• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 16, 2025
Messages
57
அத்தியாயம் - 23

ஜோதா அக்பரை வெறுக்கவில்லை. அவருடைய நினைவுகளைத்தான் வெறுக்கிறாள். அவர் இல்லாத நாட்களில் அவரை விட அந்த நினைவுகளே அவளை வாட்டி எடுத்தது. பிரிவின் கடைசி படிக்கட்டில் நின்று கதறிய நாட்களில் முதுகில் ஆணியாக இறங்கிய அந்த நினைவுகளை அவள் புறக்கணித்தாள்.

ஒருவேளை இந்தக் குறுஞ்செய்திக்கு அவர் சொந்தக் காரராக இருந்தால்? கனவில் இருந்து விழித்ததும் கண் முன்னே பார்த்த அவரின் முகம் உண்மையாக இருந்தால்? ஊஞ்சலில் இருந்த பரிசுப் பெட்டி எனக்கானதாக இருந்தால்? ரோஜவைக் கொடுத்த குழந்தை அவரது தூதாக இருந்தால்? இதற்கெல்லாம் முதலாக என்னை இடித்துவிட்டுச் சென்றவர் அவராக இருந்தால்? என்று தன் அச்சத்தை அடுக்கடுக்காய் அடுக்கினாள்.

வீட்டில் எல்லாம் இயல்பாகவே இருந்தாலும் அவளுக்கு மட்டும் எல்லாம் வித்தியாசமாகத் தெரிந்தது. வலியும் இல்லாமல் சுகமும் இல்லாம் இரண்டுக்கும் இடையே ஏதோ ஒன்றில் சிக்கிக் கொண்டாள்.

அன்று இரவு உறங்கும் முன்பு விருப்பமே இல்லாமல் தயக்கத்தோடு தன் செல்ஃபோனை எடுத்தாள். மீண்டும் அதே எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. “இன்னைக்கு வந்த அதே பார்க்ல நாளைக்கு நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். என்ன பாக்க எப்போ வருவ? எப்போ வருவனு சண்ட போட்டு இத்தன நாள் பேசாம இருந்துட்டு, உன்னையப் பாக்கலாம்னு வந்த பிறகு முகத்த மறச்சிட்டு திரும்பி பாக்காம போனா நியாயமா? “ என்கிற மெசேஜ் அவள் மனதைக் களைத்தது. அது அவளது காதலன் தான் என்பதில் இதற்கு மேலுமா சந்தேகம் வந்துவிடப் போகிறது?.

அவர் மீது இருந்த காதல் ஒரு துளி கூட குறையவில்லை அவளுக்கு. அதேசமயம் காதலின் அளவைக் காட்டிலும் கூடுதலாக பயமும் இருக்கிறது. அந்த பயத்திற்கு அவரது பிரிவு தந்த வலிதான் காரணம். எவ்வளவு யோசித்து மனதைத் தேற்றி நாளை சந்திக்கச் செல்லலாம் என்று முடிவு செய்தாலும், மீண்டும் நெருங்கி வாழ்க்கை தடம் மாறி இனிமையான பாதையில் போய்க் கொண்டிருக்கும்போது என்னுடைய பிடிவாதத்தாலும் அவருடைய கோபத்தாலும் மீண்டும் அந்த பிரிவு என்கிற அரக்கனைச் சந்திக்க நேரிட்டால் என்ன செய்வது? என்கிற அச்சமும் அவளை வழிமறித்தது.

அவள் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் முரணாகத் தோன்றினாலும் அதற்கெல்லாம் இறுதி பதிலாக அவர் மீது அவள் வைத்திருக்கும் பைத்தியக்காரத்தனமான காதல்தான் வந்து நிற்கிறது. இந்த சிந்தனை இரவு இரண்டு மணி வரைக்கும் விடாமல் துரத்த, படுக்கையை விட்டு எழுந்து நாளை அவரைப் பார்க்க எந்த உடையை அணிந்து கொள்ளலாம் என்று அலமாரியைக் கிளரிக் கொண்டிருந்தாள்.

குப்பை மேடாக அவள் துணி இருக்கும் பெட்டியில் காக்கி நிற கவரால் மூடப்பட்ட ஒரு சிவப்பு நிற ஆடையைப் பார்த்தாள். அது ஒரு நன்கு வடிவமைக்கப்பட்ட உயர்தர மேலங்கி (கவுன்). அவளுக்கெனவே சிறப்பாக வடிவமைத்தது போல அளவும் வடிவமும் ஏற்புடையதாக இருந்தது.

அதைப் பார்த்ததும் அவள் கண்கள் மின்னியது. அந்த ஆடையைப் பற்றி காலையில் அம்மாவிடம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உறங்கினாள்.
மறுநாள் காலையில் அதைப் பற்றி விசாரிக்கும் போது, அந்த ஆடை உன் தோழி மலர்தான் விரைதூதரில் (கூரியர்) அனுப்பியிருந்தாள். நேற்றுதான் நம் வீட்டில் வந்து கொடுத்தார்கள். அந்நேரம் பார்த்து நீ வெளியே சென்றதால், உன் அலமாரியில் வைத்தேன். நீ வந்ததும் சொல்லலாம் என்று இருந்தபோது உன் முகமே வாட்டமாக இருந்தது, நான் பேசுவதைக் கேட்கும் நிலையில் நீ இல்லை. அதனால் சொல்லாமல் விட்டுவிட்டேன் என்று அம்மா சொன்னாள்.

அம்மா சொன்னதைப் போலவே அந்தக் காக்கி நிற கவரின் பின்புறம் அனுப்புநர் என்பதன் கீழ் மலர் என்று அவளது தோழி பெயர் இருந்ததைக் கவனித்தாள். அதை அனுப்பியது மலர் இல்லை என்றும், அதை யார் அனுப்பினார்கள் என்றும் ஜோதாவிற்கு நன்றாகவே தெரியும். அந்த ஆடையைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணாடியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் “இவ்வளோ ஆசைய வச்சிட்டு இத்தன நாள் பேசாம இருந்தீங்கள்ல. இன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு இருக்கு “.

அவள் எதிரில் இருந்த கண்ணாயிடில் இருந்து வெளியே நடந்து வந்தவன் இரண்டு கன்னத்தையும் அழுத்திப் பிடித்து குறுகிப் போன அவள் உதட்டைப் பார்த்து “ என்ன இருக்கு? “ என்றான். “ஒன்னு இல்ல நீங்க ஏன் இப்போ வந்தீங்க போங்க “ என்று கண்ணை இறுக்கமாக மூடியபடியே அவள் சொல்வதைப் பார்த்துச் சிரித்தான்.

குழந்தைத்தனமான அவள் அடத்தைக் கொஞ்சம் பொறுத்துப் போயிருந்திருக்கலாம் என்று நினைத்தான். இதழ் அருகே இருந்த பார்வையை சற்று உயர்த்தி படர்ந்த நெற்றியின் மீது பக்குவமாய் பச்சை குத்திவிட்டு ஈர எச்சிலை அப்படியே விட்டுக் காற்றில் மறைந்தான்.

“அவன் எங்கே? “ என்று கண்ணாடியிடம் அவள் கேட்டதிற்கு கண்ணாடியும் வெட்கத்தில் சிதறி சில்லு சில்லானது.

மதியத்தில் இருந்தே மயக்கத்தில்தான் இருந்தாள் ஜோதா. அவனைப் பார்க்க தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். இரண்டு வருட காதலில் இன்றுதான் அவனை முதன் முதலில் பார்க்கப் போகிறேன் என்கிற துள்ளலில் இருந்தாள். எப்படிப் பார்த்தாலும் சண்டையின் இறுதியில் நான்தான் ஜெயித்திருக்கிறேன் என்கிற அழகான ஆணவத்தோடு அலங்காரச் செயலில் ஈடுபட்டாள்.

அணிந்ததைக் கழற்றி, அத்தனையையும் களைத்துப் போட்டு, பின் முதலில் தேர்ந்தெடுத்ததையே எடுத்துப் போட்டுக் கொண்டு மீண்டும் அழகானாள். முடிந்த தலையை மீண்டும் மீண்டும் களைத்து வெவ்வேறு விதமாகச் செய்து பார்த்து சோர்வுற்று கடைசியில் மொத்தமாக அவிழ்த்துவிட்டு அழகானாள்.

அலங்காரம் எல்லாம் முடிந்த பிறகு அம்மாவிடம் சென்றாள். எப்படி இருந்தாலும் அந்த இயல்பிலேயே நம்மை ரசிக்கும் ஒரே ஜீவன் அம்மாதான். எந்த விமர்சனமும் இல்லாமல் நமக்கு இருக்கும் தாழ்வான சந்தேகங்களை பிரமிக்க வைக்கும் வார்த்தைகளைக் கொண்டு நிரப்பிவிடுவாள். அவளது வார்த்தைகள் தெளிவைக் கொடுக்கும் அவள் முகத்தில் இருக்கும் சிரிப்பு நம்மை பொதுவெளியில் கூச்சமின்றி நிமிர்ந்து நடக்க வைக்கும். அம்மாவிடம் இருந்து அவளுக்கும் அது குறைவின்றி கிடைத்தது.

கைகாடிகார முள் அவள் பொறுமையைச் சோதிக்க நினைத்து மெல்ல நகர, அதன் விளையாட்டுப் பிடிக்காமல் தத்தி நடக்கும் கால்களால் ஓங்கி ஓங்கி நடந்து தன் கொலுசு ஒலியால் அதை அதட்டிக் கொண்டிருந்தாள்.

சூரியனும் புரிந்து கொண்டு மொட்டை மாடியை விட்டு மலைக்குப் பின் செல்லத் தயாராக இருந்தது. இவளும் அவனைக் காண வீடு தாண்டினாள். யாருக்கும் சந்தேகம் எதுவும் வந்துவிடக் கூடாது என்று வழக்கமாக எடுத்துச் செல்லும் புத்தகப் பையையும் கொண்டு சென்றாள்.

பூங்கா நுழைவாயிலைக் கடந்ததும் மரத்துக் கிளையில் பூத்த உதிர்ந்த பூக்கூடை கொட்டிக் கவிழ்ந்து அவளையும் கவிழ்த்தியது ஆசைச்சிரிப்பில். அவள் பாதம் பட்டு மோட்சம் பெற பூக்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அவள் காலடி சேர்ந்து பாதையானது. அன்று பூங்கவில் நிறைந்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கைகளில் எல்லாம் சிவப்பு நிற இதய பலூன் முளைத்து இருந்தது.

அங்கிருந்த அனைவருமே காதலுக்கு மீக நெருக்கமான தூதுவர்களாகத் தெரிந்தார்கள்.

மெல்லிய வயலின் சத்தம் வழி சொல்ல காதலை நோக்கி நடத்தினாள் ஜோதா. நான்கு இசைக் கலைஞர்கள் கருப்பு நிறக் கோட் சூட் அணிந்து கொண்டு வயலினால் அனைவரின் இதயங்களையும் கொள்ளையடித்து கொண்டிருந்தார்கள்.

அழகான குட்டி தேவதைகள் கையில் பூங்கொத்துக்களோடு கூட்டமாக அவளை நோக்கி படையெடுத்து வந்து, அவளைச் சூழ்ந்து நின்றார்கள். அழகழகாய் தேர்ந்தெடுத்து அடுக்கி அமைக்கப்பட்ட ரோஜா பூச்செண்டுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

சந்தோஷத்தில் திகைத்து நின்ற ஜோதாவின் கண்களுக்கு ரசிக்க பல இருந்தாலும் அவளது கண்கள் தேடியது அவன் முகத்தைத்தான். நேரம் தாழ்த்தாமல் வா என்று தனக்குள்ளே முனங்கியது அவனுக்கு கேட்டிருக்குமோ? என்னவோ? அவன் அருகில்தான் இருக்கிறான் என்கிற உணர்வை அவன் அணியும் சட்டையின் மீது பரவியிருக்கும் நறுமணம் கட்டிக் கொடுக்க அவள் உலகம் இருளானது.

பின்புறம் இருந்து தன் கண்ணை இறுக்கமாக மூடியவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்கிற எதிர்பார்ப்போடு அவனது வாசனையும் அவளை மெல்லக் கரையச் செய்தது.

கண்ணில் இருந்து கையை எடுத்தவன் அவள் திரும்பிப் பார்க்கும்போது மாயமாகி இருந்தான். “எங்க இருக்கீங்க?” என்று சுழித்த புருவமும் சுருங்கிய நெற்றியுமாய் முகத்தை வைத்து கேட்டதும் எங்கிருந்தோ வந்துஅவளை அணைத்துக் கொண்டான். அணைத்தவுடன் இருவரின் இதயமும் இடி மின்னலானது.

வானத்தில் வண்ண வண்ண பலூன்களும் பல்வேறு நிறப் புகையும் பறந்து பரவி விரிந்து அந்த நிகழ்வை தனியுலகமாக மாற்றியது.

அவள் தோளிற்கும் கழுத்திற்கும் இடையில் தஞ்சமடைந்த அவன் முகம் சூடான காற்றோடு ஒரு அழுத்தமான கேள்வியையும் கேட்டது. “உன்ன விட்டுட்டு அப்படியே இருந்துருவேன்னு பயந்துட்டியா?” என்று கேட்டான். அவன் சுருள் முடிப் புதருக்குள் அவளது கைவிரல்கள் ஊடுருவல், நெருக்கம் இன்னும் நெருக்கமானது. “ஆமா பயந்துட்டேன். இனிமே கோவப்படாதீங்க சரியா?. இதுக்கப்புறம் நானும் அடம்பிடிக்க மாட்டேன்” என்றாள்.

கைகளை விலக்கி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவன் நெற்றியில் இருந்த வெட்டுக் காயத்தைத் தடவியபடியே “என்ன இது?” என்றாள். சிரித்தபடியே தன் கால் அருகே வைத்திருந்த ஒரு பெரிய தங்க நிற கோப்பையை எடுத்து அவள் கையில் கொடுத்து “பாக்ஸிங் சாம்பியன்ஷிப்” என்றான். அவள் கண்கள் கலங்கியது, அதைப் பார்த்த அவனுக்கும்தான்.

இருவரின் ஆனந்தக் கண்ணீரினாலும் வெட்டுக் காயம் பட்டுப் போனது.

“நேத்து டீ ஷாப்ல நீங்க இருந்தீங்களா?“

“நேத்து நான் உன் கண்ணுல படும்படியே எல்லா இடத்துலயும் இருந்தேன் ஆனா நீ பாக்கல”

“பாத்தேன். பிரம்மன்னு நெனச்சுட்டேன்”

“பைத்தியம்டி நீ”

“ஆமா கொஞ்ச நாளா”

“ம்ம்ம்ம்ம் நேத்து நீ போன அதே டீ ஷாப்க்கு போலாமா?” என்று அக்பர் கேட்டதும் அவளும் “ம்ம்ம்ம்ம்” என்றாள். அங்கிருந்து நகர்ந்து அப்படியே அடுத்த சாலையில் அமைந்த கடைக்குச் சென்றார்கள்.

தொடரும்...♡
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top