• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
42
கானல் - 35

வித்யா-கார்த்திக்கின் திருமணப் பதிவு முடிந்த பிறகு, ஈஸ்வரியும் ரூபேஷும், தன் பெரியப்பா வீட்டில் விருந்திற்கு அழைத்ததால் அங்கு சென்றனர்.

செமத்தியான விருந்தை முடித்து விட்டு, தம்பதிகள் சற்று ஓய்வெடுக்க என்று, தங்களுக்கென அளிக்கப்பட்ட அறைக்கு சென்றிட, அதுவரை அவளது மனதில் இருந்த சந்தேகத்தை ரூபேஷிடம் கேட்டாள்.

"கார்த்திக் உங்களோட சீனியர்னு தானே சொன்னீங்க ஜிஷ்ணு?" என்று அவள் தொடங்கியதும், அதை ஆமோதித்தான் ரூபேஷ்.

"கார்த்திக்கிற்கு அம்மா மட்டும் தான்னு சொன்னாங்க ஜிஷ்ணு. அது உண்மையா?" என்று தன் சந்தேகத்தை கேட்டாள்.

"யார் உங்கிட்ட அப்படி சொன்னாங்க அம்மு?" என்று ரூபேஷ் வினவிட,

"அவர் தான் அப்படி சொன்னாரு. வித்யாவை விரும்பறதா அவர் எங்கிட்ட சொன்னதும் அவரைப் பற்றி நான் கேட்டேன், அதுக்கு 'நானும் அம்மாவும் மட்டும் தான். மற்றப்படி என்னைப் பற்றி சொல்லிக்கற அளவுக்கு ஒன்னுமில்ல'னு அவர் தான் சொன்னார்."

"ஆனா, எனக்கென்னமோ அது உண்மையா இருக்காதோனு தோணுது." என்று தன் எண்ணத்தை பகிர்ந்தாள்.

" உன்னோட இன்ட்யூஸன் சரி தான் அம்மு. அவரை பற்றி எனக்கு தெரிஞ்சது, சீனியர்க்கு ஒரு அக்கா இருக்காங்கனு மட்டும் தெரியும். அவங்க எம்.பி.பி.எஸ் படிச்சுட்டு அங்க ஊர்லேயே க்ளினிக் வச்சு இருக்காங்க." என்று கூறி விட்டு மேலும்,

"அப்றம், எப்பவும் அவரோட பர்சனல் பற்றி அதிகமா பேச மாட்டார். எங்க கிட்டவும் பர்சனலா எதுவும் கேட்க மாட்டார்.. இதுவே எனக்கு பாலா சொல்லி தான் தெரியும்."

"அவன் கூட தான் சீனியர்க்கு கொஞ்சம் ஒட்டுதல் அதிகம். மற்றப்படி எனக்கு அவரை பத்தி ரொம்ப டீடெய்ல்டுஆ தெரியாதுடா அம்மு." தனக்கு தெரிந்ததை ரூபேஷ் சொல்லி முடித்தான்.

"அக்கா இருக்காங்களா?! ஆனா?"என்று அதிர்ந்தவள், "அப்றம் ஏன் அன்னிக்கு நான் கேட்டதுக்கு அம்மா மட்டும் தான்னு சொன்னாரு?" என யோசனையுடன் கேட்டாள்.

"தெரியலையேமா? அதை அவர் கிட்ட கேட்டா தான் தெரியும். ஆமா நீ ஏன் தீவிரமா அவரைப் பற்றி விசாரிக்கிற?" என்று புரியாமல் வினவினான் ரூபேஷ்.

"இல்ல, வித்யா லைஃப்ல நிறைய அடிப்பட்டு இப்ப தான் தேறி வந்து இருக்கா. மறுபடியும் அவ மனசு கஷ்டப்படற மாதிரி எதுவும் நடந்திட கூடாதே னுட்டு தான் கேட்டேன்." என்று ஈஸ்வரி பதிலளித்தாள்.

"பொம்முகுட்டி லைஃப்ல அப்படி என்ன நடந்துச்சு!?" என்று ரூபேஷ் அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டு பின்னர், "ஸாரி! அது, அப்படியே சொல்லி பழகிடுச்சு. "

தன் கணவன் இன்னொரு பெண்ணை செல்லப்பெயரிட்டு பேசினால் எந்த மனைவிக்கும் கோபம் வர தானே செய்யும் அதனால் ஈஸ்வரி எதுவும் தவறாக எடுத்துக் கொள்வாளோ என்றெண்ணி கூறினான்.

"ம்ப்ச்! அது பரவால்லங்க. ஆனா கார்த்திக் ஏன் அப்படி சொன்னார்?" அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தனது குழப்பத்தில் உழன்று கொண்டு இருந்தவள் பின்னர் தயங்கிக் கொண்டே, "அவர் நல்லவர் தானே ஜிஷ்ணு?" என்று கேட்டாள்.

"அட என்னமா நீ? அதெல்லாம் சீனியர் ரொம்ப நல்லவர் தான். அவரோட வாழ்க்கையில என்ன நடந்துச்சுனு நமக்கென்ன தெரியும். அவர் ஏதோ காரணத்தால தான் உங்கிட்ட அப்படி சொல்லி இருப்பார்."

"அதுக்காக அவரோட கேரக்டரை சந்தேகப்படாதே." என்று விளக்கியவன்,"சரி, நம்மோட ப்ரைவேட் டைம்ல கூட அவங்கள பத்தி தான் பேசனுமா?"

"நானே இந்த பத்து நாள் லீவு முடிஞ்சு இனி ஊருக்கு போனா திரும்பி வர ஒரு மாசம் கூட ஆகும். அதுவரை என்னை கவனியேன்." என்று தாபத்துடன் கேட்க,

"ம்ம்ம், அதுக்கு சீக்கிரமே ட்ரான்ஸ்பர் கேளுங்கனு சொன்னேன்."என்று செல்லமாக அலுத்துக் கொண்டாள்.

"நானா கேட்காம இருக்கேன். அவனுக தர இழுத்தடிக்கிறானுக. என்னத்த சொல்ல. கண்டிப்பா அடுத்த மாசம் கிடைச்சுடும்னு சொல்றாங்க.. பார்ப்போம்."என்றான் ரூபேஷ் பெருமூச்சோடு.

*************

தாரிணியிடம் வித்யா கத்திக் கொண்டு இருக்க, அப்போது "உள்ள வரலாமா?" என்று கார்த்திக் கதவைத் தட்டி கேட்டான்.

'என்னைய பேச சொல்லிட்டு நீயேன்டா இப்ப வந்த? எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா!னு அவ இனி ஆடுவாளே.

வான்டட்ஆ வந்து மாட்டிக்கிட்டியே!' மனதிற்குள் அவனுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் தாரிணி.

"வாங்க ஸார்! வாங்க! இன்னும் என்னென்ன எல்லாம் மறைச்சு வைச்சு இருக்கீங்க? ப்ளீஸ்! "

"இப்பவே மொத்தமாக சொன்னீங்க னா என்னோட மனசை அதை தாங்குற அளவுக்கு தயார்படுத்திக்க முடியும்." என்று அவனிடம் பாய்ந்தாள்.

அவள் கார்த்திக்கிடம் பேசத் தொடங்கியதும், தாரிணியை வெளியேறுமாறு கண்களில் சமிக்ஞை காட்டினான்.

'நீயாச்சு, அவளாச்சு, ஆளை விடுங்கப்பா.' என்று அவள் வெளியேறியதும் வித்யாவின் அருகில் வந்து அவளை நிதானமாக பார்த்துக் கேட்டான்.

"இப்ப எதுக்காக இப்டி சத்தம் போட்டுட்டு இருக்கேமா நீ? குழந்தைகள் வெளியே பயப்படறாங்க. அம்மா சந்திரமுகியா மாறிட்டாளோனு நினைச்சு." சிறு கேலியுடன் பேசினான்.

"ம்ம்ம், ஆமா சார்! எனக்கு தான் பைத்தியம். அதான் இப்படி கத்திக்கிட்டு இருக்கேன்." என்று பல்லைக் கடித்துக் கொண்டு பதில் கூறினாள்.

"கூல்..கூல்டா விதுமா! உனக்கு இப்ப என்ன தெரியும்? நீ பொறுமையா கேட்டா சொல்லப் போறேன்!."

"அதுக்கு ஏன் காஞ்சனா மாதிரி எல்லாம் பண்றமா? கொஞ்சம் பயமா தான் இருக்கு." என்று பயப்படுவது போல் நடித்தான்.

"விளையாடாதீங்க கார்த்தி. நான் சீரியஸ்ஆ பேசிட்டு இருக்கேன். உங்களுக்கும் பாப்பாக்கும் என்ன சம்மந்தம்? அப்ப.. அப்ப.." என்று அதைக் கேட்க கூட அவள் மனம் பதறியது.

"ரொம்ப ஓவரா யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காதேடா."என்று அவளருகில் பேசிக் கொண்டே வந்தவன் அவளை ஆதரவாக தோளோடு அணைத்துக் கொண்டான்.

"குட்டிமாக்கும் எனக்குமான விசயம் மட்டும் தான் உங்கிட்ட நான் சொல்லலை. மற்றப்படி உனக்கு தெரிஞ்ச அத்தனை விசயமும் சத்தியம்." அவளது கண்களை ஊடுருவி பார்த்தவன்,

"உன்னை நான் முதன்முதலா பார்த்தது வேணும்னா ஒரு மறக்க வேண்டிய சூழல் தான். ஆனா என் மனசு முழுக்க நீ தான் நிறைஞ்சு இருக்கடா. உனக்கான சிந்தனை மட்டும் தான் என்னை அத்தனையும் செய்ய வைச்சது."

"ப்ளீஸ்! எக்காரணம் கொண்டும் என்னோட காதலை மட்டும் சந்தேகப்படாதே விதுமா." என்று கண்களில் சிறு வலியுடன் கெஞ்சலாக சொன்னான் கார்த்திக்.

"அப்றம் ஏன் கார்த்தி? ஏன் இப்படி பண்ணுனீங்க? இப்படி உங்கள பற்றி ஒவ்வொரு விசயமா தெரிய வரும் போது என்னால.. என்னால.."என்று அவள் எப்படி சொல்ல என தடுமாறினாள்.

பின்பு தன்னை சரி செய்து கொண்டு, "எங்கிட்ட இருந்து நீங்க மறைச்ச விசயம் ஒவ்வொன்னா தெரிய வரும் போது உங்க மேல இருக்கற நம்பிக்கையை அசைக்குது அது."

" உங்களுக்கு நான் சொல்றது புரியுதானு எனக்கு தெரியல? நான் நேத்து எவ்ளோ நிம்மதியா தூங்கினேன்னு உங்களுக்கு தெரியுமா?" மனவலியுடன் கூறிய வித்யா.

"ஆனா இன்னைக்கு அதை அப்படியே துணி கொண்டு துடைச்ச மாதிரி அழிச்சுட்டீங்க. வலிக்குது கார்த்திப்பா. ரொம்ப வலிக்குது."

என்று வலி நிறைந்த அழுகையுடன், அதற்கான மருந்தாக, அந்த வலியை தந்தவனின் மார்பிலேயே தஞ்சம் அடைந்தாள்.

"நீ இவ்ளோ வருத்தப்படுற அளவுக்கு இது ஒன்னும் பெரிய விசயம் இல்லைடா கண்ணம்மா. அழாத விதுமா!"

அவள் கண்ணீரை கண்டு கலங்கிய தன் விழிகளை சிமிட்டிக் கொண்டே அவளை தன்னோடு இறுக அணைத்து அமைதியாக்க முயன்றான்.

அந்த அணைப்பில் அமைதியடைந்த அவள், சிறிது நேரத்தில் தேம்பலுடன், "அப்படினா உண்மை என்னனு இப்பவாவது எங்கிட்ட சொல்லுங்களேன்." என்று கெஞ்சலுடன் கேட்டாள் அவள்.

ஆழ மூச்சிழுத்து விட்டவன், "என்னோட அம்மா பற்றி நேத்து நீ கேட்டல, எனக்கு அம்மா மட்டும் இல்ல. ஒரு அக்காவும் இருந்தாங்க." என்று அவன் சொல்லவும்,

வித்யா அவனை கேள்வியாக பார்த்து," இருந்தாங்கனா!? அப்ப!?" என்று கேட்காமல் நிறுத்த, அதை வேதனையுடன் தலையசைத்து ஆமோதித்தான் கார்த்திக்.

*********

சில வருடங்களுக்கு முன்பு..

"என்னம்மா இது சிக்கன் குழம்புல காரமே இல்லாம இருக்கு!?" என்று முகத்தை சுழித்துக் கொண்டே கேட்டான் கார்த்திக்.

"ஏம்பா தம்பி காரத்திகைபாலா! இதுக்கு மேல காரம் சாப்பிட்டா வயித்துல இருக்கற குடல் கூட கருகி போயிடும்." என்று அவனை வம்பிழுத்தாள் தமக்கை.

"அப்படிங்களா சண்முகம்? சரிங்க டாக்டர், நீங்க சொன்ன கேட்க வேண்டியது தான்." என்று கடுப்புடன் அவளை கலாய்த்தான் உடன்பிறப்பு.

"பாருங்கம்மா இவனை, என்னை அப்படி கூப்பிடாத னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். மறுபடி மறுபடி அதே மாதிரியே கூப்பிடுறான்." சிணுங்கலுடன் தாயை நாட்டாமை ஆக்கினாள் தமக்கை.

"அட, அதானே உன் பேரு சண்முக...தீபிகா! பேரை சொல்லி கூப்பிட்டா கூட தப்பாம்மா?" என அவனும் தாயிடம் பிராது கொடுத்தான்.

"போடா ஹல்க்! அதுக்கு தான் தீபிகா னு இன்னொரு பேர் இருக்குல, அதை கூப்பிட வேண்டியது தானே." என அவனுடன் வாக்குவாதம் செய்தாள் தீபிகா.

"அப்ப நீயும் கார்த்திக் னு மட்டும் சொல்ல வேண்டியது தானே, போண்டா கோழி." என்று அவளை கிண்டல் அடித்தான் தம்பி.

"இப்ப ரெண்டு பேரும் அமைதியா சாப்பிடுறீங்களா, இல்ல சாப்பாட்டை எடுத்துட்டு போகட்டுமா?" என்று மிரட்டினார் இந்த இரு வானரங்களின் குடியிருந்த கோவிலான ராஜேஸ்வரி.

அவரது கறாரான பேச்சை கேட்டதும் கப்சிப் என்று உணவை உண்டு முடித்தனர் பிள்ளைகள் இருவரும்.

அக்காவும் தம்பியும் சேர்ந்தாலே இது போல வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டு கலகலப்பாக இருப்பர்.

கண்டிப்பான தாய் ராஜேஸ்வரியின் கட்டுப்பாட்டில் சில நேரம் மூச்சடைக்கச் செய்யும் போது தம்பியின் தயவால் இப்படி சிறு சிறு சந்தோஷங்களை ஏற்படுத்திக் கொள்வாள் தீபிகா.

தந்தை இருந்த வரை எதுவும் பெரிதாக தெரியவில்லை. அவரிடம் ஒட்டிக் கொள்வாள். அவரும் இறந்த பின் கார்த்திக் அவளது மனநிலையை மாற்ற இவ்வாறு சில செல்ல சண்டைகள் இடுவான்.

மகள் திருமண வயதை எட்டியதால் ராஜேஸ்வரி, அவளுக்கு வரன் பார்க்க தொடங்க, தீபிகாவிற்கு மேல்படிப்பு படிக்க ஆசை. இருப்பினும் தாயின் பேச்சிற்காக அதை கிடப்பில் போட்டாள்.

கார்த்திக் மட்டும் தாயிடம் பேசியே தன் காரியத்தை சாதித்துக் கொள்ள, அப்பாவி அக்காவிற்கு அந்த கலை வரவில்லை அதனால் தாய் வேண்டாம் என்றால் விட்டு விடுவாள்.

கார்த்திக் தனது இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் வரை அவள் தனிமை உணர்வை உணராதவாறு அவளிடம் வம்பிழுத்து, வாயடித்து, அவளை கலகலப்பாக வைத்திருப்பான்.

ஆனால் அவன் முதுநிலை படிப்பிற்காக வெளியூர் சென்ற பின், விடுமுறை நாட்களில் வரும் பொழுது முழுவது‌ம் அவளுடனே சுற்றுவான்.

அவளது க்ளினிக்கில் கொண்டு விடுவதும், வேலை முடிந்ததும் அவளை வீட்டிற்கு அழைத்து வருவதும் அவனது வாடிக்கையாகி போனது.

அவ்வாறு ஒரு நாள் அவளை அழைக்க வந்த போது தான் வித்யாவை கண்டவன், அவளை காலம் முழுவதும் தன்னோடே வைத்து,

வலியை காட்டிய அவளது பூமுகத்தில் புன்னகையை மட்டுமே பூக்கச் செய்ய வேண்டும் என மனதில் உறுதி எடுத்தவன், அவளில் தன்னை தொலைத்தான் கார்த்திக்.


அன்று வீட்டிற்கு திரும்பும் போது எப்பொழுதும் எதாவது வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வரும் தம்பியின் மௌனம் தீபிகாவை யோசிக்க செய்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top