட்டு புத்தியாவே இருக்க!..உன்னை எப்படி நான் தனியா வெளியே அனுப்ப முடியும்!?.."

"கொஞ்சமாவது பொறுப்பா இருக்கியா?.. எல்லாத்துலயும் நோக்கு விளையாட்டு தான்!.." என்று தாய் சில நாட்களாய் பாடும் அதே பல்லவியை தொடங்கினார்..

வித்யாவை சுற்றுலாவிற்கு அனுப்ப சம்மதித்தாலும், அலமேலுவின் மனதில் ஏதோ ஒரு சொல்லொணா பயம் சுழன்று கொண்டே இருந்தது..

கணவர் சொல்வதும் நியாயம் தானே, அவளும் இதுவரை ஒரு வருடமும் கூட, இவ்வாறு பிடிவாதமாய் கேட்டதில்லையே..

ஏதோ முதல்முறையாக வெகு ஆசையாக கேட்கிறாள், போய் வரட்டும் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அவ்வப்போது அவளுக்கு இது போல அறிவுரை மழை பொழியாமல் இருப்பதில்லை..

"என்ன ம்மா இது!!?..ஒரு சாதாரணமான கேலி தானே.. இதை போய் எது கூட எல்லாம் கனெக்ட் பண்றேள்!.. இனி நான் தமாஷா எதுவுமே, பேசவே இல்ல போதுமோ!!." என்றாள் கோபமாக..

தனது மனக்கிலேசத்தால் மகளை வருத்தியதை எண்ணிய அலமேலு, "அப்படி சொல்லல டா அம்மு!.. இதேபோல தானே மத்தவாள் அண்டேயும் பேசுவ.."

"அதனால தான் கவனமா பேச சொல்றேன்.. சரி விடு.. அம்மா ஏதோ நினைப்புல அப்படி சொல்லிட்டேன்.. கோவிச்சிக்காத டா!.." சமாதானம் கூறினார்..

என்னதான் தாய் சமாதானம் கூறினாலும் வித்யாவின் மனம் ஆற மறுத்தது..

'இப்படி சத்தமாய் சிரிச்சு பேசாதடி.. தனியாக எங்கேயும் போகாதே எப்பவும் பொண்ணுங்களோட சேர்ந்தே இரு..தெரியாதவா கூட அதிகமா பேசாதே..உடுப்பை ஒழுங்கா போடு!..' என்று

தான் சுற்றுலா செல்வதாய் சொன்னதில் இருந்து சில நாட்களாய் தொடரும் தாயின் அறிவுரைகளால் நிதானமான வித்யாவின் பொறுமை கூட காற்றில் போய்க் கொண்டு இருந்தது..

பொதுவாகவே இவ்வயது குழந்தைகளுக்கு அறிவுரை என்பது எட்டிக்காய் தான்!..

ஆனாலும் வித்யா போன்ற நிதானமான பெண்ணிற்கு தாயின் அறிவுரைகள் அவரது மன பயத்தை தெரிவித்தாலும்,

தேவையற்ற பயம் என்று அவள் நினைத்து இருந்தாலும் சில நேரங்களில் அவரின் செயல்களாலும், சொற்களாலும் எரிச்சல் ஏற்படுவதை அவளால் தவிர்க்க முடிவதில்லை..

"இப்படியே பேசறதெல்லாம் பேசிடுங்கோ.. அப்றம் சமாதானம் சொல்றது.. இப்ப எல்லாம் நீங்க பேசறச்சே எனக்கு எரிச்சல் தான் வர்றது!..ச்சே!.." என்று எரிந்துவிட்டு அறையில் சென்று அடைந்தாள்..

செல்லும் மகளை இயலாமையுடன் பார்த்துக் கொண்டு நின்ற அலமேலு, இனிமேல் அவளை எதுவும் சொல்லக் கூடாது என முடிவெடுத்தார்..

பரீட்சைக்கு போகும் போதெல்லாம் ஈஸ்வரியை சந்திக்கும் வேளையில் வித்யா தாயின் நடவடிக்கையை சொல்லி வருத்தப்படவும்..

"விடு டா தியா!.. அம்மா தானே.. அவங்க மனசுல இருக்கிறத யார்கிட்ட சொல்லுவாங்க?!.. இப்படி வெளியே சொல்லும் போது அவங்களுக்கும் மனசு ரிலாக்ஸ் ஆகுதோ.. என்னவோ..கண்டுக்காம விடு.."

"நீ இதுக்காக டென்ஷன் ஆயிட்டு எக்ஸாமுக்கு ஒழுங்கா படிக்காம இருந்துடாத.. அதை எல்லாம் பேசாம ஒதுக்கி வச்சிட்டு ஒழுங்கா கான்சன்ட்ரேட் பண்ணி படி!.." என்று அறிவுரைத்தாள் தோழி..

********************

"என்ன டா காம்பெடிஷன் நெருங்கிட்டு இருக்கே!.. ஒழுங்கா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கியா?!.." என்று பாலா நண்பனிடம் கேட்கவும்..

"அதெல்லாம் பண்ணிட்டு தான் டா இருக்கேன்!.." என்று யோசனையுடன் பதிலளித்தான் ரூபேஷ்..

"அப்றம் ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு ஏதாவது பிரச்சனையா!?.." என்று பாலா, நண்பனின் யோசனை முகத்தை கண்டு கேட்கவும்,

"பிரச்சனை னு இல்ல நட்பு.. அம்மா தான் போன் பண்ணி ஒரே அழுகை.. இங்க இல்லாத காலேஜா!.. நீ அங்க போய் படிக்கிறேன் னு உக்காந்துட்டியே.."

"சீக்கிரம் வீட்டுக்கு வா!.. எப்ப வருவ அப்படின்னு ஒரே புலம்பல்!.." என்று ரூபேஷ் கூறவும்..

"ஆனது ஆச்சு.. இதோ இன்னும் ரெண்டு மாசத்துல செம் முடிஞ்சதும் ஊருக்கு போயிட்டு வா!.. அப்றம் இன்னும் ஒரு வருஷம் தானே டா!.." என்று அவனுக்கு சமாதானம் கூறினான் பாலா..

"எனக்கு புரியுது டா பாலா.. அவங்களுக்கு அது புரியணுமே!.. அதான் இந்த காம்பெடிஷன் முடிஞ்சதும் ஒருக்கா போய் பார்த்துட்டு வரலாம் னு இருக்கேன்!.." என்றான் ரூபேஷ்..

"ஜிம்பிள்!!..அவ்ளோ தானே!.. இதுக்கு ஏன் இவ்ளோ யோசனை!.. ச்சில் மாப்பி!.." என்று அவனது தோளை தட்டி சொன்ன பாலா,

"ஆமா.. அடுத்த வாரம் காம்பெடிஷன் வருதே நீ எப்படி அந்த அரசூர் காலேஜ் க்கு போயிட்டு வர போற?!.." என்று வினவினான்..

"இதென்ன டா கேள்வி?!.. எப்பவும் போல பஸ் ல தான்!.." ரூபேஷின் பதிலில் அவனை முறைத்த பாலா,

"கிழிஞ்சுது!.. நீ அந்த பஸ் ல ஆடி அசைஞ்சு டடக்கா டடக்கா னு அங்க போய் சேர்றதுக்குள்ள காம்பெடிஷனே முடிஞ்சுடும்!.."

"ஒழுங்கா முதல் நாளே வந்து என் பைக் ஐ எடுத்துட்டு போ!.." என்று அன்புக் கட்டளை இட்ட பாலாவிடம், ரூபேஷும் தன் சம்மதத்தை தெரிவித்தான்..

பொதுத் தேர்வின் கடைசி பரீட்சையும் முடிந்து விட, ஈஸ்வரிக்கு தோழியுடன் இனி சுற்றுலாவில் மட்டுமே இருக்க முடியும் என்ற வருத்தம் மேலோங்கியது..

அதை வித்யாவிடம் சொல்லி ஈஸ்வரி சங்கடப்பட்டாலும், அந்நாள் முழுவதும் அவளுடன் கழிக்க போவது எண்ணி சற்று மகிழ்ச்சியாகவும் இருந்தது..

"ஓகே டி தியா!.. நாளைக்கு நல்லா டிரஸ் பண்ணிட்டு வா..ஒருநாள் ட்ரிப் தானே பெருசா திங்க்ஸ் எதுவும் பேக் பண்ண தேவையில்லை.. நான் நாளைக்கு கேமரா கொண்டு வரேன்.."

"நம்ம போட்டோஸ் எல்லாம் எடுப்போம்.. இனிமே அதானே நம்ம மெமரிஸ்!..சரியா!." என்று மிகவும் மகிழ்வுடன் கூறிக்கொண்டு தோழிகள் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்..

மறுநாள் சுற்றுலாவிற்கு வித்யா தன் உடைமைகளை எடுத்து வைத்து ஆயத்தமாக, ஏன் என்றே தெரியாமல் அலமேலுவின் மனதில் கலக்கமும் கூடியது..

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

கார்த்திக்கின் பேச்சில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்து, அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டு சில நொடிகள் நின்ற அமுதா,

மறுநாள் அவனிடம் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று, அதே யோசனையோடு கிளம்பி வீட்டிற்கு சென்றாள்..

கார்த்திக்கின் கேள்விகளில் இருந்து தப்பித்து ஓடி வந்த ரூபிணிக்கு 'அப்பாடா' என்று இருந்தது..

ஆனாலும் அமுதா கூறிய விஷயம் சற்று உறுத்தலாக இருந்த போதிலும் அதனை ஓரம் தள்ளிவிட்டு பிள்ளையை அழைக்கச் சென்றாள்..

"அம்மா!!.." என்று அழைத்துக் கொண்டே வந்த குழந்தையை கண்டதும், அவளது மனதில் இருந்த மற்ற எண்ணங்கள் அனைத்தும் மறைந்து போய், "பட்டுக்குட்டி!!.." என்று அவளை அணைத்துக் கொண்டாள்

"ஏம்மா லேத்து!?.. நான் உங்க வண்தி சத்தம் கேக்குமான்னு பாத்துத்தே இந்தேன்!.." என குழந்தை தாயை தேடியதை கூறவும்..

"ஸாரி டா பட்டு!.. அம்மாக்கு கொஞ்சம் வேலை இருந்தது.. அதான் வர லேட் ஆயிடுச்சு!.." என சமாதானம் கூறினாள் ரூபிணி..

"ஓகே வீத்துக்கு போவம்!.. நான் இன்னிக்கு நிய்ய ரைம்ஸ் பச்சேனே!.. பொம்மை எல்லாம் கூத செய்தேன்!.." என்று குழந்தை கண்களை விரித்து கதை பேசிக் கொண்டே வர ,

சின்ன மொட்டு தனது இன்றைய நாளை பற்றி விவரித்ததில், தாயும் அதை ஆர்வமாய் கேட்க, இருவரும் தங்கள் உலகில் மூழ்கி போயினர்..

வீட்டிற்கு வந்த இருவரும் அன்றாடம் செய்யும் பணிகளை முடித்துவிட்டு இரவு உணவை சமைத்து முடித்து, குழந்தைக்கு ரூபிணி உணவை ஊட்டிக் கொண்டு இருக்கும்போது அவளது கைபேசியில் அழைப்பு வந்தது..

அதனை கேட்ட குழந்தை வெகு ஆர்வமாக கண்களை விரித்து, "அப்பாவாம்மா?" என்று கேட்ட குழந்தையின் ஆர்வத்தை கண்டு ரூபினிக்கு 'ஐயோ' என்று இருந்தது..

"இல்லடா இது வேற.." என்று கூறிவிட்டு ரூபிணி அழைப்பை ஏற்க "நல்லா இருக்கியா டா?. பாப்பா என்ன பண்றா? ரெண்டு பேரும் சாப்டீங்களா?.." என்ற தொடர் கேள்வியில்..

"ஹையோ அக்கா! கொஞ்சம் கேப் விட்டு தான் கேளேன்!.. நான் பதில் சொல்ல வேண்டாமா? நீ பாட்டுக்கு கேள்வியை அடுக்கிட்டே போற!.." என்ற ரூபிணியின் பதிலில் குழந்தையின் கண்கள் ஒளிர்ந்தது..

"ஹை! பெய்ம்மா!" என்ற குழந்தையின் கத்தல் அலைபேசி வழியே அந்த பக்கமும் கேட்க, "ஸ்பீக்கர் போட்டு விடு. அந்த வாண்டு கிட்ட பேசனும்" என்றாள் அவள்..

தமக்கையின் பேச்சில் சிரிப்புடன் ஸ்பீக்கர் ஆன் செய்து பிள்ளையின் முன் நீட்ட, "பெய்ம்மா!.. நல்லா இக்கீங்கா?!" என்று நலம் விசாரித்தது சில்வண்டு..

"நான் நல்லா இருக்கிறது இருக்கட்டும்டி வாலு! உன்னை பெய்ம்மா கூப்பிடாத ன்னு சொன்னேனா, இல்லையா!?"

"நீ பெய்ம்மா சொன்னா எனக்கு பேய்ம்மா னு காதில விழுகுதுடி.. ஒழுங்கா தேவிம்மா சொல்லு, இல்லனா நீ முழு பேரை கூட சொல்லி கூப்பிடுடி." என்று அழும் நிலைமையில் அவள் புலம்ப,

"ஓகே பெய்ம்மா!" என்று சமர்த்தாய் பதிலளித்த குழந்தையின் பேச்சில், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்த ரூபிணி, வாய் விட்டு சிரித்தே விட்டாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top