• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
May 20, 2025
Messages
54
ஒரு புறம் காதல் திருமணம் செய்தவர்கள் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் ஏற்பாட்டுத் திருமணம் செய்தவர்கள் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்தனர்.

கார்த்திகேயன் கலராக மார்டனாக ஸ்டைலிஷ் பையனாகத் தெரிய, அருகிலே பின்னிய நீண்ட கூந்தலுடன் சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு குடும்பக் குத்து விளக்கு போன்று இருந்தாள் வள்ளி. மிகவும் அரிதாகவே இவர்கள் போன்ற ஜோடிகள் காணக் கிடைப்பார்கள் என்பதால் அனைவரது பார்வைகளும் இவர்கள் மீது சுவாரஸ்யமாகப் படிந்தன.

முதலில் அவரவர் திருமணம் எவ்வாறு நடந்தது என்ற கதையைக் கேட்டார் நெறியாளர்.

அக்கேள்விக்குத் தம்பதியரில் யாரேனும் ஒருவர் பேசலாம் என்று கூறி விட்டதால், பெரும்பாலும் ஆண்களே இதற்குப் பதிலிறுத்திருந்த போது, கார்த்திகேயன் வள்ளியிடம் பேசுமாறு கூறி ஒலிபெருக்கியை (மைக்) அவள் கரத்தினில் கொடுக்க, அவள் மைக்கை வாங்காது, முடியாது என்று கண்களாலேயே உரைக்க, இவன் பேசு என்று கண்களால் உரைத்து அவள் கையினில் மைக்கை திணிக்க, இவர்களின் இந்தப் பரிபாஷையைச் சுவாரஸ்யத்துடன் பார்த்திருந்த நெறியாளர், "என்ன கண்ணுலயே பேசிக்கிறீங்க" என்று சிரிக்க, மற்றவர்களும் சிரித்திருந்தனர்.

அனைவரும் சிரித்ததில் இவர்கள் இருவருமே சிரித்து விட்டனர்.

வள்ளி பேசத் தொடங்கினாள்.

"எனக்குக் காதல் கல்யாணம் நடக்கும்னுலாம் நான் கனவுல கூட நினைச்சது இல்ல சார். இவர் தான் பிரபோஸ் செஞ்சாரு. முதல்ல நான் ஒத்துக்கலை. அப்புறம் இவரோட நல்ல குணங்கள் பார்த்துப் பிடிச்சிருச்சு. எங்க வீட்டுல செம்ம எதிர்ப்பு. இவரோட வீட்டுல ஒத்துக்கிட்டாங்க. நான் வீட்டை விட்டுப் போய்க் கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்.

இன்னிக்கு நான் நானாக இருக்கிறது காரணம் என் கணவர் தான் சார். எனக்கு ஆங்சைட்டி பிரச்சனை இருக்கு சார். எல்லாத்துக்கும் பயந்து பதட்டமாகி, வேண்டாம்னு அந்த இடத்தை விட்டு ஓடத் தான் பார்ப்பேன் சார். அவ்ளோ பயத்துலயும் வேலையை எப்பவும் விட்டுடக் கூடாதுங்கிற வைராக்கியம் இருந்தனால தாக்குப் பிடிச்சிட்டு இருந்தேன். நான் மட்டும் இவரை மேரேஜ் செய்யாம அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனை மேரேஜ் செஞ்சிருந்தா இவ்வளோ பயம் பதட்டத்தோட எதுக்கு நீ வேலைச் செய்யனும்னு என்னை வேலை விட்டு நிறுத்த தான் செஞ்சிருப்பாங்க. எங்கேயோ கிராமத்துல வீட்டு வேலைச் செஞ்சிட்டு இருந்திருப்பேன் சார்‌.

ஆனா என் கணவர் என்னோட பிரச்சினையைச் சரி செய்ய அவராலான முயற்சி எல்லாம் எடுத்தாரு. எனக்குத் தைரியம் கொடுத்து என்னை இவ்வளோ தூரம் கொண்டு வந்திருக்கிறது இவரோட காதல் தான் சார்" என்று அவனைக் காதலாய் பார்த்தவாறு உரைத்தாள் வள்ளி.

அந்த ஒட்டு மொத்த நிகழ்ச்சியில் கார்த்திகேயன் பேசியது எதுவுமே வரவில்லை. வள்ளி பேசிய இந்தக் காட்சி மட்டும் இடம் பெற்றிருந்தது. நிகழ்ச்சி நெடுகிலும் அவ்வப்போது இருவரும் கண்களின் வழியாய் பேசிக் கொள்வது காண்பிக்கப் பட்டது.

வள்ளி பேசிய இக்காட்சியையே நிகழ்ச்சியின் முன்னோட்டத்திலும் போட்டிருந்தனர்.

கார்த்திகேயன் வள்ளிக்கென ஒரு ரசிகர் கூட்டமே இணையத்தில் சேர்ந்திருந்தனர். கார்த்திகேயனின் இன்ஸ்டா பக்கத்திற்கும் வள்ளியின் கவிதைப் பக்கத்திற்கும் ஃபாலோவர்ஸ் வந்து குவிந்தனர்.

கார்த்திகேயனும் வள்ளியும் நெஞ்சம் நிறைந்த மகிழ்வில் இருந்த போது, அவளுக்கு அழைத்த அவளின் அன்னை, "உன்னைப் பெத்து வளர்த்ததுக்கு எங்களுக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுத்திருக்க" என்று வறுத்து எடுத்து விட்டார்.

ஆனால் அவளின் தந்தையோ அதற்கு நேரெதிராக, "நீ இவ்வளோ மனசு விட்டு பேசுற மாதிரி உன் புருஷன் உன்னைக் கவனிச்சிக்கிறதுல எனக்குச் சந்தோஷம் தான்மா" என்று விட்டார்.

தாயின் பேச்சில் வருத்தமுற்ற வள்ளிக்கு தந்தையின் பேச்சு நெஞ்சில் பாலை வார்த்தது.

"வள்ளி நாம யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாமா? இப்ப ஆரம்பிச்சா உடனே சப்ஸ்க்ரைபர்ஸ் சேர்ந்துடுவாங்க" எனக் கேட்டான் கார்த்திகேயன்.

"என்ன மாதிரி சேனல் ஆரம்பிக்கலாம்னு சொல்றீங்க?" எனக் கேட்டாள் வள்ளி.

"நீ தான் விலாக்(vlog)லாம் வேண்டாம்னு சொல்லிட்டியே" என்று குறையாய் அவன் கூற,

"பின்ன, நம்ம வீட்டுல என்ன நடக்குதுனு ஊருக்குலாம் போட்டுக் காமிக்கிறது நல்லாவா இருக்கும். பிரைவசினு ஒன்னு இல்லாமலே போய்டும்ப்பா. யூ டியூப் ஆரம்பிக்கலாம். ஆனா வேற என்ன கண்டென்ட் போடலாம்னு யோசிங்க" என்று விட்டாள் வள்ளி.

ஒரு நாள் முழுக்க மண்டையைப் போட்டு குடைந்தவன், "உன்னோட எழுத்துக்காக ஒரு சேனல் ஆரம்பிக்கலாம் வள்ளி. தினம் ஒரு கவிதை ஷார்ட்ஸ் மாதிரி போடலாம். வாரத்துல ஒரு நாள் ஏதாவது ஒரு டாபிக் நீயும் நானும் சேர்ந்து பேசுற மாதிரி ஒரு வீடியோ போடலாம்" என்றான்.

"ஏங்க நம்ம முகத்தைக் காண்பிக்காம எதுவும் போட முடியாதா?" முகத்தைச் சுருக்கியவாறு கேட்டாள் வள்ளி.

"நம்மளை ஜோடியா பார்க்கத் தான் மக்கள் சப்ஸ்க்ரைப் செய்வாங்க வள்ளி. அதனால கண்டிப்பா ஒரு வீடியோ நாம சேர்ந்து பேசுற மாதிரி போடனும். போகப் போக நாம எங்கேயாவது டிராவல் பண்றதுலாம் டிராவல் விலாக் மாதிரி போடலாம். வாரத்துல ஒரு நாள் நம்மளோட எக்ஸ்பீரியன்ஸ் நாலெட்ஜ் எல்லாம் மக்களுக்குப் பயன்படுற மாதிரி ஏதாவது டாபிக் செலக்ட் செஞ்சி பேசுவோம். உன்னோட பயத்தை எப்படி நீ ஓவர்கம் செஞ்சனுலாம் சொல்லலாம். ஆரம்பிச்சா போகப் போக டாபிக் ஐடியா கிடைக்கும்" என்று விட்டான்.

அடுத்து வந்த வாரத்தில் யூடியூப் சேனல் துவங்கியவன், அன்றாடம் அவளை நச்சரித்து ஒரு கவிதையை வாங்கிப் பதிவிட்டு விடுவான்.

வாரம் முழுவதும் இன்ஸ்டாவிலும் யூ டியூப்பிலும் பின்னூட்டத்தில் வரும் கேள்விகளைக் குறித்து வைத்துக் கொண்டு இருவருமாய்ச் சேர்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் பதில் உரைப்பது போல் சனிக்கிழமை காணொளி தயாரித்து ஞாயிற்றுக்கிழமை பதிவிடுவர்.

இவ்வாறு வாராவாரம் பேசுவது வள்ளிக்கு அவளது பயப் பிரச்சினையைக் குறைத்திருந்தது. அலுவலகத்திலும் மீட்டிங்கை தைரியத்துடன் கையாளத் துவங்கியிருந்தாள்.
 
Joined
May 20, 2025
Messages
54
அலுவலக வேலையிலும் யூ டியூப் சேனல் வேலையிலும் பிசியாக இருந்ததால் குழந்தைப்பேறுக்கான மருத்துவச் சிகிச்சைப் பற்றி அவன் சிந்திக்காமல் இருக்க, வள்ளியோ இதை நினைத்துக் கவலையில் இருந்த பொழுது ஒரு நாள் சந்தேகம் கொண்டு அவளே பரிசோதனை மேற்கொண்டாள்.

சனிக்கிழமை அன்று காலை கழிவறைச் சென்று விட்டு வந்தவள் உறங்கிக் கொண்டிருந்தவனை அணைத்து அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொள்ள, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் அவளின் உடல் அழுத்தத்திலும் ஸ்பரிசத்திலும் உறக்கம் கலைந்தவனாய் கண்களைத் திறவாமலேயே அவளை அணைத்து, "என்னடா நான் வேணுமா?" எனக் கேட்டவாறு அவளை இரு கைகளாலும் வளைத்து தன்னோடு அணைத்திருந்தான்.

அவளின் கண்ணீர் அவனது கழுத்தை நனைப்பதை உணர்ந்து திடுக்கிட்டவனாய் கண் விழித்து, அவளின் முகத்தை நிமிர்த்தி, "என்னடா என்னாச்சு?" எனக் கேட்டான்.

தனது கைகளுக்குள் பொத்தி வைத்திருந்த அந்தக் கருவியை அவனிடம் காண்பித்தாள்.

அதைப் பார்த்தவனுக்கு அது பிரக்னென்சி கிட் என்று தெரிந்தாலும் அதிலிருந்த கோடுகள் பாசிட்டிவ்வா நெகிட்டிவ்வா என்று தெரியவில்லை. நெஞ்சம் படபடத்துப் போனது அவனுக்கு.

எதற்காக இவள் அழுகிறாள் என்று புரியாது எழுந்து அமர்ந்து அவளை மடி மீது அமர்த்திக் கொண்டு அவளின் முகத்தைக் கைகளில் தாங்கிக் கண்களைத் துடைத்தவன், "இப்ப சொல்லுடா! பாசிட்டிவ்வா நெகிட்டிவ்வா?" எனக் கேட்டான்.

கண்களில் பெருகி வழிந்த கண்ணீருடன், "நீங்க அப்பாவாகப் போறீங்கப்பா" என்றவளாய் அவனது இதழில் புதைய, இவன் மகிழ்வின் உயர்நிலையில் இறகில்லாமல் பறந்திருந்தான்.

அவளின் இதழ் முத்தத்தைத் தனதாக்கி இளைப்பாறியவன் நெற்றியில் முத்தமிட்டு, "வீ ஆர் பிரக்னெனட்" என்று மகிழ்வுடன் சத்தமாய்க் கத்தினான்.

அதன் பிறகு தாய் தந்தையரிடம் உரைத்து விட்டு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கேயும் அவளின் கர்ப்பம் உறுதி செய்யப்பட, ஆட்டம் போடும் மனநிலைக்குச் சென்றான் கார்த்திகேயன்.

மகிழுந்தை வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தவன்,

"இப்ப மனசு எப்படி இருக்குத் தெரியுமா? லாட்டரி டிக்கெட் விழுந்ததும் கவுண்டமணி, டேய் அந்தக் கடை என்ன விலை, அந்த வீடு என்ன விலைனு கேட்டு, அய்யோ இப்ப நான் ஏதாவது வாங்கியாகனுமேனு புலம்புவாரே! அந்த மாதிரி இப்ப ஏதாவது நான் உனக்குச் செஞ்சே ஆகனும்ன்ற அளவுக்கு மனசு சந்தோஷமா இருக்கு. உனக்கு என்ன வேணும்னாலும் கேளு" கண்கள் மின்ன இதழ் விரிந்த புன்னகையும் பூரிப்புமாய்க் கேட்டிருந்தான்.

கார்த்திகேயனின் மகிழ்வான முகத்தை ரசித்துப் பார்த்தவளாய் அவனுடன் பயணித்திருந்த வள்ளி, "என் கார்த்தி மாதிரியே ஒரு குட்டிக் கார்த்தி வேணும்" அவனின் மீசையைப் பிடித்திழுத்து உரைத்தாள்.

ஆஆஆஆ என்று லேசாய் கத்தியவனாய் சிரித்தவன், "இல்ல இல்ல இந்த விஷயத்துல நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன். குட்டி வள்ளி தான் வருவா" என்றவனாய்,

வள்ளி வரப்போறா
துள்ளி வரப்போறா ஹே!
வள்ளி வரப்போறா
வெள்ளிமணி தேரா

என்று வள்ளி படப்பாடலைப் பாடினான்.

தாமோதரனும் பார்வதியும் பெரும் மகிழ்வு கொண்டனர்.

மூன்று மாதங்களான பிறகு வள்ளியின் பெற்றோரிடம் உரைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.

அடுத்து வந்த நாள்கள் எல்லாம் வள்ளியை கண்களுள் பொத்திப் பாதுகாத்தான் கார்த்திகேயன்.

ஐந்து வாரங்களான போது ஒரு நாள் காலை வள்ளி கழிவறைச் சென்று விட்டு வந்து அவனை அணைத்துக் கழுத்தினில் முகம் புதைத்திட, லேசாய் உறக்கம் கலைந்தவன், அவளை அணைத்தவாறு உறங்க முற்பட, கழுத்தினில் உணரப்பட்ட அவளின் கண்ணீரில் சட்டெனக் கண் திறந்து, "என்னடா வள்ளி? என்னாச்சு? உடம்பு எதுவும் முடியலையா?" அவளின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தவாறு கேட்டான்.

"வயிறு ரொம்ப வலிக்குதுப்பா! தாங்க முடியலை" அழுகையுடன் உரைத்தவளை படுக்க வைத்தவன், பதட்டமடைந்தவனாய் தாயை அழைத்தான்.

அவளுக்கு எங்கே வலிக்கிறது எவ்வாறு வலிக்கிறது என்று கேட்டுக் கொண்ட பார்வதி, உடனே மருத்துவமனைக்குச் சென்று விடலாம் என்றார்.

வள்ளி உடை மாற்ற உதவியவனின் முகத்தில் இருந்த பதட்டத்தையும் வருத்தத்தையும் பார்த்தவளுக்கு மனம் வலித்தது.

எப்பொழுதும் எச்சூழலிலும் சிரித்த முகமாக மட்டுமே பார்த்திருந்த கணவனின் இந்தக் கலக்கமான முகத்தைக் காண முடியாதவளாய், "கார்த்தி" என்று அழைத்துக் கைகளை விரித்தாள்.

அவளின் அணைப்பு அந்நேரம் அவனுக்குத் தேவையாக இருக்க, அவளின் கைகளுக்குள் அடைக்கலமாகி அணைத்து நின்ற சமயம், "எனக்கும் நம்ம பாப்பாக்கும் ஒன்னும் ஆகாதுப்பா. கவலைப்படாதீங்க" தனது வலியை தனக்குள் புதைத்து விட்டு அவனுக்கு ஆறுதல் உரைத்தாள் வள்ளி.

அப்பொழுதும் தெளியாதவனாய் ஏதும் பதிலிறுக்காது, அவளை அணைத்து நின்றவன் ஆழ்ந்த பெருமூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளின் கன்னத்தில் முத்தமிட்டு விலகியவன், "வா கிளம்பலாம்" என்று முன்னே சென்றான்.

நால்வரும் மகிழுந்தில் மருத்துவமனை நோக்கிச் சென்றனர்.

கார்த்திகேயனின் உள்ளம் படபடவெனத் துடித்திருந்தது. மனமோ ஏதோ சரியில்லை என்றே உணர்த்திக் கொண்டிருந்தது.

மகனின் முகத்திலிருந்த கலக்கத்தைப் பார்த்த தாமோதரன், "பிரெக்னென்சினு வந்தா இப்படித் திடீர் திடீர்னு செக்கப் போறதுலாம் சகஜம் தான்டா மவனே" என்று தேற்றினார்.

மருத்துவமனையில் வள்ளியைப் பரிசோதித்த மருத்துவர் அவளை உடனே அட்மிட் செய்யக் கூறிவிட்டு, கார்த்திகேயனை தனியாக அழைத்துப் பேசினார்.

பார்வதி வள்ளியோடு அறையில் இருக்க, கார்த்திகேயனும் தாமோதரனும் மருத்துவரைப் பதட்டத்துடன் தனியே சென்று பார்த்திருந்தனர்.

"சாரி டூ சே திஸ் கார்த்தி. உங்க வைஃப்க்கு மிஸ் கேரியேஜ் (கருச்சிதைவு) ஆகியிருக்கு" என்றவர் கூறியதை தலையில் இடி விழுந்த உணர்வுடன் கேட்டிருந்தான் கார்த்திகேயன்.

எதிர்பார்ப்பின் ஏமாற்றம் பலமாய் அவனைத் தாக்கியிருந்தது. கார்த்திகேயனின் கண்கள் அவனையும் மீறி கண்ணீரால் நிறைந்து போனது.

ஒரு நொடி அதிர்ந்த தாமோதரன், பின் சுதாரித்தவராய், "வள்ளிக்கு எதுவும் பிரச்சினை இல்லயே" எனக் கேட்டார்.

அவரின் கேள்வியில் தன்னிலைக்கு வந்தவனாய், "ஆமா வள்ளி.. என் பொண்டாட்டி" என்று அவன் தடுமாற,

"ஏன் இப்படி நடந்துச்சுனு சில டெஸ்ட் எடுத்துப் பார்க்கனும். நான் அதெல்லாம் எழுதி தரேன். எடுத்துட்டு வாங்க. எப்படியும் அவங்க ஒன்‌ டே இங்கே இருக்கிற மாதிரி இருக்கும்" என்று டெஸ்ட் எடுக்க வேண்டியவற்றைக் குறிப்பிட்டு ஒரு காகிதத்தைக் கார்த்திகேயனிடம் அளித்தார் மருத்துவர்.

தாமோதரனும் கார்த்திகேயனும் ஒன்றாக வள்ளி அனுமதிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தனர்.

இது வரை என்றுமே தனது கணவனின் அழுது சிவந்த விழிகளைக் கண்டிராத வள்ளிக்கு, அதுவே ஏதோ பெரியதாக வரப் போகிறது என்று தெரிவிக்க, "என்னங்க டாக்டர் என்ன சொன்னாங்க?" பார்வதி கேட்டதும் இச்செய்தியை பகிர்ந்திருந்தார் தாமோதரன்.

கண்களில் அதிர்வுடன் வள்ளி கார்த்திகேயனைப் பார்க்க, அவனது கண்களைத் தாண்டி வழிந்தது கண்ணீர்.

பார்வதி வாய்விட்டு அழவும், "ம்ப்ச் நீயே அவளை அழ வச்சிடுவ போலயே" என்று அதட்டியவராய் பார்வதியை வெளியே அழைத்துச் சென்றார் தாமோதரன்.

கண்களைத் துடைத்தவனாய் வள்ளியின் அருகே சென்று நின்ற கார்த்திகேயன் அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் பாரமான நெஞ்சத்துடன் அவளைப் பார்க்க, அவனையும் மீறி அவனது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

கார்த்திகேயனின் கையைப் பிடித்து அருகில் அமர வைத்த வள்ளி அவனின் கண்ணீரைத் துடைத்தவளாய், "இப்ப என்னாச்சுனு இப்படி அழுதுட்டு இருக்கீங்க. நமக்குக் கல்யாணமாகி எட்டு மாசம் தானே ஆகுது. கண்டிப்பா உங்களை மாதிரி ஒரு குட்டிக் கார்த்தியையும் என்னை மாதிரி ஒரு குட்டி வள்ளியையும் நாம பெத்துக்கத் தான் போறோம். முருகன் நமக்குக் கொடுக்கத் தான் போறாரு" கண்ணீர் கண்களுடன் அவனை அணைத்து முதுகை வருடியவாறு தேற்றியிருந்தாள்.

வள்ளி அழுவாள் கதறுவாள் என்று எதிர்பார்த்து படபடப்புடன் வந்திருந்தவனுக்கு அவளின் இந்தப் பேச்சு அவனை முற்றாய் நொறுங்கிப் போகச் செய்ய, "நம்ம கரு உருப்பெறாமலே அழிச்சு போய்டுச்சே வள்ளி" என்று அவளின் தோளில் முகம் புதைத்திருந்தவன் குலுங்கி அழுதான்.

அவனின் அழுகையில் இவளின் கண்கள் உடைபெடுக்க மூக்கை உறிஞ்சியவாறு கண்களைத் துடைத்தவள், "எனக்கு அதை விட நீங்க இப்படி அழுறது தான் ரொம்ப வருத்தமா இருக்குப்பா" என்றாள்.

தன்னுடைய அழுகை அவளைப் பாதிக்கிறது என்றதும், "இல்ல நான் அழலை" என்று அவளை விட்டு நகர்ந்து கண்களைத் துடைத்து மூச்சை இழுத்து விட்டுத் தன்னை நிலைப்படுத்தியவன் கண்ணீருடன் தன்னைப் பார்த்திருந்த மனைவியிடம் சென்று அவளின் கண்களைத் துடைத்தவனாய், "இந்தத் தடவை நம்ம குழந்தைக்காக வரம் வேண்டி பழனி பாதயாத்திரை போகப் போறேன் வள்ளி. நம்ம அப்பன் முருகன் நமக்குப் பிள்ளை வரம் கொடுப்பான்" என்று அவளுக்கு ஆறுதல் கூறுவது போல் தனக்குமாய் சேர்த்து உரைத்திருந்தான் கார்த்திகேயன்.

-----

அடுத்த அத்தியாயத்துடன் கதை நிறைவுறும்.
 

Latest profile posts

ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top