• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 3

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
3

“இவர்தான் மாப்பிள்ளையின் அம்மா” என்றதும் அதிர்ச்சியில் அன்பழகி ராஜேஸ்வரியைப் பார்க்க, அவர் இதழ்களில் ஒரு வெற்றிச் சிரிப்பு. சட்டென்று பவானியைக் காண, “இவங்கதான் அண்ணி எங்களைப் பெத்தவங்க. அவங்க சித்தி சித்தப்பா, தம்பிங்க சித்தியோட பிள்ளைங்க” என்று மென்குரலில் அன்பழகிக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல, அவளோ கணவனைக் காண, எதையும் காதில் வாங்காது நண்பர்களுடன் பேசியபடி விட்டேற்றியாய் நின்றிருந்தான் அவன்.
சதாசிவத்திற்கு ஏமாந்த கோபம் எழ சபை நாகரீகம் கருதி அமைதியாக நிற்க, ராஜேஸ்வரி தங்கைக்குக் கண்காட்ட, “செந்தூ கண்ணா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க” என்றார்.
வேண்டா வெறுப்பாய்த் தாயின் காலில் விழ, ராஜேஸ்வரியோ இப்ப என்ன செய்வாய் என்பதாய் அன்பழகியைப் பார்த்து புன்னகைக்க, ‘அட அல்பமே! உன் காலில் விழ வைக்கதான் இத்தனை ஆர்ப்பாட்டமா?’ என்பதாய் புன்னகையுடன் மாமியாரின் காலில் விழ, அவளின் புன்னகையைக் கண்ட செந்தூரனுக்குக் கோபம் உச்சியைத் தொட்டது.
“நல்லாயிருங்க” என்பதாய் அவர்கள் தலையில் கைவைத்து ஆசீர்வதித்து எழுப்பி விபூதி பூசி, அருகிலிருந்தவரிடம் எழுத்துப் பலகையை வாங்கி அவளிடம் காட்ட, “என் பையனை நல்லா பார்த்துக்கோ. அவனும் உன்னை ரொம்ப நல்லாவே பார்த்துப்பான்” என்றிருந்ததில் வஞ்சப்புகழ்ச்சி இருந்ததோ!
சதாசிவம் ராஜலட்சுமியின் கணவரைத் தேடிப்பார்க்க, அவரது கண்ணில் சிக்காது கண்ணாமூச்சி ஆடினார் சேகர்.
வக்கீலான சதாசிவம் ஒரே ஒரு வழக்குத் தொடர்ந்தால் குடும்பத்துடன் ஜெயிலுக்குள் இருக்க வேண்டி வருமே என்ற பயம் சேகருக்கு. அண்ணியார் கொடுத்த தைரியத்தில் இங்குவரை வந்துவிட்டார்.
நிச்சயத்திற்கு வந்தால் அரசல் புரசலாக யாரோ ஒருவருக்கு செந்தூரன் சாமியம்மா பையன் என தெரிந்து, எல்லோருக்கும் பரவி திருமணம் நின்று விடுமென்றே தாலிகட்டி முடிந்ததும் வந்தார் ராஜேஸ்வரி. இந்தத் தாலி ஏறுவதற்காக மறைமுக வேலைகள் நிறையப் பார்த்தவராகிற்றே!
தாலி ஏறியதும் தன்னைப் பார்த்ததும் பிரச்சனை வராதா என்றால், வரும்தான். அதை எப்படியாவது சமாளித்து அன்பழகியைத் தனக்குக் கீழ் கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணமே அவருக்கு.
“சதா மாப்பிள்ளை டாக்டர்னுதான சொன்ன? எங்கேயோ பார்த்த மாதிரியிருக்குடா” என்ற நண்பன் நேசனிடம், “டாக்டர்ன்றதால எதாவது ஹாஸ்பிடல்ல பார்த்திருப்ப. இப்ப எதுக்குடா அதெல்லாம். அந்த ஃப்ராடு பயலைத் தேடிட்டிருக்கேன். கையில் சிக்கட்டும்” என்றார் ஆத்திரத்தில்.
“யார் சதா?”
“பையனுக்கு அப்பன்னு சொல்லித் திரிஞ்சான்ல அவன்தான். இப்பப்பாரு அந்த லேடி வந்து நான்தான் அம்மான்னு நிற்குது. என்னை.. என் குடும்பத்தை ஏமாத்தியிருக்காங்கடா. எவ்வளவு தைரியமிருக்கணும் அவங்களுக்கு” என்றவருக்கு சேகரைக் கண்டால் கொலை செய்யும் வெறி.
“சதா நம்ம பொண்ணு வாழ்க்கை. ஆத்திரத்தை விட்டுட்டு அறிவார்த்தமா யோசி. அன்புவோட ஒபீனியன் கேட்டுட்டு என்ன செய்யணுமோ செய். அந்தம்மா சாமியோட அவதாரம்னு மக்கள் மனசுல நிறைஞ்சிருக்கு. அந்த பப்ளிசிட்டி பாதிக்கப்படக்கூடாதுன்னு கூட மறைச்சிருக்கலாமே?” என்று யார்த்தத்தை புரிய வைக்க முயற்சித்தார்.
“மறைக்குறவங்க இப்படி பப்ளிக்ல வந்து ஆசீர்வாதம் பண்ணமாட்டாங்க. தனியா வரச்சொல்லி வாழ்த்தியிருப்பாங்க” என்றார் அலுப்புடன்.
“புரியுது சதா. இருந்தாலும் நாம எதாவது செய்யப்போயி வேற மாதிரி ஆகிரப்போகுது. பேமிலி சரியில்லைனாலும் பையன் நல்லவனான்னு மட்டும் பாரு. அப்படியிருந்தா அவங்களை நம்ம பாதுகாப்புல தனியா வச்சிரலாம்” என்றார் நேசன்.
‘என்ன விசாரிச்சீங்க?’ என தன்னைத் தேடி வந்து கத்திய மகன்களிடம் பேசி சமாளிப்பதற்குள் போதும் போதுமென்றானது சதாசிவத்திற்கு. தந்தை சொல்லுக்காக அமைதி காத்தாலும் உள்ளுக்குள் அடங்காதிருந்தனர் அகிலன் அதியன். மேடைக்கு செல்லவே பயம். எங்கு தந்தை சொல்வதுபோல் தங்களால் பிரச்சனையாகிவிடுமோ என்று.
மேடையில் மகளருகில் வந்த ராகினிக்கு மகளின் நிலை முகத்திலடிக்க, “உங்களை என்னவோ நினைச்சேன் சாமியம்மா. இந்தளவு எதிர்பார்க்கலை. அரசியல் சாணக்கியத்தனம் அப்படியே தெரியுது” என்றார் வெறுப்புடன்.
அப்பொழுதும் சாமியம்மா முகத்தில் புன்னகை மட்டுமே நிறைந்திருக்க, அவரைக் கண்ட ராகினிக்கு கோபம் கோபமாக வந்தது.
“அம்மா அமைதியாயிருங்க. இங்க ஸ்டேஜ்ல வைத்து எதுவும் வேண்டாம். அப்பா கோபத்துல எதுவும் செய்திராம பார்த்துக்கோங்க” என சற்றே பதற்றத்துடன் கூற,
“எனக்கே எதாவது செய்யணும்னு தோணுது பொம்மு. நம்பவச்சி கழுத்தறுத்துட்டாங்களேடி” என்றார் புலம்பலாக.
“அம்மா! ப்ளீஸ் நீங்க அமைதியா இருந்தால்தான் நம்ம வீட்டுல உள்ளவங்களைச் சமாளிக்க முடியும். எதுவாயிருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம். அண்ணனும் தம்பியும் கோபத்துல கொதிச்சிட்டிருக்காங்க. எப்ப வேணும்னா இங்க வரலாம். அவங்களையும் பாருங்கம்மா” என்று அவரைக் கீழே அனுப்பியவள், கணவன் எங்கேயென்று தன் ஆதரவுக்காய் தேடினாள்.
தாய், தாரத்தின் புன்னகையை ஒருசேர எப்பொழுது பார்த்தானோ, அப்பொழுதே அங்கிருந்து நகர்ந்து போனை எடுத்து யாரிடமோ பேச ஆரம்பித்துவிட்டான் செந்தூரன். ஒருவேளை தன்னைச்சுற்றி நடப்பவற்றைக் கவனித்துக் கண்காணித்திருந்தால் அன்பழகியின் சூழ்நிலை புரிந்திருக்குமோ!
எவ்வளவு நல்லவர்களாயினும் அவர்களுள்ளும் ஒரு முரணான குணம் இருக்கத்தான் செய்கிறது. அனுபவசாலிகள் சும்மாவா சொன்னார்கள், நூறு சதவீதம் நல்லவனென்று எவருமில்லையென!
தன்னை இழுத்துச் செல்லும் அண்ணியவளைக் கண்டு பவானி பயத்தில் செல்ல, அங்கிருந்த அறைக்குள் விட்டுக் கதவடைத்ததும் தொண்டைக்குழியில் எச்சில் விழுங்கியபடி கலவரமாய் அன்பழகியைப் பார்க்க, அவளோ பதிலுக்கு பவானியை அழுத்தமாய்ப் பார்க்க, “அ..அது அண்ணி...” என்று திக்க, ‘சொல்லு?’ என்பதாய் அசையாது நின்றிருந்தவள் பார்வை மாறாதிருந்தது.
“சாரி அண்ணி. நீங்க எங்க வீட்டுக்கு வரணும்ன்ற ஆசையில்தான் சித்தி சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டேன்” என்றாள் எச்சில் விழுங்கியபடி.
“எப்ப தெரியும்?” என்றாள் அமைதியாக.
“அண்ணனுக்குப் பொண்ணு பார்த்திருக்கோம். அப்பா அம்மாவா நாங்கதான் நின்னு செய்யணும். அதனால அவங்க வீட்டுல எங்களைதான் அப்பா அம்மாவா அறிமுகப்படுத்துவோம். நீயும் அதை மனசுல வச்சிட்டு சித்தின்னு கூப்பிடாம வாயை மூடிட்டு இருன்னு சொன்னாங்க. அது ஏமாத்து வேலை சித்தி. சட்டப்படி தப்புன்னு சொல்லி மறுத்தேன். சித்திதான் அந்தப் பொண்ணை உனக்குக் கண்டிப்பா பிடிக்கும். பிடிக்கலைனா சித்தின்னு கூப்பிடு சொல்லிதான் அழைச்சிட்டு வந்தாங்க.”
“அங்க ராகினி அத்தையைப் பார்க்கவுமே பொண்ணு யாருன்னு தெரிஞ்சிருச்சி. உங்களை எப்படி வேண்டாம்னு சொல்றது? அதையும் மீறி சில நேரம் சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா செயல்படுத்ததான் தைரியம் இல்லை” என்றாள் தலைகுனிந்தபடி.
“சோ, உங்க குடும்பமே ஏமாத்தியிருக்கீங்க?”
“அச்சோ! அப்படி இல்லண்ணி. எனக்கு நீங்க என்னோடவே இருக்கணும்னு தோணிச்சி. மத்தபடி இப்ப நடந்ததைப் பார்க்கும்போதுதான் ஏதோ தப்பா தெரியுது” என்றாள் பாவமாய்.
“இது உன் அண்ணனுக்குத் தெரியுமா?”
“அண்ணனுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரியாது அண்ணி. என்கிட்டேயாவது ஓரளவு சொன்னாங்க. அண்ணனுக்குத் தெரிஞ்சிருந்தா சம்மதிச்சிருக்க மாட்டாங்க. இப்பவும் அம்மா சொல்லி அண்ணன் சம்மதிச்சது ஆச்சர்யம்தான். ஏன்னா.. எனக்கும், அண்ணனுக்கும் அம்மாவை சுத்தமா பிடிக்காது. அவங்க எங்களோடவும் இல்லை” என்று சிலவற்றைச் சொல்ல,
“சரி இப்ப நான் என்ன செய்யணும்?” என்றாள் அமைதியாக.
“அண்ணி! அது.. அண்ணன் நல்லவங்கதான். உங்களை நல்லா பார்த்துப்பாங்க” என்றாள் அண்ணன் மேலுள்ள நம்பிக்கையில்.
‘ம்க்கும்.. பார்த்துக் கிழிச்சான். ஏதோ பிடிக்காத பொருளைப் பார்க்கிற மாதிரி பார்க்கிறான்.. இடியட். இவங்க எங்களை ஏமாத்தினதுக்கு மானநஷ்ட வழக்கு போட்டிருந்தா தெரிஞ்சிருக்கும்’ என்றெண்ணியபடி நிற்க,
“அண்ணி! என்ன பேசமாட்டேன்றீங்க?” அன்பழகியின் நினைவுகளைக் கலைத்தாள் பவானி.
“இல்ல.. ஒரு பெண்ணை ஏமாத்தினா, சட்டத்துல எந்த செக்ஷன்ல தண்டனை கொடுப்பாங்கன்னு யோசிக்கிறேன்” என்றாள் தீவிரமாய்.
“அண்ணி!” என அதிர்ந்தவள், “ப்ளீஸ் அண்ணி. அம்மா செஞ்சதுக்கு அண்ணன் எப்படி பொறுப்பாவாங்க? தப்பா எதுவும் முடிவெடுக்காதீங்க அண்ணி. ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.
“அப்ப விடு. முக்கியக் குற்றவாளியா உன் அம்மாவை வச்சிரலாம்” என்றவள், “உடனே பயத்துல மயங்கி விழுந்துராத தாயே. என்ன நடக்குதுன்னு பார்த்து முடிவு பண்ணிக்கலாம். உன் அண்ணனை அவ்வளவு சீக்கிரம் விட்டுட்டுப் போயிரமாட்டேன்” எனவும், “தேங்க்ஸ் அண்ணி” என்று புன்னகைத்தாள் பவானி.
“என்ன சொல்ற ராகினி? அப்ப பகைக்காக பழிவாங்க இந்தக் கல்யாணமா? என் பொண்ணு என்ன அவங்களுக்கு அவ்வளவு சீப்பா போயிட்டாளா? அன்னைக்கே சொல்லியிருக்கணும் நீ? என் பொண்ணு அவங்களைக் கேட்ட கேள்வியில் என்ன தப்பிருக்கு? இதோ அவங்க புத்தியைக் காட்டிட்டாங்கள்ல” என்றார் கோபமாக.
“என்கிட்டேயாவது சொல்லியிருக்கலாமேம்மா” என்று அதியன் தன் பங்குக்கு எகிறினான்.
“வெளிநாட்டுல இருந்தா பாசம்லாம் அத்துப்போயிருமா? எதாவது செஞ்சிருப்பேனேம்மா” என்றான் அகிலன் தவிப்புடன்.
“இப்படின்னு தெரியாதேடா அகில். பேசிட்டோம் முடிஞ்சதுன்னு வந்துட்டோம். அந்தம்மா வன்மம் வச்சிப் பழிவாங்கும்னு தெரியாதேடா. என் பொண்ணு வாழ்க்கையை இப்படி அந்தரத்துல நிற்க விட்டுட்டாங்களேடா” என்றார் அழுகையுடன்.
“இப்பவே போலீஸ்கு போய் கம்ப்ளைய்ண்ட் கொடுக்கிறோம்” என்று அண்ணன் தம்பி இருவரும் கிளம்ப, அவர்களை மறித்தாற்போல் வந்த அன்பழகியைக் கண்டதும், “மூணு ஆம்பளைங்க இருந்தும் முட்டாளாய் இருந்துட்டோமேடா அன்புமா. வீட்டுல இரண்டு லாயர்ஸ் இருக்குறாங்கன்னு தெரிஞ்சே ஏமாத்தியிருக்காங்கன்னா...”
“அண்ணா ப்ளீஸ். கொஞ்சம் அமைதியாயிரு. அம்மா மட்டும் தப்பு, பையன் நல்லவனாயிருந்தா பிரச்சனை இல்லையே. அவங்க எங்களோட இருக்கப்போறதும் கிடையாது. அப்புறமும் ஏன் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கணும். செந்தூரனைப் பார்த்தா தப்பானவரா தெரியலை. நான் சொல்றது சரிதானப்பா?” என்று தகப்பனிடம் கேட்டாள்.

“நீ சொன்னா சரியாதான்மா இருக்கும். என்ன முடிவுன்னு பார்த்திரலாமே” என்றவருக்கு மனதில் சின்னதாய் ஒரு நம்பிக்கை.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“சதா வரச்சொன்னியாப்பா?” என்று கோதண்டம் வர,
“எங்களை எமாத்த எத்தனை நாள் காத்திருந்தீங்க சித்தப்பா?” என்றார் கோபமாக.
“என்னய்யா பேசற? உன்னை நான் ஏமாத்துறதா? முதல்ல நான் ஏமாத்துவேனா?” என்றவர் குரல் கலங்கி வர,
“இங்க நடந்த எதுவும் தெரியாதா?” கோபம் தணியாது கேட்டார் சதாசிவம்.
“ஏங்க கோபப்படாம பேசுங்க. மாமாவுக்கும் தெரியாமல் நடந்திருக்கலாம். இவ்வளவு நேரம் எங்க போனீங்க மாமா?” என்று கணவனைக் கடிந்து கோதண்டத்திடம் கேட்டார் ராகினி.
“பொண்ணு மாப்பிள்ளைக்கு ஆசீர்வாதம் பண்ணி முடிச்சதும், யாரோ சாமியம்மா வர்றாங்கன்னு எல்லாரையும் விலக்கிவிட்டாங்க. அப்ப ரொம்ப கசகசன்னு இருக்குன்னு அத்தையைக் கூட்டிட்டு மண்டபத்துக்கு வெளில நின்னுட்டிருந்தேன்மா. இப்ப அகிலன் போன் பண்ணி வரச்சொல்லவும் வேகமா வர்றோம்” என்றார்.
“இந்த சம்பந்தம் எப்படி? யார் மூலமா வந்தது சித்தப்பா?”
“ஏன்யா, எதாவது பிரச்சனையா? உன் பால்ய சினேகிதன் தயா கொண்டு வந்ததுதான். அவனுக்குமே வேற யார் மூலமாவோ வந்தது சொன்னான். விசாரிச்சவரை குடும்பத்தையோ பையனையோ எந்தக் குறையும் சொல்லலை. தப்புன்னு சின்னதா சந்தேகம் வந்தால் கூட என் பேத்திக்குச் சொல்லியிருப்பேனா?” என்றார் ஏதோ தவறாக நடந்திருப்பதை உணர்ந்து.
திருமணத்திற்காக வந்திருந்த நண்பன் தயாவையும் விசாரிக்க, “என் பொண்ணுக்கு வந்ததுதான் சதா. அவளுக்கு ஏற்கனவே பேசி முடிச்சாச்சின்னு மறுத்தப்ப, டாக்டர் பையனுக்கு டாக்டர் பொண்ணாயிருந்தா நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. உடனே உன் நினைப்புதான் வந்தது. நம்ம பாப்பாவும் சைக்காலஜி டாக்டராச்சே. அதான் கோதண்டம் மாமாகிட்ட சொல்லி அனுப்பினேன்” என்றார் தன் விளக்கமாக.
“டாக்டர் பொண்ணு வேணும்னு கேட்டாங்கன்னா, உன் பொண்ணு டாக்டர் இல்லையேடா” என்றார் சதாசிவம்.
“ஆமால்ல. ஆனா, எனக்கு அப்பத் தோணலையேடா. இப்ப நீ சொல்லவும்தான் ஏதோ திட்டத்தோட காய் நகர்த்தியிருக்காங்கன்னு தோணுது. அச்சோ! நம்ம பொண்ணு வாழ்க்கைடா?” என்றார் பதற்றத்தில்.
“பக்காவா ப்ளான் பண்ணி தயா மாமா பொண்ணுக்குப் பேசி முடிச்சது தெரிஞ்சி, தெரியாம பொண்ணு கேட்கிற மாதிரி பேசி, மெல்ல நம்ம வீட்டைக் கோர்த்துவிட்டு அவங்க இஷ்டப்படி நடத்தியிருக்காங்க. ப்ரீ ப்ளான்ட் மேரேஜ். அவங்களை...” என ஆத்திரத்தில் கத்தினான் அதியன்.
நடந்ததைக் கேட்கக் கேட்க அன்பழகிக்கு திக்குத் தெரியாத காட்டில் மாட்டிய உணர்வு. ‘நான் காலில் விழமாட்டேன்னு அவங்க தப்பைச் சுட்டிக்காட்டினதுக்கா இந்தப் பழிவெறி? பாதிக்கப்படுறது அவங்க பையனும்தான? பையன் வாழ்க்கையை விடவா பழிவாங்குவது பெரிது? என்ன பெண்மணி’ என்றுதான் தோன்றியது.
ராகினி மகளின் வாழ்க்கையை எண்ணி அழ ஆரம்பிக்க மகள் அவரை ஆறதல்படுத்த, “யார் என்ன செய்தா உனக்கென்னடி? ஆளோட ஆளா வேடிக்கை பார்த்திருக்கலாம்ல? நீதி நேர்மைன்னு பேசப்போய்...”
“ராகினி” என்று அதட்டலிட்டார் சதாசிவம். “என் பொண்ணு செய்ததில் எந்தத் தப்பும் இருக்கிறதா எனக்குத் தோணலை. சாமியை விட ஆசாமி பெருசுன்னுதான எல்லாரும் போய்க் கால்ல விழுறீங்க? அதைச் சுட்டிக்காட்டினா நம்ம பொண்ணு. அவங்க தரப்புல நியாயமிருந்தா பேசி சண்டை போட்டிருக்கலாமே? அதை விட்டுட்டு பழிவாங்கக் கிளம்புவாங்களாமா? இப்படி ஒவ்வொருத்தரும் கிளம்பிட்டா குடும்பம் குட்டின்னு ஒருத்தரும் நிம்மதியாயிருக்க முடியாது. நீங்கள்லாம் கடவுள் அவதாரமா அவங்களைப் பார்க்கப் போயிதான இத்தனை ஆட்டம் ஆடுறாங்க. அவங்க முகத்திரையைக் கிழிக்கலை நான் சதாசிவம் இல்லை” என்றார் ஆத்திரம் தாளாது.
“அப்பா பேசிட்டேயிருந்தா நேரம்தான் போகும். முதல்ல நம்ம சொந்தக்காரங்களைக் கவனிச்சி அனுப்புங்க. நான் போயி பவிக்குட்டி அம்மாகிட்ட பேசிட்டு வர்றேன்” என்று நகர,
தானும் வருவதாக அகிலனும், அதியனும் நிற்க, ராகினியோ “நானும் வருவேன்” என்றார்.
“அம்மா சேர்ந்து போனா வாயைத் திறக்க மாட்டாங்க. நான் பார்த்துக்குறேன்” என்றாள்.
“அப்படிலாம் தனியா விடமுடியாது அன்பு. நானும் நீயும் போகலாம்” என்றாள் நேஹா.
“நீங்களுமா அண்ணி? என்னைக் கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க. நானே முடிஞ்சளவு சரிபண்ணப் பார்க்குறேன்” என்று வெளியே செல்ல அவள் கைபிடித்து தன் போனைக் கொடுத்து “போயிட்டு வா” என்ற அண்ணனுக்கு சிறு புன்னகையை அளித்துச் சென்றாள் அன்பழகி.
“செந்தூர் எதாவது பிரச்சனையாடா? பொண்ணு வீட்டுக்காரங்க டென்சனோட கூடிக்கூடிப் பேசிட்டிருக்காங்க” என்ற தோழனின் வருத்தம் கண்டு, “எங்கம்மா செலக்ஷன் அப்படித்தான் இருக்கும். அவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்குறப்ப இரண்டு பேரும் எதையோ சாதிச்சதைப்போல் சிரிச்சாங்க பாரு. ச்சே.. இப்பவே மண்டபத்தை விட்டுப் போயிரலாம்னு இருக்குடா” என்று நண்பனிடம் வெறுப்போடு சொன்னான்.
“தற்செயலா கூட சிரிச்சிருக்கலாமேடா. சரிவிடு. கல்யாணம் முடிஞ்சதுமே சன்னியாசம் போக நீ தயாராகிட்ட? இருந்தாலும் வருஷம் இருக்கேடா. இன்னும் பொண்டாட்டிகிட்ட அடிகூட வாங்கலையேடா நீ” என்றான் கேலியோடான வருத்தத்துடன்.
“கல்யாணம் முடிந்தாலும் இல்லைனாலும் நான் சன்னியாசிதான்டா. எனக்குக் குடும்ப வாழ்க்கை பிராப்தமில்லை முடிவு கட்டிட்டாளே அந்தப் புண்ணியவதி” என்று வாசலுக்கு வெளியே தெரிந்த தாயின் விளம்பரப் பலகையைக் காண்பிக்க, அந்நேரம் அவர்களைக் கடந்து சென்ற அன்பழகியின் மனம் கலங்கிப்போனது.
அவள் தங்களைக் கடந்து சென்றதை இருவருமே கவனிக்கவில்லை. கவனமெல்லாம் தன் வாழ்வைக் கெடுத்தத் தாயின் மேல் அல்லவா இருந்தது.
‘உன் தாய்தான் முக்கியம்னு என்னைப் பழிவாங்கிட்டல்ல’ என்றவள் பவானி சொன்ன தாய் மகன் உறவை மறந்திருந்தாள். சொல்லொணா ஒரு கோபம் எழ, அனைத்திற்கும் காரணமான மாமியாரை ஒரு வழி பண்ணச் சென்றாள்.
“ப்ச்.. என்னவோ போடா கேசவா! எதைப் பார்த்தாலும் எரிச்சலாயிருக்கு” என்றான் செந்தூரன்.
“அதுக்காக உன்னை நம்பி வந்த பெண்ணை அப்படியே விட்டுருவியா? தப்புடா. அந்தப் பொண்ணுக்கும் கனவுகள் இருக்கும்ல?” என்றான் அன்பழகி சார்பாக யோசித்து.
“விடுறதுக்காகச் சொல்லலை கேசவ். அம்மா பார்த்த பொண்ணு அவங்களை மாதிரியே பாதியில் விட்டுட்டுப் போயிட்டா என்ன செய்யுறதுன்ற பயம் போகமாட்டேன்னுது. விடு பழகிப் பார்த்து அவங்களைத் தெரிஞ்சிக்கலாம்” என்று தன்னையே தேற்றிக்கொண்டான்.
“அவங்களைப் பார்த்தா இன்னொருத்தர் சொல்கேட்டு ஆடுறவங்க மாதிரி தெரியலைடா. வேணும்னா மத்தவங்களை ஆட்டி வைக்கலாம்” என கிண்டலாக மொழிந்து, “சும்மா ஃபன்னுக்குடா. உடனே அப்படியும் இருக்கலாமோன்னு கிளம்பிராத. பார்க்க நல்லவங்களா தெரியுறாங்க. ஏடாகூடம் செய்து வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்காத” என்றவன் பேச்சை நிறுத்தி பின், “என்னடா பதிலையே காணோம்?” என்க,
“நீ சொல்றது புரியுது கேசவ். நான் மேனேஜ் பண்ணிக்குறேன்” என்றான் செந்தூரன்.
“நீ அப்பவே வருவேன்னு எதிர்பார்த்தேன் மருமகளே! என்ன இவ்வளவு லேட்டா வர்ற? கொஞ்சம்கூட மருமகள்ன்ற பொறுப்பு இல்லையே?” என கேட்ட கீச்சுக்குரலில் அதிர்ந்து பார்த்த அன்பழகியைக் கண்டு நக்கல் சிரிப்பை உதிர்த்து, “என்ன அதிர்ச்சியாயிருக்கா?” என்றார் ராஜேஸ்வரி.
“ம்கூம் ஆத்திரமாயிருக்கு. ஊரை ஏமாற்றுவதைக் கூட விட்டுரலாம். ஆனா, கடவுளையும் ஏமாத்துறீங்க பாருங்க. அதை நினைச்சா.. ச்சே உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?” என,
“இருந்ததே! நீ அத்தனை பேர் மத்தியில் பேசுறதுக்கு முன்னேயும், அது உள்;ர் டிவியில் வர்றதுக்கு முன்னேயும். இப்ப சுத்தமா இல்லை. இதுக்கான தண்டணையை அந்த அம்மன் கொடுத்தா தைரியமா ஏத்துக்குவேன். கௌரவமே போன பிறகு இந்த உயிர் எதுக்கு? அதுக்கு முன்ன உனக்கொரு பாடம் கற்றுத்தர வேண்டாமா?” என்று எள்ளல் குரலில் சொன்னவர், “அந்த செல்போன்ல பதியுறதை அழிச்சிருறியா?” என்றார் ராஜேஸ்வரி.
“ஸ்மார்ட்” என பாராட்டி, “வீட்ல பதியச் சொல்லிதான் கொடுத்தாங்க. மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் இவங்க எதுக்குன்னு ஆஃப் பண்ணிட்டேன். ஏன்னா..?” என சில நொடிகள் நிறுத்தி, “ஐ திங்க் மெண்டலி நீங்க பாதிக்கப்பட்டிருக்கீங்க நினைக்குறேன். அது உங்களைத் தப்புத்தப்பா யோசிக்க வைக்குது” என்றாள்.
“என்னைப் பைத்தியம்ன்ற. ம்.. இருந்துட்டுப் போகட்டும். அதுக்குக் காரணமான உன்னை இந்தப் பைத்தியம் என்ன செய்யலாம் சொல்லு? எனக்கு என்னலாமோ செய்யத் தோணுது” என்றார் நக்கல் குறையாது.
“அதான் செய்துட்டீங்களே. இன்னும் செய்ய என்னயிருக்கு?” என்றாள் ஆத்திரமாக.
“நான் செய்ததை உனக்குத் தெரியப்படுத்துறது என் கடமையாச்சே” என்றார் புன்னகையுடன்.

‘அப்படி என்ன சொல்லிவிடப் போகிறார்’ என்று அசட்டையாக நிற்க, அவரோ அவள் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தார்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
“இப்போதைக்கு ஓரளவு விசாரிச்சிரிப்பீங்க. ஆமா உன் தாத்தாவுக்கேத் தெரியாமல் உன் ஜாதகத்தில் ஆரம்பித்து கல்யாணம் முடிந்தது வரை எல்லாமே என் எண்ணப்படி நான் நடத்தியது.”
“அதான் தெரியுமே” என்பதாய் அவள் நிற்க...
“செவ்வாய் தோஷம்னு ஒண்ணு இருக்கிறதா, உன் அப்பாகிட்ட சொல்லிதான் இந்த கல்யாணத்தை இவ்வளவு சீக்கிரமா நடத்தினேன். உண்மையைச் சொல்லணும்னா அப்படி ஒண்ணு உங்களுக்கு இல்லவேயில்லை. அது தெரியுமா?” என்றார் நக்கலாக.
“என்னது?” என அதிர்ந்தவளுக்கு இதனால்தான் தந்தை அவசரமாக முடித்திருப்பார் என்று புரிந்தது.
“நிஜம் மருமகளே! உன் தாத்தா ஜாதகம் பார்த்தது அவர் எப்பவும் பார்க்கிற ஆள்கிட்டதான். என்ன ஒரு குழப்பம்னா, அவரை நான் விலைகொடுத்து வாங்கி பொய் சொல்ல வச்சிட்டேன். செவ்வாய் தோஷம்னாலே ஆட்டோமேடிக்கா அதே ஜாதக பையன் கிடைக்குறது அரிதுன்னு தெரியுமே.”
“உன் அப்பாவோட நண்பனை அவரே அறியாமல் எங்களுக்கு சாதகமா பேசவைத்து, ஜாதகம் பார்க்கையில் உன் தாத்தனைக் குழப்பி, என் பையன் ஜாதகம் அதற்கு சரியானதுன்னு சொல்லி, உன் வீட்டுக்கு வந்து பேசி முடிச்சி, ஜாதகப் பிரச்சனையில் என் பையன் டாக்டர்னதும் உங்கப்பா யோசிக்காம விட்டுட்டார். மீறி விசாரிச்சது நாங்க சொன்ன ஹாஸ்பிடல்ல, நாங்க ரெடி செய்த ஆட்கள்கிட்ட. அவ்வளவு பெரிய வக்கீல் தன்னோட பொண்ணு விஷயத்தில் ஏமாந்துட்டார் பார்த்தியா? ம்.. அவ்வளவு அன்பு உன்மேல. ஷப்பா.. உன்னோட விஷயத்தில் எத்தனை யோசிக்க வேண்டியதாகிருச்சி” என்றார் சலிப்புடன்.
“உண்மைதான். அதுதான் உண்மையான அன்பு. உங்களை மாதிரியில்லை. இவ்வளவு சொல்லுற நீங்க ஏன் அம்மா ஸ்தானத்தை யாருக்கோ விட்டுக் கொடுத்தீங்க?”
புருவம் சுருக்கி, “புரியலை? அதான் சரியான நேரத்துக்கு வந்துட்டேனே” என்றார் அவள் முகபாவனையின் அர்த்தம் புரியாது.
“பத்திரிக்கையில் அம்மான்ற இடத்தில், உங்க பெயரைப் போடக்கூட கொடுத்து வைக்கலையே மாமியாரே” என்றாள் அவரைப் போன்றே நக்கலாக.
“ஏய்!” என்று பற்களைக் கடித்தபடி நின்றார் ராஜேஸ்வரி.
“அன்புன்றது எப்படி எதையும் எதிர்பார்க்காதோ, அது மாதிரி சில சமயம் யோசிக்கவும் மறக்கும். அதனால எல்லாம் என் அப்பாவை நீங்க மட்டம் தட்ட நினைக்காதீங்க. அதுக்கான அருகதை உங்களுக்கில்லை. அது இருக்கட்டும் என்னைப் பழிவாங்க உங்க பையனை ஏன் பகடைக்காய் ஆக்குனீங்க? அவங்க மேலயும் விரோதமா?” என கேட்டாள்.
“சேச்சே.. அவன் என் பையன். தொப்புள் கொடி உறவு சாகும் காலம் வரை போகாது. கொஞ்ச நாள் இந்தக் கல்யாணம் பற்றிய டென்சன் இருக்கும். அப்புறம் இதையெல்லாம் மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்குவான். உன்னை நினைச்சிட்டு இருப்பான்னு நினைச்சியா? அவனுக்கு உன்மேல சுத்தமா நல்ல அபிப்ராயம் கிடையாது. போய்ப் பேசிப்பாரேன் பதில் கூட வராது” என திமிர் குறையாது பேச,
“ஃப்ராட்” என்று பல்லைக்கடித்தாள் அன்பழகி.
“ஹாஹா நீ என்னை ஃபிராடுன்னு சொன்னா, உன் வீட்டினர் வரைதான் நம்புவாங்க. நான் ஒண்ணு சொன்னா அதை ஊரே நம்பும். உதாரணமா நீ பிரச்சனை கிளப்பிவிட்ட இரண்டு நாள்ல இன்னொரு பிரச்சனை வரவும் என்னை மறந்துட்டாங்க. இப்பவும் நான் அதே கோவில்ல அதே மரியாதையோடதான் இருக்கேன்” என்றார் இறுமாப்பாக.
“அதீத கர்வம் பெண்களுக்கு ஆகாது. மக்களெல்லாம் முட்டாள்கள் கிடையாது மாமியாரே” என்க,
“எல்லாரும் முட்டாள்கள் இல்லைன்றதை ஒத்துக்குறேன். ஆனா, அநேக பேர் முட்டாள்கள்தான்றதை மறுக்கவும் முடியாது. நம்மாளுங்க டிசைன் அப்படி. ரொம்பவே முக்கியமான விஷயம் சொல்லட்டுமா? உனக்கு ரொம்ப முக்கியமானது மருமகளே” என்றார் விஷமமாக.
அன்பழகி உஷ்ணப்பார்வை ஒன்றை அவரை நோக்கி விட,
“ப்பா.. நான் பஷ்பமாகிருவேன் போலவே” என பயந்தாற்போல் செய்து, “என் பையனுக்கு என்னை அறவே பிடிக்காது” என்றார்.
“எனக்கும், அண்ணனுக்கு அம்மாவை சுத்தமா பிடிக்காது. அவங்க தெற்கேன்னா, அண்ணன் வடக்கே நிற்பாங்க. நான் மேற்கே நிற்பேன். வேறு வேறு திசைகள் எங்களோடது. இது அவங்களுக்கும் தெரியும்.”
அன்பழகி கேள்வியாய் பவானியைப் பார்க்க,
“ஆமா அண்ணி. அப்பா மேல உள்ள மனஸ்தாபத்துல கோவில் குளம்னு போக ஆரம்பிச்சவங்க, அந்த வாழ்க்கை பிடிச்சிப்போயி, எனக்கு எட்டு வயசா இருக்கும்போது குடும்பம் குழந்தை எதுவும் வேண்டாம்னு உதறிட்டுப் போயிட்டாங்க. சரியோ தப்போ அப்பாதான் எங்களைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு இதுவரைக்கும் எங்களுக்குத் தெரியாது. என்னுடைய பத்தாவது வயதில் அப்பா தவறிட்டாங்க. அம்மா சாமியார் இல்லையா அதான் சாவுக்குக் கூட வரலை.”
“வீட்டோட மொத்த அதிகாரத்தையும் அவங்க தங்கச்சி, தங்கச்சி புருஷன் கையில் கொடுத்து, அண்ணனை அவங்க கண்ட்ரோலுக்குக் கொண்டு வர முயற்சித்து முடியாததால, என்னை முடிந்தளவு கண்டிப்போட வளர்க்கச் சொன்னாங்க. அம்மா போன்ல சொல்றதை சித்தி நேர்ல செய்வாங்க. கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரம் நடந்தது எங்க வீட்டில்.”
“அண்ணன் அதிகமா வீட்டுல இருக்கமாட்டாங்க. நடுவுல தெரியாமல் நடந்த ஒரு விபத்துனால மனம் நொந்து தன்னை வெளியில் காட்டிக்காம அடங்கிட்டாங்க. அதுக்கப்புறம் அம்மாவை எதிர்க்கலைன்னாலும், கண்டுக்குறதும் கிடையாது. சித்தியோட அத்தனை அடக்கு முறையும் என்னை மட்டும்தான் பாதிக்கும். இது என்னோட கணிப்பு. நிஜம் எதுன்னு முழுசா தெரியாது” என்றாள் துக்கத்iதை அடக்கியபடி.
அவள் சொல்வதை வைத்துப் பார்த்த அன்பழகிக்கு, சந்தோசம் என்ற பக்கமே பவானிக்குக் காட்டப்படவில்லை என்பது புரிந்தது. ஆறுதல் சொல்ல மனம் உந்தினாலும், அந்நேரத்தில் அதைச் செய்யவில்லை. பவானி சொன்னது நினைவில் வர சின்ன பெருமூச்சுடன், “அவங்களுக்கு உங்களைப் பிடிக்காதுன்னு தெரியும்” என்றாள் ராஜேஸ்ரியிடம்.
“பவா சொல்லிட்டாளா? சொல்லியிருப்பா. அவளுக்குப் பிடித்த அண்ணியாச்சே. என் மகன் கல்யாணத்துக்குச் சம்மதிச்சதுக்கு அவளும் ஒரு காரணம். இப்ப சொல்லு? என்னையே பிடிக்காத என் பையனுக்கு, என் மூலமா வந்த உன்னை எப்படிப் பிடிக்கும்?” என்றார் கேலிப்புன்னகையுடன்.
“சாடிஸ்ட்” என்றாள் பட்டென்று.
“ம்.. உனக்கு மட்டும் நான் சாடிஸ்ட்தான். என் பிள்ளைகளுக்கு பொறுப்பில்லாத தாய் மட்டுமே! பலர் பார்க்க என்னை அசிங்கப்படுத்தினல்ல, அதனோட விளைவு இந்த உன் நிலை” என்று அவளைக் கைநீட்டிக் காண்பித்து, “என் பையனுக்கு என்னைப் பிடிக்கலைனாலும் குணத்துல அவன் என்னை மாதிரி. நீ என்னுடைய அதிகாரத்தில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டவள். அப்படிப்பட்டப் பொண்ணு எப்பேர்பட்ட அழகியா இருந்தாலும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்றார் வன்மமாக.
வரும்பொழுது அவன் சொன்ன சொற்களுமே மனதினுள் உலாபோக, ‘என்ன கடவுளே இதெல்லாம்?’ என தோன்றியது. மனதைத் தேற்றி, “நீங்க என்ன சொல்ல வர்றீங்க?” என்றாள்.
“அவனோடவே இருந்தாலும் பிரச்சனை உனக்குதான். இல்லை வேண்டாம்னு போனாலும் நஷ்டம் உனக்குதான்.”
“தாலி கட்டின கையோட போயிருவேன்னு சொல்ல வர்றீங்களா?” பார்வையிலும் குரலிலும் அழுத்தத்தைக் கொண்டு வந்து கேட்டாள்.
“புரிஞ்சிக்கிட்டா சரி. எப்படியும் என் பையன் உன்னை ஏத்துக்கப் போறதில்லை. கொஞ்ச நாள் கழித்து நீயே போடான்னு போயிருவ...”
“அப்பவும் மாட்டேன்னு சொன்னா?” என்றாள் அவரை முடிக்கவிடாமல்.
“அதுக்கு ஒரு ப்ளான் போடுவேன். உன்னை நிம்மதியா வாழ விடமாட்டேன்.”
“ஆனா, மாமியாரே! உங்களை இந்த ஆன்மீகத்திலிருந்து விலக்கி, குடும்பம் பேரன் பேத்தின்னு எங்களோடவே இருக்க வைக்கலாம்னு பார்க்கிறேன்” என்றாள் அவரின் நிஜ முகம் தெரியாது.
“சவாலா?”

“சவால்லாம் விட்டா அதைக் கடைபிடிக்க கஷ்டப்படணும். கொஞ்சம் அழுத்தம் அதிகமாகி சூழ்நிலை எனக்கெதிரா போனா, நான் ஒண்ணும் செய்ய முடியாது. நமக்குள்ள நடந்ததை பட்டுன்னு பப்ளிக்ல போட்டு உடைச்சிருவேன். இல்லைனா உங்க வாயாலயே சொல்ல வைத்திருவேன்” என்று வெளியே வந்துவிட்டாள்.
 
Last edited:
Member
Joined
Sep 3, 2024
Messages
31
என்ன வக்கீலு இவங்க, தன் பிரச்சனைக்கே சரியா விசாரிக்காதவங்க மற்ற வழக்கை எல்லாம் எப்படி நடத்துவாங்க. 🤔 மாமியாருக்கு மருமகள் சவால் விட்டாச்சு. செந்(தூரனை) அன்பழகி எப்படி சாய்க்கப் போறாளோ...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
என்ன வக்கீலு இவங்க, தன் பிரச்சனைக்கே சரியா விசாரிக்காதவங்க மற்ற வழக்கை எல்லாம் எப்படி நடத்துவாங்க. 🤔 மாமியாருக்கு மருமகள் சவால் விட்டாச்சு. செந்(தூரனை) அன்பழகி எப்படி சாய்க்கப் போறாளோ...
அவன் ஒரேடியா சாய்க்காம இருந்தா சரிதாங்க.
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
அவன் ஒரேடியா சாய்க்காம இருந்தா சரிதாங்க.
நீங்க சாய்க்க வச்சிரமாட்டீங்க. கண்டிப்பா சாய்க்க வைப்பீங்க பார்க்கத்தானே போறோம்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
நீங்க சாய்க்க வச்சிரமாட்டீங்க. கண்டிப்பா சாய்க்க வைப்பீங்க பார்க்கத்தானே போறோம்.
பார்க்கலாம்ங்க
 
Top