• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் 2

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அத்தியாயம் 2

மறுவாரம் வந்த ராகினியிடம், “கோவிலில் இருந்து தவறாகப் பேசியதால் சொல்லவில்லை. அதையெல்லாம் நான் மறந்துவிட்டேன். உங்க பெண்ணுக்கு நாக தோஷமிருக்கிறது. நாளை கூட்டிக்கொண்டு வாங்க. தோஷ நிவர்த்தி செய்துவிடலாம்” என்றெழுதிக் காண்பித்து அனுப்பி வைத்தார் ராஜேஸ்வரி.


‘மாட்டேன்’ என்று மறுத்த மகளைத் தன் அன்பால் அடக்கி அழைத்து வர, யாருமற்ற அந்நேரத்தில் அங்கிருந்த கிணற்றிலிருந்து தலைக்குத் தண்ணீர் ஊற்றி, ஈரச் சுடிதாருடன் கையில் நெய் விளக்கேந்தி புற்றைச் சுற்றிலும் அடிப்பிரதட்சணம் செய்ய, அதன்பின் இன்னும் சில பரிகாரம் செய்த பிறகு, ராகினியை அங்கிருந்த மரத்தைப் பதினோரு முறை சுற்றச் சொல்லியனுப்பி, அன்பழகியிடம் தோஷம் கழிந்ததாகச் சொல்லி அம்மனை வணங்கச் சொன்னார் சாமியம்மா.

நாகாத்தம்மன் பாதம் பணிந்து எழுந்தவள், தன் காலிலும் விழுவாளென்று பார்க்க, அவளோ அசையாது நிற்க ராஜேஸ்வரியோ விபூதி பூசிவிட்டு எழுதி வைத்திருந்ததை அவளிடம் காண்பித்தார்.

அதில் ‘சீக்கிரமே பலர் பார்க்க என் காலில் விழவைப்பேன். இது அம்மன் வாக்கு’ என்று எழுதியிருந்தது.

மெல்ல புன்னகைத்தவள், “பூசாரி என்றைக்கும் அம்மனாக முடியாது. உங்க செயலிலிருந்தே இன்றைய பரிகாரம் உங்க வேலைன்னு தெரியுது. பிடிவாதமா மறுத்திருந்தா எங்கம்மா கட்டாயப்படுத்த மாட்டாங்க. நான் வந்ததுக்குக் காரணம் இந்த நாகாத்தம்மனுக்காகவும், என்னைப் பெத்த அம்மாவுக்காகவும்தான். விரதமிருந்து பரிகாரம் செய்யுறது உடலுக்கும், மூளைக்கும், மனசுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். இது எனக்கான தியானம் மாதிரிதான். வரட்டுமா சா..மி.. அம்..மா” என சிறு கேலி இழையோட தாயை நோக்கி நடக்க, நான்கைந்து அடி நடப்பதற்குள் அவள்முன் எழுத்துப்பலகை நீட்டப்பட்டது.

“மீண்டும் சந்திப்போம்” என்ற வாசகத்தைப் படித்தவள் அவரின் சிறுபிள்ளைத்தனமான செயலை எண்ணி வந்த சிரிப்பை அடக்கி, “அந்நாளுக்காகக் காத்திருக்கிறேன்” என்றுவிட்டு தாயிடம் சென்றாள்.

“பொம்மு! இவங்க மாதிரி ஆளுங்ககிட்ட பகை வச்சிக்கக்கூடாதுடா. எப்பவும் கடவுள் நாமம் மட்டுமே சொல்றவங்க வாயால தவறா ஒரு வார்த்தை சொல்லிட்டா அது சாபம் மாதிரியாகிரும். எதாவது பேசினா கண்டுக்காம வந்திரு” என்றார் ராகினி.

“அம்மா! கோபம், அகங்காரம், திமிர், வன்மம் எப்ப ஒருத்தருக்குள்ள வந்திருச்சோ அப்பவே கடவுள்கிட்டயிருந்து விலக ஆரம்பிச்சிட்டாங்கன்னு அர்த்தம். போன வாரம் அவங்களுக்காக எடுத்த விழாவில் அவங்க முகத்தில் புகழ் போதையினால் உண்டான பெருமை தெரிஞ்சது. நிஜ சித்தர்கள் ஆசையைத் துறந்து துறவியானவங்க. இவங்ககிட்ட அது மிஸ்ஸிங். இல்ல ஜனங்க இவங்க கால்ல விழும்போது, சாமி நான் கிடையாது. அம்மன் அங்கயிருக்கா அங்க மட்டும் விழுங்கன்னு சொல்லித் தடுத்திருக்கலாமே.. ஏன் செய்யலை? சோ, இதுவும் ஒருவகையான ஏமாற்றுதான். நம்மளை கிடையாது கடவுளை ஏமாத்துறாங்க” என்றாள் விளக்கமாக.

“நல்லா தெளிவா பேசுற பொம்முமா. இருந்தாலும் இப்படி எல்லார் முன்னாடியும் கேட்குறதைக் குறைச்சிக்கோ. அது சிலரோட ஈகோவைத் தட்டிவிட்டுப் பகையையும், எதிரிகளையும் உருவாக்கும்” என நிதர்சனத்தை எடுத்துரைத்தார்.

“சரிம்மா பார்த்து நடந்துக்குறேன்” என்று பணிய, அவர்கள் செல்வதைப் பார்த்திருந்த ராஜேஸ்வரிக்கு அன்பழகி சொல்வதிலுள்ள நியாயம் புரிந்தாலும், அனைவர் முன்னும் பட்ட அவமானம், உள்;ர் ஊடகங்களில் தன்னைப்பற்றிய அவதூறாக வந்த செய்திகள், நேராகப் பார்த்ததும் காலில் விழும் சிலர் இன்று விலகிச் செல்வது என அனைத்தும் அவரை அமைதிப்படுத்த மறுக்க, தன்னுடையத் தகுதியை மறந்து சில வேலைகளைச் செய்தார். பிறவி குணம் தலை நீட்டுகிறதோ!

இரண்டு மாதங்கள் கழித்து திருவள்ளுர் காவேரி நகரிலிருக்கும் ஒரு வீட்டில் வேலைகள் அனைத்தும் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று தூரத்து உறவினர் ஒருவர் பெண் பார்க்க வருவதாக போன் செய்ய, சதாசிவம் ராகினி தம்பதியினருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கைபேசி அழைப்பிலேயே வேண்டாமென்று மறுத்துவிட்டார்கள்.

அவரோ விடுவேனா என்று, “பையன் நம்ம தூரத்துச் சொந்தம்னு சொல்றாங்க சதா. அவங்களை நாம பார்த்ததில்லைனாலும் விசாரிச்சதுல நல்ல குடும்பம்னு தெரிஞ்சது. அதனாலதான் நம்ம பாப்பாவுக்குக் கேட்டேன். பையன் டாக்டராம். இதுமாதிரி சந்தர்ப்பம் எப்பவும் அமையாது. சில விஷயம் போன்ல சரிவராது. நான் நேர்ல வந்து பேசிக்கறேன்” என்றிருந்தார்.

“என்னங்க இந்த மாமா இப்படிப் பேசுறார்? வரவேண்டாம்னு சொன்னாலும் வருவேன்னா என்ன அர்த்தம்? உங்க பொண்ணுக்கு மட்டும் இது தெரிஞ்சது வேப்பிலை இல்லாமலேயே பேயோட்டிருவா.”

“நீ அமைதியாயிரு ராகினி. சித்தப்பா கூட்டிட்டு வர்றேன்னு சொல்றார்ல பார்த்துக்கலாம். பிடிச்சிருந்தா சம்மதிப்போம். இல்லைனா வேண்டாம்னு நேராவே சொல்லிருவோம்.”

“இல்லைங்க. முறையா எதுவும் நடந்த மாதிரித் தெரியலையே. ஜாதகமே பார்க்காம பையன் வீடு வர்றாங்கன்னா எப்படிங்க? ஒருவேளை நம்ம பொண்ணுக்குப் பையனைப் பிடிச்சிருந்து ஜாதகம் பொருந்தலைனா அதுவும் கஷ்டம்தானே” என்றார் கவலையுடன்.

“ப்ச்.. ராகினி! சித்தப்பாகிட்ட நம்ம பொண்ணு ஜாதகம் இருக்கு. அவருமே எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யுற ரகம் கிடையாது. எதுவானாலும் யோசிக்காம செய்யமாட்டார். கண்டிப்பா ஜாதகம் பார்த்துதான் இந்த முடிவுக்கு வந்திருப்பார். பொண்ணு வர்றதுக்குள்ள பேசி முடிச்சி அனுப்பிரலாம்” என்று மனைவியை சமாதானப்படுத்தினார்.

“அப்ப சரி” என்று அரைகுறையாகத் தலையாட்டினார் ராகினி.

நான்கு ஆண்களும் இரண்டு பெண்களுமாய் வந்திறங்க, அவர்களை வரவேற்ற ராகினி இளையவளைக் கண்டு, “பவானிதான நீ?” என்றவர் குரலில் தெரிந்துகொள்ளும் ஆவல். ஓருமுறையே பார்த்திருந்ததால் ஒரு சின்ன சந்தேகம்.

“ஹை ஆன்ட்டி நீங்களா? அப்ப அன்பழகி சீனியரைத்தான் பெண் பார்க்க வந்திருக்கோமா? வாவ்! அவங்க என் அண்ணியா வந்தா சூப்பராயிருக்கும்” என்று துள்ளிக்குதிக்காத குறையாகப் பேசிக்கொண்டிருந்தவளின் முகத்தை ஆதுரமாக வருடி, “எல்லாம் பேசி முடித்ததும் பார்த்துக்கலாம்டா. நீ உட்கார்” என்றவர் அவளின் அப்பா, அம்மா, இரு தம்பிகளுடன் தகவல் தெரிவித்திருந்த கோதண்டம் மாமாவையும் அமரவைத்து சிற்றுண்டி அளித்துப் பேசிக்கொண்டிருக்க, ஆக்டிவாவின் சத்தம் கேட்டதில் வேகமாகக் கணவரைக் காண, அவரின் ஆறுதலான விழியசைவில் அமைதியாகிவிட்டார் ராகினி.

வாசலில் நிற்கும் காரைக்கண்டு புருவம் உயர்த்தி, ஓட்டி வந்த ஆக்டிவாவை சற்று ஓரம் நிறுத்தி வீட்டினுள் நுழைய, அங்கிருந்தவர்களைக் கண்டவளுக்கு புருவ மத்தியில் முடிச்சிட தாயை ஏறிட்டாள்.

மகளைத் தனியாக அழைத்துச் சென்று விஷயத்தை உரைக்க, “அம்மா! ப்ச்.. என்ன சொல்றதுன்னு தெரியலை. என்கிட்ட இன்பார்ம் பண்ணாம இருந்திருக்கீங்கன்னா, உங்களை மீறின ஒண்ணாதான் இருக்கும்னு புரியுது. வேணும்னா நான் பேசி அனுப்பவா?” என்றாள்.

தங்கள் மேலுள்ள நம்பிக்கை புரிய, மகளின் கன்னத்தில் முத்தமிட்டு புன்னகைத்தவர், “வேண்டாம் பொம்மு. அப்படிச் செய்தா கூட்டிட்டு வந்த கோதண்டம் தாத்தாவை நீ அவமானப்படுத்தின மாதிரி ஆகிரும். பையன் டாக்டர்னு சொல்றாங்க. பேசித்தான் பார்ப்போமே. அப்புறம் மாப்பிள்ளையோடத் தங்கை யார் தெரியுமா?” என்று நிறுத்த,

“நான்தான்” என்றவாறு வந்து நின்ற பவானி, “ஹாய் சீனியர்! சாரி அன்னைக்குக் கோவில்ல நம்பர் கொடுக்க முடியலை. சாமியம்மா முன்னாடி வீசுனீங்க பாருங்க கேள்வி.. ப்பா.. அப்படியே உங்களைக் கட்டிக்கலாம் போலிருந்திச்சிது. காலேஜ்ல உங்க நம்பர் வாங்க முயற்சித்தா, பெயரைத்த தவிர, எந்த வருஷம் முடிச்சீங்க, மேஜர் என்ன எதுவும் தெரியலை. ரொம்ப ஃபீல் பண்ணினேன் தெரியுமா? இங்க வந்து பொண்ணு நீங்கன்னு தெரிஞ்சதிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் ரொம்ப சந்தோசமா போகுது. இனி நீங்க என் அண்ணி” என்று அன்பழகியின் கையைப் பிடித்து தன் அன்பைத் தெரிவித்தாள்.

“பவிக்குட்டி! இன்னும் எதுவும் பேசலை. அதுக்குள்ள முடிவு பண்ணக்கூடாது. அதோட அன்பழகி சீனியர்னு காலேஜ் லெக்சரர் யார்கிட்டக் கேட்டாலும் என்னைப்பற்றிய தகவலைக் கொடுத்திருப்பாங்க” என்றாள் புன்னகையுடன்.

“அவ்வளவு பிரபலமா நீங்க?” என்று வியப்பாய் பார்க்க,

“பிரபலம் இல்ல பவிமா.. ப்ராப்ளம் பிடிச்சவள். எப்பப்பாரு சண்டை சண்டைன்னு பஞ்சாயத்துப் பண்ண எங்களை வரச்சொல்லியே நாங்களும் உங்க காலேஜ்ல ஃபேமசாகிட்டோம். ஓவர் ஆட்டிடியூட்” என்று முகம் சுளித்தார் ராகினி.

“அம்மா! ஓவர் அட்டிடியூட்னா பந்தா காட்டுறது, அலப்பறையைக் கூட்டிடுறது சொல்வாங்க. நான் என்ன அப்படியா? மத்தவங்களுக்கு உதவுறப்ப சின்னச்சின்ன அடிதடிகள் வரத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுக்கக்கூடாது” என்க,

ஹ்க்கும்.. என்று ராகினி நொடிக்க, அதைக்கண்டு அசடுவழிய சிரித்த அன்பழகி, “பவிக்குட்டி காலேஜ் கட்டடிச்சாச்சா?” தன் விசாரணையைத் துவங்கினாள்.

“இல்ல அண்ணி. நாளைக்கு ஆனுவல் பங்க்ஷன். அதுக்கான லீவ் விட்டுருக்காங்க” என்றாள்.

‘அதுக்குள்ள அண்ணியா? சுத்தம்’ என மனம் நினைத்தாலும், தாயிடம் திரும்பி ‘என்னம்மா இது?’ என்று சைகையில் கேட்க, ‘சின்னப்பொண்ணு அவள். விடு’ என்றார் கண்ணாலேயே.

“அண்ணி இது அண்ணன்” என்று கைபேசியில் புகைப்படம் ஒன்றைக் காட்ட, ‘ம்.. பரவாயில்லை’ என்றுதான் தோன்றியது. போட்டோ எடுத்து எப்படியும் மூன்று நான்கு வருடங்கள் இருக்கும் என்பது அன்பழகியின் கணிப்பு. பவானியிடம் தெரியும் சோகம், அவள் அண்ணனின் அழுத்தத்தையும் மீறி கண்களில் தெரிந்தது.

அவன் புகைப்படத்தை வேறு பெண்ணிடம் காட்டியிருந்தால் அழகன் என்றிருப்பாள். இவளோ ஆராய்ச்சியாகப் பார்த்தாள். காதல் என்றால், ‘ஐயையோ! ஓடுங்க. ஒரு கொடிய மிருகம் நம்மைத் துரத்துது’ எனும் ரகம் இவள். அன்பழகியைப் பொருத்தவரை சண்டை போடத் தெரிந்தளவு ஒரு ஆணை ரசிக்கத் தெரியாது. ஆண்களைப் பிடிக்காதென்று அல்ல. ஆண் பெண் இருபாலினரையும் சரிசமமாகப் பார்க்கத் தெரிந்ததால், தனக்கானவனுக்கென்ற தனித்துவமான அன்பை வெளிப்படுத்த இன்னும் சமயம் வரவில்லையோ!

அப்படி வந்தால் எப்படியிருப்பாள்?

“பிடிச்சிருக்கா அண்ணி? அண்ணன் ரொம்ப நல்லவங்க. லைஃப்ல கஷ்டப்பட்டு முன்னேறினவங்க” என்றாளவள்.

“ம்.. பார்த்தாலே தெரியுது. பெயர் என்ன?”

“செந்தூரன் அண்ணி” என்றாள் வேகமாய்.

“ம்.. நாட் பேட்” என்றாள் அன்பழகி.

“அவ்வளவுதானா?” கேள்வியுடன் பவானியின் முகம் சுருங்க,

“நாட் பேட்னா, நல்லாயிருக்காங்கன்னு அர்த்தம் பவிக்குட்டி. பெயரோட உன் அண்ணாவும் ஓகேதான்” என்று புன்னகைக்க, “தேங்க்யூ.. தேங்க்யூ அண்ணி” என்று அன்பழகியின் கன்னம் பிடித்து முத்தமிட்டு ஓடிவிட்டாள்.

‘கிரேஸி கேர்ள்’ என்று அவளை அலட்சியப்படுத்தி ஹாலிற்கு வர, அதற்குள் சதாசிவம் கிட்டத்தட்ட பேச்சு வார்த்தையை முடித்திருக்க அதிர்ச்சிதான் தாய் மகளிற்கு.


“அப்பா!” என இடைமறித்த மகளை அமைதியாகப் பார்த்து, “அப்பாவுக்குப் பிடிச்சிருக்கு பொம்மு” என்று முடிவாக சொல்ல, மனதில்லை எனினும் சபையில் தந்தையை விட்டுக்கொடுக்க மனமில்லாது சம்மதித்துவிட்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
பவியின் அப்பா அம்மாவான ராஜலட்சுமி, சேகர் தம்பதியருக்கு அப்பொழுதுதான் நிம்மதி மூச்செழ, ஏற்கனவே ஜாகதம் பார்த்து சில முகூர்த்த தேதிகள் குறித்திருந்ததால், அடுத்தடுத்தப் பேச்சு வார்த்தையாக ஆரம்பித்து, ஒரு மாதத்தில் திருமணம் என்று பேசி முடித்தார்கள்.

அவர்கள் சென்றதும், “ஏன்பா இவ்வளவு அவசரம்? பையனைப் பார்க்கலை? விசாரிக்கலை? இன்னும் என்னென்னவோ.. ப்ச் போங்கப்பா” என சலித்தபடி மாடியிலிருக்கும் தன்னறைக்குள் நுழைந்தாள்.

“எதுக்குங்க இந்த அவசரம்?” மகள் கேட்டதையே ராகினி கேட்க, “சித்தப்பா ஒரு விஷயம் சொன்னார் ராகினி. அதான்..” என இழுத்தார்.

“என்ன விஷயமா இருந்தா என்னங்க? இவங்க இல்லைனா இன்னொருத்தர். அதுக்காக விசாரிக்கும் முன்ன வாக்குக் கொடுப்பீங்களா? எங்களுக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலைங்க” என்று தன் விருப்பமின்மையைத் தெரிவித்தார்.

“நம்ம பொண்ணு விஷயத்துல அவ்வளவு அசால்டா இருப்பேனா ராகினி? காலையில் சித்தப்பா போன் செய்ததுமே மாப்பிள்ளை பற்றி விசாரிச்சாச்சி. அவர் வேலை செய்யுற ஹாஸ்பிடல் முதற்கொண்டு நல்ல பையன்னு சொல்றாங்க. அதிலும் அங்கவுள்ள சீனியர் டாக்டர் நம்பிக் கொடுங்கன்னு சொல்றார். அவர் ஃப்ரண்ட்ஸ் சர்கிள்லயும் ஆள் வைத்து விசாரிச்சிட்டேன். எந்தவித கெட்ட சகவாசமும் கிடையாது டீ-டோட்லர்னு தெரிஞ்சதும்தான் இந்த முடிவெடுத்தேன்” என தான் விசாரித்ததைச் சொன்னார் சதாசிவம்.

“ப்ச்.. நான் அதுக்காகச் சொல்லலை. என்னோட விருப்பமோ பொண்ணோட விருப்பமோ கேட்கலையே... ஏன்னு கேட்கிறேன்?” என்றார் கோபமாக.

“நான் சொன்னா சரியாயிருக்கும்னு நீங்க புரிஞ்சிப்பீங்கன்ற நம்பிக்கையில் வாக்குக் கொடுத்துட்டேன். இப்ப என்ன வேண்டாம் சொல்லணும் அவ்வளவுதான? இரு சித்தப்பாகிட்டச் சொல்லிருறேன்” என்று கைபேசியை எடுக்க, அதைத் தடுத்த ராகினி, “உங்க இஷ்டப்படியே செய்யுங்க. பையன்கள் வந்து கேட்டா அவனுங்களையும் சமாளிக்கத் தயாராயிருங்க” என்று நகர்ந்துவிட்டார்.

மனம் ஒரு நிலையிலில்லை சதாசிவத்திற்கு. சித்தப்பா கோதண்டம் அவரைத் தனியே அழைத்துச் சென்று, “சதா! பொண்ணு பையன் ஜாதகம் பார்க்கப் போனப்ப நம்ம பொண்ணு ஜாதகத்துல செவ்வாய் தோஷமிருக்குன்னு தெரிஞ்சது. அதைப் பார்த்ததும் கொஞ்சம் பயம் வந்திருச்சி. பையனோடதைப் பார்க்கும்போது அவனுக்கும் அதுதான். உனக்கேத் தெரியும் செவ்வாய் தோஷமுள்ள பொண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளை அமையுறது எவ்வளவு கஷ்டம்னு. முப்பது முப்பத்தைந்து வயதாகியும் மாப்பிள்ளை அமையாம ஊர் சைடு எத்தனை பொண்ணுங்க இருக்காங்கன்றது, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தப் பையன் டாக்டர். நல்ல குடும்பம். நல்ல வசதி. அதான் நீங்க தடுத்தும் கூட்டிட்டு வந்துட்டேன். பாப்பா மேல உள்ள அக்கறையில் பண்ணிட்டேன். தப்புன்னா ம...”

“விடுங்க சித்தப்பா. நீங்க நல்லதுதான் செய்வீங்க தெரியும். நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன்” என்றிருந்தார். இதோ இப்பொழுதே மனைவி, மகளிடம் காரணத்தைச் சொல்லிவிடலாம்தான். இது அவர்களுக்கு உறுத்தலாக இருந்துவிடக் கூடாதென்ற காரணத்தினால் மறைத்துவிட்டார்.

மறுவாரத்தில் மாப்பிள்ளை பெண்ணை கோவிலில் வைத்துக் காட்டி சம்மதம் கேட்க தலையசைப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது இருவருக்கும். அதையடுத்துப் பத்திரிக்கை அடிக்க மண்டபம் பார்க்கவென்று கல்யாண வேலை வெகு வேகமாக நடைபெற, அன்பழகி போனை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள்.

பத்திரிக்கை அடித்து வந்து முறையாக வைக்க ஆரம்பித்ததும், பவானியிடமிருந்து செந்தூரனின் நம்பர் வாங்கிவிட்டாள். அவனைப் பற்றி எதுவுமே தெரியாமல் திருமண பந்தத்தில் இணைவது எப்படி? என்ற யோசனை அவளுக்கு. மணி நேரம் உட்கார்ந்து பேசாவிடினும் சில நிமிடங்கள் பேசினாலே போதும். அச்சில நிமிடங்களிலேயே அவனைப் பற்றிய ஒரு கணிப்புக்கு வந்துவிடுவாள். கோவிலில் பார்த்த பொழுது அவன் கண்ணைப் பார்க்க எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. கருப்பு நிற கண்ணாடியை அவன் கழற்றவுமில்லை.

ஏதோ ஒரு அழுத்தம் அன்பழகி மனதினுள். வாழ்நாள் முடிவல்லவா!

‘ஆயிரம் பேருக்குக் கவுன்சிலிங் பண்ற என்னையே, கவுன்சிலிங் அனுப்பி வச்சிருவான் போலவே’ என்ற எண்ணம் எழ சிரிப்புதான் வந்தது அவளுக்கு. ஒரு வேகத்தில் அவனிடம் பேச நம்பர் வாங்கிவிட்டாள்தான்.. ஆனால் அழைக்கவில்லை. பவானியிடம் தன்னைப்பற்றி விசாரித்தானா? என்று கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. எல்லா இல்லைகளின் நடுவே தொல்லையாய் அவன் முகம்.

அதோ இதோ என்று திருமண நிச்சயதார்த்தமும் வந்துவிட்டது. விடிந்தால் திருமணம் என்றிருக்க தாயை ஒருவழி செய்து கொண்டிருந்தாள் அன்பழகி.

“அம்மா பையன்கிட்ட நீங்களும் பேசலை. நானும் பேசினதில்லை. அப்பாவாவது பேசியிருப்பாங்களா தெரியலை. எப்படிம்மா நிச்சயம், கல்யாணம்னு பக்கத்துல நிற்கிறது? எனக்கு என்னவோ போலிருக்கு” என்றாள் ஒருவித தவிப்புடன்.

“கேட்குறாள்ல பதில் சொல்லுங்கம்மா?” என்றபடி வந்த பெரிய மகனைக் கண்டு, “வாடா அகில். கூடப்பிறந்த அண்ணன்காரன் வர்ற நேரமா? இரண்டு நாள் கழித்து வரவேண்டியதுதான” என்று கோபத்தில் சொல்லி, “ப்ச்.. நாலுநாள் முன்னாடியாவது வந்திருக்கலாமேடா” என்றார் ஆற்றாமையுடன்.

“விசா கிடைக்க லேட்டாகிருச்சிம்மா” என்றான் அகிலன்;. சதாசிவம் ராகினி தம்பதியரின் மூத்த மகன்.

“சரி நேஹா எங்க?” என்று மருமகளைக் கேட்க,

“வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன்மா. ஒரு மணிநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்னு என்னை அனுப்பி வச்சிட்டா.”

“வீட்டுல சாப்பிட எதுவும் இருக்காதேடா. கர்ப்பமா இருக்கிற பொண்ணு பக்கத்துலயே இருந்து கூட்டிட்டு வந்திருக்கலாம்ல” என்று மகனைக் கடிந்தார்.

“அதெல்லாம் அவள் சமாளிச்சிப்பாம்மா. அதை விடுங்க. அன்பு என்னவோ சொல்லிட்டிருந்தாளே, என்ன விஷயம்?” என்றான்.

“நல்லா கேளுண்ணா. கேஸ் விஷயமா பகல்ல போயிட்டு நைட் வர்றதுக்குள்ள உன் அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து பேசி முடிச்சாச்சி. ஒரு மாதத்தில் கல்யாணம்னு இன்பார்ம் பண்ணுறாங்க. விவரம் கேட்டா அம்மாவுக்கே சரியாத் தெரியலை. ஏனோதானோன்னு கொடுக்க என் அக்கா என்ன பொம்மையா? நான் செம கோபத்துல இருக்கேன்மா” என்றான் அதியன். சதாசிவம் ராகினி தம்பதியரின் கடைக்குட்டி.

“அதி அப்பா எதையும் தெரியாம செய்ய மாட்டாங்கடா. விடிஞ்சா கல்யாணம்ன்றப்ப இப்ப பேசி ஒண்ணும் ஆகப்போறதில்லை. நீ அமைதியாயிரு. அப்பாகிட்ட உன்னோட கோபத்தைக் காட்டிராத” என்று எச்சரித்த அக்காவை முறைத்தபடி நிற்க,

“என்னாச்சி? எதுவும் பிரச்சனையா? இப்ப உள்ள வரலாமா?” என்ற குரலில் திரும்பி வாசற்புறம் நின்றிருந்த தாவணிப் பெண்ணை பார்த்தார்கள்.

“ஏய் பவிக்குட்டி! உள்ள வா. என்ன பெர்மிஷன்லாம் கேட்கிற?” அன்பழகி பவானியை அழைக்க,

அதியனின் கோபக்குரலில் அங்கேயே நின்றிருந்தவள் பயத்தில் மெல்ல உள்ளே வந்து அன்பழகி அருகில் நிற்க, “அண்ணா இவள் பவானி. உன் வருங்கால மச்சானோட தங்கச்சி. இவளுக்கடுத்து இரண்டு தம்பிகள் இருக்காங்க” என்று அறிமுகப்படுத்தி, “பவானி இது என் அண்ணன் அகிலன். அண்ணி நேஹா வீட்டுலயிருக்காங்க. இவன் எங்க கடைக்குட்டித் தம்பி அதியன்” என்று அறிமுகப்படுத்தினாள்.

அகிலனுக்கு சற்று புன்னகையுடன் வணக்கம் வைத்தவள், அதியன் முகம் பார்க்க பயந்து குனிந்து வணக்கம் வைத்து, “அண்ணி ட்ரஸ் நல்லாயிருக்கா?” என்றாள் அவளுக்கு மட்டும் கேட்கும்படி.

“பவிக்குட்டி எந்த ட்ரஸ் போட்டாலும் அழகாதான் இருக்கும் கண்ணுல ஏன் இவ்வளவு பயம்? எதாவது பிரச்சனையா?” என்க,

“அ..அது உங்க தம்பி கத்தினதுல பயந்துட்டேன்” என்றாள் முகத்தில் கலவரத்தை அப்பியபடி.

“அது மட்டும் காரணம்னு தெரியலையேடா” என்றாள் யோசனையாக.

“அது ஆம்பளைங்க நிற்கிற இடத்துல நான் நின்னது அம்மாவுக்குத் தெரிஞ்சிதுன்னா, ஏன்டா பொண்ணா பிறந்தோம்னு இருக்கிற அளவு பயங்கரமா பேசுவாங்க” என கண்கலங்கச் சொன்னவளைத் தன்புறம் திருப்பி, “இனி நான் பார்த்துக்குறேன். இந்த மாதிரி எல்லாத்துக்கும் பயந்து கண்கலங்கக்கூடாது. சரியா? யாராவது எதாவது சொன்னா என்கிட்ட வா” என நாத்தனாருக்கு ஆறுதலளிக்க,

“ம்.. சரிங்க அண்ணி” என்று புன்னகைத்தவளுக்கு மனதில் சொல்ல முடியா நிம்மதி.

“சாப்பிட்டியா?”

“உங்களோட சாப்பிடுறேன் அண்ணி” என்றதும் தோளோடு சேர்த்தணைத்து, “அம்மா.. இவள் என்னோடவே இருக்கட்டும். நீங்க வெளில பாருங்க. அண்ணா.. அண்ணி வந்ததும் கூட்டிட்டு வா. அதி நீ போயி அப்பாவுக்கு எதாவது ஹெல்ப் பண்ணு. அப்பாகிட்ட எதையும் கேட்டுக்காத” என்றனுப்ப,

ஏனோ தன் அக்காவிடம் அதிக உரிமையெடுத்துப் பேசும் பெண்மேல் கோபம் எழ, ‘என் அக்கா’ என்ற உரிமையுணர்வு பற்றி எரிய பவானியை முறைத்துச் சென்ற தம்பியின் எண்ணம் கண்டு சிரித்த அன்பழகி, “கடவுள் ஏதோ ஒரு வகையில் நமக்குள்ள சொந்தத்தை உருவாக்கிட்டார்ல” என்றாள்.

‘நல்லவேளை அண்ணி உங்க மூலமா சொந்தமானோம். அன்னைக்கு நீங்க சொன்ன மாதிரின்னா, நான் அவ்வளவுதான்’ என மனதினுள் நினைத்து, “ஆமா அண்ணி” என்றாள்.

அதைப் புரிந்தவளோ சத்தமாகச் சிரித்து, “உனக்குப் பிடிக்காத எதுவும் நடக்காது பவிக்குட்டி” என்க,

“உங்ககிட்ட ரொம்பவே உஷhராயிருக்கணும் அண்ணி” என்று தானும் உடனிணைந்து சிரித்தாள்.

மேடையில் நிச்சயப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, தாம்பூலம் மாற்றி நிச்சயப்பட்டைப் பெண்ணிடம் கொடுத்து விட, அவள் அதை மாற்றி மேடை வர, மாப்பிள்ளை கோட்சூட்டில் நின்றிருந்தான். நின்றிருந்தான் என்பதை விட நிறுத்தப்பட்டிருந்தான் என்பதே சரி.

தாய் பார்த்த பெண் என்ற ஒரே காரணமே போதும் அன்பழகியை அவனுக்குப் பிடிக்காமல் போவதற்கு. எவ்வளவோ மறுத்தும் சண்டையிட்டும் முக்கிய உறவைப் பகடைக்காயாக்கி திருமணத்திற்கு சம்மதம் வாங்கிவிட்டார்.

‘நீங்கள் பார்க்கும் பெண்ணுடன் வாழமாட்டேன்’ என்றால், ‘உன்னை யார் வாழச்சொன்னது’ என்ற பதில் வந்தது. இன்னொரு காரணமாக அமைந்தவள் அவன் தங்கை பவானி. அன்பழகியைப் பற்றி ஆஹா ஓஹோவென்று புகழுமளவு அண்ணனிடம் ஒட்டுதல் இல்லையென்றாலும், அன்பழகி தனக்கு அண்ணியாக வரவேண்டுமென்று தம்பிகள் மூலம் விண்ணப்பத்தை அவனிடம் சேர்ப்பித்திருந்தாள். வேறு வழியில்லாமல் தன் விதியை நொந்தபடி இதோ மேடையேறிவிட்டான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
பெண் அழைத்து வரப்பட வருபவளை ஒருவித ஆராய்ச்சியுடன் பார்த்திருக்கையில், பெண்ணருகில் பேசியபடி வந்த தங்கையைக் கண்டவனுக்கு அவளின் முகம் அத்தனை மலர்ச்சியைக் காட்ட, கடைசியாகத் தங்கையைச் சிரித்த முகமாகப் பார்த்த நினைவுகூட வரவில்லை அவனுக்கு. இன்று அவள் புன்னகைக்குக் காரணம் அப்பெண் எனப் புரிந்ததும் அவள் வரைக்குமாவது இக்கல்யாணம் சந்தோசம் கொடுக்கட்டுமே என்பது அவன் எண்ணமாகயிருந்தது.

அன்பழகி பவானியுடன் பேசியபடி வந்தாலும் அவனைத்தான் பார்த்திருந்தாள். தன்னை ஆராய்ச்சி செய்து தங்கையைப் பார்த்த பார்வையில் பலவித மாற்றங்கள். ‘ஏதோ பிரச்சனை இருக்கிறது’ என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது. வீட்டுப் பிரச்சனை என்றால் சமாளிக்கலாம் என்ற எண்ணமே அன்பழகிக்கு.

புன்னகையுடன் மேடையேறி கணவனாகப் போகிறவன் அருகே நிற்க, அவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்றதும் ‘போடா’ என்பதாய் உதட்டைச் சுளித்து அவனை ஒதுக்கிப் புன்னகையுடன் நின்றாள்.

“ஏய் அன்பு! இரண்டு பேரும் பெர்பெக்ட் கபுள்” என்ற அண்ணி நேஹாவின் வார்த்தையில், “அப்படின்றீங்க?” என கேள்வி கேட்டு, தன் கைபேசியைக் கேட்டு வாங்கி, “எக்ஸ்க்யூஸ்மி மிஸ்டர்.மாப்பிள்ளை கொஞ்சம் திரும்புறீங்களா?” என்க,

அவளின் அவ்வார்த்தைதனில் திடுக்கிட்டுத் திரும்பியவனிடம், “ஸ்மைல் ப்ளீஸ்” என்றதும் யோசனையாய்ப் புருவம் சுருக்க, சட்டென்று கைபேசியில் அவனுருவத்தைப் பதிந்து, “தேங்க்யூ. நீங்க நிச்சயத்தைத் தனியா என்ஜாய் பண்ணுங்க. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்” என்று அண்ணியிடம் திரும்ப, அவன் கோபத்தில் பல்லைக்கடிப்பது அவளுக்குக் கேட்டது.

‘இவங்களா பெண் கேட்டு வந்தாங்க. இப்ப என்னவோ பிடிக்காத பொண்ணோட வலுக்கட்டாயமா நிற்க வைத்த மாதிரி சீன் போடுறான். போடா நாங்களும் போடுவோம்ல சீனு’ என நினைத்து, அண்ணியவளிடம் நிழற்படத்தைக் காண்பித்து, “நாட் பேட் அண்ணி. என்னோட கம்பேர் பண்ணினா கொஞ்சம் சுமார்தான். பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்” என்றாள் குறும்பாக.

“நீ அட்ஜஸ்ட் பண்ணுவியா? அவர்தான் உன்னை அட்ஜஸ்ட் பண்ணி டைஜஸ்ட் பண்ணணும்” என கிண்டலடிக்க,

“ஏன் சொல்லமாட்டீங்க. எங்கண்ணா உங்களைக் கண்டதும் ஆடுடா ராமான்னு டைவே அடிக்கிறான். சோ, இதுவும் சொல்லுவீங்க.. இதுக்கு மேலயும் சொல்லுவீங்க. அப்புறம் அண்ணி நான் மேடையில் இருக்கும் வரை பவிக்குட்டியைப் பார்த்துக்கோங்க. அவள் கொஞ்சம் பயந்த சுபாவம்” என்றாள்.

“நாத்தனார் மேல அவ்வளவு அக்கறையா?” கேலியாகக் கேட்டு,” நான் பார்த்துக்குறேன் அன்பு” என்று பொறுப்பைத் தான் எடுத்துக்கொண்டாள் நேஹா.

காலையில் அலங்காரத்தின் பொழுது மணமகள் அறைக்கு வந்த ராஜலட்சுமி மருமகளிடம் சில நகைகளைக் கொடுத்தார்.

“திருமணத்திற்குப் பின் எது கொடுத்தாலும் வாங்கிக்குறேன்” என்றதும் அவரின் முகம் திருப்தியின்மையைக் காட்ட, “மன்னிச்சிருங்க அத்தை. தாலி கட்டினதும் உரிமையோட கொடுங்க. முழுமனசோட வாங்கிக்குறேன்” என்றாள் புன்னகையுடன்.

“ம்... சரிமா” என்றுரைத்து வெளியே வந்தவர், ‘கடவுளே! இதைக் கொடுத்தனுப்பினவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே’ என உள்ளுக்குள் புலம்பியபடி சென்றவர், மருமகள் சொன்னதை அவரிடம் வார்த்தை மாறாது சொல்ல “திமிர் அதிகம் அவளுக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல அத்தனையையும் அடக்குறேன் பாரு” என்றார் கர்வமாக.

“எனக்குக் கொஞ்சம் பயமாயிருக்கு” என ராஜலட்சுமி சொல்ல,

“நான் இருக்கையில் உனக்கென்ன பயம்? நீ போயி பையனைப் பாரு. பொண்ணு அண்ணி அண்ணின்னு ரொம்ப ஒட்டுறா சீக்கிரமே வெட்டி விட்டுரு” என்றனுப்பியவர் இதழ்களில் ஒரு ஏளனப்புன்னகை.

மங்கள வாத்தியங்கள் முழங்க பெயருக்கேற்ப அழகியாய் மேடையேறி அன்பழகி, அம்சமாய் அமர்ந்திருந்த செந்தூரன் அருகில் அமரவைக்கப்பட, தோழிகள் உறவுகளின் கேலி பேச்சால் உண்டான நாணத்துடன் அவனைக்காண, தற்செயலாகத் திரும்பியவன் கண்களும் அவளைக்காண, நொடி நேரச் சந்திப்பில் விழிகள் பேசமுடியா தவிப்பில் தடுமாறித் திரும்பியது.

கேட்டிமேளச் சத்தம் அரங்கையே மேடையைக் கவனிக்க வைக்க, சுற்றம் சூழ நடுநாயகமாகயிருந்த மேடையில் நாயகன் நாயகியின் கழுத்தில் மங்களநாணிட, நாத்தனார் முடிச்சைப் பவானி போட, அட்சதைகள் யாவும் பூமாரியாய்ப் பொழிய, நெற்றியில் திலகமிட்டு, அக்னியை வலம் வந்து, அம்மி மிதித்து மெட்டியிட்டதும் இனிதே நிறைந்தது திருமணம்.

ராஜலட்சுமி-சேகர் மனம் நிம்மதியடைய, சதாசிவம்-ராகினி தம்பதியர் மனதார ஆசீர்வதிக்க, அகிலன்-நேஹா புன்னகையுடன் வாழ்த்த, அதியன் அதிக சந்தோசம் இல்லையென்றாலும் அக்காவின் வாழ்க்கை நன்றாகயிருக்க கடவுளை வேண்டிக் கொண்டான்.

பவானியோ, “இப்பயிருந்து நீங்க எனக்கு மட்டுமே அண்ணி” என்றதில் அன்பழகி, ‘அப்ப இவள் தம்பிகள்?’’ என்று கேள்வியாய்ப் பார்க்க, ‘அச்சச்சோ உளறிட்டோமோ’ என்றுணர்ந்து நாக்கைக் கடித்து, “எனக்குதான் முதலிடம்னு சொல்ல வந்தேன் அண்ணி” என்றாள்.

அவள் பேச்சில் ஏதோ சரியில்லையென்று மூளை சொன்னபோதும், “நீதான் என் பெஸ்டி நாத்தனார்” என்றதில் குளிர்ந்து போனாள் பவானி.

ராஜலட்சுமி தம்பதி காலில் விழப்போனவர்களைத் தடுத்து, பெண்ணின் பெற்றோரிடம் ஆசி வாங்கச் சொல்ல, சதாசிவம்-ராகினி கால்களில் மணமக்கள் விழ, நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் பிள்ளைச் செல்வங்களுடன் வாழ வாழ்த்தினார்கள்.

அதன்பின் கோதண்டம் தாத்தா தம்பதியரின் காலில் விழுந்து வணங்கி, அடுத்து மணமகன் பெற்றோர் காலில் விழப்போகும் பொழுது கூட்டத்தில் ஒரு சலசலப்பு எழுந்தது.

பாதத்தில் பூக்களைத் தூவி பெரிதான வரவேற்புடன் மணமக்கள் முன் வந்து நின்றார் ராஜேஸ்வரி.

‘இவர் எங்கே இங்கே?’ என்று அன்பழகி தாயைப் பார்க்க, ‘தனக்கும் தெரியவில்லை’ என்பதாய் அவர் தோள்குலுக்கினார்.

மணமக்களின் முன் வந்த ராஜலட்சுமி,” இவங்கதான் பையனைப் பெத்த அம்மா. என் கூடப்பிறந்த அக்கா. முறையா இவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க” என்றதில் பெண் வீட்டார் அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி.

ராகினி, அன்பழகிக்குச் சொல்லவும் வேண்டுமா என்ன?
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
அட என்ன ஆத்தரே குரல் கொடுத்தவன் ஹீரோன்னு நினைச்சா... சாமியம்மா பையனைத் தாலி கட்ட வச்சிட்டீங்க. இனிமே சாமியம்மாள் ஆட்டம் மாமியார் ஆட்டமா மாறப் போகுதோ? 🤔
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
அட என்ன ஆத்தரே குரல் கொடுத்தவன் ஹீரோன்னு நினைச்சா... சாமியம்மா பையனைத் தாலி கட்ட வச்சிட்டீங்க. இனிமே சாமியம்மாள் ஆட்டம் மாமியார் ஆட்டமா மாறப் போகுதோ? 🤔
ஒருத்தரோட ஈகோவ டச் பண்ணினா எப்படி இருக்கும்னு சாமியம்மா நமக்கு சொல்லித் தருவாங்க.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
Plan pakka
Ana aapu thanake nu triyala pola intha (aaa)saami ku
Apo antha sound Vita paya hero ila ya
அவன்தான் ஹீரோனு முடிவே பண்ணிருந்தீங்களா?
 
Member
Joined
Sep 3, 2024
Messages
31
ஒருத்தரோட ஈகோவ டச் பண்ணினா எப்படி இருக்கும்னு சாமியம்மா நமக்கு சொல்லித் தருவாங்க.
ஓ! அதே ஈகோ அனபழகிக்கும் இருக்கும்தானே தைரியமான பெண்ணாச்சே... பார்க்கலாம் யாருன்னு...
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
405
ஓ! அதே ஈகோ அனபழகிக்கும் இருக்கும்தானே தைரியமான பெண்ணாச்சே... பார்க்கலாம் யாருன்னு...
அதானே நானும் உங்களோட சேர்ந்து பார்க்கிறேன்.
 
Top