- Joined
- Aug 31, 2024
- Messages
- 405
- Thread Author
- #1
20
ஏதோ ஒரு அழுத்தம். யார் மேலோ உள்ள கோபம். வசீகரனைப் பார்த்து கேள்வி கேட்க வைத்தது பூரணியை.
“பரி அது...”
“அதேதான். இங்க ஏன் வந்தீங்க?”
“பூரணி அமைதியாயிரு. தற்செயலா வந்திருக்கலாம்” என்று தோழியை அமைதிப்படுத்த முனைந்தாள் சண்முகி.
“தற்செயலோ, திட்டமிட்டோ என் முன்ன வரவேண்டாம் சொல்லு சண்மு. எனக்குத் தேவை நிம்மதி.”
ஏனோ ஒரு வலி தாக்க, “நான் போயிட்டா, நீ நிம்மதியா இருந்துருவியா பரி?” என்றான் ஆழ்ந்த குரலில்.
நொடிநேரத் தடுமாற்றம் உள்ளமதில் எழுந்த போதிலும் அதை உதறி, “ஏன் இப்ப இல்லையா?” என்றாள் கோபம் மாறாது.
“இல்லை” என பட்டென்று சொல்லியவன், “நீ நிம்மதியாயில்லை பரி. நீ நிம்மதியா இருக்கணும்னா நான் வேணும். நானில்லாமல் நீயோ, நீயில்லாமல் நானோ இருந்தால், அதுதான் நிம்மதியில்லாத வாழ்க்கை. வா பரி வாழலாம்” என்றான்.
சட்டென்று ஒரு இளக்கம் அவளினுள் வர, காதல் கொண்ட மனதிற்கு அதைவிட என்ன வேண்டும். ஆனால், வாழ்க்கை என்றொன்று இருக்கிறதே! அதற்கு வெறும் காதல் மட்டும் போதாதே! நிதர்சனம் நினைவுக்கு வர இளக்கம் போய் இறுக்கம் வந்தது பரிபூரணிக்கு.
மனைவியவளையே பார்த்திருந்தவன் அவளின் இளக்கம், யோசனை, இறுக்கம் அனைத்தையும் பார்த்திருக்கையில், “அப்படி உங்களோட இருந்தால் அதுதான் நிம்மதியில்லாத வாழ்க்கைன்னு உங்களுக்குப் புரியலையா?” என்றாள் உணர்வற்ற குரலில்.
“பூரணி கொஞ்சம் நிதானமா இரு. சட்டுன்னு வார்த்தையை விடாத. விடுற வார்த்தையில் வாழ்க்கையை இழந்தவங்க பலபேர். அட்லீஸ்ட் என்ன சொல்ல வர்றாங்கன்றதை கேட்டுட்டாவது பேசு” என்ற சண்முகியின் குரலில் இனம்புரியா தவிப்பு.
சண்முகியைப் பொருத்தவரை இருவரும் நல்லவர்கள். இருவருக்கும் ஒருவரையொருவர் மிகவும் பிடிக்கும். இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் அவளைவிட சந்தோஷப்படுபவர்கள் எவரும் இருக்க முடியாது. தோழியின் பேச்சினால் நீண்ட பிரிவு வந்துவிடக்கூடாது என்ற பயம் எழுவதை என்னவென்று சொல்வாள்.
“விட வேண்டிய இடத்தில் வார்த்தையை விடாததாலதான், நான் இப்படியிருக்கேன் சண்மு. உள்ளத்தில் உள்ளதெல்லாம் உதட்டுக்கு வந்தா இவங்கள்லாம் தாங்குவாங்களா சொல்லு?” என்றவள் குரலில் அத்தனை ஆதங்கம்.
“எனக்குப் புரியுது பூரணி. நான் உன் நல்லதுக்காகப் பார்க்கிறேன். பேசிப் பார்த்தா எதாவது முடிவு கிடைக்கும்ல?”
“ஆமா அண்ணி. உங்க ஃப்ரண்ட் சொல்ற மாதிரி உட்கார்ந்து பேசினா ஒருமணி நேரத்துல தீர வேண்டிய பிரச்சனை. அதை மேலும் மேலும் வளரவிட்டு எல்லார் மனசையும் ஏன் ரணமாக்குறீங்க?” தன்னையறியாது வார்த்தையை விட்டான் தினகரன்.
“ஓ.. நான்தான் ரணமாக்குறேன்ல?” என்றதில் உள்ள வலியை உணர்ந்த சண்முகி ஆறுதலாய் அவள் கைபிடிக்க, வசீகரனோ அவ்வலியை உணர்ந்தாலும் தம்பியவன் கொட்டிய வார்த்தையை என்ன செய்வதென்று இயலாது நின்றிருந்தான்.
“அண்ணி! நான் அந்த...”
அவனைப் பேசவிடாது கைநீட்டித் தடுத்தவள், “நான் எதையும் கேட்கத் தயாராயில்லை. நீங்க போகலாம். சண்மு போகச்சொல்லு இவங்களை. அவங்க என்னை சமாதானப்படுத்தவும் வேண்டாம். நான் இவங்களை ரணப்படுத்தவும் வேண்டாம். எல்லா ரணமும் என் ஒருத்தியோடவே போகட்டும். காலத்துக்கும் நான் இப்படியே இருந்துக்குறேன்” என்றாள் மரத்த குரலில்.
“அண்...”
“தினா நீ காருக்குப் போ. நான் இப்ப வர்றேன்” என்று வசீகரன் சற்று அழுத்தமாகவே சொல்ல... தினகரனோ சில நொடிகள் தயங்கி நின்று பின் கிளம்பினான்.
அவனைத் தொடர்ந்து சென்ற சண்முகி, “டாக்டரே வார்த்தைப் பிரயோகங்கள் தப்பாயிருக்குதே” என்று குற்றம் சாட்ட,
“இல்ல சண்...”
“ஸ்ஸ்.. பேசாதே” என வாயில் விரல் வைத்து, “அத்தனை தப்பும் உங்க சைடுல பண்ணிட்டு சாரின்ற ஒரே வார்த்தையில் முடிச்சிட்டுப் போயிருவீங்க. பாதிக்கப்பட்டவங்க தங்களோட எதிர்ப்பைக் காட்டினா ரணப்படுத்துறோமா?” சத்தமாகப் பேசாவிடினும் குரலில் அவ்வளவு ஆத்திரமிருந்தது.
“சண்மு” என்றான் தவிப்பாய். மனதிலுள்ளது வெளியே வருகையில் வார்த்தைப் பிழையானதை என்னவென்று சொல்வான். வார்த்தையில் வாழ்க்கையை இழந்தவங்க பலபேர்னு அப்பொழுதுதானே தோழியிடம் சொன்னாள். அதே தவறை தான் செய்திருப்பதை எப்படி நியாயப்படுத்துவான்.
“பேசாதீங்க சொன்னேன். பண்றதெல்லாம் பண்ணிட்டு பின்னாடி வந்து சமாதானம் செய்தா நடந்ததெல்லாம் சரியாகிருமா? அவளோட இரண்டரை வருட வலியை மறந்து உடனே பின்னாடி வரணும்னு நினைக்குறது என்ன மாதிரியான குணம்? அவளோட கோபத்தைத் திருப்பிக் காண்பிக்கிறப்போ தாங்கிக்கோங்க. எந்த வகையில் குறைஞ்சிரப் போறீங்க?” ஒருவித மிரட்டல் தொணியில் பேச...
“ஏய்! அது என் அண்ணன். நானில்லை” என்றான் பதறிப்போய்.
“அதே குடும்பம்தான நீங்க? கூடவே சுத்துறியே டாக்டரு நீ ஏன் சொல்லித்தரலை?” என்றாள் முகம் சுளித்தபடி.
‘அடேய் அண்ணா! பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா? மரியாதை தர்றாளா தரலையான்றதே தெரியமாட்டேன்னுது. நீ பண்ணின வேலைக்கு என் சண்மு என்னை வாட்டுறாள்டா’ என மனதிற்குள் திட்டி அப்பாவியாய் முகம் வைத்து, “இதுக்குதான் என்னைக் கல்யாணம் செய்துட்டு வந்து, உன் தோழி விஷயத்தில் சம்பந்தப்பட்ட எல்லாரையும் வச்சி வாங்குன்னு சொல்றேன். ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏத்துக்க மாட்டேன்ற?” என்றான் அப்பாவியாய்.
‘அப்படிச் செய்யலாமோ?’ ஒரு நொடி தோன்றிய எண்ணத்தில் மனதில் அலறி, ‘இந்த டாக்டர் உன்னைக் குழப்புறான். அலார்ட்டா இரு சண்மு’ என்று தன்னைத் திடப்படுத்தி நின்றாள்.
“உனக்குத் தெரியுமா? நமக்கான சந்தர்ப்பத்தை கடவுள் எப்பவாவதுதான் தருவாராம். அதைக் கப்புன்னு பிடிச்சி, சட்டுன்னு வச்சிக்கணும். இதை ஏன் உனக்குக் கிடைத்;த சந்தர்ப்பமா வச்சிக்கக்கூடாது?” என்ற அரிய தத்துவத்தைச் சொல்லி அமைதியாக நின்றான்.
‘கழுத்தைக் கையால் பிடித்துக் கொல்லவா? இல்லை திருகிக் கொல்லவா?’ மனதினுள் அவனைக் கொல்ல திட்டமிட்டு வெளியே, “டாக்டருக்கான எந்தவொரு அடையாளமும் உன்கிட்டத் தெரியலை. போலி டாக்டராடா நீ” என்றாள் சத்தமாக.
“ஏய் ஏன் கத்துற? யாராவது கேட்டா தப்பாகிரும்” என்றான் பதறிப்போய்.
“இந்த உலகத்துக்கு ஒரு போலி டாக்டரை தோலுருச்சிக் காட்டுறேன்.”
“என்னைக் கல்யாணம் முடிச்சிட்டு எப்படி வேணும்னா உரிச்சிக்கோ” என அவனுமே பதிலுக்குப் பதில் கொடுக்க,
“உன்னை.. எங்க சுத்தினாலும் அங்கேயே வர்ற” என்று விரட்ட ஓடிவிட்டான் அவனும்.
சண்முகி, தினகரன் சென்றதும் இருவர் மட்டுமே தனித்திருக்க, “காலத்துக்கும் இப்படியே இருப்பேன்னு சொல்றவ, உன் ஃப்ரண்டோட வாழ்க்கை பற்றி கவலைப்பட மாட்டியா?” என்றான் நிதானமாக.
“அவள் குணத்துக்கு எல்லாமே நிறைவா கிடைச்சி ரொம்பவே நல்லாயிருப்பா” என்றவள் குரலில் அவ்வளவு மென்மை.
“ஓ.. சரி விடு. அதை அப்புறமா பேசிக்கலாம். உனக்கு என்ன பிரச்சனை பரி? எங்க வீடுதான்னா வா தனியா போகலாம். நீயே அவங்களோட இருக்கணும்னு சொன்னாலும் நான் இருக்கப்போறதில்லை. பைத்தியமா நடிச்சதுதான் பிரச்சனைன்னா அது உன்னைத் தெரிஞ்சிக்க. ஐ மீன் உன்னோட பழகுறதுக்காக. மத்தபடி எந்தவிதத் தப்பான எண்ணமும் கிடையாதுன்றது உனக்கேத் தெரியும் பரி. இருந்தும் ஏனிந்தப் பிடிவாதம்?”
“பிடிவாதம்தான் இல்லைன்னு சொல்லமாட்டேன். இந்தப் பிடிவாதம் என்னைவிட்டுப் போகாது. எப்ப, எப்படி கேட்டாலும் என்னோட பதில் நீங்க எனக்கு வேண்டாம்” என்றாள் உறுதியாக.
“அவ்வளவு மட்டமா போயிட்டேனா நான்? உன்கிட்டச் கெஞ்சணும் என்கிற அவசியம் எனக்கில்லை. கெஞ்சவும் மாட்டேன். எனக்கு நீ வேண்டாம்” என்றதில் பூரணியின் முகம் அப்பட்டமாய் அதிர்வைக் காட்ட... அதில் புன்னகை வரப்பெற்றவன், “இப்படி சொல்லி உன்னை விட்டுட்டுப் போயிருவேன்னு நினைச்சியா? எனக்கு நீ வேணும் பரி. உன்னுடைய குட்டிக்கண்ணனுக்கு உன் தாயன்பு வேணும். உன்னுடைய வசீகரனுக்கு அவன் மனைவியோட காதல் வேணும். வாழ்ந்து பார்த்துட்டு வேண்டாம் சொல்லு பரி” என்றான் அமைதியாய்.
அவனின் வார்த்தைதனில் மனம் கரையத்துடிக்க, அது தனக்கு நல்லதல்ல என்றுணர்ந்து, “வாழ்ந்த வாழ்க்கையினால்தான் வேண்டாம்னு சொல்றேன்” என பிடிவாதம் குறையாது நின்றாள்.
“அது நான் சுயநினைவில்லாமல் இருந்தப்ப. அது ஒரு பொம்மைக் கல்யாணம் பரி.” தன்னைப் புரியவைக்கவென்று அவ்வார்த்தை சொல்ல அதுவே அவனுக்கு ஆபத்தானது.
“பார்த்தீங்களா நீங்களே அதை பொம்மைக் கல்யாணம்னு சொல்லிட்டீங்க? செல்லாத கல்யாணத்தை வச்சி ஒண்ணும் பண்ணமுடியாது. நீங்க கிளம்பலாம்” என்று வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறியது.
“ஓ.. பரி.. பரி.. அது சும்மா பேச்சுக்குச் சொன்னது. சரி வா நாம நிஜமா கல்யாணம் செய்துக்கலாம்” என்று அவள் கைபிடிக்க வர, விலகி பின்னால் நகர்ந்து, “என்னைத் தொடாதீங்க” என்றாள்.
அவளின் விலகலில் மனம் வலிக்க, “ஏன் பரி? என்னைப் பிடிக்கலைன்னு உன்னால சொல்ல முடியாது. ஏன்னா என்மேலான உன் அன்பைப் பலமுறை நேரில் பார்த்தவன் நான். அந்த அதீத அன்புதான் என்கிட்ட நெருங்கவிடாம செய்யுதா?”
அவளின் கடுமை முகத்தில் சில நொடி வலி வந்து போவதைப் பார்த்தவன், “நாம வாழ்ற வாழ்க்கை எல்லாத்தையும் சரிபண்ணும் பரி” என்றான் கெஞ்சலாக.
“எதுவும் எப்பவும் சரிவராதுங்க. தேவையில்லாத நினைவுகள், தேவையில்லாத முகங்கள்..” என முகம் சுளித்து, “தேவையில்லாத நிறைய வேண்டவே வேண்டாம்” என்றாள்.
“அந்தத் தேவையில்லாததில் நானும் அடக்கமா பரி?” என்றவன் குரல் நலிந்து வர, “இருக்கலாம்” என்றாள் பட்டென்று.
“இப்படி பட்பட்டுன்னு பதில் சொல்லாத பரி. வீட்டுல உட்கார்ந்து என்னை எப்படி பேசி அவாய்ட் பண்ணலாம்னு யோசிக்கிற போல. ரொம்ப யோசிச்சா கண்முன்ன உள்ள நல்லது எதுவும் தெரியாது. நீ அம்மாகிட்ட சொன்னதுதான் கெட்டது மலை மாதிரி.. நல்லது அதைத் தாண்டிய செடி மாதிரி. நீ இப்ப பிடிவாதமா மலையை மட்டும் பார்க்கிற. அங்கயிருக்கிற அப்பாவிச் செடியான என்னைப் பார்க்க மாட்டேன்ற” என்றான் உருகலாய்.
அவ்வார்த்தைதனில் மனம் இளக, ‘அவன் சொல்வது சரிதானே. நீ சொன்ன வார்த்தையை நீயே காற்றில் விடலாமா?’ என்றது மூளை.
“என்ன யோசிக்கிற பரி? வேணும்னா நாம வெளிநாடு போயிரலாம். யார் முகத்திலும் முழிக்க வேண்டிய அவசியமிருக்காது.”
“நான் உங்க சங்காத்தமே வேண்டாம் சொல்றேன். அது புரியலையா உங்களுக்கு?”
“ஏன் புரியாம? குழந்தை அடம்பிடிச்சா அப்படியே விட்டுருவோமா என்ன? நம் வாழ்க்கையை நாம் மட்டும்தான் பரி வாழணும். கடைசிவரை துணையில்லாமல் வாழ முடியாது. எனக்கு நீ துணை! உனக்கு நான் துணை! ஆணுக்குப் பெண்.. பெண்ணுக்கு ஆண் அப்படின்றது நியதி. அதை மாற்ற நினைக்குறதே விதி மீறல்தான். காதலும், தாம்பத்தியமும் வாழ்க்கைக்கு அவசியம் பரி.” என்று நிதானமாக எடுத்துச் சொல்ல,
“மத்தவங்களுக்குத் துணை தேவையாயிருக்கலாம். எனக்குத் தேவையில்லை. தாம்பத்தியம்! என்ன சொல்றது? தாம்பத்தியம்னா என்னன்னு அறிந்து தெரிந்திருந்தால்தான் பிரச்சனை. அது தெரியாத வரை தாம்பத்தியம் வெறும் வார்த்தை மட்டுமே! என்னால அது இல்லாமல் கடைசிவரை வாழ முடியும்” என்றாள் அழுத்தமாக.