• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சுந்தரியின் சுந்தரன் - 10

New member
Joined
Dec 1, 2024
Messages
14
சுந்தரி - 10


வீட்டுக்கு வந்த ஹேமாவதி யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. கணவர் இரத்தினசாமியிடமும் தெரிவிக்கவில்லை. மகளிடம் மட்டும் ‘பேத்தியை எங்கும் அனுப்பக் கூடாது. அவளின் ஜாதகத்தில் பிரச்சனை இருக்கிறது. நான் சொல்லும் வரை அவளுடன் யாராவது இருக்க வேண்டும்” என்று கட்டளை போட்டுவிட, பயந்த கனகாவும் மகளை விட்டு நகரவில்லை.

அதன் பிறகு கல்யாணம் பற்றிய பேச்சை எடுக்கவில்லை. ஏன் என்று கேட்ட மகளிடமும் வாய் திறக்கவில்லை.

வயதும் போவதால் கடைசி மகனின் திருமணத்தை உடனே முடிக்கக் கூறி இரத்தினசாமி சொல்ல, என்ன நினைத்தாரோ ஹேமாவதி மகனுக்கு இரகசியமாக பெண் தேடினார். தூரத்து சொந்தம் ஒன்றைத் தேடிப் பிடித்து பெண் வீட்டார் சம்மதம் வாங்கி, மகனுக்குத் தெரியாமல் உறவினர் வீட்டிற்கு வருவது போல் வந்து மாப்பிள்ளை பார்க்க வைத்து விட்டார்.

சுந்தர்ராஜனை வந்தவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. பெண்ணைப் பார்த்து மகன், பேத்தியின் உறவை சொல்லி தனியாகப் பேசிவிட்டு வந்தார் ஹேமாவதி. பெண்ணும் சம்மதிக்க, திருமண வேலையை துரிதப்படுத்தினார்.

அதே சமயம் துணை ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) வேலைக்கு தேர்வு எழுத கிளம்பினான் சுந்தர்ராஜன். வீட்டில் தகப்பனிடம் பட்டும் படாது சொல்ல, அவரோ மீசையைத் திருகி ‘சென்று வா மகனே’ என்று வாழ்த்தி அனுப்பினார்.

அப்பா மகன் உறவு அவ்வளவு அழுத்தமானதாக இல்லை. அதற்கு காரணமும் உண்டு. தாய், தமக்கையிடம் மட்டுமே அவனின் அன்பு பாசம் அனைத்தும். அக்கா மகள் பிறந்த பின்னர், பெரியவர்களின் வார்த்தையில், தனக்கு மட்டுமே சொந்தமான பொம்மை என்று சிறு வயதில் ஆரம்பித்து, தனக்கு உரிமையானவள் என்ற நிலை அவன் வளர்ந்ததும். அதைக் காதல் என்று வரையறுத்தானா தெரியவில்லை. இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு உயிர்.

தாயிடம் சொல்லுகையில் ஒரேடியாக மறுத்துவிட்டார். இந்த ஊரின் எல்லையைத் தாண்டக்கூடாது. ஏன் தனியாக எங்கிலும் போகக்கூடாது என்றும் சொன்னார். அவனோ தன்னுடைய எதிர்காலம் அது என்று எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அவர்.

கோபத்தில் அக்கா வீடு வந்தவன் அங்கு அவனின் அத்தான் இருப்பதைக் கண்டு முகம் சுளித்து, அவரிடம் பேசாது, அக்காவைத் தேடிச் சென்றான்.

‘இது இருக்கிற இருப்புக்கு என்னை முறைச்சிட்டு போகுது பாரு. எனக்கு மருமகனா வாடா மாப்ளே அப்ப இருக்கு உனக்கு. என் இழுப்புக்கு உன்ன இழுக்கல...’ என மனதிற்குள் திட்டி அவன் போகும் வழியைப் பார்த்திருந்தார்.

தன் அக்காவைத் தேடிச் சென்றவன் அவர் இல்லை என்றதும், பின்னால் தோட்டத்திற்குச் செல்ல அங்கே செல்வ சுந்தரி பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இவ்வளவுக்கும் அவளின் படிப்பு பனிரெண்டு தான். இருந்தாலும் தனக்குத் தெரிந்த வரை அவர்களுக்கு சொல்லிக் குடுக்கிறாள்.

“செல்வி இங்க தான் இருக்கியா? உங்க அம்மைய எங்க?” எனக் கேட்டு அங்கு சற்று தள்ளி இருந்த துவைக்கும் கல்லில் அமர்ந்தான்.

“அடுப்படியில் நிப்பாவளே பாக்கலையா? என்ன மாமா சோர்வா இருக்கிய? ஏதாவது பிரச்சனையா?” என சத்தமாகக் வினவியவள் எழுந்து, “பிள்ளைகளா அக்கா சொல்லி தந்தத சமத்தா படிக்கணும். உங்க எதிர்ல இருந்து உங்களைக் கவனிச்சிட்டு தான் இருப்பேன். யாராவது பராக்க பார்த்தீயளோ பிச்சிடுவேன்” என்று மிரட்டி மாமனின் எதிரில் வந்து நின்றாள்.

“என்ன செல்வி புள்ளைகள இப்படி மிரட்டுறா? பயந்து ஓடிரப் போகுதுக.” என்றான்.

“அப்படில்லாம் போக மாட்டாங்க மாமா. அவங்க அம்மாங்க எல்லாரும் என் புள்ள படிக்கணும் செல்வி. இல்லன்னா முட்டிக்கு கீழ உரிச்சி எடுத்திடுனு சொல்லி தான் அனுப்புனாவ. யாராவது பராக்க பாக்கட்டும்” என்றாள் பிள்ளைகள் காதுபட.

“ஏம்ல? குழந்தைகளைப் போயி மிரட்டுறா. நாளப்பின்ன நமக்கு புள்ளைங்க பிறந்தா அவங்களுக்கும் இதானா?” என்று தங்களின் வருங்காலத்தையும் எண்ணி வினவினான்.

“யாரா இருந்தாலும் படிப்பு விசயத்துல காம்ப்ரமைஸ் பண்ணிக்கக் கூடாது மாமா. படிப்பு ரொம்ப முக்கியம். என் பிள்ளைகளை நல்லா படிக்க வைப்பேன். அது பொண்ணா இருந்தாலும் என்னைய மாதிரி இப்படி பாதியில் விடமாட்டேன். எனக்குக் காலேஜ் போக வாய்ப்பு இல்லாம போயிடுச்சி. போயிருந்தா உங்களுக்கு சீனியர் போஸ்டிங் எதிலாவது போய் அமர்ந்திருப்பேன் மாமா.”

“இப்ப என்ன குறைஞ்சி போச்சி. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி ஏதாவது சிட்டில போஸ்டிங் போட்டா, கல்யாணத்த முடிச்சிட்டு அங்க போயி உன்னை படிக்க வைக்கிறேன். எனக்கு சீனியரா வந்தா எனக்கு பெருமை தான செல்விமா.” என்றவன் வார்த்தைகள் உள்ளத்தில் இருந்து வந்தது.

“இதுதான் என் மாமாவுக்கு அழகு.” என்று அவன் முகத்தை கைகளால் திருஷ்டி சுற்றி தன்னுடைய இருபக்க நெற்றியிலும் நெட்டி முறித்தாள். “மாமா உங்களுக்கு ஏகப்பட்ட திருஷ்டி. அம்மம்மாவ உப்பு, வத்தல் வச்சி சுத்திப்போட சொல்லுங்க. அப்ப தான் என் மாமாவ யாரும் கண்ணு வைக்க மாட்டாவ. தண்ணி பிடிக்க போனப்ப அந்த முனியம்மா வந்து உங்கள மாப்பிள்ளை கேட்க ஆள் அனுப்ப போறேன்னு என்னிடமே சொல்லி மிரட்டுறா மாமா.” என்று கோபத்தில் கொந்தளிக்க,

“அந்தப் புள்ளைய நீ சும்மா விட்டுருக்க மாட்டியே.” என்றான் சிரிப்புடன்.

“சிரிக்காத மாமா. குடத்து தண்ணியோட கிணத்துல ஆத்துரலாம் அளவு கோபம் வந்தது. அதுக்குள்ளே அவ அம்மா வந்துட்டாவ. அப்படியே நல்ல பிள்ளையா வந்துட்டேன்” என்று சொன்னாள்.

“கிறுக்கி. முறை என்பதால உன்னை கேலி பண்ண சொல்லிருப்பா.” என்று திட்டியவன், “நான் எஸ்.ஐ எக்ஸாம் எழுத இன்னைக்கு நைட் மதுரை போகனும். எப்படியும் முடிச்சி வர ரெண்டு நாளாகிரும். எங்க அம்ம வேற போக விடாம தடுக்கா. இத்தனை நாள் படிச்சதுக்கு பலன் இல்லாம பண்ணிருவா போல.” என்று நெற்றியைத் தேய்த்தான்.

“ஆமா மாமா இந்த அம்மம்மா அப்படிதான் பண்ணுறாவ. இங்கயும் எங்க அம்மை வெளிய அனுப்பாம தடுக்காவ. மீறி போகனும் சொன்னா நான் வரேன். இல்லன்னா சித்ராவ கூட்டிட்டு போ சொல்லுறாவ. என்ன செய்யணு தெரியலை மாமா. கிட்டத்தட்ட ஹௌஸ் அரஸ்ட் மாதிரி உள்ளயே அடைஞ்சி கிடக்குறேன்.” என்று சொன்னாள்.

“ஏன்? எதுக்காக இதெல்லாம் பண்ணுறாங்க?” என்றான் யோசனையாய்.

“தெரியல மாமா. ஆச்சி ஜாதகம் பார்த்த இடத்தில் நேரம் சரியில்லன்னு சொல்லிருப்பாவ போல. எங்க அம்மையும் எங்கயும் விடமாட்டேங்கா.” என்று தாயைத் திட்டினாள்.

“சரி எப்படியாவது அவியள கன்வின்ஸ் பண்ணி போறேன். உனக்கு அங்கன என்ன வேனும் சொல்லு. வாங்கிட்டு வாறேன்.” என்று கேட்டான் ராஜன்.

“நீ பத்திரமா போயிட்டு வா மாமா. தேர்வு நல்லா எழுதி நிறைய மார்க்ல பாசாகனும். அடுத்து ட்ரைனிங் போடுறப்ப கன் சூட்லாம் போட்டோ எடுத்து அனுப்பு. என் மாமா போலீஸ் ஆகிட்டாருன்னு சும்மா இல்லாத மீசையை திருகிட்டு சுத்துவேன்” என்றாள் ஆசையாக.

“உன்னை அப்படி செய்ய வைக்கிறது தான் முதல் வேலையே. சரி நேரமாகுது. புள்ளைக வேற வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிருவாங்க. நீ பாடம் எடு. நான் என் அம்மைய காக்கா பிடிச்சிட்டு எப்படியாவது மதுரை போறேன்” என்றான் அவன்.

அவனின் போறேன் என்ற வார்த்தை மனதினுள் நெருடினாலும், “பார்த்து போயிட்டு வா மாமா” என்று அனுப்பினாள்.

பொதுவாக காதலர்களுக்கான அந்த கொஞ்சல், கெஞ்சல், மிஞ்சல் என்று எதுவும் இல்லை அவர்களிடம். ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் உயிராய் இருப்பார்கள். காதலுக்கு மனது போதும், உடல் இரண்டாம் பட்சம் என்று இருக்கும் சத்திய யுகத்தின் காதல் போலும். இருவரும் ஒரு எல்லைக்கோடு போட்டு அதனை விட்டு வெளிவராது இருக்கும் நல்ல காதலர்கள். கை தொட்டு, கட்டி அணைத்து, முத்தமிட்டு, திருமணத்திற்கு முன் எல்லை மீறும் நவநாகரீக காதலர்கள் இல்லை அவர்கள். அதனால் தானோ என்னவோ இன்றும் அந்தக் காதல் பெருமையாகப் பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது.

செல்வ சுந்தரியிடம் பேசிவிட்டு முன் வாசல் வர கனகா வந்துவிட்டார். “தம்பி எப்பலே வந்தா? ஏதாவது சாப்பிட்டியா?” என்று கேட்க,

“இல்லக்கா.” என்ற தம்பியின் பதிலில்,

“செல்வி வீட்டுல தான இருந்தா. எங்க போனா அவ?” என்றார் யோசனையாக.

“உள்ள பிள்ளையளுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கா அக்கா. பார்த்து பேசிட்டு தான் வாறேன்.” என்றான் அவன்.

“பேசிட்டு வாறியா? கழுத வீட்டுக்கு வந்த புள்ளைக்கு பச்சத் தண்ணி கூட குடுக்காம வெளிய அனுப்புவாளா? இருக்கட்டும் அவளை வச்சிக்கிறேன். நீ வா தம்பி. காப்பி போடுறேன் குடிச்சிட்டு கிளம்பு” என்று தம்பியின் பதிலை எதிர்பார்க்காது அடுப்படி சென்றார்.

“அக்கா வீட்டுக்கு தான் போறேன். அங்க போயி குடிச்சிக்குறேன். செல்விய எதுவும் சொல்லாத. நான் தான் பாடம் எடுக்குற புள்ளைய தொல்லை பண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என்று சொல்ல,

“நீ சொன்னாலும் அவ ஏதாவது குடிக்கக் குடுத்திருக்கணும். இப்படி வெறும் வயித்தோடவா அனுப்புவா. இதை எல்லாம் இப்பவே கண்டிச்சி வைக்கணும். கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியே இருந்தா புள்ளைய எப்படி வளர்த்திருக்கா பாரு கனகானு என் தலையை தான் ஊர்ல உருட்டுவாவ.” என்று தம்பியிடம் பேசிக் கொண்டே கடுங்காப்பி போட்டு வந்து கொடுத்து, “அக்கா வீட்டுக்கு வந்து வெறும் வயித்தோடவா போவ. நீ எதுவும் சாப்பிடாம போயிட்டா, எனக்கு ரெண்டு நாளைக்கு தூக்கம் வராதுயா.”

“என்னக்கா நீ. இதுக்கெல்லாம் இப்படி பதறலாமா?” என்றவன் மனதில் அவனின் அத்தான் செய்யும் தகாத வேலைகள் தொண்டைக்குள் குத்திய முள்ளாய் வலித்தது. மறைமுகமாக நண்பர்கள் மூலம் தன் பெயர் வராது எச்சரித்தும் பார்த்து விட்டான். அவர் திருந்துவது போல் தெரியவில்லை. முடிந்த அளவு அக்காவுக்கும் அவள் குடும்பத்துக்கும் தான் மட்டுமே பொறுப்பு என்பதை உணர்ந்து நடந்து கொள்கிறான்.

“நீ நான் வளர்த்த புள்ள. உனக்கு ஒரு குறையும் இருக்கக்கூடாது. ஏதாவது ஒன்னுனா என்னால தாங்கிக்க முடியாது” என்றாள் தொண்டை அடைக்க.

தாயின் அன்புக்கு ஈடான அக்காவின் பாசம் உணர்ந்தவன், “எனக்கு எதுவும் ஆகாது. உன் பொண்ண கல்யாணம் செய்துட்டு கொழந்த குட்டியோட உன்னை சுத்தி வரப்போறேன்” என்றவன் அக்காவிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டான்.

வீட்டில் என்ன சொன்னானோ மறுத்து பிடிவாதம் பிடித்த தாயிடம் கோபம் கொண்டவன், இவர்களிடம் அனுமதி கேட்டுக் கொண்டு இருந்தால் தன் இலட்சியம் காணாமல் போய்விடும் என்பதை உணர்ந்தவன், தன் எதிர்காலத்தைத் தேடி அன்று இரவே மதுரைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான்.

அவன் திரும்பி வரும்பொழுது அவனின் அவள் உயிருடன் இல்லை என்று கேள்விப்பட்டு, அதற்கு அவன் எடுக்கப்போகும் முடிவு...???


வருவார்கள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top