• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
54
சில வருடங்களுக்குப் பிறகு...

கார்த்திகேயன் வள்ளியின் இரண்டு வயது மகனான கதிர்வேலன், வள்ளியின் அருகே அவள் மீது ஒரு காலையும் கையையும் போட்டுப் படுத்திருக்க, அவர்களின் இரண்டு வயது மகளான மரகதமயில் தந்தையின் மார்பு மீது கவிழ்ந்து படுத்திருந்தாள்.

மகளைத் தட்டிக் கொடுத்தவனாய் கண் மூடிப் படுத்திருந்த கார்த்திகேயன், "என்னவாம்? என் பொண்டாட்டி என்னைச் சைட் அடிச்சிட்டு இருக்க மாதிரி இருக்கே. என் வள்ளிக்கு நான் வேணுமா?" கண் மூடிய நிலையிலேயே வள்ளியின் பார்வை தன்னை ஊடுருவுவதை உணர்ந்து சிரிப்புடன் கேட்டிருந்தான்.

பக்கத்தில் ஒருகளித்துப் படுத்திருந்தவளின் கண்கள் கணவனையும் மகளையும் தான் பார்த்திருந்தன. அதனைக் கணவன் கண்டு கொண்டதில் ஆச்சரியம் கொண்டவளாய், "எப்படிப்பா?" என்று வினவினாள்.

கண்விழித்து அவளைப் பார்த்துச் சிரித்தவனாய், "என் வள்ளி தான் என் உசுருக்குள்ள ஊடுருவி இருக்காளே. அவளோட பார்வை எனக்கு எப்படித் தெரியாம போகும்" என்றான்.

"அடடடா.. தினமும் கவிதை போஸ்ட் செய்றேன்னு என்னை எழுத வச்சி எழுத வச்சி இப்ப நீங்க பேசினாலே கவிதையா கொட்டுதே" என்று சிரித்தாள் வள்ளி.

"அடிப்பாவி உண்மையைச் சொன்னா, கவிதைக்குப் பொய் அழகுனு நான் பொய் சொல்றேன்னு எவ்ளோ நேக்கா சொல்ற நீ" என்று அவளின் மண்டையில் முட்டினான்.

ஹா ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தவள், "நீங்களோ நானோ எழுதுற கவிதை எதுவுமே பொய் கிடையாது கார்த்தி. ஏன்னா அது நம்ம வாழ்வியலோட கலந்த உணர்வை வச்சி எழுதுற கவிதைகள். அதனால தான் எல்லாராலயும் நம்ம கவிதையை அவங்க வாழ்க்கையோட ஒப்பிட்டுப் பார்த்து உணர முடியுது. அப்புறம் அதனால தான் யூ டியூப்ல சில்வர் பட்டன் வாங்குற அளவுக்கு டெவலப் ஆகி இருக்கோம்" என்று கண் சிமிட்டினாள்.

"ஹ்ம்ம் சரி தான்" என்று மகளைத் தூக்கியவாறு எழுந்தவன், மகனும் மகளும் படுக்கவென அருகில் தொட்டில் போன்று போட்டிருந்த சிறிய கட்டிலில் மகளைப் படுக்க வைத்தான்.

வள்ளியின் அருகில் இருந்த மகனையும் தூக்கி வந்து படுக்க வைக்க, உடனே சிணுங்கினான் மகன். அவனின் சிணுங்கலில் அருகில் இருந்த மகளும் சிணுங்க, 'அய்யய்யோ முழிச்சிடக் கூடாதே' என்று மெல்ல அலறியவனாய் வள்ளியைப் பார்க்க வாய்விட்டுச் சிரித்தாள் அவள்.

"என் பொழைப்பு உனக்குச் சிரிப்பா இருக்கா?" சின்னக் குரலில் கேட்டவன், குழந்தைகளின் அருகில் மெத்தையில் அமர்ந்து இருவரையும் சிறிது நேரம் மெல்ல தட்டிக் கொடுத்தான்.

அவர்கள் ஆழ்ந்து உறங்கி விட்டார்களா என்று ஊர்ஜிதம் செய்த பிறகு எழுந்து மனைவியினருகே வந்தான்.

தங்களது குழந்தைகளைக் கணவன் உறங்க வைக்கும் பாங்கை ரசிப்புடன் பார்த்திருந்த வள்ளி, தன்னருகே கணவன் வந்ததும் அவன் மார்பில் முகம் புதைத்தவளாய், "இது என் இடமாக்கும்" என்று கூறி முத்தமிட்டாள்.

"அடிப்பாவி பெத்த பொண்ணுக்கிட்ட போய் உரிமைச் சண்டை போட்டுட்டு இருக்க நீ" என்று சிரித்தான்.

"பின்ன அவளைத் தான் இப்பலாம் கொஞ்சுறீங்க நீங்க. என்னைக் கண்டுகிறதே இல்லை" என்று அவள் குற்றம் சாட்ட,

"யாரு கண்டுக்கலை? நான் கண்டுக்காம தான், என் பொண்டாட்டிக்கு நான் வேணுமானு கேட்டு இப்படி ஒட்டிக்கிட்டு இருக்கேனா?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.

அவனின் கேள்வியில் அவளுக்கு வெட்கமாகிப் போக, 'அய்யோ உங்க வாய் இருக்கே' என்றவளாய் நாணத்துடன் தலைக் கவிழ, அவளின் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தவன் அவளின் இதழை வருடியவனாய், "இந்த வாய்க்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியாதே" எனக் கேட்டு அவளை முத்த பாடம் எடுக்க வைத்தான்‌.

அன்பின் ஆழமாய்க் கரைந்திருந்த நொடிகளில் அவளுள் மூழ்கி, தன்னுள் கரைய செய்திருந்தான் கார்த்திகேயன்.
 
Joined
May 20, 2025
Messages
54
மறுநாள் காலை பரபரப்புடன் அனைவரும் கிளம்பியிருந்தனர்.

மகனையும் மகளையும் தாய் தந்தையரிடம் கொடுத்து கிளப்ப சொல்லி கொடுத்த கார்த்திகேயன், சுடிதாரை அணிவதற்தாக எடுத்து வைத்திருந்த மனைவியிடம் வந்து, "புடவைக் கட்டிக்கோ வள்ளி" என்றான்‌.

ஏன் என்பது போல் அவனைப் பார்த்தவள், "எங்கே போகப் போறோம்னு கேட்டா சஸ்பென்ஸ்னு சொல்லிட்டீங்க. புடவை கட்டிட்டு போற அளவுக்கு என்ன விசேஷமான இடம்" என்று யோசித்தவாறு நின்றிருந்தவளை நேரமாகிறது எனக் கூறிக் கலைத்துக் கிளம்பச் செய்திருந்தான்.

மகிழுந்தில் முன்னிருக்கையில் வள்ளி அமர்ந்திருக்க, தாமோதரனும் பார்வதியும் பேரன் பேத்தியுடன் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர்.

கார்த்திகேயன் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, "ஏன் அத்தை, நாம எங்கே போறோம்னு உங்களுக்காவது தெரியுமா?" எனக் கேட்டாள்.

தெரியலையேமா என்று உதட்டைப் பிதுக்கினார் அவர். அதைப்‌ பார்த்து தாமோதரன் சிரிக்க, "மாமா நாம எங்கே போறோம்னு உங்களுக்குத் தெரியும் போலயே" என்று கேட்டாள் வள்ளி.

"அதைப் பத்தி வாயைத் திறக்கக் கூடாதுனு உன் புருஷன் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருக்கான்மா" என்றார் அவர்.

ஒரு கல்யாண மண்டபத்திற்குள் மகிழுந்தை நிறுத்தி அனைவரையும் இறங்கச் சொன்னான்.

'எதுவும் கல்யாணத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்காரா? அதை ஏன் சர்ப்ரைஸ்ஸா கூட்டிட்டு வந்திருக்காரு?' என்று யோசித்தவளாய் நின்றிருந்தாள் வள்ளி.

கார்த்திகேயன் மகிழுந்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வந்ததும் அனைவரும் உள்ளே செல்ல, புத்தக வெளியீட்டு விழா என்றிருந்த பதாகையைப் பார்த்த வள்ளி, "ஓ புக் ரிலீஸ் ஃபங்ஷனா? என்னோட ஃபேவரைட் ஆத்தரோட புக் ரிலீஸ் ஃபங்ஷனுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்களா" எனக் கண்கள் மின்னக் கேட்டாள்.

சிரிப்புடன் அவளைப் பார்த்தவன், "உள்ளே போனதும் நீயே தெரிஞ்சிப்ப" என்றான்.

தாயையும் தந்தையையும் குழந்தைகளுடன் ஓர் இடத்தில் அமர வைத்து விட்டு வள்ளியை தன்னுடன் அழைத்துக் கொண்டு விழா குழுவினரை நோக்கிச் சென்றான்.

விழா மேடையில் ஒட்டப்பட்டிருந்த பதாகையில் இன்று வெளியிடப்படும் புத்தகங்கள் என்று ஐந்து புத்தக அட்டைகள் போடப்பட்டிருக்க, அதில் 'என்னவரின் அன்பில்' என்ற புத்தகப் பெயரைப் பார்த்து திகைத்து நின்றாள் வள்ளி.

"உன்னோட கவிதைகளை எல்லாம் சேர்த்து வச்சி ஒரு புத்தகமா போட்டா அதுக்கு என்ன பேரு வைப்ப வள்ளி?" என்று கார்த்திகேயன் அவளிடம் ஒரு முறை கேட்டதும், அதற்கு அவள், "என்னவரின் அன்பில்" என்று கூறியதும் அவளின் நினைவிலாடியது.

அருகில் நடந்து வந்து கொண்டிருந்த கணவனின் கையைப் பிடித்து நிறுத்தியவளாய், அந்தப் பதாகையைக் காண்பித்தவள், "என்னோட கவிதைத் தொகுப்பைப் புத்தகமா வெளியிடப் போறாங்களா?" இன்ப அதிர்வுடன் கேட்டிருந்தாள்.

வியப்பிலும் மகிழ்விலும் விரிந்த அவளின் விழிகளையும் அவளின் முகப்பாவங்களையும் ரசித்துச் சிரித்தவனாய், "இந்தச் சரஸ்வதி பப்ளிகேஷன்ல ஒரு போட்டி சொல்லிருந்தாங்க வள்ளி. கவிதைத் தொகுப்பு நூல் போட்டி. தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து கவிதைத் தொகுப்புகள் நூலாக வெளியிடப்படும்னு சொல்லிருந்தாங்க. அதுக்குத் தான் உன்னுடைய கவிதைத் தொகுப்பை அனுப்பியிருந்தேன். அந்த அஞ்சுல உன்னுடையதும் செலக்ட் ஆகியிருக்கு. அந்த ஃபங்ஷன் தான் இது" என்றவன் அவளை அழைத்துச் சென்று விழா குழுவினரிடம் அறிமுகம் செய்து பேசி விட்டு வந்து அமர்ந்தான்.

"அய்யோ இன்னுமே என்னால நம்ப முடியலைங்க. என்னோட எழுத்து புத்தகமா வரப் போகுதா" அத்தனை நெகிழ்வும் பூரிப்புமாய்க் கேட்டிருந்தாள்.

"ஆமா நூலாசிரியர் ஓரிரு வார்த்தைகள் பேச வேற செய்யனுமாம். அதனால் பேசுறதுக்குத் தயாரா இருந்துக்கோ" என்றான்.

"என்னது மேடைல பேசனுமா?" சற்று நடுக்கத்துடன் கேட்டாள்.

"ஏன் பயமா இருக்கா?" என்று கேட்டு அவளின் கரத்தினை அவன் பற்றிக் கொள்ள,

"இல்ல நீங்க தான் கூட இருக்கீங்களே! அதனால தைரியமா பேசிடுவேன்" என்று கண் சிமிட்டினாள்.

அவளின் புத்தகத்தை வெளியிட்டு விட்டு அவளைப் பேச அழைத்தனர்.

கையில் நடுக்கத்துடன் மைக்கை வாங்கியவள், கார்த்திகேயனைப் பார்த்தாள்.

"தைரியமா பேசு" என்று வாய் அசைத்து வெற்றிக் குறி காண்பித்து அவளுக்கு உற்சாகமூட்டினான் கார்த்திகேயன்.

"எல்லாருக்கும் வணக்கம். எனக்குக் கவிதை எழுத ஆர்வம் வந்ததுக்குக் காரணமே என் கணவர் தான்" என்றாள்.

'நானா? இவ தான் கல்யாணத்துக்கு முன்னாடியே கவிதை எழுதுவாளே' என்று யோசித்தவாறே அவளை அவன் பார்க்க, அதற்கான விடையும் அவளே கூறியிருந்தாள்.

"எனக்குத் திருமணம் நடக்கத் தாமதமாகிட்டே போனதுனால உள்ளுக்குள்ளேயே குமைஞ்சிட்டு இருக்க என்னோட மனஉணர்வுகளை, ஏக்கங்களை, காயங்களை வென்ட் அவுட் (vent out - வெளியேற்ற) செய்றதுக்காகத் தான் கவிதை எழுத தொடங்கினேன். அதனால நான் எழுத தொடங்கின காலத்துல என்னுடைய கவிதை முழுக்கவும் நிரம்பியிருந்த உணர்வுகள் என் கணவருக்கானதா தான் இருந்துச்சு. அதனால என்னைக் காணும் முன்னமே என்னுடைய உணர்வில் கலந்து விட்ட என் கணவர் தான் என் எழுத்துக்குக் காரணம்னு நான் எப்பவுமே நினைச்சிப்பேன்"

இந்நாள் வரை இவ்விடயத்தை அவள் அவனிடம் பகிர்ந்ததில்லை என்பதால் வியந்து போய்க் கேட்டிருந்தான் கார்த்திகேயன்.

எனக்கே எனக்காய்
எனக்காகப் பிறந்து
எனக்காக வளர்ந்து
எனைத் தேடிக் கொண்டிருக்கும்
என் இனியவனே,

காத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வருகைக்காக
விரைவில் கண்டுபிடிப்பாய்
என்கின்ற நம்பிக்கையில்.
இப்படிக்கு
உன் வருங்கால மனைவி!

"இந்தக் கவிதை தான் நான் எழுதிய முதல் கவிதை! என் எழுத்துக்கு என் கணவர் தான் காரணம்னு ஏன் சொன்னேன்னு இப்ப புரியுதா?" என்று கேட்டு அவள் சிரிக்க, அரங்கத்தில் உள்ளோர் அனைவரும் வியந்து மகிழ்ந்து கைத்தட்டி இருந்தனர்.

சிலர் தங்களுக்குள், 'யார் அந்த அதிர்ஷ்டசாலி கணவன்' என்றும் பேசிக் கொண்டனர்.

'அப்பவே அருவுருவமா அவளோட உணர்வாய் இருந்து எழுத வச்சிருக்கேன்னு சொல்றா' நெஞ்சம் நிறைந்து போனது அவனுக்கு.

"என்னவரின் அன்பில் - இந்தப் புத்தகத்துல பறக்கும் பட்டாம்பூச்சி படத்தை அட்டைப்படமா போட்டிருக்காங்க. அந்தப் பட்டாம்பூச்சி தான் நான். திறமையிருந்தும் தனக்குள் சுருங்கியிருந்தவளை இந்தப் பட்டாம்பூச்சி மாதிரி சிறகடிச்சி பறக்க வச்சது என்னவரோட அன்பு தான்.
நான் இங்கே வர்ற வரைக்கும் என்னோட புத்தக வெளியீட்டு விழாவுக்குத் தான் வரேன்னு எனக்கே தெரியாது. சர்ப்ரைஸ்னு சொல்லி என் கணவர் என்னை இங்கே அழைச்சிட்டு வந்தாரு. ரொம்ப ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
என்னவரோட அன்பினால் மட்டும் தான் இங்கே நான் நிக்கிறேன். எனக்கு நீங்க கொடுத்த, கொடுத்துட்டு இருக்கிற, இனியும் கொடுக்கப் போகும் எல்லாத்துக்கும் அன்பும் நன்றியும் கார்த்தி" மனம் நெகிழ உரைத்தவளாய் அவனைப் பார்த்தாள்.

தன்னுடைய செல்ல மகள் மேடையேறிப் பேசினால் எந்தளவிற்கு தந்தையானவன் பூரித்து நெகிழ்ந்து போவானோ, அந்தளவிற்கு வள்ளியின் பேச்சில் நெகிழ்ந்தவன், அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்ட தன் மீதான காதலில் கரைந்து போனான் கார்த்திகேயன்.

அதன்‌ பிறகு இந்தப் புத்தகத்தைச் சாத்தியமாக்கிய ஒவ்வொருவரின் பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி உரைத்து விட்டு கீழே வந்தவளை தோளோடு சேர்த்து அணைத்து, "ப்ரவுட் ஆஃப் யூடா வள்ளி" என்றான்.

தனது கையில் இருந்த புத்தகத்தை அவனிடம் கொடுத்து, "சைன் பண்ணித் தாங்க" என்றாள் வள்ளி.

"நானா?" வியப்புடன் அவன் கேட்க,

"ஆமா இந்தப் புத்தகத்துல இருக்கக் கவிதையின் உயிரே நீங்க தானே! உங்களுக்காக நான் எழுதின கவிதை தானே இதெல்லாம்" என்றாள்.

அவளின் ஆசைப்படியே அந்தப் புத்தகத்தை வாங்கியவன், "முழுமையானேன் என்னவளின் அன்பில் - வள்ளி மணவாளன்" என்று எழுதி கையெழுதிட்டுக் கொடுத்தான்.

தாத்தாவும் பாட்டியும் பேரனையும் பேத்தியையும் ஏந்தியவாறு நிற்க, அவர்களின் நடுவில் வள்ளியும் கார்த்திகேயனும் இருவரின் கைகளும் இணைந்து ஒரு புத்தகத்தைப் பிடித்தவாறு நின்று ஓர் அழகான ஒளிப்படத்தை எடுத்துக் கொண்டனர்.

படம் எடுத்து முடித்ததும் அவனருகில் நின்றிருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தவளாய் கண்களில் காதலுடன் சத்தம் வராது வாயசைத்து, "லவ் யூ கார்த்தி" என்று சொல்ல, "லவ் யூடா வள்ளி" என்று அவளின் நெற்றியில் முட்டினான் அவன். அதனை அழகாய் படம் பிடித்திருந்தார் புகைப்படக்கலைஞர்.

எந்தன் ஜீவன்
கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு இங்கு
யாரும் இல்லையே!
வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன்தான்.

வள்ளி மணாளன் ஆசியுடன் வள்ளி கார்த்திகேயனின் வாழ்வில் என்றும் என்றென்றும் அன்பு மட்டுமே நிறைந்திருக்க வாழ்த்தி விடைபெறும் நாமும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top