• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
657
4

அவளுள்ளும் ஒரு தடுமாற்றம். ‘இது சரவணனா? பிறந்த நாளுக்காகதான் கோவிலுக்கு வந்திருக்காங்க. நான் பார்ப்பது நிஜமா?” என்று அவள் நினைத்த வேளையில்,

அதைப் பொய்யாக்கும் விதமாக, “டேய் சரண்! ஐயர் ரொம்ப நேரமா நிற்கிறார் பாரு. அர்ச்சனையைக் கொடு” என்று அவன் அத்தை சொன்னதும்தான், அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். சட்டென்று தலையை உலுக்கி ஐயரிடம் கொடுத்து பெயர் சொன்னான்.

அதுவரை அவனையே ஒருவித எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஆராதனாவுக்கு, அவளின் எதிர்பார்ப்பு உடைந்ததும், சிறிது நேரத்தில் கற்பனை செய்து கொண்ட தன் மனதையே நொந்து கொண்டாள்.

சரணுக்கோ அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போல் இருக்க, முதல் முறையாக அதிர்ந்தான். ‘என்ன எண்ணம் இது? ஏன் அவளைப் பார்க்கணும்னு தோணுது? அவளைப் பார்க்கும் போது முதல் முறையாகப் பார்க்கிறோம் என்ற எண்ணம் ஏன் வரவில்லை? மாறாக நெடுநாள் விலகியிருந்த ஒருவரை நீண்ட நாள் கழித்துச் சந்திக்கிறோம் என்ற உணர்வு ஏன்?’ காரணமில்லாமல் அந்நேரம் தாயின் முகம் வந்துபோக, அந்த நிமிடம் ‘இவள் தான் தனக்கானவள்’ என்ற எண்ணம் வந்தது. இதுவரை அனைவரையும் அக்கா, தங்கையாகவே மதித்து வந்தவனால், இவளை அந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்ல மனதில்லை.

ஆம். முருகனின் அருளாள் தன்னவளை முதன்முறையாக பார்த்தான். அதை நல்லபடியாக நடத்திக் கொடுக்க, முருகனிடமே விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தான்.

அவன் தங்கை கையை இடித்து ஆரத்தி எடுக்கச் சொன்னதும்தான், சுயம் திரும்பினான்.

சற்று நேரத்திற்கெல்லாம் வந்த ஐயர், இருவரிடமும் அர்ச்சனையைக் கொடுக்க, அவரவர் வழியே திரும்பும் வேலையில் வேதவல்லி, “இது எங்க அர்ச்சனைத் தட்டு இல்லை” என்றாள்.

ஐயர் திரும்பி, “ஓ நீங்க ரெண்டு பேரும் பிறந்தநாளுக்காகச் சொன்னதுல மாறிருச்சி. கொடுங்க” என்று மாற்றிக் கொடுக்கும் பொழுது, இரண்டாம் முறையாகப் பார்வைப் பரிவர்த்தனை நடந்தது.

கோவிலைச் சுற்றிக் கொண்டிருந்த ஆராதனாவின் மனதிற்குள், சம்மதமே கேட்காமல் சரண் சட்டமாக அமர்ந்துவிட்டான். அதை அறியாதவளோ, ‘எப்படி அவனைப் பார்த்ததும் அப்படியே நின்னுட்டேன்? என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான்? ஆனால், அவனும்தான பார்த்தான். அந்தப் பார்வையில் எந்த கள்ளத்தனமும் இல்லையே. அதையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்கு. இவன் என் சரவணன் அத்தானா இருப்பானோ? சே... இல்லையே. அதான் அவன் கூட இருந்த அவங்க அம்மா, சரண்னு சொல்லிக் கூப்பிட்டாங்களே. அப்புறம் எப்படி?’ என மனசளவில் சோர்ந்தவள், ‘உன்னைத் தேடி தேடியே அலையணுமா அத்தான். நீங்க எங்கயிருக்கீங்க?’ என்று நினைத்து முடித்து நிமிர, அவளின் அருகிலேயே சரண் வந்து கொண்டிருந்தான்.

ஒரு நிமிடம் அவனைக் கண்டதும் வந்த சந்தோஷம், உண்மை உணர்ந்ததும் நொடியில் மறைந்தது.

பிரகாரத்தைச் சுற்றிக்கொண்டே அவளைத் தேடியச் சரணின் விழிகளில், அவன் முன்னே சென்று கொண்டிருந்த ஆராதனா விழ, அவளைப் பார்க்கும் ஆசையில் வேகமாக முன்னே வந்தவன், அவள் அருகில் வருவதுபோல் பார்த்துக் கொண்டான். அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல், ஆராதனாவும் அவனைப் பார்க்க, அந்தப் பார்வையில் ஒருமுறை உடல் சிலிர்த்தான்.

முருகன் தரிசனம் முடித்து வெளியில் வரும்போது, தங்கையுடன் பேசியபடியே சரண் வர, கூட்ட நெரிசலில் இடிபடாமல் நகர்ந்து வந்த தோழிகள் இருவரும், வெளியே செல்ல யத்தனிக்கையில், சரணின் மேல் ஆராதனா மோதிவிட்டாள்.

மோதிய இருவரும் ஒரே நேரத்தில், “சாரி. சாரி” என்று விடாமல் கேட்டு முகம் பார்க்க, இருவருக்குள்ளும் சில விநாடிகள் தடுமாற்றம். அதை மறைத்து நிதானித்தவர்கள் திரும்பவும் மன்னிப்புக் கேட்டுப் பிரிந்து சென்றார்கள்.

பின்னே வந்த சரணுக்கும், முன்னே சென்ற ஆராதனாவுக்கும் இருவரின் குரலும் ஒருவருக்கொருவர் பரிச்சயமான உணர்வு. அதுவரை அமைதியாக வந்த வேதவல்லி, “என்னடி? என்னாச்சி? ஒரே யோசனையா இருக்கிற? இடிச்சிட்டு வந்தியே அந்தப் பையனைப் பற்றி யோசிக்கிறியா? செம ஹேண்ட்சம்ல. நிறைய பொண்ணுங்க அவனையே பார்த்துட்டுப் போனாங்க. பக்கத்துல ஒரு பொண்ணு இருந்தாளே செம அழகு. அவனோட தங்கச்சின்னு நினைக்கிறேன். பார்க்க அவள் உன்னை மாதிரியே தெரிஞ்சா” என்று சொல்லிவிட்டு தோழியின் முகம் காண, அவளின் கவனம் இங்கே இல்லை என்பதை உணர்ந்தவள், அவள் தோள் தட்டி, “என்னடி? நான் பாட்டுக்குப் பேசிட்டு இருக்கேன். உன் கவனம் எல்லாம் வேற எங்கேயோ இருக்கு?” என்றாள்.

“ஹா..ஹான்! என்னமா? சாரி. என்ன சொன்ன கவனிக்கலை” என்று வார்த்தையில் தடுமாறினாள்.

“ம்.. பார்த்தேன் பார்த்தேன் உன் கவனம் எல்லாம் எங்க இருந்ததுன்னு?”

“இல்ல வள்ளி. அவருக்கும் இன்னைக்குத் தான் பிறந்தநாளாம். அதனால...” ஆராதனா ரொம்ப உணர்ச்சிவசப்பட்டாளோ., அல்லது அதிக பாசம், கோவம் இப்படி இருந்தால்தான், வேதவல்லியை, வள்ளி என்றழைப்பாள்.

இன்று சற்று உணர்ச்சிவசப்பட்டிருக்க, “அதனால இவன் உன் அத்தைப் பையனாக இருக்குமோன்னு நினைச்சியா?” எனவும்,

“ம்... அதான் நிஜம். ஆனா, பேரு வேற. ப்ச்... என்ன பண்றது? எங்க போயி அவங்க பேமிலியைத் தேடுறதுன்னு தெரியலை. சரி கிளம்பு. வேலைக்கு முதல் நாள் வேற. எந்தவித மனக்கலக்கம் இல்லாம கிளம்பணும்னுதான கோவிலுக்கு வந்தது. சாமி தரிசனம் நல்லபடியா முடிஞ்சது” என்றாள்.

வெளியே வந்து ஆட்டோவைத் தேட, அவர் வெற்றியிடம் பேசிகொண்டே, அவர்களுக்குக் கையசைத்து ஆட்டோவில் உட்காரச் சொல்லி, வெற்றியிடம் திரும்பியாவர், “நம்ம ராணிம்மா ஹாஸ்டல்ல இருக்கிற பொண்ணுங்க. ஊரைப் பற்றி எதுவும் தெரியாதுன்றதால என்னை பார்த்துக்கச் சொல்லிட்டாங்க” என்றார்.

பெண்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்த வெற்றி, திரும்பிப் பார்ப்பதற்குள் ஆட்டோவில் ஏறி அமர்ந்திருந்தார்கள் பெண்கள். “சரி கிளம்புங்க சேகர். நம்ம ஊரைப்பற்றி உங்களுக்கேத் தெரியும். ஜாக்கிரதையாப் பார்த்துக்கோங்க” என்று அனுப்பி வைத்தார்.

வெளியே வந்த சரண், அவர்கள் சேகரின் ஆட்டோவில் செல்வதைப் பார்த்தபடி வந்தவன் தந்தையிடம், “கோவிலுக்கு உள்ளேயே வரலையாப்பா? நாங்க உங்களைத் தேடிட்டு இருந்தோம். ஆமா. சேகர் அங்கிள் கூடவா பேசிட்டு இருந்தீங்க?” என்று தனக்குத் தேவையான பதிலையும் தெரிந்துகொள்ளக் கேட்டான்.

“காரை பார்க் பண்ணிட்டு வர்ற வழியில் கஸ்டமர் ஒருத்தர் பிடிச்சிட்டார். அவர் போனதும் சேகரைப் பார்த்தேன். ராணிம்மா ஹாஸ்டலுக்குப் புதுசா வந்த ரெண்டு பொண்ணுங்களை, வெளில பார்த்துக்கிற பொறுப்பை உங்க அத்தை அவர்கிட்ட கொடுத்திருக்காங்களாம். அதான் உங்களைக் கூடப் பார்க்க டைம் இல்லாமல் போயிருச்சி. சரி. சாமி கும்பிட்டாச்சில்ல?” என கேட்டதும், அருகில் வந்த நியா அப்பாவின் நெற்றியில் விபூதி வைத்து, “வாங்க கிளம்பலாம்” என்றழைத்துச் சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் அத்தையும், நியாவும் சமையலறைக்குள் நுழைய, சரண் வேகமாகப் படியேறி தன் அறைக்குச் சென்றான். இவ்வளவு நேரமாக மனதில் சுமந்ததை தாயிடம் சொல்லும் அவசரம் அவனுக்கு. உள்ளே வந்து கதவைத் தாளிட்டவன், அங்கிருந்த மேஜையின் உள்பெட்டியில் இருந்த போட்டோவை எடுத்து, “அம்மா! நான் பார்த்துட்டேன்ம்மா. நான் பார்த்துட்டேன். அந்த விஷயத்தை முதல்ல உங்ககிட்டச் சொன்னால்தான் மனசு திருப்தியா இருக்கும். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்ம்மா. நீங்க சொல்லியிருந்தீங்களே அம்மா, உனக்குன்னு ஒருத்தி வருவா. அவளைத் தவிர மத்த பொண்ணுங்களை அக்கா, தங்கையா பார்க்கணும்னு. நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனா, இன்னைக்குப் பார்த்தப் பொண்ணை அப்படி நினைக்க முடியலம்மா. அவள்தான் எனக்கானவள்னு நினைக்கிறேன். உங்களுக்கும் அவளைப் பிடிக்கும்மா. உங்களோட பேவரிட் கடவுள் முருகன் கோவில் சந்நிதானத்துல வச்சிப் பார்த்தேன்ம்மா. அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலம்மா? ஆனா, அவ நம்ம ராணியத்தை ஹாஸ்டல்ல இருக்கிறா. இன்னைக்குத் தான் முதல் நாள் வேலைக்குப் போறாளாம். சேகர் அங்கிள் அப்பாகிட்டச் சொல்லியிருக்கார். சரிம்மா ரொம்ப டைம் ஆகுது. கீழே என்னைத் தேடப் போறாங்க. நான் வர்றேன். அப்படியே வேலைக்கும் கிளம்பறேன்ம்மா” என்று தாயிடம் தன் என்னத்தைச் சொல்லிவிட்டுச் சென்றான்.

அம்மா அம்மா நீ எங்க அம்மா

உன்னவிட்டா எனக்காரு அம்மா

கைபேசி சத்தம் கேட்டு, பார்த்தவனுக்கு எம்டி நாராயணனிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. ‘வேலைக்கு வர்ற நேரம்தான? அதுக்குள்ள என்ன திடீர் போன்? கம்பெனியில எதாவது பிரச்சனையா?’ பலவற்றையும் யோசித்தவாறு அழைப்பை ஏற்று, “ஹலோ சார். குட் மார்னிங்” என்றான்.

“குட் மார்னிங் சரண். கொஞ்சம் சீக்கிரமா வாப்பா. பெங்களுர் பிராஞ்ச் ஆபீசர் வந்திருக்காரு. திடீர் மீட்டிங்” என்றார் அவசரக்குரலில்.

“இதோ. இதோ ஒரு அரைமணி நேரம் சார். வந்திடுறேன்” என்று போனை வைத்து, அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்ப யத்தனித்தவனை, தாத்தாவும், பாட்டியும் சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள்.

“ரொம்ப அவசரம் தாத்தா. ப்ளீஸ்.”

“அப்ப இந்த கேசரி மட்டுமாவது கொஞ்சம் சாப்பிட்டுப் போ அண்ணா. காலையில் இருந்து ஒண்ணும் சாப்பிடலை” எனவும் அதை வாங்கக் கைநீட்டியவனைத் தடுத்து கொஞ்சம் சூடு ஆறவைத்து ஊட்டி விட்டாள். இரண்டு ஸ்பூன் வாங்கியவன் பொறுமையில்லாமல், “நான் கிளம்புறேன்” என்று விடைபெற்றான்.

மற்றவர்களும் கிளம்புவதாக சொல்ல, “நான் வந்து விட்டுட்டு வரவா அம்மா” என்று தாயிடம் கேட்க,

“வேண்டாம்பா. அக்கா காரை டிரைவர்கிட்டச் சொல்லி எடுத்துட்டு வரச் சொல்லிட்டா. பக்கத்துல இருக்கிற எம்எம்டிதான. பத்தே நிமிஷத்துல வரப் போறான்” என்றார் மகனிடம்.

“சரிம்மா. பார்த்துப் போயிட்டு வாங்க” என்றார் வேற்றியும்.

ஏழரை மணிக்கெல்லாம் அலுவலகம் நுழைந்த சரண், அவசர அவசரமாக எம்டியைச் சந்திக்கச் சென்றான். அங்கு அவரின் அறை முன் அனைவரும் கூடியிருப்பதைப் பார்த்தவன். என்னவென்று புரியாமல் விழிக்க, அவனுக்கு வழிவிட்ட அடுத்த வினாடி, அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் வாழ்த்துப்பாடினர்.

சந்தோசத்தில் வாயடைத்து அவன் நிற்க, கேக் வெட்டச்சொல்லி கையில் கத்தியைக் கொடுக்கவும், எம்டி நாராயணன் முன்னிலையில் கேக் வெட்டி அவருக்கு முதலில் ஊட்டிவிட்டான். எம்டியே வந்து இதையெல்லாம் செய்யவும் கொஞ்சம் பெருமையா உணர அவரிடம், “ரொம்ப தேங்க்ஸ் சார். நான் இதை எதிர்பார்க்கல” என்றான்.

“இந்தக் கம்பெனி வளர்ச்சிக்கு நீயும் ஒரு காரணம் சரண். உன்னோட ஐடியால நிறைய காண்ட்ராக்டும், லாபமும் கிடைச்சிருக்கு. எம்டினா மேலயே தான் நிற்கணுமா? நமக்கு உழைக்கிறவங்களுக்காக இறங்கி வந்தா தப்பில்லையே? அப்பத்தான் நான் இன்னும் ஒரு நார்மல் மனுசனா இருக்கேன்னு எனக்கே தெரியும். என்ஜாய் மை பாய். உனக்காகதான் ஸ்டாப்ஸ் கூட சீக்கிரம் வந்துட்டாங்க. சீக்கிரம் செலப்ரேட் பண்ணிட்டு வேலையைத் தொடங்குங்க. ஓகே நான் கிளம்பறேன்” என்று விடைபெற்றார்.

தன் சக தோழர்களுக்கு நன்றி சொல்லி கம்பீரமாகச் சிரித்துக் கொண்டிருந்தவனை, தன் மனமெனும் பெட்டகத்தில் சேர்த்துக் கோர்த்து வைத்தாள் சக்தி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
657
அவனை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தவள், அவனுக்குப் பின்னால் நின்றிருந்த கணக்குப் பிரிவில் (அக்கௌண்ட் செக்சன்) இருக்கும் சிவகுமாரைக் கவனிக்கவில்லை.

அவனோ சக்தியை எப்படி வசீகரிக்கலாம் என்று நித்தம் ஒரு திட்டத்துடன் வருகிறான். சக்தியின் பார்வை அவனிடம் திரும்பவில்லை என்றதும், மனதில் ஒரு சோர்வு வர திரும்பி விடுவான். அவளைக் கண்ட நாள் முதல் சக்தி தாசனாக அலைபவன். கன்னியின் கடைக்கண் பார்வைக்காக, காளையவன் பல மாதங்களாகத் தவமாய் தவமிருக்கிறான். ஆனா, முன்னேற்றம் தான் வந்தபாடில்லை.

சிவாவின் தவம் பலிக்குமா? சக்தி கடைக்கண் பார்வையை சரணிடமிருந்து, சிவாவிடம் திருப்புமா? எல்லாம் அவன் செயல்!

ஆராதனாவுக்கும், வேதவல்லிக்கும் இன்று முதல் நாள். புதுவித சந்தோஷத்துடனும், சங்கோஜத்துடனும் அலுவலகத்தில் நுழைய, வரவேற்பறையில் விசாரித்து வந்து ஏற்கனவே அங்கு இருந்தவர்கள் அருகில் வந்தமர்ந்தார்கள்.

அங்கு வேலை செய்யும் பழைய உறுப்பினர்கள் சிலர், “நீங்க எல்லாரும் நியூ ஜாய்னியா?” என்ற கேள்விக்கு அவர்களுடன் சேர்த்து இன்னும் நான்கு பேரும் ஆம் என்று குரல் கொடுக்க, அதைப் பார்த்தவர்கள், “எங்க கம்பெனி நியூ மெம்பர்களுக்கு சின்னதான வரவேற்பு. தங்களின் வரவு நல்வரவாகுக” என்றதோடு அவர்களைத் வரவேற்றுப் பூ கொடுத்தார்கள்.

இவர்களுக்கு ஆச்சர்யம் கலந்த ஆனந்தம். அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லி தங்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு தங்களை அறிமுகமாக்கி மேலதிகாரியைப் பார்க்க அனுப்பி வைத்தார்கள்.

மேலதிகாரியும் அவர்களை முதலில் வரவேற்று, “ஹலோ ஐம் சுதாகர். இந்த கம்பெனி மேனேஜர்” என்று தன்னை அறிமுகப்படுத்தி, அவர்கள் ஆறு பேருக்கும் பயிற்சி கொடுக்கவென்று ஒருவரை நியமித்து, முதல் நாள் வேலைக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைத்தார்.

வேலைக்குப் புதியவர்கள் என்பதால், முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், நேரம் ஆக ஆக இப்படித்தான் என்று வேலை கொஞ்சம் பிடிபட ஆரம்பித்தது.

மாலை வேலை முடிந்து மேலதிகாரியைப் பார்த்து அன்றைய வேலையைப் பற்றி அறிக்கை கொடுக்க, “குட். முதல் நாள்லயே எல்லாரும் நல்லா பண்ணிருக்கீங்க. வாழ்த்துக்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

“அடியேய் ஆரு. நான் ரொம்பப் பயந்துட்டே வந்தேன். புது இடமா இருக்கே எல்லாரும் எப்படிப் பழகுவாங்களோன்னு. ஆனா, நல்லா பழகுறாங்க.”

“ம்.. இதுக்குப் பேர்தான்டி, தட்டிக் கொடுத்து வேலை வாங்குறதுன்னு சொல்றது. பார்க்கலாம். போகப் போகத் தெரியும். ஆனா, நல்ல பாலிஸி. புதுசா வர்றவங்களுக்கு மதிப்பு கொடுத்தது கம்பெனி மேனேஜர் ஐடியாவா இருக்கும். சமாளிச்சிக்கலாம். அதை விடு. எங்க அத்தானைத் தேடணும். எங்க, எப்படின்னு ஒண்ணும் புரியலைட.… ப்ச்.. என்னடா ஆராவுக்கு வந்த சோதனை. கட்டிக்கப் போறவனை பொண்ணு நான் தேடி அலைய வேண்டியிருக்கு. எல்லாம் காலக் கொடுமைடா” என்றாள்.

“அது காலக் கொடுமையில்லை ஆரு. உங்க பாட்டி உனக்குச் செய்த கொடுமை. சும்மா இருக்காம, பச்சப்புள்ள மனசுல விதைச்சிட்டுப் போன விதை, இப்ப எப்படி விருட்சமா வளர்ந்திருக்கு? எனக்கென்னவோ இதெல்லாம் சரியா...” என்று இழுக்க,

“இதெல்லாம்?” என்று பதிலுக்கு முறைத்தாள்.

“ஒண்ணுமில்லை. இதெல்லாம் சீக்கிரம் சரியாகிரும்னு சொல்ல வந்தேன்” என்றவள் மனதிற்குள், ‘ம்க்கும்.. வாயைத் திறந்து எதையாவது சொல்ல விடுறாளா?’ என்று நொடித்தாள்.

“என்னடி புலம்புற?”

“என்ன புலம்புறேனா? நானா? இ…இல்லையே. வா ஆட்டோ வந்திருச்சி கிளம்பலாம்” என்று அழைத்துச் சென்றாள்.

ஆட்டோவில் இருவரின் சண்டையையும், கொஞ்சலையும் ரசித்துக் கொண்டு வந்தவரிடம், அவரின் குடும்பத்தைப் பற்றியும், குழந்தையைப் பற்றியும், விசாரித்தபடி விடுதி வந்து இறங்கினார்கள்.

சரண் அன்று மாலை வேலை முடித்து வரும்போது, தனலக்ஷ்மி பெணகள் விடுதி பார்த்ததும் காரை ஓரம் கட்டி, ‘காலையில் பார்த்தப் பெண்ணை பார்க்கலாமா? என்று நினைத்தவன் பின், மனதை மாற்றி சிறிது நேரம் எதிரில் உள்ள பூங்காவினுள் நுழைந்தான். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, விடுதியில் அவள் தென்படுகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யமானது. ‘நானா இது? இப்படி ஒரு பொண்ணுக்காக வந்து உட்கார்ந்திருக்கேன்?’ அவன் தன்னைப்பற்றி யோசித்து மாடியைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, யோசனையின் நாயகி ஜன்னல் திறந்து, அவனுக்குத் தரிசனம் கொடுத்தாள். தூரம் வைத்துப் பார்க்கும் போது, ‘அவள் தானா?’ என்ற சந்தேகம் வந்த போதிலும், ‘அவள் தான்’ என்று மனம் அடித்துச் சொன்னது.

மாடியிலிருந்து ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள், திடீரென்று நகர, இன்னொரு பெண் வந்து இவன் புறமே பார்ப்பது தெரிந்தது.

சில நிமிட இடைவேளையில் வேகமாக ஆராதனா பூங்கா நோக்கி வர, ‘அடக் கடவுளே! நாம பார்த்தது அவளுக்குத் தெரிஞ்சி போச்சா. நேரே நம்மளைத் தேடி வர்ற மாதிரியிருக்கு. ஒருவேளை வேற யாரையாவது தேடி வருகிறாளா? என்று சுற்றிலும் பார்க்க யாருமில்லை என்றதும், ஒரு நிமிடம் மனதினுள் பயம் வந்து போனது.

‘நாம சைட்டடிச்சதைப் பார்த்து அடிக்க வர்றாளா? இல்ல திட்டப் போறாளோ தெரியலையே. முருகா என்னைக் காப்பாற்று. அவ என்னை எந்தக் காரணம் கொண்டும் தப்பா நினைக்கக்கூடாது’ என வேண்டினான்.

அனைவரும் குழந்தைகள் விளையாடும் இடத்தில் இருக்க, சரணை நோக்கி நெருங்கி வந்தவள், அவனைத் தாண்டிச் சென்றதும்தான் மூச்சு வந்தது. “ஷப்பா! ஒரு நிமிஷம் என்னல்லாம் நினைக்குது இந்த மனசு” என திருப்திபட்டாலும், தன்னைக் கவனிக்காமல் அவள் சென்றது கூட, அவனுக்கு சங்கடமாக இருந்தது.

‘என்னைப் பார்க்க வரலைனா, யாரைப் பார்க்க வந்தாள்? என்ற கேள்விக்கு, ‘பளார்’ என அடிக்கும் சத்தமும், “ஏய்...” என்ற ஒரு ஆணின் எதிர்க்குரலும் கேட்டது. வேகமாக அவள்புறம் திரும்ப, கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆணும், அவள் கையருகில் ஏழெட்டு வயதுக் குழந்தையும் நின்றிருந்தது.

“என்னலே துள்ளுற? செவுல காட்டி இப்ப வச்சது பத்தாதுலே” என்று சுற்றிலும் தேடி ஒரு பெரிய கல்லைத் தூக்கி வந்து, “இதால மண்டையில போட்டேன்னு வையி, ஒரேடியா மேலோகம் பாத்துப் போய் சேந்திருவ. நானும் ஏதோ புள்ளைக்குத் தகப்பன் போலருக்குமோன்னு கொஞ்சம் தயங்குனா, பச்சப்புள்ளலே இது. ஒனக்கு அறிவு வேணாம். ஏழு கழுத வயசாவுது. ஏழு வயசுப் புள்ளகிட்டப் போயி... ச்சீய்..” என்று முகம் சுழித்து சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

அதுவரை கோபத்தில் திருநெல்வேலித் தமிழை அள்ளித் தெளித்தவள், கொஞ்சம் நிதானமாகி, “உனக்குக் கல்யாணம் ஆகிருச்சா” என கேட்க,

அடி வாங்கியவன் முறைத்துக் கொண்டே நிற்க,

“கேக்குதேன்ல சொல்லுலே” என்று திரும்பவும் நெல்லைக்குச் சென்று வந்தவள், “சொல்ல மாட்டல்ல? உன்னை இரு” என்று அங்கு இருந்த பெரிய கல்லைத்தூக்கி அவன் மேல் போடப் போனாள்.

என்ன நடந்திருக்கும் என்பதை அவள் பேச்சிலிருந்து யூகித்த சரணுக்கு அவன் மேல் கொலைவெறி வர, நடுவில் புகுந்து அவனை அடித்துப் புரட்டி எடுத்து, “கேட்கிறாங்கள்ல. சொல்லுடா?” என்றான்.

“ஆ... ஆகிருச்சி..”

“பொண்டாட்டி வீட்டுல இருக்காங்கல்ல?” என்று ஆராதனா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நின்றவனுக்கு, சரண் இன்னொரு குத்துவிட,

“ஆமா இருக்கா” என்ற பதில் வேகமாக வந்தது,

ஆராதனா வந்த கோபத்தை அடக்கி, “பிள்ளைங்க எத்தனை? ம்... சொல்லு?” என்றாள் அதட்டலாக.

“ரெண்டு. பையன் ஒன்னு. பொண்ணு ஒண்ணு.”

“பொண்ணு வயசென்ன?” என்று பல்லைக் கடித்தபடி கேட்க, அதுவரை எகிறிக்குதித்தவன் தலைகவிழ்ந்து, “பதினஞ்சி” என்றதும், திரும்பவும் ஒரு அறைவிட்டாள்.

அவள் அங்கு வந்தது முதல், அவளின் ஒவ்வொரு முகபாவனையையும், கோவத்தில் எழுந்த அவளின் நெல்லைத் தமிழையும், பல்லைக் கடித்தது, அடித்தது என ஒரு காதலன் விரும்பாத அத்தனைக் கோணங்களிலும் பார்த்து, அவளை ரசித்துக் கொண்டிருந்த சரண், இடையிடையே அவனை அடிக்கும் வேலையையும் செவ்வனே செய்தான்.

“பதினஞ்சி வயசுல பொண்ணை வச்சிக்கிட்டு, பச்சைப் புள்ளகிட்டப் போயி... மிருகமா நீ? உடம்புத் தேவைன்னா உன் பொண்டாட்டிகிட்ட போ. இல்ல இதுக்குன்னே இருக்கிற இடத்துக்குப் போ. உன்னை மாதிரி ஆளுங்களால, ஆண்கள் எல்லாருமே தரங்கெட்டவங்க, தவறானவங்கன்னு நினைக்கத் தோணுது” என்றாள்.

சரணோ அவனிடம், “சொல்றேன்னு தப்பா நினைக்காத. நான் சொல்லப் போற விஷயம் பலிக்கக்கூடாது. ஆனாலும், சொல்றேன். வயசுப் பெண்ணை வச்சிருக்கியே? உன்னை மாதிரி பொறுக்கிப் பயலுங்க எத்தனை பேரு சுத்துறானுங்க. எவன் கையிலயாவது தனியா மாட்டி, எதாவது ஆனா என்ன பண்ணுவ? நம்மைப் போல் ஓருவன்னு தொடைச்சிப் போட்டுப் போயிருவியா?” என்று காட்டமாகக் கேட்டான்.

“அச்சச்சோ! வேணாம் தம்பி அப்படிலாம் பேசாதீங்க. ஒருத்தன் கொடுத்த கஞ்சா என்னை இப்படி ஆக்கிருச்சி. அதுவும் முதல் முறையா ட்ரை பண்ணிப்பாருங்கன்னு சொன்னான். எவ்வளவோ மறுத்தும் கேட்காம கொஞ்சமா ட்ரை பண்ணுங்கன்னு சொல்லிக் கொடுத்துட்டான். இது என்னையும் மீறி நடந்த விஷயம்பா. இனி இந்த மாதிரி ஒரு தப்பு ஜென்மத்துக்கும் நடக்காது. என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. என்னை மன்னிச்சிருங்க” என்று கீழே உட்கார்ந்து மண்டியிட்டு அழுதான்.

அழுபவனையே வெறித்துப் பார்த்த, சரணும், ஆராதனாவும், “உன் பொண்ணுன்ன உடனே குத்துதா?” என்று இருவரும் ஒரே நேரத்தில் சொல்லி முடிக்க, இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் வருடிச் சென்று பின் பார்வையைத் திருப்பினர்.

“உன் பொண்ணு மாதிரி, மற்றப் பொண்ணுங்களையும், அம்மாவா, பொண்ணா, அக்காவா, தங்கையா நினைச்சுப் பழகு. உனக்குத் தன்னாலேயே நல்ல புத்தி வந்திரும்” என்றாள்.

அவளின் சொல்லில் அந்த மனிதன் பாதிக்கப்பட்டானோ, இல்லையோ? சரண் முழுவதும் பாதிக்கப்பட்டான். சிறு வயதில் தனக்குத் தாய் சொன்ன அறிவுரை, இவளின் குரலும், தாயின் குரல் போல் தோன்றியது. தாய் சின்ன வயதில் சொன்னது அசரீரியாக அவன் காதில் கேட்டது.

“சாரிமா. சாரி தம்பி” என்றவரிடம்,

“நானும் சாரி சொல்லிக்குறேன்” என்று திரும்பவும் இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல களவு கொண்டு மீண்டது இருவரின் பார்வைகளும்.

“நாங்க உங்க தப்புக்குத் தான் தண்டனை கொடுக்க நினைத்தோம். ஆனா, வயசுக்குன்னு ஒரு மரியாதை கொடுக்க மறந்துட்டோம். அதுக்குத்தான் இந்த மன்னிப்பு.

“மன்னிப்பு நான் கேட்கணும்பா. ஆனாலும், இன்றைய இளைய சமுதாயம் நலலாவே வளர்ந்திருக்கீங்க. பத்துல ரெண்டு கெட்டாலும், எட்டு பேர் தேறிடுறீங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும். நல்லா இருப்பீங்க” என்றார்.

“சார் உங்க பெயர் என்ன?”

“ இந்த பாழாய்ப் போனவன் பேரு ராகவன். தனியா ஒர்க் ஷாப் வச்சிருக்கேன். இங்க பக்கத்துலதான் கார், ஆட்டோ ரிப்பேரிங் பண்ற கடை ஆர் எஸ் ஒர்க் ஷாப் பெயர்ல இருக்கு. நீங்க என்னை மன்னிச்சது உண்மைனா, கண்டிப்பா ஒரு நாள் வரணும்” என்று சொல்லி, “உங்க பேரு” என்று அவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்களிடம் இருந்து பதிலில்லை என்றதும், “இன்னும் என்னை நம்பலன்னா வேண்டாம்” என்றார்.

“இல்ல. என் பேரு சரண்.” சொல்லி முடித்து அவளின் பெயரைத் தெரிந்து கொள்வதற்காக ஆவலாக இருந்தவனை ஏமாற்றாமல்,

“என் பெயர் ஆராதனா” என்றாள்.

‘ஆராதனா! நல்ல பெயர். அடடே! இதுல அம்மா பேரும் சேர்ந்து வருதே. அம்மா உங்களோட மருமக குணத்துல மட்டும் இல்ல, பெயர்லயும் உங்களைக் கொண்டு இருக்கிறா’ என்று நினைத்த அவனின் மனதின் சந்தோஷத்திற்கு அளவில்லாமல் போனது.

“ஜோடிப் பொருத்தமும், குணப்பொருத்தமும் சூப்பராயிருக்கு” சொல்லியபடி பாக்கெட்டிலிருந்து விசிட்டிங் கார்டு கொடுத்து விடைபெற்றார்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top