• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
5



பத்து மணிபோல் குடும்பத்துடன் ஆசிரமம் சென்று பத்திரிக்கை வைத்து முடிந்ததும் பெரியவர்கள் மற்ற இடங்களுக்கு பத்திரிக்கை வைக்கவென்று சென்றனர்.

“ஏன் வித்தி, கல்யாணம் ஆகாத தங்கச்சி இருக்கும் போது அண்ணனுக்கு மேரேஜ் பண்ணமாட்டாங்கதான? உங்க வீட்ல என்ன எல்லாமே உல்டாவாயிருக்கு?”

“அதுவாடா.. என் ஜாதகத்துல அண்ணனுக்கு அப்புறம்தான் முடிக்கணும்னு இருக்காம். நான் இன்னும் டிகிரி முடிக்கலையா, அதான் இந்த உல்டா.”

“சரி கல்யாணத்துக்கு நாளை ஒருநாள்தான் நடுவுல இருக்கு. அதுக்குள்ள எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துறது” என்று வம்பை ஆரம்பித்தாள் கீர்த்திகா.

“ஏய் கீர்த்தி எதுக்கு இப்ப கல்யாணத்தை நிறுத்துறதைப் பற்றிப் பேசுற. இப்ப கல்யாணத்தை நிறுத்தினா அண்ணிக்கு எப்படி மேரேஜாகும்? ஏற்கனவே அண்ணனோட பேர் சேர்ந்திருச்சி. அதை எப்படி இன்னொருத்தர்கிட்ட குடுக்க முடியும்?” என்றாள் கேள்வியாய்.

“ப்ச்.. நமக்குத் தெரிஞ்சி என்ன பண்றது வித்தி. சம்பந்தப்பட்டவங்களுக்கு தெரியணுமே” என்றாள் கவலைக்குரலில்.

‘ஆம்’ என்று சுபாஷையும், கார்த்திகாவையும் கண்டுகொள்ளாமல் அவர்கள் நடக்க, இவர்களுக்குள் சின்னதாக பார்வை பரிமாற்றம், ‘நிறுத்தியே ஆகணுமா?’ என்பதுபோல்.

“என்னடா சுபாஷு பயலே, அது என்ன பாட்டு சுஜாதா” என்று அருகிலிருந்தவரைக் கேட்டு, “ஆங்.. என் சோகக்கதையைக் கேளு தாய்க்குலமேன்னு சோககீதம் வாசிச்சி எங்களை டார்ச்சர் பண்ணினவன்தான நீ. என்னடா இன்னும் அதே பாட்டுத்தான் போயிட்டிருக்கா. இல்ல டூயட்கு மாறிட்டியா?” என்றார் நக்கலாக.

“ஆமா தேனு. அதிலும் இவன் அடிச்ச லூட்டி தாங்க முடியாம எனக்கு இரண்டு நாள் ஜுரமே வந்திருச்சி.”

“ஓல்ட்ஸ் வேண்டாம். ஜுரம் வந்தா ஜுராஸிக் பார்க் போங்க. அன்னைக்கு நீங்க என் கதையையே கேட்கல. ஏன் இப்ப வரைக்குமேதான் கேட்கல. அதுக்குள்ளதான் அத்தை வந்துட்டாங்களே. அப்புறம் என்ன? ஓவரா சீன் ஓட்டுறீங்க.”

“குட்டி பசங்ககிட்ட கேட்கச் சொல்லிட்டு போனியே. அவங்க பங்குக்கு எங்க காதை கடிச்சிட்டுப் போயிட்டாங்க.”

“என்ன விஷயம் பாட்டி?” என்று கார்த்திகா ஆவலுடன் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ வா” என நடந்தவனை பின் தொடராமல் பாட்டியின் பதிலுக்காய் கார்த்தி நின்றாள்.

“அதுமா உங்க கல்...”

“ஏய் வா சொல்றேன்ல கேட்க மாட்டியா நீ. நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் நீ கேட்டா போதும். மத்தவங்க என்ன சொன்னாலும் கேட்கக்கூடாது” என்று அங்கிருந்து இழுத்துச் சென்றான்.

“ஏங்க பாட்டிங்க எதோ சொல்ல வந்தாங்க. அதுக்குள்ள இழுத்துட்டு வந்துட்டீங்க. எதாவது நினைச்சிக்கப் போறாங்க. இருங்க கேட்டுட்டு வந்திடுறேன்.”

“எதுவாயிருந்தாலும் அவங்களுக்குள்ள தனியா சொல்லிக்கட்டும். புறணி பேசுற இடத்துல உனக்கென்ன வேலை.”

“அவங்க ஒண்ணும் புறணி பேசல. உங்களைப்பற்றி எதோ சொல்ல வந்தாங்க. அதுக்குள்ள நீங்க என்னை இழுத்துட்டு வந்துட்டீங்க” என்றாள் சடைப்பாக.

“என்னைப்பற்றி யார் எது சொன்னாலும் கேட்டுப்பியா?”

‘ம்கூம்’ என தலையசைத்தவளிடம், “நான் நல்லதுக்குத்தான் சொல்வேன்னு நம்பணும் ஓகே” என்றதும், சம்மதமாய் தலையை மட்டும் ஆட்டினாள்.

“ஏன்டி உன்னை ஒருத்தன் தன் கட்டுப்பாட்டுக்குள்ள வைக்கிறேன்றான், நீ தலையை ஆட்டுற. ஏன் நம்பணும்னு கேட்க மாட்டியா? அட்லீஸ்ட் ஒரு ஆட்சேபணையாவது தெரிவிக்கலாம்ல.”

“மாட்டேன். ஏன்னா சொல்றது நீங்களாச்சே” என பட்டென்று சொன்னாள்.

நடந்து கொண்டிருந்தவன் கால்கள் தடைபட, சட்டென நின்று அவள் முகம் பார்க்க, அவள் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று அவனைக் கட்டிப்போட்டது.

“நீ என்ன சொல்ல வர்ற கார்த்தி? எனக்கு புரியுற மாதிரி சொல்லு.”

“அ..அது நீங்க என்னோட மூத்தவங்க. அதிலும் மாமா பையன் வேற. நான் கெட்டுப்போகவா எதுவும் சொல்வீங்க. என்னோட நல்லதுக்காகன்ற நம்பிக்கை எனக்கிருக்கு” என்றாள் அவனை நேராகப் பார்த்து.

சில நொடிகள் அவளின் நம்பிக்கையில் மனம் சந்தோஷமடைந்தாலும், “ம்.. அந்த நம்பிக்கை இருக்கட்டும். வா குட்டீஸ் பார்த்துட்டு வரலாம்” என்று நடக்க அவளோ கையைப் பார்த்தபடியே நடந்தாள். அப்பொழுதும் பிடித்த கையை சிறிதும் விலக்கவில்லை அவன். அதை அவன் உணரவில்லையென்று தோன்ற, அந்த இனிமையை கெடுக்க விரும்பாது, இத்தனை ஆண்டுகள் பார்க்க மறந்த, பார்க்கத் தவறிய தன் மாமன் மகனை ஆசை தீரப்பார்த்தாள்.

பாவையின் பார்வை காளையிடத்திலிருக்க, அதை உணராத அவள் கால்களோ கல்லில் இடித்து காலை பதம்பார்த்தது. “ஸ்.. ஆ..அம்மா” என்ற சத்தத்தில் திரும்பியவன் “என்னாச்சிமா?” என்றான் பதற்றமாக.

அவள் காலைக் காண்பித்ததும் அதிலுள்ள இரத்தமும், அவளின் வலி சுமந்த முகமும் தன்னை ஏதோ செய்ய, அவளை ஓரமாக அமரவைத்து, தன் கர்சீப் எடுத்து இரத்தத்தைத் துடைத்து, “ரொம்ப வலிக்குதா? ப்ச்.. வலிக்காம என்ன செய்யும். ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்.” வேகமாக ஆசிரம அலுவலகம் சென்று தண்ணீரும் மெடிக்கல் பாக்ஸும் எடுத்து வந்து, கார்த்திகாவிற்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்து, தண்ணீர் விட்டு காயத்தைத் துடைத்து பேண்டேஜ் போட்டுவிட்டான்.

தன் காலில் காயம் பட்டது முதல் இப்பொழுது வரையிலான அவனின் செயல்கள் அனைத்தையும் வலியையும் மீறி ரசனையுடன் பார்த்திருந்தாள் அவனின் முறைப்பெண்.

பொதுவாகவே கால் கைகளில் அவ்வப்பொழுது அனைவருக்கும் ஏற்படும் சின்ன காயம்தான் கார்த்திகாவிற்கும். அடிபட்டு கொஞ்ச நேரமே நமக்கு அதன் வலி தெரியும். அதன்பின் அதே இடத்தில் திரும்ப அடிபடாதது வரை நாம் அதைக் கண்டு கொள்வதேயில்லை.

அதற்கான அவனின் பதற்றம் அவளுள்ளிருந்த அவள் உணர ஆரம்பித்திருந்த காதலை அதிகமாக்கியது என்பதே உண்மை.

“கார்த்தி ரொம்ப வலிக்குதா? வீட்டுக்குப் போகலாமா?”

“இல்லங்க. வலி கொஞ்சம்தான். நான் தாங்கிப்பேன். வாங்க பசங்களைப் பார்த்துட்டுப் போகலாம்” என எழுந்தவள் தடுமாற, அவன் வேகமாக வந்து அவள் இடையைப்பற்றி நிறுத்த, அதில் கூச்ச உணர்வுகள் தலைதூக்க அதன் கணம் தாங்க மாட்டாதவளாய், “கையை மட்டும் பிடிச்சிக்கறீங்களா?” என்றாள் இடுப்பிலிருந்த கையை விலக்கியபடி.

ஏனென்று கவனித்த பொழுதுதான், தன் கை இருந்த இடத்தைப் பார்த்து சட்டென்று எடுத்து “சா..சாரி” என்றவனுக்குள் சின்ன தடுமாற்றம். கையை எடுத்தும் அந்த இடையின் மென்மை அன்றைய இரவை அவனுக்கு நினைவுபடுத்தியது.

“இட்ஸ் ஓகே” என்றவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. மெல்ல அவள் கைபிடித்து நடத்திச் செல்லும் வழியில், “ஏங்க உங்களுக்கு லவ் மேரேஜ் பண்ணிக்கணும்னு ஆசையா என்ன?”

அவளின் அத்திடீர் கேள்வியில் நின்று அவள் முகம் பார்க்க. என்னவென்று பார்வையால் கேட்டதும் சிரித்தபடி, “காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்” என்று பாடினான்.

“ஏன்?” என்றாள் வேகமாக. அதிலும் ஒரு ஆர்வமிருந்தது தூக்கலாக.

“ஏன்னா.. ஒரு பொண்ணை பார்த்து அவளோட கேரக்டர் கூட தெரியாம காதலிச்சி, அவள் பின்னாடி அலைஞ்சி, அவளோட அப்பன்கிட்ட அடிவாங்கி, சொந்தங்கள் முன்னாடி அசிங்கப்பட்டு.. என்னால என் பேரண்ட்ஸ்ல இருந்து என் தங்கை வரை ஏன் கஷ்டத்தை அனுபவிக்கணும்? தேவையில்லாத ரிஸ்க் வேற. என் ஃப்ரண்ட்ஸ் லவ் பார்த்தே வேண்டாம்டா சாமின்னு விட்டுட்டேன். எனக்கு மேட்சான பெண்ணை வீட்ல பார்த்து விசாரிச்சி எனக்கு வேலையில்லாம செய்யும்போது, நான் ஏன் கஷ்டப்படணும். ஈஸியா தாலிகட்டினதும் காதலிக்கலாம்ன்ற நல்ல எண்ணம்தான்” என்றான் உலகத்திலுள்ள நல்லவன்களில் நானே நல்லவன் என்பதாய்.

“சோம்பேறித்தனத்துக்கு இப்படி ஒரு விளக்கமா” என மெதுவாக முணுமுணுத்தாள்.

“என்ன சோம்பேறின்னு சொல்றியா. தாராளமா சொல்லிக்கோ. நோ ப்ராப்ளம். என்னால என் பேரண்ட்ஸ் சந்தோஷப்படுவாங்கன்னா எதுவும் தப்பேயில்ல. ஐம் சோ ஹேப்பி” என்றான் உற்சாகமாய்.

‘மாம்ஸ் கலக்குற போ’ என மனதில் நினைத்து வெளியில், “என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்றாள். அவள் அப்படி கேட்டுவிட்டாலும் அவன் பதில் என்னவாக இருக்குமென்று மனதில் ஒரு இனம் புரியா படபடப்பு.

சில நிமிடங்கள் அவனிடமிருந்து பதிலில்லாமல் போக, “என்னை உங்களுக்கு பிடிக்கலையாங்க?” என்ற குரலில் தன் மொத்த வேதனையும் சேர கண்கலங்கியது அவளுக்கு.

“அது எப்படி சொல்றது தெரியல கார்த்தி. பிடிச்சிருக்கா கேட்டா இல்ல சொல்லத் தோணுது. பிடிக்கலையா கேட்டாலும் இல்லன்னுதான் சொல்லத் தோணுது” என்றான் யோசனையாக.

“அப்ப கம்பல்ஷன்லதான் மேரேஜ் பண்ணிக்கறீங்களா?”

“ஹ்ம்.. இருக்கலாம். தப்பென்னவோ என்னோடதுதான். நான் மட்டும் இதைப் பண்ணலைன்னா, நான் வீட்ல பார்த்த பெண்ணையும், நீ உங்க வீட்ல பார்க்கிற பையனையும் முடிச்சிருப்போம். என்னாலதான் எல்லாமே மாறிப்போச்சி. இப்ப நினைச்சி என்ன பண்றது. அதான் எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சே” என்றான் ஒரு ஏக்க மூச்சோடு.

“ஒரு வேளை வீட்ல உங்களுக்கு பார்க்கிற பொண்ணே நானாயிருந்தா உங்க பதில் என்னவாயிருக்கும்?” என்றாள். கேள்வி கேட்ட பின்தான், ‘ஏன்டா அந்தக் கேள்வியைக் கேட்டோம் கேட்காமலே இருந்திருக்கலாமே!’ என்று மனம் நொந்து வாழ்க்கை வெறுத்துப் போனாள் சுபாஷின் பதிலில்.

“சான்ஸ் கம்மிதான். இருந்தாலும் நீதான் பொண்ணுன்னா யோசிருச்சிருப்பேனா இருக்கும்” என்றான் பட்டென்று.

அந்த வார்த்தையில் அவளின் தன்மானம் அடிபட, அவன் மேலிருந்த கையை எடுத்து, தன் மேலிருந்த அவன் கையையும் விலக்கி, “நா..நான் வீட்டுக்குப் போறேன். நீங்க அப்புறமா வாங்க” என்று குனிந்தபடி சொல்லி வேகமாக நடந்தவள் கண்களில் கண்ணீர் ஊற்றுகள்.

‘நீதான் பொண்ணுன்னா யோசிச்சிருப்பேனா இருக்கும்.’ திரும்பத் திரும்ப அந்த வார்த்தைகள் அவளை சுழன்றடிக்க கண்களில் வழிந்த கண்ணீர் பாதையை மறைத்தபோதும், அதைத் துடைத்தபடி எதிரில் வருபவர்கள் யாரையும் கவனிக்காது சென்றாள்.

‘என்னாச்சி இவளுக்கு? கால்வலி இருந்தாலும் பரவாயில்லைன்னு வந்தவ ஏன் பாதியிலேயே ஓடுறா. அப்படி என்ன சொன்னேன் நான். நீதான் பொண்ணுன்னா யோசிச்சிருப்பேன் சொன்னேன். அதுக்கா இந்த ஓட்டம். கொஞ்சம் ஹெவியான வார்த்தையோ?’

ஒருசில ஆண்களிடம் உள்ள குணம் இது. தாங்கள் சொல்லும் வார்த்தையின் வீரியம் தெரியாமலேயே பேசிவிடுவது. சொல்லிப் புரியவைக்கும் வரை அதை அவர்கள் உணருவதும் அரிதே!

கால்வலியைப் பொருட்படுத்தாது அவள் செல்வதைப் பார்த்தவன் வேகமாக அவள் பின்னே சென்று, “கார்த்தி நீ கேட்டதுக்குத்தான பதில் சொன்னேன். அதுக்கு ஏன் கோவிச்சிட்டுப் போற? கார்த்தி நில்லு. ஏய் சொன்னா கேளு கார்த்தி.” என்ன அழைத்தும் அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி சென்று விட்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எதுவோ தன்னைவிட்டுப் போகிறார்போல் ஒரு வருத்தம் மனதினுள்.

அவர்களுக்கு தனிமை கொடுத்து தூரத்திலிருந்தே பார்த்திருந்தார்கள் கீர்த்தியும், வித்யாவும். கார்த்திகாவிற்கு அடிபட்டதும், அதற்கான சுபாஷின் அக்கறையும் மகிழ்ச்சி கொள்ள வைக்க, அதற்குள் இருவரும் எதையோ பேச அதில் கார்த்தி கோவித்து செல்வது தோன்ற உடனே அண்ணன் இருக்குமிடம் வந்தாள் வித்யா.

“என்னாச்சிண்ணா? ஏன் அண்ணி இவ்வளவு வேகமா போறாங்க? நீங்க என்ன சொன்னீங்க?”

“தெரியல வித்யா. நல்லாத்தான் பேசிட்டிருந்தா. அவ கேட்டதுக்குத்தான் பதில் சொன்னேன். என்னன்னு தெரியல கிளம்பிட்டா.”

“பேசிட்டிருக்கும் போது அப்படில்லாம் முகத்திலடிச்சாப்ல போகமாட்டாங்க. நீங்க அவங்களை என்ன சொன்னீங்க?”

“அவ கேட்ட கேள்விக்கு நான் மனதில்பட்டதை சொன்னேன். வேறெதுவும் பண்ணலை” என்று அவர்கள் பேசியதைச் சொல்ல,

“ஏன்ணா? நீங்க பேசுற வார்த்தையை யோசிச்சி பேசமாட்டீங்களா. அந்த வார்த்தையைக் கேட்டவங்களுக்கு மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். ரெண்டு நாள்ல ஒய்ஃப் ஆகப்போற பொண்ணுகிட்ட, நீயாயிருந்தா வேண்டாம் சொல்லிருப்பேன்னு சொன்னா, அவங்களை எந்தளவுக்கு மட்டமா நினைச்சிருக்கீங்க. அந்த வார்த்தை அவங்களை எவ்வளவு பாதிச்சிருக்கும். பாவம் எவ்வளவு துடிச்சிருப்பாங்க. இப்படில்லாம் பேசுவீங்கன்னு நான் நினைச்சிக்கூடப் பார்க்கலண்ணா” என்றாள் ஆற்றாமையாக.

அந்த வார்த்தையை அவளாலேயே ஜீரணிக்க முடியவில்லை என்றால், அதைக் கேட்ட கார்த்திகாவின் நிலையை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

“இல்ல வித்...” தன்னை சமாதானப்படுத்த வந்த அண்ணனை மறித்து, “ப்ச்... போங்கண்ணா. அவங்களை மாதிரி ஒரு பொண்ணு உனக்கு கிடைச்சிருவாங்களா. அவங்க மாதிரி பொண்ணு தேடினாலும் கிடைக்கமாட்டாங்க. உனக்கு அவங்களையும் தெரியல. ஏன் உன்னையுமே தெரியல” என்று திட்டி கீர்த்தி இருந்த திசைநோக்கி நடந்தாள்.

“என்னடி இப்படியிருக்காங்க? என்ன செய்து இவங்களைச் சேர்த்து வைக்கிறது தெரியல.” என்ற வித்யாவின் புலம்பலுக்கு, “கவலைப்படாத வித்தி எதாவது எற்பாடு செய்யலாம்” என்றாள் கீர்த்தி.

அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை சுபாஷால். நேரே வீட்டிற்குச் சென்றான்.

“எக்ஸ்க்யூஸ் மீ மேம். ஆர் யூ கீர்த்தி” என வித்யாவிடம் கேட்க, குழப்பத்தில் அவளும் ‘ஆம்’ என்றிட, கீர்த்தியும் எதுவும் கண்டுகொள்ளவில்லை.

“திஸ் இஸ் ஃபார் யூ மேம்” என்று ஒரு கிப்ட் பேகை அவளிடம் கொடுத்துச் சென்றான்.

“ஹேய்!” என அவனை அழைத்தவள் அவன் சென்றுவிட்டதை உணர்ந்து, “உனக்குதான்டி என்னன்னு பாரு” என்று நீட்டினாள்.

“ப்ச்.. நீயே பாரு. நான் அம்மாகிட்ட போறேன்” என்று சென்றாள்.

‘ஒருவேளை பாம் இருக்குமோ! சேச்சே இருக்காது’ என்று திறந்து பார்த்தாள்.

காதலிக்கும் ஆசையில்லை

கண்கள் உன்னைக் காணும்வரை

உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்


பாடல் இசைத்ததில், ‘இது அண்ணன் பாடிட்டு அலைஞ்ச பாட்டாச்சே? இதை கீர்த்திகிட்ட பாடி அவளுக்கு எவனாவது ரூட் போடுறானா. இதைச் சொல்லாம அவகிட்ட மேலோட்டமா கேட்கலாம். சம்பந்தமில்லன்னா இதை நாமளே கிழிச்சிப் போட்டுரலாம்’ என நினைத்து அவளைத்தேடிச் சென்றாள்.

அதை அனுப்பியவனோ பெங்களுரிலிருந்த தன் அலுவலகத்தில் அமர்ந்து, ‘படித்திருப்பாளா? கிழித்திருப்பாளா?’ என நினைத்து, ‘கண்டிப்பா கிழித்துப் போட்டிருப்பாள்’ என்ற முடிவிற்கு வந்தவனுக்கு தன்னையறியாமல் சிரிப்பு வர, 'கிழிச்சதுக்கே சிரிப்பா! கிழிஞ்சது போ!' என்றது அவனது மனசாட்சி.

அத்தையின் வீட்டைப் பார்த்த சுபாஷின் கண்ணுக்கு மூடியிருந்த கதவு தெரிய, அவளை சமாதானப்படுத்த வேண்டுமென்று தோன்றியது. முக்கியமான ஒருவருக்கு பத்திரிக்கை வைக்கவென்று இரு வீட்டுப் பெரியவர்களும் வெளியே சென்றிருந்தார்கள்.

வேகமாக மாடியேறி சுவர் தாண்டிக் குதித்து கீழே இறங்கி பின்பக்க கதவைத் தட்டப்போக, பகல் என்பதால் பின்கதவு திறந்தே இருந்தது. வேகமாக அவள் அறையை நோக்கிச் சென்றவன், அவளின் அழுகையிலும், பேசிய வார்த்தையிலும் அதிர்ந்தவன் வந்ததே தெரியாமல் பின்பக்க கதவினருகில் வந்து நின்று கொண்டான்.

சுபாஷின் வார்த்தையில் மனதை பாறாங்கல்லாய் அழுத்த, வீட்டிற்கு வந்தவள் அப்படியே கட்டிலில் விழுந்து கதற ஆரம்பித்தாள்.

“ஏன் மாமா என்னை உங்களுக்கு பிடிக்கல? உண்மையிலேயே நான் அழகாயில்லன்னு பிடிக்கலையா? இல்ல பழைய பகை மனசுலயிருந்து தடுக்குதா. எனக்கு உங்களை பிடிச்சிருக்குதே! அதுவும் ரொம்பவே ரொம்ப. நான் என்ன பண்ணட்டும்?” மனதிற்குள் புலம்பினாள்.

கதவு திறக்கும் சத்தத்தில் தங்கைதான் என்று, “என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டாங்கன்னு பாரு கீர்த்தி. இதுக்கு உன்னைப் பிடிக்கலைன்னு முகத்துக்கு நேராவே சொல்லியிருக்கலாம். மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்குடி. என்னை எப்ப புரிஞ்சிப்பாங்க. இல்ல புரிஞ்சிக்காமலே போயிருவாங்களா?”

“மத்தவங்களோட கட்டிக்கப் போறவனுக்கு மட்டும்தான் அழகா தெரியணும்னு நினைக்கிறது தப்பா? ஏன் அவங்க கண்ணுக்கு நான் அழகா தெரியல கீர்த்தி? ஏன் அவங்களுக்கு என்னைப் பிடிக்கல? ஏன் அவங்க என் ரூம்கு வந்தாங்க? ஏன் என் வாழ்க்கையில நுழைஞ்சாங்க? ஏன் என்னை இப்படி புலம்ப விட்டுட்டாங்க? ஒருவேளை பகையாளி பொண்ணுன்றது மனசுல பதிஞ்சிருச்சோ. பேசாம அவங்க ஆசைப்படி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம். அவங்களாவது பிடிச்ச பெண்ணை மேரேஜ் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பாங்கள்ல” என்றாள் அழுகையினூடே.

அழுகையின் தீவிரம் அதிகரிக்க, அதைக் கேட்டிருந்தவனுக்கோ அதிர்ச்சியையும் தாண்டி ஏதோ ஒன்று மனதைப் பிசைய வந்ததே தெரியாமல் பின் வாசல் சென்றான்.

அவன் வெளியே சென்ற நேரம், “பதில் சொல்லு கீர்த்தி” என்று வாசல்புறம் திரும்ப, அங்கு யாருமில்லை என்றதும், “ஹ்ம்.. இதுவும் என்னோட பிரமைதானா” என்றாள் வெறுமையான மனதுடன்.

சற்று நேரம் மாடிப்படியில் தலையில் கைவைத்து அமர்ந்தவன் நிதானமாக யோசிக்கலானான். அவளுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது. இந்தத் திருமணம் நின்றால் வேறு ஒருவனை திருமணம் செய்வாளா என்பதே சந்தேகமாயிருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறினான்.

இப்பொழுதும் அவனுக்குத் தெரியவில்லை, அவளைத் தனக்குப் பிடித்திருக்கிறதா என்று. யாரிடமும் இதைப்பற்றி விவாதிக்கவும் மனம் ஒப்பவில்லை. எப்படியும் தன் மனைவி என்றால் இவள்தான் என முடிவானதை மாற்றவும் அவன் தயாராகயில்லை. தற்பொழுது தான் குழம்புவதை விட்டுவிட்டு தனிமையில் அழுது கரைபவளை சமாதானப்படுத்தலாம் என்று திரும்பவும் உள்ளே சென்றான்.

கதவை மெல்ல தட்ட திரும்பியவள் சுபாஷைக் கண்டதும் அதிர்ந்தாள். தன்னை இங்கு எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவளது அதிர்ச்சியிலேயே புரிந்தது. சட்டென்று அழுகை நிற்க வேகமாக எழுந்து வந்து, “இங்க எப்படி வந்தீங்க? ஏற்கனவே ஒரு டைம் வந்து உங்க வாழ்க்கையை கெடுத்துக்கிட்டது பத்தாதா. ப்ளீஸ் யாரும் வர்றதுக்குள்ள கிளம்புங்க. திரும்பவும் உங்களை தப்பா நினைச்சிரப் போறாங்க” என்றாள் பதற்றமாய்.

“அப்ப உன் வாழ்க்கை கெட்டுப் போகலையா? உன்னை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா கார்த்தி?” என்றவன் குரல் அவள் கண்பார்த்து வர,

“மாமா!” என அவள் அதிர்ந்தாள்.

“ம்.. சொல்லு?” என்றான் நிதானமாய்.

“அ..அப்படிலாம் இல்ல. நீங்க கிளம்புங்க” என அவனை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள்.

“நான் கிளம்புறது இருக்கட்டும். இப்ப எனக்கு ஒரு உண்மை சொல்லு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” அவள் எதுவும் சொல்லாமல் அமைதிகாக்கவும், “என்ன கார்த்தி சைலன்ட்டாயிருக்க. சொல்லு பிடிச்சிருக்கா?”

ஹ்ம்.. என மூச்சை இழுத்து விட்டவள், “எனக்குப் பிடிச்சிருக்கா? பிடிக்கலையான்ற கேள்வி இப்ப அவசியமில்லங்க. உங்களுக்கு பிடிக்கலன்றது மட்டும் எனக்கு நல்லாவே தெரியுது. பிடிக்காத வாழ்க்கையில நீங்க உங்களை திணிச்சிக்க வேண்டாம். நான் அம்மா வந்ததும் பேசுறேன். இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்” என்றாள் அவனைவிட நிதானமாக.

“அடிச்சேன்னா பாரு” என்று கோபத்தில் கைதூக்கி அடிக்கிறார்போல் செய்ய, அவனின் செயலில் பயந்து கன்னம் பிடித்தபடி அவனை மிரட்சியுடன் பார்த்தாள். “உன்கிட்ட என்ன கேள்வி கேட்டா, நீ என்ன பேசிட்டிருக்க. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னுதான கேட்டேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு போதும். அதை விட்டுட்டு என்னன்னவோ பேசிட்டிருக்க” என்றான் ஆத்திரமாக.

‘உங்களைத் தவிர வேறு யாரையும் பிடிக்காது மாமா’ என மனம் சொல்ல, “நான் பேசுனதுலேயே புரிஞ்சிருப்பீங்கன்னு நினைச்சேன் மாமா” என்றாள் வார்த்தையாய்.

அப்பொழுதுதான் அவனும் யோசித்தான். ‘இதுவரை தன் நல்லதற்கென்று சொன்னாளே தவிர, அவளுடைய நல்லதற்கென்று சொல்லவில்லையே’ என்பது புரிந்தது. இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல், “நீயே சொல்லு” என்றான் அவள் வாய் வார்த்தையில் கேட்பதற்காக.

அவள் எதுவும் பேசாமலிருக்க. “அப்ப நீ சொல்லமாட்ட? சரி உனக்கு கல்யாணத்தை நிறுத்தணும் அவ்வளவுதான. நிறுத்திடுறேன்” என்றதும் அவனை நோக்கி அடிபட்டாற்போல் ஒரு பார்வை பார்த்தாள்.

இந்த பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் பாவனையில் தெரிய, அவள் பார்வையிலுள்ள வேதனை அவனை அழுத்த, பை என்று கிளம்பினான்.

‘வேண்டாம் மாம்ஸ் போகாதீங்க. நீங்க எங்க போனாலும் நானும் வர்றேன்’ என்ற வார்த்தை மனதிற்குள்ளிருந்து வெளிவராமல் போக அவனைத் தொடர்ந்து கால்கள் சென்றது. தன் பின்னே வருபவளைக் கவனிக்காது ஏதோ சொல்ல திரும்பியவன் அவள் மேல் மோதிவிட, நிலை தடுமாறியவளை தவறாமல் பிடிக்க, இருவரும் சேர்ந்து கீழே விழும் சமயம் சுவற்றை அழுந்தப் பிடித்தவன் அவளையும் தன்னுடன் சேர்த்தணைத்திருந்தான்.

அவளின் மென்மையான ஸ்பரிசம் அவனை சிறிது அசைத்ததோ! பின் அவளை நேராக நிற்கவைத்து, “பார்த்து வர்றதில்லையா கார்த்தி. நான் பிடிக்கலைன்னா கீழ விழுந்து அடிபட்டிருக்கும். தேங்க் காட்” என்றான்.

“சாரிங்க. நான் நீங்க திரும்புவீங்கன்னு எதிர்பார்க்கல.”

“அதுக்கு ஏன் சாரி சொல்ற. இப்ப நான் என்ன சொல்ல வந்தேன்னா, இனிமேல் எப்பவும் அழாத ஓகேவா. நீ அழுதா எனக்கு என்னவோ போலிருக்கு. உன் கண்ணீர் என்னை என்னவோ பண்ணுது. கண்ணீர் எதுக்கும் தீர்வு இல்ல சரியா.”

அவளும் மௌனமாக தலையசைக்க, “அப்படியே கல்யாணம் நடந்தாலும் என் ஒய்ஃப்னு ஆன பிறகு அவளைத்தான் காதலிப்பேன். அது நீயா இருந்தாலும், உன்னைத்தான் காதலிப்பேன்! டேக் கேர் பை” என்று அவள் கண்ணீர் துடைத்து கிளம்பினான்.

அவன் சொல்லிச் சென்றதன் அர்த்தம் தாமதமாகவே மனதில் பதிய சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனாள் கார்த்திகா. மனம் சிறகில்லாமல் பறக்க, அவன் சொல்லிச் சென்றதை தன்னுள் சேமித்துக் கொண்டவள், “எப்படியும் நீங்கதான் என் புருஷன்றது உறுதியான ஒண்ணு. நீங்க சொன்னமாதிரி உங்களை நம்புறேன்ங்க. உங்க அத்தைப் பொண்ணா உங்கள் காதலைப் பெற முடியலன்னாலும், உங்க ஒய்ஃபா கண்டிப்பா உங்க காதலை அடைவேன்.”

மனதிலுள்ள சந்தோஷம் அழுகையை இல்லாமல் செய்துவிட முகம் கழுவி அறைக்குள் வந்து, கைபேசியிலுள்ள புகைப்படத்தை எடுத்துப் பார்த்து பாடல் ஒன்றை ஹம் செய்து கொண்டிருக்கையில், கதவு தட்டும் ஓசை கேட்க, செல்லை அணைத்து கதவைத் திறந்தாள்.
 
Top