• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
9



காலையில் பூரணியைப் பார்த்த ஐஸ்வர்யா, “முகம் பளிச்சின்னு இருக்கு. டெஸ்ட் செய்தியா பூரணி?” புருவம் உயர்த்தி கண்சிமிட்டிக் கேட்க, நடந்ததை பூரணி மேலோட்டமாக சிறிது வெட்கத்துடன் சொல்ல... “பார்றா! அப்படி இப்படின்னு பெரிய ரொமான்ஸே நடந்திருக்கும் போல” என்றாள் கிண்டலாக.

“அக்கா” என்றவளுக்கு இன்னுமின்னும் வெட்கமே!

“அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மாத்தி உன்னோட குடும்பம் நடத்த வச்சிரு பூரணி” என்றாள் அக்கறையாய்.

அதில் அதிர்ந்து, “என்ன சொல்றீங்க அக்கா? உங்க கொழுந்தன் நார்மல் கிடையாது. அதை மிஸ்யூஸ் பண்ற மாதிரி நடக்கிறது தப்பு. நானும் தப்பானவள் கிடையாது” என கண்கலங்க சொல்ல,

“ப்ச்.. பூரணி அவர் உன்னோட ஹஸ்பண்ட். அதை ஏன் தப்பாப் பார்க்கிற? அவரைப்பற்றிய உண்மை தெரிஞ்சும் நீ விலகலைன்னும் போதே வசீகரன் உன்னை வசீகரிச்சிருக்கார்னு தெரியுது. அப்புறமென்ன? அவர் குணமாகவும் சான்ஸ் இருக்கே?” என்றாள் கேள்வியாக.

“எனக்கு அவங்களைப் பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும். அதுக்காக இந்த சூழ்நிலையில்.. தப்புக்கா. அவங்களுக்கு மனநிலை சரியானதும் என்னைப்பார்த்து யார் நீன்னு கேட்டருவாங்களோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயந்துட்டிருக்கேன். நமக்கு ரொம்பப் பிடித்த ஒருத்தர்கிட்ட அந்த வார்த்தையைக் கேட்கிறதைவிட நரகம் எதுவுமில்லைக்கா. இங்க பிடிக்காதது நடந்தாலும் கண்டுக்காத மாதிரி போறதுக்கு என் வசீகரன் மட்டும்தான் காரணம்.”

“பிடிக்காததுன்னு எதைச் சொல்ற பூரணி?” மாமனார் செயலை உணர்ந்துவிட்டாளோ என்ற ஐயம் ஐஸ்வர்யாவிற்கு.

“அ..அது அத்தை இப்ப முன்ன மாதிரி பேசுறதில்லைல. அதைச் சொல்ல வந்து ஏதேதோ சொல்றேன்” என்றாள் திணறலாக. அவளுக்கு குலசேகரனைப் பற்றி சொன்னால் முதலில் நம்புவார்களா என்ற பயமே அவளிடம்.

“ம்.. புரியுது. அப்புறம்?”

“உங்க கொழுந்தன் குணமாகி என்னை மனைவியா ஏத்துக்குற வரை காத்திருப்பேன். அப்படி ஒண்ணு நடக்கவே இல்லைனாலும் கடைசிவரை கூடவேயிருந்து என் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்குவேன் அக்கா” என்ற பூரணியின் கண்களில் கண்ட வசீகரன் மீதான காதலில் பிரமித்துப் போனாள் ஐஸ்வர்யா.

அவளின் உதடுகளோ “கிரேட்” என்றது. “உனக்காகனாலும் வசீ சீக்கிரமே குணமாகி வருவார் பூரணி” என்க, பதிலுக்கு மென்புன்னகை மட்டுமே பரிபூரணியிடம்.

ஏனோ தாயாய் இதுவரை தாங்கிய ஆனந்தி, மாமியார் அவதாரமெடுத்து பூரணியை ஒருவழி செய்துகொண்டிருந்தார்.

இரவு நெருங்க நெருங்க மனதினுள் இனம்புரியா பயம் எழுந்தது பூரணிக்கு. என்னவென்று உணரமுடியா ஒரு வலியை அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார் குலசேகரன். கணவன் வந்ததும் ஐஸ்வர்யா அவளின் அறைக்குள் சென்றுவிட, மனைவி கொடுத்ததாகச் சொல்லி குலசேகரன் பால் தர, சில நிமிட யோசனையுடனே வாங்கிய பூரணி அறைக்குள் செல்ல, கணவனுக்குக் கொடுக்க நினைத்தவள் அவன் உறங்கியதால் தானே குடித்தாள்.

“மறுநாள் காலையில் ஐஸ்வர்யா அக்கா என்னை ரொம்ப தப்புத்தப்பா, கிட்டத்தட்ட என்னை என் கேரக்டரை தப்பாப் பேசினாங்க சண்மு. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கலை. அத்தையும் அவங்களோட சேர்ந்து ஏதேதோ பேசினாங்க. இப்பவரை அதற்கான அர்த்தம் புரியலை. ஆக மொத்தம் நானே வீட்டைவிட்டுப் போகிற அளவு பேசி, நானும் என் வசீகரனை விட்டுட்டு வீட்டுக்குப் போயிட்டேன். ஒரே நைட்ல என்ன நடந்ததுன்னு இப்பவரை தெரியலை சண்மு.”

அதேநேரம் ஐஸ்வர்யா வசீகரனிடம், “ஒரே நைட்னு ஈஸியா சொல்லிரலாம் வசீ. அந்த நேரம் நான் அந்த முடிவெடுக்கலைன்னா ஒரு பெண்ணோட வாழ்க்கை கெட்டு, நம்ம குடும்ப மானமும் போயிருக்கும்” என்றாள்.

“அண்ணீ!” என்றான் அதிர்வாய்.

“உங்களைப் பிடிக்கும்ன்ற ஒரே காரணத்துக்காக உங்க நிலை தெரிந்தும் உங்களை விட்டு விலகலை அந்தப்பொண்ணு. அப்பேர்ப்பட்ட பொண்ணுக்கு நாம என்னல்லாம் செய்திருக்கணும் வசீ? ஆனா, உங்கப்பா... ச்சீய் அந்தாள் மனுஷனே கிடையாது வசீ. மருமகளைப் போய்... அத்தை சொன்னதா சொல்லி பால் கொடுத்தப்ப சந்தேகம்தான். ஏன் பூரணியுமே அவருடைய அசிங்கமான குணத்தைக் கண்டுபிடிச்சிருக்காள்னு, பால் வாங்காம நின்ன அந்தத் தயக்கத்துல உணர்ந்தேன்.”

குலசேகரன் திரும்பத் திரும்பப் பாலைக் குடிக்கச் சொல்ல, பூரணி மறுக்க, ஒரு கட்டத்தில் “உன் அத்தைதான் கொடுக்கச் சொன்னா. நீயே கேள்” என்றவர் கீழே நின்றிருந்த மனைவியிடம் மேலிருந்தபடியே, “ஆனந்தி உன் மருமகள் பாலை வேண்டாம் சொல்றா” என்றார் சத்தமாக.

ஆனந்தியோ, “பாலை வேண்டாம் சொல்லாத. இந்த வயசுல குடிக்காம, எந்த வயசுல குடிக்குறது. முதல்ல மாமாகிட்டயிருந்து பாலை வாங்கு” என்று அதட்டலாகச் சொல்ல, சில நாட்கள் கழித்தான அவரின் கரிசனையில் உடனே வாங்கிக்கொண்டாள்.

நடந்தது என்னவெனில் ஆனந்தி பேரன் சரியாகச் சாப்பிடவில்லையென்று தனக்கும் பேரனுக்குமாகப் பாலை ஆற்றிக் கொடுக்கப்போக, அதைத் தானே கொடுப்பதாய் வாங்கி மனைவியை அனுப்பி பூரணியிடம் கொண்டு வந்து கொடுத்தார் குலசேகரன். அவள் மறுக்கவும் மனைவியிடம் சொல்ல, பெரிய மருமகள் வாங்கவில்லை என்றதும் ஐஸ்வர்யா வாங்காதது கோபம் வர திட்டி வாங்க வைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் பூரணியும் வாங்கி உள்ளே செல்ல வசீகரன் உறங்கியிருக்க, அதைத் தானே குடித்து கணவன் அருகில் படுத்துக்கொண்டாள்.

ஐஸ்வர்யாவிற்கு ஏதோ தவறாகப்பட்டது. உள்ளேயும் வெளியேயுமாக நடந்து கொண்டிருக்க, “என்னாச்சி ஐஸ்மா? ஏன் படபடப்பா நடந்துட்டிருக்க?” என்றான் சுவீகரன்.

சட்டென்று கணவனைக் கட்டிக்கொண்டவள், “எனக்கென்னவோ பயமா இருக்குங்க” என்றாள் கலங்கிய குரலில்.

“பயமா? நான் இருக்கையில் என்ன பயம்டா?”

“அ..அது உ..உங்...” ‘உங்க அப்பாவால்’ என சொல்ல வந்தவள், கணவன் நேரிலேயே தெரிந்துகொள்ளட்டும் என்றெண்ணி, “உங்களைப் பற்றித் தப்பா ஒரு கனவு கண்டேன். அதான் கொஞ்சம் பயமாயிருக்கு” என மாற்றினாள்.

மனைவியின் தலை வருடியபடி, “பகல் கனவா?” என்க, ‘ஆம்’ என்றாளவள்.

“அதெல்லாம் பலிக்காதுமா. நான் உன் கூடவே இருக்கேன்ல. நிம்மதியா படுத்துத் தூங்கு” என்றான்.

ஏனோ கதவைப் பூட்டாது அறைக்குள்ளிருந்த மின்விளக்கை அணைத்து அவ்வப்பொழுது எதிர் அறையையே பார்த்திருந்தாள் ஐஸ்வர்யா. சற்று முன்னர் வசீகரன் அறையை உள்ளே பூட்டிக்கொள்ளச் சொல்வதற்காக கதவைத் தட்ட திறக்கவில்லை என்றதும் உள்ளே நுழைந்தாள்.

வசீகரன் கைவளைவில் தலைவைத்து இடுப்பில் கைபோட்டு சாய்ந்து படுத்திருந்த பூரணி கண்ணில்பட, ஓர் நிறைவு ஐஸ்வர்யா மனதில். அவர்களின் அக்கோலத்தைக் கலைக்க மனமில்லை எனினும் வேறு வழியில்லாது அவளை எழுப்ப, எழவில்லை அவள். யோசனையுடன் வசீகரனை எழுப்ப அவனுமே எழவில்லை. ‘ஏன் இந்த பூரணி இப்படித் தூங்குறா? இப்படித் தூங்குற ஆள் கிடையாதே’ என்று சுற்றிலும் பார்க்க அங்கிருந்த காலி பால் டம்ளர் கண்ணில்பட, ‘கடவுளே! இதுல எதுவும் கலந்து கொடுத்துட்டாரா?’ என்ன செய்வதென்று புரியா நிலையில், விளக்கை ஒளிரவிட்டு கதவைச் சாற்றிவிட்டு தங்களறைக்கு வந்தவள் தூங்காதிருந்தாள். அப்படி வந்த தூக்கத்தையும் ஐஸ் கட்டியின் உதவியுடன் கலைத்துக் காவல் காத்தாள்.

ஒருமணி அளவில் வந்தார் குலசேகரன். மகன் அறையின் வெளிப்பக்க தாழ்ப்பாளை விலக்கியதில் ஐஸ்வர்யா உஷாராகி வேகமாக எட்டிப்பார்த்தவள் அதிர்ந்து, அதைவிட வேகமாகக் கணவனை எழுப்ப, மனைவியின் உலுக்கலில் அடித்துப் பிடித்து எழுந்தவன், “எ..என்னாச்சி ஐஸ்? தூங்காம என்ன பண்ற?” என்றான்.

“தூக்கத்தை அப்புறமா பார்த்துக்கலாம். இப்ப என்னோட வாங்க” என்று மெல்ல எதிர் அறைக்கு அழைத்துச் செல்ல... “இந்நேரத்துல தம்பி அறைக்குப் போறது தப்பு ஐஸ். என்னதான் மனநிலை சரியில்லாதவன்னாலும் அவங்க தனியறைக்குப் போறது சரியில்லை” என்று எச்சரித்தான் சுவீகரன்.

“இப்பப் பார்க்கப்போற தப்பைவிடப் பெருசு இருக்கப்போறதில்லை. முதல்ல அதைப் பார்க்கலாம் வாங்க” என்று வசீகரன் அறைக்கதவைத் திறக்க திறந்துகொண்டது. மனதுக்குள் ஒருவித ஆசுவாசம் ஐஸ்வர்யாவுக்கு. எங்கே உள்ளே கதவு பூட்டியிருக்குமோ என்று பயந்திருந்தவளாயிற்றே!

குலசேகரன் உள்ளே கதவைப் பூட்டாது போக, வெளியே வந்தவர்களோ என்ன செய்கிறார் என்று வேவு பார்க்க, பெற்ற தகப்பனின் செயலில் சுவீகரனுக்குத்தான் மிகுந்த அசிங்கமாயிருந்தது.

‘நன்றாகத்தானே இருந்தார். எங்களை வளர்த்து ஆளாக்கியது முதல், இதோ கட்சியிலும் நல்ல பெயரெடுத்துதான் இருக்கிறார். அண்ணனுடன் சேர்கையில் மட்டும் சில தப்புகள் செய்வார்தான், ஆனாலும் பெண்கள் விஷயத்தில் தப்பில்லாத மனிதராகிற்றே! இதே வேறு பெண்ணிடம் செல்பவர் என்றால் சீ..போ என்று விரட்டிவிடலாம். சொந்த வீட்டில்.. சொந்த ம...’ “ச்சே..” என்றான் சத்தமாகவே.

கணவனின் ‘ச்சே’ சத்தம் கேட்டு, “எத்தனை கோபமிருந்தாலும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க. இப்ப நமக்கு பூரணி பாதுகாப்புதான் முக்கியம். அதே நேரம் நாம நேரடியா இறங்கவும் கூடாது” என்றாள்.

“ஏன் ஐஸ்? இப்பவே அவர் முன்ன போய் சட்டையைப் பிடித்துக் கேட்கலாம்” என கோபம் குறையாது பல்லைக்கடித்து மென்குரலில் கேட்டான்.

“உணர்ச்சிவசப்பட இது நேரமில்லைங்க. அமைதி முக்கியம்” என்று கணவனின் கைபிடித்து ஆறுதலளித்து உள்ளே பார்க்க, மகனையும் மருமகளையும் பார்த்தவாறு அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார் குலசேகரன். வசீகரன்-பரிபூரணி ஐஸ்வர்யா பார்த்த அதே கோலத்தில்தான் இருந்தனர்.

தப்பென்று உறுத்துவதாலோ என்னவோ அந்த ஏசியிலும் வியர்க்க, அதைத் துடைத்தபடி நடந்தவர், என்ன நினைத்தாரோ மகனின் தலைவருடி மருமகளருகில் வந்தவர் அவள் தலையில் கை வைக்கப்போகையில், வசீகரனின் கை தற்செயலாக அவர் கையைத் தட்டிவிட்டு மனைவியவளைத் தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டது.

குலசேகரனுக்கு சில நொடிகளில் இதயத்துடிப்பு அதிகரிக்க வெளியே செல்ல நினைக்கையில், அதற்கு மேல் பொறுக்காது கணவனை தங்கள் அறைக்கு வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு, “பூரணி” என்று குரல் கொடுத்தபடி உள்ளே வந்தாள் ஐஸ்வர்யா.

குலசேகரனுக்கு பயத்தில் முகம் வெளிறிப்போக கதவருகே போய் மறைந்து நின்றவர், ஐஸ்வர்யா உள்ளே வர, அவர் வெளியே சென்றுவிட்டார். இதை எதிர்பார்த்துதானே அவளும் உள் நுழைந்தது.


அதன்பின் சுவீகரன் இரு அறைக்கும் நடுவில் படுக்க, கணவன் மனைவி இருவரும் இரவெல்லாம் காவலிருந்தனர். அப்பா என்ற உறவே வெறுத்துப்போன சுவீகரன் தாய்க்காகவும், தம்பிக்காகவும் அங்கேயிருக்க முடிவெடுத்திருந்தான்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“அன்னைக்கு நைட்டே பூரணியை வீட்டைவிட்டு அனுப்புற முடிவெடுத்துட்டேன் வசீ” என்றாள்.

“ஏன் அண்ணி? அதனால உங்களுக்கும் கெட்ட பெயராகிற்றே?”

“அதைச் செய்யலைன்னா அந்தப்பொண்ணு இன்னும் அசிங்கப்படுற மாதிரி உங்கப்பா நடந்துக்கிட்டா? எனக்கு அவளோட பாதுகாப்பு மட்டுமே முக்கியம்னு பட்டது” என்றாள்.

மறுநாள் காலை நேரங்கழித்து சிறு தலைசுற்றலுடன் எழுந்த பூரணி குளியலறை சென்று முகம் கழுவி வர வசீகரன் எழுந்திரிக்காமலிருக்க, கணவனருகில் சென்றமர்ந்து தலைகலைத்து நெற்றியில் முத்தம் வைத்து, “எழுந்திரிங்க குட்டிக்கண்ணா. நேரமாகிட்டிருக்கு. காஃபி குடிக்கப் போகணும்ல. எழுந்து பல் தேய்ச்சிட்டு வாங்க” என்று எழுப்பி அமரவைக்க, “கொஞ்ச நேரம் பரி” என்று மறுபடியும் படுத்துவிட்டான்.

“கேடி வசீகரா!” என அவன் முகம் வருடி நெற்றியில் முத்தமிட்டுப் புன்னகையுடன் எழுந்து வெளியே வர, “நீ இப்படிப் பண்ணுவேன்னு நினைக்கவேயில்ல பூரணி” என்ற ஐஸ்வர்யாவின் குரலில் அதிர்வுடன் புரியாது பார்க்க, “ஏன் இப்படிப் பண்ணின?” என்று ஐஸ்வர்யா கேட்க,

“அக்கா! எனக்கு ஒண்ணும் புரியலை. நான் என்ன பண்ணினேன்னு கேட்குறீங்க?”

“ஒண்ணுந்தெரியாத மாதிரி பேசாத பூரணி. அந்தாள்.. அதான் நம்ம மாமனார் உரசுறான்னு தெரிஞ்சும் யார்கிட்டேயும் எதுவும் சொல்லாம இங்க இருக்குறன்னா அதை ரசிக்கிறியா நீ?” என்றாள் பூரணி மேல் பழி சுமத்தி.

“அக்கா! என்ன பேசுறோம்.. யார்கிட்டப் பேசுறோம்னு யோசிச்சிப் பேசுங்க. உங்களுக்கு என்னைத் தெரியாதா? அப்ப அவரைப்பற்றி உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு? இருந்தாலும் மாமனார் மேல ரொம்பப் பாசம்போல?” என்றாள் நக்கலாக.

“ஏய்! நீ பேசுறது வேற அர்த்தம் கொடுக்குது. தப்பாப் பேசின...” என விரல்நீட்டி எச்சரித்தாள் ஐஸ்வர்யா.

“ஓஹ்.. நீங்க பேசினா தப்பில்லை. நாங்க பேசினால் தப்பா? என்ன கொடுக்கிறோமோ அதுதான் திரும்பக் கிடைக்கும்” என்றாள் அழுத்தமாக.

“ஓ.. அப்ப நீ தப்பில்லைன்றியா? நீ சரியில்லைடி. சரியானவளாயிருந்திருந்தா இந்நேரம் இந்த வீட்டைவிட்டுப் போயிருப்ப. இவ்வளவு நடந்தும் இங்க இருக்கன்னா...” பூரணியை கேவலமாக ஒரு பார்வை பார்த்து, “அசிங்கமாயில்லை” என்று வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து மொத்தமாக அவளை அசிங்கப்படுத்தினாள்.

சட்டென்று அடிக்கக் கை ஓங்கிய பூரணி, பின்னர் கையைக் உதறி கண்மூடித் தன்னை நிதானித்தவள், “அசிங்கமாதான் இருக்கு... இப்படிப்பட்ட குடும்பத்துல மருமகளா வந்து மாட்டிக்கிட்டதை நினைத்து. அசிங்கமாதான் இருக்கு... இது என்னோட குடும்பம்னு எண்ணியதை நினைத்து. அசிங்கமாதான் இருக்கு... இதுவரை உங்களை நல்லவள்னு நினைச்சதை நினைத்து. இதைவிட அசிங்கம் ஒரு பொண்ணுக்கு வேணுமா என்ன? ம்... நான் இங்கே இருக்கிறதுக்கு ஒரே காரணம் என் வசீகரன் மட்டும்தான். அது உங்களுக்குத் தெரிஞ்சிருந்தும்...” மூச்சை இழுத்து நிதானமாக விட்டவள், “ப்ச்.. சொல்றதுக்கு எதுவுமில்லை” என்றவள் குரலில் கோபத்தை அடக்கும் பாவம்.

“ஹா.. உன் வசீகரனா? பையன் தெளிவானா உன்னை யார்னே தெரியாதுன்னு நீதான சொன்ன?” என்றாள் வார்த்தைகளில் கத்தி கொண்டு.

‘ஏன் இப்படி? உனக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்?’ என்பதாய் கண்கலங்க ஐஸ்வர்யாவைக் காண, ஐஸ்வர்யாவின் ஏளனம் நிறைந்த விழிகளோ நெஞ்சை அறுத்தது.

‘இதெல்லாம் உனக்காக மட்டும் பூரணி!’ என நினைத்து எந்த இடத்திலும் தான் சிறிதும் இளகிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் ஐஸ்வர்யா.

“என்ன பிரச்சனை ஐஸ்வர்யா?” அங்கு வந்த ஆனந்தியின் கேள்வி பெரிய மருமகளிடமும், பார்வை சின்ன மருமகளிடமும் இருந்தது.

அவர் வரவை ஐஸ்வர்யா எதிர்பார்த்திருக்கவில்லை. இதோ வந்து என்னவென்று கேட்கையில் என்ன சொல்வதென்று திணறியவள், அவர் இருப்பதும் ஒருவகையில் நல்லது என்றெண்ணி, “அ..அது எப்படி சொல்றது தெரியலை அத்தை. இந்தக் குடும்பம் இவளுக்கு செட்டாகாது. இவளோட நடவடிக்கை சரியில்லை” என்று வாயில் வந்ததை உளறிக்கொட்டினாள்.

“அக்கா!” என்று பரிபூரணி அதட்டலிட... அதைக் கண்டுகொள்ளாது, “என்னமா சொல்ற?” என்றார் ஆனந்தி.

“என்னால விளக்கமா எல்லாம் சொல்ல முடியாது அத்தை. ஒண்ணு மட்டும் சொல்றேன்.. எதுவும் கேட்காம இவளை அனுப்பிருங்க. இல்லை நான் எங்கம்மா வீட்டுக்குப் போயிருவேன்” என கிட்டத்தட்ட மிரட்டினாள்.

ஏனோ கணவன் சொன்ன ‘சின்ன மருமகள் சரியில்லை. அவளின் பார்வையில் கள்ளத்தனம் இருக்கிறது. இன்னுமா பையனைப்பற்றித் தெரியாமல் இருப்பாள். இருந்தும் இங்கயிருக்காள்னா நீயே யோசிச்சிக்கோ’ என்றதோடில்லாமல் இன்னுமே சிலதைச் சொல்லியிருக்க, அதுவுமில்லாமல் ஸ்வாதியிடம் பூரணி நடந்து கொண்ட விதம், அதன்பின்னும் அவள் சின்ன மாமியாருக்கு சொன்ன தவறான போதனை வேறு கோபத்தைக் கூட்டியிருந்ததை தன் வார்த்தையாக்கி அவளிடம் கொட்டினார்.

“கஷ்டப்பட்ட பொண்ணு. குடும்பம் சரியில்லைனாலும், பொண்ணு குறையில்லாதவள் சேற்றில் முளைத்த செந்தாமரைன்னு நினைச்சேன். ஆனா, நீ.. அவங்களையெல்லாம் விட மேலான புதைகுழின்னு இப்பதான் தெரியுது. உன்கிட்ட என் பையன் இருந்தான்னா கடைசிவரை குணமாகவே மாட்டான். அவனை நீ...”

“போதும் அத்தை போதும். உங்க பையனைப்பற்றிய உண்மை எனக்குத் தெரியும்னே உங்களுக்குத் தெரியாது. இருந்தும் என்மேல் பழிபோடுறீங்க? எனக்கு அதைத் தெரியப்படுத்துனதே நீங்கதான். எப்படின்னு பார்க்குறீங்களா? கோவிலுக்குப் போயிட்டு வந்த அன்னைக்கு நைட் நீங்க பேசினதைத் தற்செயலா கேட்க வேண்டியதாகிருச்சி. இருந்தும் கேள்வி எதுவும் கேட்கலைன்னா, அதுக்குக் காரணம் இந்த உங்க வசதி கிடையாது” என்று வீட்டைச் சுட்டிக்காட்டித் தலையசைத்து, “என் புருஷன் மட்டும்தான் காரணம்” என்றாள் அவன் மேலுள்ள அன்பை கண்களில் தேக்கி.

“நம்புற மாதிரி இல்லையே. உன்னைப் பற்றிச் சொன்னவங்க ரொம்பவே நம்பிக்கையானவங்க. இதோ அக்கா அக்கான்னு உருகுனியே அவளும் உன்னை சரியில்லைன்னுதான் சொல்றா. இதுக்குமேல என்ன ஆதாரம் வேணும்? இப்ப நீ கிளம்பலை...”

“வேண்டாம் அத்தை. என்மேல அன்பாயிருந்த நீங்க மாற காரணம் யாருன்னு என்னால யூகிக்க முடியுது. உங்களைக் கடைசிவரை அன்பான அத்தையாவே பார்த்துட்டுப் போறேன். கிளம்புறதுக்கு முன்ன ஒண்ணு சொல்றேன். முடிந்தால் ஒருமுறை யோசிச்சிப் பாருங்க. எப்பவுமே கெட்டது நம்மை, நம் மூளையை மழுங்கடித்து மலை மாதிரி முன்னால் நிற்கும். நல்லது அந்த மலைக்குப் பின்னால் இருக்கிற சிறு செடி மாதிரி. சட்டுன்னு கண்ணுக்குத் தெரியாது. தெரியும்போது அந்த நல்லது நம்மைவிட்டுப் போயிருக்கும்.”

“என்னயிருந்தாலும் பணக்காரவர்க்கம்ன்றதை நிரூபிச்சிட்டீங்க பார்த்தீங்களா? நான் வர்றேன். இல்லையில்லை போறேன். என் புருஷனை நல்லா பார்த்துக்கோங்க. உங்ககிட்டச் சொல்றேனே! உங்களைத் தாண்டிதான் உங்க பையனுக்கு எல்லாம். அவங்களுக்குமே என் பி..பிரிவுல பெரிதா பாதிப்பிருக்காது” என்றவள் குரல் அடைக்க, ‘கணவனுக்கும் தனக்குமான உறவு அவ்வளவுதானா?’ என்ற மனம் உள்ளுக்குள் கலங்கித் துடித்தது.

“என் பையனைப் பார்த்துக்க நீ சொல்ல வேண்டியதில்லை. நீ நல்லவள் மாதிரி நடிக்காத.” பட்டென்று விழுந்தது வார்த்தைகள்.

அவர்கள் பேசிய அனைத்தையும் ஊமையாய் வேடிக்கை பார்த்திருந்தாள் ஐஸ்வர்யா. அவளைப் பொருத்தவரை பூரணி வீட்டைவிட்டு இப்பொழுதே செல்லவேண்டும்!

“நடிப்பா?” சிரிப்புதான் வந்தது அவளுக்கு. “அது சரி. நடிப்பாவே இருக்கட்டும்” என்று மாமியாரிடம் ஒத்துக்கொண்டு, ஐஸ்வர்யாவிடம் திரும்பி நக்கலாக ஒரு பார்வை பார்த்து, “இன்று நான்! நாளை நீங்க!” ஒரே வரியில் முடித்து தங்கள் அறைக்குள் சென்று, அவள் உழைப்பில் வாங்கியிருந்த கம்மலைப் போட்டு, தாலி தவிர அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்து, “இது என்னோட பணம். இதையும் தாலியையும் தவிர வேறு எதுவும் என்கிட்டக் கிடையாது.”

“தாலிகூட நாங்க போட்டதுதான்” என்றவர் குரலில் சிறு தயக்கமிருந்ததோ! அவரும் பெண்தானே!

‘எதிர்பார்த்ததுதான்’ என மனதினுள் நினைத்தபடி அவரைக் கூர்ந்து பார்த்தவள் பார்வை, “தாலியைத் திருப்பித் தரணும்னா, உங்க பையனை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து அவர் மூலமாவே வாங்கிக்கோங்க. இப்பக் கடைசியா ஒரு அரைமணி நேரம் இங்க இருந்துட்டுப் போயிருறேன்” என்று தூங்கிக் கொண்டிருந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“என் பை...” ‘என் பையனைப் பார்க்காதே’ என சொல்ல வந்த மாமியாரின் கைபிடித்த ஐஸ்வர்யா, “போய்ப் பார்க்கட்டும் அத்தை” என்றாள்.

இவ்வளவு நேரமில்லாது பெரிய மருமகளின் கண்கள் கலங்கியிருப்பதைப் புரியாமல் பார்த்தவர், “ஏன் அழுற? என்கிட்ட எதையாவது மறைக்குறியா?” என கேட்டார்.

“நம்ம குடும்பத்தோட நல்லதுக்காக சிலதை மறைக்கலாம். பூரணி கொடுக்குறதை எதுவும் சொல்லாம வாங்கிக்கோங்க” என்று அவரை வாங்கவைத்து, அவள் கணவனைக் காண அனுமதி கொடுத்து மாமியாரைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டாள்.

“கடைசியா அரைமணி நேரம் கேட்டு என் வசீகரனைப் பார்க்கப்போனேன் சண்மு. விட்டுட்டு வரவே மனதில்லை” என்றவள் நினைவுகள் கணவனிடம் செல்ல, வாய் தோழியிடம் நடந்ததை விவரித்தது.

கால்மணி நேரமாக கணவனவன் முகத்தையே பார்த்திருந்த பரிபூரணி கண்களில் கண்ணீர் மட்டுமே! பின் நேரமாவதை உணர்ந்து, அவன் தோளில் தலைவைத்து இடையோடு இறுக்கிக் கட்டிக்கொண்டு படுத்தவள், இடையிலிருந்த கையை எடுத்து முகம் வருடி, “நம்ம வாழ்க்கை இன்னையோட முடியுது வசீகரா. என்ன வாழ்ந்துட்டோம் நாமன்னு மனம் சொன்னாலும், இந்த வாழ்க்கையே எனக்குப் பிடிச்சிருந்தது வசீகரா. நமக்கு அதுவும் நிலைக்கலை பாருங்க.”

“கல்யாணம் முடிவான நாளிலிருந்து மனசுக்குள்ள ஏதோ ஒரு பயம் இருந்தது. அதையெல்லாம் உங்க முகம்தான் விரட்டியடிச்சது. கல்யாணத்தோட வாக்குல்லாம் கொடுத்தீங்கள்ல? ப்ச்.. உங்களுக்கு என்ன தெரியும்? உங்க வாழ்க்கையில் வரக்கூடாத காலக்கட்டத்தில் வந்து, வந்த வேகத்துலயே போகப்போறேன். உங்களுக்குக் குணமாகிட்டா இப்படி ஒருத்தி உங்க வாழ்க்கையில் வந்துபோன தடமே இருக்காது. நான் வந்ததை சொல்லக்கூட மாட்டாங்க. நல்ல வசதியான இடமா பார்த்து கல்யாணம் செய்து வச்சிருவாங்க.”

“அத்தனை கூட்டம் சேர்த்து பெரியவங்க ஆசீர்வாதத்துல நடந்த கல்யாணம் செல்லாதுன்னு அவங்க சொல்லிரக்கூடாது வசீகரா. யார் என்ன வேணும்னா நினைக்கட்டும். ஏன்? என்னைப் பைத்தியக்காரின்னு கூட சொல்லிக்கட்டும். ஐ லவ் யூ வசீகரா. எத்தனை காலம் ஆனாலும், இந்த வசீகரனை என் நெஞ்சத்திலிருந்து விரட்டியடிக்க யாராலும் முடியாது. இப்ப உங்களைவிட்டு நிரந்தரமா போறேன். இனி உங்களைப் பார்ப்பேனா தெரியாது. விதியிருந்தால் சந்திக்கலாம்” என்று அவனின் முகமெங்கும் முத்தமிட்டாள்.

முத்தமதில் தூக்கம் கலைந்தவன் அவளைக் கண்டு சிரிக்க, நொடி நேரத் தடுமாற்றம் அவளிடத்தில். ‘வசியக்காரன் வசியப்படுத்துறான் பாரு’ என புன்னகைத்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, “ஐ லவ் யூ வசீகரா. நான் போறேன்” என்று திரும்பிப் பார்க்காது வெளியேறி போர்டிகோ தாண்டி வர, “சித்தி” என்ற கிருஷின் குரலில் நின்றாள்.
 
Top