• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 8

New member
Joined
Dec 1, 2024
Messages
14
சுந்தரி - 8


அந்த பக்கமாக வந்த ஒருத்தர், “என்ன குமாரு சவுரியம் தானா?” எனக் கேட்டார்.

“நல்ல இருக்கேன் ஐயா. நீங்க எப்படி இருக்கிங்க?”

“எனக்கென்ன காடு வா வான்னுது, வீடு போ போன்னது. அந்த ஈசன் கூப்பிட்டா போக வேண்டியது தான்” என்று சென்றார் அவர்.

“என்ன சுகுமார் அவரே வந்து கேட்டுட்டு, இப்ப நெகடிவா இப்படி பேசிட்டு போயிட்டே இருக்கார்?” ஈஸ்வர் அவனிடம் கேட்க,

“கிராமத்து மனுசங்க அப்படி தான் சார். தன் கடமை எல்லாம் முடிச்சதும், இந்த உலகத்தை விட்டு நிம்மதியா போயி சேரனும்னு இப்படி பேசி பேசி மனச பக்குவப்படுத்திப்பாங்க.”

“எல்லாமே வித்தியாசமா இருக்கு. உங்க பாசை. உங்க பழக்க வழக்கங்கள் முதற்கொண்டு. நீங்க கூட என்னிடம் பேசுறப்ப நார்மலா பேசுறீங்க. உங்க ஆளுங்களைப் பார்த்தா பாஷை மாறுது” என்றான் ஈஸ்வர்.

“ஊருக்கு ஊரு எல்லாமே மாறும் சார். ஏன் சென்னைத் தமிழ் இல்ல. நீங்க சிட்டிலயே பொறந்து சிட்டிலயே வளர்ந்தவுக. படிப்பு வேலைன்னு இருந்துட்டீக. நின்னு நிதானமா எதையும் ரசிச்சிருக்க மாட்டிக. அதான் இதெல்லாம் வித்தியாசபடுது.”

“என்னவோ போங்க சுகுமார். இப்ப எங்க போறோம்?”

“சித்ரா அவங்க அப்பாவ கூட்டிட்டு வரேன்னு சொன்னா. அவங்க தாத்தா, அதான் ராஜனோட அப்பா வெளியூர் போயிருக்காராம். இருந்தா அவரை பார்த்திருக்கலாம். அவர் என்னைக்கு வராரோ தெரியலை சொன்னா. அவரை வந்த பின்ன பார்த்துக்கலாம்.”

“ஓ... பரவாயில்ல. மெல்ல பார்த்துக்கலாம்” என்றான் ஈஸ்வர்.

“அண்ணே வந்து ரொம்ப நேரமாச்சா? வழில சின்னப்புள்ள ஆச்சி புடிச்சிக்கிட்டாக. அப்பாவ பேச விட்டுட்டு நான் வந்துட்டேன். மாமா நல்ல இருக்கியளா?” என ஆர்வமாகக் கேட்டாள் சித்ரா.

“நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க?” பதிலுக்கு நலம் விசாரித்தான்.

“எனக்கு என்ன சூப்பரா இருக்கேன். வீட்டுல மாப்பிள்ளை பாக்குறேன்னு அப்பப்ப பஜ்ஜி, பாயசம்னு தூள் பறக்குது. இப்ப நான் கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்னா பாருங்க. இப்படியே அவனுங்க வந்து வந்து போகட்டும். நான் தின்னு தின்னு கொழுத்துப் போறேன்” என்று சிரித்தாள்.

‘ஹ...ஹா’ என சத்தமாக சிரித்தவன் குரல், அவர்களைத் தாண்டி சென்று கொண்டு இருந்தவளுக்கு கேட்க, சில நொடி தடுமாற்றம் அவளிடம்.

அக்குரல் அவளின் அகம் நுழைய, யாரென பார்க்க திரும்பும் வேளையில், “எம்மா செல்வி எப்படி இருக்கா? உன் அம்மைய பாக்க மனசு வரலையா? எதோ கோபத்துல இருக்கன்னு நெனைச்சா, இப்படி பத்து வருசமா எங்களை பாக்காம பேசாம பாடா படுத்துறியே. என் வீட்டு குலதெய்வம் நீ இப்படி இருக்கலாமா. வீட்டுக்கு வா மக்களே. நானும் உன் அம்மம்மாவும் தவிச்சிப்போயி கெடக்கோம். நீ இல்லாத வீடு காரை விழுந்த கூரை மாதிரி இருக்கு மக்களே. எங்க கொலத்துக்கு ஒத்தப் புள்ளயா நீ மட்டும் தான் இருக்கா. வா மக்களே வீட்டுக்குப் போகலாம்” என்று மகளைப் பார்த்த ஆசையில் அழைத்தார்.

அதுவரை காது கேட்காது போல் நின்றிருந்தவள், “ஏன் உங்க கொலத்துக்கு வாரிசா, உங்க புருசனோட அண்ணன் தம்பி புள்ளைக இல்ல. உங்க வழியில் கனகு மாமா. அவங்க பிள்ளைங்க இல்ல. ஏன் சித்ரா, சரவணன் உங்க தங்கச்சி பிள்ளைங்க தான? உங்க புள்ளையா இருந்தாலும் தங்கை புள்ளையா இருந்தாலும் ஒன்னுதேன். போங்க முதல்ல. எனக்கு யாரும் இல்ல. நான் என் மாமனோட மட்டும் இருந்துக்கறேன்” என்றாள் அவள்.

“ஆசை ஆசையா பெத்த ஒத்தப் புள்ளையவும், இப்படி அனாதையா இருக்குறத பாக்குறதுக்கா அந்த மாரித்தாயி என்னைய உயிரோட வச்சிருக்கா. வா மக்களே. நீ என்ன சொல்லுதியோ அதையே கேட்டுக்குறோம்” என்றறு அழைத்தார் கனகா.

“எந்த தைரியத்துல என்னைய கூப்புடுறியம்மா? இது உங்க அப்பாவுக்கும், புருசனுக்கும் தெரியுமா? வாய் வார்த்தையா குலக்கொழுந்து சொல்லக் கூடாது. எனக்கு வேலச் சோலி இருக்கு. நகருங்க” என்று அங்கிருந்து சென்று விட்டாள்.

“எம்மா செல்வி. வீட்டுக்கு வா மக்களே” என்று அழுது கொண்டு இருந்தவரைக் கண்ட சித்ரா அவரிடம் வந்து, “என்ன பெரியம்மா அழுதுட்டு இருக்கிங்க. அக்காவ பாத்தியளா? விடுங்க சீக்கிரம் நம்மளோட வந்திருவா. நீங்க அக்காகிட்ட பேசுறத தாத்தா, பெரியப்பா பாத்தா அவ்வளவுதான். நீங்க வீட்டுக்கு போங்க” என்று பேசி சமாதானம் செய்து அனுப்பினாள்.

“யாரு சித்ரா அது?” எனக் கேட்டான் ஈஸ்வர்.

“எங்க பெரியம்மா மாமா. அக்காவ பார்த்திருக்காங்க. வீட்டுக்கு கூப்பிட்டிருப்பாங்க. அக்கா வரல சொன்னதுக்கு தான் இந்த அழுகை.”

“ஓஹ் உங்க அக்கா டெரர் போல?”

“இல்ல மாமா. அப்படி நடந்துக்க ஏதாவது காரணம் இருக்கும். நான் கேட்டா நீ சின்னப்பொண்ணு இந்த பஞ்சாயத்து உனக்கு வேண்டாம் சொல்லிட்டா. அவள் பாவம் மாமா” என்றாள் சித்ரா.

“ம்ம்ம்... உங்க அப்பா எப்ப வருவார்?”

“இதோ வந்துட்டாங்களே” என்று தன்னை நோக்கி வந்த தகப்பனை காண்பித்தாள்.

“என்ன குமாரு, உன் நண்பன் என்னைப் பாக்கனும்னு பிரியப்படுறதா என் பொண்ணு சொன்னா. அப்படி யாரை பாக்கணும்? எனக்கு உன் நண்பர்களை தெரியாதே” என்றார் அவர் பால்ராஜ்.

“இவர் தான் அது. பெயர் ஈஸ்வர். ரஞ்சியோட அண்ணன். உங்களைப் பார்க்கணும் சொன்னார்” என்று ஈஸ்வரை அறிமுகப்படுத்தினான் சுகுமார்.

“அதான் கொரானா போயிருச்சே. இன்னும் என்னப்பா மாஸ்க் போட்டுட்டு சுத்துற. எதுக்கு என்னைப் பாக்கணும் சொன்ன?” எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார்.

“உங்க மாமனாரை மீட் பண்ணனும் சார். அதுக்கு நீங்க ஹெல்ப் பண்ணனும்” என்றான் அவன்.

“எதுக்கு? அவர் வர நாளாகும். போன் செய்தா நீங்க பாக்கணும் சொன்னதா சொல்லி வைக்கிறேன். வந்ததும் சொல்லுறேன் அப்ப பார்த்துக்கோங்க. என்ன விசயமா சந்திக்கணும்?”

“அவர் பார்க்க என்னை போல இருப்பார் சொன்னாங்க. அதான் ஒரு ஆர்வத்துல வந்தேன்” என்று சொன்னான் ஈஸ்வர்.

“என்ன தம்பி விளையாடுதியளா? முதல்ல முகத்துல உள்ளத கழட்டுங்க. நான் பார்த்துட்டு அப்புறம் சொல்லுறேன்” என்றார் பால்ராஜ்.

முகத்தை மறைத்திருந்த கவசத்தை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்து நிமிர்ந்தவனைப் பார்த்த பால்ராஜ் அதிர்ந்து நின்று விட்டார்.

சில நிமிட இடைவெளி எடுத்து, “நீ... நீ... நீ எப்படி இங்க?” என தடுமாறியவர் பின், “குமார் யார் இது?” எனக் கேட்டார் வேகமாக.

“ரஞ்சியோட அண்ணன்னு சொன்னேனே சித்தப்பா. இங்க வந்து ரெண்டு நாளாகுது. நானே முதல் முறை பார்த்து ராஜன்னு நினைச்சி கட்டிப்பிடிச்சிட்டேன். அப்புறம் ரஞ்சி சொல்லித்தான் தெரியும். இவர் அவளோட அண்ணன்னு.”

“இல்ல நீ பொய் சொல்லுற?” என்றார் வேகமாக. அவர் குரலில் ஒருவித தடுமாற்றம் வந்திருந்தது.

“நிஜமா தான் சித்தப்பா. ரஞ்சி தம்பி நம்ம ஊருக்கு வந்தப்ப ராஜன் போட்டோ பார்த்துட்டு, இவரை மாதிரி இருக்கவும், அவன் அண்ணனிடம் சொல்லி இருக்கான். இவருக்கு தன்னைப் போல ஒருத்தர் இருக்கார்னு தெரிஞ்சதும், பார்க்கிற ஆசையில் வந்திருக்கார்.” என்றான் விளக்கமாக.

“இல்ல தம்பி. நீ முதல்ல இங்கன இருந்து கெளம்பு. இதெல்லாம் சரி வராது. யாராவது பார்த்தா சிக்கல்” என்றவர் குரலில் பயம் இருந்தது.

“என்ன சிக்கல் அங்கிள்? எந்த சிக்கலும் வராம நான் பார்த்துக்குறேன். எனக்கு அவரைப் பாக்கணும். அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க” என்றான் ஈஸ்வர்.

“இல்ல இல்ல நீ போ. நீ இங்கன இருக்குறது சரியா வராது. நீ போயிரு தம்பி” என்றார் சத்தமாக.

“அப்பா, மாமா ஏன் போகனும்? அவர் சும்மா தாத்தாவ பாத்துட்டு போயிடுவார். நம்மளை போல ஒருத்தரை பாத்தா வர ஆசையில் வந்திருக்கார். அதுக்கு ஏன் தடை சொல்லுறீங்க?” எனக் கேட்டாள் சித்ரா.

“உனக்கு சொன்னா புரியாது பாப்பா. நீ இங்கன இருந்து போப்பா. குமார் நீ சொல்லுறது பொய் என்று தெரியுது. இருந்தாலும் இவனை அனுப்பிரு. இல்லன்னா...” என்று பதற்றத்தில் கை அவர் அறியாது நடுங்க ஆரம்பித்தது.

“என்ன சார் இல்லன்னானு பயமுறுத்துறீங்க? சுகுமார் ஒன்னும் பொய் சொல்லல. ரஞ்சி என்னோட தங்கை தான்” என்றான் ஈஸ்வரும் விடாது.

“சொன்னா கேளுப்பா. இங்கன நீ இருக்க வேண்டாம். இருக்க இருக்க வேண்டாத பிரச்சனைகள் தான் வரும். இதுதான் என்னால சொல்ல முடியும். நீ வா பாப்பா” என்று மகளின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றுவிட்டார்.

“என்ன சார் இப்படிப் பேசிட்டுப் போறார்? சித்தப்பா இப்படி பேசக்கூடிய ஆள் இல்லையே?” என்றான் குழப்பமாக.

“என்னவோ இருக்கு சுகுமார். உங்க நண்பன் என் கனவுல வந்து என்னை இங்க வரச்சொல்லி போர்ஸ் பண்றான். இவர் இங்க இருந்து போகச் சொல்லி போர்ஸ் பண்ணுறார். இதுல இருந்து என்ன தெரியுது?” என்று கேள்வியாக நிறுத்தினான்.

“ஒன்னும் தெரியல சார். ரொம்ப குழப்பமா இருக்கு. இவர் எதுக்கு உங்களைப் போகச் சொல்லனும்? அதுக்கு என்ன அவசியம் வந்தது?”

“குழப்பமே வேண்டாம். நான் கண்டிப்பா இங்க தான் இருப்பேன். அவர் பயப்படுற அந்த பிரச்சனை என்னன்னு நான் பார்க்கிறேன். ஆனாலும், எதோ இடிக்குதே.” காவல்காரனின் மூளை வேறு சில கணக்குகள் போட ஆரம்பித்தது.

“என்ன மாமா, வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சட்டமா என்ன. உள்ள வாங்க மாமா” என்று வீட்டினுள் சென்று மின்விளக்கை போட்டு வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்து, மாமனிடம் திரும்பி, “உடம்பு தொடைச்சிட்டு வந்து சமைக்கிறேன். நீங்க அந்த நாற்காலியில் உட்காருங்க” என்று உள்ளே சென்று வேறு ஆடையில் வந்தவள், அடுப்படி சென்று சமைக்க ஆரம்பித்தாள்.

இருவருக்கும் தட்டு வைத்து உண்டு முடித்ததும், “உங்களுக்கு வச்ச சாப்பாடு அப்படியே இருக்கு. என்ன சாப்பிடுறீங்க நீங்க? தினமும் உங்களுக்கு வைக்கிறத நாய் தான் சாப்பிடுது” என்று அவனுக்கு வைத்த உணவை நாய்க்கு வைத்து வந்தவள், நாற்காலியில் அமர்ந்திருந்தவனை முறைத்து சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து, காலையில் துவைத்துப் போட்ட துணிகளை மடிக்க ஆரம்பித்தாள்.

“உங்க துணி எங்க மாமா? நீங்களே தொவைச்சிட்டா நான் எதுக்கு இருக்கேன். கோபப்பட்டா உடனே கோவிச்சிட்டு தோட்டத்துக்கு போயிடுறீங்க. என்ன சத்தத்தை காணோம்?” என்று திட்டினாள்.

“இப்பலாம் நீ ரொம்ப கோபப்படுற.” என்றான் அவன்.

“ரொம்பவா. சாரி மாமா. இனி குறைச்சிக்கறேன். தூங்கலாம் மாமா.”

“எப்படியும் என்னை வீட்டு உள்ள விடப்போறது இல்ல. அப்புறம் என்ன? நான் இங்க வாசல்லயே நிற்கிறேன்” என்றான் சடைப்பாக.

“நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல மாமா. வயசுப் பொண்ணு அறையில் நீங்களும் இருந்தா ஊர் என்ன பேசும்? நமக்கு அது அசிங்கம் இல்லையா?” எனக் கேட்டாள்.

சின்ன புன்னகையுடன், “சும்மா சொன்னேன். என்னோட இடம் இந்த வாசல் தான். நீ நிம்மதியா தூங்கு. உனக்கு துணையா எப்பவும் நான் இருப்பேன். காவல் தேவனா” என்று வெளியே சென்றான்.

அதே நேரம் ஈஸ்வர் ஹரிஹரன் காண்பித்த டாக்குமெண்டரியை தடவிக் கொடுத்தான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top