Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 28
வித்யாவின் கேள்வியில் அதிர்ச்சியாகி அலறிய கார்த்திக், "ஏம்மா! என்னை பார்த்தா கையில ப்ளூட் வச்சுட்டு, மரத்தடியில நின்னு வாசிக்க, சுத்தியும் ப்யூட்டிஃபுல் லேடீஸ் டான்ஸ் ஆட"
"அப்படியே நடுவுல ஸ்டைலா நிக்கிற ஸ்த்ரீலோலன் மாதிரி இருக்கா?" என்று அவன் வினவினான்.
அவன் பதில் பேசத் தொடங்கியதும் 'என்ன சொல்கிறான் இவன்!!?'என விழித்தவள்.
அவன் கடைசியில் கேட்ட கேள்வியில், அதன் அர்த்தம் உணர்ந்து அவனை முறைத்து விட்டு
"நான் என்ன அப்படியா கேட்டேன்?" எனக் கேட்டாள்.
"பின்னே, வேற என்ன நினைக்கிறது? நான் என்னமோ அவளை லவ் பண்ணிட்டு, உன்னை கல்யாணம் பண்ணுன மாதிரில பேசுறீங்க மேடம்."
"அப்றம் அதுக்கு என்ன அர்த்தமாம்? ஹூம்." கண்கள் சுருக்கி, உதட்டை ஒரு பக்கம் சுழித்து அவன் கேட்ட தொனியில் அவளுக்கு சிரிப்பு வந்தது.
இருப்பினும் 'இவன் பேச்சை மாற்ற முனைகிறான்' என்று உஷாராகி,
"இந்த பேச்சை மாத்தற வேலை வேணாம். நீங்க அவங்கள லவ் பண்ணலைனா, நீங்க கல்யாணம் பண்ணீட்டீங்கனு தெரிஞ்சு எதுக்கு அவங்க அவ்ளோஓஓ ஷாக் ஆகுறாங்க?"
"எதுக்காக அவங்க அழறாங்க நீங்க கையை பிடிச்சு சமாதானம் சொல்லிட்டு இருந்தீங்க?" மீண்டும் அவள் கேள்வி எழுப்ப,
'என்னை வேவு பார்த்தாயா?' என்னும் பொருளில் அவளை குறுகுறுவென கார்த்திக் பார்க்க,அதை புரிந்துக் கொண்ட வித்யா,
"ஆமா, எங்களுக்கு வேற வேலை இல்லை பாருங்க. உங்களை வேவு பார்க்கறதுக்கு, நீங்க என்ன ரூமுக்குள்ள உட்கார்ந்தா சமாதானம் பண்ணிட்டு இருந்தீங்க?"
"பப்ளிக்ஆ காஃபி ஷாப்ல தானே உட்கார்ந்து கையை, பிடிச்சுட்டு ஆறுதல் சொல்லிட்டு இருந்தீங்க. வரும் போது எதேச்சையா பார்த்தேன்." என அவள் பார்த்ததை சிறு பொறாமையுடன் உரைக்க,
அவன் மூச்சை இழுத்து விட்டு, "அது வேற விசயம். நீ நினைக்கிற மாதிரி இல்ல. என்னோட மனசுலேயும் சரி. வாழ்க்கையிலும் சரி, மூணு பெண்களுக்கு மட்டும் தான் இடம்." என்றவன்,
ஓரக் கண்ணால் அவளைப் பார்த்து கொண்டே, "ஃப்யூச்சர்ல வேணும்னா அது மாறலாம்." என்றான் குறுஞ்சிரிப்புடன்.
அவன் சொல்லும் அந்த மூன்று பெண்கள் யாரென்று கேட்க, அவளது வாய் குறுகுறுத்தாலும், 'கேட்டால் அதற்கும் கலர் கலராய் கதைகள் சொல்வானே!' என்று எண்ணி அதை தவிர்த்தாள்.
"இந்த விளையாட்டு பேச்சு எல்லாம் வேண்டாம். நீங்க சொல்ற மாதிரி ஒன்னுமில்லனா அப்றம் ஏன் ஸ்கூல்ல இருக்க டீச்சர்ஸ் அப்படி பேசிக்கிறாங்க?" என்று வினவினாள்.
"என்ன தான் உலகம் மாறுனாலும் இன்னும் டைனோசர் காலத்து கரப்பான்பூச்சி இருக்கறது இல்லயா. அது மாதிரி என்ன தான் படிச்சாலும் இன்னும் சிலரோட மென்டாலிட்டி அப்படி."
"மதுமதியை நான் இங்க வேலைக்கு வந்ததில் இருந்து பார்க்கறேன். அவ எனக்கு ஒரு நல்ல தோழி. அவ்ளோ தான்.அதை தாண்டி வேற எதுவும் இல்ல."
"அவளுக்கும் அப்படி தான். ஆனா மத்தவங்க பார்வைல அது தப்பா போட்ரைட் ஆனதுக்கு நான் என்ன செய்ய முடியும்?"
"ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சு பேசிட்டு இருந்தாலே அவங்களுக்குள்ள ஏதோ விசயம்னு பேசிப்பாங்க. மே பி, இது அந்த மாதிரி கூட இருக்கலாம்." என்று அவன் பிரசங்கம் செய்ய,
அவளுக்கு 'ஷப்பாஆஆ!!' என்று இருந்தது..'இவனிடம் இந்த விசயத்தை கேட்பது வீண்! இவன் யாரை லவ் பண்ணுனா என்ன, பண்ணாட்டி தான் நமக்கென்ன?!' என்று எண்ணி,
"சரி, நீங்க அவங்கள லவ் பண்ணலைன்னே இருக்கட்டும் அதை விடுங்க. ஆனா என்னை ஏன் கல்யாணம் பண்ணுனீங்க?" என்று கேள்வியை மாற்றி கேட்டாள்.
"இதென்ன நட்ட நடு ராத்திரியில கேணத்தனமா இப்படி ஒரு கேள்வி? நான் தான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனே." என்றான் கார்த்திக்.
"நான் இங்க வந்தே மூணு நாலு மாசம் தான் இருக்கும். என்னை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?" என்று கேட்டு விட்டு, சில நொடிகளில்
"என்ன, கண்டதும் காதலா? இதெல்லாம் நம்புறதுக்கு இல்ல." என்றாள் அவள் தோள்களை குலுக்கி,
"ஆனா என்னால உங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்ல." பார்வையை எங்கோ பதித்து, வார்த்தையில் வலியோடு கூறினாள் வித்யா.
"பெனிஃபிட்ஸ் பார்த்து லவ் பண்றதுக்கு இதென்ன பிஸ்னஸ்ஆ? அதெல்லாம் ஒரு ஃபீல். தானா மனசுல வர்றது." கார்த்திக் சிலாகித்து கூறி விட்டு பின்னர்,
"அப்றம், உன்னை இப்ப தான் தெரியும் னு நான் சொன்னேனா? நீயா முடிவு பண்ணிட்டா அதுக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?" என்று அவன் வினவிட, அவள் திகைத்தாள்.
"என்ன!!" திகைப்பில் வார்த்தைகள் வெளிவர சில நொடிகள் தடுமாறிட, உண்மையை அறியும் உந்துதலில் வேகமாக," அப்ப என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?" என்றாள்.
அவளது கேள்வியை புறந்தள்ளி விட்டு," நான் ஒன்னு கேட்கலாமா?" என்றவன், "உன்னால என்ன பிரயோசனம் இல்லனு சொல்ற நீ?" என்று கேட்டே விட்டான்.
அவனது கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தயங்கியவள், "என்னால.."என்று ஆரம்பித்தவள் சிறு தயக்கத்திற்கு பின், ஆழ மூச்சை இழுத்து விட்டு,
"என்னால நார்மலா எல்லா பொண்ணுங்க மாதிரி மேரேஜ் லைஃப் எல்லாம் லீட் பண்ண முடியாது." ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.
"புரியல. எதனால அப்படி சொல்றனு தெரிஞ்சுக்கலாமா?" அவன் கேட்க, அவள் எப்படி சொல்வது என்று வெகுவாக தடுமாறினாள்.
என்றாவது ஒரு நாள் தன்னை பற்றிய உண்மை அவனுக்கும் தெரியத் தானே வேண்டும் என்று யோசித்தவள், மெதுவாக தொடங்கினாள்.
"என்னோட ஸ்கூல் டேஸ் முடியும் போது ஒரு நாள், ஒரு சிலரால" என்று அதற்கு மேல் சொல்வதற்குள் அவளது வார்த்தைகள் தந்தியடிக்க,
அந்நிகழ்வை எண்ணிய உடனே உடலில் அப்போது உணர்ந்த அதே நடுக்கம் பிறக்க, கண்கள் மிரள அமர்ந்து இருந்தவளிடம் தண்ணீரை நீட்டினான் கார்த்திக்.
அப்போதைக்கு அவளுக்கும் அது தேவைப்படவே உடனே அதை வாங்கி மடக் மடக்கென்று பருகி விட்டு, சற்று ஆசுவாசமாகி மீண்டும் தொடர முனைந்தாள்.
ஆனால் அதற்குள் எழுந்த அவன் அவளை கை காட்டி, எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல் செய்த சமிக்ஞையில், அவள் முகம் குழப்பமானது.
"இல்ல. நான் முழுசா சொல்லிடறேன். அதுக்கு அப்றமும் உங்களுக்கு நான் தேவையானு யோசிச்சுக்கோங்க. என்னால உங்க லைஃப் ஸ்பாயில் ஆக வேண்டாம்."என மரத்துப் போன குரலில் உரைக்கும்,
"அதான் சொல்ல வேண்டாம்னு சொல்றேன்ல."என்ற கார்த்திக், பூங்காவில் பேசிய அதே குரலில், கண்களில் கோபமேற கூறினான்.
அவனது திடீர் மாற்றம் கண்டு, மிரட்சியுடன் விழித்த வித்யாவை கண்டவன், பின்பு சாந்தமாக, "எனக்கு எல்லாம் தெரியும்டா. " என்றான்.
அவள் ஆச்சர்யமாய் விழி விரித்து 'எப்படி?' என்ற கேள்வி தொக்கி நிற்கும் பார்வையோடு எழுந்து நின்று பார்க்க, அவன் முகம் கல்லென இறுகி இருந்தது.
அவனாக எதுவும் சொல்லப் போவதில்லை என்பதை உணர்ந்த வித்யா, "எப்படி தெரியும்?. தாரிணிக்கா சொன்னாங்களா?" என வாய்விட்டே கேட்டாள். ஆனால் அவன் வாயை திறக்கனுமே.
எதுவும் சொல்லாமல் இறுகி இருந்த அவன் முகத்தில் என்ன உணர்ச்சி என அறிய முடியாமல் புதிராக தெரிய, அவனையே பார்த்து இருந்தாள்.
சில நிமிடங்கள் அங்கே மௌனமே ஆள, தன் சிந்தனையில் இருந்து வெளி வந்த கார்த்திக், "நான் விரும்புனது, விரும்புறது, எல்லாமே உன்னை மட்டும் தான். "
"உனக்கு அதானே சந்தேகம். நான் மனசு நிறைஞ்ச காதலோட தான் உனக்கு தாலி கட்டினேன். லஸ்ட்டுக்காக இல்ல." என்று தன் மனதை தெளிவாக கூறிய கார்த்திக்,
"அப்றம், ஏதோ நீ தப்பு பண்ணின மாதிரி ஃபீல் பண்ணி இனிமே இப்படி பேசாதேமா. சகதி நம்ம உடம்புல பட்டுதுனா கழுவிட்டு அதை மறந்துடனும்."என்ற அவன் பேச்சில் கட்டுண்டு அவனையே பார்த்து இருந்தாள் அவள்.
"புரியுது. இது சகதி இல்லை தான். மனசுல தழும்பா மாறுன காயம் தான். இல்லைனு சொல்லலை. ஆனா வலி தர்ற ஒரு விசயத்தை எதுக்கு திரும்ப திரும்ப யோசிச்சு உன்னை நீயே வருந்திகிறடா." என
சிறு பிள்ளைக்கு சொல்வது போல் அவளது கன்னம் தாங்கி பேசிக் கொண்டே அவளை நெருங்கி அணைத்து தன்னுள் அழுத்தமாக புதைத்து கொண்டான்.
அதில் துளியும் காமம் இல்ல. தன் சேயை பாதுகாக்க அணைக்கும் தாயின் பரிவை தவிர,
வேறு எந்த உணர்வையும் உணராத வித்யா, அவனது அணைப்பில் நடுக்கம் குறைந்து, அன்னை மடி சேர்ந்த குழந்தையாய் அவனுள் அடங்கினாள்.
சில நிமிடங்கள் அமைதியிலும் அவனது அணைப்பிலும் கழிய, கரடியாக கடிகாரத்தின் மணி மூன்று என அடிக்கவும், தன் நிலைக்கு வந்த இருவரும் சட்டென விலகினர்.
உடனே இயல்புக்கு திரும்பிய கார்த்திக், " நல்லா தூங்கி கனவுல டூயட் பாடுற நேரத்துல வந்து இப்படி கதை பேசியே நேரத்தை வீணாக்கிட்டியேமா?"
"இப்பயாவது கொஞ்ச நேரம் தூங்க விடேன்டா." என்று புலம்புவது போல் பேசி கடைசியில் கெஞ்சலோடு முடித்து அவளை இயல்பாக்க முனைந்தான்.
அதன் பலனாக, அவளும் அவனை முறைத்தவள், அங்கே நிற்க அவளுக்கும் சற்று சங்கோஜமாக இருக்க அங்கிருந்து அகன்று,
அவனை முறைத்துக் கொண்டே தனது அறைக்கு வந்த வித்யாவிற்கு மனதில் இன்னமும் சில கேள்விகள் மீதம் இருந்தாலும் எதையும் கேட்கும் மனநிலையில் அவள் இல்லை.
படுக்கையில் விழுந்தவளுக்கு, என்றும் இல்லாமல் இன்று மனதில் ஒரு இதம் பரவ, ஆழ்ந்து உறங்கிப் போனாள்.
உறங்கிக் கொண்டிருந்த அவளது கன்னத்தில் பஞ்சு போன்ற தீண்டலின் உணர்வில் கண் விழித்த வித்யா, பள்ளிக்கு தயாராகி அன்றலர்ந்த மலராய் புன்னகைத்த சின்ன குட்டியை கண்டு புன்னகைத்தவள்,
விடிந்து வெகு நேரம் ஆனதை உணர்ந்து அடித்து பிடித்து எழ, "செல்லம்! அம்மா தூங்கிட்டேனே." என்று குற்ற உணர்வுடன் பரபரப்பாக குழந்தையிடம் கூறினாள்.
"ஒம்பு சரியில்லையாம்மா? தாச்சல் இக்கா னு காத்திப்பா தா பாக்க சொன்னாங்க." என்றாள் மகள்.
"இல்லடா பட்டு. நல்லா தான் இருக்கேன். நீங்க அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா? அம்மா இன்னும் சாப்பாடே செய்யலையே." என்று அவள் தவிப்புடன் கூறவும்,
"காத்திப்பா செய்துத்தாங்க. நான் சாப்த்தேனே. உங்களுக்கும் வைச்சு இக்காங்க. ப்லஸ் பண்ணித்து வாங்க." என்று கூறி அவளை குளியலறை பக்கம் தள்ளினாள் சின்னவள்.
தன் காலை கடன்களை முடித்து ஃப்ரெஷ் ஆகி வந்த வித்யா, டேபிளில் காலை உணவு தயாராக இருப்பதை பார்த்து, யோசனையுடன் நிற்க,
"என்ன யோசனை மேடம். ஏதோ எனக்கு தெரிஞ்சதை செய்தேன். ரொம்ப எல்லாம் எதிர்பார்க்க கூடாது. தோசையும், சட்னியும் தான். நமக்கு லன்ச்க்கு இன்னிக்கு மட்டும் கடைல வாங்கிக்கலாம்."
"குழந்தைக்கு க்ரெச்ல ஃபுட் கொடுக்க சொல்லிடலாம். ஆல் ஓகே?" என்று பேசிக் கொண்டே, குழந்தையை கையில் தாங்கி சமையலறையில் இருந்து வந்தான் கார்த்திக்.
அவனை புதுவித உணர்வுடன் ரசனையோடு கண்டவள் பார்வையில், "நான் என்ன அவ்ளோஓஓ அழகாவா இருக்கேன்டா குட்டிமா?" என்று
கண்களை சிமிட்டி குழந்தையிடம் அவன் கேட்ட விதத்தில் கண்களில் சிறு முறைப்போடும், உதட்டில் ஒளிந்த சிரிப்போடும், உண்டு விட்டு பணிக்கு கிளம்பினர் தம்பதியினர்.