• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 27

அக்பருக்கு அங்கு நடந்ததும் அவர் கண்களால் பார்த்த விஷயங்களும் ஏதோ கனவில் நடப்பதுபோல் இருந்ததால் வாயடைத்து விழி பிதுங்கி குழம்பிப் போனார். அதனால்தான் அங்கிருந்தவர் அக்பரிடம் எதுவும் சொல்லாமல் அவருடைய அம்மாவை அழைத்து நடந்த விஷயத்தை விளக்கிச் சொன்னார்.

“சரியாக ஒருவருடத்திற்கு முன்பு உங்கள் பிள்ளைக்கு யாராவது வேண்டாதவர்கள் சாப்பாட்டுப் பொருள் எதாவது கொடுப்பதை நீங்கள் கவனித்தீர்களா? “ என்று அந்த மாந்திரீகம் நீக்குபவர் அக்பரின் அம்மாவிடம் கேட்டார்.

“சாமி அந்த மாதிரி எதுவும் நடந்ததா எனக்கு நியாபகம் இல்ல. பொதுவா என் புள்ள யார்கிட்டையும் எதையும் வாங்கி சாப்பிட மாட்டான். ஹெல்த் விஷயத்துல ரொம்ப கவனமா இருப்பான் “

“அப்படி இருந்தா நல்ல விஷயம்தான். நீங்க வேணா நடந்தத மறந்திருப்பீங்க. ஆனா நடந்தது எல்லாம் கிளீனா தெரியுதே. நான் சொல்றத கேளுங்க உங்க புள்ளைக்கு நடந்தது இதுதான் “ என்று தொடங்கிச் சொல்ல ஆரம்பித்தார்.

சென்ற வருடம் உங்களுடைய சம்மந்தகாரர் வீட்டைச் சேர்ந்த யாரோ ஒருவர் உங்களுடைய பையனிடம் ஏதோ ஒரு உண்ணும் பொருளைக் கொடுத்திருக்கிறார். அப்படிக் கொடுத்தது ஒரு பெண். அந்தப் பெண் அந்தப் பொருளை சாதாரணமாகக் கொடுக்கவில்லை அதனுடன் மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறார்.

அந்த மருந்து மாந்திரீகம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும். உண்ணும் பொருளில் அந்த மருந்து கலந்திருக்கிறது என்று எப்பேர்ப்பட்ட கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம் அந்த மருந்திற்கு நிறமோ, சுவையோ, மணமோ கிடையாது. அதனுடைய வீரியத்தைக் காட்ட அதிக அளவு மருந்து தேவையில்லை. கடுகளவு கலந்தாலே போதுமானது. அதனுடைய சக்தி உண்ணுபவரின் ஆணி வேரையே அசைத்துப் பிடுங்கி எறிந்துவிடும். அந்த பாதிப்புதான் உங்களுடைய பிள்ளையைப் போட்டு பழிவாங்குகிறது.

குடும்பத்திற்கு ஒரே ஆதாரமாய் அவர் இருப்பதால் அவருடைய கஷ்ட பலன் மற்றவர்களையும் பாதிக்கிறது. இந்த தகவல் போதும்? இல்லை மருந்து கலந்தவரின் ஊர், பெயர் குடும்ப விளக்கம் எல்லாம் சொல்ல வேண்டுமா? என்று அவர் சிரித்தபடியே கேட்டார். “இல்ல அதெல்லாம் வேணாம் எங்களுக்கு யாருனு தெரியுது. நான் இத ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கவா? “ என்று கேட்டு அக்பர் கக்கிய உருண்டைகளை அவருடைய செல்ஃபோனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படத் தயாரானார்.

“இனி இதுக்கப்புறம் சாமி “ என்று அக்பருடைய அம்மா வார்த்தையை இழுக்க, “இதுக்கு அப்புறம் எதுக்கும் பயப்படத் தேவையில்ல. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சரியாகி நல்ல வாழ்க்கைய அந்த ஆண்டவன் அமச்சுக் கொடுப்பான். மருந்த உறிஞ்சி எடுத்ததால தொண்டை, வயிறு எல்லாம் புன்னாகிரும். அதுனால இன்னும் ஒரு வாரத்துக்கு சூடான பொருளும் காரமான பொருளும் சாப்பிட வேணாம் “ என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.

இந்த மாந்திரீகம், மந்திரம், மருந்து இது போன்ற மாயைகளை நம்பாத அக்பர் தனக்கே இது நடந்த பிறகு ஒரு வேளை இருக்குமோ என்று அதை நம்பும் வளையத்திற்குள் லேசாக நுழைந்தார். ஆனாலும் அவரின் படித்த மூளை அதெப்படி? என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருந்தது. தனக்கிருந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள இதைப் பற்றி தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ஆலோசித்தார் அக்பர்.

மருத்துவராக பணிபுரிந்த அந்த நண்பர் அக்பரின் செல்ஃபோனில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து விட்டு அதிர்ச்சி கலந்த குழப்பத்தோடு சிறிது நேரம் யோசித்தார். அந்த இடத்தில் என்ன நடந்தது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். எந்த வலியில் யோசித்துப் பார்த்தாலும் இது போன்ற செய்தியை அவர் இதற்கு முன்னாள் கேள்விப்படவே இல்லை என்பது மட்டுமே பதிலாக கிடைத்தது.

அது எப்படி மருந்து உருண்டையில் முடி முளைக்கும்? அதுவும் ஒரு கடுகளவு கலந்த மருந்து எப்படி இவ்வளவு பெரிய பெரிய அளவில் எட்டு உருண்டைகளாக மாறியது?. இதற்கும் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் எப்படி சம்பந்தம் இருக்கும்? என்றெல்லாம் அக்பர் அவருடைய அம்மாவிடம் கேள்வி கேட்டது போலவே, அந்த மருத்துவ நண்பர் அக்பரிடம் கேட்டார்.

இருவரும் பல மணி நேரம் உரையாடி அதற்கு தீர்வு கிடைக்காமல் தோற்றே போனார்கள். இதைக் காட்டி பல மருத்துவ வல்லுநர்களிடம் விவாதித்த போதும்கூட அவர்களாலும் பதில் சொல்ல முடியவில்லை.

இதை ஒரே அடியாக பொய்யென்றும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இதில் சம்மந்தப்பட்ட அக்பரே அங்கு நடந்ததை தன் கண்ணால் பார்த்தார். அதே போல் இதை உண்மை என்றும் சொல்லிவிட முடியாது.படித்த பலரிடம் கேட்ட போதும் கூட இது குறித்த எந்த ஒரு அறிவியல் விளக்கமும் இல்லை. இதன் மீது எந்த கருத்தையும் உறுதியாக வைக்க முடியாமல் குழப்பம் ஒரு பக்கம் நிலவ, அவரை விட்ட கெட்ட நேரம் ஜோதாவைப் பிடித்துக் கொண்டது.

உணவில் மருந்து கலந்து கொடுத்தது யார் என்று அந்த சாமியார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அக்பருக்கும் அவருடைய அம்மாவிற்கும் மனதில் தோன்றியது ஒரே முகம்தான். அது ஜோதாவினுடைய அம்மாவின் முகம்தான்.

அவர் சொன்ன குறிப்புகளுமே அவளுடைய அம்மாவைத்தான் அடையாளப்படுத்தியது.
இந்த உண்மை தெரிந்த பிறகு, இதை ஜோதாவிடம் சொல்ல வேண்டாம் அவளுக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவாள். எந்நிலையிலும் இந்த உண்மை ஜோதாவிற்கு தெரியக்கூடாது என்று தன் அம்மாவிடம் இருந்து சத்தியம் பெற்றுக் கொண்டார் அக்பர்.

தான் ஆசையாசையாய் பெற்று வளர்த்த பிள்ளையை வாட்டி எடுத்தது ஜோதாவின் சதிகாரக் குடும்பம்தான் என்று தெரிந்த பிறகு அக்பருடைய அம்மாவிற்கு ஜோதாவின் மேல் இருந்த பாசம் குறைந்து, நாளடைவில் அது பகையாக உருமாறியது.

இந்த ஒரு காரணத்தினாலே ஜோதாவிற்கும் அவளுடைய மாமியாருக்கும் இடையில் பல மோதல்கள், சண்டைகள், சச்சரவுகள், பிடிவாதங்கள், வாக்குவாதங்கள், கோபங்கள், தகாத பேச்சுக்கள், கருத்து வேறுபாடு என அத்தைனை பகை உணர்ச்சியும் புகை மூட்டித் தீப்பிடித்து. அதிலிருந்து அக்பருக்கு சின்னதாக தலைவலி வந்தால் கூட ஜோதாவின் மாமியார் அவளையும் அவள் குடும்பத்தையும் கரித்துக் கொட்ட ஆரம்பித்தாள்.

வீட்டில் தொடர்ந்து சண்டையும் சச்சரவுமாக இருக்க அனைவருக்கும் நிம்மதி இல்லாமல் போனது. மாமியாரின் வார்த்தைகளால் பாதிக்கப்பட்ட ஜோதா தன் கணவனிடம் இதைப்பற்றி பேசினாள்.

“வாழ்க்கையே எனக்கு வெறுப்பா இருக்குங்க. வர வர அத்த எதுக்கெடுத்தாலும் என்னைய எதாவது காரணம் சொல்லி திட்டிகிட்டே இருக்காங்க. சொல்ற காரணம் உருப்படியான காரணமா இருந்தா கூட பரவாயில்லங்க. முன்ன இருந்ததுக்கு அத்த ரொம்ப மாறிட்டாங்க. நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க “

“என்னனு எடுத்து சொல்றது?. அவங்களுக்கும் வயசாகிட்டே போகுதுல்ல அப்படித்தான் புரியாமல் பேசுவாங்க. அவங்கள நம்மதான் கொஞ்சம் அனுசரிச்சு போகனும் “

“எத்தன நாளைக்குங்க?. நானும் மனுஷிதான?. எனக்கு கஷ்டமா இருக்கு “

“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ ஜோதா. எல்லாம் சரியாகிரும் “

“ம்ம்ம்ம். இப்பக்கூட பாருங்க நீங்க என்னையதான் சமாதானப் படுத்த முயற்சி பண்றீங்க. உங்க அம்மா கிட்ட இத பத்தி பேசுறேனு சொல்ல மாட்டேன்”

“என்ன சொன்ன? உங்க அம்மாவா? ம்ம்ம்ம்... ஆமா எங்க அம்மாதான்.இத்தன நாள் அத்தையா இருந்தவங்க இன்னைக்கு உங்க அம்மா ஆகிட்டாங்களா?. எதுவும் தெரியாத மாதிரி முழிக்காத. ஜோதா எனக்கு டென்ஷன் ஆகுது “ என்று அக்பர் ஜோதாவிடம் கோபமாகப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அவர்களுக்கு இடையில் இது இரண்டாவது சண்டை. பொதுவாக அக்பருக்கு நீ, நான்னு பிரிச்சு பேசினாலோ... எங்கிட்ட பேசாத வைக்காதனு எடுத்தெறிந்து பேசினாலோ சுத்தமாகப் பிடிக்காது. இருவரும் காதலித்த சமயத்தில் இதே காரணத்திற்காக சண்டை போட்டுத்தான் பல மாதங்கள் பேசாமலே இருந்தார்கள். இப்போதும் அதே காரணத்திற்காக இவர்களுக்கு இடையில் சண்டை வந்ததை நினைத்து ஜோதா பயந்தாள். ஆனால் ஒரே வீட்டில் இருந்ததால் எவ்வளவுதான் விட பிடியாக இருந்தாலும் ஒரு நாளைக்கு மேல் பேசாமல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சண்டையும் சமாதானமுமாய் நாட்கள் ஓட ஒருநாள் ஒன்று சொன்னது போல் இருவரும் முரண்டு பிடித்தார்கள். ஜோதாவிற்கு அன்பாய் எடுத்துச் சொல்லும் மனநிலையில் அந்த அக்பர் இல்லை. அதனால் கோபத்தோடு வீட்டில் சண்டை வருவதற்கு காரணம் எது என்றும், ஜோதாவிற்கு தெரியாமல் மாந்திரீகம் செல்லும் இடத்திற்கு அவர் அம்மாவும் சென்றதையும் அங்கு நடந்ததையும், அதில் வெளிவந்த உண்மையும், அதனால் வீட்டில் ஏற்பட்ட விளைவுகளும், அது இப்போது எடுத்துள்ள விஸ்வரூபத்தையும் கோபத்தோடு சேர்த்துக் கொட்டித் தீர்த்தார்.

ஜோதா மீண்டும் அவளது அம்மாவிடம் தோற்று நின்றாள். நினைத்தது நடந்த பிறகு கவனம் குறைந்த நேரத்தில் அம்மாவின் சத்தம் இல்லாமல் காரியம் சாதிக்கும் கலையைப் பற்றி மறந்தே போனாள் ஜோதா. அவளை எதிர்த்து சண்டையிட்டு குத்திக் கிழித்து உயிர் பிரிந்திருந்தாலும் அதைத் தாங்கியிருப்பாளோ என்னவோ... பெற்ற தாயே சிரித்துக் கொண்டு அணைத்து பின் முதுகில் குத்தியதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

திருமணத்திற்கு அவர்களை வீட்டில் வந்து சந்தித்த ஜோதாவையும் பிறகு அவள் கணவனையும் வந்து சந்தித்த பிறகு அவர்கள் அந்த வீட்டுப் பக்கம் திரும்பினார் முறை கூட வரவில்லை.

அக்பருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு மருத்துவமணையில் இருந்த போதும்கூட செல்ஃபோனில்தான் நலம் விசாரித்தார்கள். ஜோதாவின் பெற்றோர்கள் அவளையும் அவள் குடும்பத்தையும் விட்டுத் தள்ளியே இருந்ததால் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை அக்பருடன் கூட பகிர்ந்திருக்கிறாள். ஆனால் அது அக்பருக்கு பெரிய விஷயமாகத் தோன்றவே இல்லை. இவள் கோபமாகப் பேசினால் கூட, “விடு அவர்களுக்கு அங்கு எப்படி இருக்கிறதோ?. யாருக்குத் தெரியும்? உபத்திரவம் செய்யாமல் இருக்கும் வரை நல்லதுதான். அதனால் நீ இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே “ என்று அவளை சமாதானம் செய்வார்.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top