- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
6
“அம்மா பால் எடுத்துட்டு வாங்க” என்ற சிணுங்கல் குரலில் எதிர் அறையைப் பார்த்தாள் பரிபூரணி.
அது மணமகன் அறை என்பதே இப்பொழுதுதான் தெரிகிறது. வசீகரனுக்காக அவன் எதுவும் பிரச்சனை செய்துவிடக் கூடாதென்று அருகிலிருந்தும் வீட்டிற்குச் செல்லாமல் குடும்பமே மண்டபத்தில் தங்கியிருக்கிறார்கள்.
ஒரு ஆர்வம் பிறக்க அங்கு செல்வதா.. வேண்டாமா என நின்றிருக்கையில், “இதோ எடுத்துட்டு வர்றேன். நீ வெளிய எங்கேயும் போயிராத. புதுமாப்பிள்ளைனா காத்துக்கருப்பு அடிக்கும்னு சொல்வாங்க” என்றார் ஆனந்தி.
“ஏன்மா பயமுறுத்துறீங்க? எனக்கு பால் வேண்டாம் போங்க” என்றானவன்.
“பச்.. உடனே கோபமாடா கண்ணா. உன் நல்லதுக்குத்தான சொல்றேன். இந்நேரம் வெளிய போகக்கூடாது. அம்மா சொன்னா கேட்பதான?”
“அம்மா சொன்னா கண்டிப்பா கேட்பேன்.”
“அப்ப அமைதியா உட்காரு. அம்மா பால் எடுத்துட்டு வந்திருறேன்” என்று வேகமாக வெளியே வந்து கீழிறங்கிவிட, கதவை மூட மறந்தாரோ ஆனந்தி.
பரிபூரணி கண்டுவிட்டாள் கண்ணாளனை! கைபேசியில் எதையோ தட்டிக்கொண்டிருக்க காதில் ஹெட்செட் இருந்தது. பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க இப்பாடல் வரிகள் தற்சமயம் பரிபூரணிக்கு மட்டுமே பொருந்தும். கண்சிமிட்டாமல் அவனை மட்டுமே பார்த்திருக்கையில் சண்முகியிடமிருந்து போன் வர, அச்சத்தம் தொந்தரவாயிருக்க அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
“ஹலோ பூரணி எப்படியிருக்க?” என்ற அன்பான குரலில்,
“ரொம்ப ரொம்ப ஹேப்பியாயிருக்கேன் சண்மு” என்றாள் தன் ஒட்டுமொத்த மகிழ்வையும் குரலில் காட்டி.
“பார்றா! ஆச்சர்யமாயிருக்கு. முதல்முறையா என் பூரணிகிட்டயிருந்து இப்படியொரு பதில். என்ன செய்யுற?”
“பார்த்துட்டிருக்கேன்” என்றாள் மொட்டையாய்.
“ஹான்! ஏய் என்ன பேசுற நீ? பூரணி எதாவது பிரச்சனையா? வாய்ஸ் ஒருமாதிரியா வருதே ஏன்?”
“என் வாய்ஸ் கேட்குதா உனக்கு? எனக்கென்னவோ காத்துதான் வருது ஃபீல். சண்மு லவ் யூ சொல்லணும் தோணுது. அப்படியே வசீகரம் செய்து...”
“ஏய்! நிறுத்து. என்னாச்சிடி உனக்கு? போதை மாத்திரை போட்டுக்கிட்டியா என்ன? இப்படி உளர்ற?” என்றாள் எதுவும் புரியாது.
“போதைதான் சண்மு. பார்த்ததிலிருந்து போதை. மயக்கம்னும் சொல்லலாம். இல்லை நான் மயங்கிட்டேன்னும் சொல்லலாம்” என தன்போக்கில் உளறினாள்.
“ம்கூம் நீ சரியில்லை. நான் நாளைக்குப் பேசுறேன்” என்று வைத்துவிட, வசீகரனின் மேலிருந்த போதையில் தோழியிடம் திருமணத்தைப் பற்றிப் பகிர மறந்துவிட்டாளோ!
மென் புன்னகை ஒன்று எழ வசீகரனிடம் செல்லலாமா என நினைத்த வேளை பாலுடன் வந்த ஆனந்தி மகனுக்குப் பாலைக் கொடுக்க, அவனோ கைபேசியில் கவனமாயிருக்க, ஹெட்செட்டைப் எடுத்துவிட்டு போனை வாங்கி கட் செய்து “குடி” என்றார்.
தாயை முறைத்துவிட்டு, “நீங்களே கொடுங்க” என்று கொஞ்ச, பால் கொடுத்து வாய் துடைத்துப் படுக்கச்சொல்ல, தாயின் சொல் தவறாது கேட்டான் அந்த மீசை வைத்த பையனவன்.
‘பார்றா! சரியான அம்மா செல்லம் போலவே! எனக்கு அம்மா அன்பு வெறும் கடமைக்கு மட்டுமேயிருக்கு வசீகரா. அம்மா அன்பு கிடைக்கக்கூட கொடுப்பினை இருக்கணும். அத்தை ரொம்ப அன்பானவங்களா இருக்காங்க. என்னையும் உங்களைப்போல் பார்த்துக்குவாங்கன்ற நம்பிக்கையில் வர்றேன்’ என ஒருவித சந்தோஷமான மனநிலையில் அறைக்குள் செல்லப்போக, “பூரணிமா! தனியா இங்க என்ன பண்ற?” என்ற ஆனந்தியின் கேள்வியில் நின்றாள்.
“அ..அது ஃப்ரண்ட் கால் பண்ணியிருந்தா அத்தை. உள்ள அம்மா அக்கா பெரியப்பா குடும்பமும் தூங்குறாங்க. அதான் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு வெளிய வந்து பேசுறேன்.”
“சரிமா. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும். ப்யூட்டிஷியன் நாலு மணிக்கெல்லாம் ஆரம்பிச்சிருவாங்க. அப்ப அசதி இருக்கக்கூடாதுல்ல. போய்த் தூங்கு” என்றவரைக் கட்டியணைக்கத் தோன்றிய உணர்வை அடக்கி சரியென்று உள்ளே சென்றாள்.
இதுவரையிருந்த பயம் போய் வசீகரன் மேலான மயக்கமே அவளை நித்திரைகொள்ள வைத்ததோ!
இதோ திருமணநாள் இனிதே விடிய மண்டபமெங்கும் மங்கள வாத்தியங்களின் இசை, அழகுநிலையப் பெண்களின் கைங்கரியத்தால் அழகுற உருவாகிக் கொண்டிருந்தாள் பரிபூரணி. கண்களிலோ கல்யாணக் கனவு. சொல்லவும் வேண்டுமா பாவைக்கு!
“பூரணி நீயா இது? ப்பா செமையா இருக்கடி” என்றாள் ஜனனி.
“நிஜமாவா?” என கேட்ட தங்கையைத் தன்னுடன் சேர்த்தணைத்தாற்போல் செல்ஃபி எடுத்து, “இப்பப்பாரு” என்று காண்பிக்க... “அச்சோ அக்கா” என் முகம் இது கிடையாது என்று அலறினாள்.
“மேம்! பிரைடல் மேக்கப் அப்படித்தான் இருக்கும். உங்களுக்கு அந்தளவுக்கெல்லாம் முகம் மாறலை. அலங்காரம் முழுக்க முடிஞ்சதும் பாருங்க. பார்க்குறவங்க அசந்து போயிருவாங்க” என்றனர் அழகுநிலையப் பெண்கள்.
“பார்க்குறவங்கள்லாம் அசர வேண்டாம். என் வசீகரன் மட்டும் அசந்தால் போதும்” என்க,
“கண்டிப்பா. அசந்து உங்களை மட்டுமே பார்த்துட்டிருப்பார் பாருங்க” என்றனர் அப்பெண்கள்.
“தேங்க்ஸ்” என்றாள் புன்னகையுடன்.
அடுத்த அரைமணி நேரத்திற்கெல்லாம் மணமகளை அழைத்துச் செல்ல ஆனந்தி, ஐஸ்வர்யாவுடன் இன்னும் சில மாப்பிள்ளை வீட்டுச் சொந்தங்கள் மட்டுமே வந்தனர்.
மேடையில் அமர்ந்திருந்த வசீகரனை ரகசியமாகக் காண, மேடையில் இருந்தவனோ அவளைக் காண, லட்சம் பூக்கள் தலையில் கொட்ட, இரத்தநாளங்கள் அங்குமிங்கும் கும்மாளமிட்டன அவளுள். பதில் புன்னகையை மின்னலெனக் கொடுத்து தலையைக் குனிந்து கொண்டாள். உடலில் ஒருவித புதுமையான நிகழ்வு! மனதில் ஒருவித பரபரப்பு! கண்களில் ஒருவித எதிர்பார்ப்பு! கலவையான உணர்வுகளின் தாக்கத்தில் வந்தவளுக்கு நிறைய விஷயங்கள் கண்ணிலும் கருத்திலும் பதியவில்லை.
மைதிலியின் ஊனத்தைக் காரணமாக்கி மணமேடையின் கீழுள்ள முதல் வரிசையில் அமரவைத்து, தன் மகள் திருமணத்தில் தானே ராஜா என்பதாய் திமிராகச் சுற்றிக்கொண்டிருந்த மலையரசனையும் மனைவியினருகில் அமரவைத்துவிட்டார் தனசேகரன்.
பெரியவர்கள், கட்சித்தலைவர்கள் முன்னிலையில் மந்திர வாத்தியங்கள் ஒலிக்க கெட்டிமேளம் சத்தத்துடன் வசீகரனின் கையில் தாலி கொடுக்கப்பட, அவனோ வேகமாக திரும்பி தாயைப் பார்க்க, அவரோ அம்மா சொன்ன மாதிரி செய் என்று காதோரம் சொன்னார்.
தாயின் அனுமதி கிடைத்ததும் பரிபூரணியின் கழுத்தில் தாலியை வைத்தபடி, “இதை நான் உனக்குக் கட்டுறேன். இனி எப்பவும் என்னோடவே இருக்கணும்” என்ற வசீகரனின் வார்த்தையில் புரியாத உணர்வுடன் அவனைக்காண, பளிச்சென்ற புன்னகையை அவன் கொடுக்க, பதிலுக்கு அவளும் புன்னகைக்க தாலியை அவள் கழுத்தில் கட்டி முடிச்சுபோட, மூன்றாவது முடிச்சை வசீகரனின் அக்கா முறை உள்ளவர் வந்து சுபமாக முடித்து வைத்தார்.
சந்தோஷம் என்பது இதுதானா? இதோ அதை அணுஅணுவாக அனுபவிக்கையில் உணர்கிறாள் பரிபூரணி.
தொடர்ந்து சடங்குகள் பெரியவர்களிடம் ஆசிவாங்குவது, பரிசுப்பொருளுடன் வருபவர்களுக்கு புன்னகையுடன் வணக்கம் வைப்பது என்று மணமக்களின் நேரங்கள் கரைய வசீகரன் தாயை முறைக்க, அவசரமாக கீழே சென்றவர் பெரிய மகனிடம் குடிக்க எடுத்துவரச் சொல்ல, அடுத்த இரண்டே நிமிடத்தில் இருவருக்கும் கொடுக்க, குடித்து முடித்ததுமே வசீகரன் அமைதியாகி வந்தவர்களை வரவேற்க ஆரம்பித்தான்.
காலை உணவு முடித்து மதியத்திற்கெல்லாம் மாப்பிள்ளை வீடு அழைத்துச் சென்று விளக்கேற்றி பால்பழம் கொடுக்க, சாப்பிட முரண்டு செய்த மகனை பேசியே சரிசெய்த ஆனந்தியை ஆச்சர்யமாய் ஆசையாய்ப் பார்த்திருந்தாள் பூரணி.
‘ஹப்பா! அம்மா பையனுக்குள்ள என்னவொரு அன்பு. வாழுறான்டா வசீகரன்!’ என மனதிற்குள் எண்ணுகையில் சிரிப்பு வர மென்புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தாள்.
“ஐஸ்வர்யா! சின்ன மருமகளைக் கூட்டிட்டுப்போயி ரெஸ்ட் எடுக்க வை. எதாவது வேணும்னா செய்துகொடு” என்றனுப்ப, பூரணியை அழைத்துப் செல்கையில் தன் உறவுகளைத் தேடி கிடைக்காமல் போக, “அக்கா எங்க வீட்டுல உள்ள யாரையும் காணோம். வந்ததிலிருந்து கண்ணுலயே படலை. எங்க?” என்றாள்.
“அ..அது நம்மளோடதான் வந்தாங்க பூரணி. பால்பழம் கொடுக்கும்போது ஏதோ வேலையிருக்குன்னு சொல்லி நாளைக்கு வர்றோம்னு கிளம்பிட்டாங்க. எப்படியும் நீங்க மறுவீடு போகணும்ல அப்பப் பார்த்துக்கோ” என்றவளுக்கு மண்டபத்தில் நடந்தது கண்முன் வந்தது.
மண்டபத்திலிருந்து கிளம்புகையில் குலசேகரன் அண்ணனுக்கு சைகைகாட்ட, தான் பார்த்துக்கொள்வதாய் தலையசைத்த தனசேகரன் மலையரசனிடம், “நீங்க இப்படியே வீட்டுக்குக் கிளம்புங்க சம்பந்தி. பொண்ணு மாப்பிள்ளையை நாளை மறுநாள் மறுவீடு அனுப்புறோம். நாங்க போயிதான் மத்த சடங்குகளைப் பார்க்கணும். வரட்டுமா” என்று காலில் சக்கரம் கட்டியதுபோல் நின்றவரின் தந்திரத்தை உணராது, “நீங்க சொன்னா சரியா இருக்கும்ங்க. நாங்க கிளம்புறோம். பொண்ணை நல்லா பார்த்துக்கோங்க” என்றார் மலையரசன்.
“என் வீட்டுல பொண்ணைக் கொடுத்துட்டு, நீ பயப்படலாமா மலையரசா? தைரியமா போ. எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்று அங்கேயே விட்டுவிட்டு வந்ததை பூரணி அறியாமல் செய்திருந்தனர். அந்நிகழ்வு ஐஸ்வர்யாவின் கண்களில் தற்செயலாகப்பட, ஏனென்று கேள்வி கேட்கமுடியா நிலையில் அமைதியாகிவிட்டாள்.
“அப்ப சரிக்கா. எங்க மிஸ்டர்.கிருஷைக் காணோம்?”
“மரியாதைலாம் பலமாயிருக்கு?”
“எப்பவுமே குட்டீஸ் கூட்டணிதான் டென்சன் இல்லாமலிருக்கும். பெரியவங்க பொறுமை பொறுப்புன்னு முதிர்ச்சியோட பேசிட்டிருப்போம். அப்ப வர்ற வார்த்தைங்க ரொம்ப ஜாக்கிரதையா பேசணும். ஒரு வார்த்தை மாறுனாலும் நம்ம பெயரை டேமேஜ் பண்ணிருவாங்க. சின்னப்பிள்ளைங்ககிட்ட அப்படி இருக்கவேண்டிய அவசியமில்லையே!” என்றாள் புன்னகையுடன்.
“புரியுது. எங்க வீட்டுலயிருந்து வந்த அப்பாவும் தங்கச்சியும் அவனை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க.”
“உங்களுக்குத் தங்கச்சி இருக்காங்களா? கல்யாணமாகிருச்சா?”
“இப்பதான் பேசி முடிச்சிருக்கு.”
“ஓ.. ஏன் உங்க கொழுந்தனுக்குப் பார்க்கலை? அவங்க அழகாயிருக்காங்க. நல்லா படிச்சிருக்காங்க. அப்புறமென்ன?”
“அவளுக்கு எங்க மாமா மகனைத்தான் பிடிச்சிருந்தது. அதனால வேற இடத்தில் பார்க்கலை” என்று மனதறிந்து பொய்யுரைத்தாள்.
“லவ்வா? அப்ப சரி. ஏன் அக்கா? அத்தை ரொம்ப பாசமானவங்களா இருக்காங்கள்ல?” என்றதில் அதிர்ந்து, ‘வெளிவேசத்தை உண்மைன்னு நினைச்சிட்டாளே’ என அவள் முகம் கண்டு, “எதை வச்சிச் சொல்ற?” என கேட்டாள்.
“உங்க கொழுந்தன் மேல காட்டின அன்பை வைத்துதான். எங்க வீட்டுல இப்படிலாம் கிடையாதுக்கா. ஆனா, இந்த அம்மா பையன் பாசமிருக்கே ஹையோ செம ஃபீல் தெரியுமா. அப்படியே மெய்சிலிர்த்துட்டேன். எங்கம்மா நம்ம அத்தை மாதிரி இருந்திருக்கக்கூடாதான்ற எண்ணம் எழாமலில்லை. அம்மாவை யாரோடவும் கம்பேர் பண்ணக்கூடாதுன்றது இந்த மனசுக்குப் புரியுது. அதையும் மீறி இந்த மனசிருக்கே சில விஷயங்களை அவங்ககிட்டத் தேடுது” என்று தன் நிலை மறையாது அவள் தன்னைத் தப்பாக நினைப்பாளோ என்று நினையாது உரைத்தாள்.
‘அம்மா இருந்தும் அன்பில்லாமல் வளர்ந்திருக்காளா? அதான் எந்தவித விசாரணையுமில்லாமல் கல்யாணம் செய்துட்டாங்களா? இங்கும் அதே கொடுமையை அனுபவிக்க வந்தாயோ பெண்ணே! கடவுள் உன் வாழ்வில் அன்பு என்ற பக்கத்தைக் கிழித்துவிட்டார் போலும்’ என நினைத்தாள்.
“என்னக்கா எதுவும் சொல்லலை?”
“ஹான்! அது எதோ யோசனை. இதோ ரூம் வந்திருச்சி. படுத்து ரெஸ்ட் எடு பூரணி. எதுவும் வேணும்னா கேளு. எதிர் ரூம்தான் எங்களோடது.”
“இது யாரோடது?”
“வசீயோட ரூம்தான். சமீபமா கீழ உள்ள ரூம்ல இருக்கார். மற்றதை அத்தை வந்து பேசுவாங்க” என்று சென்றுவிட, சில நிமிடங்கள் அந்த அறையைப் பார்த்தவள் அங்கிருந்த பெட்டில் படுத்தாள்.
Last edited: