• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 4

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
4



ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் மாமியாரிடம் பேசிவிட்டு வந்துவிட்டாலும், மனதெல்லாம் பாரமாக அழுத்த மற்றவர்கள் கேள்விக்குப் பதிலளிக்காமலே அமர்ந்திருந்தாள். ஜாதக விஷத்தைத் தகப்பனிடம் சொல்ல முடியவில்லை. ஏற்கனவே தங்களை முட்டாளாக்கிவிட்டார்கள் என்ற கொதிப்பில் இருப்பவருக்கு இதுவும் சேர்ந்தால் உடம்பிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற பயம்.

“சதா நான் கிளம்புறேன். ஈவ்னிங் மருமகளுக்கு வளைகாப்புன்னு தெரியும்தானே? இப்ப நிலைக்கு உனக்கு ஆதரவா இருக்க முடியலை. பொண்ணோட வாழ்க்கைன்றதால உணர்ச்சிவசப்படாம பார்த்துப் பண்ணு. அன்பு எனக்கும் பொண்ணு மாதிரிதான். எந்த உதவினாலும் யோசிக்காமல் கேளு” என்றார் நேசன்.

“சரி நேசா. நீ பார்த்துப் போ. என்னோட வாழ்த்தை பையன் மருமகள்கிட்ட சொல்லிரு” என்றதும் நேசன் வெளியே செல்லப்போக, “சார் ஏசி ரிப்பேர்னு சொன்னாங்க. மணமகள் ரூமா, மணமகன் ரூமா தெரியலை?” என்று வாசலை மறித்தபடி ஒருவன் வந்து கேட்க, “இங்கே கிடையாது” என்று ராகினி பதிலளித்ததும் அவன் சென்றுவிட்டான்.

ஏதோ யோசனையில் வாசலைத் தாண்டி வெளியே சென்ற நேசன் மனதில் பதில் கிடைக்க வேகமாக உள்ளே வந்தவர், “சதா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். கொஞ்சம் தனியா வர்றியா?” என்றார்.

“என் வீடு சம்பந்தப்பட்டதுன்னா இங்கேயே பேசுடா. வீட்டுக்குத் தெரியாமல்னு எந்த ரகசியமும் கிடையாது. கேஸ் சம்பந்தப்பட்டதுன்னா நாளைக்குப் பார்த்துக்கலாம்” என்றார் சதாசிவம்.

“சதா! அ..து வந்து இந்த மாப்பிள்ளை டாக்டர்னு சொன்னல்ல? இவன் டாக்டர் இல்லைடா” என்றார் தயக்கமாக.

“என்னது?” என்று அனைவரும் அதிர்ந்து நிற்க,

“உண்மைதான். ஏசி, ப்ரிட்ஜ் மாதிரி ஹோம் ஐட்டம்ஸ் ரிப்பேரானதை ரொம்ப கம்மி ரேட்டுக்கு வாங்கி, அதுக்கு பார்ட்ஸ்லாம் மாத்திப்போட்டு புதுசா ரெடி பண்ணி, செகண்ட் சேல் பண்ற மெக்கானிக்.”

“நேசா!”

“பொய்யில்லைடா. எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. என் தங்கச்சி வீட்டுல ரிப்பேரான ஏசியை சேல் பண்றதுக்கு, இந்தப் பையன்கிட்ட கொடுத்தப்ப நான் அங்கேதான் இருந்தேன். ஒருமுறை பார்த்ததால எனக்கு நினைவில் இல்லை. காலையிலிருந்து எங்கேயோ பார்த்த மாதிரியிருக்கே யோசிச்சேன்டா. இப்ப வந்த பையன் ஏசி ரிப்பேர்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது” என்றார்.

“மொத்தமா நாங்க ஏமாந்துட்டோமாடா. அவங்க சொன்ன ஹாஸ்பிடல்ல நான் விசாரிச்சேனேடா. அதுவும் அவங்க ஏற்பாடா” என கலங்கி அங்கிருந்த நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தவரை மனைவி மக்கள் சூழ்ந்து ஆறுதலாக நின்றார்கள்.

“அப்பா நீங்க அமைதியாயிருங்க. டென்சன்ல உங்களுக்கு எதுவும் ஆகிரக்கூடாது. எங்களுக்கு நீங்க முக்கியம்பா” என்ற பிள்ளைகளிடம், “ஏமாந்துட்டோம்டா. என் பொண்ணு வாழ்க்கையை இப்படியாக விட்டுட்டேனே” என்றவரின் புலம்பல்கள் தொடர,

“அப்பா ப்ளீஸ். என்னை வச்சி நீங்க கவலைப்படாதீங்க. நீங்க அமைச்சிக் கொடுத்த வாழ்க்கை நல்லாதான் இருக்கும். நேர்லயே பேசித் தெரிஞ்சிக்கலாம்பா” என்றவளுக்கு மாமியாரின் வார்த்தையிலேயே உண்மை புரிந்தது.

“ஆமாங்க. பொம்மு சொல்ற மாதிரி பையன்கிட்டயே பேசிப்பார்க்கலாம்” என்ற ராகினிக்கும் கோபங்கள் இருக்கிறதுதான். இப்போதைக்கு மகளுக்காகத் துடிக்கும் கணவருக்கு உடல் ரீதியாக எதுவும் ஆகிவிடக்கூடாதென்ற பயமே அவரை நிதானப்படுத்தியது.

அடுத்த சில நிமிடங்களில் செந்தூரன் முன் நின்றார்கள்.

சுற்றிலும் அவனது உறவினர்கள் நிற்க, “நீங்க டாக்டர்னு சொல்லிதான் சம்பந்தம் பேசினாங்க. ஆனா, இவர் என் நம்பிக்கைக்குரிய நண்பர். இவர் நீங்க செகண்ட் ஹேண்ட் சேல்ஸ்மேன்னு சொல்றார். நீங்க என்ன வேலை பார்க்குறீங்க?” என மரியாதையாகவே கேட்டார் சதாசிவம்.

“உங்க நண்பர் சொன்னது சரிதான். நான் அதைத்தான் செய்யுறேன்.” அவனும் மறுக்காது ஒத்துக்கொண்டான்.

“ஏய்! அப்புறம் ஏன்டா பொய் சொன்னீங்க?” என்று அவனை அடிக்கக் கிளம்பிய தம்பியின் கையைப் பிடித்து அன்பழகி நிறுத்த, “விடுக்கா. எவ்வளவு ஈஸியா ஏமாத்திட்டு சின்னதா கூட குற்றவுணர்ச்சியில்லாமல் நிற்கிறான்” என்று எகிற,

“அதி! அப்பாவுக்காக அமைதியா இருடா. நடந்து முடிஞ்சதை இல்லைன்னு ஆக்க முடியாது. நிதானமா பேசிக்கலாம்” என்று தம்பியைக் கட்டுப்படுத்த,

“என்ன நிதானமா பேசணும் அன்புமா? ஒரு குடும்பமே நம்மளை ஏமாத்தியிருக்கு. சும்மாயிருக்கச் சொல்றியா?” அகிலனும் முழுக்கோபத்தில் நின்றான்.

“யார் உங்களை ஏமாத்திட்டதா குதிக்குறீங்க? யாரும் யாரையும் ஏமாத்தலை. எங்க பையனுக்கு என்ன குறை?” என்றபடி வந்த ராஜலட்சுமியை முறைத்த ராகினி, “நீங்க செய்ததுக்குப் பெயர் என்னங்க? நம்பவைத்து ஏமாத்தியிருக்கீங்க” என்றார்.

‘இதேதடா புதுவிதமான நாடகமாயிருக்கு. இவங்க ஏன் இப்படிப் பேசுறாங்க? சாமியம்மா பார்த்த பொண்ணு வீட்டுக்கு என்னைத் தெரியாதாமா?’ என்றுதான் தோன்றியது செந்தூரனுக்கு. நடப்பவை தாயின் மூலம் நடக்கும் நாடகம் என்றே நம்பினான். காரணம் சற்று நேரத்திற்கு முன் நடந்ததே!

“செந்தூ கண்ணா” என்றழைத்தவரை எரிச்சலுடன் பார்த்தவன், “கண்ணான்னு சொல்லணும்னா, பிள்ளைங்க மேல நிறைய பாசம் இருக்கணும். நடிப்புக்காகக் கூட என்னை அப்படிக் கூப்பிடாதீங்க. வந்த விஷயத்தைச் சொல்லிட்டுக் கிளம்புங்க” என்றான் அவர் முகத்தைக்கூட பார்க்க விரும்பாது.

“சரிவிடு. என் பாசமும் ஒருநாள் புரியும். இந்தப் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு நம்ம வீட்டைப்பற்றிய உண்மையைச் சொல்லிதான் பேசினேன். இப்ப வந்து பிரச்சனை பண்ணுவாங்க போல. அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கலையாம். வீட்டுல உள்ளவங்க கட்டாயப்படுத்தலுக்காக சம்மதிச்சிருக்கா. பிடிக்காத உன்னோட வாழ முடியாதுன்னு சண்டை போடுறா போல...”

“நீங்க சொல்றதாலயே மனசு நம்பமாட்டேன்னுதே” என்றான் தாடையைத் தடவியபடி.

“நீ நம்பமாட்டேன்னு தெரியும். அவளைப் பிடிச்சதால மருமகளாக் கொண்டு வரணும்னு, உனக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன். அப்பல்லாம் நல்லா பேசிட்டிருந்த பொண்ணு, நீ பழைய பொருள் விக்கிறவன்னு தெரிஞ்சதும் வேற மாதிரி நடந்துக்குறா. அவங்க வீட்டுல உள்ளவங்களை மிரட்டி உன்கிட்டயிருந்து பிரிய பேசிட்டிருக்கா. உனக்குமே அவள்மேல விருப்பமில்லை. எதுவாயிருந்தாலும் பேசிக்கோங்க’ என்று நகர்ந்துவிட்டார்.

இப்பொழுது நடப்பதை நினைக்கையில் அது உண்மையோ என்றிருந்தது.

“நாங்க ஏன் உங்களை எமாத்தணும்? சொல்லிதான் முடிச்சோம். இப்ப நீங்க வேணும்னே பிரச்சனை பண்ணுறீங்க” என்று ராஜலட்சுமி வாய் கூசாமல் பேச,

“ஏமாத்தினது மட்டுமில்லாமல் பழியை எங்ககிட்டேயே திருப்புறீங்களா? எங்க பொண்ணு வாழ்க்கை இது. கொஞ்சம்கூட மனசாட்சியில்லாம பேசுறீங்க?” நேஹா மாமியாருக்குத் துணையாய்ப் பேச,

அனைத்தும் காதில் விழுந்தாலும் அன்பழகியாகப்பட்டவள் கணவனான செந்தூரனை மட்டுமே பார்த்திருந்தாள். அவனின் அந்த அலட்சியத்தன்மை மனதிற்குள் வலியைக் கொடுத்தது. அவனுக்குப் பிடிக்காத தாயே பார்த்திருந்தாலும், மனைவி என்றான பிறகு அதற்குண்டான மரியாதையைக் கொடுக்கலாமே! அல்லது என்னவென்று பேசிப் பார்க்கவாவது செய்யலாமே! எனக்கென்ன என நின்றிருந்த அவனின் அலட்சியப்போக்கு அவனின் பொறுப்பின்மையைக் காட்டியது.

அவன் மீது கோபம் எழுந்தாலும் ஒரு முடிவிற்கு வந்தவளாய் அவனெதிரே சென்று நிற்க, தன்னைக் கண்டதும் நகரப் போனவனை “ஒரு நிமிஷம்” என்று நிறுத்த, அன்பழகி செந்தூரனிடம் செல்வதைக் கவனித்ததும் தங்கள் பிரச்சனையை ஒதுக்கிய அவள் வீட்டினர் அவளுடன் வந்து நின்றார்கள்.

அவன் முகம் பார்த்து, “உங்களை இப்பதான் நேருக்கு நேர் பார்க்கிறேன். என்னைப்பற்றி உங்களுக்கு என்ன சொல்லப்பட்டதோ தெரியாது. அதே மாதிரி உங்களைப்பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது...”

‘இதை நான் நம்பணுமாக்கும்’ என்ற பார்வையை மனைவியிடம் வீச,

“உங்க இந்த அலட்சியமே என்மேலான உங்க எண்ணத்தைச் சொல்லுது. அதுக்கான காரணமும் எனக்குத் தெரியும்” என்று மாமியாராகிவிட்ட சாமியம்மாவை எரிக்கும் பார்வை பார்த்து, கணவன்புறம் திரும்பி மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிலைப்படுத்தியவள், “எங்கம்மா, உங்கம்மா, படிப்பு, வேலை எல்லாத்தையும் விடுங்க. அதுக்கு முன்ன இப்படி அலட்சியமா பார்க்காம என் கண்ணைப் பார்த்து மட்டும் பேசுங்க” என்றாள்.

‘பார்றா!’ என்ற அவனின் மீண்டுமான அலட்சியத்தில் கோபம் எழ, “என் கண்ணைப் பாருங்க” என்றாள் குரலில் அழுத்தத்தைக் கூட்டி.

அவ்வழுத்தத்தில் தன் முன்னே நின்றிருந்தவள் உயரத்திற்கு சற்றே பார்வையைத் தாழ்த்தி அவள் விழிகள் காண, கண்டவன் கண்கள் அப்படியே நிலைத்தது.

கவிதையென்றால் என்னவென்று கேட்பவனுக்கும், அக்கண்களின் குளுமை கவிபாடத் தோன்றியது. வெள்ளை விழிப்படலத்தில் தண்ணீரை ஊற்றி நடுவே திராட்சையைப் போட்டால் எப்படியிருக்கும். அப்படியிருந்தது அவள் கண்கள். அதுவும் கோபத்தில் வெள்ளை விழிப்படலம் சற்று சிவந்து தண்ணீரில் மிதப்பது போலிருக்க, அத்தண்ணீரில் விழுந்து தானும் தத்தளிப்பதைப் போல் பிரமை அவனுள்.

அவன் தன்னைப் பார்ப்பதையும் சிறு ரசனையும் இருப்பதைக் கண்டவள் மனம் ஆசுவாசமாக, “இப்பவும் சொல்றேன் உங்க வீடு, எங்க வீடு, படிப்பு, வேலை யார் என்ன சொல்வாங்க.. எதுவும் வேண்டாம். இப்பவும் நான் உங்களோட வாழத் தயார். உங்களால என்னை முழமனசோட ஏத்துக்க முடியுமா?” என்றாள் அவன் கண்பார்த்து.

அத்தனை பேரும் அவன் பதிலுக்காய்க் காத்திருக்க, அவளின் இந்தப் பேச்சை எதிர்பார்த்திராத ராஜேஸ்வரிக்கு சூழ்நிலை தனக்கெதிராய்ப் போவதைக் கண்டு திக்கென்றிருந்தது. மகனின் முகமும் சற்று இளக்கத்தைக் காட்ட, இது சரியில்லையே என்பதாய் யோசித்த நொடி இறும ஆரம்பித்தார்.

அச்சத்தத்தில் அனைவரும் அவரைப் பார்த்து மறுபடியும் செந்தூரனின் பதிலுக்காகத் திரும்ப, அவனோ அவள் கண்களிலிருந்து வலுக்கட்டாயமாகத் திரும்பி தாயையே பார்த்திருந்தான்.

இத்திருமணத்திற்காக அவர் செய்த அத்தனையும் நினைவு வர உடல் இறுக ஆரம்பித்தது. அதிலும் யாருமறியாமல் அன்பழகியைக் காண்பித்து, ‘எப்படி?’ என மிதப்பாய் ஒரு பார்வை பார்த்து ஏளனச்சிரிப்பை உதிர்க்க,

அச்சிரிப்பு நிதர்சனத்தை எடுத்துரைக்க எதையும் யோசியாது, “இல்லை.. முடியாது. என்னால முழமனசா உங்களோட வாழ முடியாது” என்றான் அவள் கண்பார்ப்பதைத் தவிர்த்து.

“அண்ணா அவசரப்படாதீங்க. அண்ணி ரொம்ப நல்லவங்க” என்ற தங்கையின் கெஞ்சலை அவன் காது ஏற்கவில்லை.

கணவனின் உதாசீனம் அவளின் அகம் தாக்க, கலங்கப்போன கண்களைக் கட்டுப்படுத்தி, “இதுதான் உங்க முடிவுன்னா...” வெளிவரத் தவித்த வார்த்தைகளைக் கடினப்பட்டு கொணர்ந்து, “எ..எனக்கு எந்த ஆட்..சேபனையும் இல்லை. நா..நானா உங்களுக்கு டைவர்ஸ் கொடுக்கமாட்டேன். நீங்க வேணும்னு வந்து நின்னா மறுக்கவும் மாட்டேன்” என்றவள் குரலிலிருந்த வித்தியாசத்தில் அவள் கண்களைப் பார்க்க, அவளோ தாயைக் கண்டு, “அம்மா போகலாம்” என்றாள்.

“பொம்மு” என்றவர் கண்கள் கண்ணீரைச் சிந்த, அவர் கண்துடைத்து, “டாக்டர் அன்புவோட அம்மா இப்படியா கண்ணீர் வடிக்குறது? இது ஒரு விபத்தும்மா. அதிலிருந்து உங்க பொண்ணு மீண்டு வந்திருக்கா நினைச்சிக்கோங்க” என்றாள்.

மீண்டு வந்ததாகச் சொல்லும் தன் பெண் மீண்டுவிடுவாளா என்றிருந்தது அந்தத் தாய்க்கு. சற்று முன் அவனிடம் எதுவும் வேண்டாம்.. உன்னோடு வாழத்தயார் என்றவளாச்சே!

“நாம அவங்க மேல கேஸ் போடலாம்டா” என்று மகளின் தோளணைத்து கண்கலங்கக் கேட்டார் சதாசிவம்.

“வேணாம்பா. மன்னிச்சிரலாம்” என்ற மகளின் குரலில் தானும் கலங்கி, “போகலாம்டா பொம்மு” என்று மற்றவர்களுக்கும் ஜாடை காண்பித்து நகர,

“அண்ணி நானும் உங்களோடவே வர்றேன். எனக்கு இவங்களோட இருக்கப் பிடிக்கலை” என்ற வார்த்தையில் அன்பழகி பதற, செந்தூரனோ தங்கையின் வார்த்தையில் அடிபட்டு ஏனென்று புரியாதிருக்க, அதியனோ அவளை வெறுப்புடன் முறைத்திருந்தான்.
 
Last edited by a moderator:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அக்கா தங்கை இருவருக்கும் பவானியைக் கொல்லும் வெறி எழுந்தாலும், செந்தூரனுக்குப் பயந்து வாய்மூடி நின்றார்கள்.

“பவிக்குட்டி இது தப்பு. ஒரு மூணு வருஷம் கழித்து நிரந்தரமா கூட்டிட்டுப் போறேன். இப்ப அங்க வர்றது சரிவராது” என்றாள் மென்மையாக.

அந்நிலையிலும் ‘பவிக்குட்டி’ என்ற அழைப்பு கண்ணீரை வரவழைக்க, “அண்ணி! நான்...” என அழுதவளை ஆறதலாக அணைத்து, “உனக்கு எப்ப தோணுதோ அப்ப வீட்டுக்கு வா. எதாவது பிரச்சனைன்னா உடனே எனக்குக் கால் பண்ணு. சரியா?” என்க,

சரியென்பதாய் அவள் தலையசைத்ததும் பெண் வீட்டினர் மண்டபத்திலிருந்து கிளம்ப, ஏனென்றேத் தெரியாமல் அவர்களைத் தடுக்க மனம் நினைக்க, அதைச் செயலாற்ற மறுத்த மூளை என செந்தூரன் நிற்க, தங்கையின் ‘அண்ணியைப் போகவிடாதே’ என்ற கெஞ்சல்கள் எதுவும் அவனிடம் வேலை செய்யவில்லை.

அவன் வாழ்வை விட்டுப் போகமாட்டேன் என்று சவாலிட்டவள், அவனாலேயே சென்றாள்.

அவர்கள் சென்றதும் வீட்டிற்கு வர, பவானியிடம் வந்த ராஜலட்சுமி, “இங்க என்ன குறைன்னு அவளோட போகக் கேட்கிற? கிளிக்கு இறக்கை முளைக்கதா? வெட்டிருவேன் பவா” என்றார்.

“சித்தீ” என்ற அதட்டல் செந்தூரனிடமிருந்து வர, அதைக் கண்டுகொள்ளாது, “இறக்கையைதான் முளைக்கவே விடுறதில்லையே நீங்க. அப்புறம் எங்க வெட்ட” என்று தன்னறைக்குள் சென்றுவிட்டாள் பவானி.

வீடே ஒருவித அமைதியிலிருந்தது. இதுவரை இவ்வீடு இப்படி இருந்ததில்லை. வீட்டில் அனைவருமே கலகலப்பாய்ப் பேசக்கூடியவர்கள். திருமணத்திற்கு வந்த ஒருசில உறவுகள் தாண்டி அனைவரும் சென்றுவிட்டனர். அதிலும் செல்வதற்குள் ஆயிரத்தெட்டு அறிவுரைகள் வேறு.

கோதண்டம் மனைவியுடன் அங்கிருக்க, சதாசிவம் ராகினியின் பிறந்த வீட்டினர் மாப்பிள்ளை பார்த்த அவரையும் விட்டுவைக்கவில்லை. கிட்டத்தட்ட கூனிக்குறுகிப்போய் அமர்ந்திருக்க தன்னிடம் வந்த சதாசிவத்திடம், “நான் தெரிஞ்சே எதுவும் பண்ணலைய்யா” என்றார் அழுகுரலில்.

“உங்க மேல எந்தத் தப்பும் இல்லை சித்தப்பா. மத்தவங்க என்ன சொன்னாலும் நாங்க உங்களை நம்புறோம்” என்க,

“ஆமா மாமா. நீங்க வருத்தப்படாதீங்க” என்றார் ராகினியும்.

“என் பேத்தி என்னை மன்னிச்சா போதும்மா. மத்த யார் என்ன பேசினாலும் கவலையில்லை. இன்னைக்கு ஒரு பேச்சி நாளைக்கு ஒரு பேச்சின்னு பேசுற கூட்டம் அது” என்றார் கவலையுடன்.

அவர் பேசுவதைக் கேட்டபடி அருகே வந்தமர்ந்த அன்பழகி, “மண்டபத்துலயே சொன்னதுதான் தாத்தா. ஏமாத்துறவங்க உங்களை இல்லாட்டியும் வேற யார் மூலமாவது இதைச் செய்திருப்பாங்க. இனி யாராவது உங்களைப் பேசினா, அவங்களை என்கிட்ட பேசச் சொல்லுங்க.”

“இப்படிச் செய்துட்டாங்களே பாப்பா. மனசே ஆறமாட்டேன்னுது” என கண்கலங்கியவரிடம், “தாத்தா சீக்கிரமே சரியாகிரும். உங்க பேரன் தலையில் நாலு தட்டுத்தட்டி இழுத்துட்டு வந்திரலாம். சாப்பிட்டீங்கன்னா போய்த் தூங்குங்க. பாட்டி எப்பவோ படுத்தாச்சி” என்று புன்னகைக்க,

அதில் தெம்பு வந்தவர், “நீ சொன்னா சரிதான் பாப்பா” என்று படுக்கச் சென்றார்.

வெட்டுவேன் குத்துவேன் என்று குதித்துக் கொண்டிருந்த தம்பியையும், கோபத்தில் கொந்தளித்த அண்ணனையும் சமாளித்து அமைதிப்படுத்தி இரவு உணவையும் உண்ண வைத்துத் தன் அறைக்கு வந்தவளுக்குப் பலவித எண்ணங்கள்.

என்னதான் சாதாரணமாகக் காட்டிக்கொண்டாலும் முழு பாதிப்பும் அவளுக்கல்லவா! அழுகை அழுகையாக வர, அழக்கூடாது என்ற வைராக்கியத்தை மூளையில் ஏற்றினாலும் மனதானது நடந்தவற்றையே அசை போட்டது. மனதைப் படிக்கும் மருத்துவராகையால் தன் கண் பார்த்த கணவனின், அந்த சில நொடித் தடுமாற்றத்தைக் கண்டுகொண்டாள்.

சரி செய்துவிடலாம் என்றிருக்கையில், ‘இல்லை.. முடியாது’ என்று அவனுரைத்த நிமிடம் வாழ்க்கையில் தோற்ற உணர்வு. ஓவென்று அழத்துடித்த மனதை அடக்கிதான், ‘பிரிவை நான் தரமாட்டேன், நீ கேட்டால் தராமலும் இருக்கமாட்டேன்’ என்றது. அப்பொழுதாவது சிறு சலனம் அவன் முகத்தில் வருகிறதா என்று பார்த்தாள். இல்லையென்றதும் இன்னுமின்னும் ஏமாற்றம் எழ, வீட்டினரை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள்.

சொந்த பந்தத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தன் குடும்பத்தினர் தவிப்பதைக் கண்டவள் தன் துக்கத்தைத் தூர வைத்து அவர்களுடனே இருந்தாள்.

இதோ மனதை அழுத்தும் பாரத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துத் தடுமாறிக் கொண்டிருந்தவளுக்குத் தாயின் அறைக்குச் சென்றால் மனம் சமனப்படுமோ என்ற எண்ணம் எழ, கையில் கைபேசியை எடுத்துக் கொண்டு கதவைத் திறக்க, “பொம்மு அம்மாகூட படுக்க வர்றியா? அப்பாவும் நீ கூடயிருந்தா பெட்டராயிருக்கும்னு ஃபீல் பண்றாங்க” என்று மகளின் மனதைப் படித்தவராய் வாசலில் நின்றிருந்தார் ராகினி.

“நானும் அங்கதான்மா கிளம்பினேன். நம்ம இரண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை இல்லைம்மா” என்று புன்னகைக்க,

“ம்க்கும்.. உங்கப்பாவுக்கும் எனக்குமிருந்தா பரவாயில்லை. உனக்கும் எனக்குமிருந்து என்ன செய்ய?” என்று நொடித்தார்.

“ஹலோ! ராகினி மேடம் எதிரெதிர் ஈர்ப்பு விசை ஒன்றையொன்று ஈர்க்குமாம். உங்களோட அந்த எதிர் ஈர்ப்பு விசை எங்க அப்பா. புரியுதா?” என்றாள்.

‘பின் ஏன் உன் ஈர்ப்பு விசை உன் கணவனை ஈர்க்கவில்லை?’ என்று மனம் கலங்கிய நொடி, மகளை எண்ணி தன்னைத்தானே கடிந்து, “விட்டா பேசிட்டேயிருப்ப வா” என்றழைத்தார்.

தாயின் நொடி நேரத் தடுமாற்றத்தைக் கண்டவள், “ம்மா.. அப்புறம் ஏன் எனக்குத் தாலி கட்டினவனை நான் ஈர்க்கலைன்னுதான நினைச்சீங்க?” என்றதும் ராகினி அதிர்ந்து பார்க்க, “அது வந்தும்மா.. மிஸ்டர்.செந்தூரன் ஒருவேளை கிராஸா நின்னுருப்பாங்களா இருக்கும். இல்லைனா இதெல்லாம் சாத்தியமில்லையே” என்றாள் கிண்டலாக.

“உன்னை சைக்காலஜி படிக்க வச்சதுக்கு, உன் முன்னாடி நின்னு மனசுல கூட எதையும் நினைக்க முடியலைடி. பேசாம வா” என்று தங்களறைக்கு வர, சதாசிவம் மகளைத் தன்னருகே படுக்க வைக்க மறுபுறம் ராகினி படுத்துக்கொள்ள, அன்பழகியின் இருபுறமும் தாய் தந்தை இருக்க அவளின் மனபாரம் சற்று தூரம் போக, அவர்கள் சொன்ன சிறு வயதுக் கதைகளைக் கேட்டபடியே தூங்கிவிட்டாள்.

மகளைப் பார்க்கப் பார்க்க மனதின் துக்கம் அதிகமாக அவளின் தலை வருடுதலை விடாமல் தன் கண்ணீர் துடைத்து நெற்றியில் முத்தம் வைத்து, இருவரும் வெளியே வருகையில், அகிலன், நேஹா, அதியனும் வர, ஹாலில் அமர்ந்தபடி, “என்ன செய்யலாம்ங்க?” என்றார் ராகினி.

“எதுவும் செய்ய முடியாதுமா. சரியோ தப்போ இந்த வாழ்க்கையை நம்ம பொண்ணு ஏத்துக்கிட்டா. அதனாலதான் ஏமாத்திட்டாங்கன்னு தெரிஞ்சும் அவனோட வாழக் கேட்டது. அவங்க மறுத்தும் காத்திருப்பேன்னு மறைமுகமா சொல்லிட்டு வந்திருக்கா. அவங்களைத் தண்டிக்கவும் தயாராயில்லைன்னும் போது நாமளா எதையும் செய்யக்கூடாது ராகினி. அது நம்ம பொண்ணு மனசைத்தான் பாதிக்கும்” என்றார் மகளின் மனம் புரிந்தவராய்.

“எனக்குக் கோபம் கோபமா வருதுப்பா. அக்கா மட்டும் கட்டுப்படுத்தலைனா அவங்களை ஒரு வழியாக்கியிருப்பேன்” என்றான் அதியன் கோபம் குறையாது.

“என்ன அகில் சைலண்டாயிருக்க?”

“என்ன சொல்றது தெரியலைப்பா. எப்ப அவர்கிட்ட போய் எல்லாம் மறந்து வாழலாம்னு கூப்பிட்டாளோ, அப்பவே என் தங்கச்சி மனசு புரிஞ்சிருச்சிப்பா. இப்போதைய கோபத்தைக் காட்டிரலாம்தான். பின் நாள்ல அவங்க சேர்ந்து வாழ்றப்ப மாப்பிள்ளைகிட்ட சாதாரணமா பேசக்கூட தயக்கம் வரும். என் தங்கச்சி உறவு காலத்துக்கும் அன்போட வேணும்பா. அதான் எதுவும் பேசலை” என்றான்.

அவரோ மருமகளைக் காண, “உங்க பையன் கருத்துதான் மாமா எனக்கும். எனக்கென்னவோ அந்த அண்ணா கெட்டவரா தெரியலை. ஏதோ ஒண்ணு இருக்கு. அதை அவர் புரிஞ்சிக்கிட்டா கண்டிப்பா நம்ம அன்புவை விடமாட்டார்” என்றாள்.

“நல்லவங்க கண்ணுக்கு கெட்டதும் நல்லதாதான் தெரியும் அண்ணி. நாமெல்லாம் நல்லவங்க” என்றான் அதியன்.

“ஓ.. சார் கேப்ல உங்களை நல்லவர்னு சொல்றீங்களோ?”

“ஹான்! நல்லவங்களை நல்லவங்கன்னுதான் சொல்லுவோம்” என்று முறுக்கிக்கொண்டான்.

“கோபத்தை மட்டும் குறைச்சிக்கிட்டா நீ ரொம்ப நல்லவனாகிருவ அதி. ஒரு மனிதனோட சத்ரு நம்மிலிருக்கும் கோபம்தான்னு பெரியவங்க சொல்வாங்க” என்றாள் நேஹா.

“சிரிப்பு அழுகை போல் கோபமும் ஒரு உணர்வுதான் அண்ணி. அதை அடக்க அடக்க வெடிக்கதான் செய்யுமாம். அதனால அப்பப்ப வர்ற உணர்வுகளை உடனே வெளிப்படுத்திரணும்னு அனுபவசாலிங்க சொல்றாங்க” என்று அண்ணியவளுக்குப் பதிலடி கொடுக்க,

“நீ லாயர்ன்றதை அப்பப்ப மறந்திருறேன் அதியா. யூ புரொசீட் யுவர் ஹானர்” என்றாள் கேலியாய்.

“எதை புரொசீட் பண்ண, எல்லாத்துக்கும்தான் அக்கா லாக் போட்டுட்டாளே. ஆனாலும், ஐ ஹேட் செந்தூரன்” என்றபடி முகம் சுளித்தான்.


அகிலன் ஏதோ சொல்லவர, அவனைத் தடுத்த சதாசிவம் “பேசப்பேச வெறுப்புதான் அதிகமாகும். அவன் கொஞ்சம் பக்குவப்படட்டும்” என்று அனைவரையும் படுக்க அனுப்பிவிட்டு வந்து மகளின் இருபுறமும் படுத்துக்கொண்டார்கள்.
 
Last edited:
Member
Joined
Sep 3, 2024
Messages
31
செந்தூரமா... போயிட்டானே. கண்ணைப் பார்த்தும் மயக்கம் வரலையா? மாமியாருக்கும் மருமகளுக்கும் போர்க்களம் இருக்கும்னு பார்த்தா, இவங்க ரெண்டு பேருக்கும் போர் ஆரம்பம் ஆகும் போலிருக்கே...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
செந்தூரமா... போயிட்டானே. கண்ணைப் பார்த்தும் மயக்கம் வரலையா? மாமியாருக்கும் மருமகளுக்கும் போர்க்களம் இருக்கும்னு பார்த்தா, இவங்க ரெண்டு பேருக்கும் போர் ஆரம்பம் ஆகும் போலிருக்கே...
மாமியார் நேரடியா மோதினா சண்டை போடலாம். கணவன்தானே நேரடியா வர்றான். அதான் டைரக்ஷன் மாறிருச்சி.
 
Member
Joined
Sep 8, 2024
Messages
42
Nan konjam late sorna
Good episode
Thaniya irunthu tan payapullaya vazhiku kondu varanum
Anga iruntha froud asami vidathu
Enga poiduvan .
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
பரவாயில்லைபா. தனியா இருந்தாலும் வொய்ப்கிட்ட போகணுமே
 
Top