- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
25
அவனைக் கண்டதில் கயலுக்குள் உதறல். ‘எந்த தைரியத்துல வீட்டுக்கே வர்றாங்க. வெளியே பண்ற டார்ச்சர் பத்தாதா.’ அவனின் மெல்லிய புன்னகை அவளை எரிச்சல்படுத்தியது.
வீட்டினுள் அறிமுகமில்லாதவரை விட்டதில்லையாதலால் தமிழரசி தயங்க, இளங்கதிரோ, “வாங்க பிரகாஷ்” என்றான். அன்பு சொன்னதை வைத்து நல்லவனாக நினைத்தாலும் எந்தளவு என்று தெரியாத குழப்பத்திலேயே இருந்தான். அவனை தவறாகவும் நினைக்கத் தோன்றவில்லை கதிருக்கு.
‘ஓ... இவன் பெயர் பிரகாஷா. பெயர் ஓகே. பட் இவன்?’ முகம் கோணலாய் போக... அவனோ கயல்விழி புறம் திரும்பவேயில்லை. ‘அட பார்றா நல்லவனை!’ மனம் கேலி செய்ய... அவளுக்கே தன் மைண்ட் வாய்ஸ் வித்தியாசமாகப்பட்டது. தன் அண்ணன் வந்துவிட்டான் என்ற எண்ணமே அவளை தன் சிறுவயதிற்கு இட்டுச் சென்றிருந்ததோ!
தமிழரசி காப்பி எடுத்துவரச் சொன்னதும் கிச்சன் சென்றவளுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கத் தோணவில்லை. அண்ணன் வந்த சந்தோஷம் மட்டுமே அவளிடம். டீ கொடுத்ததும் தங்களுடன் அமரச்சொன்ன அத்தையிடம், “நீங்க பேசுங்க அத்தை. அண்ணன் வந்ததை என் ஃப்ரண்ட்கிட்ட சொல்லணும்” என்று போனுடன் நகர்ந்தாள்.
“சமையல் பண்ணலையா கயல்?” என்றார் தமிழரசி.
“ஸ்... மறந்துட்டேன் அத்தை. இதோ பேசிக்கிட்டே சமையலை முடிச்சிருறேன்” என்றாள்.
தன்னை யாரென்று அறிமுகப்படுத்திய பிரகாஷ், அவரிடம் பேச வேண்டியதைப் பேசி, இளநாதனிடமும் பேசி முடித்து அரை மணிநேரத்திற்கெல்லாம் கிளம்பி வெளியே செல்லுமுன் கயலைப் பார்த்தான். அவளோ முகம் முழுக்கப் பரவசத்துடன் தன்னை மறந்து அண்ணன் புகழ் பாடிக்கொண்டிருக்க, அதைக்கண்டு புன்னகை வந்தபோதும் மெல்லியதாக வேதனையும் படர்ந்தது.
‘என் தாய்க்காகத்தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். இன்னைக்கு நீ மட்டும்தான் எனக்குன்னு இருக்கேன் கயல். என் ஆசை நிறைவேறாது தெரிந்தும் என் மனசு மாறமாட்டேன்னுது. என்னை உறவாக ஏற்றார்களோ இல்லையோ, சக மனிதனாக ஏற்றுக்கொண்டதே பெரியதாகத் தோணுது. சட்டென்று மன்னிக்கும் தப்பையா என் குடும்பம் செய்திருக்கு. நான் யார்னு தெரிந்தால் என்னை என்ன செய்வ கயல்? கழுத்தைப்பிடித்து தள்ளிருவியா? இல்ல முகத்துல முழிக்காத சொல்வியா? நீ எது செய்தாலும் தாங்கிக்கிறேன் கயல். என்னை மட்டும் வேண்டாம் சொல்லிராத. என்னைப் புரிஞ்சிக்கோ கயல்!’ மனம் அவளுடன் பேச, அவளோ இவன் இருப்பதையே மறந்திருந்தாள்.
பிரகாஷின் பார்வை போன இடம் பார்த்த இளங்கதிர் அர்த்தம் புரிந்து யோசனையிலாழ்ந்தான். அவனது நிறைவேறாத ஆசை. அதை எப்படி ஏற்றுக்கொள்வானோ என்றிருந்தது. ‘நீ பிறந்தயிடம் தப்பாகிருச்சி பிரகாஷ். என் குடும்பம் அனுபவித்த வலிக்குக் காரணமானவன் பையனை, என் தங்கை எப்படி ஏற்றுக்கொள்வாள்?’
“பிரகாஷ்!” கதிரின் குரலில் சிறிது தடுமாறி, “நான் வர்றேன்” என்று செல்ல... தானும் சொல்லிக் கிளம்பினான் கதிர்.
வீட்டினுள் நுழைந்தவனுக்கு காமாட்சி இல்லையென்பது புரிந்த நிமிடம் மனைவியைத் தேட அவளோ மதிய சமையல் முடித்து கட்டிலில் படுத்துக் கண்மூடியிருந்தாள்.
சட்டையைக் கழட்டி பனியனைப் பின்புறம் சற்று இறக்கிவிட்டு அவளருகில் நெருங்கி படுத்து “மங்கை” என்றழைத்தான்.
இதுவரையில்லா அந்த உருகல் குரலில், தன் பெயரின் வித்தியாசம் தனக்கே புதிதாய்த் தெரிய, கண்திறந்து கணவன் முகம் கண்டவள், அக்கண்கள் சொல்லும் சேதி தெரியாமல் குழம்பினாள். அக்கண்கள் சற்று வசீகரமாய்த் தோன்றியதோ!
மனைவியின் குழப்ப முகம் பார்த்து, “என்ன அப்படிப் பார்க்கிற?” என்றான்.
“ஏன் உங்க குரல் ஒரு மாதிரியிருக்கு?”
“எப்பவும் போலதான் இருக்கு” என்றவன் குரல் கிசுகிசுப்பாய் வந்தது.
“இல்ல ஏதோ சேஞ்ச் தெரியுது.”
“ஷப்பா தெரிஞ்சிருச்சா” என புன்னகைத்து அணைத்துப் படுக்க, அவன் தொடுகையின் வித்தியாசம் உணர்ந்து தன் மேல் கிடந்த கையை விலக்க முயற்சித்து முடியாமல் போக, உடலின் நரம்புகளனைத்தும் தன்னுள் புது வர்ணம் பூச, இனம்புரியா உணர்வொன்று அவளை ஆட்கொண்டது.
மனைவியின் பார்வையிலிருந்த மாற்றம் அவனைக் கிறங்கடிக்க, “மங்கை” என்று கன்னத்தில் முத்தமிட்டு “ஆர் யூ ரெடி பேபி” என்றான்.
திறந்திருந்த கண்கள் சம்மதிப்பாய் மூடிய சமயம் மனதிற்குள் ஏதோ நெருடல் வர கண்திறந்து, “நோ” என்றாள்.
“ஏன்மா?”
“இல்ல சொல்லத் தெரியல. இப்ப வேண்டாமே!”
“எனக்கு வேணுமே.”
“இதெல்லாம் முறையா நடக்கணும்ங்க. கண்ட நேரத்துல... அதுவுமில்லாம கணவன் மனைவி உறவு இருட்டுல தொடங்கி இருட்டுல முடியுறது குடும்பத்திற்கும் நல்லதுன்னு படிச்சிருக்கேன்.”
“ஹ்ம்... அப்புறம்?”
“அப்புறம் என்ன.. சாப்பிடப் போகலாம் வாங்க.”
“ம்.. ஓகே. பட், ஒரே ஒரு கிஸ்.”
“நானா?”
“லூசு உன்கிட்ட கேட்காம, நீ மட்டும்தான் தர முடியும். அப்புறம் நம்ம பிள்ளைங்க.”
‘ஹான்!’ என வாய்திறந்து “நான் மாட்டேன்” என்றாள்.
“அப்ப போ நான் குடுக்கிறேன்” என்று முகம் பிடித்து அழுந்த முத்தமிட்டு “இது ஓகே ஏர்போர்ட்” என்று அவள் அதிலிருந்து வெளிவரும் முன் அங்கிருந்து ஓட...
“ஏய் உங்களை...” செல்லக் கோபத்துடன் அவனை விரட்ட எழுந்தபோது பளிச்சென்று தெரிந்தது அம்மச்சம். “ஒரு நிமிஷம் நில்லுங்க” என்று அவனை நிறுத்த, அவனோ “நான் மாட்டேன்” என்றவாறு ஹாலுக்கு செல்ல. “சீரியஸா சொல்றேன் ப்ளீஸ் நில்லுங்க” என்று கணவனை நெருங்கினாள்.
‘ஹையா என் பொண்டாட்டி கண்டுபிடிச்சிட்டா’ என சந்தோஷத்தில் திரும்பினான்.
“அப்படியே நில்லுங்க.” கணவனருகில் வந்து மச்சம் தொட்டு “இ..இ...”
‘வாவ்! சூப்பர்டா கண்டுபிடிச்சிட்டியே மங்கை. ஆமா நான்தான் உன் இளா அத்தான். உன் உயிர் தேடிய தேடல் நான்தான்’ என சொல்ல வாயெடுக்கையில், “இதை நான் ரொம்ப பக்கத்துல பார்த்திருக்கேன்” என்றதும் அவனுக்கு சப்பென்றானது.
“ரொம்ப நெருங்கிப் பழகின யாரோடதோ மாதிரியிருக்கு. சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேன்னுது.”
“ஒருவேளை உன் இளா அத்தானோடதா இருக்குமோ?”
“அட ஆமாங்க. இளா அத்தானுக்கு இப்படி ஒரு மச்சம் உண்டு. உங்களுக்கும் அதே இடத்துல. என்ன ஒரு ஒற்றுமை பாருங்களேன்” என்றாள் ஆச்சர்யமாக.
தலையிலடிக்காத குறையாக அவளை ஒரு பார்வை பார்த்தான்.
“என்ன பார்வை ஒரு மாதிரி நக்கலாயிருக்கு?”
“ஹி..ஹி நீ எவ்வளவு புத்திசாலின்னு பார்க்கிறேன் மொழி.”
“ப்ச்... விளையாடாதீங்க. இந்த மாதிரி மச்சம் ரொம்ப ராசின்னு அம்மாவும் அத்தையும் சொல்வாங்க. ஒரே ஒரு வருத்தம் என்னன்னா, என் அத்தையோட ஆசையை நிறைவேற்ற முடியாமல் போயிருச்சேன்னுதான்.”
“புரியல?”
“நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது. இளா அத்தானைக் கல்யாணம் பண்ணினா எப்பவும் என்னோடவே இருக்கலாம்னு சொன்னாங்க.”
அவனுக்கும் அன்றைய ஞாபகம் வந்தது. அன்று அவர்கள் பேசியதையும், மங்கை நகர்ந்ததும், பெரியவங்களானதும் ஒருத்தொருக்கொருத்தர் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணலாம் என்று தாயும் அத்தையும் பேசியதைக் கேட்டிருந்தாலும், தான் மறந்ததை அவள் நினைவு வைத்திருக்கிறாளே என்ற எண்ணத்தில், அவள் மீதான காதல் அவள்பால் உன்மத்தம் கொள்ள வைத்ததோ!
“நான் உன் இளா அத்தான்தான் மங்கை.” என்னைப் புரிந்துகொள்ளேன் என்ற பாவனை அவன் முகத்தில்.
“ம்கூம்.. நீங்க கதிர் அத்தான்தான். டைமாகுது சாப்பிட வாங்க. எனக்கும் பசிக்குது” என்று கிச்சன் சென்று மதிய உணவை எடுத்து ஹாலுக்கு வர, கதவு தட்டும் ஓசை கேட்டு கதிர் கதவைத் திறந்தான்.
கார்த்திக்கும், அன்புவும் அங்கு நிற்க அவர்களை உள்ளே வரச்சொல்ல, ‘சொல்லியாச்சா’ என்பதாய் அன்பு கதிரைக் கேட்க, இல்லையென்பதாய் மறுத்துத் தலையசைத்தான் அவன்.
“மொழி இன்னும் இரண்டு தட்டு எடுத்து வை” என்றதும் கார்த்திக் மறுக்க... யாரென்று தெரியாமலே, “சாப்பிடுங்க சார்” என்ற திருமொழியின் வார்த்தையை மறுக்க முடியாது சாப்பிட உட்கார்ந்தான். அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை ஓரம் கட்டி திருமொழி வர,
“மங்கை இவர் சிபிஐ ஆபீஸர். முன்னாடி வந்தவங்க மாதிரி கிடையாது. ரொம்ப நல்லவர். எந்த கேஸையும் நேர்மையா டீல் பண்ணுவார்ன்றதை நீ நம்பணும். என்னமா? கேஸ் அது இதுன்றானேன்னு பார்க்கிறியா?”
“எங்க வீட்டு கேஸா?”
“நம்ம வீட்டு கேஸ் ஓகே.” மனைவியின் ‘ம்’ என்ற தலையாட்டலில் “ஹைதராபாத்ல சைன் வாங்கினது இதுக்குத்தான்” என்றான் மனைவியிடம்.
'எல்லாம் தனக்காகத்தானா! என் லட்சியம் ஜெயிக்க என் கணவன் பாடுபடுகிறானா? எனக்காகத்தான் இங்கு வந்ததா? ஏன் என்னிடம் சொல்லவில்லை?' கண்கள் கணவனையே அசையாது பார்த்திருக்க, என்னவென்பதாகப் புருவம் உயர்த்தியவனிடம் சின்னதாக வெட்கப்புன்னகை அளித்தாள்.