• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
20



மேலும் பத்து நாள்கள் ஓட மருமகளின் உடல்நிலையைப் பார்த்து என்னவென்று விசாரித்த விவேக்கிடம் மறைக்க மனமில்லாமல் உண்மையைச் சொன்னாள்.

சந்தோஷத்தில் அவர் துள்ளி “பாப்பா ஏன் இதை இத்தனை நாள் மறைச்சீங்க? இருமா ஸ்வீட் எடுத்துட்டு வர்றேன்” என்று மருமகளுக்கு கொடுத்து, தானும் வாயில் வைக்க... “மாமா!” என்று இடுப்பில் கைவைத்து முறைத்தவளிடம், “ஒண்ணே ஒண்ணுதான்மா.” என்றார் கெஞ்சுதலாக.

“ஒண்ணுல்லாம் கிடையாது” என்று அந்த இனிப்பில் கால் பகுதியைவிட கம்மியாக பிய்த்து கொடுத்தாள்.

“போங்க பாப்பா. நீங்களும் உங்க அத்தை மாதிரியே பண்றீங்க.” சிறு குழந்தையாய் பேசியவர் பின், “எல்லாருக்கும் சொல்லியாச்சா?” என கேட்டார்.

அதன் அர்த்தம் உணர்ந்தவள், “இல்ல மாமா. யாருக்கும் தெரியாது? யார்கிட்டயும் சொல்ல வேண்டாமே?” என்றதும், “சரிம்மா உன்னிஷ்டம்” என்றார் எப்பொழுதும் போல்.

இரண்டு நாட்கள் கழிந்திருந்த வேளையில் பள்ளி அலுவலகத்திலிருந்த சுபாவிற்கு போன் வர, எடுத்துப் பேசியவள் அதிர்ச்சியாகி பின் சுதாரித்து எந்த மருத்துவமனை என கேட்டு, உடனே தாண்டவை போனில் அழைத்து மருத்துவமனை சென்று அவசர சிகிச்சை விசாரித்து உள்ளே எட்டிப்பார்த்தவளுக்கு, உடல் முழுவதும் ட்யூப்கள் மாட்டப்பட்டு, செயற்கை சுவாசத்தின் துணையுடன் படுத்திருந்த மாமனார் கண்ணில் பட வந்த கண்ணீரை துடைக்க கூட இயலாது செய்வதறியாது நின்றிருந்தாள். பின் அதிலிருந்து தன்னை மீட்டெடுத்து, சிகிச்சை கொடுத்து வெளியே வந்த டாக்டரிடம் விசாரித்தாள்.

“ஹார்ட் அட்டாக்மா. சரியான நேரத்துல அட்மிட் பண்ணியதால அவரோட உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்றார்.

அந்த வார்த்தை சுபாவின் இதயத்தைத் துளைத்தது. ‘ஹார்ட் அட்டாக்கா எப்படி?’ தனக்கான ஒரே உறவும் மருத்துவமனையில் இருக்கவும் மனம் சோர்ந்தபடி அமர்ந்தவள், “அத்தை... அத்தைகிட்ட இதை எப்படி.. தாங்கமாட்டாங்களே மாமா! நான் எப்படி சொல்வேன்? போ...போன்... போன் எங்க வச்சேன்?” வந்த வேகத்தில் அனைத்தையும் காரிலேயே விட்டுவர, பின்னால் வந்த தாண்டவ் போனை வைத்திருந்தான்.

சுபாவின் அவஸ்தையை உணர்ந்து, “இந்தாங்க பாப்பா. நான் அப்பாவுக்கும், அண்ணனுக்கும் சொல்லிட்டேன். இப்ப வந்திருவாங்க. ஆனா, மாப்பிள்ளைக்கு போன் பண்ணல? நீங்க பண்றீங்களா?”

“குடுங்கண்ணா” என்று வாங்கி பெங்களுர் வீட்டு நம்பருக்குப் போட்டவள் அங்கு எடுக்கவில்லை என்றதும், கணவனுக்கு அழைக்க, ஏற்கனவே வந்த போனில் அதிர்ச்சியிலிருந்த ஜீவானந்த், சீக்கிரம் வேலையை முடிக்க வேண்டிய அவசரத்திலிருந்ததால், கைபேசி முகப்பு பார்க்காமல் ஆன் செய்து “ஹலோ” சொன்னான்.

நீண்ட நாட்கள் கழித்து கணவனின் குரல் கேட்டவளுக்கு, நாள்களா? இல்லை எத்தனையோ வருடங்கள் ஆனாற்போல் தோன்றியது.

“ஹலோ!” என்று திரும்பவும் அழைத்தவன் பொறுமையிழந்து, “ப்ச்... போன் பண்ணினா பேசணும்ங்க. மறந்துருச்சின்னா நல்லா யோசிச்சிட்டு அப்புறமா கால் பண்ணுங்க” என்று வைக்கப்போகும் போதுதான் கவனித்தான், மனைவியின் புகைப்படத்துடன் சுப்பு என்றிருந்து. அதற்குள் உணர்வு வந்தவள், “ஜீ...ஜீவா ப்ளீஸ் வச்சிராதீங்க. நான் உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்றாள் அவசரக்குரலில்.

“என்ன விஷயம் சுப்...தேவி? ஏன் இந்த படபடப்பு?”

‘ஏன் சுப்புன்னு கூப்பிட வந்து மாத்தினாங்க? ஓ... அவ்வளவு கோபமா?’ பெயரிலேயே தேங்கி நின்றவள் “என்ன விஷயம்” என்று ஜீவா கேட்டதை கவனிக்க மறக்க... “தேவி லைன்ல இருக்கிறதான?” என்றதும்... ஹ..ஹான்... இருக்கேன்ங்க. மா...மாமாவுக்கு உடம்பு சரியில்லங்க. ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. சீக்கிரம் வர்றீங்களா?” என்றாள்.

“டாட் ஹாஸ்பிடல்லயா! டாட்கு என்ன தேவி?” பதற்றத்துடன் கேட்க... “பதற்றப்படாம கேளுங்க. மாமாவுக்கு ‘ஹார்ட் அட்டாக். இப்ப பரவாயில்ல நீங்க டென்சனாகாதீங்க.”

“எப்படியாச்சி?”

“தெரியலங்க. நீங்க சீக்கிரம் வர்றீங்களா? தனியா இருக்க எனக்கு பயமாயிருக்கு.”

இதோ இன்னும் ரெண்டுமணி நேரத்துல அங்கேயிருப்பேன். போனை வைத்து தாயை அழைத்து காரணம் சொல்லாமல் சென்னை கிளம்பியிருக்கச் சொல்லி ப்ளைட் டிக்கட் புக் செய்து தாயுடன் கிளம்பினான்.

போனை வைத்த சுபா யார் அவரை மருத்துவமனையில் சேர்த்தது என்று விசாரிக்க... “நான் தான் மேடம்” என்று பி.ட்டி சார் அருகில் வந்து “ஸ்கூல்ல என்கிட்ட ஸ்போர்ட்ஸ் டே பற்றி பேசிட்டிருந்தாப்ல நெஞ்சைப்பிடிச்சி விழுந்திட்டாரு. உடனே ஹ்கூல் வேன்ல கொண்டுவந்து சேர்த்துட்டேன்” என்றான்.

“தேங்க்யூ சோ மச் சார். இந்த உதவியை என்னைக்கும் மறக்கமாட்டேன்.”

“அச்சோ மேடம்!’ இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. இது ஒரு சாதாரண உதவி மேடம்.”

“சாதாரணம்னு ஈசியா சொல்லிட்டீங்க. எங்களுக்கு அவர் ரொம்ப முக்கியம் சார். ஸ்கூல்ல யாருக்கும் தெரிய வேண்டாம் சார். சாதாரண மயக்கம்னு சொல்லிடுங்க” என்றவள் தாண்டவிடம் திரும்பி, “நீங்களும், அகியும் ஸ்கூலை பார்த்துக்கோங்கண்ணா. போகும்போது அப்படியே இவரையும் விட்டுட்டுப் போயிருங்க” என்று இருவரையும் அனுப்பி இருக்கையில் அமர்ந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் “அப்பா” என்றலறலோடு சாதனா ஐசியூ வர பின்னாடியே சுபஸ்ரீயின் அப்பா, அம்மா, அண்ணன்வர... “அப்பாவுக்கு போயி எப்படி அண்ணி? அதுவும் அட்டாக் வர்ற அளவுக்கு என்னாச்சி?” என்றாள் அழுகை குறையாது.

“சாதுமா கண்ட்ரோல் மாமாவுக்கு ஒண்ணுமில்லை. ஒண்ணும் ஆகாது. ஆகக்கூடாது” என்றாள் இறுகிய குரலில்.

அவளின் அப்பா, அம்மா, அண்ணன் யாரும் சுபாவினருகில் வரவில்லை. டாக்டரை நேராக சந்தித்து பேசினார்கள். மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் அதையும் உள்ளுக்குள்ளேயே பூட்ட, கண்கள் வழிந்த நீரை துடைக்க இயலாமல் இருந்தாள்.

சாதனா சுந்தரியின் அரவணைப்பில் இருக்க, அருகிலேயே அன்பைப் பொழிந்த அனைவரும் இருந்தும் தான் மட்டும் அனாதையானாற் போன்றதொரு எண்ணம். ‘ஹ்ம்... வாழ்க்கையில் என்னென்ன விசித்திரங்கள் சந்திக்க வேண்டியிருக்கு. நானென்றால் உயிரென்று சொன்ன சொந்தங்கள் எனக்குச் சொந்தமில்லாமல் போனது. என் மனதைப் புரிந்துகொள்ள இங்கு யாருமில்லை. இன்னும் மாமியார் வந்த பிறகு என்ன வர காத்திருக்கிறதோ’ என விரக்தியாக நினைத்தாள்.

இரண்டு மணிநேரங்கள் இரண்டு யுகங்களாய் கழிய தாயும் மகனும் மருத்துவமனை வாசல் வந்தபோது, “எதுக்கு ஜீவா ஹாஸ்பிடல் வந்திருக்கோம்? யாருக்கு என்னடா?” என்று கேட்டபிறகுதான் தாயிடம் உண்மையைச் சொன்னான் ஜீவா. அதிர்ச்சியில் அப்படியே நின்ற தாயிடம் “ஒண்ணுமில்லம்மா. அபாயகட்டத்தை தாண்டிட்டதா டாக்டர் சொல்லிட்டாங்களாம்.” தடுமாறிய தாயை கைத்தாங்கலாக அழைத்துவர... தூரத்தில் வரும்போதே தலையில் கைவைத்தபடி தனியாக அமர்ந்திருந்த மனைவியை பார்த்தான்.

தற்செயலாகத் திரும்பிய சுபா, கணவனைப் பார்த்ததும் அவனைக் கண்ணுக்குள் நிரப்ப, கணவன் அருகில் நெருங்கி வரவர அவன் உருவத்தை கண்ணீர் மறைக்க, இவ்வளவு நேரமிருந்த அனாதரவான நிலை நியாபகம் வந்து ஓடிச்சென்று, கணவனைக் கட்டியணைத்து ஆறுதல்தேட நினைத்தவளின் கால்கள் பின்னிக்கொண்டு நகர மறுத்தது. சரியாக ஜீவா அவளருகில் வர மயங்கி கீழே விழுந்தவளை கடைசி வினாடி வேகமாக வந்து தாங்கிப்பிடித்தான்.

மனைவியைப்போல் ஜீவாவும் சுபாவையே பார்த்துக்கொண்டு வர, அவளின் பார்வையில், உடலில் உள்ள வித்தியாசம் எதையோ உணர்த்தியது. அதேநேரம் ஜீவாவைப் பார்த்த ப்ரேம் அவனருகில் வர, தாயை அவனுடன் அனுப்பி கீழே விழுப்போனவளை வேகமாக வந்து பிடித்தான். அப்பாவைப் பார்க்கவா, மனைவியைப் பார்க்கவா என்ற குழப்பம் அவனுக்கு.

அதற்குள் பெண் மருத்துவர் ஒருத்தரை அழைத்து வந்தார் ராஜன். சுபாவையும் பெட்டில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்ற... சிகிச்சையளித்த செய்த டாக்டர் “அவங்களுக்கு ஓவர் டென்சன். ப்ரக்னென்டாவும் இருக்கிறதால மயக்கம் வந்திருக்கு. கொஞ்சம் கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க. மத்தபடி ஷி இஸ் நார்மல்” என்று சொல்லி வெளியே சென்றார்.

ஒருபுறம் தந்தையின் நிலைமையில் வருத்தத்தில் இருந்தவனுக்கு, இன்னொரு புறம் மனைவியின் மூலமாக சந்தோஷ செய்தி. இன்பமும், துன்பமும் சேர்ந்து அவனை சோதித்தது. தந்தையின் நினைவுவர அவரைத் தேடி சென்றவன் அவரை கண்கலங்க பார்த்திருந்தான்.

அவனருகில் வந்த ப்ரேம் “ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல ஜீவா. இனிமேல் ஜாக்கிரதையா பார்த்துக்கலாம். தனியா இருந்ததால வந்த மனப்புழுக்கமாயிருக்கும் சரியாகிடும் ஜீவா. தேவி எப்படியிருக்கா?” என கேட்டான்.

“ம்... உங்களுக்கு மாமா போஸ்ட் குடுக்க ரெடியாகி நல்லாயிருக்கா” என்றதும் ப்ரேம் ஒன்றும் புரியாமல் விழித்து, ஒருவழியாக விஷயத்தை கிரகிக்க... சந்தோஷத்தில், “ஜீவா கங்க்ராட்ஸ். அன்ட் தேங்க்யூ. பக்கத்துலதான் நாங்க இருக்கிறோம் எங்ககிட்ட சொல்லவே இல்லை பாருங்க. புதுசா வந்த பிடிவாதம் அவளை விடமாட்டேன்னுது போல” என்றான் வருத்தமாக.

வந்தனாவிடமும், சாதனாவிடமும் சொல்ல அந்த சூழ்நிலையிலும் அவர்களின் முகம் மலர்ச்சியைக் காட்டி, இனி எல்லாம் நல்லதாகவே நடக்குமென்ற நம்பிக்கை வந்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
சிறிது நேரம் கழித்து மனைவியைப் பார்க்கச் செல்ல, அவளது அறையிலிருந்து ராஜனும், சுந்தரியும் வெளியே வர ஜீவா உள்ளே சென்றான். கண்மூடி சாய்ந்தபடி அமர்ந்திருந்தவள் முகம் வேதனையைக்காட்ட, மாமனார், மாமியார் ஏதோ சொல்லியிருக்கிறார்கள் அதுவும் தன்னைப்பற்றித்தான் இருக்கும் என நினைத்தான்.

உண்மையும் அதுதான். சுபா கண்விழித்ததும் எதிரிலிருந்த தாய், தந்தையைப் பார்த்து ஒரு நிமிடம் சந்தோஷமடைந்து, “அப்பா, அம்மா” என்று அன்பாக அழைத்தாள்.

“இதை ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லல?” என்ற குற்றச்சாட்டை தாய் முன்வைக்க...

“எதைமா?”

“ஹ்ம்... நீ கர்ப்பமாயிருக்கிறதை. வேற எதைனு நினைச்ச? ஓ... நீங்கதான் ஸ்கூல்ல பெரிய போஸ்டிங்ல இருக்கீங்கல்ல. அப்ப நிறைய விஷயம் மறைச்சிருப்பீங்க?” என்று மகளிடம் மரியாதைப் பன்மையில் பேசினார்.

“ஏன்மா இப்படிப் பேசுறீங்க?”

“வேற எப்படி பேசணும்ன்ற? சொல்லு. இந்த விஷயத்தை முதல்லயே ஏன் சொல்லல?”

“ஏன் சொல்லணும்? எதுக்கு சொல்லணும்? யார்கிட்ட சொல்லணும்னு நினைக்கிறீங்க? தனக்கு யாரும் வேண்டாம் நீதான் முக்கியம்னு சொன்ன என்னோட மாமனாருக்கு தெரியும். அதுபோதும் எனக்கு.”

“நீ மாறவேயில்ல தேவி.”

“ஏன்மா மாறணும்? நானென்ன தப்பு பண்ணினேன்? என்மேல எந்த தப்பும் இல்லன்னு உங்களுக்கே தெரியும். இருந்தாலும் நியாயம் செய்யுறேன்னு மருமகனுக்கு நியாயம் செஞ்சி மகளுக்கு அநியாயம் செஞ்சவங்கதான நீங்க? எந்த உரிமையில எங்களுக்கு சொல்லல கேட்குறீங்க?” என்றவளுக்கு அவ்வளவு கோவம்.

“கேட்டது தப்புத்தான்மா. பொண்ணு புருஷனோட சேர்ந்து வாழாம தனியா இருக்கிறாளே, எதாவது பண்ணி சேர்த்து வைக்கலாம்னு நினைச்சோம். இப்பதான் தெரியுது நீ எந்தக்காலத்துலயும் திருந்தவே மாட்டேன்னு.” சொல்லியபடி வெளியே செல்ல... தாயின் நிராகரிப்பில் மனதில் வலி எழ கண்மூடி அமர்ந்தாள்.

அவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்று தெரிந்தாலும், தனக்குள்ளிருக்கும் சின்னச்சின்ன கேள்விகளுக்கும் மனைவியிடமே விடைபெற அவளருகில் வந்தான். அருகில் ஜீவாவைப் பார்த்ததும் முகம் தன்னாலேயே மலர கணவன் அடுத்து கேட்ட கேள்வியில் மனம் செத்தாள்.

“சொல்லு தேவி.. எப்படி நீ ப்ரெக்னன்டா இருக்கிற?”

‘ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கிறான்?’ என்பதுபோல் புரியாது பார்த்தாள் கணவனை. இல்ல நீ ஊரைவிட்டு கிளம்பும்போது எதுவுமேயில்லையே. ஐ மீன் உன்னோட அந்த நாள் பிறகு நான் உன்னை தொடவேயில்லையே இதெப்படி?” என்றான் அவள் வயிற்றைக் காண்பித்து.

“ஜீவாஆஆஆ...” என்று அதிர்ந்தவள் முகம் வெளிறியபடி கணவனைப் பார்த்தாள். தான் அன்று சொன்ன பொய் தன்னை இந்தளவிற்கு கேவலமாக நினைக்கத் தோன்றுமா? அதுவும் உயிராய் நினைக்கும் கணவன் வாயிலிருந்து வந்ததும் அலறியவள், “ப்ளீஸ் அப்படில்லாம் சொல்லாதீங்க ஜீவா. நான் அந்தமாதிரி பொண்ணில்லைன்னு உங்களுக்கேத் தெரியும். நான் சொன்ன பொய் இப்படி எனக்கே வினையா முடியும்னு நினைக்கவேயில்லை. இன்னொரு டைம் அந்த வார்த்தையை சொல்லாதீங்க. சொன்னா நா...நான் செத்துருவேன்” என்று முகம்மூடி அழுதாள்.

‘செத்திருவேன்’ என்ற மனைவியையே வெறித்திருந்தவன், “நான் முடிக்கிறதுக்கு முன்னாடி ஏன் அவசரப்படுற தேவி?” என்றதும் நிமிர்ந்து பார்த்தவளுக்கு... ஜீவாவின் கண்கள் தன்மீது குற்றம் சாட்டுவது போல் தெரிய, உதடுகடித்தபடி அமைதியாக இருந்தாள். “இப்படில்லாம் கேட்க என்னால் முடியும். ஆனா, நான் கேட்க மாட்டேன். உன்னை எனக்குத் தெரியும் தேவி. நீ சொன்ன அந்த பொய் என்னை உன்கிட்டயிருந்து விலக்குறதுக்குன்னும் புரிஞ்சிக்கிட்டேன். அந்தளவுக்கு என்னை வெறுக்குறல்ல?” என்றதும் இல்லையென்று அவள் மறுத்து தலையசைத்தாள்.

“சரி அப்ப வா பழசையெல்லாம் மறந்து நாம சேர்ந்து வாழலாம்.”

“இ...இல்ல என்னால எதையும் மறந்து வாழ முடியாது?”

“ஏன்?”

“தெரிஞ்சிக்கிட்டே ஏன்னுகேட்டா நான் என்ன சொல்றது? நான்... என்னால முடியாதுங்க. ப்ளீஸ் என்னை விட்டுருங்க” என அழுதபடி கையெடுத்துக் கும்பிட...

“ஓ... அப்ப கடைசிவரை என்னோட வரமாட்ட?” தன் மௌனத்தையே கணவனுக்கு பதிலாகக் கொடுக்க... “ரைட்! என்னோட முடிவையும் சொல்லிருறேன்” என்றதும் என்னவென்று அவனைப் பார்க்க... “உனக்கு குழந்தை பிறந்ததும் என்கிட்ட குடுத்திரு. நான் உன்கிட்டயிருந்து முழுசா விலகிடுறேன்” என்றான் அழுத்தமாக.

அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியாக வர, “ஜீவா நோ. என் குழந்தை எனக்கு வேணும். காலத்துக்கும் இதுதான் எனக்கு எல்லாம்.”

“ஹ்ம்... உன் குழந்தையா? நானில்லாமல் எப்படி? என்னையவே பிடிக்கலைன்னும் போது என் மூலமா வரப்போற குழந்தையை உனக்குப் பிடிக்கும்னு நான் எப்படி நம்புறது? முடிஞ்சா என்னோட சேர்ந்து வாழப்பாரு. இல்லையா நான் கடைசியா சொன்னதை பைனல் பண்ணிக்கோ. இனி என் வாழ்க்கையை நான் வாழப்போறேன்!” நக்கலாக ஆரம்பித்து கறாராக சொல்லி அடுத்த நிமிடம் நிற்காமல் வெளியே சென்றான்.

‘என் வாழ்க்கையை நான் வாழப்போறேன்னு சொன்னதுக்கு என்ன அர்த்தம். இன்னொரு மேரேஜ் பண்ணிக்கப்போறதாக அர்த்தமா? என்னைவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடியுமா ஜீவா உங்களால? எப்படி இந்த வார்த்தையை என்னைப் பார்த்து நீங்க சொல்லலாம்?’ என்று அதிலேயே உழன்றவளுக்கு, அவன் குழந்தையைக் கேட்டது மறந்துவிட்டது.

ட்ரிப்ஸ் முடிந்ததும் அந்த அறையைவிட்டு வெளியே வந்தவளுக்கு, எல்லோரும் இருந்தும் யாருமற்ற அனாதையாக இருக்கிறோமே என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வந்தது. ஒரு வார்த்தை ‘ம்’ என்று தலையசைத்தாள் போதும் தன்னைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாட அனைவரும் இருக்கிறார்கள். ஆனால், மனம் ஒப்பவில்லை. ‘ஏன் என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை? என் உணர்வுகள்! என் எண்ணங்கள்! நான் இதைப்போல் இல்லாமல் இருந்தால்தானே தப்பானவளாவேன்! எப்படி அவர்கள் செய்ததை மறக்க முடியும்? என்னால் எந்நாளும் முடியாது’ என்று திடமாக உரைத்தது மனது.

மறுநாள் காலை விவேக்கை தனியறைக்கு மாற்ற அவரைப்பார்த்து அழுது கொண்டிருந்த மனைவி, மகளை சமாதானப்படுத்தியவர் அருகில் ஜீவா வர அவனின் கலங்கிய கண்களைப் பார்த்து “நீயுமாடா” என்றார்.

“உங்களை அந்த நிலைமையில் பார்த்து ரொம்ப பயந்துட்டேன் டாட். ஐ மிஸ் யூ டாட்” என்று அவரை மெல்ல அணைத்து விடுவித்தான்.

“அது சரி தேவி எங்க? அவளை சரியா கவனிச்சிக்கிட்டீங்களா?” என்று வினவ மற்றவர்கள் தங்களுக்குத் தெரியாதென்றதும், நேற்றிருந்த நிலைமையில் அவளை சரியாக கவனிக்காதது நினைவு வந்தது வந்தனாவிற்கு. இல்லை ஜீவா பார்த்துக்கொள்வான் என்று நினைத்ததாக வந்தனா சொன்னாலும், அதான் உண்மையும் கூட. அவனோ இல்லையென்று தலையசைத்தான்.

அதில் கோபம் வந்தவர், “ஏன் அந்தப் பொண்ணை பார்த்துக்கல? அதைவிட உனக்கென்னடா வேலை? ஏற்கனவே தனக்கு யாருமில்லைன்ற ஃபீலிங்ல இருக்கிறா? ஏன் வந்துமா நீயாவது பார்த்திருக்கலாம்ல?” என வருத்தமாக கேட்டார்.

“ உங்களை இந்த கோலத்துல பார்த்ததுல எதுவும் தோணலைங்க. எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க? அவள் ப்ரெக்னென்ட்னு உங்களுக்குத் தெரியுமா? எப்ப தெரியும்?”

“ம்.. தெரியும் பத்துநாள் முன்னாடியே.”

“ஏன் எங்ககிட்ட சொல்லல?”

“தேவி சொல்ல வேண்டாம் சொல்லிட்டாமா?”

“அவ சொன்னா நீங்க கேட்டுக்குவீங்களா?”

“கேட்கத்தான் செய்வேன். அவளை எதற்காகவும் கட்டாயப்படுத்த மாட்டேன்னு அவளுக்கு வாக்கு குடுத்திருக்கேன். அவளோட இடத்துல இருந்து பார்த்தா அவளை யாரும் குற்றம் சொல்ல முடியாது. அது அவளோட உணர்வுகள் சம்பந்தப்பட்டது.”

“ஆனா, ஜீவா இடத்துலயிருந்து பார்த்தா அவனோட பயமும் நியாயமானதுதான். இருந்தாலும் சின்ன தவறுதான் பேரிழப்பை உண்டாக்கும்னு தெரியாம போயிட்டான். பையனும், மருமகளும் இப்படி ஆளுக்கொரு பக்கமா இருக்காங்களே சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க முடியலையேன்ற நினைப்பு மனசுல அரிச்சிக்கிட்டேயிருந்திச்சி. அப்புறம் மருமக கர்ப்பமாயிருக்கிறது தெரிஞ்சும் அந்த சந்தோஷத்தை உன்கிட்ட கூட ஷேர் பண்ணிக்க முடியாம இருக்கோமேன்ற வருத்தமும் சேர்ந்து மைண்ட் டிஸ்டர்படாகவே இருந்தது. அதான் இப்படி படுக்கையில் தள்ளியிருச்சி போல” என்றார் வருத்தத்துடன்.

“எப்பவும் எதையும் சீரியஸாக எடுத்துக்காத நீங்க எப்பங்க இப்படியானீங்க? உங்க உயிருக்கு எதாவது ஆகியிருந்தா எங்களை ஒரு நிமிஷம் நினைக்கலைதான?” மனதிலுள்ளவற்றை கணவனிடத்தில கொட்டியபடி அழுதார்.

“ப்ச்... விடுமா. ஏதோ நடந்திருச்சி. இப்பதான் சரியாகிடுச்சே. இனி அதைப்பற்றிப் பேசி என்ன பண்றது” என்று மனைவியை சமாதானப்படுத்தினார்.

இதையெல்லாம் வெளியே நின்று தற்செயலாக கேட்டுக்கொண்டிருந்த சுபாவிற்கு, ‘தன்னால்தான் மாமாவிற்கு அட்டாக்கா! நான் ஏன் அவரிடத்திலிருந்து யோசிக்கவில்லை. அவரின் மனைவி, மகனை விலக்கி வைத்து என்னுடன் இருந்தவரின் உணர்வுகள் புரியாமல், என் உணர்வுகள் பெரிதென்று எப்படி நினைத்தேன்? வேண்டாம் இனி அவர்களைப் பிரித்த பாவம் எனக்கு வேண்டாம். ஆனால், எங்கு செல்வது? எனக்கு யாரையும் தெரியாதே? தெரிந்தது அகி மட்டும்தான். அவளும் இப்பொழுது என்னுடைய பாதுகாப்பிலல்லவா இருக்கிறாள்’ என்ற நினைவுகளினூடே அருகிலுள்ள கோவில் வந்தாள்.

சாமி தரிசனம் செய்து, ஆளில்லாததால் அமைதியாக அம்மனைப் பார்த்தபடி அமர்ந்தாள். ‘இன்னும் என்னை என்ன செய்ய காத்திருக்கிற தாயே! நான் என்ன பாவம் செய்தேன்னு என்னை இப்படி சோதிக்கிற! அழகான அன்பான பிறந்த வீடு, புகுந்த வீடாகக் கொடுத்து அதில் என்னையே பெரிய குறையாக படைச்சிட்டியே! என்னால முடியவேயில்லை. என்னை நீ சோதிப்பதிலிருந்து விட்டுவிடு” என்று அழுகையினூடே அந்தத் தாயிடம் தன்னுடைய உள்ளக்குமுறலை கொட்டினாள் சுபா.
 
Top