- Joined
- Aug 31, 2024
- Messages
- 975
- Thread Author
- #1
23
குளித்து கீழே செல்ல அங்கு யாருமில்லை. அறை முழுக்க அம்மாஆச்சி என்று வீடு முழுவதும் தேடியும் எங்குமில்லை என்றதும் மீனலோஜினி வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்து வேகமாக சரத்திடம் ஓடியவள், அவனை எப்படி எழுப்புவதென்று திணறி, தன் தயக்கத்தை உதறி, “சரத்.. சரத் கொஞ்சம் எழுந்திருங்களேன்” என்றாள்.
அவளது அழைப்பில் கண்விழித்தவன் வேகமாக எழுந்து அவளிடம் “என்னாச்சிமா? ஏன் ஒரு மாதிரி பதற்றமா இருக்க? லோஜிம்மாவுக்கு என்ன?” என்றான் அவளின் பதற்றத்திற்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்றறிந்து.
“அம்..அம்மாஆச்சியை காணோம்ங்க. வீடு புல்லா சுத்திலும் தேடிட்டேன் எங்கேயும் இல்ல. எனக்கு பயமாயிருக்கு. அவங்களுக்காகத்தான இந்த கல்யாணம். முதல் ராத்திரி எல்லாம்” என்று மொத்தமாக உளற...
“ராசீ” என சத்தமாக அழைத்து, “என்ன சொன்ன?” என கேட்டான்.
“என்னது? என்ன சொன்னேன் கேட்குறீங்க?” என புரியாமல் விழித்தவளிடம்...
“கல்யாணம் லோஜிம்மாவுக்காகன்னு தெரியும். அதென்ன பர்ஸ்ட் நைட் அவங்களுக்காகன்ற. எனக்கு உண்மையைச் சொல்லு?” என்று நின்றான்.
பதற்றத்தில் தான் உளறியிருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்து திருதிருவென விழிக்க..
“உன்னை! வந்து பார்த்துக்கறேன்” என்று அவசர அவசரமாக குளித்து கிளம்பியவனை வழிமறித்து, “நானும் வர்றேன்” என்றாள் தலை கவிழ்ந்தவாறு.
“நீ எதுக்கு தேவையில்லை” என்றதும் ராசிக்கு கண்கள் கலங்க... அதைப் பொறுக்காதவன் “ப்ச்.. ராசி ஏன் கண்கலங்குது? சீக்கிரம் கிளம்பு போகலாம்” என்று இருவரும் கீழே வந்து கதவு திறக்க, அங்கே லோஜி, பாஸ்கர், சாந்தி நிற்க, ராசி வேகமாக ஓடிச்சென்று அழுதபடி மீனலோஜினியைக் கட்டிக் கொண்டாள்.
“என்னாச்சிமா? ஏன் இந்த அழுகை?”
“என்னைவிட்டு நீங்க எங்க போனீங்க? நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா.”
“பாப்பா நீ இன்னும் குழந்தையில்ல” என்று பேத்தியை கடிய...
“அதனாலதான் பாப்பா சொல்றீங்களா? பாப்பான்னா குழந்தை தான?” என எதிர் கேள்வி கேட்டாள்.
“இந்த குழந்தைக்கு கல்யாணம் ஆகிருச்சேடா. இப்ப என்ன பண்ணலாம்?” என்று அவளின் முகம் வருட,
“மூச்... சத்தமா சொல்லாதீங்க. அப்புறம் குழந்தை திருமணம் சட்டப்படி தப்புன்னு போலீஸ் பிடிச்சிக்கப்போகுது” என்றாள் மெதுவான குரலில்.
“உன்னை... சரி காஃபி போட்டியா? வேலைக்காரப் பொண்ணு வந்தாளா?”
“இல்ல அம்மாஆச்சி. வீடு பூட்டியிருக்குன்னு போயிட்டாங்க போல.”
“சரி நீ இரு. நான் காஃபி போடுறேன் என்றவரை தடுத்து தானே சென்றாள்.
‘அடிப்பாவி! இவ்வளவு நேரம் இவளடிச்ச கூத்தென்ன. லோஜிம்மாவைப் பார்த்ததும் டோட்டலா சேஞ்சாகிட்டாளே’ என நினைத்தவன் அதில் சந்தேகப்பட்டு அவளை கவனித்திருந்தால் அவளின் மாற்றம் சரத்திற்கு சீக்கிரத்திலேயே தெரிந்திருக்கும்.
சில நிமிடங்களில் அனைவரிடமும் காஃபி நீட்ட சரத்தோ, “எனக்கு பூஸ்ட்தான் வேணும்” என்றான் சட்டமாக. இரவு பூஸ்ட் கொடுத்ததை கிண்டலடிக்கிறான் என்பதை உணர்ந்து முறைக்க... “பூஸ்ட் தான் என்னோட எனர்ஜி ட்ரிங்க்” என்றபடி ராசியைப் பார்த்து கண்ணடித்தான்.
அதில் உண்மையிலேயே வெட்கம் வர, “சும்மா கேலி பண்ணாதீங்க” என்று சிணுங்கியபடி உள்ளே சென்றாள்.
ராசியின் பின்னால் சென்ற லோஜி அவள் முகம் காண, “லோஜி என் முகத்துல என்ன ஆராய்ச்சி? எங்களுக்குள்ள எதாவது நடந்துச்சா, இல்லையான்னா? நீங்க சொன்னது தான் பழசை மறந்துட்டு புதுசா வாழ ஆரம்பிச்சிருக்கேன்.”
“எனக்காக எதையும் மறைச்சி பொய் சொல்லலையே பாப்பா?”
“இல்ல லோஜி. உண்மையைத்தான் சொல்றேன்” என்றாள்.
இதுதான் நேற்று ராசியை அந்த நிலைக்குத் தள்ளியது. நடிக்கலாம் என்று சரத்திடம் சொன்னால் மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொள்வான் தான். ஆனால், லோஜியை ஏமாற்றப் பிடிக்காமல் தன்னைத்தானே ஏமாற்ற முடிவு செய்தாள். அதில் தன் கணவனையும் சேர்த்தே ஏமாற்றுகிறோம் என்பதை ஏனோ மறந்திருந்தாள் ராசி.
“சரத் ரொம்ப நல்ல பையன்டா. அன்னைக்கு...”
“ப்ச்.. நான்தான் பழசே வேண்டாம் சொல்றேனே அம்மாஆச்சி. இப்ப நான் ஹேப்பியா இருக்கேன். மீறி சந்தேகம்னா அதைத் தீர்க்க எங்க ரூம்லயிருந்து லைவ் டெலிகாஸ்ட்லாம் பண்ணமுடியாது சொல்லிட்டேன்” என்று கண்ணடிக்க...
“அடி கொழுப்பு பிடிச்சவளே! சேட்டை உனக்கு. நீ சந்தோஷமா இருக்கிறல்லமா. எனக்கு அதுதான் வேணும்” என்றார் மனதார.
‘நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஃப்ரண்ட் அம்மாஆச்சி” என்றவள் ‘எனக்கும் உங்க சந்தோஷம் மட்டும்தான் வேணும்’ என்றாள் மனதினுள். லோஜி அங்கிருந்து நகர, அதுவரை இறுக்கிப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டு வேலையைப் பார்த்தாள்.
மறுவீடு சரத் வீட்டிலேயே முடித்துக்கொள்ள, பாஸ்கரும், சாந்தியும் என்ன தடுத்தும் பிடிவாதமாக சொந்த ஊருக்கே சென்றார்கள்.
அன்று லோஜிக்கு டாக்டரிடமிருந்து செக்கப் முடித்து வெளியே வருகையில் ரோகிணியைப் பார்க்க அவரோ இவர்களைக் கவனிக்கவில்லை. “அம்மாஆச்சி இங்கேயே உட்காருங்க ரோகிணி அம்மா அங்க இருக்காங்க. உடம்புக்கு என்னன்னு பார்த்துட்டு வந்திடுறேன். “
இல்லை. வேண்டாமென்று மீனலோஜினி மறுப்பதற்குள் ரோகிணியைப் பின் தொடர்ந்து இரண்டாவது தளத்திலுள்ள அறைக்குள் அவர் செல்லும்முன் “அம்மா” என்றழைத்திருந்தாள்.
திரும்பாமலேயே யார் என்று அறிந்தவருக்கு அவள் உள்ளே வந்துவிடக்கூடாதே என்ற பயம்வர திரும்பி “ராசிமா நீ எங்க இங்க?” என்றாள்.
“இங்க யார் இருக்காங்க? பக்கத்து வீட்ல யாராவது அட்மிட்டாகியிருக்காங்களா? கிரி எங்கம்மா வீட்டுக்கே வர்றதில்ல? காலேஜ் போயிருக்கானா?”
அனைத்துக்கும் மறுப்பாக தலையசைத்து, “கிரிக்கு செமஸ்டர்” என்றார்.
“ஓ.. உங்க ரெண்டுபேருக்கும் எதுவும் இல்லைன்னா.. உள்ள யாரு?” என்ற நினைத்தவளுக்கு உண்மை புரிய, என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தாலும், எதுவும் கேட்கவும் தோன்றவில்லை.
அவளைப் புரிந்து, “அவருக்கு ஸ்ட்ரோக் வந்து கைகாலெல்லாம் வேலை செய்யலை. இப்ப பிஸியோதெரபி கூட்டிட்டு வந்தேன். எல்லாம் உனக்கு செய்த பாவம்தான்மா அவரை இப்படி முடக்கிப் போட்டிருச்சி. இது அவருக்கான தண்டனை கூட.”
‘ஓ...’ என்றவளுக்கு தன் அப்பா என்ற எண்ணம் வரவில்லை. தெரிந்த ஒருவரைப்பற்றி கேள்விப்படுகிறோம் என்றுதான் இருந்தது. அநேகமா தன்னைத்தவிர அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பது அவளின் யூகம். அதுவும் சரியே சரத் வீடு பால்காய்ச்சிய முந்தின தினம் இரவுதான் நடந்தது. மருத்துவமனையில் இருந்து சரத் வீட்டிற்கு வர லேட்டானதற்கு காரணம் அதுவே. ராசியிடம் சொல்ல வேண்டாமென்று லோஜி சொன்னதும் அனைவரும் ஆமோதித்தனர்.
“அவர் பாவம் செய்தார் சரி. நீங்க என்ன பாவம் செஞ்சீங்கம்மா? அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதைத் தவிர. இதுல தண்டனைன்னா அவரை விட உங்களுக்குத்தான்” என்றதும் அவளை யோசனையாய் பார்த்த ரோகிணியிடம்... “என்ன தண்டனைன்னு யோசிக்கிறீங்களா? அவருக்கு உடம்பு துடைக்கிறதுல ஆரம்பிச்சி எல்லாமே செய்யுறதுக்கு பேரென்னம்மா? இந்த ஸ்டேஜ்ல இருக்கிறவங்களோட கோவதாபங்களை சகிச்சி மேனேஜ் பண்றதுக்கே பெரும்பாடுபடணும்.”
“ராசிமா ஏன் இப்படிப் பேசுற. என்னயிருந்தாலும் அவர் என் புருஷன்மா. அவருக்கு செய்யுறதை தண்டனையா, சுமையான்னு பார்க்க முடியுமா சொல்லு. இது வாழ்க்கைமா. விளையாட்டு இல்ல. பழிக்குப் பழி வாங்குறேன்னு கிளம்ப. இது எனக்குத் தண்டனைன்னு நீ நினைச்சா, அதையும் சுகமா ஏத்துக்குறேன். சரத்கு எதாவது ஒண்ணுன்னா சும்மா வேடிக்கை பார்ப்பியா?”
“அம்மா சரத்தும் இவரும் ஒண்ணா? சரத்தோட இவரை கம்பேர் பண்ணாதீங்க.”
“கண்டிப்பா நான் கம்பேர் பண்ணலை. ஒரு ஒய்ஃபோட கடமையை நினைவுபடுத்துறேன். சரி உள்ள வர்றியா?”
“இல்ல நான் வரல. சாரிம்மா நான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா? “
“இல்லமா உன்னைப் புரியுது. தப்புக்கு தண்டனை சரி. அது ஏன் மத்தவங்களை கஷ்டப்படுத்தணும்னு நினைக்குற. அம்மா எங்க?”
“கீழ உட்கார்ந்திருக்காங்க. நான் கிளம்பறேன் கிரியைக் கேட்டதா சொல்லுங்க” என்றபடி கிளம்ப... அவள் பேசியதையெல்லாம் கேட்டிருந்த சிவராமனுக்கோ கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. மகளின் மறுப்பில் தான் இன்னும் உயிரோடு இருக்கிறோமே என்ற எண்ணம் வந்தது.
நாட்கள் அதன் வேகத்தில் ஓட, காதலில்லாத ஒரு கடமை மனைவியாக இருந்த ராசிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தன்மேல் உள்ள கோவம் சின்னச்சின்ன வார்த்தைகளாக மற்றவர்களையும் தாக்கத் தொடங்கியது. மனதிற்குள் போட்டுப் போட்டு புழுங்கிய விஷயங்கள் வார்த்தைகளாக வெளிவர, அதிலும் மாட்டியது சரத்தான்.
திருமணம் முடிந்து வாழ்க்கையை ஆரம்பித்த மறுநாளே, முதலிரவு லோஜிக்காக என்றதும் அந்த சூழ்நிலையில் கேட்காமல் விட்டவன் இரவில் அதைக்கேட்க சரியான பதிலில்லை என்றதும், “இனி உனக்கும் எனக்கும் சரிவராது. நீயா என்னை உணர்றது வரை நாம தனித்தனியாகத்தான் இருக்கப் போகிறோம்” என்றான்.
கணவனின் தனித்தனி என்ற வார்த்தையில் அவனை பாவமாய் பார்க்க, “என்ன லுக்கெல்லாம் பலமாயிருக்கு?” என்றான் கேலியாய்.
“மாமா” என்றாள் கண்களில் கெஞ்சலுடன்.
“ஹேய்! இப்ப என்ன சொல்லி கூப்பிட்ட?” என்றான் பரபரப்பாய்.
“மாமா ப்ளீஸ். நான் போகப்போக என்னை மாத்திக்கிறேன்” என்று வலுக்கட்டாயமாக அவனிடம் இழைந்து அவனையும் தடுமாற வைத்து தங்கள் தாம்பத்தியத்தை தொடர்கதை ஆக்கினாள். தினமும் இரவு கணவனின் உறக்கத்தை உறுதி செய்தவள் கண்கள் கண்ணீரில் கரைய, உடலோ அருவருத்து எரிந்தது. அதில் சரத் மேல் அவளுக்குள்ள அன்பும், சொல்லவில்லை என்றாலும் அவனுக்கு தன்மேலுள்ள அன்பும் மறந்து மறைந்தது.
கணவனேயானாலும் உறவிற்காக அழைப்பது அவளை கூசச்செய்தது. லோஜியின் முகம் கண்முன் தோன்ற அவருக்காக என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். என்னதான் சமாதானம் சொன்னாலும் அவள் மனம் உள்ளுக்குள் உடைந்து சிதறிக் கொண்டிருந்தது.
இதை சரிசெய்ய வேண்டியவனோ, அவளின் ‘மாமா ப்ளீஸ்’ என்ற வார்த்தையில் மயங்கி அந்த மயக்கத்திலேயே என்ன நடக்கிறது என்பதை அறியாமல் விட்டான். அவன் அறிந்த போதோ எல்லாம் தன்னை மீறிச் சென்றிருந்தது.
திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் எதுவோ ஒன்று குறைவதாக உணர்ந்தவன் அப்பொழுதுதான் கவனித்தான். இரவில் தன்னைத் தேடும் மனைவி மறந்தும் பகலில் கண்டுகொள்வதில்லை என்று. தான் அவளை வம்பிழுத்த போதும் முதலில் நாசூக்காக விலகியவள், தற்பொழுது சற்று எரிச்சலில் அவன் கையை தட்டிவிட ஆரம்பித்திருந்தாள். மீறி அவன் சில்மிஷங்கள் செய்தால், “கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? எப்பப்பாரு என்னைத் தொட்டு கடுப்பைக் கிளப்பிக்கிட்டு” என்று எரிந்து விழ, அவனின் பார்வை ஆராய்ச்சியாய் அவள்மேல் படிந்தது.
இரவில் தற்செயலாக எழுந்தவன் முட்டியைக் கட்டிக்கொண்டு கண்களில் நீருடன் சுவற்றை வெறித்தாற் போல் அமர்ந்திருந்தவளைக் கண்டு அதிர்ந்துதான் போனான். என்ன யோசித்தும் அதற்கான காரணம்தான் புரியவில்லை.