Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
கானல் - 27
"ஹாய் மதுமதி! எப்படி இருக்க? என்ன ரொம்ப நாளா ஆளை காணோம்? உன்னை தான் எல்லாரும் ரொம்ப தேடிட்டு இருந்தாங்க." என
உற்சாகமான வரவேற்கும் புன்னகையுடன் கார்த்திக் கூறிக் கொண்டிருந்ததை கண்ட வித்யாவிற்கு கோபம் வர, வேகமாக அவர்களை நோக்கிச் சென்றாள்.
அதற்குள் அங்கே, "என்னைய காணோம்னு தேடினாங்களா? ஆனா யாரு? எதுக்காக?" என்று குழப்பமாக மதுமதி கேட்க,
"அட, நீ வந்தா தானே மா அந்த சந்திரமுகி ரூமை திறப்பாங்க. அதான் பிள்ளைங்க உன்னை காணாம தேடுனாங்க." என்று அவன் பதிலளித்தான்.
"சந்திரமுகி ரூமா?!" அவள் புரியாமல் யோசிக்க, "அதான்மா கம்ப்யூட்டர் க்ளாஸ் ரூம்." என அவன் விளக்கினான்.
அவனது பதிலில் முதலில் விழித்தவள் பின்னர், "ஷப்பா! உங்களோட," என்று வாய் விட்டு சிரிக்கும் போதே அவர்களை நெருங்கி இருந்த வித்யா,
"எக்ஸ்க்யூஸ் மீ." என்றழைத்ததும் யாரென்று இருவரும் திரும்பி பார்க்க, "நீங்க நிக்கிறது ஸ்கூல் ப்ரிமிஸஸ்ல கொஞ்சம் டீசன்டா நடந்துக்குறீங்களா? ப்ளீஸ்" என்றாள். மேலும்,
"சின்ன பசங்க இந்த மாதிரி நீங்க நிக்கறதை பார்த்தா என்ன ஆகிறது?" என அவர்கள் நின்ற நிலையையும் பிடித்திருந்த கரங்களையும் பார்த்துக் கூறினாள்.
கார்த்திக்கை பார்த்த உற்சாகத்தில் பழக்க தோஷத்தில் கை குலுக்குவதற்காக, மதுமதி பற்றியிருந்த அவனது கரத்தை காட்டி வித்யா கேட்டிட,
"யார் மேடம் நீங்க? எங்கள பற்றி இங்க எல்லாருக்கும் தெரியும். யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. அன்ட், திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ். ஓகே." என்று மதுமதி சற்று கடினமாக பதிலளிக்க,
"எதுவானாலும் நீங்க ஸ்கூல் கேட்டுக்கு வெளிய வைச்சுக்கோங்க மேம். இப்ப இருக்கற பசங்க பார்க்கற விசயத்துல சீக்கிரமே இன்ஃப்ளுயன்ஸ் ஆகிடுவாங்க."
"இப்ப தான் தேர்ட் ஸ்டான்டர்ட்ல ஒரு பையன் விசயம் கான்ட்ரவர்சி ஆகி முடிஞ்சு இருக்கு. சாருக்கு கூட அது தெரியுமே." என்று அவன் மீது நக்கலான பார்வையை வீசி விட்டு,
"அதனால உங்க ரொமான்ஸை ஸ்கூலுக்கு வெளியே போய் பண்ணுங்க." என்று கார்த்திக்கை ஆன மட்டும் முறைத்துக் கொண்டே வித்யா உரைத்தாள்.
"ஹலோ மேடம். மைன்ட் யுவர் வேர்ட்ஸ். நீங்க யாரு?" என்று அவள் பேச தொடங்குவதற்குள் அவளை தடுத்த கார்த்திக்,
"மதுமதி போதும். அவங்க என் வைஃப் வித்யரூபிணி. இங்க ந்யூ ஜாய்னி டீச்சர்." என்று ஆழமான பார்வையில் வித்யாவை பார்த்துக் கொண்டே, பதிலை மதுமதிக்கு கூறினான்..
"என்ன!!!?" என்று அதிர்ச்சி அடைந்து மதுமதி நிற்க, கார்த்திக்கின் 'அவள் தன் மனைவி' என்ற பதிலில் விழி விரித்த வித்யா,
அவனது ஆழமான பார்வையை தாங்க இயலாது வேறு பக்கம் தன் பார்வையை திருப்பினாள்.
"என்ன கார்த்திக் சொல்றீங்க? இது எப்ப நடந்தது? மூணு நாலு மாசம் தானே நான் ஊர்ல இல்ல. அதுக்குள்ள?!" என்று குழப்பத்தில் வார்த்தை வராமல் தடுமாற,
அப்போது உணவு இடைவேளை முடிந்த மணியடிக்கவே, மதுமதியின் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் அவதானித்துக் கொண்டே, வித்யா அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
கார்த்திக் மதுவிடம், "அதை நான் அப்றம் சொல்றேன் மது. இப்ப க்ளாஸ்க்கு போ. " என்று மதுமதியிடம் கூறிவிட்டு அவனும் அகன்று விட, மதுமதி தான் விழித்துக் கொண்டு நின்றாள்.
ஆசிரியர்களுக்கான அறையில் தனக்கான இடத்தில் அமர்ந்து, "என்ன பண்றீங்க?சாப்டீங்களா? என்ன சாப்டீங்க?" போன்ற உலகின் அதி முக்கியமான விஷயங்களை ரூபேஷுடன் பேசிக்கொண்டிருந்த ஈஸ்வரி.
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, எரிச்சலின் எரிமலையாக உள்ளே வந்த வித்யாவை கண்டு, "நான் அப்புறம் பேசுறேன்." என வேகமாக அவனுடனான பேச்சை முடித்துக் கொண்டு அவள் அருகே வந்தாள்.
"என்னாச்சு தியா? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்டது தான் தாமதம், குலுக்கி வைத்த சோடா பாட்டில் திறந்தது போல் பொங்கி விட்டாள் வித்யா.
"யார் அவ?? கொஞ்சம் கூட காமன் சென்ஸே இல்லாம ஸ்கூலுக்குள்ள வந்து கார்த்திக்கோட கைய புடிச்சிட்டு நிக்கிறா."
"நீ யாரை சொல்ற? என்னாச்சு?" எதுவும் புரியாமல் ஈஸ்வரி வினவினாள்.
"அதான், அந்த மதுமதி. கொஞ்சம் கூட சென்ஸே இல்லாம கார்த்திக்கிட்ட கையை புடிச்சுட்டு, பெக்கே பெக்கே னு சிரிச்சு பேசிட்டு இருக்கா." என்றாள் வித்யா.
அவளை கூர்ந்து பார்த்த ஈஸ்வரி, "இப்ப அவ ஸ்கூல்ல அப்படி நின்னு பேசுனது உனக்கு பிரச்சனையா? இல்ல, கார்த்திக் கைய புடிச்சுட்டு பேசிட்டு இருந்தது உன் பிரச்சனையா?" எனக் கேட்ட ஈஸ்வரியை முறைத்த வித்யா.
"என்ன!ஸ்மார்ட்ஆ பேசுறதா நினைப்பா? லூசு! சின்ன பசங்க இருக்கற இடத்துல யார் இப்படி நின்னு பேசினாலும் எனக்கு கோபம் வரும். போதுமா?" என்று அதே கோபத்துடன் பதிலளித்தாள்.
"அவங்க எப்படினாலும் இருந்துட்டு போகட்டும்." என்று சொல்லும் போதே சுருக்கென்ற வலி ஒன்று வித்யாவின் மனதில் படர அதை புறந்தள்ளி விட்டு,
"ஆனா ஸ்டூடண்ட்ஸ் முன்னாடி கொஞ்சம் டிக்னிட்டியோட நடக்க வேண்டாமா?"எனக் கேட்டுவிட்டு
பின்பு,"சரி, எனக்கு டைம் ஆச்சு. நான் க்ளாஸ்க்கு போறேன்." வேகமாக கூறிவிட்டு வெளியேறினாள் அவள்.
சென்று கொண்டிருந்த அவளை பார்த்து பெருமூச்செறிந்து விட்டு, தனது வகுப்பிற்கு தயாராகி சென்றாள் ஈஸ்வரி.
அவளுக்கான வகுப்பில், "குட் ஆஃப்டர்நூன் ஸ்டூடண்ட்ஸ்!" என்று நுழைந்த வித்யாவிற்கு, அனைத்து சிந்தனையும் மனதில் இருந்து வெளியேற, பணியில் மூழ்கினாள்.
மாலை பள்ளி முடிந்து வழக்கம் போல், குழந்தையை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த வித்யா, கார்த்திக் வருவதில் தாமதம் ஆவதை கண்டு மனதளவில் ஏமாற்றம் அடைந்தாள்.
குழந்தை கூட, "காத்திப்பா ஏம்மா இன்னும் வதல?"என அவன் வர தாமதம் ஆனதால் கேட்க,
"பாப்பாக்கு தான் அம்மா இருக்கேனேடா செல்லம், அப்றம் என்ன, அவங்க எல்லாம் இடைல வந்தவங்க, இடையிலேயே போயிடுவாங்க." என்று கூறி பிள்ளையை அணைத்துக் கொண்டு,
"நமக்கு யாரும் வேணாம்." என்று மகளுக்கு சொல்வது போல் தனக்கும் சேர்த்து சொல்லிக் கொள்ள,அவள் பேசியது புரியாமல் தாயின் முகத்தையே பார்த்திருந்தாள் சின்னவள்.
கார்த்திக் புதிதாக வந்தவளிடம் மகிழ்வுடன், வெகுநாள் பழக்கம் போல இயல்பாக பேசியதில், சற்று மன வருத்தம் அடைந்தாள் வித்யா.
கார்த்திக் வித்யாவை தனது மனைவி என்று கூறியதில் அதிர்ச்சியான அவளது எதிர்வினை கண்டு,
என்னென்னமோ தனக்குள் கற்பனை செய்து கொண்ட வித்யாவிற்கு, அவள் வரும் வழியில் கண்ட காட்சி அதை உறுதிப்படுத்தியது.
'ஒருவேளை இருவரும் விரும்பி இருந்தால், தன்னை ஏன் அவன் மணக்க வேண்டும்? ' என்ற தீவிர சிந்தனையில்.
அன்று பூங்காவில் குழந்தையை இவள் அடித்ததற்காக அவன் காட்டிய மறுமுகம் நினைவில் வர, ஏன் என்ற கேள்வி எழ, அதற்கு விடையாக நினைத்த தன் கணிப்பில் கலக்கமுற்றாள் அவள்.
"ஒருவேளை அப்படி இருக்குமோ? அப்படினா," மனதில் பேசுவதாக நினைத்து அவள் பேசிட, "என்னாச்சும்மா?" என்ற பிள்ளையின் கேள்வியில் தான் சுயம் திரும்பினாள்.
"ஒன்னுமில்லடா பட்டு, அம்மா ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன்." என பதிலளித்த அவளின் மனதில் குழப்ப ரேகைகள் வேர் விட்டு விருட்சமாய் வளரத் தொடங்கியது.
"ஹாய் குட்டிமா." என்று வெகுநேரம் கழித்து வந்த கார்த்திக்கின் அழைப்பில், மத்தாப்பாக ஒளிர்ந்த பிள்ளையின் முகம் கண்டு அச்சமுற்றாள் வித்யா.
"காத்திப்பா! வந்துத்தீங்கா? ஏ லேத்து? நா உங்கள தேதித்தே இந்தேன்." அவனுக்கான குழந்தையின் தேடலை ஏக்கத்துடன் பிள்ளை உரைக்க,
"அது, வெளியே கொஞ்சம் வேலை இருந்துச்சுடா செல்லம். அதை முடிச்சுட்டு பாப்பாவை பார்க்க ஓடோடி வந்துட்டேன்." அவன் செய்த செய்கையில் மலர்ந்து சிரித்தாள் சின்ன மலர்.
குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தவனை உன்னிப்பாக ஆராய்ச்சி பார்வை பார்த்த வித்யாவின் மனதில்,
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, இன்று ஏனோ அவன் மிக மகிழ்வாக இருப்பது போல் தோன்றியது.
அவளது ஆராயும் பார்வையை கண்ட கார்த்திக், ப்ளாக்ஸ் உடன் விளையாடிக் கொண்டிருந்த தன் மகளிடம், "குட்டிமா, காத்திப்பா இன்னிக்கு எதாவது வித்தியாசமா தெரியறேனா?" ரகசியம் போல் கேட்டான்.
அவளோ, அதற்கு தோள்களை குலுக்கி, உதட்டைப் பிதுக்கி 'இல்லை' என்பது போல் செய்கை செய்ய,
"அப்றம் ஏன் உங்கம்மா அக்யூஸ்ட்டை பார்க்கற போலீஸ் மாதிரி பார்க்கறாங்க?" என்று தனது சிந்தனையில் இறங்க, சின்னவள் அவன் சொன்னது புரியாமல் முழித்தாள்.
அவனை பார்த்து விட்டு, வித்யா உள்ளே சென்றுவிட, "சரி விடுடா. எத்தனையோ பார்த்தாச்சு. இதை சமாளிக்க மாட்டோமா." தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டு மகளுடன் ஹை-ஃபை போட்டான் கார்த்திக்.
அதன்பின் வித்யா எதுவும் கேட்பாளோ என்று அவளது முகத்தையே அவ்வப்போது கார்த்திக் உற்றுப் பார்க்க, அவள் அதை கண்டு கொள்ளாமல் கருமமே கண்ணாக இருந்தாள்.
அனைத்து வேலைகளும் முடித்து, வித்யா குழந்தையோடு அவர்களது அறைக்கு சென்றிட, அவனிடம் அவள் அதிகம் பேசுவதில்லை என்றாலும்,
அவ்வப்போது அவன்மீது படியும் பார்வைக்கு கூட இன்று பஞ்சம் ஏற்பட, ஏனென்ற யோசனையோடு தனக்கான இடத்தில் கண் மூடி படுத்து இருந்தான் கார்த்திக்.
அவனது சிந்தனை, அன்று மாலை மதுமதியுடன் நடந்த உரையாடலில் மூழ்கி இருக்க, தன்னருகே அரவம் உணர்ந்து கண் விழித்தான் அவன்.
உறங்கச் சென்ற வித்யாவிற்கு, இருந்த குழப்பத்தில் உறக்கம் பிடிக்காமல், குழந்தையை உறங்க வைத்து விட்டு, அவனிடமே கேட்டு விடலாம் என்று எண்ணி அறையை விட்டு வெளியே வந்தாள்.
அவன் உறங்கி விட்டானோ என்ற யோசனையுடன் அவனருகில் வந்தவள், திடுமென அவன் விழிக்கவும், சட்டென பயந்து பின்வாங்கினாள்.
"என்னமா இது? நடு ராத்திரில மோகினி மாதிரி வந்து என்னை பயமுறுத்திட்டு, நீங்க பயப்படுறீகளோ?" என்றவன் வேகமாக எழுந்து அமர்ந்தான்.
அவனது பேச்சை காதில் வாங்காமல், "உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்." என செய்தி வாசிப்பாளர் போல அறிவித்தாள் அவள்.
"ஒன்னும் பிரச்சனை இல்ல. பேசறது தானே. அதுல என்ன கஞ்சத்தனம். நிறையவே பேசலாமே." என்ற அவனது பதிலுக்கு அவனை முறைத்து விட்டு,
"கொஞ்சம் சீரியஸா பேசுறீங்களா?"
என்று சற்று அழுத்தமாக பேசிய வித்யா பின்பு,
"எனக்கு சில கேள்விகள் இருக்கு. அதுக்கு உங்களோட உண்மையான பதில் வேணும். இந்த மாதிரி பேச்சை டைவர்ட் பண்ற வேலை வேணாம்." என்றாள் அதே தொனியில்.
இப்போது அவனும் தன் பாவனையை மாற்றிக் கொண்டவன், "ஓகே, கேளு." என்றான் தீவிரமாக.
"யார் நீங்க? நீங்களும் அந்த மதுமதியும் விரும்புறீங்கனா எதுக்காக என் கழுத்துல தாலியை கட்டுனீங்க?" என்று அவனது முக பாவனையில் ஆழமாக பார்வை பதித்து கேட்டாள் வித்யா.
அவளது முதல் கேள்விக்கு, விளையாட்டுதனமாக பதிலளிக்க முனைந்த கார்த்திக், அடுத்த கேள்வியில் அதிர்ச்சியாகி, "எதேஏஏ!!" என்று அலறினான்.