• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
7



மேலே சுவற்றில் அமர்ந்திருந்த சுபாஷுடன், அவன் நண்பன் இருப்பதைப் பார்த்த கார்த்திகா திரும்ப யத்தனிக்கையில், “டேய்! பக்கத்து வீட்டுல சூப்பரா ஒரு பொண்ணு இருக்குடா. பக்கத்துலயே ஒரு பொண்ணை வச்சிக்கிட்டு நீ ஏன்டா யாரையோ மேரேஜ் பண்ணிக்கப் போற?” என்று மணமகனை வம்பிழுக்க,

யாரைச் சொல்கிறான் என்பதை உணர்ந்தவன் உதடுகள் புன்னகையை தத்தெடுக்க அதை மறைத்து, “அழகான பொண்ணா? யாருடா அது எனக்குத் தெரியாம பக்கத்து வீட்டுல?” என்று அங்கு நின்ற கார்த்திகாவைப் பார்த்தவன், ‘நீ அழகா எனக்குத் தெரியலையே?’ என்பதை பார்வையால் அவளுக்கு உணர்த்தினான்.

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா.” அவளின் உதடசைவையும் முறைப்பையும் சேர்த்து அழகாக பெற்றுக் கொண்டான்.

“என்னடா இப்படி சொல்லிட்ட. அந்தப்பொண்ணு எவ்வளவு சூப்பராயிருக்கு.”

அவன் பேச்சுக்களை ரசிக்க மனமில்லாதவன், “ஹரீஷ் நாம வேற பேசலாம்” என்றான்.

“டேய் வேற பேசுறதுக்கு என்னயிருக்கு. எனக்கு ஜாதில்லாம் முக்கியமில்ல பேசாம அந்தப் பொண்ணை கேட்கச் சொல்லவா?”

“ஏய்! ஸ்டாப் இட். அறிவிருக்காடா உனக்கு. அவ உன் ஃப்ரண்ட் கட்டிக்கப்போற பொண்ணாயிருக்கப் போறா.”

கடுப்புடன் சொன்னவனுக்கு ஏன்டா ஃப்ரண்ட்ஸ் பிடித்தோம் என்றிருந்தது. ‘ஒருத்தன் அவளைப் பார்த்ததுமே ஒரே ஜாதியாயிருந்தா கல்யாணம் பேசலாம்ன்றான். இவனோ எதுவுமே முக்கியமில்லை பொண்ணு அழகாயிருக்கா போதும்னு சொல்றான். கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது. அவளைப்பற்றிய அழகு ஆராய்ச்சியையும் தாண்டி, அவளைப் பிடிச்சிருக்கா இல்லையான்னு கூட தெரியல’ என தன்னையே நொந்து கொண்டான்.

சுபாஷை முறைத்தபடி மாடியைவிட்டு இறங்க ஆரம்பித்தவளுக்கு அவனின் அந்த வார்த்தையைக் கேட்டதும் சிரிப்பு தன்னாலேயே வந்தது. “லூசு மாம்ஸ்.. வெளிப்படையா சொல்ல வேண்டியதுதான அவ என்னோட ஒய்ஃப்னு. எதுக்கு மறைக்கணும். இருங்க கல்யாணத்துக்கு அப்புறமா கவனிச்சிக்கறேன்” என்று கீழே சென்றாள்.

“அதான் இல்லையேடா?” என்றான் ஹரீஷ்.

“இல்லைன்னு உனக்குத் தெரியுமா? அதெல்லாம் இருக்கும் பேசாம வந்த வேலையை மட்டும் பார்த்துட்டு ஊரைப் பார்த்துக் கிளம்பு.”

“ஹ்ம்.. அழகை ரசிக்க விடமாட்டீங்களே!” என முணுமுணுத்தவன், “சரி உன்னோட உட்பி போட்டோவையாவது காட்டு. எந்த ஊரு? உள்ளுரா இல்ல வெளியூரா?”

“இதோ இதான் பொண்ணு” என போட்டோவைக் காண்பிக்க... “ஹான் அடப்பாவி! அண்ணியா இவங்க?” என வாயைப் பிளந்தவன் மறுநாள் மாலை வரை மூடவில்லை.

மாலை ரிசப்ஷனுக்கு ஜோடியாய் நின்றவர்களைப் பார்த்து, சொந்தங்கள் யாவும் நல்ல பொருத்தம் என்று மனதார வாழ்த்த, பெற்றவர்களுக்கு அதைவிட சந்தோஷம் ஏது. ரிசப்ஷன் முடிந்து பந்தியும் முடிந்து, நெருங்கிய உறவினர்களை மாடியிலிருந்த அறைகளில் தங்க வைத்து... அனைவரும் அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருக்க, சரியாக வந்து நின்றான் அந்தப் புதியவன்.

“ஹாய் கார்த்தி! சாரிமா கொஞ்சம் லேட்டாகிருச்சி. நீ ரிசப்ஷனுக்கு முன்னாடியே வரச்சொன்ன. நம்ம சந்திப்புக்கு நிறைய தடங்கல்டா. சரி வா காலையில ரிஜிஸ்டர் மேரேஜ்கு ரெடி பண்ணிட்டேன்” என்றான் நிதானமாக எந்தவித பயமுமில்லாமல்.

அவனின் வார்த்தைகளில் அதிர்ந்தது பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களும்தான். இன்னுமே அவர்களுடனிருந்த நெருங்கிய ஒருசில உறவினர்களும்தான்.

கார்த்திகா வேகமாக சுபாஷைத்தான் பார்த்தாள். ‘சொன்னதைச் செய்துவிட்டானா? என் பெயரைக் கெடுத்துத்தான் அதைச் செய்ய வேண்டுமா?’ மனதில் அளவிட முடியா கோபம் அதை முகத்தில் அதிகம் காட்டாமல் எப்பொழுதும் போல் தனக்குள்ளேயே போட்டு அழுத்திக் கொண்டாள். அது வெடித்துச் சிதறினால் தாங்குவானா அவளின் நாயகன்!

‘சுபாஷோ யார் இவன்?’ என்ற கேள்வியுடன் கார்த்திகாவைப் பார்த்தான். அவனால் அவளை சந்தேகப்பட முடியவில்லை. அவள் பார்வை தன்னை சந்தேகமாகப் பார்ப்பதை உணர்ந்தவன், ‘நான் இவளைப் பார்த்தா அதிலொரு அர்த்தமிருக்கு. இவ ஏன் என்னை இப்படி பார்க்கிறா? என்னவோ நான் அவனை இப்படிப் பேசச்சொல்லி கூட்டிட்டு வந்த மாதிரி.’ ஒன்றும் புரியாமல் வாய்திறந்து எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.

“என்ன கார்த்தி அவங்கதான் ஷாக்காகி நிற்கிறாங்கன்னா, உனக்கென்ன வந்திச்சு. ஏன் அதிர்ச்சியடையுற மாதிரி லுக் குடுக்கிற?” என்றான் அப்புதியவன்.

“அதிர்ச்சிதான் கொஞ்சம் அதிகமாவே இருக்கு” என்று சுபாஷைப் பார்த்தபடி சொன்னவள் அந்தப் புதியவனின் புறம் திரும்பி, “சரி நடிக்கிறதுக்கு எவ்வளவு அமௌண்ட் வாங்கின?” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.

“கார்த்திமா யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டடா நீ. நேத்து கூட மொட்டை மாடிக்கு வந்து பேசலாம்னு வந்தவ, அங்க உன்னோட உட்பி, சே... அந்த வார்த்தை வேண்டாம். உன் மாமா பையன் அவன் ப்ரண்டோட இருக்கான்னு சொல்லி லேட் நைட்ல பேசுறேன்னு மெசேஜ்கூட பண்ணியிருந்தியேடா. ஏன்டா இப்படி மாத்திப் பேசுற. அதுக்குள்ள இவங்கள்லாம் உன் மனசை மாத்திட்டாங்களா. வேண்டாம் கார்த்திமா அதெல்லாம் தப்பு” என்றவன் குரலில் ஒரு நடுக்கம் இருந்தாலும் அதை மறைத்து...

“சரி விடு. நான் தனியா வந்ததாலதான தெரியாத மாதிரி ஆக்ஷன் குடுக்கிற. இதே நமக்குத் தூது போனவங்களை கூட்டிட்டு வந்திருந்தா சொல்லியிருப்பியா? என்னை ஏமாத்தலாம்னு நினைக்காத. என்ன... திடீர்னு உன் மாமா பையன்மேல சாப்ட்கார்னர் வந்து அவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறியா! அதுமட்டும் நடக்காது கார்த்திகா. நான் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லவனோ, அவ்வளவுக்கு அவ்வளவு கெட்டவன். வா போகலாம்” என்றான் கோபமாக.

“என்ன சார் உளர்றீங்க. எங்க அக்கா யாரையும் லவ் பண்ணல. அப்படி பண்ணியிருந்தா எங்ககிட்ட சொல்லியிருப்பா” என்று கீர்த்திகா அவனிடம் பாய்ந்தாள்.

“காதலிக்கிறவங்க வீட்ல சொல்லிட்டா காதலிப்பாங்க. த்ரீ இயர்ஸ் லவ்மா. இப்படி ஒரே நாள்ல தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டா அப்படியே விட்டுருவோமா?”

“நம்புற மாதிரியில்லையே!” என்றாள் யோசனையாக.

“எப்படிங்க நம்பமுடியும். நான் ஒரு மிடில் க்ளாஸ் பேமிலி.”

“நாங்கனாப்ல ஹை சொஸைட்டி பேமிலியாவா இருக்கோம்” என கிண்டலாக பதிலளித்து, “முதல்ல மேட்டருக்கு வாங்க சார்” என்றாள்.

“எதாவது இருந்தால்தான கீர்த்தி, சார் சொல்வார். ட்ராமா பண்ண வந்தவருக்கு என்ன தெரியும். அதான் கதை விட்டிட்டிருக்காரு” என வித்யா அவனை கேலி செய்ய...

“என்ன என்னை கலாய்க்குறதா நினைப்பா?”

“அப்ப ஒன் சைடு லவ்வா. அதான் இந்த வேகம். எதோ திட்டத்தோடதான் என் அக்காவை தேடி வந்திருக்கீங்க?” என்றாள் கோபமாக.

“ஏய் என்ன என் வாயாலயே நான் உங்க அக்காவை காதலிக்கலைன்னு சொல்வேன்னு எதிர் பார்க்கறியா? அப்படில்லாம் சொல்ல முடியாது.”

“வேற எப்படி சொல்றதா உத்தேசம்?” என்று சுதாகரும் சுபாஷிணியும் வர...

“ஹலோ என்ன என்னை மிரட்டுறீங்களா? இப்படி எதாவது நடக்கும்னுதான் வரும்போதே போலீஸ்கு இன்பார்ம் பண்ணிட்டு வந்தேன். யார்கிட்ட” என்றான் மிதப்பாய்.

“சரி இப்ப என்ன செய்யணும்ன்ற?”

“கார்த்தியை என்னோட அனுப்பிவைங்க. அவளை நான் நல்லா பார்த்துப்பேன். அவளுக்குப் பார்த்த பையன்தான் நேத்து வரை கல்யாணத்தை நிறுத்தப் போறேன்னு சொன்னானே. அப்புறம் என்ன? அவளை நான் கூட்டிட்டுப் போயி ராணி மாதிரி பார்த்துக்கறேன்.”

பளாரென்று அறை விழுந்தது அந்த புதியவனுக்கு. கையை உதறியபடி சுதாகர் நின்று கொண்டிருக்க...

“என்னை அடிக்க நீங்க யார் சார்? நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு என்னை நீங்க அடிச்சீங்க? உங்க பொண்ணும் மேஜர். நானும் மேஜர். நீங்க தடுத்தா நாங்க கேட்டிருவோமா? என்ன கார்த்தி இதெல்லாம். வாயைத் திறக்காம நின்னுட்டிருக்க? உனக்கும் சேர்த்து நான் எப்படி கத்துறேன். நீ என்னடான்னா...” என அவளை குற்றம் சாட்டினான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“அவளை ஏன்டா கேட்கிற. என் மருமகளைப் பற்றி என்கிட்டேயே தப்பா பேசுவியா. முறைக்கு மட்டுமில்ல, அவள்தான் என் பையனுக்கு மனைவின்னு குழந்தையில முடிவு பண்ணினது. அதை மாத்தணும்னு நீ நினைச்சா விட்ருவோமா. கண்டிப்பா என் மருமக நீ சொன்ன மாதிரி ஒரு தப்பை பண்ணியிருக்க மாட்டா. அதை உண்மைன்னு நீ நிரூபிச்சாலும் நாங்க நம்பமாட்டோம்.” என்றார் திடனாக.

கார்த்திகாவிற்கு அவரின் நம்பிக்கையான அன்பில் கண்கலங்கியது. முதல் முறையாக ‘ஏன் மாமா வீட்டினரிடம் பழகாமல் போனோம்’ என்ற எண்ணமே வந்தது.

“என்ன சார் கதையெல்லாம் சொல்றீங்க. உங்க குடும்பத்துக்குள்ள பகைன்னுதான கார்த்தி சொல்லியிருக்கா. இதென்ன புது ட்விஸ்ட் வைக்கிறீங்க. இது சரியில்லையே.”

“ஏய் வேண்டாம். முதல்ல என்னை அவள் இவள்னு பேசுறதை நிறுத்து. எனக்கு அசிங்கமாயிருக்கு” என்று முகத்தில் அருவருப்பை காண்பித்தாள்.

“கார்த்தி ஏன் இப்படிப் பேசுற. நாம அப்படியா பழகியிருக்கோம்” என அவனும் அசராமல் அவளுக்கு பதிலளித்து, “சொல்லுங்க சார்? உங்க பகை புகை மாதிரி போயிருச்சா?” என்றான் நக்கலாக.

“பகையா அது நாங்க போட்டிருந்த வேஷம். எங்களுக்குள்ள எந்த பகையுமில்ல” என்று சுபாஷிணி சொல்ல, சுற்றியிருந்தவர்கள் அனைவருக்கும் தலைசுற்றியது இதென்னடா புது பூதம் என்று.

மற்றதை மறந்து, “அம்மா என்ன சொல்றீங்க?” என்ற பெரிய மகளிடம், சுபாஷிணி ஏதோ சொல்ல வாய்திறக்க...

“நான் சொல்றேன்மா” என்று அங்கு வந்தார், அதுவரை நடந்ததை பொறுமையாக பார்த்திருந்த அவளின் அப்பா தணிகாசலம்.

“அப்பா.. என்னப்பா பகைன்னு சொல்லி பக்கத்துல இருக்கிற மாமா வீட்டுக்கு கூட அனுப்பமாட்டீங்க. இதுவரை அவங்களும் நம்மகிட்ட பேசினதில்ல. ஏன் இவங்க அன்னைக்கு வீட்டுக்குள்ள வந்த மறுநாள் நிச்சயம் முடியுற வரைக்கும் இவங்க முகத்தை முழுசா பார்த்ததில்லை” என்றாள் சுபாஷின் புறம் கைநீட்டி.

“மாமா அத்தைன்னு உரிமையா உறவு கொண்டாட முடியாம இருந்திருக்கோம். மாமா வீட்ல எல்லாருமே நல்லவங்களா இருக்காங்கன்னா, தப்பு உங்ககிட்டத்தான் இருக்குதாப்பா?” அப்பாவின் மேல் குறை சொன்னாலும், அப்படி இருக்கக்கூடாது என்றும் வேண்டினாள். தனக்கு எல்லாமாகவும் இருப்பவராயிற்றே!

“கார்த்தீ” என்ற தாயின் அதட்டலில் அமைதியானவள் அப்பாவையே பார்த்திருக்க...

“விடு சுபா.. அவள் கேட்கிறதுல எந்த தப்பும் இல்லையே. ஐம் சாரிமா. தப்பெல்லாம் என் பேர்லதான்!”

“புரியலப்பா?”

“உங்க மாமாவும் அத்தையும் அப்பா அம்மா இல்லாத பிள்ளைங்க. அவங்களைப் பெத்தவங்க உங்க மாமாவோட டீன் ஏஜ் டைம்ல இறந்துட்டாங்க. அப்போதிருந்தே சுபாவுக்கு எல்லாமே அவள் அண்ணன் சுதாகர்தான். தானும் படிச்சி தங்கையையும் படிக்கவச்சி, நல்ல வருமானம் வர்ற துறையில வேலைக்கு சேர்ந்து, அவங்க ஒவ்வொரு வளர்ச்சியிலும் சுதாகரோட உழைப்பிருக்கு. அதைப் புரிஞ்சி புரிதலோட நடந்த சுபாவை யாருக்குத்தான் பிடிக்காது” என்றவரின் பார்வை மனைவியின் புறம் திரும்பியது அன்பாக.

“சுபாவுக்கு கல்யாணத்துக்கு பார்த்தப்ப அவங்க ரிலேடிவ் யாரோ என்னை கைநீட்ட, விசாரணைன்ற பெயர்ல உங்க மாமா வச்சாரு பாரு டெஸ்ட்டு.. ஷப்பா! அவரை திருப்திப்படுத்தவே ரொம்ப கஷ்டப்பட்டேன். என்னோட ஆதி முதல் அந்தம் வரைன்னு எல்லாத்தையும் நோண்டியெடுத்து விசாரிச்சிதான் என்னை மாப்பிள்ளையா செலக்ட் பண்ணினார். அதுக்குப் பின்னதான் மாப்பிள்ளை இவர்னு சுபாவுக்கே போட்டோ காண்பிச்சார்.”

“கல்யாணத்துக்குப் பின்னாடி வீட்டோட மாப்பிள்ளையா இருந்தா எனக்கு மதிப்பிருக்காதுன்னு நினைச்சி, அவரே பக்கத்துல பக்கத்துலன்னு ஒரே மாதிரி வீடு கட்டி எங்களை குடிவச்சிட்டார். அப்பா அம்மா கிராமத்துல இருந்து வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. சரி கடைசி காலத்துல அவங்களை நம்மளோட வச்சிப் பார்த்துக்கலாம்னு நினைச்சிருந்தேன். அதுவும் என் விஷயத்துல நடக்காம போயிருச்சி. அதுக்குள்ள அவங்களுக்கு அவசரம் அடுத்தடுத்து கிளம்பிட்டாங்க.”

“வீட்ல நாங்க ரெண்டு பேர் மட்டும்தான். சுபாவை எனக்கு ரொம்ப பிடிச்சித்தான் அவங்க வீட்டு பக்கமாயிருந்தாலும் பரவாயில்லைன்னு இங்க வந்தேன். ஆனா, அவ எப்பப்பாரு அண்ணா வீடே கதின்னு இருந்தா. நான் வரும்போது ஆசையா அழைக்க, அரவணைக்க ஆளில்லாமல் தவிப்பா இருந்தது. கல்யாணமாகியும் லைஃப்ல எதோ குறைஞ்ச ஃபீலிங்.”

“அவளுக்கும் என்னை பிடிக்கும்தான். அதையும் மீறி அவளோட அண்ணன் பாசம்தான் பெருசாயிருந்தது. வீட்ல ஒருவித தனிமையை உணர ஆரம்பிச்சப்ப, சின்னச்சின்ன விஷயத்திற்கும் கோபப்பட ஆரம்பிச்சேன். இதை இப்படியே விடக்கூடாதுன்னு உங்க அம்மாகிட்ட சொன்னப்ப, அது அவளுக்கு சின்னப்பிள்ளைதனமா தெரிஞ்சது. நீங்க பிறந்த பிறகும் இதுவே தொடர, எங்க என் பிள்ளைங்களுக்கு அம்மா பாசம் சரியா கிடைக்காம போயிருமோன்னு தோணிச்சி. அந்தளவு உங்கம்மா போக மாட்டாள்தான், ஆனாலும் மனதில் ஒருவித பயம். இதை தொடர்கதையாக்க வேண்டாம்னு நினைச்சேன். உங்கம்மா என்னை வெறுத்தாலும் பரவாயில்லைன்னுதான் அந்த முடிவெடுத்தேன்.”

“ஒருநாள் நானாதான் காரணமே இல்லாம உங்க மாமாவை வம்பிழுத்தேன். முதல்ல தங்கைக்காகன்னு பொறுத்தவர், என் அளவு மீறின பேச்சைக் கேட்டு அடிக்க கை ஓங்க, அதையே பிடிச்சிட்டு என் பொண்டாட்டி இனிமேல் உன் வீட்டுக்கு வரமாட்டான்னு சொல்லிட்டேன். சொல்லிட்டேன்தான்னாலும், பரவாயில்ல அவ என்னோடவே இருக்கட்டும்னு உங்க மாமா சொல்லிடுவாரோன்ற பயம். அதைவிட எனக்கு என் அண்ணன்தான் முக்கியம்னு உங்க அம்மா அங்க போயிடுவாளோன்றது இன்னொரு பயம்.”

“அப்பா இவ்வளவு நல்லவரா நீங்க?” என்றனர் அவரின் பெண்கள் கிண்டலாய்.

“ஹா..ஹா வேற வழியில்லையே. நான் அவங்க பாசத்தை பகைன்ற பெயர்ல கட்டிப்போட்டேன். உடனே அவங்களை ரொம்ப நல்லவங்கன்னு நினைக்காதீங்க. அதுக்காக அவங்க பேசாமல்லாம் இல்ல. உங்களுக்கு வேணும்னா மாமா உறவு இல்லாமல் இருக்கலாம். ஆனா, அவங்க பிள்ளைங்களுக்கு அத்தைன்னா உயிர். ஆசிரமத்து வேலையில் சேர்த்து விட்டது உங்க மாமாதான். வீட்டுல மட்டும்தான் பேசுறதில்ல. வெளியில அதே பாசம் தொடரத்தான் செய்தது.”

“சண்டைக்கு அப்புறம் உங்கம்மா நான் வர்ற நேரம் வீட்லயிருந்தாளா, அந்த டைம் அவளை வீட்ல பார்க்கிறது ஒரு பெரிய சந்தோஷம் எனக்கு. கொஞ்சநாள் உம்முன்னு முகத்தைத் தூக்கி வச்சிட்டுத்தான் இருந்தா. நீ எப்படியிருந்தாலும் என்னோட இருந்தா போதும்னு விட்டுட்டேன். கொஞ்சநாள் கழிச்சி அண்ணன் தங்கை ரெண்டு பேருமே, என்னோட உணர்வுகளை புரிஞ்சி நடந்துக்கிட்டாங்க.”

“சாரி மாமா” என்றார் சுதாகரைப் பார்த்து.

“மன்னிப்புன்னா நான்தான் மாப்பிள்ளை கேட்கணும். இதே உங்க இடத்துல வேற ஒருத்தராயிருந்தா எங்கோயோ கண்காணாத இடத்துக்கு சுபாவை கூட்டிட்டுப் போயி என் கண்லயே காட்டியிருக்க மாட்டான். நீங்க எங்க பாசத்துக்கு மதிப்பு குடுத்துத்தான் இந்த வீட்டையும் காலி பண்ணல. நாங்க சந்திக்கிறதையும் தடுக்கல. ஏன் சண்டைக்குப் பிறகு அவ கோபமா இருந்தப்பவும் அன்பைப் பொழிஞ்சீங்க.”

“அப்பத்தான் எங்களுக்கு உங்க மனசு புரிஞ்சது. உங்க இடத்துல இருந்து யோசிச்சப்ப நீங்க பண்ணினது சரின்னு தோணிச்சி. கோபம் போயி ஒரு மரியாதை உங்கமேல. உங்க ஆசையைக் கெடுக்க வேண்டாம்னு எங்களோட சந்திப்பையும் குறைச்சிக்கிட்டோம்” என்றார் தங்கள் தரப்பாய்.

“அப்புறம் ஏன்பா இந்த கல்யாணம் நடக்கக்கூடாது. உனக்கு நான் ஹெல்ப் பண்றேன் சொன்னீங்க?”

மகளின் கேள்வியில் அவள்புறம் திரும்பியவர், “கார்த்திமா நீயே சொல்லு? இவ்வளவு பண்ணினவங்க உன்னை இன்னொருத்தருக்கு விட்டுக் குடுத்திருவாங்களா. எப்படியிருந்தாலும் சுபாஷ்தான் உனக்கு மாப்பிள்ளை. அன்னைக்கு சூழ்நிலை அப்படியாகும்னு நினைச்சிக்கூட பார்க்கலை. அதே சாதகமாகிருச்சி உங்க மாமாவுக்கும், அம்மாவுக்கும். அவங்களுக்குன்னு தனியா ப்ளான் பண்ண சான்ஸ் இல்லாம பண்ணிட்டீங்க.”

“அந்நேரம் உனக்கு தப்பே பண்ணாம தண்டனையான்னுதான் தோணியிருக்கும். முதல்ல நான் உனக்கு ஆதரவா பேசி அப்புறம்தான் மெல்ல சுபாஷை உனக்குப் புரிய வச்சேன். இல்லன்னா இப்பவும் அவனைப் பிடிக்கலன்னுதான் சொல்லிட்டிருப்ப. பிடிக்காத வாழ்க்கை என் பொண்ணு வாழுறதைப் பார்த்திட்டிருக்க முடியாதில்லையா? அதான்.”

“ஆக மொத்தம் நான்தான் எதுவும் தெரியாம இருந்திருக்கேன்ல?” என்ற குரலில் அனைவரும் திரும்பினார்கள்.

அந்தக் குரலின் சொந்தக்காரரை உணர்ந்த சுபாஷிணி, “அண்ணி அப்படில்லாம் இல்ல. என் புருஷனுக்கு வந்த ஃபீலிங் உங்களுக்கும் இருக்கலாம்னுதான் எங்களுக்கு தோணிச்சி. அதனாலதான் உங்களுக்கும் நாங்க சண்டையில பிரிஞ்சிருக்கிறதாகவே காண்பித்தோம்.”

“அதுக்காக இத்தனை வருஷமா ஏமாத்துவீங்களா?” என்றார் அழுகுரலில்.

“ஏய் வாணிமா என்ன நீ இப்படில்லாம் பேசிட்டிருக்க?” என மனைவியின் கையைப் பிடித்து சமாதானம் பேச வந்தவரை,

“தொடாதீங்க என்னை” என அவரைவிட்டு விலகியவர், “எல்லாரோட எண்ணமும் ஒரேமாதிரி இருக்கும்னு உங்களுக்கு யார் சொன்னது. அண்ணாவோட தனிமை அவங்களை அப்படிப் பண்ண வச்சது. நான் இதுநாள் வரை அந்த மாதிரி சொன்னதில்லையே. உங்க ரெண்டு பேர் அன்பையும் பார்த்து என்னைக்காவது நான் முகம் சுழிச்சிப் பார்த்திருப்பீங்களா? எப்படி மனசு வந்தது உங்களுக்கு?” வாணி தன் மன ஆதங்கத்தை சொல்லி கண்கலங்கினார்.

“இல்லதான். இருந்தாலும் உனக்குள்ளேயும் அந்த ஏக்கம் வரவிடக்கூடாதுன்னு இப்படிப் பண்ண வேண்டியதாகிருச்சிமா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ” என கெஞ்சி கொஞ்சி மனைவியை மலையிறக்கினார் சுதாகர்.

“அடடடடா நான் எதுக்கு வந்தா நீங்க உங்க பேமிலி ப்ளாஷ்பேக் பேசிட்டிருக்கீங்க. கார்த்தி நீ வரப்போறியா இல்லையா? இன்னும் இங்கேயே நின்னா உனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. அப்புறம் நம்ம மூணு வருஷத்துக் காதல் முச்சந்தியிலதான் நிற்கும். இப்ப நீயா வரலன்னா கடத்திட்டுப் போயிருவேன் சொல்லிட்டேன்” என்றான் சற்று மிரட்டலாகவே.

அவனின் அந்த வார்த்தையைக் கேட்ட சுபாஷின் விழிகள் அவனை வெறித்திருந்தது. கண்களில் பவர் இருந்திருந்தால் பார்வையிலேயே எரித்திருந்திருப்பான். அவன் சட்டையைப் பிடித்து சண்டைபோட நினைத்திருந்தாலும் எது அவன் எல்லை என்பதை அறியவே இவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்தான். அவனின் பேச்சி எல்லை மீறுவதை உணர்ந்தவன் அவனை அடிக்கக் கிளம்ப அதற்குள் கார்த்திகா தன் கட்டுப்பாட்டை உடைத்திருந்தாள்.

“உன்னை இப்படிப் பேசச்சொல்லி யார் அனுப்பினது?” என்று அவன் சட்டையைப் பிடித்தார் சுதாகர்.

“யார் என்ன கேட்டாலும் அவர் உண்மையை சொல்லமாட்டார் மாமா” என்ற கார்த்தியின் வார்த்தை வந்தவனுக்கு சாதகமாக இருக்க, பார்வை சுபாஷின் மேல் குத்தீட்டியாய் சொருகியது. ‘இவ்வளவு நடந்தும் கூட அவன் வந்து தடுக்கவில்லை என்றால் அனுப்பினது இவன்தானே!’ அவன்மேல் கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையும் போக, அவளையறியாமல் நெஞ்சின் பாரம் கண்ணிற்கு வர ஆரம்பித்தது. ஏனோ அவன் சொல்லியிருந்த “நம்பிக்கை வை” என்ற வார்த்தையை மறந்திருந்தாள்.

“ஏன்மா? உனக்கு யார்னு தெரியுமா?”

வந்திருந்தவனுக்கு சப்போர்ட்டாக பேசுவதாக இருக்கும் தன் வார்த்தைகளில் கூட தன்னை யாரும் சந்தேகப்படவில்லை என்பது புரிய தொண்டையடைக்க அழுகை விம்மலாக வெடிக்குமுன் அதை அடக்கினாள்.

“கார்த்திமா என்னடா? ஏன் எமோஷனலாகுற? இவன் சொல்றதை நாங்க யாரும் நம்பலடா. சொல்லு யார் அனுப்பினது?” என்றனர் சுபாஷிணியும் வாணியும்.

“சொல்லுமா. மாமா இருக்கேன் எதுக்கும் பயப்படாம சொல்லு? இவனை யார் அனுப்பினது?”

அதற்கு மேல் முடியாமல், “இவரை இப்படிப் பேசச்சொன்னது உங்க பையன்தான் மாமா” என்றதும் அனைவரும் அதிர்ந்து சுபாஷை கோபமாய் நோக்கினார்கள் என்றால் கீர்த்திக்கும், வித்யாவிற்குமே இன்னும் அதிர்ச்சி. கேள்வி கேட்க நகர்ந்தவளை வித்யா தடுத்து அமைதிப்படுத்த வேடிக்கை பார்த்தபடி நின்றார்கள்.
 
Top