• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 14

New member
Joined
Dec 1, 2024
Messages
18
சுந்தரி - 14

வீட்டினுள் நடந்து கொண்டிருந்தவள் அப்படியே நின்று திரும்பி, “நீங்க உடன் இருக்கிறப்ப எனக்கு என்ன பயம் மாமா. இதோ சரியான சமயம் பாத்து வந்தீங்க தான? எப்பவும் எனக்குக் கவசம் நீங்க தான் மாமா” என்றவள் எதோ யோசனை வந்து, “மாமா எப்பவும் வாசல்ல தான் படுப்பீங்க. இப்ப பாம்பு கடிச்சிருக்கே. நாம என்ன செய்யுறது? நீங்க தூங்கவும் கூடாதே” என்று கையைப் பிசைந்தாள்.

“என்னது... வாசல்ல படுப்பேனா?” என சத்தமாகச் சொன்னவன், ‘பரவாயில்லையே மிஸ்டர் ராஜன். உங்களுக்கு அவள் அறைக்குள் அனுமதி இல்லையா? இது நல்லா இருக்கே. அப்ப என் சுந்தரி கூட இருக்கப் போற முதல் ஆண் நான் தானா? அட சூப்பர்ல’ என்றான் ஆத்மாவான சுந்தர்ராஜனிடம்.

‘ம்ம்ம்... உனக்காக ஒன்னும் அவளை விட்டு இருக்கலை. முதல்ல அவள் என்னோட அக்கா பொண்ணு. என்னோடது டீசென்ட் லவ். சோ. லவ்வுக்கு ரெஸ்பெக்ட் குடுத்து வெளிய காவலுக்கு இருந்தேன்’ என்றான் ஈஸ்வரிடம்.

‘ஆனா, நான் நல்லவன் இல்லையே மேன். இதுவரை நல்லவனா தான் இருந்தேன். இப்ப கொஞ்சம் கெட்டவனா இருக்கலாம்னு தோனுது. உன்னோடது சைவக் காதல். அதான் அவள் உள்ளேயும் நீ திண்ணையிலும் இருந்த. நான் அசைவப் பிரியன் ராஜன் சார். கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பேன். எப்படி வசதி?’ என புருவம் உயர்த்திக் கேட்டான்.

‘உன்னை இங்க வரவழைத்ததுக்கு இவள் மட்டும் காரணம் இல்ல. முக்கிய காரணம் என்னன்னு சீக்கிரம் புரிஞ்சிப்ப. அதான் வந்த வேலை முடிஞ்சதுல்ல. இவளை விட்டுட்டு வீட்டைப் பார்த்துப் போ’ என்றான் ராஜன்.

‘எனக்குப் புரியுறது இருக்கட்டும் மிஸ்டர் ராஜன். என்ன நீ கூப்பிட்டு, அதுக்காக நான் வந்தேன்னு நினைச்சியா? ஹா...ஹா... ஹே மேன்... இந்த சுந்தரிப் பொண்ணு என் கனவுல வந்து, வயசாகிட்டே போகுது மாமா. வா வந்து என்னோட குடும்பம் நடத்து சொன்னா. சரி முப்பத்தஞ்சு வருடம் பேச்சுலரா இருந்துட்டோமே. ஹக்கு, கிஸ்ஸுனு எதுவுமே இல்லாம வாழ்க்கை போரடிச்சிடுச்சி. இப்ப அதில் இருந்து கொஞ்சம் முன்னேறலாம் பார்த்தா, தடையா நீ நிக்கிற. தள்ளு மேன்’ என்று அவனை விலக்கி, செல்வ சுந்தரியை நோக்கி, “இல்லமா. நான் எப்பவும் போல வாசல்லயே படுத்துக்குறேன்” என்று நல்லவனாக வாசல் கதவு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“மாமா வேண்டாம். அ...அது சரிவராது. அங்க போனா தூங்கிடுவீங்க. இங்க உக்காருங்க டிவி பாத்து நேரத்தை கடத்தலாம். விடிஞ்சிட்டா தூக்கம் தெளிஞ்சிடும். விஷமும் மொத்தமா செயல் இழந்திடும்” என்று அங்கிருந்த சோபாவில் இருவரும் அமர, “பழைய படம் பார்க்குறீங்களா மாமா?” எனக் கேட்டாள் அவள்.

“நீ கூட இருந்தா போதும். எதுவா இருந்தாலும் சரி” என்றான் தான் ஜொள்ளு விடுவதை மறைத்து.

“நாள் முழுக்க உங்களோட தான் இருக்கேன்” என்று டிவியில் சேனல் மாற்ற காதல் மன்னன் படம் ஓட, இருவரும் அதையே பார்க்க ஆரம்பித்தார்கள்.

“ரொம்ப வருஷம் ஆகிருச்சி மாமா டிவி பார்த்தே. இப்ப தான் பாக்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. இந்த படம் இருக்கட்டுமா? இல்ல மாத்திடவா?” என்றாள் அவள்.

“இதுவே இருக்கட்டும். இதுல மானு செம அழகா இருப்பாங்க. ரெண்டு பேர் ஜோடியும் பார்க்கப் பார்க்க ஆசையா இருக்கும். எம்புட்டு அழகு அவங்க. அவங்களுக்காகவே அந்தப் படத்தை பலமுறை பார்த்திருக்கேன்” என்றான் கண்கள் மின்ன.

“ரொம்ப பிடிக்குதா? பத்து வருசத்துக்கு முன்ன என்னிடம் அஜித், நயன்தாரா ஜோடி செமையா இருக்கும் சொன்னீங்க. இப்ப என்ன அதுக்கும் சில வருடம் முன்ன உள்ள அஜித், மானுட்ட போயிட்டீங்க?” என்றாள் ஆராய்ந்தபடி.

“நயன்தாராக்கு லட்சம் ரசிகர் இருப்பாங்க. மானுக்கு நான் மட்டும் தான் இருக்கேன்.”

“நீங்க பார்த்தீங்க. எய்டீஸ் கிட் கிட்ட போயி கேட்டு பாருங்க. மானுக்கு உள்ள விசிறிகள் வட்டம் தெரியும். சும்மா பேசணும்னு பேசக்கூடாது மாமா. உங்களால பாதி படம் ஓடிருச்சு” என்று படத்தில் கவனத்தைப் பதித்தாள்.

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன்
என்ன துணிச்சலடி.
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறை எடுக்க மனம் துடிக்குதடி.
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை.
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை.
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ??
யே யே யே யே யே
தன்னைத் தருவாயோ
இல்லை கரைவாயோ

உடன் சேர்ந்து அவளை நோக்கி அவனும் பாடினான்.

சில நொடிகள் அவனை இமைக்காமல் பார்த்தவள், “நல்லா பாடுறீங்க மாமா. எங்க கத்துக்கிட்டீங்க? உங்க குரல் நல்லா இருக்கு.” என்றாள் பார்வையை மாற்றாது.

பெண் அவளுக்கு இன்னும் நிஜத்திற்கும், நிழலிற்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை.

‘நான் அவன் இல்லை’ என்று இவனும் சொல்லப் போவதில்லை.

சந்தர்ப்பம் கிடைக்கும் வரை தானே பிரம்மச்சரியம் எல்லாம். கிடைத்தால்?

“இங்க பாரு சுந்தரி. இப்படி பார்த்தா அப்புறம் நீ சொன்ன தப்பு நடந்திடும்” என்றான் ஈஸ்வர்.

“என்ன தப்பு? நான் என்ன சொன்னேன்?”

“என் கனவுல வந்து, வா மாமா காலம் போகுது வந்து குடும்பம் நடத்துன்னு சொன்ன. அது மட்டுமா செய்த என் மேல படுத்து என் பிரம்மச்சரியத்தை காலி பண்ணப் பார்த்த நீ? உன்னிடம் இருந்து என்னைப் பாதுகாக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்று அவளைக் குற்றம் சாட்டினான்.

அவனை முறைப்பிலேயே எரித்து, “நான் உங்க கனவுல வந்து இப்படி செய்தேன். கொஞ்சமாவது லாஜிக் இருக்கா மாமா. நீங்க தான் கொஞ்ச நாளா என்னிடம் வரம்பு மீற பாக்குறீங்க.” என்றதும் பதறி கோபத்தில் சுந்தர்ராஜனை ஈஸ்வர் பார்த்தான்.

“ஐயோ நான் இல்லடா. பிலீவ் மீ. நான் ஒன்லி பாதுகாப்பு மட்டும் தான். எனக்கு தெரிந்து நீயா தான் இருப்ப. முப்பத்தஞ்சு வருசமா காஞ்சி போயி இருக்க. அதான் கனவுல இவளை வந்து டிஸ்டர்ப் பண்ணிருப்ப” என்றான் அவன் பதற்றம் தெளியாது.

“அதென்ன சமீபமா சுந்தரி சுந்தரின்னு சொல்லி கண்ட கண்ட இடத்தில் தொட வறீங்க? விட்டா குடும்பம் நடத்திடுவீங்க போல. நல்ல வேளை நான் உஷாரா இருக்கேன். இல்ல...” என்று தலையை உலுக்கி, “ஆமா. உங்க செல்வி எங்க போச்சி மாமா? புதுசா என்ன சுந்தரி?” எனக் கேட்டாள்.

“எங்க தொட வந்தேன்னு சொல்லு?” குறும்பு மிளிர கேட்டான் அவன்.

“ரொம்ப முக்கியம். தொட வந்த உங்களுக்குத் தெரியாதா?” என்று உதட்டை சுழிக்க,

அந்த உதட்டை இழுத்துப் பிடித்து, “முக்கியம் தானடி என் சுண்டெலி. இங்க கொடுத்துருக்கேனா?” என்றவன் குரலில் அப்படி ஒரு மென்மை. அதனுடன் மோகமும் தாபமும் போட்டி போட்டது.

எதோ வசியம் செய்யப்பட்டவள் போல், ‘இல்லை’ என்று தலையசைக்க, “அப்ப இதோ வாங்கிக்க” என்று உதடோடு உதடு பதிக்க, உணர்ச்சி நரம்புகள் அனைத்தும் உற்சாகமாய் உடலெங்கும் பரவ, அவளை பயமுறுத்த ஆரம்பித்த விளையாட்டை, தொடர் விளையாட்டு ஆக்கினான்.

என்ன நினைத்தாளோ அவனைத் தள்ளிவிட்டு மூச்சு வாங்கியவாறு, “எ...என்ன பண்ணுறீங்க மாமா? நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அதுவும் இல்லாம நீங்க என் மாமா இல்லை” என்றாள் பட்டென்று.

‘கடவுளே! எப்படித் தெரிந்தது?’ என்பதாய் அரண்டவன், “என்ன சொல்லுற சுந்தரி? நான் உன்...” என்று திணறினான்.

“என் பழைய மாமா இல்லை நீங்க. இப்படி எல்லை மீறலாமா? உங்களை நம்பி தான எல்லாரையும் பகைச்சிட்டு தனியா இருக்கேன். மதியம் குழந்தை கேட்டா, நைட் குடுத்துடுவீங்க போல மாமா. எப்பவும் நிம்மதியா தூங்கு செல்வி. உனக்கு துணையா எப்பவும் நான் இருப்பேன். காவல் தேவனானு சொன்னீங்க? இதான் காவல் தேவனா?” என்று நீட்டி முழங்கினாள்.

“இது காதல் தேவன் சுந்தரி. காவல் தேவன் வாசலோட நிற்பான். காதல் தேவன் அப்படி இருந்தா சரிவராதே. காதலை அள்ளி அள்ளிக் குடுக்க வேண்டாமா. சரி எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லு. முடிச்சிடலாம்” என்றான்.

“ஊரே அசர பண்ணனும் மாமா. ஆனா, சரி வருமா?”

“ஊரே அசரனும் அவ்வளவுதான? அசர என்ன அரண்டே போக வைக்கிறேன். பொறுப்பை என்னிடம் விடு நான் பார்த்துக்கறேன்” என்றான் ஈஸ்வர்.

படம் முடியவும் நேரம் இரண்டை நெருங்க, அவனுக்கோ தூக்கம் கண்ணைக் கட்டியது. ஷோபாவில் தலை வைத்து அப்படியே சாய்ந்தான்.

“மாமா! மாமா தூங்காதீங்க. தூங்கக் கூடாது மாமா” என்று அவன் முகத்தை தட்ட,

“தூக்கம் வருது சுந்தரி. ஏன் டிஸ்டர்ப் பண்ணுற? தூங்க விடு பிளீஸ்” என்று உளற ஆரம்பித்தான்.

“உங்கள பாம்பு கடிச்சிருக்கு. இப்ப தூங்கினா விஷம் தலைக்கு ஏறிடும் மாமா. நான் சொல்லுறதை கேளுங்க” என்றாள் பதறிப்போய்.

‘அட இதை எப்படி மறந்தேன். ச்சே... கொஞ்ச நேர கிளுகிளுப்பு பேச்சில எல்லாம் மறந்திடுச்சி’ என்று எண்ணி, “எனக்கு ரொம்ப தூக்கம் தூக்கமா வருது. என்னை விடு” என்றான் அவன்.

“மாமா எனக்காக ப்ளீஸ் தூக்கத்தை விடுங்க மாமா. நீங்க இல்லைனா நான் இல்ல. எழுந்திடுங்க மாமா. என்னை அழ விடாதீங்க” என்றாள் அழாத குறையாக.

“யேய்... சரி சரி தூங்கல. வர தூக்கத்தை எப்படி தொலைக்குறது? குளிர் வேற அதிகமா இருக்கு.”

“என்னோட ரூம்ல கொஞ்சம் குளிர் கம்மியா இருக்கும் மாமா. நீங்க அங்க போறீங்களா? நான் நேரம் போக ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று சொன்னாள்.

“தனியா இருக்க முடியாது. சீக்கிரம் வா சுந்தரி” என்று விசில் அடித்தபடி அறைக்குள் நுழைய போனவன் திரும்பி ராஜனைப் பார்க்க, அவன் அரூபமோ இவனை முறைத்தது.

“தேங்க்ஸ்டா செராக்ஸ். எனக்கு இப்படி ஒரு முறைப் பொண்ண குடுத்ததுக்கு. செம பீல்” என்று உதட்டைத் தடவினான் ஈஸ்வர்.

“உன்னை நான் கூட்டிட்டு வந்தது இதுக்காக இல்லை. அந்த உண்மை தெரிஞ்சாலும், இதே மாதிரி அவளிடம் இருக்கனும். இங்க அதுதான் முக்கியம். யாருக்காகவும் இவளை விட்டுடாத. அந்த உறுதி மட்டும் எனக்கு குடு போதும்.”

“தரலன்னா?” என்றான் திமிராக.

“செல்விய மறந்திடு. டைம் பாஸ் பண்ண இவள் பொருள் கிடையாது. நீ உறுதியா சொன்னா நான் நிம்மதியா இருப்பேன். மத்தபடி இவள் உனக்கானவள். உங்க பிரைவசில நான் வரமாட்டேன். சேம் டைம், நடக்க வேண்டியது கல்யாணத்துக்கு பிறகு நடக்கணும். அது தான் உங்க ரெண்டு பேருக்கும் மரியாதை. இப்ப இவளை நீ எது செய்தாலும் அது கற்பழிப்புக்குச் சமம். அதை நினைவில் வச்சிக்கோ” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“ப்ச்... தெரியும்டா நல்லவனே.”

“நான் கேட்ட உறுதி” என்று கை நீட்டினான் சுந்தர்ராஜன்.

வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top