• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
2



“டேய்! இந்த வாழையை எடுத்து வாசல்ல கரெக்டா கட்டுங்க. அந்த போர்டுல எழுத்து சரியா இருக்குதா பாரு. டேய் ப்ரேம்! மணமேடைக்குத் தேவையான எல்லாம் சரியாயிருக்கா பாரு. எதாவது தேவைப்பட்டா சீக்கிரம் வாங்கிட்டு வந்து வச்சிரு. ஆளுங்க வர ஆரம்பிச்ச பிறகு மத்த வேலைகளைப் பார்த்திட்டிருக்க முடியாது. வந்தவங்களை வரவேற்க நாம வீட்டாளுங்க இருக்கணும்” என்றவர் வாசலில் நின்றிருந்தவனைக் கண்டு, “டேய்! தடிமாடு தாண்டவராயா! செய்யுற வேலையைத் திருந்தச் செய்யமாட்டியா? வாசலுக்கு நேரே பூ தொங்குது பாரு. வர்றவங்க முகத்திலேயே அடிக்கப்போகுது. அதை அப்படியே இரண்டு பக்கமும் ஓரத்துல நீளமா தொங்கவிடு. பார்க்க அழகாயிருக்கும்” என்று வரதராஜன் ஒவ்வொருத்தரையாக கத்திக் கொண்டிருந்தார்.


‘ஆமா. பெரிய இவரு.. தடிமாடாம்ல. எல்லாம் எனக்குப் பெயர் வச்ச எங்கப்பனைச் சொல்லணும். அவங்கப்பா மேல பாசமிருந்தா தான் வச்சிக்க வேண்டியதுதான. இவர் திட்டுறதுக்கேத்த மாதிரிதான் என் பெயரையும், தடிமாடு, சே... அவர் சொல்றதைக் கேட்டுக் கேட்டு என் பெயரை நானே மறந்திடுவேன் போலவே. ஹ்ம்... இவ்வளவு வசதியிருக்கு மொத்தமா பணம் கொடுத்து டெகரேசனுக்கு கான்ட்ராக்டா விடலாம்னு சொன்னா கேட்டாதான.’

‘கேட்டோம்னா, என் பொண்ணு கல்யாணத்துல எல்லா வேலையிலும் என்னோட பங்களிப்பு இருக்கணும். நான் நல்லா ஹெல்தியா தான இருக்கேன். ஒவ்வொரு வேலையையும் ரசித்து செய்தா மனசுல இந்த கல்யாணம் முழுமையா நடந்ததா தோணும்டா. முதல்ல நான் சொன்னதைச் செய்னு சொல்வார். ஹ்ம்... அவர் மட்டுமா எல்லா வேலையும் பார்க்கிறாரு, நம்மளையும் போட்டுல்ல நொங்கெடுக்குறாரு’ என்று அவர் சொன்னதை நினைத்து சலித்துக்கொண்டான் அந்த தடிமாடு சாரி தாண்டவராயன். மனதில் அலாரம் அடிக்க, ‘டேய்! தாண்டவராயா சீக்கிரம் ஓடு, அப்புறம் அடுத்த ரௌண்ட் டோஸ் குடுக்க வந்திருவாரு’ என்றபடி ஓடினான்.

மண்டபத்திலுள்ள அனைத்து வேலைகளும் சரியாக நடக்கிறதா? எந்தக்குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து, சரி செய்து நிமிர அதிகாலை மூன்று மணியானது. ஏற்கனவே திட்டமிட்ட திருமணம் தான் என்ற போதிலும், மாப்பிள்ளை வீட்டாருக்கு சின்ன முகச்சுணக்கம் கூட வந்துவிடக் கூடாதென்பதில் தெளிவாக இருந்தார்கள் அப்பாவும், மகனும்.

இவ்வளவு நடந்த பிறகும் மகளின் திருமணம் தடையில்லாமல் நடக்கப் போகிறதென்ற சந்தோசமே அதற்குக் காரணம். ஆக்சிடெண்ட் நடந்ததும், அதைத் தொடர்ந்த சம்பவங்களும் வேதனை தந்தாலும், அதையும் மீறி மாப்பிள்ளை இந்தக் கல்யாணம் குறிப்பிட்ட தேதியில் நடக்குமென்பதைச் சொன்னதும் தான் வரதராஜன் குடும்பத்தாருக்கு போன உயிர் திரும்ப வந்தது.

ஆனந்தின் கைபிடித்து கண்கலங்க நன்றி சொன்னவரை, “நான் கல்யாணம்னு சம்மதிச்சதிலிருந்தே அவள் என் ஒய்ஃப்னு முடிவு பண்ணிட்டேன் மாமா. என் ஒய்ஃப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம். உங்க பொண்ணு என்னோட பொறுப்பு. அவளோட கண்ணுக்குக் கண்ணா நானிருந்து பார்த்துக்கறேன் மாமா. உங்க கவலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு கல்யாண வேலையை சந்தோசமா பாருங்க. என் தங்கையால கல்யாணத்துக்கு வரமுடியாது. அவளுக்கு கடைசி செமஸ்டர் நடக்குது. சொந்தக்காரங்க வரை சமாளிங்க மாமா. மத்ததை நாம சேர்ந்தே பார்த்துக்கலாம்” என்று நம்பிக்கையளித்திருந்தான்.

மருமகனாகப் போகிறவன் பேசிய வார்த்தைகளில் மனம் மகிழ அவனைத் தன்னுடன் சேர்த்தணைத்து, “ரொம்ப நன்றி மாப்பிள்ளை. எங்க பொண்ணோட நிலைமையைப் பார்த்து, இந்தக் கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என் பொண்ணோட கல்யாண வாழ்க்கை கேள்விக் குறையாகிருமோன்னு நாங்க தவிச்ச தவிப்பு, அந்த கடவுளுக்குத்தான் தெரியும். நீங்க கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்னு சொன்னதும் தான் நிம்மதியாயிருக்கு. உங்களுக்கு என்னென்னவோ செய்யணும்னு தோணுது. நீங்க தான் எதுவும் வேண்டாம்னு ஒரே வார்த்தையில் முடிச்சிட்டீங்களே” என்றார் சந்தோச சலிப்புடன்.

“எதுக்கு மாமா இத்தனை மரியாதை? ப்ரேம் மச்சானை வாங்க போங்கன்னா பேசுறீங்க? அது மாதிரி மருமகன்ல இருக்கிற முன்னாடி உள்ள ‘மரு’ ரெண்டெழுத்தை எடுத்துட்டு கூப்பிடுங்க ஆட்டோமேட்டிக்கா ‘வா’ ‘போ’ சொல்வீங்க.”

“அதெல்லாம் முடியாது மாப்பிள்ளை. என்னதான் சிட்டிக்குள்ள இருந்தாலும், நமக்கு சொந்தம் கிராமம் தான. பழமையிலேயே ஊறினவன் மாத்திக்கிறது என்பது முடியாத ஒண்ணு. என் பொண்ணும் என்னை மாதிரி தான் உங்களை மரியாதையில்லாம கூப்பிடுறதைப் பார்த்தா அப்புறம் என்னை பேயோட்டிருவா. அப்புறம் என் பாடு திண்டாட்டமாகிடும்” என்றார் மகளைப் பற்றிய பெருமையில்.

“ஆனா, மாமா...” என ஆரம்பித்தவன் தோளைக் குலுக்கி “உங்க விருப்பம்” என்று முடித்தான்.

“மாப்பிள்ளை உண்மையைச் சொல்லுங்க, என் பொண்ணை இழுத்ததால தான சம்மதிச்சீங்க?” என்று நேரடியாக கேட்க, ஆம் என்று எப்படிச் சொல்வதென்று தெரியாமல், “விடுங்க மாமா. நீங்க வேற” என்று வெட்கப்பட்ட முகத்தை மறைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான். மருமகனிடம் பேசியதையும் அவனின் வெட்கத்தையும் திருமண வேலைகளினூடே அசைபோட்டார் ராஜன்.

காலை ஆறிலிருந்து ஏழு வரை முகூர்த்த நேரமாதலால், நான்கு மணிக்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்கு வர மேளச்சத்தமும், நாதஸ்வர ஓசையும் அந்த காலை வேளையை அதி அற்புதமாக்கியது. திருமண நிகழ்ச்சிகள் யாவற்றிலும், இன்றைய நவீனங்களைப் புகுத்தாமல், கிராமத்து பாணியில் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து குடும்ப உறுப்பினர்களே முன்னின்று செய்ததில் குறை சொல்ல எதுவுமில்லை.

எதுவுமில்லை என்பதை விட, யாரும் குறை சொல்ல தயாராகயில்லை என்பது தான் நிஜம். வரதராஜனின் புகழ் அப்பேற்பட்டது. உதவும் குணம் அதிகம். அதே சமயம் தவறுகளை அந்த இடத்திலேயே தட்டிக்கேட்கும் மனிதர். தன்னிடம் உதவி கேட்டு வரம் நபர்களின் பஞ்சாயத்துகளுக்கு எட்டுப்பட்டி நாட்டாமையாக மாறி தீர்ப்பு வாரி வழங்குவதில் சின்னக்கவுண்டர் விஜயகாந்தையும் விஞ்சி விடுவார். அது தன் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி.

ஆனால், அதற்கு இதுவரை அவசியம் வந்ததில்லை. அந்த அளவிற்கு பிள்ளைகளை கட்டுக்கோப்பாக வளர்த்திருக்கிறார் என்றே சொல்லலாம். சீக்கிரத்தில் தன் குடும்பத்திலும் ஒரு பஞ்சாயத்து வந்து, அதற்கு தானே தீர்ப்பெழுதப் போகிறோம் என்று தெரியாமல் இருந்தார் வரதராஜன்.

பெண்ணை ரிசப்சன் அது இதென்று அலைக்கழிக்காமல், நேரடியாக திருமணத்தை நடத்த மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதித்தார்கள். மாப்பிள்ளை வீட்டினர் இவ்வளவு நல்லவர்கள் என்று ராஜன் அறிந்தது அப்பொழுது தான். முன்னர் பேசியிருந்தாலும், இந்த அளவுக்கு புரிதல் இரு குடும்பங்களிடையே இல்லை என்பதே நிஜம். மாப்பிள்ளை சடங்குகள் முடிந்து பெண்ணை அழைக்க, தேவதையாகத் தன் தாய் கைபிடித்து மேடைக்கு வரும் சுபாவையே பார்த்துக் கண்களுள் நிரப்பிக் கொண்டிருந்தான் ஆனந்த்.

ஆனந்தின் தாய் வந்தனாவும், சுபாவின் தாய் சண்முகசுந்தரியும் மணமகளுக்கு அரணாக வந்து நிற்க... தன் தேவதையின் பார்வை வரம் வேண்டி காத்திருக்கத் தயாரானான் மணமகன்.

கிடைக்குமா.. கன்னியின் கடைக்கண் பார்வை!

“டேய்! பொண்ணைப் பார்த்தது போதும். ஐயர் என்னவோ சொல்றார் பாரு” என தாய் சொன்னதும்தான், ஒரு அசட்டுச் சிரிப்பைத் தாய்க்கு அளித்து திரும்பி ஐயரைக் கவனிக்கலானான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சண்முகசுந்தரிக்கும் மனம் முழுக்க நிம்மதி பரவியது.

ஆனால், சுபாவிற்கோ குழப்பமே மிஞ்சியது. ‘என்னைத் திருமணம் செய்ய எப்படி சம்மதித்தான்? அதுவும் இந்த நிலைமையில்?’ புரியாத நிறைய கேள்விகள் மனதைக் குடைந்த போதும், ஐயர் சொன்னதை செய்து கொண்டிருந்தாள். செய்து கொண்டிருந்தாள் என்பதை விட செய்யவைத்துக் கொண்டிருந்தார்கள்.

சுபாவின் அண்ணன் ப்ரேமோ, விபத்து நடந்த பிறகு திருமணத்திற்கு ஆனந்த் சம்மதித்ததில் விழுந்தவன் தான் இன்னும் ஆனந்தின் தாக்கத்திலிருந்து எழவில்லை. தன்னை விட ஒரு வயது சின்னவனாக ஆனந்த் இருந்த போதிலும், ப்ரேமைப் பொருத்தவரைக்கும் ஆனந்த் ஒரு ஹீரோவாகவே தெரிந்தான்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்துடனும், பெரியவர்களின் ஆசீர்வாதத்துடனும், அக்னி சாட்சியாக சுபஸ்ரீதேவியை கரம் பிடித்தான் அந்த அழகன். ‘ஆனந்த் என்கிற ஜீவானந்த்!’

அக்னி வலம் வரச் சொல்லிய ஐயரிடம், “கைபிடிச்சி முன்னப்பின்ன தான் நடக்கணுமா ஐயரே? ஏன்? ஆணும், பெண்ணும் சரிசமம்தான நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே நடக்கிறோமே” என கேள்வியும் கேட்டு பதிலும் அவனாகவே மாறினான்.

ஒரு கையால் மனைவியின் வலக்கரம் பிடித்து, தனது இடக்கரத்தால் மனைவியின் தோளைச் சுற்றிப்போட, அதிர்ச்சியில் திரும்பியவளின் அருகில் குனிந்து, “நான் இப்ப உன் ஹஸ்பண்ட்மா தொடுறதால தப்பில்ல? தப்பான அர்த்தத்துல தான் தொடக்கூடாது” என்று கையில் சிறு அழுத்தம் கொடுத்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தவள் வேண்டாமென்று கணவனுடன் அக்னி வலம் வந்தாள்.

சடங்குகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, விருந்தோம்பல் ஒருபக்கம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. பெண் வீட்டில் உறவினர்கள் நிறைய பேர் வந்திருக்க, மாப்பிள்ளை வீட்டு சார்பில் சிறிது ஆட்களே வந்திருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு இந்த திருமணத்தின் விருப்பமின்மையே. ஏன் ஆனந்தின் தங்கைக்குமே விருப்பமில்லை எனும்போது மற்றவர்களை எப்படி குறைகூற முடியும்.

ஆனந்தின் தங்கை பார்க்காமலேயே திருமணத்தை ம(வெ)றுக்க காரணம் என்ன?
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
பத்து மணிக்கெல்லாம் மண்டபம் காலியாக, சற்று நேரத்திற்கெல்லாம் ஆனந்த் மாமனாரிடம் வந்து, “மாமா நாங்க கிளம்பறோம். அவங்க சொன்ன டைமுக்குப் போகணும். இல்லன்னா கோபப்படுவாங்க. நீங்க எங்களோட வர்றீங்களா?” என்றவன், பின் அவனே, “இல்ல மாமா இங்க எல்லாத்தையும் முடிச்சி செட்டில் பண்ணிட்டு வாங்க. அதுவரை நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்” என்று அம்மாவிடம் வந்து, “அப்பா எங்க வந்துமா?” என்றான்.

“இங்க தான்டா இருந்தாங்க. சரி நான் போயி எங்கன்னு பார்த்துட்டு வர்றேன்” என்று நடந்து கொண்டிருந்தவரிடம், “கையோடு கூப்பிட்டு வாங்கம்மா” என்றான் கொஞ்சம் சத்தமாக.

நேரே பந்தி நடக்குமிடம் செல்ல அங்கு அவரில்லை. “என் கணிப்புப்படி இங்கதான வந்திருக்கணும். குழப்பத்துடன் எங்க போனாங்க” என்று சுற்றிலும் தேடி சமையல் செய்யுமிடம் வர, அங்கு நின்று கேசரி, அல்வா மற்றும் பாயசம் அனைத்தையும் வளைத்துக் கட்டிக் கொண்டிருந்த விவேகானந்தைப் பார்த்து முறைத்தார்.

தற்செயலாகத் திரும்பிய விவேகானந்தன், திருதிருவென்று விழித்து, ‘ஆஹா! இப்பத்தான ஆரம்பிச்சோம். அதுக்குள்ள என் பொண்டாட்டிக்கு மூக்கு வேர்த்துருச்சா. ஹ்ம்... அவ கடமையை கரெக்டா பண்றாயா’ என நினைத்தபடி கையிலுள்ளதை மெல்ல கீழே வைத்து முறைத்த மனைவியைப் பார்த்து, “அது வந்து டார்லிங்!” என அசட்டுச்சிரிப்பு சிரித்தார்.

“உங்களை! கல்யாண வீடா போயிருச்சி இல்லன்னா நடக்குறதே வேற. முதல்ல அந்த அசட்டுச்சிரிப்பை நிறுத்துறீங்களா. பார்க்க சகிக்கல?” என்று பல்லைக் கடித்தபடி சொல்ல, கப்பென்று வாயை மூடிக்கொண்டார் மிஸ்டர்.விவேக்.

“வாயக்கட்டுப்படுத்தத் தெரியாத நீங்கள்லாம் எப்படித்தான் ரெண்டு மெட்ரிகுலேசன் ஸ்கூல் வச்சி நடத்தி, அவ்வளவு பிள்ளைங்களையும் கட்டுப்படுத்துறீங்களோ. எனக்கு இன்னும் தெரியல. சுகர் இருக்கே இப்படி சாப்பிட்டு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிருச்சின்னா, பொண்டாட்டி, பிள்ளைங்க க~;டப்படுவாங்களே தெரிய வேண்டாம். அட்லீஸ்ட் உயிர் பயமாவது வேண்டாமா?” என அதட்டலாக ஆரம்பித்து அழுகையில் முடித்தார் வந்தனா.

“சாரிடா வந்து. இனி இப்படிப் பண்ணமாட்டேன். நான் மாத்திரை எக்ஸ்ட்ரா போட்டுக்கறேன்மா. ப்ளீஸ் நீ அழாதடா” என்று மனைவியை படாதபாடுபட்டு சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

அவரைத் தேடி வந்த வரதராஜன் தம்பதியர் அவர்களின் அன்னியோன்யத்தை மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தன் பெண்ணின் வாழ்வில் உள்ள சின்னச்சின்ன உறுத்தல்களையும் இந்த நிகழ்ச்சி துடைத்தெறிந்தது எனலாம். நல்ல கணவன், மாமனார், மாமியார் உறவுகள் மகளுக்கு அமைந்ததில் பெண்ணைப் பெற்றத் தகப்பனாக மட்டற்ற மகிழ்ச்சி அவருக்கு.

அவர்களருகில் வந்து, “சம்பந்திகளா போதும் உங்க ரொமான்ஸைக் கொஞ்சம் தள்ளி வச்சிட்டு பொண்ணு, மாப்பிள்ளையோட கிளம்புங்க. நாங்க பின்னாடியே வர்றோம்” என்றார் ராஜன்.

“அதுவும் சரிதான். வாடா வந்து டார்லிங்” என்று மனைவியை அழைக்க, சம்பந்திகள் முன் மானத்தை வாங்கும் கணவரை முறைத்தபடி உடன் சென்றார் வந்தனா.

‘இந்த முறைப்புக்கெல்லாம் பயந்துட்டா எப்புடி’ என்று மிஸ்டர்.விவேகானந்தன் காலரைத் தூக்க, அந்தோ பரிதாபம். சிறிது நேரம் முன்புதான் வேட்டி, சட்டையை மாற்றி பேண்ட் டிசர்ட் போட்டார் அதுவும் காலரில்லாத சர்ட். சுற்றுப்புறம் யாரும் கவனிக்கிறார்களா என பார்த்து, யாரும் கவனிக்கவில்லை என்றதும் கெத்தாக நடந்தார் அந்த காலில்லா சாரி காலரில்லா சிங்கம்.

சற்று நேரத்திற்கெல்லாம், சுபாவின் மணமகள் வேசத்தைக் கலைத்து, கழுத்தில் தாலிச்செயினை மட்டும் வைத்து வெளியே காத்திருந்த ஆம்புலன்ஸில் ஏறிப்பறந்தார்கள் ஜீவானந்த் குடும்பத்தினர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுபாவை இரண்டு மணிநேரங்கள் கேட்டு அவளின் திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தார்கள்.

மனைவியை ஒருபக்கம் படுத்து ஓய்வெடுக்கச் சொல்லி தகப்பனிடம் திரும்பி, “டாட்! என்ன தப்பு பண்ணினீங்க? ரொம்ப பம்முறதைப் பார்த்தா, வந்துமாகிட்ட நிறைய வாங்கிக் கட்டிருக்கீங்க போல” என்றான் கேலியாய்.

“டேய்! ஏன்டா? இவ்வளவு நேரமா உங்கம்மாவைக் கெஞ்சிக்கூத்தாடி மலை இறக்கியிருக்கேன்.” மனைவியின் முறைப்பில், “சாரி மறக்க வச்சிருக்கேன். நீ என்னடான்னா திரும்ப முதல்லயிருந்தான்னு சொல்ல வச்சிருவ போல? ஒரு மனுசன் ஆசைப்பட்டு ஸ்வீட் சாப்பிடுறது தப்பாடா? உங்கம்மா அந்த முறை முறைக்கிறா?” என அப்பாவியாய் கேட்ட அப்பாவைப் பார்த்து சிரித்தவன்,

“ஒரு மனுசன் ஆசையாய் சாப்பிடுறதுல தப்பில்ல டாட். பட், சுகர் உள்ள மனுசன் சாப்பிடுறது கண்டிப்பா தப்புன்னு...” கொஞ்சம் இடைவெளி விட்டவன், “நான் சொல்லல டாட் சைன்ஸ் சொல்லுது.” அப்பாவியாய் சொன்னவனை முறைத்த விவேக்கைப் பார்த்து, “முறைக்காதீங்க டாட். இதுதான் நிஜம்” என்று சிரிக்காமல் சொல்லி, தந்தையிடமிருந்து இரண்டு அடிகள் வாங்கினான்.

“ஸ்... டாட் கல்யாணம் ஆன பையனை இப்படியெல்லாம் அடிக்கக்கூடாது. அந்த ரைட்ஸ் ஒய்ஃப்கு மட்டும்தான் இருக்குதுன்னு சைன்ஸ் இல்ல நான் சொல்றேன் டாட்” என்றவாறு சிரித்தான்.

அவர்களின் வம்புகளைக் கேட்டுக்கொண்டிருந்த சுபா வாய்விட்டுச் சிரித்தாள். சிரிக்கும் பொழுது முகத்தில் வலி ஏற்பட, சற்று முகம் சுளித்தாள். ஆனால், சத்தம்தான் மெல்லியதாக வந்தது. மனைவியின் வலியை மீறின சிரிப்பை முதன் முதலில் ரசனையுடன் ஜீவானந்த் பார்த்துக் கொண்டிருந்தான்.

மற்றவர்கள் அமைதியில் அவர்கள் தன்னைப் பார்ப்பது புரிந்து, “சாரி” என்றாள்.

அந்த மெல்லிய குரல் மிகவும் மெல்லியதாக வந்து அவர்களின் காதில் விழவில்லை. அவளின் உதடசைவை வைத்தே கண்டு கொண்டார்கள்.

மருமகளைத் தன் மடியில் படுக்கவைத்து தலை கோதியபடி, “சாரி எதுக்குமா? இனி எங்க கூடதான் இருக்கப்போற, இந்த மாதிரி நிறைய காதுல விழும், ஒண்ணு நீ கண்டுக்கக்கூடாது. இல்ல நீயும் எங்களோட சேர்ந்து ஜாலியா இருக்கணும். நான் செகண்ட் சொன்னதைச் செய். அப்படியிருந்தா வர்ற துன்பம்கூட இன்பமா மாறிடும். இதுக்குப்போயி எதோ தப்பு செஞ்ச மாதிரி சாரி கேட்பாங்களா என்ன?” என்றார்.

“இவன் பரவாயில்லமா, இன்னொரு வாண்டு இருக்கே ப்பா... இவங்க ரெண்டு பேரையும் பெத்தேனா இல்ல செஞ்சேனான்னு எனக்கே சில சமயம் சந்தேகம் வருதுன்னா பாரேன்” என்றதும் திரும்பவும் சிரிக்க, தன் தாய் தன்னையும், அண்ணனையும் இதேபோல் சொல்வது நினைவு வந்தது சுபாவிற்கு. அந்த நினைவில் சிரித்த முகம் மாறாமலிருக்க, அதில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவானந்த்.

“என்னங்க? ஜீவா... ஜீவான்னு நமக்கு ஒரு பையனிருந்தான். இன்னைக்கு கல்யாணமான புதுமாப்பிள்ளைங்க இங்கதானிருந்தான். இப்ப காணோம் பார்த்தீங்களா” என்று கிண்டலாகக் கேட்டார் வந்தனா.

“எங்கடா வந்து டார்லிங்? நான் உன்னை சைட்டடிச்ச மாதிரி அவன், அவன் ஒய்ஃபை வச்ச கண் வாங்காம சைட்டடிக்கிறான்” என்றதும் ஜீவா தலையை உலுக்கி நிமிர, சுபாவோ வந்த வெட்கத்தில் முகச்சிவப்பை மறைக்க மாமியாரின் வயிற்றுப்புறம் திரும்பினாள்.

“டேய் ஜீவா! ரொம்ப பார்க்காத.. மருமக வெட்கப்படுறா” என்றதும் ஜீவாவின் மனம் சந்தோசத்தில் சிறகடித்தது.

சுபாவிற்கோ, ‘காரில் பேசியதை வைத்து கணவனை தப்பாக நினைத்து விட்டோமோ’ என்றே தோன்ற ஆரம்பித்தது. மூவரின் அரட்டையுடனும், சுபாவின் ரசனையுடனும் ஆம்புலன்ஸ் அந்த தனியார் மருத்துவமனை நுழைய, கீழே இறங்கி மருமகளைப்; பிடித்த வந்தனா என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே செய்தபடி வந்தாள் சுபா.

சுபாவை அனுமதித்திருந்த அறையில் படுக்கவைத்து அருகில் வந்தனா அமர, “அம்மா தாலிகட்டுறதுக்கு முன்னாடிதன் என்னை அவள் பக்கத்துல உட்காரக்கூடாது சொன்னீங்க? சரின்னு நானும் மனசைத் தேத்தி விட்றா பார்த்துக்கலாம்னு இருந்துட்டேன். இப்ப அவ என் ஒய்ஃப். இப்பக்கூட நீங்க தான் உட்கார்றீங்க? டாட் என்ன பார்க்குறீங்க, ஏன்னு கேட்க மாட்டீங்களா?” என்று சிறுவனாக புகார் செய்து சிணுங்கினான் ஜீவா.

கணவனின் சிணுங்கல் பேச்சுக்கள் அனைத்தையும் சிறுகச்சிறுக சேகரித்து மனதினுள் பூட்டிக்கொண்டிருந்தாள் அவனின் மனைவி.

“வந்து டார்லிங்!” என ஆரம்பித்தவரிடம், “என்ன வந்து போயின்னு, ஒழுங்கா முழுப்பெயரையும் சொல்லிக் கூப்பிடுங்க. இந்த லட்சணத்துல டார்லிங் வேற அதுவும் மருமக முன்னாடி மானத்தை வாங்குறீங்க?” என்றார்.

மருமகளிடம் திரும்பிய விவேக், “ஏன் பாப்பா? இதையெல்லாம் நீங்க கண்டுக்கமாட்டீங்க தான?” என்று கேட்க, தன் தந்தை அழைக்கும் ‘பாப்பா’ என்ற வார்த்தையை மாமனார் சொன்னதும், அதில் உருகியவள் உதட்டில் சிரிப்புடன், “இல்லை மாமா” என மெல்லிய குரலில் சொல்ல, அதைக் கிரகித்த விவேக், “அது... அது என்னோட மருமக. நீயும் இருக்கியே” என்று மனைவியிடம் திரும்பினார்.

இவர்கள் சண்டை ஓயாது என்று நினைத்தவன், “ம்மா... ம்ம்மா...” என்று தாயைத் தொட்டு அழைக்க, “இவன் வேற மாடு மாதிரி ம்மாஆஆன்னு.. ஆரம்பிச்சிட்டான். என்னவோ பண்ணு நீயாச்சி. உன்னோட பொண்டாட்டியாச்சி” என்று கணவரையும் வெளியே தள்ளிக்கொண்டு சென்றார் வந்தனா.
 
Top