- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
மறுநாள் காலை வந்த செய்தியில் குடும்பமே அதிர்ந்ததென்றால், வசீகரனுக்குள் யோசனைகள் மட்டுமே!
“ஏன் இப்படிச் செய்தாங்கன்னு எதாவது தெரியுமாங்க?” கணவனைக் கேட்டார் ஆனந்தி.
“சொல்லலையே! காரணம் சொல்லாமலே கல்யாணம் நடக்காதுன்னு வச்சிட்டாங்க. வர்ற கோபத்துக்கு... என்ன நினைச்சிட்டிருக்காங்க? தெரிஞ்சவங்க, அதிலும் சொந்தக்காரங்கன்னு பொண்ணு எடுக்க நினைச்சா, என்கிட்டயே ஆட்டம் காட்டுறாங்களா?” என்று பல்லைக்கடித்து கத்திக் கொண்டிருந்தார் குலசேகரன்.
அவரின் சத்தம் கேட்டு, “என்னாச்சிப்பா?” என்று பையன்கள் வர, பையன் தூங்கிக் கொண்டிருந்ததால் வேடிக்கை பார்க்க ஐஸ்வர்யாவும் வந்திருந்தாள்.
பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய விஷயத்தைச் சொன்னவர், அவர்களைப் பலவாறு திட்ட ஆரம்பித்தார்.
ஐஸ்வர்யா சுவாரசியமாகி புன்னகையுடன் கவனிக்க ஆரம்பிக்க, அவளின் எண்ணம் புரிந்தாற்போல், ‘ம்கூம்’ என பார்வையில் மனைவியை அமைதிப்படுத்தினான் சுவீகரன்.
“அப்பா! அவங்களுக்குப் பிடிக்கலைன்னா விடுங்க. இப்ப திட்டி என்னாகப்போகுது?” என்றான் வசீகரன்.
“திட்டி என்னாகப்போகுதா? டேய்! அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சிட்டு, இப்ப கல்யாணத்தை நிறுத்துறது எந்த விதத்தில் நியாயம்? காரணம் சொல்லாமல் நிப்பாட்டுவாங்களா. அவங்களை...”
‘நியாயம் பேசுற ஆளைப்பாரு’ என மனதிற்குள் முனகினாள் ஐஸ்வர்யா.
“அவங்க நிப்பாட்டுறது இருக்கட்டும்ப்பா. எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க? ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்தது? ஆக்சிடெண்ட்ல மூணு வருஷம் கோமாவுல இருந்ததா சொன்னீங்க. அது உண்மையா?” கடந்த சில நாள்களாக தனக்குள் எழும் கேள்வியைக் கேட்டான் வசீகரன்.
“என்னடா இப்படிக் கேட்கிற? டாக்டர் கொடுத்த ரிப்போர்டை நீ பார்த்ததான? கோமாவுல இல்லன்னா எங்க போயிருந்தியாம்? யாரோ எதோ சொல்லி உன்னைக் குழப்பிவிடுறாங்க” என்றார் குலசேகரன்.
“குழப்பம்தான்ப்பா. ஏன்னு தெரியாமல் கொஞ்ச நாளா ரொம்பவே குழப்பமாயிருக்கு” என்றான் தன்னையறியாமல்.
“குழம்ப வேண்டிய எந்த அவசியமும் இல்லை வசீ. முதல்ல அந்தப் பொண்ணு வீட்டுல பேசிட்டு வரலாம் வா.”
“போய் என்ன பேசணும்ப்பா? ஒண்ணும் தேவையில்லை. இதை இதோட விட்டுட்டு அவங்கவங்க வேலையைப் பாருங்க” என்றான் முடிவாக.
“காரணமாவது கேட்டுப்பார்க்கலாமே வசீ?” என்றான் சுவீகரன்.
“காரணம் எதுவாயிருந்தாலும், வேண்டாம்னு சொன்ன பிறகு அங்க போய் நிற்கிறது அசிங்கம் கரன்.”
“டேய்! அவங்க நம்மளை ஏமாத்தியிருக்காங்கடா?” கோபத்தில் கத்தினார் குலசேகரன்.
‘ஒரு பொண்ணோட வாழ்க்கை இது. ஒருத்தி ஏமாந்ததே போதும். இன்னொருத்தியையும் ஏமாத்திராதீங்க.’ அவளின் குரல் காதினுள் ஒலிக்க, “நாம யாரையாவது ஏமாத்தியிருக்கோமாப்பா?” என்றான் பட்டென்று.
அத்தனை பேர் முகமும் பேயறைந்தாற்போலாக, அனைத்தையும் மீறிய வியப்பு ஐஸ்வர்யாவிடத்தில்.
“சொல்லுங்கப்பா? நாம யாரையாவது ஏமாத்தியிருக்கோமா? என்ன அப்படியே நிற்குறீங்க? அம்மா நீங்க சொல்லுங்க?” என்று அவர்களின் நிலையைக் கலைத்தான்.
“என்னடா என்னென்னவோ பேசுற? நாம யாரை ஏமாத்தணும்? நமக்கு என்ன தேவை இருக்கு?”
“ம்.. ஆமாம்ல” என ஒத்துக்கொண்டதில் குலசேகரன், ஆனந்தி இருவரும் ஆசுவாசமாக, அண்ணியவளுக்கோ, ‘அதான எங்க இவங்கள்லயிருந்து மாறியிருப்பானோ நினைச்சேன். ஒரே குட்டையில் ஊறின மட்டைதான இவனும்.’ மனதினுள் அவனைத் திட்டிக்கொண்டிருந்தாள்.
“ஆனா, அம்மா.. எனக்குத் தெரியாத ஏதோ ஒண்ணு என் லைஃப்ல இருக்குன்னு மனசு சொல்லுது” என்றான் மறுபடியும்.
திரும்பவும் ஐஸ்வர்யா அவனை ஆர்வமாகப் பார்க்க, “நீ எதையோ அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு வந்து எங்களைக் கேள்வி கேட்கிற” என்றார் ஆனந்தி.
‘நீங்க சொல்ற மாதிரி அரைகுறையா இல்லாம முழுசா தெரியணும்னுதான் முயற்சி பண்றேன்ம்மா’ என மனதினுள் நினைத்தான்.
மகனின் குழப்ப முகம் மாறாதிருக்கவும், “கோமாவுல இருந்த உன்னை எப்படிடா ஏமாத்துறது? ஏமாத்த எதாவது காரணம் இருக்கா என்ன? சொத்து உன் பெயர்ல இருந்து அதை நயவஞ்சகமா எங்க பெயர்ல மாத்திக்க இதொண்ணும் சீரியலோ, சினிமாவோ இல்லைடா. நீ எங்க இரத்தம். அதுவும் அந்த நிலையில் உன்னை ஏமாத்தி எதை சாதிக்கப் போறோம் சொல்லு?” என்று ஆனந்தி கனிவாய்ப் பேச...
‘சரிதானே’ என்றுதான் தோன்றியது வசீகரனுக்கு. ‘இதோ அப்பாவின் தொழிலை நானும் அண்ணனும்தான் பார்த்துக்குறோம். சொத்து இன்னும் பிரிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் என்னை என்னன்னு ஏமாத்துவாங்க. அந்தப் பொண்ணு வேற ஏதோதோ சொல்லி...’ தலை வலிப்பதுபோல் தோன்ற, “அம்மா தலைவலிக்குது. கொஞ்சம் டீ கொடுங்க. பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்” என்றான்.
“தலைவலியா? என்னடா கண்ணா? எப்பயிருந்து?” என்றதில் ‘கண்ணா’ என்ற வார்த்தை அவளின் குட்டிக்கண்ணாவை நினைவுபடுத்த, அன்பாய் பட்டும்படாமலும் அவளிட்ட நெற்றி முத்தத்தின் நினைவு வர, சட்டென்று விரல்கள் நெற்றியைத் தடவியது. ஏனோ அவளிடமும் எந்தத் தப்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. அவளின் கண்களில் தெரிகிறது அவளின் நேர்மை. இப்பொழுதும் அவளுக்கும் தனக்கும் இடையில் ஏதோ இருப்பதாகத் தோன்றுகிறது.
ஒருவேளை வீட்டிலுள்ளவர்கள் பேச்சை வேறு திசையில் கொண்டு போகிறார்களோ என்று நினைத்த நிமிடம் அதனை அழித்திருந்தான். ‘அவளிடமும் பொய்யில்லை. தன் குடும்பத்தினரிடமும் பொய்யில்லை. பின் ஏன் அப்படிச் சொன்னாள்? என் குடும்பத்தினரையும் என்னையும் தெரிந்து வைத்திருக்கிறாளே எப்படி?’ மனம் முழுவதும் அவளிடமேயிருக்க திருமணம் நின்றது பெரிதாகத் தெரியவில்லை வசீகரனுக்கு.
வசீகரன் மனதை வசீகரித்துவிட்டாளோ!
“ரொம்ப வலிக்குதாப்பா? நீ போய்ப்படு. அம்மா டீ எடுத்துட்டு வர்றேன்” என்ற தாயின் கரிசனையில் தலையசைத்துத் தன் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்து, மின்விசிறியின் சுழற்சியை வெறித்திருந்தான். ‘வீட்டில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கிடைத்திருக்கிறது. ஆனால், மனதின் அலைப்புறுதல் நின்றபாடில்லையே ஏன்?’ என்ற மனதிடம், ‘எதையும் யோசிக்காதிருப்பதே நலம்’ என்றது மூளை.
மூளை சொன்னதை ஏற்றுக் கண்மூடிக்கொள்ள, ‘ஹேய் குட்டிக்கண்ணா!’ என்ற குரலும் முகமும் விடாது இம்சை செய்ய சட்டென்று கண்திறந்தறவன், அதற்கு மேல் படுத்திருக்க முடியாதென்பதை உணர்ந்து எழுந்தவன் வேகமாக வெளியே வர ஐஸ்வர்யாவின், “மொத்தக் குடும்பமும் நல்லா சமாளிக்கிறீங்க” என்ற குரலில் அப்படியே நின்றான்.
“ஏமாத்தவே தேவையில்லையா? வார்ரே வா! உங்கப்பா, அம்மாவுக்கு ஆஸ்கார்லாம் பத்தாது. அதையும் தாண்டி பெருசா எதாவது கொடுக்கணும்ங்க. என்னமா நடிக்கிறாங்க.” என்றாள் வாயில் கைவைத்து.
“ஏய்! வசீ கேட்டுரப் போறான்மா. கொஞ்சம் அமைதியா இரேன்” என்றான் கெஞ்சலாய்.
“அவர் தலைவலின்னு படுக்கப்போயிட்டார். இல்லைன்னாதான் என்ன கேட்கட்டுமே. அப்படியாவது இங்க இருக்கிறவங்க சாக்கடை மனதை சுத்தம் செய்தால் நல்லது.”
“ஐஸ் ப்ளீஸ்...”
“எத்தனை நாள் என்னை அமைதிப்படுத்த முடியும்? உண்மையை மூடி மூடி வச்சாலும் என்னைக்காவது வெடிச்சி வெளில வரத்தான் செய்யும். இன்னொரு பொண்ணோட பாவத்தையும் கொட்டிக்காதீங்க” என்றாள் காட்டமாகவே.
“அதான் கல்யாணம் நின்னுருச்சேமா.”
“நடந்திருந்தா? அட இது நின்னா உங்கப்பா அப்படியே விட்டுரப்போறாரா? அந்தாள்...” கோபத்தில் வார்த்தைகள் அளவில்லாமல் போகவும், “ஐஸ் போதும்” என அதட்டி அறைக்குள் இழுத்துச் சென்றான்.
‘இப்ப அண்ணி சொல்ல வர்றது என்ன? என்னால ஒரு தப்பு நடந்திருக்கா? அதுவும் பெண் சம்பந்தப்பட்டதா? எந்தப் பெண்ணும் இதுவரை என் வாழ்க்கையில் வந்ததில்லையே. அப்படியிருக்கையில் ஏன் எல்லாரும் பெண்ணோட வாழ்க்கை.. பெண்ணோட வாழ்க்கைன்னு என்னை சம்பந்தப்படுத்தியே பேசுறாங்க?’
‘ஆண்டவா! என்னை எப்பவும் குழப்பத்துலயே வச்சிருக்கணும்னு முடிவு பண்ணி வச்சிருக்கியா? நான் அந்தளவு தப்பு செய்திருக்கேனா? எனக்குத் தெரிந்து எந்தத் தப்பும் செய்யலையே. தெரியாமல் செய்தா தப்புக்கணக்குல வராது.. அதுக்கு மன்னிப்பும் உண்டுன்னுதான சாஸ்திரம் சொல்லுது. கதைகள்ல வர்ற மாதிரி எனக்கு திடீர் டிடெக்டிவ் ஃப்ரண்ட் இருந்திருக்கலாம். இப்ப நதி மூலமும் தெரியாம, ரிஷி மூலமும் புரியாம இருக்கேன்’ என தனக்குள் மூழ்கியபடியிருக்க, அதற்குள் ஆனந்தி மகனுக்கு டீ கொடுக்கவும், யோசனைக்கு நடுவே வெகு நிதானமாய்க் குடித்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
“அந்தப் பொண்ணுகிட்டச் சொல்லிட்டியா பூரணி?”
“அவங்க வரலை போல சண்மு. கோவில் முழுக்கத் தேடிப்பார்த்து கொஞ்ச நேரம் காத்திருந்தும் பார்த்தேன். நேரம் போனதே தவிர அவங்க வரலை. அதான் கிளம்பி வந்துட்டேன்.”
“சரி விடு. அவங்க விதி தப்பானவங்ககிட்ட சிக்கணும்னு இருக்கு. இதுல நாம செய்யுறதுக்கு ஒண்ணுமில்லை.”
“விதியை மதியால் வெல்லலாம்னு சொல்றாங்களே சண்மு? என்றாள் கேள்வியாய்.
“அதெல்லாம் நம்மளோட மன திருப்திக்காக நாமளே ஏற்படுத்தினது. இப்ப ஆக்சிடெண்ட்ல செத்துப்போன ஒருத்தரை உயிர் பிழைக்க வைக்க முடியுமா? யார் யார் வாழ்க்கையில் என்னென்ன நடக்கணும்னு கடவுள் எழுதி வச்சிருக்காரோ அதன்படிதான் நடக்கும்.”
“அப்ப சாவின் விழிம்புக்குப் போய் பிழைத்து வர்றதுக்குப் பெயர் என்ன?”
“அதுதான் விதிப்பயன். இன்னொண்ணு தெரியுமா? சாவின் எல்லையைத் தொட்டு வந்த ஒருத்தனை அந்த சாவு சீக்கிரத்தில் நெருங்காதாம். அவன் மூலமா ஏதோ நல்லது நடக்கக்கூட கடவுள் காப்பாத்தியிருப்பார்னு பெரியவங்க சொல்வாங்க.”
“பார்ரா! பயபுள்ள தத்துவமா கொட்டுது. விதியோ மதியோ சண்மு. நான் முடிந்தவரை முயற்சிப்பேன்” என்றவளுக்கு வேலை விட்டுத் திரும்பி வீடு செல்லும் பொழுது அப்பெண் அஞ்சுகாவிடமும், அவள் அப்பாவிடமும் பேசும் வாய்ப்பு கிடைக்க தன் மனதிலுள்ள அனைத்தையும் கொட்டி, தன் தோழி வாழ்க்கை போல் இல்லாமல் நல்ல பையனாகப் பார்த்துத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி அறிவுரை செய்தாள்.
முதலில் அவள் சொன்னதை நம்பவில்லை இருவரும். “நம்பினா நம்புங்க. இல்லைன்னா பின்னால் வருவதை அனுபவியுங்க” என்று பூரணி அவர்களை அலட்சியப்படுத்தி நடக்க, அஞ்சுகா அவளை நிறுத்தி அவள் சொல்ல வருவதை நிதானமாகக் கேட்டு, தங்கள் சார்பில் வந்த சந்தேகத்தையும் அவளிடமே தெரிந்துகொண்டாள்.
அதன்பின் அஞ்சுகாவின் அப்பா தங்கள் இரு குடும்பத்திற்கும் நெருக்கமான சிலரிடம் விசாரித்ததோடு, நண்பர்கள் மூலமும் விசாரிக்க, அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் பூரணி சொன்னது அனைத்தும் உண்மையென்று தெரிய, அவளுக்கு நன்றியுரைத்து மீதியைத் தாங்கள் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அனுப்பினார்கள். எதற்கும் மறுமுறை விசாரணை ஒன்றை நடத்தி அதிலும் பூரணி சொன்னது ஊர்ஜிதமாக, காலையிலேயே திருமணத்தை நிறுத்திவிட்டதாக போன் செய்துவிட்டார்.