• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
5



குருமூர்த்தி அங்கு வந்ததிலிருந்து தாம் தூமென்றுக் குதிக்க, சிவகாமியோ பாவமாய் முகத்தை வைத்து தலைகவிழ்ந்து வாங்கிக் கொண்டிருக்க... மகனோ விழிபிதுங்கி நின்று கொண்டிருந்தான்.

“எனக்கு சத்தியம் பண்ணிட்டு, இப்படி சகுனித்தனமா இங்க என்ன பண்ணிட்டிருக்க சிவா?” என்றார் கோபம் குறையாமல்.

“இங்க பாருங்க..” என வேகக்குரலில் ஆரம்பித்தவர் கணவரின் கடுமையில் குரல் தழைத்து “நான் ஒண்ணும் சத்தியத்தை மீறல தெரியுமா. சத்தியம் மீறுறது சட்டப்... சாரி தர்மப்படி குற்றம்னு எனக்கும் தெரியும். நீங்க என்ன சொன்னீங்கன்னு உங்களுக்கு நினைவிருக்கா தெரியல. எனக்கு நல்லாவே நினைவிருக்கு. எக்காரணத்தைக் கொண்டும் மதுரைக்குப் போகக்கூடாதுன்னு சத்தியம் வாங்குனீங்க. நானும் அதை சரியாகத்தான் செஞ்சேன்” என்றார் சின்னக்குரலில்.

“புரியல?” அதே கடுமை குறையாமல் கேட்க...

“அ..அது நான் சென்னையிலிருந்து மதுரை வழி வராம திருச்சி மணப்பாறை திண்டுக்கல் வழியாதான் இங்க வந்திருக்கேன். எங்கேயும் உங்க சத்தியத்தை மீறல தெரியுமா. என்னைப் பார்த்து நீங்க என்னல்லாம் சொல்லிட்டீங்க” என்று அழுது கண்ணீர் விட்டார்.

“ஏய் நிறுத்துடி. வர்ற கோவத்துக்கு... அது எப்படி உனக்கு மட்டும் கண்ணீர் இப்படிக் கொட்டுது? எப்பயிருந்து இந்த மாதிரி நடிக்கக் கத்துக்கிட்ட?”

‘ம்... எம்.ஜி.ஆர் சிவாஜி படம் பார்த்து’ என நக்கலாக நினைத்தாலும் “நான் எவ்வளவு வருத்தத்தோட உண்மையைச் சொல்லிட்டிருக்கேன். போங்க உங்களுக்கு என்னைக் கொஞ்சம்கூட பிடிக்கவேயில்ல. எப்பப்பாரு என்னைத் திட்டிக்கிட்டே இருக்கீங்க. உங்க அப்பாம்மா இருந்தப்பவும் சரி இப்பவும் சரி என்னை ஒரு மனுஷியாகவே மதிக்கிறதில்ல” என்றார் அழுதபடி.

“ஆமாடி. உன்னை மனுஷியா மதிக்கலதான். அப்படியே வச்சிக்கோ” என்று தலையைப் பிடித்தபடி அமர்ந்தார்.

‘உனக்காக! உனக்காக மட்டும்தான் நான் இவ்வளவு பாடுபடுறேன் சிவா. மனசுக்குள்ள நிறைய இருக்கு. என்னால வெளியில கொட்ட முடியாது சிவா. உனக்கு உன் பையன் முக்கியம். எனக்கு அவனோட சேர்த்து நீயும் முக்கியம் சிவா. புரிஞ்சிக்கோ!’ மனதினுள் கதறியது வெளியில் கேட்க வாய்ப்பில்லையே.

அவரின் அந்த நிலை மற்றவர்களுக்குள் எதையோ புரட்ட... அவரின் வேதனை ஏனென்று புரியாவிட்டாலும் விளையாட்டைக் கைவிட்டு அவரருகில் இருவரும் அமர்ந்து ஆதரவாக அவரின் கைபற்றினார்கள்.

“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுப்பா. என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சா பேசி அதுக்கான தீர்வெடுக்கலாம்” என்றான் நிதானமாக.

“இல்ல கதிர். ரகசியங்கள் எப்பவும் ஒருத்தருக்குள்ளதான் இருக்கணும். சில விஷயங்கள் வெளில சொன்னா நல்லது. சிலது சொல்லாமலிருப்பதே சாலச்சிறந்தது.”

“அப்படி எந்த ரகசியத்தை நீங்க மூணுபேரும் கட்டிக் காப்பாத்தறீங்கன்னு தெரியலங்க. தமிழ்நாட்டுக்கே வரவிடாத அளவுக்கு உங்களுக்குள்ள அப்படி என்ன ரகசியம்?”

“சிவா ப்ளீஸ்” என்றார் வேதனையுடன்.

“அம்மா விடுங்க. ஏற்கனவே நொந்து போனவரை நாமளும் நோகடிக்கக்கூடாது. அதான் ரகசியம்னு சொல்லியாச்சில்ல. நம்மகிட்ட எப்ப சொல்லணும்னு தோணுதோ அப்ப சொல்லட்டும். சரிப்பா இப்ப என்ன செய்யணும் சொல்லுங்க? நாங்க இங்க இருக்க வேண்டாம்னு நினைச்சா இப்பவே கிளம்பிருறோம். நீங்க நிஷா கல்யாணம் முடிஞ்சதும் வாங்க.”

சிவகாமி கணவனைப் பார்க்க, “நீ மட்டும் கிளம்பு. நானும் அம்மாவும் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணிட்டு வர்றோம்” என்றார் குருமூர்த்தி.

“அப்படியே அம்மாவை பிடிச்ச இடத்துக்கு கூட்டிட்டுப் போய் சுற்றுப்பார்த்து, ரெண்டு நாள் கழித்துகூட வாங்கப்பா. சரி தாயாரே நான் ரெடியாகுறேன். நீங்க ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என்றவன் சற்று நேரத்திற்கெல்லாம் கிளம்பி வர “தந்தையாரே இந்த கிஃப்டை நிஷாகிட்டத் தந்திருங்க. மதுரை ஏர்போர்ட் வரை கார்ல போயிட்டு திருப்பியனுப்புறேன். டேக் கேர் பை” என்றான்.

வழியனுப்ப மகனுடனே லாட்ஜ் வாசல் வந்தவர்கள் காருக்காகக் காத்திருக்கையில், திடீரென்று மழைத்துளி அவன் கைகளில் விழுந்தது. ‘இந்த கொளுத்துற வெயில்ல மழையா?’ என அவன் எண்ணும்பொழுதே, அடுத்தடுத்த துளிகள் பெருந்துளிகளாய் மாறி, சில வினாடிகளில் மேகங்கள் கூடி இடி மின்னலுடன் சூறாவளிக்காற்று ஆரம்பித்தது.

நிறைய ஆச்சர்யம் மற்றவர்களுக்கு. மழைக்கான சின்ன அறிகுறி கூட இல்லாமல் திடீர் மழை எப்படியென்று.

சிவகாமி, குருமூர்த்திக்கு ஏதோ புரிவது போலிருந்தது. அதிலும் குருமூர்த்தி தனக்குள்ளிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாவதை உணர்ந்தார்.

அதற்குள் டிரைவர் காருடன் வர கதிர் காரில் ஏறப்போகும் சமயம் மின்னல் ஒன்று கண்ணைப் பறித்தாற்போல் அடிக்க, அவனையே பார்த்திருந்த சிவகாமி “கதிர்ர்..” என்றலறி வேகமாக அவனைத் தன்புறம் இழுத்த நொடி, மின்னல் காரின் டயரில் பாய்ந்து அது வெடிக்க... டிரைவர் பயத்தில் வேகமாக இறங்கி அவர்களுடன் நின்று கொண்டார்.

“ராஜா வேண்டாம்டா. நீ இங்கேயே எங்களோட இருந்திரு. நான் உன்னை அங்க அனுப்பமாட்டேன்” என்றார் நடுங்கிய குரலில்.

தங்கள் அறைக்கு அழைத்து வந்தவன், “அம்மா எதுக்கு இவ்வளவு பயப்படுற. மழைன்னா, இடி மின்னல் சகஜம்தான?”

“இல்ல ராஜா. நீ வீட்டுக்கு ஒரே புள்ள. இந்த மாதிரி நேரத்துல வெளில போகக்கூடாது. ஆனா இப்ப வந்த மின்னல்... ஒரு நிமிஷம் என்னோட உயிரே போயிருச்சிடா. எனக்கு என் பையன் வேணும். நீ என்னைவிட்டுப் போயிறாதடா” என்றார் படபடப்புடன்.

“சிவா! அவன் எங்கேயும் போகமாட்டான். நீ பதற்றப்படாத.”

“நீங்க பார்த்தீங்கதானங்க. அந்த மின்னல் இவனை மட்டும் குறிபார்த்து வந்த மாதிரியிருந்தது. சரியோ தப்போ வந்தாச்சி. இனி நமக்கு விதிச்சபடி நடக்கட்டும்” என்றார்.

“எதுக்கும்மா ஒண்ணுமில்லாததுக்கு எமோஷனலாகிட்டிருக்க? எனக்கு எதுவும் ஆகாதும்மா. அப்படி நடக்கிறதாயிருந்தா மறுபிறப்பெடுத்து வந்திருப்பேனா” என தன்னையறியாது உளறினான்..

“கதிர்ர்ர்...” என்ற தகப்பனின் அழுத்தமான குரலில் தன் தவறு புரிய, கண்களால் தகப்பனிடம் மன்னிப்பு கேட்டு தாயைக் கண்டான்.

“என்ன சொல்ற கதிர்? என்ன மறுபிறப்பு? எனக்குப் புரியல?”

சில வினாடி தயக்கத்திற்குப் பின் மென்மையாக சிரித்தபடி, “சின்ன வயசுல நான் எப்படி இருந்தேன்னு உனக்குத் தெரியும்லம்மா. இப்ப நான் அப்படிக் கிடையாதே. எவ்வளவு மாறியிருக்கேன்றதைத் தான் சொன்னேன்.”

“ஓ... அதுவா. சரி ராஜா நீ டிரைவருக்கு ஒரு ரூம் அரேஞ்ச் பண்ணிக்குடுத்து பத்திரமா இருக்கச் சொல்லு” என்றார்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் யோசனைகள் சூழ, மழையும் விடுவேனா என்று விடாது தொடர்ந்தது. ஏதோ வருடம் முழுமைக்கும் பொழிய வேண்டிய மழை இன்றே பெய்து தன் கடமையை முடித்து விடுவாற்போல் அப்படியொரு மழை.

மின்சாரம் போனதால் அறைவிட்டு வெளியே வந்தவர்களுக்கு சுற்றிலும் உள்ளவர்களின் மழையைப் பற்றிய பேச்சே பெரிதாகயிருந்தது.

ஆனால் சிவகாமிக்குப் புரிந்தது. தன் மகன் இங்கு இருப்பதுதான் அவனுக்கு நலம் என்பது.

குருமூர்த்தி லாட்ஜ் வந்த அதே நேரத்தில்தான் திருமொழி தேவதானம்பட்டியில் உள்ள அவளின் தம்பி வீட்டினுள் நுழைந்திருந்தாள். அவன் பெற்றோர் மற்றும் அண்ணனின் வரவேற்பையும் தாண்டிய ஏதோ ஒன்று அவளின் நெஞ்சைத் துளைக்க ‘இந்த உறவு தனக்கு நல்லதற்கா’ என்ற எண்ணமும் அவளை வாட்டியது.

அவள் எண்ணமோ என்னவோ வெளியே திடீர் மழையாய்க் கொட்ட ஆரம்பித்தது. இடியும் மின்னலும் பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் பேயாட்டம் போட சின்னதாக நடுக்கம் அவளினுள்.

“என்னமா ஏன் அமைதியாகிட்ட?” என்ற பத்மினியின் கேள்வியில் தம்பியவனும் “என்னாச்சிக்கா?” என்று அருகில் அமர்ந்து அவளின் கையைத் தொட, அதிலிருந்த நடுக்கத்தையும் அவள் முகத்திலுள்ள பயத்தையும் உணர்ந்தவன், “உனக்கு இடி மின்னல்னா பயமா?” என்றான்.

அவளின் “ம்...” என்ற குரலில்... “இவனுமே சின்ன வயசுல அப்படித்தான்மா இருந்தான். சின்ன மழையைக்கூடத் தாங்கிக்க மாட்டான். நிறைய டாக்டர்ஸ் பார்த்து கவுன்சிலிங் நிறைய குடுத்து சரி பண்ணினோம். இப்ப பரவாயில்லதான். இருந்தாலும் வீட்டுக்குள்ள இருக்கிறது வரை எந்தப் பிரச்சனையும் கிடையாது. வெளில மாட்டிக்கிட்டா அவனை மீறி அந்த பயம் வந்து பயமுறுத்தும்.”

“ஓ...” என்ற திருவிடம்... “அமைதியா உட்கார்ந்திருமா. காலை சாப்பாட்டுக்கு ரெடி பண்றேன்” என்று நகர... அவரைத் தொடர்ந்து சென்றவள் “ஏன்மா யாரும் வரல?” என்றாள்.

“நாளைக்கு எல்லாரும் வந்திருவாங்கமா. மழை வேற இப்படி அடிச்சி ஊத்துது. நாளைக்கும் இப்படியே இருந்தா கல்யாணத்துக்கு ஒரு புள்ள வரமுடியாது. மழை நிற்கணும்னு அந்த வருணபகவானைத்தான் வேண்டிக்கனும்.”

“நாளைக்குள்ள நின்னு, அண்ணா கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம ஜாம் ஜாம்னு நடக்கும் பாருங்கம்மா” என்றாள் உறுதியாக.

அன்றைய தினம் முழுவதும் மழையிலேயே கழிய திருமண வேலைகள் முடிவடைந்திருந்தாலும், சில வேலைகள் அப்படியே நின்றிருந்தது.

இரவு எங்கே கனவு வந்து தொல்லை கொடுக்குமோ என்ற பயத்தில் தூக்கம் வராமல் திருமொழி தவித்தாள்.

“என்னமா? தூக்கம் வரலையா?” என கேட்டவரிடம்... “இல்லமா. புது இடம்ன்றதால கொஞ்சம் அசௌகரியமாயிருக்கு.”

“கொஞ்சம் கஷ்டம்தான்மா. படுத்தும் தூக்கம் வரலன்னா பேசாம டிவி பார்க்கறியாமா? மழையினால கரண்ட் இல்லன்னாலும் பசங்க ஜெனரேட்டர் ரெடி பண்ணிருக்காங்க. நாளைக்கும் சரியா தூங்க முடியாது.”

“இல்லம்மா நான் படுத்துக்கறேன்” என்றவளுக்கச் சற்று நேரத்தில் தூக்கம் வந்தது.

அதே நேரம் கதிரும் தாய் தந்தை அருகில் நிம்மதியாக கண்மூடித் தூக்கத்திலாழ்ந்தான்.

“ஹேய் ஏர்போர்ட் நீ இங்கேயா இருக்க?” என்றதில் திருமொழி திரும்ப, “சரி எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லு?” என சிரித்தபடி நின்றிருந்தான் அவன்.

“என்ன சார் நக்கலா?”

“அட நீதானம்மா, ஏர்போர்ட்ல வச்சி மேரேஜ் பண்ணிக்கக் கேட்ட” என அப்பாவியாகச் சொல்ல...

‘லூசாடா நீ’ என்பதாய் ஒரு பார்வை பார்த்து “நான் சொன்னது மேனேஜ் பண்ணிக்கிறேன்னு. மேரேஜ்னு சொல்லல.”

“அதெல்லாம் தெரியாது ஏர்போர்ட். எனக்கு மேரேஜ்னுதான் கேட்டுச்சி” என்றான் மௌனப்புன்னகையுடன்.

அவளோ அதில் கடுப்பின் உச்சிக்கே சென்றாள். “இங்க பாருங்க சார். நான் என்னோட அத்தைப் பையனை மட்டும்தான் கல்யாணம் பண்ணிப்பேன். உங்களுக்கு வேற பொண்ணு கிடைப்பா. அவளைத் தேடிப்போங்க.”

“நோ நோ.. திரும்பவும் சொல்றேன். நான் பார்க்கிற முதல் பொண்ணும் கடைசிப் பொண்ணும் நீதான்! நீ மட்டும்தான்!” என்றான் உறுதியாக.

‘ப்ச்..’ என்ற சலிப்பான உதடசைவு அவளிடம். “சார் கற்பனைகள் எப்பவும் நிஜமாகுறதில்ல. கற்பனையில் வாழாம நிஜத்தைத் தேடிப்போங்க.”

“நிஜமாக நீ எதிரிலிருக்க... நான் ஏன் கற்பனையைத் தேடிப்போகணும்?”

“என்னை ரொம்ப இரிடேட் பண்றீங்க. நான் எப்பவும் இப்படியிருக்கமாட்டேன். நான் வேணும்னா அமைதியானவளா இருக்கலாம். எனக்கு உள்ள இருக்கிறவ அப்படிக் கிடையாது. தாங்கமாட்டீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க” என சற்று மிரட்டலாகவே சொன்னாள்.

“ஹையோ பயந்துட்டேன்” என பயந்தாற்போல் நடித்தவன், “உன்னையும் தாங்குவேன். உனக்குள் உள்ளவளையும் தாங்குவேன்” என்றான் உறுதியுடன்.

அவனின் வார்த்தையில் கோபம் வந்தவள் “உன்னை... சே.. போயா” என்று முகம் சுழித்து அவ்விடம் விட்டு நகர... அவளின் கைபிடித்துத் தடுத்தவன் “உன்னைவிட்டு எங்க போகச்சொல்ற ஏர்போர்ட்? நீ கூப்பிட்டு உனக்காகத்தான் வந்திருக்கேன். நீயே போ சொன்னா எப்படி?”

“ப்ச்... ரொம்ப உளறுறீங்க. நான் ஒண்ணும் உங்களை வரச்சொல்லல. எதுக்காக வந்தீங்களோ அதை முடிச்சிட்டுக் கிளம்புங்க. இன்னொரு டைம் வம்பு பண்ணினா.. அப்புறம்.. வேண்டாம். வார்த்தையை விடக்கூடாது பார்க்கிறேன்” என்று அவனை விலக்கி நகர யத்தனிக்கையில்...

அதே புன்னகையுடன் “எனக்கு நீதான்றது கடவுள் போட்ட முடிச்சி. இப்ப உன்னையும் நான் பார்த்துட்டேன். இனிமேல் மாத்திக்க முடியாது பொண்டாட்டி” என்று சத்தமாக வாய்விட்டுச் சிரித்தான்.


அச்சிரிப்பில் அவனையே பார்த்திருந்த கண்கள் கூச சடாரென்று எழுந்தாள் அவள்.
தன் சிரிப்பினில் ச்தம்பித்தவள் முகம் தொட முயற்சித்து முடியாது போக சட்டென்று எழுந்தான் அவனும்.
இருவருக்குள்ளும் படபடப்பு எழ, "உறக்கம் இருவருக்கும் தனியாக. கனவு மட்டும் ஒன்றானதோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405

இரவோடிரவாக மழை நின்றிருக்க காலையில் தன் பி.ஏவை அழைத்த கதிர் அங்கு செல்ல முகவரி கேட்க... அதில் அதிக சந்தோஷம் நிஷாவிற்கு.

“சார் நிஜமாகவே வந்திருக்கீங்களா சார்?”

“ஆமா நிஷா. முந்தாநாளே வந்தாச்சி. அன்னைக்கு அம்மா கூட ரௌண்ட் போயாச்சி. நேத்து அப்பா வந்துட்டாங்க. சரியான மழை. அதான் இன்னைக்கு உங்க வீட்ல உங்களோட இருக்கலாம்னு போன் பண்ணிட்டேன்.”

“சார் அதுவும் குடும்பத்தோட என் கல்யாணத்துக்கு. என்னால நம்பவே முடியல சார். நீங்க எங்கயிருக்கீங்கன்னு சொல்லுங்க சார். நான் வந்து கூட்டிட்டு வர்றேன்.”

“ஹேய் நோ நிஷா. எங்க கார் இருக்கு. ரூட் சொன்னா போதும் நாங்களே வந்திருவோம். டிரைவர்கிட்ட வழி சொல்லு” என்று ஸ்பீக்கரில் போட பி.ஏ சொல்லச்சொல்ல டிரைவர் கேட்க அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாகவே கல்யாண வீட்டில் இருந்தார்கள்.

மழையெல்லாம் ஓய்ந்து வெயில் அதிகமில்லாமல் சற்று குளிர்ச்சியாய் இருந்தது அப்பகுதி. வீட்டின் வெளியே உள்ள மரத்தினடியில் நின்று அங்கு சின்னதாய் ஓடிக்கொண்டிருந்த பட்டுப்பூச்சியை திரு கையால் தொட, அது காலைச் சுருக்கி அவ்விடம் விட்டு நகரவில்லை. அதன் மென்மையில் தன் வசமிழந்தவள், தன் இடது உள்ளங்கையில் அதை எடுத்து வைக்க அவள் கைகளின் நிறத்திற்கும் பட்டுப்பூச்சியின் சிவப்பு நிறத்திற்கும் இன்னும் அழகாகத் தெரிந்தது.

“ஹேய் பட்டுப்பூச்சி நீ ரொம்ப அழகாயிருக்க. சிகப்பு கலர்லயும் உன்னோடது கண்ணைக்கவரும் அழகுக்கலர் தெரியுமா? அப்படியே உன்னைக் கொஞ்சணும்னு தோணுது” என அதைத் தடவிக்கொடுக்க அது நகர்கையில் உள்ளங்கையில் ஏற்பட்ட குறுகுறுப்பை ரசித்தபடி மண்ணில் அவற்றை விட்டு அது நகரும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தரையில என்னக்கா பண்ணிட்டிருக்க? எதாவது புதையல் கிடைச்சிருக்கா என்ன?”

“புதையலை விட அழகானதுடா இந்தப் பட்டுப்பூச்சி. இதைப் பார்க்கிறதே ரேர் தெரியுமா? பாரேன் எவ்வளவு அழகாயிருக்குன்னு.”

“அழகுக்கு எப்பவும் ஆயுசு கம்மிக்கா. பட் உனக்கு ஆயுசு கெட்டியா இருக்கணும்கா.”

“பட்டுப்பூச்சிக்கும் எனக்கும் ஏன்டா கனக்ஷன் குடுக்குற?”

“நீயும் அழகுதான்கா. இந்தப் பட்டுப்பூச்சி எவ்வளவு மென்மையானதோ அதே மாதிரிதான் நீயும் ரொம்பப் மென்மையானவள்! ரொம்பப் பொறுப்பானவள்! ரொம்பப் பாசக்காரி! அட் த சேம் டைம் சண்டைக்காரி கூட” என்றதில்... “டேய்!” என்று அவனை விரட்டி நடுவில் வந்தவர்களைக் கவனிக்காமல் சுற்றி வந்து அடி கொடுக்க...

“நான் ஒண்ணும் பொய் சொல்லல. இப்பப்பாரு நீதான விரட்டிட்ட வர்ற.”

“வான்டடா வந்து வம்பிழுத்துட்டு என் மேலயே பழியைப் போடுறியா. அமைதியா பேசினா நான் ஏன்டா உன்னை விரட்டப்போறேன்” என்றாள் மூச்சிரைக்க...

“அக்கான்னா அமைதியா இருக்கணும்னு இல்ல. ஆர்ப்பாட்டமாகவும் இருக்கலாம். எனக்கு அமைதி வேண்டாம். உன்னோட உரிமையா சண்டை போடத்தான் பிடிச்சிருக்கு. அதனாலதான் உன்னை அக்காவா செலக்ட் பண்ணினேன்” என்று அங்கிருந்த மரக்கிளையைப் பிடித்திழுத்து வேகமாய் ஓடினான்.

அந்த மரக்கிளையிலிருந்த மழைத்துளிகள் அனைத்தும் மழைச்சாரலாய் அவள் மேல் விழ... “டேய்ய்ய்..” என அலறி “போடா” என்று சிணுங்கினாலும் அவ்விடத்தை விட்டு நகரவில்லை அவள். முதலில் விழுந்த துளிகள் உடலில் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தத் தொடர்ந்து விழுந்த துளிகளில் சின்னதாய் புன்னகை எழ, தலையில் விழுந்த தண்ணீரை ஒதுக்கி முகத்திலுள்ள நீரை இரு கைகளாலும் துடைத்தபடி “இருடா தம்பிப்பையா வர்றேன்” என உள்ளே சென்றாள்.

“என்னடா மகனே! அப்படியே கவிதை கொட்டணுமே. இன்னும் சைலண்ட்டாயிருக்க?”

தாயின் நக்கலை உணர்ந்தவனோ “எங்க தாயே கொட்டுது. மொத்தக் கவிதையையும், என் ஒட்டுமொத்த ரசனையையும் மிச்சமில்லாமல் அள்ளிட்டுப் போறா” என ரசனை மாறாமல் நின்றான்,

“அடப்பார்றா கவிதையை.”

“அதான் பார்த்தாச்சேம்மா. உங்களுக்கு ஓகேவா சொல்லுங்க.”

“பொண்ணும் சம்மதிக்கணும்டா.”

“சம்மதிப்பாம்மா. கடவுளே உனக்காக பொண்ணு காத்திருக்காள்னு சொல்லி அடையாளமும் காட்டியிருக்கிறப்ப எப்படிமா சம்மதிக்காம போவா?”

“ராஜா நீ சொன்ன பொண்ணு...”

“இவள்தான்மா. எப்படி உன் தாய் எனக்காக பார்த்து வைத்திருக்கும் பெண்? ஆனாலும் இவள்கிட்ட ரொம்ப கஷ்டம்மா” என்றான் அலுப்பாக.

“புரியலடா?”

“ம்.. மேடம் முறைப்பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பாங்களாம். என்னை வேற பொண்ணு பார்க்கச் சொல்றாங்க.”

“இது எப்போ?”

“நேத்து நைட் கனவுல வந்து அவள்தான் சொல்லிட்டுப் போறா.”

“ஒ... நீயென்ன சொன்ன?” என்ற சிவகாமியின் குரல் உள்ளே சென்றிருந்தது.

“என்னோட முதலும் கடைசியுமான பொண்ணு நீதான். நீயும் எனக்குத்தான்னு சொல்லிட்டேன். அம்மா உன்னோட அம்மன் சொன்னதை வச்சி இவ்வளவு தைரியமா பில்டப்லாம் பண்ணிட்டிருக்கேன். இவள் இல்லன்னா இன்னொண்ணுன்னு என்னால போக முடியாது” என்றான் தெளிவாகவே.

“ராஜா!” என்றவருக்குள் அதிர்வு.

“அதேதான்ம்மா. இந்த ராஜாவுக்கேத்த ராணி இவள் மட்டும்தான்.” தாயின் முகம் தெளியாததைக் கண்டு “அப்பா பக்கத்துல வந்தாச்சி. ஏற்கனவே வெடிக்கிற நிலையிலிருக்கார். சோ, பி கேர்புல்.”

“அப்பா பையன் ரெண்டு பேருக்கும் நடுவுல சிக்கி நான்தான்டா வெடிக்கிற மாதிரி இருக்கேன்” என்று கணவரிடம் சென்று வீட்டினுள் நுழைய, அவர்கள் பின்னே நுழைந்த கதிரின் எதிரில் முட்டுவதுபோல் வந்து பின் சுதாரித்து மன்னிப்புக் கேட்டபடி நிமிர்ந்து பார்த்த திரு அதிர்ந்து நின்றாள்.

“ஹேய் ஏர்போர்ட் நீ இங்கேயா இருக்க?” என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்தை பேசுமுன் பதிலேதும் சொல்லாது வெளியே சென்றுவிட்டாள். தன் கனவில் வந்த முதல் வார்த்தை. எங்கே அடுத்ததாக கல்யாணம் பண்ணிக்கக் கேட்பானோ என்ற பயம் வந்த போதிலும், ‘எப்படி அவனுக்குத் தெரியும்’ என்றதில் செல்லவிருந்த மனதைக் கட்டுப்படுத்தி வெளியே வந்து வெறுமையான வானில் மேகங்களை ரசிக்கும் மனோபாவத்திற்கு வந்து விட்டாள்.

“ஹேய் ஏர்போர்ட் பயந்துட்டியா என்ன?” தன் பின்னால் கேட்ட திடீர்க் கேள்வியில் சடனாகத் திரும்பியவள் “நான் ஏன் பயப்படணும்?” என அலட்டலாகக் கேட்க...

“இல்ல நான் எதாவது சொல்லிருவேனோன்னு பயந்து வந்த மாதிரி இருந்தது உன் வேகம்.”

“அதான் நான் ஏன் பயப்படணும்?” என்றாள் அழுத்தமாக.

“அது உனக்குத்தான் தெரியும்” என்றான் புன்னகை மாறாது. அப்பொழுது போன் வர எடுத்தவன் “சொல்லு நிஷா? வெளியிலதான் நிற்கிறேன். ஹேய் நீயே போன்னு சொன்னாலும் நிஷாவை விடுறதாயில்ல. ஹா..ஹா.. நிஷா.. நிஷா.. நிஷா.. ஓ நிஷா” என பாடி “நீ என்ன கத்தினாலும் முறைச்சாலும், எனக்கு எப்பவும் என்னோட நிஷாதான் நீ.”

திருமொழி அவனை ‘ஆ’வென பார்த்திருக்க என்னவென்பதாய் கண்ணால் கேட்டவனின் பாஷை புரிந்ததோ! சட்டென்று முகம் திருப்பிக்கொண்டாள்.

“ஓகே நிஷா பைவ் மினிட்ஸ்ல வந்திருறேன்.” போனை கட் செய்து அவளைப் பார்த்தவன் “உள்ளே போகலாமா?” எனக் கேட்க...

“என்னை ஏன் சார் கூப்பிடுறீங்க?”

“நிஷாவைக் காண்பிக்கிறேன்மா.”

“ப்ச்.. எந்த நிஷாவையும் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்ல. உங்க பெர்சனலைத் தெரிஞ்சி எதுவும் ஆகப்போறதுமில்ல. நிஷா இஷான்னு உங்க லைஃப்ல உள்ள பொண்ணுங்களைத் தெரிஞ்சிக்க இஷ்டமும் கிடையாது” என முகத்திலடித்தாற்போல் பேசினாள்.

அதே புன்னகையுடன் “உன் அண்ணன் பெயர் என்ன தெரியுமா?” என்றான்.

“என் அண்ணா பெயர் உங்களுக்கெதுக்கு?”

“சரி கல்யாண மாப்பிள்ளை உன் அண்ணாதான? அவன் பெயர் தெரியுமா?” என்றான். திருவிடம் தம்பியவன் பேசும்பொழுது ‘அக்காவாக செலக்ட் பண்ணினேன்’ என்றதில் இருவருக்குள்ளும் இரத்த பந்தமில்லை என்பதை உணர்ந்திருந்தான்.

“அது அந்த அண்ணா பெயர் தெரியாது.”

“நல்லது. நான் உள்ள போறேன். நீ வர்றதுனா வா இல்ல நின்னு இயற்கையை ரசி” என்றான் நடந்தபடி.

“அது எங்களுக்குத் தெரியும். அதனால...”

அவள் விட்ட இடத்தின் வார்த்தையை உணர்ந்தவன் “ஓகே கூல் பை” என்று உள்ளே சென்றான்.

“சார்! வாங்க சார் உட்காருங்க. உண்மையிலேயே நான் எதிர்பார்க்கலை சார். ரொம்ப ஹேப்பியாயிருக்கு. இவங்க என் அம்மா பத்மினி. அப்பா ரத்தினம். இவன் என் தம்பி பிரஷாந்த்” என்று திருவின் தம்பிப்பையனை அறிமுகப்படுத்தும் பொழுதுதான் கதிர் அவனை முழுமையாகப் பார்த்தான்.

ஏர்போர்ட்டிலும் சற்று முன்னர் வெளியேயும் பார்த்த பொழுது திருமொழியிடம் அதிக கவனம் செலுத்தியிருந்ததால் பிரஷாந்தை சரியாகக் கவனிக்கவில்லை. இதோ நேருக்கு நேர் நம்பமுடியவில்லை கதிரால்.

“உங்களை நான் ஏர்போர்ட்ல பார்த்திருக்கிறேன் சார்.” பிரஷாந்த் சொல்ல...

“ஓ... சாரி நான் சரியா கவனிக்கலை” என்றவனுக்குள் ‘காப்பாத்துங்க’ என்று கனவில் கேட்ட குரல் இவனுக்குச் சொந்தமானது என்பது புரிந்தது. ‘அப்பா, அம்மா, அண்ணன்னு குடும்பத்தோட இருக்கிறவனுக்கு என்ன ஆபத்து வரப்போகுது? என்னால இவனுக்கு என்ன பாதுகாப்பு தேவை. அந்தப் பொண்ணுக்குமே என்னோட தேவை கிடையாதுன்னுதான் தோணுது. அவளோட அத்தைப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு கனவுல சொல்றா. அப்ப சம்பந்தமேயில்லாமல் ஏன் கனவுகள் வந்து தொல்லை செய்யணும். அதுவும் முகம் முதற்கொண்டு நிஜமாக வந்து... ஏன் இவள் எனக்காகக் காத்திருப்பதாகச் சொல்லணும்?’

“சார்” என்ற பிரஷாந்தின் அழைப்பில் நிஜத்திற்கு வந்தவன்... “ஹாய்” என்றான் குழப்பம் தீராமலே.

“டேய் தம்பிப்பையா!” வெளியேயிருந்து கேட்ட திருவின் குரலில் “அக்கா கூப்பிடுறாங்க. இதோ வந்திருறேன் சார்” என்று பிரஷாந்த் வெளியே சென்றான்.

மகனின் முகம் பார்த்த சிவகாமி “என்னடா ராஜா முகம் பேயறைஞ்ச மாதிரியிருக்கு?” என கேட்க...

“அம்மா! எனக்கு எதுவும் புரியல?” கேள்விக்குறியான தாயின் பார்வையில் “இந்தப் பையனும்தான்மா” என்றான்.

“ராஜாஆஆ...”

“ஆமாம்மா” என்றான் சோகமாய் தலையசைத்து.

“என்ன சிவா கத்துற? எதாவது பிரச்சனையா?”

எற்கனவே இங்கு அனுப்பப் பயந்தவர் கனவு விஷயம் தெரிந்தால் என்னவாகுமோ என்ற பயத்தில். “ஒண்ணுமில்லங்க. எறும்பு கடிச்சிருச்சி” என்று காலை லேசாக சொறிந்துவிட்டார்.

மனைவியை நம்பாத பார்வை பார்த்து “எறும்பு கடிச்சா ஆ இல்ல அம்மான்னு கத்துவாங்க. நீ என்னடான்னா ராஜா கத்துற?”

“இல்லங்க சும்மா” என்றார் அசடுவழிய.

பகலில் சில இடங்களுக்கு தாய் தந்தையுடன் கதிர் சென்று வர, மாலை வீடே விழாக்கோலம் பூண்டது.

திருமொழியிடம் வந்த கதிர், “அதென்ன திருமொழின்னு பெயர்?” என்றான்.

“ஓ.. அதுவா! திரு-ன்ற வார்த்தை மரியாதையைக் குறிக்கும். என்னைக் கூப்பிடும்போது கூட மத்தவங்க மரியாதை குடுக்கணும்னு வச்சது.”

“அப்படியா?” என யோசித்தவனைக் கேள்வியாய்ப் பார்த்தவள் ஒற்றைப் புருவம் தூக்கிக் கேட்க... அந்த ஒற்றைப் புருவத் தூக்கல் அவனுள் பல தாக்குதல்களை நடந்தேற்றியது.

“ஹலோ” என அவன் முகத்திற்கு நேரே கைசொடுக்கிக் கூப்பிட நனவு வந்தவன், “இ..இல்ல திருடனுக்கும் திருதான் முதல்ல வருது. அப்ப அவனும் மரியாதைக்குரியவன் தானோ!” என்றான் புன்னகையை அடக்கியபடி.

பல்ப் வாங்கிய எஃபக்ட் திருவிற்கு. பல்லைக் கடித்தபடி, “புத்தி போகுது பாரு. நீங்கள்லாம் என்னத்தைப் படிச்சி கிழிச்சீங்களோ” என்று கடிந்துகொள்ள...

ஹா..ஹா என வாய்விட்டுச் சிரிக்கையில், அவன் பற்களுடன் போட்டியிட்டனவோ அவன் கண்களும்.

திருவிற்கு அதுவரையில்லாத எதோ ஒன்றை நினைவுபடுத்தியது அச்சிரிப்பும் பார்வையும். ஏதோ நினைவில் “உங்க பெயர் என்ன?” என்றாள்.

“இளங்கதிர்” என்றான் தன் முழுப்பெயரையும்.

“இளங்கதிர்... இளா..” அப்பெயரின் உச்சரிப்பில் மெல்லியதாக சுழன்ற மனதுடன் சேர்த்து மூளையும் சுழல அப்படியே மயங்கிச் சரிந்தாள் அவனின் கனவுப்பெண்!
 
Top