• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 37

"ஹேய் சண்முகம்! சூப்பரு. கங்கிராட்ஸ்டா." என்று மகிழ்ச்சியில் அவளுக்கு அழைத்து பேசி துள்ளிக் குதித்தான் கார்த்திக்.

"அடிங்க்! என்னை அப்படி கூப்பிடாதேனு எத்தனை தடவை சொல்றதுடா எரும!இரு. இரு. என் பொண்ணு வந்து உன்னைய விட அதிகமா பேசியே பழி வாங்குவா பாரு." என்று தன் பழி தீர்க்கும் படலத்தை கூறிட,

சிரித்த சகோதரன், "ஹா ஹா, நாங்க எல்லாம் எப்படி பேசினாலும் சமாளிப்போம். எங்கே அந்த கோ-ப்ரொட்யூஸர்?" என்று கார்த்திக் தன் அக்காவின் கணவனை கேட்க,

"இதோ கிட்ட தான் இருக்கார். இரு தர்றேன்." என்று தன் கணவனிடம் வழங்கினாள் தீபிகா.

"சொல்லு மச்சான்!" என்ற சித்தார்த்திடம், " அப்றம் மாமா அடுத்த போஸ்ட் க்கு ப்ரோமோட் ஆகிட்டீங்க போல." நக்கலடித்தான் மச்சினன்.

"நாங்க மட்டுமா, நீங்களும் தான். அப்றம் அப்படியே ஒரு பத்து மாட்டு வண்டியில சீர் செனத்தியை ரெடி பண்ணி வை."

"மருமக புள்ள வந்ததும் 'தாய்மாமன் சீர் சொமந்து வரான்டி!.. தங்க கொலுசு கொண்டு தரான்டி!..'னு பாடிட்டே வந்து சேர வேண்டியது தானே!.." என்று கலாய்த்தான் சித்தார்த்.

"அதுசரி! மாமனுக்கு ஆசையை பாரேன். உங்களுக்கு எல்லாம் எங்கக்காவை கட்டிக் கொடுத்ததே பெரிய விசயம். இதுல பத்து மாட்டு வண்டில சீர் வேணுமோ." கார்த்திக்கும் பதிலுக்கு வார,

மாமனும் மச்சினனும் தங்கள் சந்தோஷத்தை கேலியோடும் கிண்டல்களோடும் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு இருந்தனர்.

"அப்றம் மாமா, அக்காவை பத்திரமா பார்த்துக்கங்க." அறிவுரைத்த கார்த்தியிடம், "என் பொண்டாட்டி, புள்ளையை பத்திரமா பார்த்துக்க எனக்கே சொல்றியா மச்சான்?" என்று சிரித்தான் சித்தார்த்.

"அதுக்கில்ல, இந்த டைம்ல கொஞ்சம் கேர் ஃபுல்ஆ இருக்கனும்னு சொல்லுவாங்களே. அதான் சொன்னேன்." கார்த்திக் தயங்கிக் கொண்டே சொல்ல,

"அடேய் கார்த்திகைபாலா!நானே டாக்டர் தான்டா. எனக்கு நீ சொல்லி தர்றியா?"என்று இடைபுகுந்தாள் தீபிகா.

"அட, ஆமா சண்முகம்! அதை மறந்துட்டேன் பாரேன்." என்று அவளை வம்பிழுக்க, "உனக்கு இருக்குடா ஒரு நாளைக்கு," என்று கருவிய தீபிகா, "அம்மா எங்க டா கார்த்திக்?" என கேட்டாள்.

"அம்மாவா? அதெல்லாம் விசயம் கேள்விப்பட்டதில் இருந்து கோவிலுக்கு ஓடியாச்சு. இப்ப எல்லாம் ஒரே பக்தி மயம்தான்." என்று சற்று கேலியுடன் உரைத்தான்.

மகள் கருவுற்றிருக்கும் செய்தி கேட்டதில் இருந்து, அவள் நல்லபடியாக பிள்ளை பெற்று எடுத்து நலமுடன் இருக்க வேண்டும் என்று என்று தினமும் கோவில் செல்கிறார்.

மேலும் அடிக்கடி தீபிகாவிற்கு காதே அடைக்கும் அளவுக்கு அறிவுரை மழை பொழிவார் ராஜேஸ்வரி.

"அம்மா! அதான் அத்தை இருக்காங்களே. அவங்களும் நல்லா தான் பார்த்துக்கிறாங்கம்மா. ஒன்னும் கவலைப்படாதீங்க." என்று அவரை சமாதானம் செய்வதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

தீபிகாவின் புகுந்த வீடு வெகு தூரம் இல்லை ஆதலால், கார்த்திக் விடுமுறையில் வரும் போதெல்லாம் அடிக்கடி சென்று அவளை கண்டு வந்தனர்.

அவளது மாமனார் சித்தார்த்தின் கல்லூரி காலத்திலேயே இறந்து விட, மாமியார் மட்டும் தான், தீபிகாவை மிகுந்த அன்போடு கவனித்துக் கொண்டார்.

நாட்கள் நகர, கார்த்திக்கின் கல்லூரி படிப்பும் முடிந்து விட, அரசு வேலைக்கான தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு இருந்தான்.

"ஏம்ப்பா கார்த்திக்!உனக்கும் வயசாகுதே, கல்யாணத்துக்கு வரன் பார்க்கலாமா?" என்று கேட்டு அணுகுண்டு வீசினார் ராஜேஸ்வரி.

"தாயே!ராஜி மாதா!என்னாது இது? இந்த காலத்துல பொண்ணுங்களே இந்த வயசுல கல்யாணம் பண்றதில்லையே."

"எனக்கு செய்யனும் நினைக்கிறீங்களா? என்ன ஒரு புத்திசாலித்தனம்!அதுக்கெல்லாம் இன்னும் வருஷம் இருக்கு ராஜி மாதா." என்று அலறி விட்டான் பையன்.

"போடா வாயாடி! உனக்கும் ஒரு கல்யாணத்தை முடிச்சுட்டா என்னோட கடமையும் முடிஞ்சுடும்." என்று தன்னாற் போல் பேசிய அவரை விசித்திரமாக பார்த்தவன்,

"ஏம்மா! உங்களோட கடமையை முடிக்கிறதுக்காக என்னைய மாட்டி வைக்க ப்ளான் பண்றீங்களே?இது நியாயமா?அடுக்குமா?சொல்லுங்க தெய்வமே!" நடிகர் திலகத்தை மிஞ்சும் நடிப்பில் கேட்டான் கார்த்திக்.

"போடா போக்கிரி! இப்படியே சொல்லிட்டு இரு. உன்னோட கல்யாணத்துக்கு நான் இருப்பேனோ!மாட்டேனோ! தெரியல." ஏதோ ஆருடம் போல் தாய் கூறியதும் கார்த்திக் பதறி,

"அபச்சாரம்!அபச்சாரம்!என்னம்மா இப்படி எல்லாம் பேசறீங்க? பகவானே!" என்றவனை,

கூர்மையாக பார்த்த ராஜேஸ்வரி, "என்னடா திடீர்னு ஐயர் வீட்டு பாஷை எல்லாம் பேசுற? என்ன, எதாவது ஐயர் பொண்ணை லவ் பண்றியா?" என்றார்.

திருதிருவென விழித்தவன், 'என்னடா கார்த்தி! ஐயர் மாமி நினைப்புல இப்டி பேசி தொலைச்சிட்ட. சரி சமாளிப்போம்.' என்று நினைத்தவன்.

"அதில்ல ராஜி மாதா, நேத்து ரொம்ப நாள் கழிச்சு நம்ம அவ்வை சண்முகி படம் பார்த்தேன். அதோட எஃபெக்ட்.அவ்ளோ தான். ஹி ஹி" என்று சமாளித்தான் பின்பு,

"ஏன் மாதா ஜி! நான் அப்படி எதாவது பொண்ணை லவ் பண்ணினா என்ன பண்ணுவீங்கோ!?" என்று அடிப் போட்டு பார்த்தான்.

"என்ன பண்ண முடியும்?எனக்கு ஒரு வேலை மிச்சம்னு சந்தோஷ பட வேண்டியது தான்." என்று கூலாக சொன்ன தாயை வாயைப் பிளந்து பார்த்தான் கார்த்திக்.

"என்னம்மா இவ்ளோஓஓ ஈஸியா சொல்றீங்க? நீங்க ரொம்ப டெர்ரர் மாம்னு நினைச்சுட்டு இருந்தேனே." மகன் ஆர்வத்துடன் கேட்க,

"வீம்பு பிடிச்சு என்னடா பண்ண போறேன்.நாம வாழப் போறது என்னவோ கொஞ்ச காலம்.அதுல இந்த வறட்டுப் பிடிவாதம் பிடிச்சு என்ன பண்ண போறோம்." திடீரென வேதாந்தமாக பேசிய அன்னையை புதிதாக பார்த்தான் அவன்.

"நீங்க ரொம்ப மாறீட்டீங்கம்மா. எப்போ இருந்து இப்படி ஃபிலாஸஃபி பேச தொடங்குனீங்க?" என்று கேட்ட மகனிடம்,

"சில விசயங்களில், காலம் கடந்து தான் ஞானோதயம் வருது. ம்ஹ்ம்ம்! என்ன செய்ய!?" என பெருமூச்சுடன் சொன்ன தாயை யோசனையுடன் பார்த்தான் கார்த்திக்.

தாயின் மனதில் ஏதோ விசயம் அழுத்துகிறது என்பதை உணர்ந்தவன் அதை கண்டறிந்து களைய வேண்டும் என முடிவு செய்தான்.

நாட்கள் அதன் போக்கில் நகர, தீபிகாவின் மணிவயிற்றில் உதித்த முத்தும் வளர்ந்து வர, அவளுக்கு வளைகாப்பு வைக்கும் நாளும் நெருங்கியது.

தீபிகாவின் வளைபூட்டலை சிறப்பாக செய்து, தாய் வீடு வந்த மகளை கண்ணின் மணி போல கவனித்தார் ராஜேஸ்வரி.

கார்த்திக்கும் படிப்பை முடித்து அந்த ஊரிலேயே கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டு, தேர்வுக்கும் தயாராகி கொண்டு இருந்தான்.

ஒரு சில வருடங்களுக்கு பிறகு சகோதரியுடன் வெகு நேரம் செலவழிப்பதில் மனம் மகிழ்ந்து இருந்தான் கார்த்திக்.

தீபிகாவின் பிரசவத்திற்கு ஒரு மாதமே இருந்த சூழ்நிலையில் தான் எதிர்பாராமல் அந்த சோகம் நிகழ்ந்தது. சித்தார்த்தின் தாய் தூக்கத்திலேயே உயிர் நீத்தார்.

குழந்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த குடும்பத்தினரை, அவரது இழப்பு வெகுவாக அசைத்தது.

மணம் ஆனது முதல் தன்னை மகளைப் போல தாங்கிய மறு அன்னையை இழந்த துக்கம் தீபிகாவை வெகுவாக வாட்டியது.

சித்தார்த்தும் மனமுடைந்து போக, கார்த்திக்கும், ராஜேஸ்வரியும் அனைத்தையும் முன்னின்று அவரது காரியங்களை செய்தனர்.

'அவனது தாயே மீண்டும் அவனது பிள்ளையாக பிறப்பார்!' என்று சித்தார்த்தை தேற்ற முயன்றதில், ஓரளவு வெற்றி கண்டனர் தாயும் மகனும்.

அவளது மன வருத்தம் வயிற்றில் இருக்கும் பிள்ளையையும் பாதிக்கும் என்று அவளுக்கும் எடுத்துரைக்க, அவளே மருத்துவர் தானே, தன் நிலையை உணர்ந்து மனதை தேற்ற முயன்றாள்.

நாட்களும் யாருக்கும் காத்திராமல் நகர, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீபிகாவின் பிரசவ நேரமும் நெருங்கியது.

"தீபிமா. இந்த பார்லி கஞ்சியை கொஞ்சம் குடியேன்டா." என்று அவளை ராஜேஸ்வரி கெஞ்சிக் கொண்டு இருக்க, "அது ஒரு மாதிரி இருக்கும்மா. வேணாம்." என அவள் மறுத்து கொண்டிருந்தாள்.

அப்போது வயிற்றில் சுருக்கென்று ஒரு வலி ஏற்பட்டது. அவளும் சற்று நேரம் பொறுத்து பார்ப்போம் என்றிருக்க, வலி சிறிது சிறிதாக கூடிக் கொண்டே போக அன்னையிடம் கூறினாள்.

சில நொடிகளில் அந்த வீடே பரபரப்பானது. சித்தார்த்தும் அன்னை இறந்த பிறகு இவர்களுடனே தங்கிவிட, உடனே இரு ஆண்களுக்கும் அழைத்து சொன்னார் ராஜேஸ்வரி.

தீபிகாவை மருத்துவமனையில் அனுமதித்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேர காத்திருப்பிற்கு பிறகு,

அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் வடிய, அவள் மட்டுமே அழுகையில் துள்ள, பூமியில் ஜனித்தாள் அந்த மலர் கொத்து.

இழந்த மகிழ்ச்சியை அந்த குடும்பத்தில் மீண்டும் பிறக்க செய்த அந்த தேவதையை தரையில் விடாமல் கொண்டாடி மகிழ்ந்தனர் குடும்பத்தினர்.

சித்தார்த்தும் தன் தாய் மீண்டும் தன்னிடம் மகளாக வந்ததாக எண்ணி அகமகிழ்ந்து போனான்.

ஓர் நன்னாளில் பிள்ளைக்கு பேர் சூட்டும் வைபவமும் வைக்கப்பட, அனைவரும் என்ன பெயர் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

"குழந்தை பேரை காதுல மூணு தரம் சொல்லுங்கோ." என்று ஐயர் உரைத்ததும்,

குழந்தையின் காதருகே குனிந்த தீபிகா, "தாரா! தாரா! தாரா!" என்றதில், சித்தார்த் கண்களில் நீர்ப்பெருக்கு.

தன் தாயின் பெயரான தாரா தேவி என்ற பெயரின் பாதியை குழந்தைக்கு சூட்டிய மனைவியின் செயலில் உள்ளம் குளிர்ந்தான்.

கைக்குழந்தையை சமாளிக்க எத்தனை பேர் இருந்தாலும் போதாது என்ற பேச்சிற்கேற்ப, தாராவுடனே அனைவரது நேரமும் நிறைந்தது.

குழந்தையின் ஒவ்வொரு அசைவும் புகைப்படமாகவும், காணொளி காட்சிகளாவும் பதியப்பட்டது.

சித்தார்த்தும் தன் பணியை வீட்டில் இருந்து பார்க்கும் படி மாற்றிக் கொள்ள, மகளுடன் அதிக நேரம் செலவிட்டான்.

கார்த்திக் தன் பணி நேரம் முடிந்ததும் வந்து மருமகளுடன் விளையாட்டு காட்டிக் கொண்டு இருக்க,

"டேய் சண்முகம்! குட்டிமா உன்னை போல இல்ல. பயங்கர ஷார்ப்ஆ இருப்பா போல, எப்படியோ குடும்பத்துக்கு ஒரு ஊமை கோட்டான் போதும்னு கடவுள் டிசைட் பண்ணி இருப்பாரோ?" என்று தமக்கையை வம்பிழுத்தான்.

"அம்மா! பாருங்கம்மா இவனை, என்னை வேணும்னே வெறுப்பேத்துறான்." என்று சிணுங்கிக் கொண்டே புகார் வாசித்தாள்.

"டேய் அரட்டை! புள்ளையை ஏன் கிண்டல் பண்ற? அவங்கப்பா பேர் வைச்சதுக்கு அவளை ஏன்டா கேலி செய்ற?" மகளுக்கு வக்காலத்து வாங்கிய அன்னையை அதிர்வுடன் பார்ப்பது போல நடித்தவன்,

"ராஜி மாதா! நீயா பேசியது?! என் அன்பே நீயா பேசியது!?" என்று திரைப்பாடலை பாடிக் கொண்டு வினவினான் கார்த்திக்.

"போடா லூசு பயலே! உன்னையும் வைச்சு செய்ய ஒருத்தி வருவாள்ல, அப்ப பார்த்துக்கிறேன்." என்று அன்னை சொன்னதும், அவ்வளவு தான் மகன் கப்சிப்.

அந்த குடும்பத்தின் நாட்கள் இவ்வாறாக மகிழ்வுடன் சென்று கொண்டிருந்த வேளையில், தனக்கு கிடைத்த ஒரு தகவலில் மகிழ்ந்த தீபிகா,

அன்னையிடம் சொல்ல முடியாத காரணத்தால், கணவனிடம் விளக்கி அங்கு செல்ல வேண்டுமென அடம் பிடிக்க,

"அது ரொம்ப கூலான இடம்டா தீபு. உனக்கு சளி எதுவும் பிடிச்சதுனா பாப்பாவுக்கு சிரமம் ஆகிடும். அதுவுமில்லாம அத்தை விட மாட்டாங்க." என்று சூழ்நிலையை எடுத்து உரைத்தான்.

"எனக்கு அதெல்லாம் தெரியாது. அம்மா கிட்ட பேசி எப்படியாவது சமாளிச்சு என்னை கூட்டிட்டு போங்க."என்று அடம் பிடித்தாள் இல்லாள்.

"சரி, சரி.. அத்தை கிட்ட எதாவது ஒன்னு சொல்லி சரி கட்டுறேன். ஓகே வா!?" என்று கூறியவன்,

சொன்னதை போலவே செய்த சித்தார்த், ராஜேஸ்வரியின் அரைகுறை சம்மதத்தை பெற்று, குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய கட்டாயத்தால் தம்பதியினர் இருவரும் குழந்தையுடன் அங்கு பயணப்பட்டனர்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top