• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 23, 2024
Messages
2
(இன்னும்) உள்ளேன் ஐயா!


காலை வேளை... வரலக்ஷ்மி சமையல் கட்டில் பாத்திரங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். வாயில் இடைவிடாத அர்ச்சனை...அந்த வைகுண்டத்து நாராயணன் மீது அல்ல... வையகத்து நாராயணனான தன் கணவன் மீது...


“காலைல எழுந்தமா... பல்லைத் தேய்ச்சோமா... டீயைக் குடிச்சோமா... குளிச்சோமா... சாப்பிட்டோமான்னு ஊர்ல மத்த ஆம்பளைங்க மாதிரி இருந்தா என்ன...எந்திக்கிறது ஏழரை மணிக்கு...கேட்டா உடனே நைட்டெல்லாம் தூங்கலைன்னு சால்ஜாப்பு சொல்லிட வேண்டியது... சரி எழுந்த பின்னாலயாவது மளமளன்னு வேலையைப் பார்க்கலாமில்ல... எல்லாத்தையும் நிறுத்தி... நிதானமா...”

“குளிச்சு சாப்பிட்டுட்டு விட்டா நான் என் வேலையைப் பார்ப்பேன். டீயைக் குடிச்சதும் அந்த போனை எடுத்துட்டு உக்காந்துக்க வேண்டியது... வெத்தலைக்கு சுண்ணாம்பு தடவுற மாதிரி அதைத் தடவித் தடவி என்னதான் செய்வாங்களோ...எல்லாம் என் பையனைச் சொல்லணும்... ரெண்டாயிரம் ரூவா போனை வச்சுகிட்டு இருந்த மனுஷனுக்கு பதினாறாயிரம் போட்டு ஃபோன் வாங்கிக் கொடுத்தான்ல...எல்லாம் என் தலையெழுத்து... காலத்துக்கும் இந்த சமையல் கட்டில கிடந்து வேகணும்னு...”

படுக்கையறை மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்து தன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த நாராயணன் காதுகளில் ஒரு வார்த்தை பாக்கியில்லாமல் எல்லாம் ஸ்பஷ்டமாக விழுந்து கொண்டுதான் இருந்தது...ஆனால் தன் வேலையை அவர் நிறுத்தவில்லை.

நாராயணனுக்கு 70 வயது... வரலக்ஷ்மி அறுபத்து நாலை நெருங்கியிருந்தார். ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரண்டு பிள்ளைகள்...இருவரும் நல்லபடியாகத் திருமணம் முடிந்து குடும்பம், குழந்தை என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எல்லா குடும்பங்களிலும் இருக்கும் சின்னச் சின்னப் பிரச்சனைகள் இவர்கள் குடும்பத்திலும் உண்டு... ஆனால் இதுவரை மனம் வருந்தும்படி பெரிய பிரச்சனை என்று எதுவும் இல்லை.

நாராயணன் மத்திய அரசாங்கத்தில் நல்ல பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். வரலக்ஷ்மி வீட்டரசி. அதிகம் படித்திருக்கா விட்டாலும் பொறுப்பாகப் பிள்ளைகளை வளர்த்து நல்லபடியாகத் திருமணம் செய்து கொடுத்ததில் வரலக்ஷ்மிக்குப் பெரும்பங்கு உண்டு.

வரலக்ஷ்மி வீட்டு விவகாரங்களை சமாளித்ததாலேயே நாராயணனால் அலுவலகத்தில் சோபிக்க முடிந்தது. இது எல்லாம் அவருக்கும் தெரியுமாதலால் வரலக்ஷ்மி காலை வேளையில் பேச ஆரம்பித்தால் வாயை இறுக மூடிக் கொண்டு விடுவார்.

அலைபேசியில் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அவர் எழுந்த போது ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஓடி விட்டிருந்தது. இதற்கு மேல் குளிக்க அரை மணி நேரமும் அதன் பின் பூஜை அரை மணி நேரமும் முடித்து உணவு மேஜைக்கு அவர் வரும் போது நேரம் பத்தைத் தாண்டி விடும்.

எப்போதுமே அவர் அப்படித்தான். நிதானமாக வேலை செய்து பழக்கப் பட்டவர். அதனாலேயே அலுவலகத்துக்கு தினமும் தாமதமாகச் செல்வார். ஆனால் மாலை கூடுதல் நேரம் இருந்து வேலையை முடித்து விட்டுத்தான் திரும்புவார்.

அலுவலகத்தில் அவரை யாரும் ஒரு குறையும் சொல்லி விட முடியாது. வீட்டிலும் வேறு எந்த விஷயத்திலும் வரலக்ஷ்மி எதுவும் சொல்ல மாட்டார்... இந்த ஒரு விஷயத்தைத் தவிர...

மற்றபடி பணி ஓய்வு பெறுவதற்கு முன்னெல்லாம் சம்பளம் வாங்கி அதை எண்ணக் கூடச் செய்யாமல் வரலக்ஷ்மியிடம் கொண்டு வந்து நீட்டி விடுவார். அலுவலகம் செல்கையில் மனைவியிடம் பணம் கேட்டு வாங்கிக் கொண்டுதான் செல்வார். அந்த அளவுக்கு வெள்ளந்தியான மனிதர்...சூது வாது தெரியாது.

வரலக்ஷ்மிக்கும் குறை என்று எதுவும் கிடையாது...நேரா நேரத்துக்கு சாப்பிட மாட்டேன் என்கிறார் என்பது தவிர...அதுவும் இடையில் சிறுநீரகத் தொற்றுக்காக நிறைய கிருமிக் கொல்லி மருந்துகள் எடுத்துக் கொண்டதில் வயிற்று புண் வேறு வந்திருக்க காலையில் சீக்கிரம் அவர் உணவை எடுத்து கொள்ளாமல் இருப்பது அவருக்குப் பெரிய வருத்தமாக இருந்து வந்தது.

‘காலை எட்டரையிலிருந்து ஒன்பது மணிக்குள் சாப்பிடுங்கள்’ என்று எவ்வளவோ சொல்லியும் நாராயணன் கேட்பதாக இல்லை...பத்து என்பது சில நேரம் பத்தேகால், பத்தரை என்று நீண்டு விடும்

அப்போதெல்லாம் வரலக்ஷ்மி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நடமாடிக் கொண்டிருப்பார்.

அன்று அலைபேசியில் அழைத்துப் பேசிய மகளிடம் ஆற்றாமை தாங்காமல் பொங்கித் தீர்த்து விட்டார்.

“ராத்திரி எட்டு மணிக்கு மூணு இட்டிலி சாப்பிடுறாங்க வைஷும்மா...கூட ஒன்னு சாப்பிடுங்கன்னா நாலுதான் கணக்குன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க...ஆனா நீ பெரிய இட்டிலியா ஊத்துறே...அதுனால மூணுதான்னு சொல்லிடறாங்க... அப்புறம் காலைல பத்து பத்தரைக்குதான் சாப்பாடு...இடையில என்னவோ மூலிகை கஷாயம்னு கொல்லைல வளர்ந்துருக்கிற துளசி, கற்பூரவள்ளி, தூதுவளைன்னு எல்லாத்தையும் போட்டு ஒரு முழுங்கு குடிக்கிறாங்க. அது எந்த மூலைக்குக் காணும்? நீயாவது ஒரு வார்த்தை கேக்கக் கூடாதா?”

வைஷ்ணவி பெரிய தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வருகிறாள்.

தமையன் ஶ்ரீராமை விட அவளுக்குத் தந்தையுடன் நெருக்கம் அதிகம். உலக பொருளாதாரத்தில் ஆரம்பித்து உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் விவாதிப்பார்கள். ஆனால் சில மாதங்களாக அலுவலகத்தில் வேலைப் பளுவின் காரணமாகத் தந்தையுடன் அதிகம் பேச முடியவில்லை.

அவர்கள் ஶ்ரீரங்கத்திலும் அவள் மதுரையிலுமாக அதிகம் ஒன்றும் தொலைவில் இல்லை. அந்த வார இறுதியில் தந்தையைக் குடும்பத்துடன் சென்று பார்த்து வருவது என்று முடிவு செய்து கொண்ட வைஷ்ணவி அப்போதைக்கு அன்னையைக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அலைபேசியை வைத்து விட்டு உடனே கணவனை அழைத்து அவனால் அந்த வார இறுதியில் வர முடியுமா எனவும் கேட்டு வைத்துக் கொண்டாள்.

திட்டமிட்டபடி அந்த வார வெள்ளிக் கிழமை கணவன் குழந்தைகளுடன் ஸ்ரீரங்கத்துக்குப் பயணமானார்கள்.

பயணக் களைப்பில் வெள்ளி இரவு கடந்து சென்று விட மறுநாள் காலை தந்தையுடனும் கணவனுடனும் பிள்ளைகளைப் பக்கத்திலிருந்த பூங்காவிற்கு அனுப்பி விட்டுத் தாயுடன் அளவளாவ அமர்ந்தாள்.

“என்னம்மா உன் பிரச்சனை?”

“காலைல மட்டும் உங்கப்பாவை சீக்கிரம் சாப்பிடச் சொல்லுடி...என் பிரச்சனை தீர்ந்துடும்”

“இப்ப அவர் லேட்டா சாப்பிடுறதுல உனக்கென்ன பிரச்சனை? அதைச் சொல்லு முதல்ல”

“எனக்குப் பிரச்சனைங்கிறதை விட உங்கப்பாவுக்குத்தான் பிரச்சனை... காலைல லேட்டா சாப்பிடுறதுனால மதிய சாப்பாடு மூணு மணி ஆகிடுது. நான் ஒன்னு ஒன்னரைக்கெல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு ரெண்டு மணிக்குப் படுத்துடுவேன்னு உனக்கே தெரியும்”

“காலைல ஆறு மணிக்கு சமையல் கட்டுல வேலையை ஆரம்பிச்சா பத்தாகிடுது முடிக்க... உடனே உக்கார முடியுமா? உங்கப்பா அந்த நேரம்தான் சாப்பிட வருவாங்க... தோசையோ சப்பாத்தியோ போட்டுக் குடுத்துட்டுதான் உக்காருவேன்...எதுவானாலும் சுட்டு ஹாட்பாக்ஸ்ல போடுன்னுதான் சொல்றார் உங்கப்பா...ஆனா அது அவங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். அதுனால மனசு கேக்காம, போட்டுக் குடுத்துட்டுதான் உக்காருவேன்”

“அப்புறம் பத்தரைக்கு மேல வீட்டைக் கூட்டி முடிச்சுக் கொஞ்ச நேரம் டீவி சீரியல் பார்த்துட்டே ஏதாவது ஒதுங்க வைப்பேன்...என்னதான் உக்காந்து இருந்தாலும் அப்பாடான்னு இடுப்பைக் கீழ போட்டுப் படுத்தாதான் ஓய்வு எடுத்த மாதிரி இருக்கும்...அதுனாலதான் சீக்கிரம் சாப்பிட்டுட்டுப் படுத்துருவேன்”

“காலைல பத்து பத்தரைக்கு சாப்பிட்டுட்டு அப்புறம் பசி எடுக்கிறப்போன்னு இவங்க மதியம் மூணு மணிக்குச் சாப்பிடும் போது என்ன செய்ஞ்சு வச்சுருக்கேன்னு கூட ஒழுங்காப் பார்க்கிறது இல்ல...சில நேரம் செய்ஞ்சு வச்ச காய்ல ஒன்னைத் தொடாம அப்படியே விட்டுடறாங்க...முட்டையைப் பொரிச்சு மூடி வச்சுட்டு சொல்லிட்டும் படுக்கிறேன்...அப்பயும் சரியாக் கவனிக்கிறது இல்ல. இதே நான் வச்சுக் குடுத்தா ஒழுங்கா சாப்பிடலாமில்ல?”

“ஓ இப்பிடில்லாம் வேற நடக்குமா!”

அவள் எதைக் கண்டாள்...அவளும் அவள் கணவன் ஶ்ரீவத்சனும் இருவரும் பணி புரிவதால் வார நாட்கள் முழுதும் டிஃபன் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

வார இறுதியில் வெளியில் சென்று சாப்பிடுவார்கள் அல்லது வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவார்கள். அந்த நேரம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பதுதான் வழக்கம். ஒருவர் பரிமாற அடுத்தவர் சாப்பிடுவது எல்லாம் அவர்கள் திருமணமான நாள் முதற்கொண்டு நடந்தது இல்லை. காலை இரவு உணவுகள் கூட இருவரும் மொத்தமாக வேலையை முடித்து வந்து ஒன்றாக அமர்ந்து உண்பார்கள்.

இதில் ‘வைத்து கொடுக்காமல் படுத்து விடுகிறேன்... எடுத்து போட்டுக் கொள்ளாமல் சாப்பிடுகிறார்’ என்பதெல்லம் அவள் அறியாத விஷயங்கள்... திருமணத்துக்கு முன்னும் பள்ளி, கல்லூரி காலங்கள்...பின் உடனே வேலைக்குச் சென்று விட்டது என மதிய உணவு நேரங்கள் பெரும்பாலும் அவளுக்கு வெளியில்தான்

“அப்பா முன்னலாம் இப்படி கிடையாதேம்மா...இப்ப என்ன இப்பிடி திடீர்னு...”

“முன்னெல்லாமும் அப்பிடித்தான்... அதாவது நீ கொஞ்சம் பெரியவளாகிற வரை...இப்ப போனை நோண்டுறவரு அப்போ சாமி சாமின்னு பூஜை ரூம்லயே பழியாக் கிடப்பாரு...காலை சாப்பாடு பத்து மணிக்கு, மதிய சாப்பாடு மூணு மணிக்கு, ராத்திரி சாப்பாடு பத்து மணிக்குன்னு கொஞ்ச நஞ்சப் பாடா பட்டேன். நீ ஏழாவது படிக்கும் போதுதான் அப்பாவுக்கு சுகர் வந்தது... சுகர் வந்தா எல்லாரும் வருத்தப்படுவங்க...ஆனா இவர் அதுல இருந்து நேரா நேரத்துக்கு சாப்பிட ஆரம்பிச்சது பார்த்து நான் சந்தோஷப்பட்டேன்”



“ஆனா அதும் கொஞ்ச நாளைக்குத்தான் மறுபடி பழைய குருடி கதவைத் திறடின்னு ஆரம்பிச்சாச்சு...இப்ப புதுசா அல்சர் வேற சேர்ந்திருக்குது. கொஞ்சம் சொல் பேச்சு கேட்டாத்தான் என்ன உங்கப்பா...ஷப்பா... என்னால முடியலடி...பேசாமக் கொஞ்ச நாளைக்கு எங்கயாவது கோவில் டூர் போகலாமான்னு பார்க்குறேன். நான் வீட்ல இல்லாம இருந்தாத்தான் உங்கப்பாவுக்கு சாப்பாட்டோட அரும புரியும். வேளா வேளைக்கு வடிச்சுக் கொட்டிகிட்டே இருக்கேன்ல...அதுதான் இளக்காரமாப் போச்சு”



அம்மா புடைவையில் மூக்கைச் சிந்த, பிரச்சனையைத் தந்தையிடம் எப்படிப் பேசுவது என மகள் யோசிக்க ஆரம்பித்தாள்



மதியம் தமையனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அவன் “இதுல நாம என்ன செய்ய முடியும் சொல்லு...நான் அப்பாகிட்ட சீக்கிரம் சாப்பிட்டா என்னன்னு கேட்டப்ப பசி எடுத்தாதான கண்ணா சாப்பிட முடியும்னு சொல்றாரு...அவர் சொல்றதும் நியாயம்தானே”



சிறிது நேரம் அவனிடமும் பேசி விட்டு வைத்தவள் அன்றிரவு எல்லோரும் உண்டு முடிக்கவும் தந்தை மொட்டை மாடியில் நடக்கிறேன் என்று கிளம்பவும் தானும் உடன் ஒட்டிக் கொண்டாள்.




மொட்டை மாடியில் மெதுவாக இருவரும் நடக்க ஆரம்பிக்க அதிக காலம் தந்தையோடு பேசி இருக்காததால் ஜெய்பீம் பட சர்ச்சை பற்றியும் ரஷ்யா உக்ரைன் போர் குறித்தும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் மாற்றம் குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தவர்களின் பேச்சு மெல்ல வீட்டு விஷயங்களை நோக்கித் திரும்பியது.
 
New member
Joined
Dec 23, 2024
Messages
2
“ஏன்பா...நேரா நேரத்துக்கு சாப்பிட்டா என்ன? அம்மா உங்க நல்லதுக்குத்தானே சொல்றாங்க...அம்மாவுக்குக் கருநாக்குப்பா... சொன்னாங்கன்னா நடந்துரும்...அதுனால அவங்ககிட்ட வச்சுக்காதீங்க” தீவிரமாக ஆரம்பித்தவள் கேலியில் முடித்தாள்.



மகள் கூறியதைக் கேட்டு வாய் விட்டுச் சிரித்தவர் “வத்தி வச்சுட்டாளா உங்கம்மா...என்னடா ரெண்டு நாளாப் புலம்பாம இருக்காளேன்னு பார்த்தேன்...உங்கிட்டப் பொறுப்பை விட்டுட்டோம்னு கம்முன்னு இருந்துருக்கா போல”



இடுப்பில் கைவைத்துக் கொண்டு தந்தையை முறைத்தவள் “நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல” எனவும்



“பசி முன்னப் போல இருக்க மாட்டேங்குதுடா...முன்ன எல்லாம் நல்லா ஒரு மணி நேரம் நடப்பேன்... பசி எடுக்கும்... இந்தக் கொரோனா காலத்துக்கு அப்புறம் வெளிய இயல்பா நடந்து போறதே முடியுறது இல்ல. அதுலயும் வாக்கிங்க் போனாத் தெரிஞ்சவன் பார்த்துடறான்...தூரத்துல இருக்கும் போதெல்லாம் மாஸ்க் போட்டுட்டு வர்றவன் பக்கத்துல வந்ததும் மாஸ்கை இறக்கி விட்டுட்டு எச்சில் தெறிக்கப் பேசும் போது பயம் வந்துடுது... ஏற்கனவே சுகர், பிரஷர் எல்லாம் இருக்கு... இதுல கொரோனா வேற வந்தா எத்தனை அவதி...இதுனால நடக்கவே போறது இல்ல...மொட்டை மாடியில இருக்கிற இடத்துலே நடக்கிறது நடந்தாப் போலவே இல்ல”



“பசி எடுக்கலைங்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்...அதென்ன காலைல ஒருமணி நேரம் மொபைல் வச்சுகிட்டு உக்காந்துக்கிறீங்களாமே!”



மிட்டாய் தின்று மாட்டிக் கொண்ட சிறுவனைப் போல் சிரித்தவர் “அது வந்தும்மா...” என்றவர் சில வினாடிகள் பேச்சை நிறுத்தித் தொண்டையைச் செருமி கொண்டார்.



“உனக்குத் தெரியும்லடா நம்ம மாணிக்கம் அங்கிள் கொரோனோல இறந்தது...”



“ம்ம்ம்...தெரியுமே...அவர் பிள்ளைகள் கூட அந்த சமையம் ஃபாரின்ல இருந்து வர முடியாமப் போச்சே”



“ம்ம்ம்...எல்லாருக்கும் ரொம்பக் கஷ்டகாலம்தான் அது...அவருக்கப்புறம் நம்ம சுப்ரமணியம்...கொஞ்சம் காலை சாய்ச்சு சாய்ச்சு நடப்பாரே அவர் இறந்தாரு...அதுக்கப்புறம் ஈரோட்டுல என் ஃப்ரெண்ட் உனக்குத் தெரியுமே... உன் கல்யாணத்துக்குக் கூட வந்துருந்தாரே பார்த்திபன்னு...”



“ம்ம்ம்..ஆமா...ஞாபகம் இருக்கு...அதுக்கு ஒரு வருஷம் முன்னால ஃபேமிலியோட நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்களே!”



“ம்ம்ம்...எனக்கு ரொம்பக் க்ளோஸ் அவரு...வேலைல சேரும்போது நாங்க எல்லாம் ஒரே பேட்ச்”



“சரிப்பா! இப்ப அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்...வயசானா இறப்புங்கிறது சகஜம்தானே...எல்லாரும் ரிடயர் ஆகிப் பேரன் பேத்தின்னு எடுத்துட்டு நிறைவா வாழ்ந்துட்டுதானே போயிருக்காங்க”



“சொல்றேன்மா...நாங்க எல்லாருமே பென்ஷனர்ஸ்...எங்களுக்குன்னு ஒரு வாட்ஸ் ஆப் க்ரூப் இருக்கு... இங்க காலை வணக்கம் சொல்றதே ஒரு விதத்துல அட்டெண்டன்ஸ் போடுற மாதிரிதான்...சிலர் காலை வணக்கம் சொல்வாங்க...சிலர் நல்ல வார்த்தைகளோட வாழ்க வளமுடன் அப்பிடின்னு செய்தி அனுப்புவாங்க...தினமும் காலைல வணக்கம் சொல்றவர்கிட்டயிருந்து திடீர்னு ஒருநாள் செய்தி வராம இருந்தா அதிகம் பழகாத நண்பர்கள்ங்கும் போது அது பெரிதா உறுத்தாது...”



“ஆனா முதல் முதல்ல மாணிக்கம் அங்கிள்கிட்ட இருந்து அப்பிடி செய்தி வரலைன்னதும் உறுத்தலா இருந்தது...சிவ பக்தர் அவரு...தினமும் ஏதாவது ஒரு சிவபெருமான் படத்தோட காலை வணக்கம் பதிவிடுவாரு...என்னன்னு கால் பண்ணி விசாரிச்சப்போதான் அவரை ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்திருக்கிறது தெரிய வந்தது...சில நாட்கள் பின்னால இறந்தும் போய்ட்டாரு...தினம் காலைல அவர் பதிவுகளை ரொம்ப மிஸ் செய்தேன்...அப்புறம் அப்படியே ஒவ்வொருத்தரா...”



மீண்டும் தொண்டையைச் செருமிக் கொண்டவர் “அதுவும் இப்பல்லாம் அந்தக் காலை வணக்கப் பதிவு வரக் கொஞ்ச நேரம் ஆனாக் கூட அவங்களுக்கு என்னவோ ஏதோன்னு நெஞ்சு பதறுது...உடனே போய் அவங்களுக்குப் ப்ரைவேட் மெஸேஜ் அனுப்பி இல்ல கால் பண்ணி அவங்க நலமா இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கலைன்னா மனசுக்குள்ள ஏதோ பிசையுற மாதிரி ஆகிடுது”



“அப்போ நான் காலை வணக்கம் பதியலைன்னா மத்தவங்களும் இப்படி உணர்வாங்களோன்னு ஒரு சந்தேகம்...அன்னிக்கு நம்ம கிச்சு மாமாகிட்டக் கேட்டப்போ அவனும் அதையேதான் சொன்னான்...ஆமாப்பா உன் குட் மார்னிங்க் வரலைன்னாக் கொஞ்சம் ஒரு மாதிரியாத்தான் இருக்கும். பத்து நிமிஷம் பார்த்துட்டு உடனே நான் ஃபோன் பண்ணிருவேன்னு... அப்போதான் சில நேரம் அவன் அந்த மாதிரி ஃபோன் செய்து விசாரிச்சது எனக்கும் நினைவு வந்துச்சு...அதுனாலதான்மா இப்பல்லாம் காலைல டீ குடிச்சு முடிச்சதும் முதல்ல போய் க்ரூப்ல... ஒரு சில நெருங்கிய நண்பர்களுக்குன்னு காலை வணக்கம் அனுப்பிடறது...உனக்கு மாப்பிள்ளைக்கெல்லாம் கூட அனுப்பிட்டு இருக்கேனே”



சில மாதங்களாக தினமும் அவர் அனுப்பும் காலை வணக்கப் பதிவுகளைக் கண்டவள் ‘அப்பாக்கு நிறைய நேரம் இருக்கு எஞ்சாய் பண்றார்’ என்று நினைத்துக் கொண்டாளே தவிர அந்த செய்கையின் பின் இப்பிடி ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை...



எல்லாவற்றுக்கும் மேலாக அவர் அப்படி அனுப்பும் ஒரு வணக்கத்துக்குக் கூட அவள் பதில் வணக்கம் சொன்னது இல்லை...நேரமின்மை என்பது கண்டிப்பாக ஒரு காரணம் இல்லை... செய்ய அரைநொடி ஆகப் போகும் விஷயத்தை செய்வதற்கு மனமில்லை என்பதுதான் உண்மை.



வாயைத் திறந்தவாறு தந்தையை ஆ என்று பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டவர் “என்னமா இப்பிடிப் பார்க்குறே?” எனச் சிரித்துக் கொண்டே கேட்டார்.



நெகிழ்ந்திருந்த மனதோடு கசிந்திருந்த கண்களையும் சிமிட்டி சரி செய்து கொண்டே,



“ஒன்னும் இல்லப்பா...இதை நீங்க அம்மாகிட்ட சொல்லிட்டே பண்ணலாமே”



“ம்ம்ம்...விட்டுடுவாளா உங்கம்மா...சாப்பிட்டு முடிச்சுட்டுப் பண்ண வேண்டியதுதானேம்பா...சாப்பிட உக்காந்துட்டா... அப்புறம் சாப்பிட்டு முடிச்சதும் ஒரு மாதிரி அசத்தும்... காலைல டீயைக் குடிச்ச கையோட செஞ்சாத்தான்... உங்கம்மா சொன்னாப் புரிஞ்சுக்க மாட்டா”



“நான் சொல்றேன்பா...அம்மா புரிஞ்சுக்கிற மாதிரி சொல்றேன்” என்றவள் தகப்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.



“இனிமே உங்க குட்மார்னிங்கெல்லாம் நானும் பதில் போடுவேன்பா”



அவரும் நெகிழ்வுடன் மகளின் கையைப் பற்றிக் கொண்டார்.



*********************************************************************************************************************

அன்புடன்
தூரிகா சரவணன்:love:🙏
 
Top