Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 3
"அம்மா! ப்ளீஸ்ம்மா! இந்த ஒரு தடவை தானே கேட்கிறேன். இத்தனை வருஷம் ஸ்கூல்ல டூர் கூட்டிண்டு போனா. நான் என்ன போய் ஆகணும்னு அடம் பிடிச்சேனா?"
"இந்த வருஷம் தானே கடைசி வருஷம், அதனால தானே கேட்கிறேன். ப்ளீஸ் அம்மா! இந்த ஒரு தடவை போயிட்டு வந்துடுறேனே." கெஞ்சலில் தாயை கரைக்க நினைத்தாள் வித்யா.
"அதெல்லாம் முடியாது! வேணாம்னா வேணாம் தான். சும்மா அடம் பிடிச்சுண்டு இருக்காதே. போய் படிக்கிற வேலையை பாரு." என்று தாய் கண்டிப்புடன் கூற,
"ஏன் தான் இப்படி இருக்கேளோ? நான் எவ்ளோ ஆசையா கேட்கறேன். அப்ப கூட ஒத்துக்க மாட்டீன்றேள்." என்று அடுத்து, இயலாமை பேச்சில் தாயை சம்மதிக்க வைக்க முயற்சி.
"நீ என்ன தான் சொன்னாலும் போக வேண்டாம். நேக்கு இதில் சம்மதம் இல்ல. அவ்ளோ தான் சொல்லிட்டேன்.இப்போ சாப்ட வா." என்ற அவரது உறுதியில் அதுவும் தவிடு பொடியானது.
"ச்சே!! ஆசையா ஒரு டூர் போக கூட விட மாட்டீன்றேள். ப்ரெண்ட்ஸ் கூட இருக்கறதே, இது தானே கடைசி, அதனால தானே கேட்கிறேன். ச்சே! எனக்கு ஒன்னும் வேணாம்." என்று கோப அஸ்திரம் வீசினாள் அவள்.
"சரி, சாப்பிடாதே. ஒரு நாள் சாப்பிடாம பட்டினி கிடந்தா ஒன்னும் ஆயிட மாட்டே. போ!" என்று அதையும் தட்டி விட்டார் தாய் அலமேலு.
பணி முடிந்து இரவு வீடு திரும்பிய சீனிவாசன் வீட்டில் நுழையும் போதே அமைதியாய் இருப்பதை கண்டு யோசனையானார்.
"வந்துட்டேளா ணா! கை கால் அலம்பிண்டு வாங்கோ. சாப்பிட எடுத்து வைக்கிறேன்." என்று அவரை வரவேற்ற அலமேலுவிடம்,
"என்னடி அலமு? வீடே அமைதியா இருக்கறது." என்று ஆச்சர்யமாக அவர் கேட்டார்.
"பின்னே! தினமும் நீங்க வீடு வர்றச்சே காச்சுமூச்சு னு கத்திண்டு சந்தை கடை மாதிரியா இருந்தது." என்று அலமேலுவின் கேலியில், அவரை முறைத்து விட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள சென்றார் சீனிவாசன்.
தன் வேலைகளை முடித்து வந்து, சாப்பிட அமர்ந்த அவரது தட்டில் தோசையை கொண்டு வந்து வைத்த அலமேலுவிடம்,
"பாப்பா எங்கே? அவ சாப்பிட்டாளா? நான் வந்ததுலேர்ந்து அவளை பார்க்கலையே! படிச்சுண்டு இருக்காளா?" என்று அவர் கேள்விகளாக கேட்டார்.
"அவ கிடக்கா, நீங்க சாப்பிடுங்கோ. வர வர அவளுக்கு ரொம்ப செல்லம் ஆயிடுத்து. அடம் பிடிக்குது கழுதை." என்று அலமேலு மகளை திட்ட தொடங்கவும்,
"என்னாச்சுடி அலமு? ஏன் பிள்ளைய கரிச்சு கொட்டுற? என்ன நடந்தது?" புரியாமல் முழித்த சீனிவாசனிடம் நடந்ததை அலமேலு சொல்லி முடித்தார்.
"நேக்கும் இப்போ சாப்பிட வேணாம். பாப்பாவை கூட்டிண்டு வர்றேன். அவளுக்கும் சேர்த்தே எடுத்து வை." என்று விட்டு மகளது அறைக்கு சென்றார் தந்தை.
"எப்படியும் போங்கோ! நான் சொன்னா ஒருத்தரும் கேட்கறது இல்ல. இவாளாண்ட பேசியே என் ப்ராணன் போறது." என்று தன்னாலே புலம்பிக்கொண்டே அலமேலு தன் வேலையை கவனிக்க சென்றார்.
அவளது அறையில் நுழைந்த சீனிவாசன், தூங்கிக் கொண்டிருந்த அவளை எழுப்புவதாய் நினைத்து,
"பாப்பா ஏழ்ந்திருடா! என்ன ஆச்சு? ஏன் சாப்பிடாம படுத்துண்ட? அம்மா என்ன சொன்னா? என்னமா பிரச்சனை?" என்று அடுக்கடுக்காய் அவர் கேட்கவும்,
அதுவரை தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த வித்யா வெடுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.
"பாருங்கோப்பா! ஸ்கூல்ல இந்த வருஷம் ட்ரிப் கூட்டிண்டு போறா, நானும் போறேன் னு சொன்னா, இந்த அம்மா வேணவே வேணாம்னு சொல்றா."
"இத்தனை வருஷமும் ஸ்கூல்ல கூட்டிண்டு போயிட்டு தானே இருந்தா, நான் அப்ப எல்லாம் போறேன்னு சொன்னேனா?" எனப் பொரியத் தொடங்கி,
"இந்த வருஷத்தோட ஸ்கூலே முடியறது. இப்பயாவது ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து போறேனேனு சொன்னா, அம்மா வேணாம்னு சொல்றா. நீங்களே என்னன்னு கேளுங்கோ." என்று தந்தையிடம் புகார் வாசித்தாள் மகள்.
"அம்மா ஏதாவது காரணத்தோடு தானே சொல்லி இருப்பா. அதுக்கு ஏண்டா கோவிச்சுண்ட? எங்க கூட்டிண்டு போறாங்க? எத்தனை நாள் ட்ரிப்?" தந்தை அதன் விவரம் கேட்கவும்,
சிறிது நம்பிக்கை வரப் பெற்ற வித்யா, "ஊட்டிக்கு கூட்டிண்டு போறா. ஒரே நாள் தான் ட்ரிப். " என்று பதிலளித்து விட்டு,
"டீச்சர்ஸும் கூட வருவா. ஒரு நாள் தானே, நான் போயிட்டு வந்தா தான் என்ன அப்பா? இந்த அம்மா ஏன் தான் இப்படி என்னை எங்கேயும் விட மாட்டின்றா?" என்று தன் மனத்தாங்கலையும் உரைத்தாள்.
அலமேலுவின் தயக்கம் புரிந்த சீனிவாசன் மகளது ஆசையையும் கருத்தில் கொள்ள வேண்டுமே என்று சிறிது யோசித்தார்.
பின்பு, "சரி, நான் அம்மா கிட்ட பேசுறேன். நீ போயிட்டு வருவியாம். இப்ப சந்தோஷமா? சாப்பிட வரியா?" என்று அழைக்கவும்,
"ரொம்ப தேங்க்ஸ் அப்பா! நீங்களாவது என் ஆசையை புரிஞ்சுண்டேளே." என்று பூவாய் மலர்ந்த முகத்துடன் அவரை மகிழ்வோடு கட்டிக்கொண்டாள் மகள்.
அன்றைய இரவு உணவை முடித்துவிட்டு மகிழ்வுடன் மகள் உறங்க சென்றிட, சீனிவாசன் மனைவியிடம் அவரது பயம் தேவையற்றது என்று எடுத்துரைக்க தொடங்கினார்.
"என்னமோ ணா! நேக்கு ஏதோ மனசுக்கு சரியா படல. அதனால தான் வேண்டாம்னு சொல்றேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் புரிஞ்சுக்க மாட்டேன்றேள்." என்று தனது மனதில் தோன்றும் அச்சத்தையும் அலமேலு உரைத்தார்.
"ஒன்னும் ஆகாதுடி அலமு! நீ தேவையில்லாம பயப்பட்டு பொண்ணை இப்படியே பொத்தி வைக்க முடியுமா? அவளுக்கும் ஆசைகள் இருக்கும்ல, அதையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணேன்." என்று அவரின் மனதை மாற்ற முயன்றார்.
இருப்பினும் அரை மனதாக அலமேலு சம்மதிக்கவும் மறுநாள் மகள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள்.
மறுநாள் பேருந்தில் செல்லும்போது ஈஸ்வரியிடம் பெற்றோர் சம்மதம் கூறியதை சொல்லி வெகுவாக மகிழ்ந்தாள் வித்யா.
எப்போதும் போல் இல்லாமல் இன்று அவளது முகத்தில் தெரியும் அதிகப்படியான ஆனந்தம் கண்டு ரூபேஷின் இதழ்களிலும் குறுநகை தவழ, அதை கண்ட பாலா, "நீ நடத்து மாப்ள." என்றான்.
"டேய்!நீ உதை வாங்க போற." என்ற அவனது எச்சரிக்கையில், "நாம சொன்னா எல்லாம் இவங்களுக்கு புரியாது. என்னடா பாலா உன் நிலைமை ஆகிடுச்சே!?" தன்னை தானே அவன் கேட்க, ரூபேஷ் சிரித்து விட்டான்.
இன்னும் சில நாட்களில் இத்தனை மகிழ்ச்சியும் துணி கொண்டு துடைத்தது போல் காணாமல் போகுமென்று அவர்களுக்கு தெரியவில்லை.
எப்படியோ மகளை சமாளித்து இப்போது தூங்க செய்தாலும், இனிமேல் இது தொடர்கதை ஆகுமே என்று ரூபிணியின் மனம் அதிலேயே உழன்றது.
"ஏம்மா அப்பா போத்தோ ஒன்னு கூத வீத்துல இல்ல? நா அப்பாவை எப்பி பாக்குது?" என்ற மகளின் கேள்வி நியாயமானதே.
தந்தையின் புகைப்படங்கள் ஊரில் இருப்பதாய் கூறி இப்போதைக்கு சமாளித்தாயிற்று. இருப்பினும் உண்மையை அவளிடம் மறைத்து எத்தனை நாள் தான் இவ்வாறு அவளிடம் உரைக்க முடியும்.
இவ்வீட்டிற்கு குடி வரும் போது, கணவர் வெளிநாட்டில் இருப்பதாய், ஓனரிடம் கூறியதை வைத்து,
பள்ளி முடிந்து பிள்ளையோடு வீட்டிற்கு வந்த போது, ரூபிணியிடம் கணவரை பற்றி அந்தம்மா எதேச்சையாக விசாரித்ததும்,
அதை இந்த வாண்டு கேட்டதையும், கேட்டதை மறக்காமல் அவ்வப்போது இப்படி நினைவூட்டுவதையும் இனி மாற்ற முடியாதே!.
இன்னும் குழந்தை வளர வளர இதுபோல கேள்விகளின் படையெடுப்பை சந்தித்து தான் ஆக வேண்டும், அதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனதை திடப்படுத்த முயன்றாள் ரூபிணி.
மேலும் ஒரு சில தினங்கள் குழந்தையின் தந்தை பற்றிய கேள்விகளை சமாளிக்க,
வெளியில் அழைத்து சென்று விளையாட்டுப் பொம்மைகள் வாங்கி தந்தும், பார்க்கில் விளையாட விட்டு அவள் மனதை திசை திருப்புவதும் என்று,
அவள் அதை பற்றி சிந்திக்க நேரம் இல்லாதவாறு பார்த்துக் கொண்டதன் மூலம் குழந்தை அதனை அப்போதைக்கு மறந்தே போனது,ரூபிணிக்கு நிம்மதியானது.
சில நாட்களில் குழந்தையும் இயல்புக்கு வந்துவிட ரூபிணியின் நாட்கள் அமைதியான ஓடம் போல் சென்றது, அதை ஆட்டுவிக்கவே மீண்டும் ரூபிணியை சந்தித்தான் கார்த்திக்.
இம்முறை பள்ளி முடிந்து அவள் வெளியே வரும் போதே, அவளை கண்டு விட்டு, "ஹலோ ரூபிணி! எப்படி இருக்கீங்க?" என்ற உற்சாக கேள்வியுடன் வந்தான் அவன்.
"ஹலோ கார்த்திக் சார்! நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? என்ன கொஞ்ச நாளா ஆள காணோம்?" என்று அவள் ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்கவும்,
"நல்லா இருக்கேன். ஏன் என்னை காணோம் னு தேடினீங்களா?" என்று சிறு ஆர்வத்துடன் அவன் வினவ,
"நான் எதுக்கு சார் உங்கள தேடப் போறேன்? பசங்க தான் பி.டி. சார் இல்லாததால, பி.டி கிளாஸ் போக முடியாம, சப்ஜெக்ட் கிளாஸ்ல மாட்டிக்கிட்டோமே னு கவலைப்பட்டுட்டு இருந்தாங்க." என்று சிறு புன்னகையுடன் அவள் பதில் அளித்தாள்.
அவளது பதிலில் சற்று மனம் வாடினாலும் உடனே இயல்புக்கு வந்தான் கார்த்திக்.
"ஸாரி ரூபிணி! அன்னைக்கு உங்ககிட்ட பேச வந்துட்டு, அவசரமா பாதிலேயே போயிட்டேன்." அன்று பேசிக் கொண்டிருந்ததை பாதியில் நிறுத்தி விட்டு அப்படியே சென்றதற்காக மன்னிப்பு வேண்டினான் அவன்.
"பரவால்ல சார். உங்களுக்கு ஏதோ அவசர வேலை இருக்க போய் தானே கிளம்புனீங்க.நான் அதெல்லாம் ஒன்னும் தப்பா எடுத்துக்கல." என
ரூபிணி அதை இயல்பாய் எடுத்துக் கொண்டதில் "என்னை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்யூ. " என்றான் அவன்
"ஆமா, உங்க பாப்பா பேர் என்ன?" என்று வினவிய அவனிடம், "பவிஷ்யா." என்று பதிலளித்தாள் ரூபிணி.
"அழகான பேர்! உங்களோட எதிர்காலம் இல்லையா? " என்றான் கார்த்திக். அவன் சொன்னதன் பொருள் புரியாமல் 'என்ன' என்று அவள் விழிக்க,
" இல்ல. பாப்பாவோட பேர் அர்த்தம் சொன்னேன். அது தெரியாமலா நீங்களும் உங்க ஹஸ்பண்ட்டும் பாப்பா க்கு இந்த பேர் வைச்சீங்க?" அவனது கேள்வியில் சுதாரித்த ரூபிணி,
"தெரியும் சார். திடீர்னு சொல்லவும் புரியல." என்று பதிலளித்தாள்.
"உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றாங்க?" என்ற அவனது அடுத்த கேள்வியில் ரூபிணி சற்று எரிச்சல் அடைந்தாள்.
"அவர் வெளிநாட்டில் இருக்கிறார். ஓகே சார். டைம் ஆச்சு. நான் கிளம்பனும்." கத்தரித்தாற் போன்ற அவளது பதிலில் நிறுத்துவான் என்று அவள் நினைத்திருக்க,
"அப்படியா! எந்த நாட்டில் இருக்காரு?! என்ன வேலை செய்கிறார்?" என்று மீண்டும் அவன் கேள்வி கணைகளை தொடுக்கவும்,வெளிப்படையாகவே எரிச்சலை காட்டினாள் ரூபிணி.
"இப்ப அதெல்லாம் தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க?நான் ஏன் உங்க கிட்ட அதை சொல்லனும்?" என்று சற்று காட்டமாகவே கேட்டாள்.