• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 9

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
9



சந்தோசமென்றால் அப்படியொரு சந்தோஷம் ராஜேஸ்வரிக்கு. அந்த வீடியோவை எத்தனை முறை பார்த்திருப்பாரென்று அவருக்கேத் தெரியாது. “என்னைக் கலங்கடிச்சாள்ல தம்பி. அதுக்கான சின்ன தண்டனை இது. இது மட்டும் போதாது. இன்னும் எதாவது செய்யணும்” என்றார் வெறி கொண்டாற்போல்.

“தாராளமா செய்திரலாம் அண்ணி. நீங்க கோடு மட்டும் போடுங்க. நானும் உங்க தங்கச்சியும் சேர்ந்து ரோடே போடுறோம்” என்றார் சேகர்.

“இந்த வீடியோவை பவாகிட்டக் காட்டுங்க தம்பி.”

“ஏன் அண்ணி?” புரியாது அவர் கேட்க,

“புதுசா அண்ணன் தங்கை உறவு பலப்படுதுல்ல, அதைப் பலகீனப்படுத்திட்டா?” என்று புருவம் உயர்த்த,

“அண்ணன் தங்கைதான அண்ணி?” என்றார் புரியாது.

“ம்கூம்.. இரண்டு பேரும் தனித்தனியா இருக்கிற வரைதான் நமக்கு நல்லது. நாம அவங்களுக்கிடையில் இருக்கலாம். அவங்க சேர்ந்துட்டா, தனியா பறந்து போயிருவாங்க. அது சரியிருக்காது” என்றார்.

“என்னென்னவோ சொல்றீங்க. எனக்கு ஒண்ணும் புரியலை அண்ணி. நீங்க எது செய்தாலும் யோசித்துச் செய்வீங்கன்றதுல பூரண நம்பிக்கையிருக்கு.”

“இவ்வளவு தெளிவா சொல்றேன். தெரியலை சொல்றீங்க? இதைக் காண்பித்ததும் புரியும்” என்றவர் கண்களில் வன்மப்புன்னகை.

“என்ன சித்தப்பா காலேஜ்கு நீங்க வந்திருக்கீங்க?”

“இன்னைக்கு நீ ஸ்கூட்டியில வரலைன்னு உன் சித்திதான் கூட்டிட்டு வரச்சொன்னா” எனவும்,

“நம்புற மாதிரியில்லை சித்தப்பா. சரி என்ன விஷயம்?” என நேரடியாகவே கேட்டாள்.

“உன் அண்ணன்ற பெயர்ல இருக்கிற ஒரு பிரச்சனையே போதாதா?”

அவரின் இளக்காரப் பேச்சில் கோபம் எழ, “சித்தப்பா! அவங்க என் அண்ணன்றதை மறந்துராதீங்க. எங்களுக்குள்ள ஒட்டுதல் இல்லைன்றதுக்காக நீங்க பேசுறதையெல்லாம் கேட்டுட்டிருக்க முடியாது” என தன் கோபத்தைக் காட்ட,

‘அவங்க சேர்ந்துட்டா தனியா பறந்து போயிருவாங்க’ என்ற அண்ணியின் குரல் காதில் விழ, ‘ம்ம்.. பலே ஆளுதான் அண்ணி நீங்க’ என நினைத்தவர், “உங்களுக்குள்ள கலகமூட்டி எனக்கென்னாகப் போகுது பவானி. வேணும்னா நீயே பாரு” என்று காரை ஓரம் நிறுத்தியவர் தன் கைபேசியை எடுத்து குறிப்பிட்ட அந்த வீடியோவை ஓடவிட்டு அவளிடம் கொடுத்தார்.

முதலில் அண்ணனவன் அண்ணியைத் தேடிச் சென்றதைச் சந்தோஷமாகப் பார்த்திருந்தவள், அவளிடம் அவன் பேசிய தோரணை கண்டு முகம் சுளிக்க, தொடர்ந்து நடந்த ஒவ்வொன்றிற்கும், கோபம், ஆத்திரம் அழுகை என மாறி மாறி உணர்வுகள் வெளிப்பட, கைபேசியை அவரிடம் கொடுத்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.

பார்த்திருந்த அவருக்கே பாவமாய்ப் போய்விட்டது. ‘சே.. இந்த அண்ணி இந்தளவு சாடிஸ்டா இருக்க வேண்டாம். என் பையன்கள் மேல தெரியாம சின்னதா கீறல் பட்டாலே மனசெல்லாம் கலங்குது. ஆனா, அவங்க ஈகோவுக்கு பெத்த பிள்ளைகளைத் துடிக்க வைக்கிறாங்க. முடிந்தளவு அவங்ககிட்ட பணத்தைத் தேத்திட்டு குடும்பத்தோட கண்ணுக்கெட்டாத தூரமா போயிரணும்டா சாமி’ எனும்போதே வீடு நினைவு வர, ‘வீட்டை விட்டுட்டு எப்படிப் போறது?’ என இருமனதாக இருந்தவரை பவானியின் அழுகை தடுத்தது.

“பவானி அழாத. உன்கிட்டக் காண்பிக்க வேண்டாம்னுதான் நினைத்தேன். மனசு கேட்கலை. அந்தப் பொண்ணுன்னா உனக்கு இஷ்டமாச்சே” என்று வார்த்தை மூலம் ஊசி ஏற்றினார்.

அழுகை சற்று மட்டுப்பட, அண்ணன் மீதான கோபம் மட்டுமே! என்னதான் அவர் காண்பிக்கக்கூடாதென்று எண்ணியதாக சொன்னாலும், தான் பார்க்கதான் தன்னைத் தேடி வந்திருக்கிறார் என்று புரிந்தது. தன் உடன்பிறந்தவனே இப்படியிருக்கையில் அவரைச் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லையே!

“என்னமா உன் அண்ணி இனி உனக்கில்லையாம் வேற யாரையாவது கட்டுவேன்னு சொல்றாங்க” என்க,

“அண்ணி யாரைக் கட்டிக்கிட்டாலும் அவர் எனக்கு அண்ணன்தான் சித்தப்பா” என்றாள் அழுத்தமாக. அத்தோடு அவர் வாய் மூடிக்கொள்ள, கண்மூடி சீட்டில் சாய்ந்தவளுக்கு ஆயிரத்தெட்டு யோசனைகள்.

இரவில் வந்த அண்ணனைக் கண்டாலும் எதுவும் பேசவில்லை. அண்ணிக்கு அழைத்துப் பேச ஆசையிருந்தாலும், அண்ணன் செய்த செயல் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டது. ஏதோ முடிவெடுத்து யாருக்கோ அழைத்துப் பேசி முடித்து ஒருவித திருப்தி எழுந்தாலும் அதை மீறிய பயம் இருக்கவே செய்தது.

மறுநாள் விடியற்காலையில் பவானி வீட்டைவிட்டுச் செல்ல, விடிந்ததும் அவள் வீட்டில் இல்லையென்ற உண்மை தெரிய, பாதிக்கப்பட்டது என்னவோ செந்தூரன்தான். எப்படியும் விவாகரத்துக் கேட்டது அவளுக்குத் தெரிந்திருக்கும். அதனால் தான் வீட்டிற்குச் சென்றவுடன் தன் மீது உள்ள கோபத்தை வார்த்தைகளால் காண்பிப்பாள் என்ற எண்ணத்தைப் பொய்யாக்கியது, நேற்றைய அமைதியும், இன்றைய தலைமறைவும்.

காலையில் உட்காரவைத்துத் தனியே பேசி சமாதானப்படுத்தலாம் என்றெண்ணியிருக்க, இரவே பேசியிருக்க வேண்டுமென்ற நிலையை அண்ணனவனுக்குக் கொடுத்திருந்தாள் பவானி.

“என்ன செந்தூ இப்படியே இருந்தா எப்படி? முதல்ல எங்க இருக்காள்னு தேடு” என்றார் ராஜலட்சுமி.

“இந்த நரகம் வேண்டாம்னு போனவளை எங்கன்னு போய்த் தேடுறது?” என்றான் அவர்கள் மேலுள்ள வெறுப்புடன்.

“அதுக்காக வயசுப்பிள்ளையை அப்படியே விட முடியுமா?”

“விடவா? எனக்கிருக்கிற ஒரே உறவு அவள்தான். அவளோட அண்ணி வீட்டுக்குப் போயிருப்பா. பார்த்துட்டு வர்றேன்” என்று வண்டி சாவியை எடுத்து வெளியே வருகையில் ஒரு ஆட்டோ வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய தங்கையைப் பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டான்.

நெற்றி வகிட்டில் குங்குமமும், கழுத்தில் தாலியுடனும் தன்னந்தனியே வந்து நின்ற தங்கையைக் கண்டவனுக்கு பூமி தலைகீழாய்ச் சுழலும் நிலை.

அண்ணனவனை ஒரு பார்வை பார்த்துக் கடந்து வீட்டினுள் செல்ல பேயறைந்தாற்போல் நின்றிருந்த ராஜலட்சுமி, “இதென்ன கோலம் பவா?” என்று அடிக்கவே சென்றுவிட்டார்.

அவரைத் தடுத்து, “பார்த்தால் தெரியலை? கல்யாணக் கோலம்தான் சித்தி. ஒருமணி நேரம் முன்ன என் ஃப்ரண்ட் அண்ணனுக்கும் எனக்கும் கல்யாணமாகிருச்சி” என்று சர்வசாதாரணமாக சொன்னாள்.

“பொய் சொல்லாத பவா. உன் அண்ணிக்காக நீ ஏதோ பண்ற?” என்றவருக்கு வளர்த்த பாசம் அவள் நிலையை நம்ப மறுத்தது.

“அப்படியா? அவங்களுக்கு நீங்க பண்ணினது பத்தாதுன்னு நான் வேற செய்யணுமா? எனக்கு இங்கேயிருக்கப் பிடிக்கலை. அண்ணி வீட்டுக்குப் போனா சேர்த்துப்பாங்கதான். என்ன உரிமையில் போறது? தனியா போனா வயசுப்பொண்ணு சொல்லி பயமுறுத்துவீங்க. அதான் முறையா கோவில்ல போயி தாலி கட்டிட்டு வந்துட்டோம்” என்றதும் அவர் வெளியே பார்க்க, “என்ன பின்னாடி பார்க்குறீங்க? அவங்களைக் கூட்டிட்டு வரலை. கூட்டிட்டு வர எனக்கு விருப்பமில்லை.”

“நீ என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேன். உனக்கு தோழிகளே கிடையாது. அதுக்கு நாங்க அனுமதிச்சதும் இல்லை. அப்படியிருக்கிறப்ப எங்கிருந்து ஒரு தோழி, அவளுக்கொரு அண்ணன் வந்தான்?” இன்னும் அவளை நம்பாது கேட்டார்.

“என்மேல அவ்வளவு நம்பிக்கையா சித்தி? ஃபர்ஸ்ட் டைம் உங்க வாயால கேட்கிறதுக்கு அவ்வளவு சந்தோசமாயிருக்கு. ஆனால், நடந்த கல்யாணம் நிஜமாச்சே. எனக்கு நெருக்கமான நட்பு இல்லைதான். அதுக்காகப் பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்குறவகிட்ட கூடவா பேசாமல் இருப்பேன். என்ன வருஷக்கணக்காவோ மாதக்கணக்காவோ பழகலை. வெறும் இருபது நாள் பழக்கம்தான். பேங்க் எக்ஸாம் எழுத ஹெல்ப் கேட்டதுல பழக்கம். இப்ப வேற வழியில்லாம முடிச்சாச்சி” என்றாள்.

“பவா! அக்கா கேட்டா என்ன சொல்றது?” இப்பொழுது அவளை அடித்தால் அவள் அண்ணன் ஏற்கனவே இருக்கும் கோபத்திற்கு தன்னை எதுவேண்டுமென்றாலும் செய்துவிடுவான் என்ற பயத்தில் அடக்கியே வாசித்தார் ராஜலட்சுமி.

“உங்க அக்கா யாருன்னே எனக்குத் தெரியாது சித்தி. யாரோ எதோ கேட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை. முதல்ல நகருங்க என்னோட புத்தகம் காலையிலேயே எடுத்துட்டுப் போயிட்டேன். ட்ரஸ் பேக் மட்டும் எடுத்துட்டுப் போகணும்” என்றாள்.

“ஓ.. ட்ரஸ் எடுக்கதான் வந்தியா? எதுவும் நம்புற மாதிரியில்லையே?”

“சந்தேகம்னா பாருங்க” என்று தன் கைபேசியிலுள்ள நிழற்படத்தைக் காண்பிக்கவும் வாயில் கை வைத்தபடி உட்கார்ந்தவர் செந்தூரனைப் பார்த்து, “என்னடா அமைதியா வேடிக்கை பார்க்கிற? யார் என்னன்னு கேளுடா” என்றார்.

“கேட்டு...” என்று நிறுத்தினான். பவானி வந்ததிலிருந்து அவளை மட்டுமே பார்த்திருந்தான். வலி, வேதனை என மனம் ரணமாகியிருக்க தங்கையின் கண்பார்த்துத் தெரியவே அமைதியாய் அமர்ந்திருந்தான். அவள் பேசிய, பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவள் நிதானத்தைக் கூற, அடித்துக் கேட்கம் தகுதி கூட தனக்கில்லையென்று புரிந்தது.

அவனின் அமைதி புரியாது, “என்னடா?” என்றார் ராஜலட்சுமி.

“கேட்டு ஒண்ணும் ஆகப்போறதில்லை. போனைக் கொடுங்க” என்று வாங்கி தங்கையின் திருமணப் புகைப்படத்தைப் பார்க்க, பார்த்தவன் திரும்பி தங்கையைப் பார்த்தான்.

“ஆள் யாருன்னு தெரிந்து எதாவது செய்துட்டா? அதான் என் முகம் மட்டும் தெரியுற மாதிரி க்ராப் பண்ணி ஒரிஜினலை ஹஸ்பண்டுக்கும், ஃப்ரண்டுக்கும் அனுப்பிட்டு என்னோடதுல டெலீட் பண்ணிட்டேன். முகம் தெரியாமல் இருக்கிறதுதான் எங்களுக்கு சேஃப். இப்போதைக்கு அவங்க வீட்டிலும் சொல்லப் போறதில்லை. ஒரு வாரத்துல அவளுக்குக் கல்யாணம். அது முடிந்ததும்தான் அவங்க வீட்டுல எங்க விஷயத்தை சொல்லப்போறோம். ஒத்துக்கலைன்னா படிப்பு முடியுறதுவரை ஹாஸ்டல் வாசம். அப்பறம் வேற ஊர்ல வேலை பார்த்துட்டுப் போயிருவோம்” என்றாள் நேர்ப்பார்வையோடு.

“ம்.. குட். வாழ்த்துகள் பவி” என வாழ்த்தி நிற்காது வெளியே சென்றுவிட்டான்.

‘என் அண்ணனுக்கு இவ்வளவுதானா நான்? இரண்டு அடி போட்டு யாரென்று விசாரித்து அவனையும் வரவழைத்துப் பேச மனமில்லையா? அட கோபத்தில் கொலைகூடவா செய்யத் தோன்றாது. கோபத்தைக் காட்டக்கூடவா உரிமை இல்லாதவளாகிட்டேன். ப்ச்.. தெரிந்ததுதான பவி. விட்டுட்டு உன் வாழ்க்கையைப் பாரு’ என்று தன்னையே நொந்து கலங்கிய கண்களைத் துடைத்துத் தன் அறைக்குச் சென்றவள் பையை எடுத்துக்கொண்டு வெளியே வர, ராஜலட்சுமி தன் அக்காவிடம் நடந்ததை விவரித்துக் கொண்டிருப்பதைக் கண்டு சின்ன பெருமூச்சுடன் திரும்பிப் பார்க்காது சென்றுவிட்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அடுத்த பத்து நாட்களுக்கெல்லாம் நீதிமன்ற அழைப்பு வர அன்பழகி குடும்பமே ஒருவித இறுக்கத்துடன் இருந்தது. என்ன சொல்வது, ஏது செய்வதென்று புரியா நிலை வீட்டினருக்கு.

மகள் விவாகரத்து வழக்கை நடத்த தன்னால் இயலாதென்று நண்பன் நேசனிடம் கொடுத்தார் சதாசிவம். அன்றிலிருந்து ராகினியின் உடலுக்கு முடியாமல் போக குடும்பமே செய்வதறியாது விழித்தது.

ராகினிதான் அவர்களது பலமே! வீட்டில் எதற்காகவாவது சண்டை வந்ததெனில் இடையினில் நின்று வேடிக்கையாகப் பேசி கவனத்தைத் திசைதிருப்பி விடுவதில் வல்லவர். வெளி வேலைகளின் அழுத்தம் வீட்டிற்கு வந்ததும் தீர்கிறதென்றால் காரணம் ராகினி மட்டுமே!

மகளுக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றால், தானே கணவரிடம் சொல்லி விவாகரத்து வாங்கியிருப்பார். மனமோ மகளின் ஆசையை நிறைவேற்றத் துடிக்க அதனாலேயே நீதிமன்ற அழைப்பு பார்த்ததும் எதாவது நல்லது நடந்துவிடாதா என்று சாமியம்மாவைத் தேடிச் சென்றார். அவர் பேசிய பேச்சோ மனதோடு உடலையும் சேர்த்து வதைத்தது.

“உங்க மகன் விவாகரத்து கேட்டிருக்கார் சாமியம்மா. கல்யாணம்ன்றது விளையாட்டு கிடையாது. உங்களுக்குக் கோபம்னா அதை என்கிட்டக் காட்டுங்க. வாழ வேண்டிய வயசுல வாழாமலே பிரிவதெல்லாம் ரொம்பவே கொடுமையானது. நீங்க மனசு வைத்தால் அவங்களை வாழவைக்க முடியும். இந்த விவாகரத்து வேண்டாம்னு உங்க பையன்கிட்ட சொல்லுங்கம்மா. வேணும்னா எத்தனை முறை வேணும்னாலும் உங்க கால்ல விழுறேன்” என்று கைகுவித்து அழுதபடி ராஜேஸ்வரி முன் நின்றிருந்தார் ராகினி.

ஹாஹா என சத்தமாகச் சிரித்தவர், “என்ன கால்ல விழுறியா? ஒரு ஈ காக்கா கூட இல்லாத இடத்துல வந்து கால்ல விழுறேன்னு சொன்னா, நான் பட்ட அவமானம் இல்லைன்னு ஆகிருமா? சொல்லு இல்லைன்னு ஆகிருமா?” என்று கத்த,

ராகினியோ பயத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்துவிட்டார். ராஜேஸ்வரி வாய்பேசுவது யாருக்கும் தெரியாததாகையால் அவரைப் பார்த்த ராகினி, ‘படங்கள்ல காண்பிக்குற வில்லிங்க தோற்றுவிடுவாங்க போல. இந்தம்மா வீட்டில் என் பொண்ணா? கூடவே கூடாது ராகினி’ என்றெண்ணியவருக்கு நினைவே மலைப்பாகயிருந்தது. அதையும் மீறி கண்முன் மகள் தெரிய வேறு வழியில்லாது அவர் காலில் விழுந்து, “உங்களால மட்டும்தான் பிள்ளைங்க வாழக்கையைக் காப்பாற்ற முடியம். விவாகரத்தெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க” என்றார்.

“விவாகரத்துக்கு ஏற்பாடு செய்ததே நான்தான்” என்றதில் ராகினி திகைத்துப் பார்த்தபடி எழ, “ஏய்! அதிர்ச்சியில் போயிராத. அப்புறம் உன் பொண்ணு அழுறதை எப்படிப் பார்ப்ப? உன் பொண்ணு சொன்னாளா தெரியலை?” என்று அன்பழகியின் ஜாதகத்தில் ஆரம்பித்து அனைத்தையும் சொல்ல,

மகளுக்குத் தெரியும் என்பதே அவரை வலிக்கச் செய்ய, இதைக்கேட்ட மகள் எந்தளவு மனதில் கஷ்டப்பட்டிருப்பாள் என்பதை உணர, “ஏன் இப்படி?” என்றார் கசந்த குரலில்.

“பட்ட அவமானம் லேசுப்பட்டதுன்னு நினைச்சீங்களா அம்மாவும்.. பொண்ணும்? என்னைத் தலைகுனிய வைத்த உங்களை நிம்மதியா வாழ விடலாமா? பெரிய வக்கீல்ன்ற பெயர்தான் உன் புருஷனுக்கு. சொந்தப் பொண்ணு வாழ்க்கையை சரி செய்ய முடியலை. நீங்க அன்புக்கு அடங்குனீங்க.. அந்த அன்பை மூலதனமா வைத்துக் காய் நகர்த்தினேன். நான்தான் செய்தேன்னு தெரியும். தெரிந்து என்ன பிரயோஜனம்? ம்.. என்மேல் கேஸ் போட முடியாது. ஏன்னா நான் பையனைப் பெத்தவளாச்சே!” என திமிராய்ப் பேசிக்கொண்டே செல்ல,

“முடிவா என்னதான் சொல்ல வர்றீங்க?” என்ற ராகினிக்கு இதற்கு மேல் அவரிடம் பேசிப் பிரயோஜனம் இல்லையென்பது புரிந்தது.

“ம்.. முடிவா? இப்போதைக்கு எதையும் முடிக்கத் தயாராயில்லை. உன் பொண்ணை முடிக்காம எதையும் முடிக்க மாட்டேன்” என்று ஆங்காரமாகப் பேச,

“அகங்காரம் அழிவுக்கு முதற்படி. கடவுள் சன்னிதானத்துல வைத்துச் சொல்றேன்.. என் பொண்ணு அவளுக்குப் பிடித்தவனோட ரொம்பவே சந்தோஷமா வாழ்வா. அதுவும் உங்க கண் முன்னாடியே நடக்கும். அதுக்கு இந்த அம்மனும் சாட்சி. உங்களால என்ன செய்ய முடியுமோ செய்துக்கோங்க” என்று கிட்டத்தட்ட சவால்விட்டு வந்திருந்தார் ராகினி.

“அம்மா! என்னை நினைத்துதான் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகுது. நான் எதையும் பெருசா எடுத்துக்கலைம்மா. நீங்க வருத்தப்படாதீங்க. உங்களை வைத்துதான் நாங்க” என்று கண்கலங்கச் சொன்னாள் மகள்.

“நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை நிரந்தரமா கொடுக்க முடியலைடா பொம்மு” என்றார் கவலைக்குரலில்.

“அம்மா.. ஆசைப்பட்டேன்னு சொல்ல நான் ஒண்ணும் காதலித்துக் கல்யாணம் செய்துக்கலை. அதை விடுங்கம்மா” என்க,

“ஆனா, உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்குன்றது எங்களுக்குத் தெரியாது நினைச்சியா? எப்படி விடச்சொல்ற?”

“உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாததுன்னு எதுவும் இல்லைன்னு தெரியும்மா. இனி அதெல்லாம் மறக்க வேண்டிய பக்கம்னு புரிந்த பின்ன வருந்தி என்ன செய்யப்போறோம். என்னையே நினைச்சி உங்க உடம்பை வருத்திக்காதீங்கம்மா. எங்களுக்காக ப்ளீஸ்மா” என்றாள்.

“உன் வாழ்க்கை பொம்மு? இப்படிக் கேள்விக்குறியா..” என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கண்கலங்கினார்.

“கொஞ்சம் டைம் கொடுங்கம்மா. உங்க விருப்பப்படியே நடந்துக்குறேன்” என்று தாய்க்கு வாக்குக் கொடுக்க,

“நிஜமாவா?” என்றார் கண்கள் மின்ன.

“சத்தியமாம்மா. எனக்கு நீங்கதான் முக்கியம். இந்த குடும்பத்தோட அஸ்திவாரம் நீங்க. பேஸ்மெண்ட் எப்பவும் ஸ்ட்ராங்கா இருக்கணும். டோண்ட் ஒர்றி மீ. பி ஹேப்பி” என்று புன்னகைத்துத் தாயை ஒருவழியாக அமைதியடையச் செய்து, தன் அறைக்குள் வந்ததும் தலையைப் பிடித்துக்கொண்டு அமர, நெஞ்சில் எழுந்த வலியைத் தொண்டைக்குள் நிறுத்த மூச்சு விடவும் திணறிப்போனாள். எந்த முடிவும் எடுக்க முடியாமல், விதியின் வழியும் செல்ல முடியாமல், நடுக்காட்டில் சிக்கிய நிலை அன்பழகிக்கு.

இதுவரை எதையும் எதிர்பார்த்ததில்லை. கேளாமலேயே அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோரும், சகோதரர்களும் அவளுக்கு. ‘இந்த ட்ரஸ் உனக்கு அழகாயிருக்கும் பொம்மு. இந்தப் படிப்பு படிடா, உன் குணத்துக்கு ஏற்றதாயிருக்கும்’ என்று அவளுக்குப் பொருத்தமானதாகக் கொடுத்தவர்கள், திருமண விஷயத்தில் தவறியது விதியின் சதியோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
தன்னை மீறி வரும் கண்ணீரைத் தடுக்க முடியாமல் முகம் மூடியபடி மெல்ல அழுகையில் குலுங்கினாள். ஏனோ தன்னை அழ வைத்து வேடிக்கை பார்க்கும் கணவன் மேல் கோபம் கோபமாக வந்தது. ‘விவாகரத்துத் தர முடியாதுன்னு சொன்னா என்ன செய்வான்?’ என்ற எண்ணமும் எழாமலில்லை. ஆனால், மண்டபத்தில் தானே பிரிவுக்குச் சம்மதம் தெரிவித்தது நினைவில் வர, தன்னைத்தானே நொந்து கொண்டாள் அன்பழகி.

“இது செந்தூரன் வீடுதானே?” என்ற கடினக்குரலில்,

காலையிலேயே தங்கள் வீட்டு வாசலில் கேட்ட அடியாட்கள் போலிருந்த அந்த முரட்டு ஆட்கள் நால்வரையும் கண்ட சேகருக்குப் பயம் எழ, “யார் நீங்க?” என்றார்.

“முதல்ல நாங்க கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்க? இது செந்தூரன் வீடுதான?” என்றனர்.

“ஆ..ஆமாம் சார். ஏன் கேட்கறீங்க?”

“அவனைக் கூப்பிடுங்க” என்றனர் அதிகாரமாக.

“அவன் இல்லை சார். இரண்டு நாளா வீட்டுக்கும் வரலை” என்றார்.

“சின்ன மிரட்டலுக்கேப் பயந்துட்டானா? அப்ப வேலை சட்டுன்னு முடிஞ்சிரும். சார் பையன் எங்கண்ணன்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா வாங்கின கடன் வட்டியோட சேர்த்து எழுபது லட்சமா நிற்குது.”

“என்னது? எழுபது லட்சமா?” என்றவருக்கு இதயம் வெடிக்காதது ஒன்றுதான் குறை.

“அட என்ன சார் நீங்க? இதுக்கே வாயைப் பிளந்தா எப்படி? அவன் கல்யாணத்தோட ஒரு பத்து லட்சம் வாங்கியிருக்கான். வட்டி கட்டலை. கேட்க போன் போட்டா எடுக்க மாட்டேன்றான். மீறி அவனைப் பிடித்துக் கேட்டா, வட்டி கொடுக்கிற நிலையில் நான் கிடையாது. கொஞ்ச நாள் காத்திருங்க முடிந்தால் தர்றேன்னு திமிரா பேசுறான். எங்கண்ணனைப் பற்றி அவனுக்குத் தெரியாதுன்னு நினைக்குறேன். நான் வந்ததால அமைதியா பேசிட்டிருக்கேன். இதுவே எங்க அண்ணன் வந்தா அடுத்த செகண்ட் எல்லாத்தையும் பைசல் பண்ணிட்டுப் போயிட்டேயிருப்பார்.”

“அப்படில்லாம் எதுவும் செய்திராதீங்க சார்” என்றவருக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.

“சரி அவனுக்கு நீங்க என்ன வேணும்?”

“சி..சித்தப்பா சார்.”

“நல்லதா போச்சி சித்தப்பா சார். அந்த பத்து லட்சத்தையும் சேர்த்து, உங்க பையன் கடனை நீங்க அடைச்சிருங்க. இல்லன்னா நிறைய சேதாரமாகும்” என்றனர் மிரட்டலாக.

“எண்பது லட்சத்தை நான் அடைக்குறதா? என்ன விளையாடுறீங்களா? என்கிட்ட அவ்வளவு பணமெல்லாம் கிடையாது. நீங்க அவனையே கேளுங்க” என்றார்.

“போனை எடுத்தா கேட்காம இருப்போமா? வேற வழியில்லாமல்தான் வந்தோம். ஏன்டா ராசு இந்த வீடு எவ்வளவு தேறும்” என்றதில் சேகர் பதறி, “கடனுக்கு ஈடா வீடெல்லாம் தரமுடியாது” என்று முந்தினார்.

அவரைக் கண்டுகொள்ளாது, “வீடு ஒரு எழுபத்தைந்து தேறும்ணே. மீதி ஐந்துக்கு வேற எதாவது தேறுதா பார்க்கலாம்” என்றான் ராசு.

கேட்டுக் கொண்டிருந்த சேகருக்கு சுகர் ஏகத்துக்கும் எகிறியது. இந்த வீட்டிற்காகத்தானே அவரும் தவமிருப்பது. ‘வீடு நமக்கில்லையா?’ என்ற நினைவே பயத்தைக் கொடுத்தது.

“சரிங்க சித்தப்பா சார். இன்னும் ஒரு வாரத்துல பணம் வரலைன்னா மறுநாள் இந்த வீடு எங்களுக்குச் சொந்தம்” என்று அவர்கள் செல்ல, வேகமாக செந்தூரனுக்கு அழைக்க சிலபல அழைப்புகளைப் புறக்கணித்தே கைபேசியை எடுத்தான்.

“டேய்! என்னடா பண்ணி வச்சிருக்க? நீ வாங்கின கடனுக்கு வீட்டை எடுத்துக்குவோம்னு சொல்றாங்க. வந்து என்னன்னு பார்த்து சரி செய்” என்றார்.

“அது சரிசெய்ய முடியாது சித்தப்பா. என்னவோ பண்ணட்டும் போங்க” என்றான் விட்டேற்றியாய்.

“குடிகாரன் மாதிரி உளறாதடா. வீட்டோட வேல்யூ தெரியுமா உனக்கு? எப்படிடா இந்தளவு கடன் வாங்கின? அதை என்ன செய்த?” கோபத்தில் கத்தினார்.

“கூல் சித்தப்பா. நான் படிக்கிறப்ப வாங்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமா வாங்கி, அந்த கேஸ் டைம்ல நிறைய ஆகிருச்சி. அடுத்து பவிக்கும் தம்பிகளுக்குமான படிப்பு மற்றும் இதர செலவுன்னு கடன் எகிறிப்போச்சி. ஒரு லட்சத்துக்கு மாத வட்டி மூவாயிரம் ரூபாய்னா, எண்பது லட்சத்துக்கு கணக்குப் பண்ணிக்கோங்க. இதுவே ரொம்ப கம்மி வட்டிதான். மத்த இடத்தில் ஐந்திலிருந்து பத்து ரூபாய்தான் வட்டி விகிதமே.”

“என்னோட தொழில்ல லாபம் வர்றதே எப்பவோ ஒருமுறைதான். அப்படியிருக்கிறப்ப வட்டியை எங்க கட்டுறது? உங்ககிட்ட இருந்தா பாருங்க. இல்லைன்னா உங்க மதிப்பிற்குரிய அண்ணியார்கிட்டக் கேளுங்க. என்னால ஐந்து லட்சத்துக்கு மேல ரெடி பண்ண முடியாது சித்தப்பா. என்னைக் கேட்டா வீட்டை அவங்ககிட்டேயே கொடுத்திருறது நல்லது. இன்னும் ஐந்து நாளைக்குள்ள டைவர்ஸ் கேஸ் வருது. அதுக்கு பிரிப்பேர் ஆக வேண்டாமா? போனை வச்சிருறேன் சித்தப்பா” என்று வைத்தவனுக்குள் ஒரு வெற்றிப்புன்னகை.

உடனே அண்ணிக்கு அழைத்தவர் நடந்ததைச் சொல்ல, “அப்படில்லாம் இருக்காது தம்பி. டைவர்ஸ் கேஸ் முடிஞ்சதும் வீட்டைப்பற்றி பார்த்துக்கலாம். மீறி கேட்டா இரண்டு மாசம் டைம் கேட்டு பின்ன பேசிக்கலாம்” என்று முடித்திருந்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம், “செந்தூரன் சார்! நீங்க சொன்ன மாதிரியே உங்க சித்தப்பாகிட்ட பேசிட்டோம். மனுசனுக்கு வீட்டை விட மனசேயில்லை. இன்னும் ஒருவாரம் டைம் கொடுத்திருக்கோம். சீக்கிரமே எதாவது முடிவெடுப்பார்” என்றான் எதிரில் உள்ளவன்.

“உங்க உதவிக்கு நன்றி ப்ரதர். அமௌண்ட் உங்க அக்கௌண்ட்கு போட்டுட்டேன் பாருங்க” என்று வைத்தவனுக்கு சொல்லமுடியா கோபம்.

அதே நேரம் மருத்துவமனையில், “வணக்கம் மேடம்” என்று தன் முன் நின்றவனைக் கண்டு, “உட்காருங்க சார். யாருக்கு என்ன பிரச்சனை?” என்றாள் அன்பழகி.

“என் நண்பன் ஒருத்தன் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கான். தனக்காகவும் வாழ முடியாமல், மத்தவங்களுக்காகவும் வாழ வழியில்லாம ரொம்பவே திணருறான் மேடம். சில நேரம் வாழவே பிடிக்கலைன்னு சொல்லி அழுறான். ரொம்ப நல்லவன் மேடம். சில இடங்கள்ல எப்படி நடந்துக்குறதுன்னு தெரியாம நிறைய இழந்துட்டான். அதீத குழப்பத்துல எங்க பைத்தியமாகிருவானோன்னு பயமாயிருக்கு மேடம். நீங்கதான் அவனைக் குணப்படுத்தணும்” என்றவன் குரலில் நண்பனை மீட்பதற்கான வேண்டுதல் அதிகமிருந்தது.

“அமைதியாயிருங்க சார். உங்க நண்பரை எங்க? உள்ள வரச்சொல்லுங்க. பேசி சரி செய்யப்பார்க்கலாம்” என்றாள்.

“அ..அது இல்லை மேடம். நான் கூப்பிட்டதுக்கு, முழு பைத்தியமானதும் எங்க வேணும்னா கூட்டிட்டுப் போ சொல்லிட்டான். அவன் உறவுகளும் இவனைக் கண்டுக்குறதில்லை. சமீபமா நடந்த சம்பவம் அவனை ரொம்பவே பாதிச்சிருக்கு. சில நேரம் மூர்க்கமா நடந்துக்குறான். அவனுக்குள்ள நிறைய குற்றவுணர்ச்சியிருக்கு. என்ன செய்யுறது புரியாமல் அவன்கிட்டச் சொல்லாமல்தான் உங்ககிட்ட வந்தேன் மேடம்” என்றான்.

“ம்ம்.. ஒண்ணு பண்ணுங்க சார். இது மல்ட்டி ஸ்பெஷhலிட்டி ஹாஸ்பிடல். சோ, யாருக்காவது தெரிந்தவங்களுக்கு அடிபட்டுருக்குன்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்திருங்க. இங்க எங்க சீனியர் டாக்டர் ரஹ்மான் சார் இருக்கார். அவர்கிட்ட பேச ஆரம்பிச்சா போதும் எனக்கு ட்ரீட்மெண்ட் கொடுங்கன்னு உங்க நண்பர் வாயாலயே சொல்ல வச்சிருவார். அதுக்கப்புறம் நாங்க பாhத்துக்குறோம்.”

“தேங்க்ஸ் மேடம். ரொம்ப பயந்துட்டே வந்தேன். என் பிரச்சனையை சில நிமிடத்துல தீர்த்துட்டீங்க” என்றான் மனதார.

“இது என்னோட கடமை சார். உங்க பெயர் சொல்லுங்க? ரஹ்மான் சார்கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட் போட்டு உங்களைப் பற்றி சொல்லி வைக்குறேன்” என்றாள்.

“என் பெயர் ஆதிகேசவன் மேடம். ஒரு பிரைவேட் கம்பெனியில் சீஃப் டெக்னீஷpயனா ஒர்க் பண்றேன்.”

“ஒரு நிமிடம்” என்றவள் டாக்டர்.ரஹ்மானிற்கு தொடர்பு கொண்டு கேஸைப் பற்றிச் சொல்லி பேசி வைத்தவள், “ஈவ்னிங் ஐந்து மணிக்கு வந்திருங்க சார். நான் இங்கதான் இருப்பேன். இல்லைன்னாலும் ரஹ்மான் சார் நேம் சொல்லி நேரடியா அவரை கான்டாக்ட் பண்ணிக்கோங்க” என்றனுப்பினாள்.
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
பவி கல்யாணம் பண்ணது அழகி தம்பி அதியை, பைத்தியகார நோயாளி செந்தூரன். சரிதானே ஆத்தர் ஜீ.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
பவி கல்யாணம் பண்ணது அழகி தம்பி அதியை, பைத்தியகார நோயாளி செந்தூரன். சரிதானே ஆத்தர் ஜீ.
ஜீ நீங்க எங்கயோ போயிட்டீங்க.
 
Top