• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 8

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
8



இந்தத் திருமணம் பேசிய நாளிலிருந்து நினைக்கிறான்தான், ‘சாமியம்மா மாதிரி ஆளுக்கு அன்று கோவிலில் பேசிய பெண்தான் சரிவருமென்று.’ அன்பழகி அன்று கோவிலில் கேள்வி கேட்கும் பொழுது அவளுக்கு சாதகமாகப் பேசிய ஆண்குரல் செந்தூரனுடையதுதான்.

தாயின் கட்டாயத்தின் பேரில் வேறு வழியில்லாது கோவிலுக்கு வந்திருந்தான். ஊரே தாயை சாமியெனக் கும்பிட அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா? என்ற எண்ணம்தான் அவனுக்கு. மாலைகளின் நடுவே பெருமையாய் சற்று கர்வப்புன்னகையுடன் நின்றிருந்த தாயைக் கண்டு ஒருவித வெறுப்புதான் உண்டானது.

அன்பழகி தாயைத் தடுத்து சாமிக்கும், ஆசாமிக்குமான பாடமெடுக்க, அவள் முகம் தெரியவில்லை எனினும் அவளுக்கு ஆதரவாகப் பேசியதோடு, அவளுக்கு எதிராகக் கிளம்பியவர்களையும் அடக்கி அவளை பேசத்தூண்டினான். நேரம் பார்த்துத் தன்னைப் பழிவாங்கும் மகனை நினைத்து ராஜேஸ்வரி பல்லைக் கடிக்க, அதைப் பார்த்தவனுக்கு அவரின் தடுமாற்றம் சந்தோசத்தைக் கொடுத்தது. தன் நண்பர்களிடம் எல்லாம் பெயர் தெரியாத அப்பெண்ணைப் புகழ்ந்து பேசி கொண்டாடிவிட்டான் செந்தூரன்.

அந்தப் பிரச்சனையெல்லாம் முடிந்து சிறிது நாட்களுக்குப் பின், தனக்குத் திருமணத்திற்குப் பெண் பார்த்திருப்பதாக ராஜேஸ்வரி சொன்னதாக ராஜலட்சுமி சொல்லி பவானி அண்ணனிடம் கேட்க, ஓரேயடியாக மறுத்துவிட்டான். அவரோ நேரே மகனிடம் வந்து, “நான் வாக்கு கொடுத்துட்டேன். ஒரு மகனா எனக்கு நீ எதுவும் செய்ததில்லை. இதை மட்டும் செய்” என்றார் கட்டளையாக.

“மௌன விரதத்தைக் கலைச்சிட்டீங்களா? அந்தப் பொண்ணு வைத்த ஆப்பு சிறப்பா வேலை செய்திருக்கு போலவே. இல்லையே திரும்பவும் மௌனமாகிட்டதால்ல கேள்விப்பட்டேன். எது நிஜம்?” என கிண்டலாகக் கேட்க, ராஜேஸ்வரி பல்லைக்கடிக்க, அவரை இடக்காகப் பார்த்து பின் கோபத்தில் முகம் இறுக, “ஒரு தாயா நீங்க எதுவும் செய்யாதப்ப, மகனுக்கான கடமையை நான் ஏன் செய்யணும்?” என்றான்.

“உன் பதினைந்து வயதுவரை நான்தான் வளர்த்தேன்றதை மறந்துராத. நான் யார்கிட்டேயோ ஒண்ணும் விட்டுட்டுப் போகலையே? முதல்ல உன் அப்பா. பின்ன என் தங்கச்சின்னு பாதுகாப்பாதான விட்டுட்டுப் போனேன்?” என்று தன்னை நியாயப்படுத்த,

“பாதுகாப்பா? ஹா.. தாயிருந்து வளர்க்காத பிள்ளை தறுதலைன்னு கேள்விப்பட்டதில்லையா? நீங்க சரியா இருந்திருந்தா நான் இப்படி இருந்திருக்கவே மாட்டேன்” என்றான் தன்னைத்தானே தாழ்வாகக் கருதி.

“இங்க பார் செந்தூ பழசையெல்லாம் பேச வரலை. கல்யாணம் பண்ணலைனா செத்துருவேன்னு சொல்லி மிரட்டவும் வரலை. இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா உனக்குப் பிடித்த ஒருத்தரைக் கொன்னுருவேன்னு மிரட்டலாம்ல” என்று கோணல் சிரிப்புடன் சொன்னார்.

அடுத்தடுத்து சொன்ன வார்த்தைகள், செய்த செயல்கள் அனைத்தும் மனதைக் கொன்றவை. வேறு வழியில்லாமல் சம்மதித்துவிட்டான். தற்பொழுது தன்னை மிரட்டியது போல், மனைவியையும் அவள் வீட்டினரையும் ஏமாற்றியிருக்கிறார் என்பது தௌ;ளத்தெளிவாகத் தெரிந்தது.

‘என்ன செய்து சரி செய்வேன்? கடைசி நிமிடம் வரை வாழக்கேட்ட பெண்ணை சாமியம்மாவின் சதியினால் கைவிட்டு விட்டேனே! எப்படி உள்ளுக்குள் உடைந்து போயிருப்பாள்? தப்புப் பண்ணிட்டேனே?’ ஐயோவென கதற வேண்டும் போலிருந்தது.

தங்கையிடம் வந்தவன், “அன்னைக்குக் கோவில்ல பேசினது உன் அண்ணியா?” என்றவன் குரலில் ஒருவித பரபரப்பு. அவள்தானென்று தெரிந்தும் உறுதிபடுத்தவென்று கேட்டான்.

“அதை ஏன் கேட்குறீங்க? கட்டின பொண்டாட்டியைத் துரத்தினவங்களுக்கு ஏன் சொல்லணும்? நீங்க உங்க தனிமையை மட்டும் கொண்டாடிக்கோங்க. உங்களுக்குதான் பந்தபாசம்னு எதுவும் கிடையாதே” என்றான் முகம் வெட்டி.

‘உங்களுக்குதான் பந்த பாசம்னு எதுவும் கிடையாதே!’ தாயிடம் தான் கேட்ட கேள்வி எழுத்து மாறாமல் தனக்கே வர, நெஞ்சத்தை அழுத்திய வலியை ஜீரணித்து, “பவிமா, நிஜமா அது அவள்தான?” என கேட்டான்.

“ஏன் அத்தனை பேர் முன்னிலையில் அவங்களுக்காகப் பேசின உங்களுக்குத் தெரியாதா?”

‘தெரியலையே! தெரிஞ்சிருந்தா இத்தனை அனர்த்தம் ஆகியிருக்காதே! கைக்குக் கிடைத்தவளை என் கண்ணுக்குள் வைத்துப் பார்த்திருப்பேனே! இப்பத் தொலைச்சிட்டு நிற்கிறேன்’ என்று மனதில் நினைத்து தன்மேலேயே கோபம் கொண்டு கையை சுவற்றில் குத்தினான்.

அதைக் கண்டும் காணாததுபோல் இருந்தாலும், “நீங்க நிஜமாவே ஃபீல் பண்றீங்களா?” என்க,

“என்னை நானே கொல்லுற அளவு ஃபீல் பண்றேன். நம்பி வந்தவளை விரட்டிவிட்ட பாவியாகிட்டேன். அந்த சூனியக்காரி சூழ்ச்சியில் நானும் விழுந்து யோசிக்கிற திறனையே இழந்துட்டேன்” என்றான் கலங்கியபடி.

“இந்த மாற்றம் பொய்யில்லையே?” என்றாள் அண்ணனவனை நம்பாது.

“ஹ்ம்.. நான் பொய் பேசுவேனா மாட்டேனான்றது கூடத் தெரியாதளவு இருந்திருக்கு நம் உறவு.”

“அதுக்குக் காரணம் நானில்லைன்றது மட்டும் உறுதி. ஒரு நிமிடம்” என்றவள் தன் கைப்பையிலிருந்து பென்ட்ரைவை எடுத்து டிவியில் அதைப் பொருத்தி ஓடவிட்டு, “இதைப் பார்த்தால் உங்க சந்தேகம் தீரும். அதுக்கப்புறமும் டைவர்ஸ் பண்ணனும்னு நினைத்தால் நான் சொன்னதைச் செய்வேன்” என்றாள் தீர்க்கமாக.

தங்கையின் செயலில் மெல்லிய புன்னகை எழ அவள் தலையில் கைவைத்து, “ரொம்ப பெரிய மனுஷpயாகிட்ட பவிமா” என்றவன் டிவியில் கவனமாக, அவனது அழகியின் தண்ணீர்க் கண்களே முதலில்பட்டது. ராகினியிடமும் தன்னிடமும் பேசியபடியிருந்த நொடி, வீடியோவில் பாஸ் பட்டனை அழுத்தி, “இவங்கதான் என் அண்ணி. உங்களுக்கு ஞாபகமிருக்கா தெரியலை” என்றதில் பெருமூச்சுவிட்டவன், “ம்ம்..” என்றான்.

அதன்பின் சில நிமிடங்கள் ஓடவிட்டு, ஆடியோவை அதிகப்படுத்த, அன்பழகியின் தாய் காலில் விழப்போனது, அதைத்தடுத்துப் பேசிய வார்த்தைகள், அவளுக்கு ஆதரவாக தான் பேசிய பொழுது, கேமரா தன் பக்கம் திரும்ப தன்னைத்தானே மறைத்துக் கொண்டது என்று அனைத்தும் பதிவாகியிருந்தது.

அன்பழகியை க்ளோஸப்பில் வைத்து வீடியோவை பாஸ் செய்து, “இதுக்குப் பழிவாங்கத்தான் நம்மளைப் பெத்த அந்த... ப்ச்.. அண்ணியை ஆசைப்பட்டு உங்களுக்குப் பார்க்கலை. அது எனக்கேத் தெரிந்தாலும் உங்க மேல உள்ள நம்பிக்கையில்தான் உடன்பட்டேன். இனி உங்கள் விருப்பம். பட், ஐ ஹேட் யூ” என்று உள்ளே செல்ல மனம் வலித்தது செந்தூரனுக்கு.

இங்கு நடப்பதை அக்காவிடம் சொல்ல ஏற்கனவே ராஜலட்சுமி சென்றிருக்க, ஆளில்லா தனிமையில் அவனும் அவளும் மட்டுமே! மனைவியின் முகம் வருடி, “மன்னிச்சிக்கோ அன்பழகி. புத்தி கெட்டுப்போயி என்னென்னவோ செய்துட்டேன். இனி என்னை மாத்திக்குறேன்” என்றவன் இருக்கையில் வந்தமர்ந்து, மாமனார் கேஸ் போடலாம் என்றதற்கு, மனைவி ‘மன்னிச்சிரலாம்’ என எளிதாகச் சொல்லிச் சென்றது நினைவு வர, மன்னிப்பென்பது தனக்கான தண்டனை என்றுணராதிருந்த தன்னை என்னவென்று சொல்லுவான்.

சிறிது நேரங்கழித்து முகம் கழுவி தங்கையின் அறைக்குச் சென்று அவள் முன் தன் கையிலிருந்த லெட்டரைக் கிழித்துப் போட்டு, “உன் அண்ணியை அந்த நேரத்துல வேண்டாம்னு சொன்னேனே தவிர, ஒட்டு மொத்தமா விலக்கணும்னு நினைத்ததில்லை. கட்டாயக் கல்யாணம், அதுவும் சாமியம்மா பார்த்த பெண் என்பதால் நிறைய குழப்பம். கொஞ்சம் டைம் வேணும்னுதான் விலகியிருந்தேன். விவாகரத்து கற்பனையில் கூட நினைக்காத ஒன்று. இதையும் அந்த சாமியம்மாதான் செய்திருக்கணும்.”

“கூடிய சீக்கிரமே உன் விருப்பப்படி, உன் அண்ணி உன்னோடவே இருப்பாங்க. அன்பு! ஹ்ம்.. எனக்குள்ளிருக்கம் அன்பை வெளிக்காட்டத் தெரியலை. வெளிப்படுத்தாத அன்பும் வெறுப்புக்கு வழிவகுக்கும்னு தெரியாமல் போயிருச்சி. நம்மளை அரவணைத்து வளர்க்க ஆளில்லை பார்த்தியா, அதான் கொஞ்சம் தறுதலையா இருந்துட்டேன்” என்று கலங்கிய கண்களைத் துடைக்க,

“அண்ணா!” என்றாள் லேசாகப் பதறியபடி.

“அந்த வார்த்தைக்குக்கூட அருகதையில்லாதவன் நான்னு உன் அண்ணி வந்து பேசினதும்தான் தெரிந்தது. அப்பவே யோசித்து சுத்திலும் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். சித்தி விவாகரத்து பேசினப்ப நீ பேசினதுல நான் எவ்வளவு பெரிய தப்புப் பண்ணிட்டிருக்கேன்னு புரிஞ்சது. ரொம்ப இடைவெளி விட்டுட்டேனா, அதான் சட்டுன்னு உன்கிட்ட வந்து பேசி மன்னிப்பு கேட்க முடியலை.”

“அண்ணா அதெல்லாம்...”

“புரியுது. மன்னிப்பு வேண்டாம் அன்பு போதும்னு சொல்ற. இப்ப ஓரளவு மத்தவங்களையும் புரிய முயற்சிக்கிறேன் பவிமா. உன் அண்ணிக்குக் கணவனா இருக்கிற தகுதி எனக்கில்லைன்னு தோணியதால்தான் அவங்களைப் பார்க்க முயற்சி செய்யலை. அப்பவே சாமியம்மா பார்த்த பொண்ணா இது? நம்ம தங்கைக்கு ஆதரவா சண்டை போடுறாளேன்னு ஆச்சர்யம்தான். அவங்க புரிந்து வைத்திருக்கிற அளவு நான் உன்னைப் புரிஞ்சிக்கலைன்ற குற்றவுணர்வு வேற.”

“எப்ப எங்களுக்கேத் தெரியாம எங்களைப் பிரிக்க முடிவெடுத்தாங்களோ, அப்ப உன் அண்ணிக்கு எந்த வகையிலாவது தொல்லை கொடுத்துட்டே இருப்பாங்க. இனி அதுக்கு நான் இடம் கொடுக்கமாட்டேன். அவங்களை விட்டு விலகியிருக்கிறதாலதான இவ்வளவும். நம்ம வீட்டுல நம்மளோட இருந்துட்டா!” என்றான் நிதானமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“நிஜமா அண்ணியைக் கூட்டிட்டு வரப்போறீங்களா?” என்றவள் திடீர் சோகமாகி, “சித்தி சித்தப்பா இங்கயிருக்கிறதால பிரச்சனை வந்தா?”

“அதுக்கு அவங்க இங்கே இருந்தால்தான? பேக் பண்ணிருவோம்” என்றான் கண்சிமிட்டி.

அண்ணனின் கண்சிமிட்டலில் அதிக சந்தோசப்பட்டவள், “ஹை.. நம்ம வீட்டுல நான் சுதந்திரமா இருக்கலாம்” என்றதில் கண்கலங்கியவன், “சாரிமா” என்றான்.

“எனக்குச் சொல்றதைவிட அண்ணிட்ட சொல்லுங்கண்ணா. வெளிய எதையும் காட்டிக்கலைனாலும் அவங்களுக்குள்ள எந்தளவு கஷ்டப்பட்டிருப்பாங்க. எனக்கு அதை நினைத்தாலே அழுகையா வரும். முதன்முதலா அவங்களைப் பார்த்தப்ப இருந்த அண்ணி இப்ப இல்லை. அவங்களுக்குப் பழைய சந்தோசம் கிடைக்கணும். அது உங்ககிட்டதான் இருக்கும்னு தோணுது” என்றாள் எதோ ஒரு வேகத்தில்.

“ஏனாம்?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

“அண்ணி கேரக்டருக்கு ஒருத்தரைப் பிடிக்கலைனா தூக்கியெறிஞ்சிட்டுப் போயிருப்பாங்க. உங்க விஷயத்துல ரொம்ப இறங்கி வந்தாங்க. ஐ திங்க், ஷீ லவ்ஸ் யூ அண்ணா” என்றாள் உறுதியாக.

‘அப்படியும் இருக்குமோ? ஆனா, எப்படி என்மேல்? நான் எதுவும் செய்ததில்லை. ஏன் ஒரு புன்னகைகூட கொடுக்கவில்லையே?’ ‘அன்பழகி!’ என்ன சொல்லுவான். பிடிக்காமல் இணைந்த பந்தம்தான். எப்பொழுது தன் கண்பார்க்க வைத்து தங்கள் உறவுக்குப் பலம் சேர்க்க பதிலுக்காக எதிர்பார்த்து நின்றாளோ, அப்பொழுதே அவனுள்ளிருந்த ஏதோ ஒன்று உயிர்பெற்றதை உணரத்தான் செய்தான். இருந்தும் தாயின் ஏளனப்பார்வை அவனை வெறியேற்ற, அவளை வெளியேற்றிவிட்டான்.

இடைப்பட்ட நாட்களில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவளைப் பார்த்த நிகழ்வுகளும் உண்டு. அதில் சிறு தாக்கம் எழுந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கைக்காக பந்த பாசத்தைப் பற்றிய வகுப்பெடுக்க, தாய் பார்த்த பெண் என்ற எண்ணமேயில்லை. ‘அன்று தன்னைப் பார்த்த நிமிடம் அவள் கண்ணில் என்னயிருந்தது? ம்.. என்னயிருந்தது? யோசிடா யோசி...’ சில நொடிகள் கண்மூடி அன்று நடந்ததைக் கண்முன் கொண்டு வர, அக்கண்களின் ஆசை, தேடல் அதையும் தாண்டி எதோ...

“என்னண்ணா யோசிக்குறீங்க? நான் சொன்னதுதான் நிஜம்” என்ற தங்கையின் இடையிடலில், “எனக்கு அறிமுகமில்லாத பகுதியெல்லாம் உன் அண்ணி வந்து அறிமுகப்படுத்துறாங்க. உடனே என்னால பதில் கொடுக்க முடியாது. இப்பவே போய் ஐ லவ் யூ சொன்னா அது நடிப்பின் உச்சக்கட்டமா இருக்கும். உன் அண்ணியோட சேர்ந்து வாழ, என்னை கொஞ்சம் பக்குவப்படுத்திக்க எனக்குக் கொஞ்சம் டைம் வேணும் பவிமா. அதுவரை நாம ராசியானது தெரிய வேண்டாம்” என்றான் மென்மையாய்.

“இந்த நோட்டீஸ்கு பதில் வரலைனா கேள்வி வருமே?”

“வரும்தான். நான் சொல்றதை அப்படியே சொல்லிரு. கூடிய சீக்கிரம் எங்களுக்கு ஆரத்தி எடுக்கத் தயாராயிருக்கணும். இப்ப மனசைப்போட்டுக் குழப்பிக்காம ரெஸ்ட் எடு” என்று வெளியே செல்லப்போக, அவன் கைபிடித்து, “தேங்க்ஸ் அண்ணா” என்றாள்.

“அதை நான் உனக்கு சொல்லணும். சித்தி கேட்டா கையெழுத்து போட்டுக் கொடுத்தாச்சின்னு சொல்லு. தற்காலிகமா சந்தோசப்பட்டுக்கட்டும்” என்று தங்கையின் தலைவருடிச் சென்றவன் அறைக்கு நுழைந்து, பேச்சினூடே தங்கையிடமிருந்து எடுத்திருந்த மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தபடியிருந்தான்.

“என்னைக் காதலிக்குறியா அன்பழகி? அதனால்தான் மன்னிச்சிட்டியா? எனக்குக் கல்யாணம் பிடிக்காது. ஆனா, உனக்குக் கல்யாணக் கனவுகள் இருந்திருக்கும்ல? என்னோட கனவுகளோட மிச்சம் மீதியையும் அந்த சாமியம்மா எரிச்சிட்டாங்க அன்பழகி. என்னோடது ப்ளாக்மெய்ல் கல்யாணம். அதனால்தான் உன் பக்கமிருந்து யோசிக்க மறந்துட்டேன். இனி என் தங்கைக்கு மட்டுமில்லை.. எனக்கும் நீ வேணும். நான் எதாவது குழப்பினா மன்னித்து ஏத்துக்கோ அன்பழகி” தன் விருப்பத்தை அந்நிழற்படத்திடம் சொன்னான்.

“அக்கா நாம ஒண்ணு நினைத்தா இங்கே வேற ஒண்ணு நடக்குது. எதாவது செய்யேன்கா. உன் மகன் பார்வையே சரியில்லை. அடிச்சிரப் போறானோன்னு பயந்து வந்துதான் உன்கிட்டச் சொல்லிட்டிருக்கேன். நீ என்னன்னா அமைதியாயிருக்க? அந்தக் குட்டிச்சாத்தான் வேற அண்ணன்காரனைத் திட்டுறேன்ற பெயர்ல எல்லாத்தையும் உளறி ஏத்தி விட்டுட்டிருக்கா. என்ன செய்யலாம்கா?” என்றவருக்கு எதுவும் செய்ய முடியா தயக்கம்.

“ராஜி கொஞ்சம் நிதானமாயிரு. பதறின காரியம் சிதறும்” என்று தங்கையின் பதற்றத்தைக் கடிந்து, “கல்யாணம் செய்யமாட்டேன்னு அடம்பிடித்தப்ப நாம பண்ணி வைக்கலையா என்ன? அது மாதிரி இதுக்கும் எதாவது செய்யலாம். சும்மா சும்மா பயப்படாத. எதாவதுன்னா என்னைக் கைகாட்டிரு” என்றார்.

‘கைகாட்ட கை இருக்கணுமே’ என நினைத்து, “உன்னை நம்பிதான்கா இருக்கேன்” என்றார் பயம் குறையாது. வாலிப வயதில் தன்னை எதிர்த்து நின்ற செந்தூரன் முகமே கண்முன் நின்றது.

“இந்த நம்பிக்கை எப்பவும் இருக்கட்டும். இப்ப அவனே கையெழுத்து வாங்கிட்டு வர்ற மாதிரி ஒரு நிலையை எப்படி உருவாக்கலாம்னு யோசிச்சிட்டு வீட்டுக்கு வர்றேன்” என்று போனை வைத்து, “சே.. என் பிறவி குணத்தைக் கொண்டு வந்துட்டா இந்த அன்பழகி. இவளைப் பழிவாங்க என்னலாம் செய்ய வேண்டியிருக்கு. நாகாத்தம்மா கூடவேயிருந்து நீதான்மா வழிகாட்டணும்” என்று தன் தப்புக்கு அம்மனை துணைக்கு அழைத்தார் ராஜேஸ்வரி.

தன் கணவர் வந்ததும் விஷயத்தைக் கூறிய ராஜலட்சுமி, “அக்காவை நம்ப முடியாதுங்க. பெத்த பிள்ளைங்களுக்கே ஈவு இரக்கம் பார்க்கலை. நாம எந்த மூலைக்கு. அவளுக்கு உடந்தையா இருக்கிற வரை பிரச்சனையில்லை. எதாவது ஒரு இடத்தில் அவளுக்கும் நமக்கும் முட்டிக்கிட்டா யோசிக்காம தூக்கி வீசிருவா. அதுக்கு சாட்சி அத்தான் இருக்காங்க. அதுக்குள்ள நாம பிழைக்க எதாவது செய்யணும். நல்லவேளை பையன்களை வெளியூர்ல படிக்க வைத்தோம். இல்ல அவனுங்க கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லி மாளாது.”

“அதெல்லாம் பார்த்துக்கலாம் ராஜி. எனக்கு இந்த வீடு ராசியா தெரியுது. முடிந்தவரை இதைத் தக்கவைக்கப் பார்ப்போம். முடியாத பட்சத்துக்கு எதாவது செய்யலாம். நான் இருக்கேன்ல” என்று மனைவியை சமாதானப்படுத்தினார் சேகர்.

“அண்ணி அண்ணன் இன்னும் வரலை. பார்த்ததும் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்” என்று மெசேஜ் அனுப்பிய பவானி பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

“அனுப்பு அனுப்பு மூஞ்சியில இரண்டு கீறல் போட்டு விடறேன்” என்று கத்தி ஸ்மைலிகள் அனுப்பினாள் அன்பழகி.

“இரண்டென்ன.. இன்னுமே செய்யுங்க. அப்பவாவது அந்த ரோபோ சிரிக்குதா பார்க்கலாம்.”

“அதான் ரோபோ சொல்லிட்டியே. ரோபோ எப்படி சிரிக்கும்? ஆனா, உன் அண்ணன் ரோபோ.. வேலை இடத்துல மட்டும் முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி சிரிக்குது பவிக்குட்டி” என்றனுப்பினாள்.

“அந்த அரிய காட்சியை நீங்க பார்த்தீங்களா அண்ணி?”

“அடப் பார்த்ததாலதான்டா சொல்றேன். எட்டாவது அதிசயம் பார்த்த முதல் ஆளு நான்தான்னு நினைக்குறப்ப உடம்பெல்லாம் புல்லு புல்லா அரிக்குது” என்றாள் அன்பழகி.

“சீக்கிரம் புல்லை அறுவடை செய்ய வரச்சொல்றேன் அண்ணி” என்று கேலி செய்யும் ஸ்மைலி அனுப்ப,

“அடி.. நெட் கட் பண்ணிட்டு போய்த் தூங்கு. போ” என அதட்டியபடி வாய்ஸ் மெசேஜ் அனுப்பி புன்னகைத்தாள்.

அன்று அந்தப் பெரியம்மாவிடம் சிரித்துப் பேசிய முகம் நினைவு வர, “சிரித்தா அழகாத்தான் இருக்காங்க. அடுத்தவங்ககிட்டக் காட்டுற இளக்கத்தை வீட்டுல காட்ட வேண்டியதுதான.” ஏனோ முதல்முறை பார்த்திருந்த அந்த இளம் புன்னகை கண்முன் வந்தது.

“அவன் உனக்கு டைவர்ஸ் அனுப்புறான். நீ என்னடான்னா அவனைப்பற்றி கனவு கண்டிட்டிருக்க” என்று அறிவு அவளை அடக்க, ‘அட நேர்லதான் நடக்காது. கனவிலாவது பார்த்துக்குறேனே’ என்று மனம் சொல்ல, “என்னவோ பண்ணித்தொலை” என்ற அறிவுக்கு அசட்டு சிரிப்பொன்றை வழங்கினாள். தன்னை விடமாட்டானென்று ஏதோ ஒரு நம்பிக்கை கணவன் மேல்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வமென்று எதுவுமில்லையல்லவா!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அடுத்த ஒருவாரம் வரை அவன் வராது போக தன் எண்ணம் சரி என்பதான நிம்மதியான மனநிலையில் மருத்துவமனை செல்லக் கிளம்பி வந்த அன்பழகி மறுக்க மறுக்க உணவூட்டிய தாய்க்கு முத்தமிட்டு, “மீ போயிட்டு வர்றேன்” என்று சந்தோசத்தில் பாட்டு ஒன்றை ஹம் செய்தபடி வாசல் வந்து காலணியைப் பார்க்க, போர்டிகோ தூணில் சாய்ந்தபடி தாய் மகள் கொஞ்சல்களைப் பார்த்திருந்தான் செந்தூரன்.

அவனைக் கண்ட நிமிடம் கண்ணிமைக்காது அப்படியே நின்றுவிட்டாள் அன்பழகி. மருந்துக்கும் அவன் முகத்தில் புன்னகையில்லை. அவளை.. அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்திருக்க, அப்பார்வைக்கான பொருள் விளங்காது பார்த்திருந்தாள். மனதின் எண்ணங்களைக் கண்வழியே படிப்பவளுக்குக் கணவனின் கண் பாஷை புரிய மறுத்ததோ!

‘க்கும்’ என்று தொண்டையைச் செரும, சட்டென பார்வையைத் தாழ்த்திய பாவை, “உள்ள வாங்க” என்றழைத்தாள்.

“பொம்மு மதிய சாப்பாடை மறந்துட்டுப் போற பாரு” என்றபடி வாசல் வந்த ராகினி மருமகனைக் கண்டு அதிர்ந்தாலும், அடுத்த நொடி சமாளித்து உள்ளே அழைத்தார்.

வீட்டினுள் நுழைந்தபடி சுற்றிலும் பார்வையிட்டவன், “வீட்ல ஆம்பளைங்க இல்லையா?” என்றான்.

“இ..இல்லை. காலையிலேயே கிளம்பிட்டாங்க. பெரிய மகனும் மருமகளும் ஒரு விசேஷத்துக்குப் போயிருக்காங்க. வாங்க உட்காருங்க” என்றவர், “பொம்மு பேசிட்டிரு. அம்மா காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று அவர் உள்ளே செல்ல,

“பொம்மு! நைஸ் நேம்” என்றபடி வீட்டைப் பார்த்தவன், “ம்.. நீங்க ஓரளவு ரிச்தான் போல. லாயர் சதாசிவம்னா சும்மாவா! எந்த வகையிலும் உங்களுக்கு மேட்ச் இல்லாத என்னை எங்கம்மா சொன்னதுக்காக முடிச்சிருக்கீங்கன்னா, ஆச்சர்யம்தான் போங்க. அந்தளவு பக்தியா உங்களுக்கு?” என்றான் கேலிக்குரலில்

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் ஏதேதோ எண்ணங்கள். அவனின் பேச்சு, அலட்சிய தோரணை, சற்றே திமிரான பார்வை என அவன் செயல்கள் அனைத்தும் நடக்கப்போவது நல்லதற்கில்லை என்பதை புரியவைக்க, அவன் மேலிருந்த பார்வை மட்டும் மாறாதிருந்தது.

“சென்ட்ரலைஸ்ட் ஏசி பண்ணிலையா? இவ்வளவு ஹாட்டா இருக்குது. ஹ்ம்.. மருமகன் ஏசி மெக்கானிக்கா இருக்கேன். சொல்லியிருந்தா ஹால்ல பிட் பண்ணியிருப்பேன்ல? அப்படியே சிசிடிவி ஒன்றிரெண்டு மாட்டியிருக்கலாம். சரி விடுங்க இனி அதுக்கு அவசியமிருக்காதே” என்றான் பார்வையிட்டபடியே.

அவள் புருவம் கேள்வியாய் அவனைத் துளைத்தெடுக்க, அவ்விழி வீச்சினில் திரும்பியவன், “அதான்ங்க.. அதுக்குள்ள நாம டைவர்ஸ் பண்ணிருவோம்ல” என்றதும் அதிர்ந்த இதயத்தில் உடலும் சிறிது ஆட்டம் காண, பிடிமானத்திற்கு தன் கையிலிருந்த டிபன் பாக்ஸை அழுத்திப்பிடிக்க, அது நழுவி கீழே விழுந்து சப்தமெழுப்பியது.

சப்தம் கேட்டு வெளியே வந்த ராகினி, “ப்ச்.. பார்த்து கவனமா பிடிச்சிக்குறதில்லையா பொம்மு?” என்று திட்டினாலும் அதை சுத்தம் செய்து, உள்ளே சென்று காஃபி எடுத்து வந்து மருமகனின் கையில் கொடுத்தார்.

அதை வாங்கி சாவகாசமாக உட்கார்ந்து மனைவியைப் பார்த்தபடியே பருகியவன், அருகில் நின்றிருந்த மாமியாரைப் பார்த்து புன்னகைக்க, அவரோ மகளின் முகத்திலிருந்த அதிர்வையும் கலங்கிய கண்களையும் பார்த்தார்.

“நீங்க உள்ள போங்க. உங்க பொண்ணுகிட்ட ஒரு குட் நியூஸ் சொன்னதுல சந்தோஷம் தாளாம ஷாக்காகி நிற்கிறாங்க. வேற ஒண்ணுமில்லை” என்றான் புன்னகையுடன்.

மகளின் முகம் பார்த்தவர் அவளின் தோளணைத்து, “இல்லை போகமாட்டேன். என்ன சொன்னீங்க என் பொண்ணை? இப்படி கலங்கிப்போய் நிற்கிறா? பொம்மு என்னடா?” என்று மகளின் தோளை அசைக்க, அதில் சுயம் வந்தவள், “அம்மா!” என கலங்கியவள் தாயின் தவிப்பைக் கண்டதும், “ஒண்ணுமில்லைம்மா. ஃபர்ஸ்ட் டைம் வந்ததோட கிஃப்ட் தர்றேன் சொன்னாங்களா, அதான் கொஞ்சம் ஆச்சர்யத்துல நின்னுட்டேன். சாப்பிட்டீங்கன்னா பிரஷர் மாத்திரை போட்டுட்டுப் படுங்கம்மா. நான் பேசிட்டு வர்றேன்” என்றவள் குரல் தாய்க்காக தெளிந்திருந்தது.

“எதாவது பிரச்சனையாடா? அம்மா உன்கூட இங்கேயே இருக்கேனே” என்றவருக்கு மகளைத் தனியே விட்டுச் செல்லும் எண்ணம் வராது தவித்தபடியிருந்தார். நிமிடத்திற்கொரு முறை கணவன் அல்லது மகன் யாராவது வந்துவிட மாட்டார்களா என எதிர்பார்த்தது அந்தத் தாயுள்ளம்.

“அட விடுங்க அன்பழகி. எப்படியும் தெரியப்போறதுதான.. சரி சரி ஏன் நிற்குறீங்க? மாப்பிள்ளைக்கு இவ்வளவு மரியாதையெல்லாம் வேண்டாம். தயவு செய்து உட்காருங்க” என்றான் இருவரையும் பார்த்து புன்னகைத்தபடி.

“பரவாயில்லை. நீங்க சொல்லுங்க?” என்ற ராகினி மனதில் விவாகரத்து விஷயமாக இருக்குமோ என்றிருந்தது.

கோப்பிலிருந்து இரண்டு வகையான இணைப்பு செய்யப்பட்ட காகிதங்களை எடுத்துப் போட்டு “சைன் பண்ணுங்க அன்பழகி. நான் நேர்ல வந்து கேட்டால்தான் கையெழுத்துப் போடுவேன்னு சொன்னீங்களாம். அதான் வந்துட்டேன்! கேட்டுட்டேன்! சைன் ப்ளீஸ்” என்றான் புன்னகை மாறாது.

“என்னை விட்டு விலகுறதுல அவ்வளவு சந்தோசம் போலிருக்கு? சிரிப்பெல்லாம் அள்ளுது” என்றாள் தன் துக்கம் மறைத்த குரலில்.

“நிஜமா செம ஹேப்பியா இருக்கேன்ங்க. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? எனக்கு இந்தக் கல்யாணம் பொண்டாட்டி பிள்ளைங்க இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் கிடையாது. உங்களைக் கல்யாணம் செய்யாம எஸ்கேப்பாக எவ்வளவோ முயற்சித்தேன். விதி நம்மளை சேர்த்து வச்சிருச்சி. அது சேர்த்து வைத்தா விட்டுருவோமா? விதியை மதியால் வெல்லலாம்ன்ற பழமொழியை நாங்களும் படிச்சிருக்கோம்ல. அந்த மதிதான் இந்த விவாகரத்து நோட்டீஸ். கேள்வி கேட்காம போட்டுட்டா நமக்குள்ள விவாதமில்லாது விவாகம் ரத்து செய்யப்படும்” என்றான்.

அவனின் இந்த அதீத சந்தோஷமே சந்தேகம் கொள்ள வைக்க, “டைவர்ஸ் தர்ற அளவுக்கு உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றாள் நேராகப் பார்த்து.

“இப்பதான சொன்னேன்” என்று புரியாமல் கேட்க,


“இல்லைங்க. எதோ ரீசன் இருக்கு. யாராவது உங்களைக் கட்டாயப்படுத்துறாங்களா?” என்றாள் ராஜேஸ்வரியை மனதில் வைத்து.

சட்டென்று சத்தமாகச் சிரித்தவன், “ஹையோ! என்னங்க அன்பழகி நீங்க! கட்டாயப்படுத்த நான் என்ன குழந்தையா? நான் யாருக்கும், எதுக்கும் கட்டுப்படுறவன் கிடையாது.”

‘அதான் தெரியுமே!’ என்று மேலெழுந்த பெருமூச்சை உள்ளேயே அடக்கி, தன் கைப்பையிலிருந்த பேனாவை எடுத்து கையெழுத்திடப் போக, “பொம்மு கொஞ்சம் யோசிச்சிக்கோ” என்றார் ராகினி.

“யோசிச்சி ஒண்ணும் ஆகப்போறதில்லைம்மா. வாழ்க்கையைத்தான் காப்பாத்திக்க முடியலை. சொன்ன வாக்கையாவது காப்பாத்துறேன்” என கையெழுத்திட, மகளின் அந்நிலையைக் காண இயலாது கண்ணீருடன் உள்ளே சென்றுவிட்டார்.

“கையெழுத்துப் போட்டாச்சி. அவ்வளவுதான?” என்றாள்.

“இதோ இதிலும் போடுங்க அன்பழகி” என்று இன்னொன்றையும் நீட்டினான்.

“பார்த்தா பத்திரம் மாதிரியிருக்கு?”

“பத்திரம்தான்ங்க. ஜீவனாம்சம்ன்ற பெயர்ல எதுவும் கேட்டுரக்கூடாதுல்ல. அதுக்கானது” என்றதும் முதல் பக்கத்தை வாசித்துப் பார்த்தவள், ‘அட அல்பமே! இவ்வளவுதானா நீ’ என்பதுபோல் பார்த்து கையெழுத்திட ஆரம்பித்தாள்.

“ப்யூச்சர்ல என்ன பண்ணப்போறீங்க?” என்று சும்மாயிருக்க முடியாமல் செந்தூரன் கேட்க,

“மனசாட்சியும், வீரமும், நம்பிக்கையும், கணவன் மனைவி உறவை மதிப்பவனா, நல்ல ஆண்மகனா பார்த்து கல்யாணம் செய்துக்கப் போறேன்” என்றாள் அவன் கண்பார்த்து.

உள்ளுக்குள் கோபம் எழுந்தபோதிலும், அதைவிட இதயத்தைக் கசக்கிப்பிழியும் வலி எடுக்க, அதை புன்னகையில் மறைத்து, “வாழ்த்துகள்ங்க” என்று வாழ்த்த, அவனின் கண்பார்த்தும் எதுவும் அறிய முடியாமல் அமர்ந்திருந்தவளிடம், “அட பார்த்துட்டேயிருந்தா எப்படி? கையெழுத்துப் போட்டுட்டேப் பேசலாமேங்க” என்று பக்கத்தை மாற்றிக் கையொப்பமிட இடத்தைக் காட்டியவன், “ஏங்க அன்பழகி.. நமக்குக் கல்யாணம் முடிந்து இரண்டு மாசம் மேலாகுது. இத்தனை நாள்ல கணவன்தானேன்னு என்மேல் காதல் வந்துவிடலையே?” அவள் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டான்.

கையெழுத்திட்டுக் கொண்டிருந்த விரல்கள் ஒரு நொடி நின்று பேனாவை அழுத்திப் பிடிக்க, சில நொடிகளில் பிடியைத் தளர்த்தியவள் அனைத்திலும் கையெழுத்திட்டு அவன்புறம் நகர்த்தி “நமக்கான உறவு முறிஞ்சிருச்சி. நான் எதுக்காகவும் உரிமை கொண்டாடிட்டு வரமாட்டேன். இப்ப நீங்க போகலாம்” என்று வாசற்புறம் கைநீட்டினாள்.

“ரொம்ப நன்றிங்க அன்பழகி. பெயருக்கு ஏற்ற மாதிரி நீங்க இருக்கீங்க. உங்க கண்ணு இருக்கு பாருங்க சான்ஸேயில்லை. நீங்க கண்கலங்கினாலும் சாதாரணமாதான் தெரியும். என் பிரிவை நினைத்து அழுறீங்களா என்ன?” என்றான் கிண்டலாக.

“அம்மாஆஆஆ” என்ற அலறலில் ராகினி வேகமாக மகளிடம் வர, “இவ்..இவனை வெளியே போகச் சொல்லுங்க. இன்னொரு நிமிஷம் இவன் இங்கே நின்னா உங்க பொண்ணு கொலைகாரியா மாறிருவா. அவனை போகச் சொல்லுங்கம்மா” என்று அழுகையை அடக்கியபடி தாயின் தோள் சாய்ந்தாள்.

“என் பொண்ணோட வார்த்தைக்காகதான் உங்க மேல நாங்க எந்த ஆக்ஷனும் எடுக்கலை. பொய்யில் ஆரம்பிக்கிற வாழ்க்கை நிலைக்காதுன்னு பெரியவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இப்ப.. ப்ச்.. இனிமேல் எதுவாயிருந்தாலும் கோர்ட்ல பார்க்கலாம்” என்று கலங்கிய கண்களைச் சிமிட்டி வாசல் நோக்கிக் கைகாட்டினார் ராகினி.


“டேக் கேர்” என்று அவன் செல்ல, உள்ளே அவள் வெடித்து அழுவது வெளியே செல்பவனுக்குக் கேட்டது.
 
Last edited:
Member
Joined
Sep 3, 2024
Messages
31
அதானே செந்தூரனுக்கு உடனே பல்பு எரிஞ்சிட்டேன்னு பார்த்தேன். திரும்ப எதுக்கு முருங்கை மரம் ஏறி உட்கார்ந்து கையெழுத்து போட்டிருக்கான். 🤔
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அதானே செந்தூரனுக்கு உடனே பல்பு எரிஞ்சிட்டேன்னு பார்த்தேன். திரும்ப எதுக்கு முருங்கை மரம் ஏறி உட்கார்ந்து கையெழுத்து போட்டிருக்கான். 🤔
அவனுக்கு என்ன சூழ்நிலையோ? யாருக்குத் தெரியும்.
 
Top