- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
8
கதிரின் மாப்பிள்ளையில், “அதேதான் மச்சான்” என, அவர்களின் மறைமுகப் பேச்சில் எதுவும் புரியாமல் அமர்ந்திருந்தாள் திருமொழி.
அவளைப் புரிந்து முகம் கழுவி வரச்சொல்லி அனுப்பிய கதிர், “டேய் மாப்ள! உன் அக்கா பெயர்தான் திருமொழினா, அவளோட முழி கூட திரு திருன்னுதான் உருளுது” என கேலி செய்தான்.
“அட ஆமாம் மச்சான்” என ஹைபை போட, அதைக் கேட்டு முகம் துடைத்தபடி வந்தவள், “டேய் தம்பிப்பையா வேண்டாம்” என மிரட்டினாள்.
“திருமொழின்ற பெயர் வேண்டாமா அக்கா?” என அப்பாவியாய் கேட்டான்.
“நீ வாயால சொன்னா கேட்கிற ஜாதியில்ல. உனக்கெல்லாம் கைதான் சரி” என்று அவனை விரட்ட, எழுந்து வெளியே செல்வதுபோல் கதிரின் பின்னே ஒழிந்தவனைச் சுற்றி இருவருமே வட்டமடிக்க, பொறுமையாய்ப் புன்னகையுடன் நின்றிருந்தான் இளங்கதிர்.
சில நிமிடங்களில் இருவரும் சமாதானமாகி உட்கார, “மொழி நீ வெளில வரவேண்டாம்” என்ற கதிரை அவள் முறைக்க, “ஹேய் முறைக்காத பயத்துல சொல்லல. இது நிஷாந்த் வீட்டு கல்யாணம். உன்னால எதாவது பிரச்சனைன்னு வரக்கூடாது. உனக்காகத்தான்மா சொல்றேன்” என்றான் அமைதியாக.
“ஆமா அக்கா. அவங்களைப் பார்த்தா உனக்குக் கோபம் வரும்.”
“கோபம் இல்லடா. வெட்டிப்போடுற வெறி வரும்.”
“அதனால்தான் மச்சான் வெளில வரவேண்டாம் சொல்றாங்க. நீ இங்கேயே பாட்டு கேட்டுட்டு இரு. நாங்க இப்ப வந்திருறோம்.”
“அப்ப அண்ணா கல்யாணம் பார்க்க முடியாதா? சரண்யா அண்ணி கோவிச்சுப்பாங்க. ப்ச்... போடா” என்றாள் ஏமாற்றமாய்.
“விடுக்கா அடுத்து நடக்கப்போற உன் கல்யாணத்தை லைவாவே பாரு. நீயே கூட தடுக்கவிடாம நான் பார்த்துக்கறேன்” என சூசகமாக பேசினான்/
“உன்னை...” என்று அவள் எழும் முன் இளங்கதிரை இழுத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டான்.
நாதஸ்வரம் ஒலிக்க திருமண மேடைக்குத் தாலி வருகையில் நிஷாந்த் திருமொழியைத் தேட, அவளில்லை என்றதும் பிரஷாந்தை அனுப்பி கூட்டிவரச் சொன்னான்.
‘என்னாலேயே இந்த கார்மேகத்தைப் பார்க்கையில் எங்கே எல்லை மீறிடுவேனோ அளவிற்கு கோபம் வருது. அக்கா இந்த இடத்துல... நோ’ என்று அவளின் நிலை உணர்ந்து “இல்லண்ணா வேண்டாம்” என மறுத்தான்.
“அப்ப அவளை அக்கான்னு கூப்பிடுறது வெறும் பெயரளவுக்குத்தானா?” என்றான் சற்று அதட்டலாகவே.
“அண்ணா!”
“நாத்தனார் முடிச்சி அவள்தான் போடணும்னு நான் காத்திருக்கேன்னு சொல்லி கூட்டிட்டு வா” என்றான்.
அவனைத் தொடர்ந்து சரண்யாவும் “போய் கூட்டிட்டு வா பிரஷாந்த்” என்றாள்.
காலையில் முகூர்த்தத்துக்கு முன் நிஷாந்திற்கு சரண்யா போன் செய்து “நாத்தனார் முடிச்சிபோட மொழி இருக்கணும்” என்றிருந்தாள்.
“பண்ணிடலாம் சரண். இருந்தாலும் இவ்வளவு காலையிலயே ஏன்?”
“மறந்திருவேன்ங்க. நேத்து நைட் தனக்கு அண்ணன் தம்பியிருந்தா நாத்தனார் முடிச்சி நான்தான் போடுவேன்னு அடம்பிடிச்சிருப்பேன்னு சொன்னா. சாதாரணமா சொன்னதுதான். இருந்தாலும் அவளையும் மீறின ஏதோ ஒரு ஏக்கம் அவளுக்குள்ள இருக்குன்னு தோணிச்சி. அதான் அந்த டைம் அவள் இல்லாம போயிட்டா நீங்க மறந்திரக்கூடாதே.”
இதோ தாலி அருகில் வருகையில் தங்கையானவளைத் தேட அவளில்லை என்றதும் தம்பியை அனுப்பிவிட, ரத்தினம் பத்மினி தம்பதியினருக்குமே அதை மறுக்கத் தோன்றவில்லை.
அக்காவிடம் சென்றவன் மணமேடைக்கு வரச்சொல்ல, மாட்டேன் என மறுத்தவளிடம் ஏதேதோ சொல்லி சமாளித்து அழைத்து வந்தான். வந்தவள் பார்வை மணமேடையைத் தவிர அங்குமிங்குமென எங்கேயும் அலைபாயவில்லை. விடவில்லை அவள். தன் ஆத்திரத்தை மறைத்து மணமக்களிடம் புன்னகைத்து அவர்களை மட்டுமே பார்த்திருந்தாள்.
ஆனால், அவளின் சித்தி செல்வரசிக்கோ அவளைவிட்டு எங்கும் பார்வை செல்லவில்லை. குருமூர்த்தி பேசிச் சென்றதும் மனதிற்குள் எழுந்த கோபத்தை அடக்க மெல்ல நடந்தவர் திருமொழி இருந்த அறையை நெருங்க, அவள் கதிரிடம் தன் பெயரில் ஆரம்பித்து இளா பற்றிப் பேசியதைக் கேட்டு ஆச்சர்யம் ஒருபுறமென்றால், அதிர்ச்சி இன்னொருபுறம். தன் கணவன் மேல் அவருக்கிருந்த சின்ன சந்தேகமும் விலகிக் காணாமல்போன நிமிடங்கள்.
ஏனோ மனம் விட்டு அழத்தோன்றியது. சிறிதளவு திறந்திருந்த கதவின் வழியே அக்கா மகளைக்காண.. கண்கள் கலங்கியது. நன்றாகக் கவனித்தால் அவளைத் தமிழரசியின் பெண் என்று சொல்லிவிடலாம். இவள் என் குடும்பத்தினர் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்ற தவிப்பு இப்பொழுது அவருக்குள். இதோ மேடையில் நிற்பவளை கணவன் மகன் அறியக்கூடாது என்ற வேண்டுதல் வேறு.
தாலிகட்டி முடிய சட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் திரு. சில நிமிடங்களில் தன்னைத்தேடி வந்த பிரஷாந்திடம், “நான் கிளம்புறேன்டா தம்பி” என்றாள்.
“ப்ச்.. இப்ப ஏன் இந்த அவசரம்? அவங்க கிளம்பிட்டாங்க. இன்னும் பத்து நிமிஷம் உட்காரு வந்திடுறேன்” என்று செல்ல...
அவனின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை அவளால். விரல்களைக் கோர்த்துப் பிரித்தபடி தரை பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தவள், “மங்கை” என்ற அழைப்பில் தூக்கிவாரிப்போட எழுந்தவள் எதிரில் நின்றிருந்த சித்தி செல்வரசியை அடையாளம் கண்டு முறைத்து, “யார் நீங்க? இங்க மங்கைன்னு யாரும் இல்லை” என்றாள்.
“இல்லன்னு நினைச்ச என் அக்கா பொண்ணு எதிர்ல நிற்கிறியே மங்கை” என்றார் கனிவாக.
“இல்ல நீங்க யாரோன்னு...” தடுமாறியவள் பார்வை யாராவது வரமாட்டார்களா என்று கதவைப் பார்த்தது.
“யாரோகிட்ட பேசுற அளவுக்கு கண்ணும் காதும் வேலை செய்யாமல் போகல மங்கை. என் அக்காப் பொண்ணுகிட்டதான் பேசுறேன்னு தெரிஞ்சிதான் பேசுறேன்” என்றார் அழுத்தமாக.
அவரை வெறித்தபடி நின்றிருந்தவள், “ஆமா. நான் தமிழரசி பொண்ணு மங்கையர்கரசிதான். தெரிஞ்சிருச்சில்ல. போங்க... போய் உங்க புருஷன் புள்ளைகிட்ட நீங்க கொன்னதுல ஒண்ணு மிச்சமிருக்குன்னு சொல்லி கூட்டிட்டு வாங்க. அவனுங்க வரட்டும். என்னால அவங்கள்ல ஒருத்தனையாவது கொல்றளவுக்கு தைரியமிருக்கு.” இருக்குமிடம் உணர்ந்ததால் பல்லைக்கடித்தபடி பேசினாள் திருமொழி.
“மங்கை” என்ற அலறலுடன் அவளை அணைத்து, “இப்படிலாம் பேசாதமா. வயசுப்பொண்ணு குடும்பம் குழந்தைன்னு...”
வேகமாக அவரைத் தன்னிடமிருந்து விலக்கியவள், “ஓ... உங்க வீட்டாளுங்க உயிரோடிருக்க நான் கல்யாணம் குடும்பம்னு இருக்கணுமா? எங்க இருக்கவிட்டாங்க அவங்க. எங்க குடும்பத்தை என் கண்ணு முன்னால... ஐயோ! இப்ப நினைச்சாலும்... வேண்டாம். போயிருங்க” என்றாள் அலறலாக.
“நீ நினைக்கிற மாதிரி இல்லமா. வேணும்னா இப்பவே வந்து அவங்களைக் கொல்றியா? வா நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவர், “உன் நிலைமை புரியுது மங்கை. நான் சொல்ல வந்தது குடும்பம் குழந்தைன்னு இருக்க வேண்டிய பொண்ணை... பழி இரத்தம்னு நிற்க வச்சிட்டாங்களேன்னுதான். என் அக்கா வம்சம் வாழையடி வாழையா தழைக்கணும். அதுக்கு நீ அவங்க கண்ணுல படக்கூடாது.”
“இல்ல. நான் அவங்களைப் பழிவாங்கியே தீருவேன். என் மொத்த குடும்பத்தையும் அழிச்சவங்களைப் பழிவாங்காம எனக்குன்னு ஒரு வாழ்க்கைக் கிடையவே கிடையாது.”
“அப்படி சொல்லாதமா. பழிவாங்கணும் அவ்வளவுதான? வா வந்து உன் புருஷனோட பழிவாங்கு. நான் குறுக்க நிற்கமாட்டேன். சத்தியம்” என்றார் அவள் கைபிடித்து.
“சித்தீ” என்று செல்வரசியின் கைபிடிக்க...
“எப்பவும் உன் சித்திதான் மங்கை. நாங்க வாழ்ற வாழ்க்கையே மனிதப் பலி கொடுத்த அரியாசனத்துலதான்னு தெரியும். அவங்க அனுபவிக்கிற அத்தனை சொத்தும் சுகமும் உன் அப்பா, அத்தையோடது. அதை நீ கேட்டு அவங்க மறுக்க முடியாதுமா.”
“சொத்துக்காகச் சொந்தங்களைக் கொன்னு புதைச்ச அந்தச் சொத்து எனக்கு வேண்டாம் சித்தி. அதேநேரம் அவங்களும் அனுபவிக்கக்கூடாது. அதுக்கு நான் விடவும்மாட்டேன். அவங்களை நேருக்கு நேர் சந்திக்கிற சந்தர்ப்பத்துக்குத்தான் காத்துக்கிட்டிருக்கேன்” என்றாள் ஆத்திரக் குரலில்.
“உன் வரவுக்காக நானும் காத்திருக்கேன். மங்கை என்னால அதிக நேரம் இங்க நிற்க முடியாது. நான் வர்றேன்” என்று நகர்கையில் தன்னைத்தேடி வந்த பேத்திகளை அழைத்துச் சென்றார்.
கார்மேகம் குடும்பத்தினர் காரில் ஏறிய சமயம் இளங்கதிரையும், சிவகாமியையும் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார் குருமூர்த்தி.
அவர்கள் முன் நின்ற இளங்கதிருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தந்தையின் “கதிர் வா. உன் மாமன் ஒருத்தன் வந்திருக்கான் பார்த்துட்டு வரலாம்” என்று அழைத்து வந்தவர் கார்மேகத்தின் முன் நிறுத்துவார் என்பதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
‘இவரிடம் நான் சரிசமமாக நிற்பதா’ என்ற எண்ணம் வர சிறிது அதிர்வு வந்த போதும், மறைத்து மரியாதையாகப் பேசியவனுக்குள், ‘அப்பாவுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? அப்பா நட்பாகப் பேசும் ஒருவர் ஏன் எனக்கு மட்டும் எதிரியாகத் தெரிகிறார்? திருமொழிக்கு எதிரி என்பதாலா? இல்லையே பார்த்ததுமே இவரை எதோ செய்யத் தோன்றியதே அது ஏன்?’ மனம் குழம்பியது.
அவர்கள் சென்றதும் தந்தையிடம் வந்தவன், “இவங்க குடும்பம் எப்படிப்பா உங்களுக்குப் பழக்கம்? எனக்கென்னவோ இவரையும் அவர் பையனையும் கொஞ்சம் கூடப் பிடிக்கலப்பா” என மனதிலுள்ளதைச் சொன்னான்.
“அவங்க கொஞ்சம் ஒரு மாதிரின்னு தெரியும்பா. எப்பவாவது பார்த்தா பேசுறதுதான். பதினைந்து வருஷம் முன்ன பார்த்தது. அதுக்குப்பிறகு இப்பதான் பார்க்கிறேன். உறவுக்காரங்களைப் பார்த்துட்டுப் பார்க்காத மாதிரி போக முடியாது. அதுவும் குடும்பத்தோட வந்திருக்கோம்.”
“ம்... சரி. அதை விடுங்க தந்தையாரே.. உங்க முறைப்பொண்ணு இங்க இருக்கிறதா கேள்விப்பட்டேன். நிஜமா?”
மகனின் கேலியை உணராது, “ஆமாடா மகனே மறந்தே போயிட்டேன். அவ வேற உன்னைப் பார்க்கணும்னு கேட்டா. நான்தான் இவனைப் பார்த்ததுல அவளை மறந்துட்டேன்” என்றார்.
“சித்தி கேட்டுக்கோங்க. மறந்தாச்சாமாம்” என்று ஏற்கனவே தாய் தன்னிடம் அறிமுகப்படுத்திய காமாட்சியிடம் போட்டுக்கொடுத்தான்.
“ஏன் மச்சான்? நினைவு வச்சிக்கிற அளவுக்குக் கூடவா நம்ம உறவுமுறை இல்லாமல் போச்சி” என்றவர் குரலில் சிறு கலங்கத்தைக் கண்டாரோ குருமூர்த்தி...
‘ஏன்டா நீ’ என மகனை பார்வையால் திட்டி, “அச்சோ அப்படிலாம் இல்லமா. நான் சாதாரணமா சொன்னேன்.”
“இல்ல அப்படித்தான். அதனாலதான் நான் ஊருக்குக் கூப்பிட்டதும் சரின்னு சொல்லிட்டு எனக்குத் தெரியாமலேயே ஊருக்குக் கிளம்பிட்டீங்க.”
“யார் சொன்னாங்க உனக்கு?” என்று மனைவியைக் காண... அவரோ வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். ‘மத்த நேரம்லாம் பையன்கிட்ட மட்டும் பேசிட்டிருப்பா. இப்ப மட்டும் யார்கிட்டயோவா? நம்பமுடியலையே’ என நினைக்க,
“நீங்கதான மச்சான் சொன்னீங்க?” என்ற காமாட்சியிடம்... “நானா?” எனக்கேட்க... “ஆமா நீங்கதான். இப்ப போறாங்களே அவங்ககிட்ட நானும் அடுத்து கிளம்புறேன்பா சொன்னீங்க?”
“அ..அது அதும்மா.. அவங்களுக்காகச் சும்மா” என்றவருக்கு ‘இதையெல்லாமா இவள் கேட்டாள்’ என்றிருந்தது.
“பேச்சை மாத்தாதீங்க மச்சான். வரமுடியுமா? முடியாதா?”
மனைவியையும் மகனையும் பார்த்தவர் “சரிமா வர்றோம்” எனவும், அவர்கள் பேசுவதைக் கேட்டும் கேட்காததுபோல் நின்றிருந்த சிவகாமிக்குள் ‘போலாமா ஊர்கோலம்... பூலோகம் எங்கெங்கும்!’ மனதினுள் பாடல் ஓடியது.
அப்பா, சித்தியின் சண்டையை ரசித்தபடி சென்ற கதிரின் காதில் விழுந்தது இருவரின் காரசார விவாதம். அதில் கண்ட உண்மை அதிர்ச்சியுடனான ஆச்சர்யத்தைக் கொடுத்தது.