- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
21
“ஸ்ரீராம் நில்லு எங்க போயிட்டு வர்ற?”
“இதென்ன புதுசா கேள்விலாம் கேட்குற?”
“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு? யார் அந்தப்பொண்ணு?”
‘எப்படித் தெரிந்தது?’ சின்னதான உதறல் அவனுள் வர, “எந்தப்பொண்ணு?” என்றான்.
“நடிக்காதடா வாடிப்பட்டியில் ஒரு பொண்ணை வழிமறிச்சிப் பேசிட்டிருந்தியாமே? தெரிஞ்ச பையன் ஒருத்தன் சொன்னான். உனக்கு அங்க என்ன வேலை? யார் அந்தப்பொண்ணு? உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?”
“யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல. என்கிட்ட கேள்வி கேட்கிற உரிமை என் அம்மாவுக்கு மட்டுமே இருக்கு. இருந்தாலும் சொல்றேன். என் ஃப்ரண்ட் அப்பு தெரியும்ல... தெரிஞ்சிருக்கும் என்னைச்சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியாமலா இருப்பீங்க. அப்புவோட சிஸ்டர்தான் அவள். எதோ பேமிலி ப்ராப்ளம் போல. அதான் மறிச்சி நின்னு பேச்சிக்கொடுத்தான். நான் கூட நின்னேன்.” அண்ணனின் நம்பாத பாவனையில் “உன்னை நம்பவைக்கணும்னு எனக்கெந்த அவசியமும் கிடையாது” என்றான் முகத்திலடித்தபடி.
“நான் உனக்கு மூத்தவன் அந்த நினைவிருக்கட்டும்.”
“இருக்கட்டுமே! அதுக்காக என்ன செய்யலாம்ன்ற?”
“பொண்ணு கிண்ணுன்னு எவ பின்னாடியாவது சுத்தி இழுத்துட்டு வந்திராத. உனக்குச் சென்னையிலயே பெரிய பிசினஸ்மேன் பொண்ணு பார்த்து வச்சிருக்கேன். பொண்ணுக்குன்னு தனி கம்பெனி இரண்டு இருக்கு. உன் போட்டோ பார்த்து பிடிச்சிருச்சி சொல்லிருச்சி. நீ சொன்ன பொண்ணு அவன் தங்கையோ, இல்ல உன் காதலியோ, அதைப்பற்றின கவலையில்ல. எதுவாயிருந்தாலும் நான் சொல்ற பொண்ணைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்.”
“ஹா... அப்புறம்? ஆர்டர்லாம் பலமாயிருக்கு. உன்னோட ஆட்டத்துக்கெல்லாம் நான் சரிப்படமாட்டேன் மிஸ்டர்.ஜெயராம். சாரி எம்.எல்.ஏ ஜெயராம்” என்றான் நக்கலாக.
ஆம்! கார்மேகம்-செல்வரசி தம்பதியின் கடைக்குட்டிதான் ஸ்ரீராம் எனப்பட்ட பிரகாஷ். புருஷன் குடும்பத்து சம்பந்தமே இல்லாமல் தாய்வழியில் விட்டு வளர்த்த பையன். அனைவரும் விடுமுறைக்கு உறவுகளைத் தேடிச் செல்கையில் பிரகாஷ் மட்டும் விடுமுறைக்கு தாயைத் தேடி வருவான். செல்வரசியுடனே இருப்பதால் தாய் சொல்லித்தரும் நல்லது கெட்டது புரிந்து நடப்பவன்.
பெரியப்பா அருணாச்சலம் வீடு செல்லும் பொழுதுதான், தன் மாமா வீட்டிற்கு வரும் கயல்விழி அறிமுகம். அதிகம் யாருடனும் பேசியதில்லை என்றாலும், அவர்களின் விளையாட்டை ரசிப்பது சண்டையை விலக்குவது என இருப்பான். பெண்களுடன் பிறக்காததால் அதிகம் ஒட்டாமலும் விலகாமலும் இருப்பவன் பிரகாஷ்.
பி.சி.ஏ சென்னையில் முடித்து எம்.பி.ஏ படிக்க யு.எஸ் சென்றவன்தான் படிப்பு முடியும் வரை தமிழ்நாடு வரவேயில்லை. அங்கேயே வேலையில் சேர்ந்து அப்படியே நண்பர் சிலருடன் கம்பெனி ஆரம்பிக்க ப்ளான் செய்து அதற்குமுன் தாயை ஒருமுறை பார்க்கலாமென்று இந்தியா வந்திருந்த பொழுது, தற்செயலாக அப்புவைப் பார்த்ததில் அப்பு தன் வீட்டிற்கு அழைக்க, யு.எஸ் செல்லுமுன் வருவதாய் சொல்லியிருந்தான்.
வெளிநாடு செல்ல ஒரு வாரம் இருக்கையில் வாடிப்பட்டி வந்தவன் அப்புவிற்கு போன் செய்து வீடு எங்கென்று விசாரித்தான்.
“நீ நிற்கிற கடைக்குப் பக்கத்துல ஒரு சின்ன ரோடு வருதா?”
“ஆமாடா.”
“அதுல நுழைஞ்சி நேரே வந்தா லெப்ட்ல ரோடு கட்டாகும். அந்த ரோடு ரைட் சைட் கட்டாகும். நீ அங்க போயிராத அந்த என்ட்லயிருந்து பார்த்தா நேரே ரெண்டு வீடு இருக்கா?”
“ஆமாடா.”
“அதுல முதல் வீட்ல ஒரு பொண்ணு...”
“டேய் பார்த்துட்டேன்டா. இதோ வந்திருறேன்” என்று கட் செய்ய...
“லூசுப்பயலே! அந்தப் பொண்ணு நிற்கிறதுக்குப் பக்கத்து வீடுன்னு சொல்ல வந்தா பேச விடாம... கொஞ்ச நேரம் டீச்சர்கிட்ட சிக்கிட்டு வாடா” என்று தன் வீட்டு வாசலிலேயே சற்று மறைந்தாற்போல் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
காரை கயலின் வீட்டின் முன் நிறுத்தி இறங்கிய பிரகாஷ், “ஹாய்! அவன் எங்கமா?” என்றான்.
“அவனா.. எவன் அவன்?”
“என்னமா நீ? இப்பதான் போன் பண்ணியிருந்தேன். வீட்டை அடையாளம் சொல்லி இங்க வரச்சொன்னானே?”
“எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி? பொம்பளைங்க தனியாயிருந்தா என்ன வேணும்னா சொல்லிட்டு வருவீங்களா? இப்ப இந்த இடத்தை விட்டுப்போகல நான் அநாவசியாமா போலீஸ் போக வேண்டியிருக்கும்.”
“ஏய் என்ன பேசுற நீ? ரொம்பப் பேசின அவ்வளவுதான்” என பிரகாஷ் அவளை மிரட்ட...
“என்னடா என் வீட்டுக்கே வந்து மிரட்டுற? இன்னும் ஒரு செகண்ட் இங்க நின்னுட்டிருந்தன்னு வையி அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”
“என்னடி பண்ணுவ?” என பிரகாஷ் எகிற...
“டேய் வேண்டாம். போயிரு இல்ல...”
“டேய் அப்பு என்னடா நின்னுட்டே கனவு காணுற? ஒழுங்கா அட்ரஸ் சொல்லமாட்டியா? பாவம் அந்தப் பொண்ணு சட்டுன்னு பயந்திருச்சி” என்று அப்புவைக் கலைத்தான்.
“அப்ப டீச்சர் உன்னைத் திட்டலையா? எல்லாம் கனவா?” என்றான் எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவனாய்.
“எரும நீ என்டர்டெய்ண்மெண்ட் பண்ண என்னை அந்தப் பொண்ணுகிட்ட கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறியா? தொலைச்சிருவேன். ஏன்டா ஒழுங்கா அட்ரஸ் சொல்லல?”
“நீ எங்க என்னை முழுசா சொல்லவிட்ட. சொல்றதுக்குள்ள கட் பண்ணிட்ட. சரி பயல் கொஞ்சம் வாங்கிட்டு வரட்டுமே பார்த்தா கூலா வந்து நிற்கிற.”
“ம்... காரைவிட்டு இறங்கினதும் சின்ன மிரட்சியோட யாரோ மாதிரி பார்த்தாங்க. உன் ரிலேடிவ்னா நான் வர்றதை முன்னாடியே சொல்லியிருப்ப. இன்னார்தான்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அவங்களோட அந்த அந்நியத் தன்மையிலேயே உன் வீடு இல்லன்னு தெரிஞ்சது. உன் பெயர் சொல்லிக் கேட்டதும்தான் பக்கத்துல கைநீட்டினாங்க. சரின்னு ஒரு சாரியப் போட்டுட்டு வர்றேன். ஏன்டா இந்தப் பொழைப்பு உனக்கு?” பேசிக்கொண்டே உள்ளே சென்றவன் ஒரு மணிநேரம் கழித்து வீட்டிற்குக் கிளம்புவதாக அப்புவிடம் சொல்லி வெளியே வந்தான்.
கார் பக்கத்து வீட்டினருகில் நிற்க அப்பு செய்த வேலையால், இன்னொரு முறை மன்னிப்பு கேட்டுவிடலாமா என்றெண்ணி அந்த எண்ணத்தைக் கைவிட்டு காரில் ஏறி அமர்ந்து ரிவர்ஸ் எடுக்கையில்தான் கவனித்தான் தமிழரசியை! “பெரியம்மா!” வார்த்தை தொண்டைக்குள்ளே சிக்கியது.
எங்கோ வெளியே சென்று வீட்டிற்குள் நுழையப் போனவர் எதிரில் அப்பெண் வர இருவரும் வாங்கி வந்த எதையோ சரிபார்க்க, அவர்களறியாமல் போட்டோ எடுத்தான்.
பிரகாஷிற்கு ஆச்சர்யம் அதிர்ச்சி என்று பல கலவை அவனிடத்தில். லீவிற்கு வந்தபொழுது அவர்களை எங்கேயென்று தாயிடம் கேட்டதற்கு ‘எல்லாரும் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க’ என்றது நினைவு வந்தது.
அதேநேரம் “கயல் உள்ள போய் பார்த்துக்கலாம்” என்று தமிழரசி உச்சரிக்க... ‘காமாட்சி அத்தை பெண்ணா இவள்? துறுதுறுவென்றிருந்த பெண்ணிடம்தான் எவ்வளவு மாற்றம். ஏன் இப்படியொரு நிலை அவர்களுக்கு? தன் அடையாளத்தைத் தொலைத்து ஏதோ ஒரு மூலையில் இப்படி இருக்க என்ன காரணம்?’ தெரிந்தே ஆகவேண்டுமென்ற பிடிவாதம் அவனுள் எழுந்தது.
காரின் வேகத்தைக் கூட்டி மதுரை வந்து நேரே தாயிடம் சென்று பெரியப்பா, மாமா வீடு பற்றி விசாரிக்க, செல்வரசி தயங்கித் தடுமாற... தாயிடம் அப்புகைப்படத்தைக் காண்பித்து, “இவங்க உங்க அக்காதான?” என்றான்.
“பிரகாஷ்! அக்கா எப்படி? உயிரோட இருக்காங்களா? எங்கடா பார்த்த? பக்கத்துல யார் மங்கையா?”
“இல்லம்மா கயல்விழி.”
“அப்ப மங்கை இல்லையா?”
“எனக்கு என்ன நடந்ததுன்னு உண்மையைச் சொல்லுங்கம்மா. ஏன் அவங்க தன் அடையாளத்தை மறைச்சிட்டு வாழ்ந்திட்டிருக்காங்க? ஏன் அவங்க வீட்ல நாம இருக்கோம்?”
“கோவில்ல என்னவோ நடந்திருக்குடா. திரும்பி வரும்போது உன் சின்ன அண்ணன் பிணமா வர்றான். உங்கப்பாவுக்கு ஒரு கை வெட்டப்பட்டிருக்கு. என் அக்கா அவளோட நாத்தனார் குடும்பம்னு அன்பு ஒருத்தனைத் தவிர வேற யாரும் இல்லைன்னு சொன்னாங்க. அவனும் ரொம்பச் சின்னவன். கொள்ளி போட்டதோட சரி. இருக்கானா? இல்லையா தெரியலடா. எங்கேயோ ஓடிப்போயிட்டதா சொல்லிட்டாங்க.”
“நம்ம சைடும் இழப்புதானம்மா. அவங்க சொல்றதும் சரியாத்தான இருக்கு.”
ஹ்ம்... ஒரு விரக்தி அவரிடம். “நானும் அப்படித்தான்டா நினைச்சிருந்தேன் உன் அண்ணன் தூக்கத்துல உளறுறது வரை. ரெண்டு குடும்பத்தை வேரோட அழிச்ச பாவிங்கடா அவங்க. அந்தச் சின்னப்பையனைக் கூட என்ன செஞ்சாங்களோ தெரியல.”
“அம்மா!”
“ஆமா பிரகாஷ். எல்லாத்தையும் தாங்களே செய்ததா சொன்னான். உளறல்தான் இருந்தாலும் முழுசா என்ன நடந்ததுன்னு தெரியல. அன்னையிலிருந்துதான் உன்னை இந்த ஊருக்குச் சுத்தமா வரவிடாமல் பண்ணினேன். என்னால தூங்க முடியலடா. எப்படியிருந்த குடும்பத்தை வெறும் சொத்து பணத்துக்காக... நினைச்சாலே நெஞ்சே வெடிச்சிரும் போலயிருக்கு. இப்ப இவங்க உயிரோட இருக்கிறது தெரிஞ்சா அடுத்த நிமிஷம் என்னாகும்னே சொல்ல முடியாது.”
“நான் எதாவது செய்யணுமாம்மா?”
“நீ.. நீ கயலைக் கல்யாணம் பண்ணிக்கிறியா பிரகாஷ்?”
“அம்மா!”
“அம்மாதான்டா சொல்றேன். கயலைக் கல்யாணம் பண்ணிக்கோ. ஏன்பா வேற யாரையாவது...”
“சேச்சே... அப்படி யாரும் இல்லம்மா. ஆனா..”
“தயங்காதடா. இந்தச் சொத்தெல்லாம் அவங்களோடது. சம்பந்தமில்லாத நாம அனுபவிக்கிறோம். சம்பந்தப்பட்டவங்க ஏதோ ஒரு மூலையில, சின்ன வீட்டுக்குள்ள, நெஞ்சுல நெருப்பள்ளிக் கொட்டின மாதிரி எரியுதுடா. இந்தப் பாவத்தை எங்க போய் தீர்க்கப் போறனோன்னு ஒவ்வொரு நாளும் கடவுள்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டிருக்கேன்.”
“அம்மா ப்ளீஸ்.! கயல் உங்களுக்கு மருமகளானாதான் நீங்க நிம்மதியா இருப்பீங்கன்னா, நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்மா.”
“நிஜமாவா? நீ அவளை நல்லா பார்த்துப்பியா?”
“கண்டிப்பாம்மா.”
“கயல் தமிழக்காவோட நாத்தனார் பொண்ணுன்னு தெரிஞ்சா உன் அப்பனும் அண்ணனும் சாகடிச்சிருவாங்களே.”
“அவமேல ஒரு துரும்பு கூடப்படாம நான் பார்த்துக்கறேன்ம்மா. இந்த நிமிஷத்திலிருந்து பெரியம்மாவும், கயலும் என்னோட பாதுகாப்புல இருப்பாங்கம்மா. ஆனா, அம்மா இதுக்கு அவள் சம்மதிப்பாளா?”
“ம்... ஆமால்ல. எப்படி சம்மதிப்பா? அதுவும் அவளோட குடும்பம் அழியக் காரணமானவன் பையனை?”
தாயின் மனம் பரிதவிப்பதைத் தாங்காது, “நான் இருக்கேன்லமா. இப்ப சொல்றேன்மா, எத்தனை காலமானாலும் கயல்தான் உங்க மருமகள். அவளைத் தாண்டி எந்த பொண்ணும் என் மனைவின்ற உறவுல வரமுடியாது. இது ப்ராமிஸ்ம்மா.”
அதில் தாயின் மனம் மகிழ அவனின் நெஞ்சம் நெகிழ்ந்தது. அதன்பின் அப்புவிடம் சொல்லி, அவர்களே அறியாமல் அவர்களுக்கு முழுநேர பாதுகாப்பளித்தான்.
ஒரு வருடம் கழித்து நிஷாந்த் திருமணத்திற்கு வீட்டிலுள்ளவர்கள் செல்ல இவனோ கயலைத் தேடிச் சென்றான். அப்புவின் வீட்டிற்குச் செல்கையில் எதிரில் கயலைப் பார்த்தவன் புன்னகைக்க...
ஒரே முறை பார்த்தவனை ஞாபகமில்லாத கயல்விழி புருவம் சுருக்கிக் கேள்வியாய்ப் பார்த்துவிட்டு நகர... அவன் மனமோ எதையோ எதிர்பார்த்து ஏமாந்தாற்போலானது. அவள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதே போதுமென்று தோன்றியது.
திருமணத்தில் மங்கையைப் பார்த்ததையும், தமிழரசி உயிரோடிருப்பதை அவளிடம் சொல்ல மறந்ததையும், மகனிடமும் சொல்ல மறந்திருந்தார் செல்வரசி.