New member
- Joined
- May 1, 2025
- Messages
- 23
- Thread Author
- #1

எபிலாக்
அலைகளை அள்ளி வீசி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது, கடல். கரையைத் தொட்டுத் தீண்டி தன் காதலைப் பறைசாற்றி சில்மிஷம் செய்து சென்றது அலை.
கரையில் அமர்ந்திருந்த அனுபமாவின் விழிகள் தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த கணவனைக் காதலுடன் நோக்கின.
அவனது கையில் இருந்த ஒன்றரை வயதுச் சிறுமி "ப்பா" என்று சிணுங்க, "உங்கள நான் பாத்தா, அப்பா பொண்ணுக்கு பொறுக்காதே" என்று அனு சிணுங்க,
"அவ கூட உனக்கு என்னடி கோவம்? நம்ம பொண்ணுல்ல?" என கதிர் கேட்க, "அது முடியாது. பொண்ணா இருந்தாலும் எனக்கு தான் முதலிடம். எனக்கு பொறாம வரும்" என்று முகத்தைச் சிலுப்பிக் கொள்ள,
"நல்லா வருவ" என சிரித்தான், அவன்.
கதிர் வந்த பிறகு அவளுடன் தான் இருந்தான். வீட்டிற்கு முன்னதாக மெக்கானிக் ஷாப் ஒன்று வைத்தவன், தன் தொழிலைத் திறம்படச் செய்து தன்னவளையும் கவனித்துக் கொண்டான்.
சீதாவும் அனுவோடு பழையபடி உரையாடத் துவங்க, அவளும் அனைத்தும் மறந்து பேசினாள். மன்னித்தலும் ஒரு நல்ல விடயம் தானே. எனவே தன் உயிரானவனுக்காக, அவனது தாய் சொன்ன வார்த்தைகளை மறந்து போனாள்.
அவள் மீது அன்பை அளவின்றிக் கொட்டி, கொண்டாடித் தீர்த்தான், கதிர். வைத்தியசாலை செல்லும் போது அவன் உடன் செல்வான். நேரத்திற்கு சாப்பிட வைத்து, மாத்திரை கொடுப்பான்.
பழங்கள், சாக்லேட், விதவிதமான உணவுப் பொருட்கள் என்று அவளுக்காக ஒவ்வொன்றும் வாங்கி வந்து கொடுப்பான். வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் அவளை, தன் நெஞ்சாங்கூட்டில் சுமந்தான், கணவன்.
அவனது அன்பில் திக்குமுக்காடிப் போவாள், பெண்ணவள். அத்தனை அன்பை அவன் மீது பொழிந்தான்.
அவள் மறக்கவே முடியாத ஒரு நாளும் வரத் தான் செய்தது. அன்று அவர்களது ஊரின் அபிவிருத்தி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்த ஊரில் கிட்டத்தட்ட அனைவரும் பங்கெடுத்திருந்தனர். அனுபமாவும் தன் குடும்பத்தினரோடு சென்றிருந்தாள்.
அந்த ஊரின் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராக இருந்த கதிருக்கு நன்றியுரை கூற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
ஊர் விடயங்கள் பற்றி பேசி முடித்தவன், "இந்த உரைய முடிச்சுக்க முன்னால ஒரு விஷயம் சொல்லனும். பர்சனல் விஷயம் பத்தி பேசுறதுக்கு மன்னிக்கனும். நான் ஊர் தலைவர் கிட்ட அனுமதி கேட்டு தான் பேசுறேன்" என்றவனது பேச்சில் அனைவரும் அமைதியாகி நின்றனர்.
அவன் என்ன சொல்லப் போகிறான் என சபையே மௌனித்துப் போக, "இப்ப நான் போடுற ஆடியோவ கேளுங்க" என்றவன் ஒரு ஒலிப்பதிவை ஒலிக்க விட்டான்.
அதில் அன்று அனுபமா ரஜனோடு நகைக்கடையில் பேசுவது ஒலிக்கப்பட்டது. ஆம்! அன்று காவ்யா தான் இதனை ரெக்கார்ட் செய்து அனுப்பி இருந்தாள். அவனும் தற்போது சரியான சமயம் வரும் வரை காத்திருந்தான். ரஜன் கூறிய அனைத்தும் ஒலிக்க, யாவரும் வாயடைத்துப் போய் நின்றார்கள்.
சீதாவும் கூட அதிர்ந்தே போனார். ரஜன் பற்றி அன்று காவ்யா கூற வந்தது இதனைத் தானா? இதைக் கேட்காமல் இந்தப் பெண்ணை வார்த்தைகளால் வதைத்து விட்டோமே என துடித்துப் போனவரை, அதீத குற்றவுணர்வு ஆட்கொண்டது.
"இதுல என் வைஃப் கூட பேசுறது ரஜன் தான். யார்னு தெரியும்ல? அனு கூட சேத்து வெச்சு பேசுனீங்களே அதே ரஜன் தான். என்னமோ என் பொண்டாட்டி தப்பு பண்ண மாதிரி பேசுனீங்கள்ல? இப்ப உண்ம தெரிஞ்சுதா?
அனுவ லவ் பண்ணது ரஜன். இது அவளுக்குமே தெரியாது. ஆனா அதுக்கு பிறகு இத பத்தி பேசப் போய் அது எந்த மாதிரி ஊருல பரவிடுச்சு தெரியுமா? எல்லாருக்கும் தெரியும்ல? உண்ம தெரியாம நீங்க பேசுன பேச்சுல அவ எந்தளவு மன உளைச்சலுக்கு ஆளாகிட்டா.
உங்களோட ஒரு பேச்சு அவள எவ்வளவு கண்ணீர் வடிக்க வெச்சிருச்சு, எப்படியெல்லாம் கஷ்டப்படுத்திடுச்சு, நிம்மதிய இழக்க வெச்சு சந்தோஷத்த, தூக்கத்த பறிச்சிடுச்சுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.
இதல்லாம் உங்க கிட்ட சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. என் பொண்டாட்டி எந்த தப்பும் பண்ணல, அவ சுத்தமானவனு எனக்கு தெரியும். ஆனா, இத ஏன் இங்க போட்டேன் தெரியுமா?
இந்த ஊருல தானே எல்லாரும் அவள தப்பா பேசுனீங்க. நான் நம்புனாலும் கூட, உங்க பார்வ இன்னும் தன் மேல தப்பா தான் படுதுன்னு அனு உள்ளுக்குள்ள மருகிட்டு இருக்கா. அவளோட மனக்கலக்கத்த தீர்க்க நான் இத பண்ணுனேன். என்ன பத்தி எல்லாருக்கும் தெளிவு கெடச்சிருச்சேனு அவளுக்கு ஒரு திருப்தி வரும்ல? அதுக்காக நான் பண்ணேன்.
என் பொண்டாட்டிய நான் நம்புனேன். அவளும் என்ன நெனச்சி எனக்காக நல்லபடியா வாழ்ந்தா. ஊருல ஒரு தப்பு நடந்துச்சுன்னு எல்லாரும் இப்படித் தான்னு முத்திரை குத்தாதீங்க. ரெண்டு பேரும் அடுத்தவர்க்கு உண்மயா இருந்தா போதும். நாம யார் எதிர்த்தாலும் வாழலாம்" என தன்னுரையை முடித்துக் கொண்டான்.
ஊரார் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அவளைத் தவறாகப் பேசிய தலைகள் தானாகவே கவிழ்ந்தன.
அனுவின் தலை நிமிர்ந்தது. தன்னவனை நோக்கிச் சென்றவளின் விழிகளில் பளிச்சென்ற மின்னல். எந்த ஊர் தன்னை செய்யாத தவறுக்காகத் தூற்றியதோ, அதே ஊருக்கு முன்னால் தான் குற்றமற்றவள் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்து தன்னுடைய இத்தனை நாளைய மனத்தாங்கலைத் தீர்த்து விட்டானே, தன் கண்ணாளன்.
இனி அவளுக்கென்று கவலையே இல்லை. இனிமேல் தான் சந்தோஷமாக, எந்த சோகமும் இன்றி வாழலாம் என்று நினைக்கும் போதே அவளுள் ஒரு வித உற்சாகம் பிறந்தது.
அவனுக்கு, அவளின் இந்த நிமிர்வு போதும். அவளின தெளிவு போதும். அவளின் சந்தோஷம் போதும். பழைய அனுவை திருப்பிக் கொண்டு வந்த திருப்தி கதிரின் முகத்தில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
இப்படியாக நாட்கள் நகர்ந்து செல்ல, அவர்களது வாழ்வுக்கு இரட்டிப்பு இன்பத்தை வழங்கும் விதமாக இத்தரணியில் அவதரித்தது, அழகான பெண் குழந்தை.
அதற்கு "அதிதி" என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். குழந்தை பிறந்த பிறகும் அவளை கதிர் தான் கவனித்துக் கொண்டான். சீதா, மங்களம் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும், அவர்களை ஒரு அளவோடு நிறுத்தி விட்டு தன் மனைவிக்குரிய சேவைகளை அவனே செய்தான்.
இதோ, கண்ணுக்கு விளங்காமல் இரு வருடங்கள் ஓடியே போயின. அவனது அன்பு இன்றும் துளி கூட மாறவில்லை.
ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்து தந்த தன்னவனைப் பார்த்து சிரித்தவாறே அவள் சாப்பிட, "இந்தாடா" தன்னுடையதையும் அவளுக்கே வழங்கினான்.
"ஹய் தாங்க் யூ" அவனது கன்னத்தைக் கிள்ளி விட்டு இரண்டையும் மாறி மாறி சாப்பிட ஆரம்பித்தாள்.
வானத்தில் விமானம் செல்லும் சத்தம் கேட்டது. அனுபமாவின் நயனங்கள் வானை நோக்கின.
"என்னம்மா? இன்னுமே அத பாத்து பயமா?" என்று கதிர் வினவ, "எனக்கென்ன பயம்? உன்ன இனி என் புருஷன் நெருங்கவே மாட்டான்னு நான் அத பாத்து சொல்லுவேன். ஏன்னா நீங்க என் கூட தானே இருப்பீங்க" என்று அவனது கையைப் பிடித்துக் கொள்ள,
"ஹய்யோ! என் பொண்டாட்டி இப்படில்லாம் பேசுறா" என அவன் சிரிக்க, "ம்ம் அப்படித் தான் பேசுவேன். ஏன்னா எனக்கு அவ்ளோ நம்பிக்க. நீங்க என்ன விட்டு போக மாட்டீங்கங்கிற சந்தோஷம். இந்த தூரம் இனி நமக்குள்ள வரவே வராதுங்குற உறுதி" என்றாள், விழிகளில் மகிழ்வு மின்ன.
"ஆமா டா தங்கம். இந்த தூரம் நமக்கு வேண்டாம்" என்றவனின் இதழ்கள் அவளின் நெற்றி மீது பதிந்தன.
அனுபமா-கதிர் வாழ்வில் தூரம் என்ற குறுநாவல் முற்றுப் பெற்றது. சந்தோஷம் மற்றும் காதல் என்பது மட்டும் தொடர்கிறது, தீராத கதை தொடர்கதையாய். இனியும் தொடரும், அவர்களின் அழகான காதல்.
இனிதே முற்றுப் பெற்றது.
ஷம்லா பஸ்லி